Friday, December 31, 2010

பத்தோட பதினொண்ணு....!

ஆயிற்று! 2010-க்கு ’வணக்கம்’ சொல்லி, 2011-க்கு ’நல்வரவு’ சொல்ல வேண்டிய நாள் இது. ஒவ்வொரு டிசம்பர் 31 வரும்போதும் பெரும்பாலானவர்கள் ஏதாவது தீர்மானம் எடுப்பதுண்டு. அதே போல, இந்த வருடமும் பலர் அவரவர் தீர்மானங்களை அவரவர் வலைப்பூக்களில் எழுதியிருப்பதை வாசித்தேன். அவர்களது தீர்மானங்களை இனிவருகிற நாட்களில் உறுதிபட கடைபிடிக்க இறைவன் துணையிருப்பானாக! நல்வாழ்த்துகள்!

இந்த புத்தாண்டு தீர்மானங்கள் குறித்து மார்க் ட்வயின் என்ன சொல்லியிருக்காருன்னா....(அடப்பாவி, நீ எப்போ மார்க் ட்வயினையெல்லாம் படிச்சே என்று கேட்காதீங்க, எல்லாம் கூகிளாண்டவர் கருணை!)

"புத்தாண்டு என்பது உங்களது வாடிக்கையான, வருடாந்திர தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்கு ஏற்ற தருணம். அடுத்த வாரம் முதல், இவற்றின் துணையோடு நரகத்துக்குப் போகிற வழியை நீங்கள் அமைக்கலாம்." - மார்க் ட்வயின்

என்னய்யா இப்படி குண்டக்க மண்டக்கன்னு சொல்லியிருக்கிறாரேன்னு நினைக்காதீங்க! என்னுடைய சொந்த அனுபவத்துக்கும், மார்க் ட்வயின் சொன்னதுக்கும் இருக்கிற தொடர்பு, மார்கெட் போன நடிகருக்கும் அரசியலுக்கும் இருக்கிற தொடர்பை விடவும் நெருக்கமானது. உதாரணத்துக்கு....

கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் சரி, இந்த புது வருசத்துலேருந்து சிகரெட் பிடிக்கிறதில்லை- என்று ஒரு முறை சூளுரை மேற்கொண்டேன். அதை நிறைவேற்றுகிற வெறியில், என்னிடமிருந்த தீப்பெட்டியை தலையைச் சுற்றித் தூக்கி எறிந்தேன். இனிமேல் எப்படி சிகரெட் பற்றவைக்க முடியும்? ஹாஹாஹா! புகையிலை அரக்கனே! ஓடிவிடு! இனி உன்னைத் தொடவே மாட்டேன். குட் பை என்று மனதுக்குள்ளே கொக்கரித்துக்கொண்டிருந்தபோது செல்போன் மணியடித்தது.

"சேட்டை, நான் தான் ஐ.டி.ஸி.கம்பனி சேர்மன் பேசறேன். இனிமே சிகரெட் பிடிக்க மாட்டேன்னு முடிவெடுத்திட்டீங்களாமே? ஏன் இந்த விபரீத முடிவு? உங்களை நம்பித்தான் முப்பதாயிரம் தொழிலாளர்கள் இருக்காங்க! ஏறக்குறைய மூணரை லட்சம் பங்குதாரர்கள் இருக்காங்க! திடீர்னு நீங்க பாட்டுக்கு சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டா, எங்க டர்ன்-ஓவர் என்னாகிறது? ஷேர்-மார்க்கெட்டே ஸ்தம்பிச்சுப் போயிருமய்யா! இந்தியாவோட ஜி.டி.பியே இறங்கிப்போயிரும். அப்புறம் பிரணாப் முகர்ஜீ என்னன்னு பட்ஜெட் போடுவாரு? கொஞ்சம் கூட தேசப்பற்றே இல்லாம இப்படியொரு அவசர முடிவு எடுக்கலாமா? இதைக் கேள்விப்பட்டதிலேருந்து மான்டேக் சிங் அஹுலுவாலியா பத்து நிமிஷமா ஒண்ணுமே சாப்பிடலியாம்! தயவு செய்து உங்க முடிவை மாத்திக்குங்க! இந்தியாவோட பொருளாதாரம் உங்க கையிலே தானிருக்கு!" என்று நாத்தழுதழுக்கப் பேசி, எனக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த தேசப்பற்றை எழுப்பிவிடவும், பொதுநலன் கருதி எனது புத்தாண்டுத் தீர்மானத்தை காலவரையின்றி தள்ளிப்போட்டுவிட்டேன். மேலும், அந்தப் புத்தாண்டிலும் சூரியன் மேற்கே உதிக்காமல், மீண்டும் மீண்டும் கிழக்கிலேயே உதித்ததும் நான் சிகரெட்டை நிறுத்தாமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமாகும்.

சரி, இந்தத் தீர்மானம் தான் இப்படி புஸ்வாணம் ஆகிவிட்டது என்று அடுத்த ஆண்டே இன்னொரு தீர்மானம் மேற்கொண்டேன். ’தலையில் இடியே விழுந்தாலும் சரி; இந்தப் புத்தாண்டு முதல் தினமும் டயரி எழுதாமல் இருக்க மாட்டேன்!

இது கொஞ்சம் விவகாரமான தீர்மானம். காரணம், காசு கொடுத்து டயரி வாங்குவது கஞ்சமாபாதகம், அதாவது பஞ்சமாபாதகம் என்று கடலங்குடி ஜோசியர் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லியிருந்தார். எனவே, ஓசியில் எவனாவது டயரி தரமாட்டானா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஏன் காத்திருக்க வேண்டும்? காரணம், டயரி என்றால் எப்படியிருக்க வேண்டுமென்று கிட்டத்தட்ட ஒரு சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் மாதிரி வைத்திருக்கிறேன்.

ரொம்ப குண்டாவும் இல்லாம, ரொம்ப ஒல்லியாவும் இல்லாம, குள்ளமாவும் இல்லாம, உயரமாவும் இல்லாம, கிட்டத்தட்ட மணல்கயிறு படத்துலே எஸ்.வி.சேகர் போடுற எட்டு கண்டிசன் மாதிரி டயரின்னா இப்படித்தானிருக்கணும் என்று ஒரு முன்முடிவோடு இருந்தேன். ஆனால், நடந்தது என்ன?

"ஹேப்பி நியூ இயர் சார்! புத்தாண்டுக்கு ஒரு சின்ன பரிசு!" என்று ஒருமுறை, ஒருவர் கொண்டுவந்து கொடுத்த டயரியைப்பார்த்து ஒரு வினாடி அரண்டே போய் விட்டேன். பிறகு என்னய்யா, ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குப் போக ஆட்டோ பிடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த அழகுலே அதைப்போய் ’சின்ன பரிசு' என்று வேறு சொல்கிறார்!

ஒன்று, சீசன் டிக்கெட் கவருக்குள்ளே நுழைகிற மாதிரி சின்னதாக தருகிறார்கள்; இல்லாவிட்டால், ஒரேயடியாக பெரியதாக, முத்தண்ணா மெஸ் பரோட்டாக்கல் அளவுக்குத் தருகிறார்கள். கொஞ்சம் இடைப்பட்ட அளவாக இருந்தால், உள்ளே எனக்குத் தேவைப்படுகிற விவரங்கள் இருப்பதில்லை. ஓரளவு எனது எதிர்பார்ப்புகளோடு ஒத்துப்போகிற மாதிரி இருந்தால், அட்டை சொதப்பலாய் இருக்கிறது. இப்படியே, இதுவரை ஓசியில் கிடைத்த எல்லா டயரிகளையும் நொள்ளை சொல்லி, யாருக்காவது கொடுத்து விட்டு, எனது ’லட்சிய டயரி’க்காக இன்னும் காத்திருக்கிறேன். சொல்லப்போனால், இந்த டயரி ஆசையால், ஒவ்வொரு வருடமும் டயரியாவால் பாதிக்கப்பட்டது போல, சோர்ந்து போய் விடுகிறேன்.

இதையெல்லாவற்றையும் விட, ’டயரியில் தினசரி ஒரு நல்ல விசயத்தையாவது எழுத வேண்டும்,’ என்று ஒரு அனுபவஸ்தர் சொன்னார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? இதெல்லாம் ஆகிற காரியமில்லை என்று டயரி எழுதுகிற எண்ணத்தையே அடியோடு ஒழித்துவிட்டேன்.

ஓரளவு நான் நினைத்த மாதிரியே நிறைவேறியது ஒரே ஒரு தீர்மானம் தான். சென்ற ஆண்டின் இறுதியில், ’வலையுலகில் புத்திசாலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே! இதை இப்படியே விட்டால், எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்களே,’ என்ற ஆதங்கத்தில் நானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, இங்கு புத்திசாலிகளின் ஆதிக்கத்தைக் குறைத்தே தீருவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன். விளவு? இப்போது வலையுலகில் புத்திசாலிகள் மட்டுமல்ல; நானும் இருக்கிறேன்.

இந்த ஆண்டில் என்ன தீர்மானம்/ சபதம் மேற்கொள்வது? - யோசிக்கவே விடாமல், ஒரு நல்ல யோசனையை நம்ம ’அட்ரா சக்கை’ சி.பி.செந்தில்குமார்,சென்னிமலை தெரிவித்து விட்டார்.

"இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு." தனது இடுகையில் என்னைப் பற்றி அவர் எழுதிய இடுகையில், உரிமையோடு என்னிடமிருக்கும் பல குறைகளில் ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். மிகவும் சரி!

அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இப்படி, கமெண்ட்ஸ்களுக்கு பதில் எழுதாமல் இருப்பதற்கு உள்நோக்கம் எதுவுமில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல அதற்கு சரியான காரணமும் இல்லை என்பதும் அவ்வளவு உண்மை. இந்தக் குறை மட்டுமின்றி, இன்னும் என்னிடம் இருக்கிற வலைப்பூ தொடர்புடைய குறைகளையும் இனிவரும் நாட்களில் சரிசெய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானம் / சபதம் எடுத்துக் கொள்கிறேன். தல செந்தில்குமாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

இந்த 2010 என்னளவில் எப்படியிருந்தது, எப்படி முடிந்தது என்று ஒரு சில வார்த்தைகள் சொல்ல விருப்பம். வலையுலகத்தில் எனது முதலாண்டான 2010-ன் முத்தாய்ப்பாக, சில நெகிழ்ச்சியான சந்திப்புக்கள் நிகழ்ந்தேறின.

மெய்யுலகில் பெற்றதாயின் பாசத்தை அனுபவிக்கிற பாக்கியம் இல்லாது போனாலும், மெய்நிகர் உலகில் என்மீது பாசத்தைப் பொழிந்து, உரிமையோடு அவ்வப்போது கண்டித்து, எனக்கு அறிவுரை கூறிய சீதாம்மாவை நேரில் சந்தித்தது இவ்வாண்டில் எனக்குக் கிடைத்த பெரிய மகிழ்ச்சி! ஒரு வெற்றிடத்தை அம்மா நிரப்பி விட்டார். வேறென்ன வேண்டும்? ’அம்மா என்றால் அன்பு’ என்று பாடல் உண்டு. இந்த அம்மா அன்பும், கண்டிப்பும், இரக்கமும், உற்சாகமும் என உணர்ச்சிக்குவியலான அம்மா!

எத்தனையோ பேர் வலைப்பூ ஆரம்பித்து, எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றபோதும், எத்தனை பேருக்கு மோதிரக்கையால் குட்டு கிடைக்கிறது என்பது பெரிய கேள்வி! சிங்கைப் பதிவர் அன்புக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கே’ பிரபாகர் என்னை ’வலைச்சரம்’ இடுகையில் குறிப்பிடாதிருந்தால், பின்னாளில் அதே வலைச்சரத்தில் ஒரு வாரம் பணியாற்றுகிற வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே! அவர் அண்மையில் சென்னை வந்திருந்தபோது, அவரை சந்தித்ததும் இவ்வாண்டில் ஒரு மறக்க முடியாத, இனிவரும் நாட்களில் நினைவில் எப்போதும் வைத்திருக்கத்தக்கதோர் நிகழ்ச்சி!

சிலரைப் பற்றி எழுத வேண்டுமென்றால், எப்படித் தொடங்க, எப்படி முடிக்க என்று குழப்பம் ஏற்படுமளவுக்கு அடியெது, முடியெது என்று புரியாத அளவுக்கு விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபம் எடுத்தாற்போல வியாபித்து நிற்பார்கள். அத்தகையவர்களில் முதன்மையானவர் என்று நான் கருதுவது ’பாமரன் பக்கங்கள்’ வானம்பாடிகள் ஐயா அவர்கள்! அவர்களுடன் உரையாடி மகிழ ஒரு வாய்ப்புக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறு என்று கருதுகிறேன்.

ஈரோடு சங்கமம் சென்றிருந்தால், பலரைச் சந்தித்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். அது இயலாமல் போனது இவ்வாண்டின் இறுதியில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்! ஆனால், இனியொரு வாய்ப்பு அமைந்தால், அவர்கள் அருகில் நின்று அளவளாவுகிற மகிழ்ச்சியை ஒருபோதும் தள்ள முடியாது!

என்னை வழிநடத்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இறைவன் அருளால், அனைவரும் இனிவரும் நாட்களில் அனைத்து நலங்களையும் பெற்று வாழ அன்னை காளிகாம்பாளின் பாதகமலங்களைப் பணிந்து வேண்டுகிறேன்.

எனது 2011-க்கான தீர்மானத்தை அறிவித்து விட்டேன். இனி, உங்களை டபாய்க்க முடியாது என்று அறிவேன். இருந்தாலும், இந்த மாதிரி புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து இன்னொருவர் சொன்னதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

"நல்ல தீர்மானங்கள் எனப்படுபவை, வங்கிக்கணக்கே இல்லாமல் காசோலை கொடுப்பது போன்றது!" -ஆஸ்கார் வொயில்ட்.

:-))

அன்புள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சேட்டைக்காரன்

23 comments:

சண்முககுமார் said...

முதல்வடை எனக்கு



வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புதுவருட வாழத்துக்கள்

எல் கே said...

சேட்டை உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

"நல்ல தீர்மானங்கள் எனப்படுபவை, வங்கிக்கணக்கே இல்லாமல் காசோலை கொடுப்பது போன்றது!" -ஆஸ்கார் வொயில்ட்.
//

இது நல்லா இருக்கு சேட்டை..

சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு கேடு..
அதையும் மனசுல வெச்சுக்குங்க.. ஹி..ஹி

( ..கமென்ஸ் போட்டு, டயர்டா இருக்கு..
.
.
தீப்பெட்டி இருக்கா பாஸ்?..!!.)

sathishsangkavi.blogspot.com said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை, உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Speed Master said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

புலிகுட்டி said...

உங்கள் புத்தாண்டு சபதங்கள்,ஆசைகள் நிறைபெற வாழ்த்துக்கள்.

மாணவன் said...

உங்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க வாழ்த்துக்கள்.. :-)

suneel krishnan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

புது வருட வாழ்த்துக்கள் சேட்டை..

Unknown said...

Wish u happy New Year Sir

மங்குனி அமைச்சர் said...

அட ........ அந்த ஐ.டி.சி ல இருந்து "உனக்கும்" போன் வந்துச்சா ????

புத்தாண்டு வாழ்த்துக்கள் சேட்ட

கே. பி. ஜனா... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

settaikkaran said...

சண்முககுமார் said...

//முதல்வடை எனக்கு//

இங்கே எல்லாருக்கும் வடையிருக்கு! படமே போட்டிருக்கிறேனே? :-))

//வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி!

பிரஷா said...

//புதுவருட வாழத்துக்கள்//

மிக்க நன்றி!

எல் கே said...

//சேட்டை உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி கார்த்தி! :-)

settaikkaran said...

பட்டாபட்டி.... said...

//சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு கேடு..அதையும் மனசுல வெச்சுக்குங்க.. ஹி..ஹி ( ..கமென்ஸ் போட்டு, டயர்டா இருக்கு..தீப்பெட்டி இருக்கா பாஸ்?..!!.)//

பட்டாபட்டியா கொக்கா? :-))) (லைட்டர் தான் இப்பல்லாம்....)

மிக்க நன்றி! :-)

சங்கவி said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி! :-)

வெங்கட் நாகராஜ் said...

//சேட்டை, உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஐயா! :-)

Speed Master said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி! :-)

புலிகுட்டி said...

//உங்கள் புத்தாண்டு சபதங்கள்,ஆசைகள் நிறைபெற வாழ்த்துக்கள்.//

உற்சாகமூட்டியதற்கு மிக்க நன்றி! :-)

மாணவன் said...

//உங்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க வாழ்த்துக்கள்.. :-)//

உங்களது நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

dr suneel krishnan said...

//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .//

உங்கள் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! :-)

NIZAMUDEEN said...

// அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி!

@இந்திரா
@இரவு வானம்

வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி! :-)

மங்குனி அமைச்சர் said...

//அட ........ அந்த ஐ.டி.சி ல இருந்து "உனக்கும்" போன் வந்துச்சா ????//

முதல்லே எனக்குத்தான் வந்திச்சு! :-)

//புத்தாண்டு வாழ்த்துக்கள் சேட்ட//

மிக்க நன்றி மங்குனி!

@கே. பி. ஜனா... said...

@ஜீ...

@வானம்பாடிகள் said...

@சிநேகிதன் அக்பர் said...

@யோவ் said...

உங்களது வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! :-)

பிரபாகர் said...

நன்றி என் அன்பு நண்பா... உங்களின் நட்பால் பெருமையடைகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா வளங்களையும் பெற்றுத்தருவதாயும், உமது வாழ்வில் பெரும் திருப்பு முனையாகவும் இருக்க நீங்கள் வணங்கும் காளிகாம்பாளை வணங்குகிறேன் உங்களோடு நானும்...

venkat said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

settaikkaran said...

//பிரபாகர் said...

நன்றி என் அன்பு நண்பா... உங்களின் நட்பால் பெருமையடைகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா வளங்களையும் பெற்றுத்தருவதாயும், உமது வாழ்வில் பெரும் திருப்பு முனையாகவும் இருக்க நீங்கள் வணங்கும் காளிகாம்பாளை வணங்குகிறேன் உங்களோடு நானும்...//

மிக்க நன்றி நண்பரே! இவ்வாண்டை மறக்க முடியாததாக மாற்றியதில் உங்களுக்கும் ஒரு பங்குண்டு!

//venkat said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! :-)