Monday, December 27, 2010

சேட்டை @ சென்னைத் திரைப்படவிழா!

-என்னண்ணே, மன்மதன் அம்பு பார்த்தாச்சா?

-பாத்திட்டோமில்லே, அப்படியே Stupid Sparrow-ங்கிற ஹாலிவுட் படத்தைக் காப்பியடிச்சிருக்காய்ங்க!

-லேய் மக்கா, அது ஸ்டுப்பிட் ஸ்பாரோ இல்லே; Cupid's Arrow

-என்ன எளவோ, என்னதான் சொல்லு மக்கா, இங்கிலீஷ் படம் மாதிரி வரலே! சொதப்பிட்டாய்ங்க!

-நம்ம பலவேசம் படத்தைப்பார்த்திட்டு வேறே ஏதோ பேரு சொன்னாமில்லா? என்னவோ salt flour needle gone-ங்கிற படமாமே?

-நீ ஒருத்தன், அவன் கீதா மெஸ்ஸிலே உப்புமா(Salt flour) தின்னுப்புட்டு அது ஊசி-போச்சுன்னு(needle gone) அவனுக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்லே சொல்லியிருக்கான். உடனே அதையும் இங்கிலீஷ் படத்தோட பேருன்னு சொல்லுவியா?

நானும் வலையுலகத்திற்கு வந்தநாள் முதலாகவே கவனிக்கிறேன். ஒரு தமிழ்ப்படம் வந்தால் போதுமே, "ஹாலிவுட் படத்தைச் சுட்டுப்புட்டாங்க!" என்று சொல்லி, சைனீஸ் ரெஸ்டாரண்ட் மெனு மாதிரி எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாத பெயர்களைச் சொல்லி, குண்டுக்கட்டாக அதலபாதாளத்தில் உருட்டி விடுவார்கள்.

இவர்களுக்கெல்லாம் இதுவரை வெளிவந்த அல்லது ஒருபோதும் வெளிவராத படங்களின் பெயர் எப்படித் தெரிந்திருக்கிறது? இத்தனை படங்களையும் பார்க்கிறார்கள் என்றால், அனேகமாக இவர்கள் வீட்டுக்குப் பல்விளக்க மட்டும்தான் போகிறார்களா?

அல்லது, இத்தனை டிவிடி வாங்கிப் பார்க்க முடிகிறது என்றால், இவர்கள் சம்பளத்தில் சீசன் டிக்கெட் வாங்கவாவது காசு மிஞ்சுமா?- என்றெல்லாம் எனக்கு சந்தேகம் இருந்ததுண்டு. அந்த சந்தேகம் கடந்த வாரத்தில் இரண்டே நாட்களில் கொஞ்சம் தீர்ந்தது.

புதன், வியாழன் இரண்டு நாட்களும், சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் சிம்பனி திரையரங்கில் ஒரு சில உலக்கை, மன்னிக்கவும், சில உலகப்படங்களைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. படங்களை ரசித்ததை விடவும், அங்கு சுற்றும் முற்றும் கண்ணில்பட்டதை வெகுவாக ரசித்தேன். ஏன் மாட்டேன்?

திரைப்படத்துறையில் பல பிரபலங்களை அருகிலிருந்து பார்க்க முடிந்தது. சிவாஜியில் ஸ்ரேயாவின் அம்மாவாக நடித்த உமா பத்மநாபனைப் பார்த்ததும், மெய்யாலுமே அருகில் போய் ’பழக வரலாமா?’ என்று கேட்க ஒரு நப்பாசை ஏற்பட்டது உண்மை. ஹிஹி! (எனக்கு ரொம்பவும் பயந்த சுபாவம் என்பதால், யாரையும் மிகவும் நெருங்கவில்லை! போதாக்குறைக்கு பெரும்பாலான நடிகைகள் மேக்-அப் இல்லாமல் வேறு வந்திருந்தார்கள்!)

வலையுலகின் பிரபல பதிவர்களும் வந்திருந்ததை உடனிருந்தவர் சுட்டிக்காட்டினார். (அவர்கள் என்னைப்பார்த்து பயந்துவிடக் கூடாதே என்று அவர்கள் அருகிலும் போகவில்லை!)

சரி, உலகத்திரைப்பட விழாவுக்குப் போனாயே, என்னென்ன படம் பார்த்தாய்? என்று கேட்கிறீர்களா? அதையெல்லாம் இப்போது சொல்வதாக இல்லை. அடுத்து யாராவது கொஞ்சம் உருப்படியாக தமிழ்ப்படம் எடுக்கும்போது, நான் பார்த்த உலகத்திரைப்படத்தோடு ஒப்பிட்டு எழுதுகிறேன். அது தான் பண்பாடு! இதற்காகவே, கொத்தமல்லிச் சட்னியிலிருந்து கொத்துப்பரோட்டா வரையிலும் பலவற்றின் ஆங்கிலப்பெயர்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்; ஜாக்கிரதை!

இருந்தாலும் கிட்டத்தட்ட முழுமையாகப் பார்த்த ஒரு படத்தின் கதையை சொல்கிறேன்.

ஒரு கணவன்; ஒரு காதலன்! இறந்து போன பெண்மணியின் உடலை சுத்தப்படுத்தி, அலங்கரித்து, ஒரு காரில் வைத்துக் கொண்டு எடுத்துப்போகிறார்கள். வழியில் பேசுகிறார்கள்; கொசுவத்தி சுற்றுகிறார்கள். பிறகு அவளை ஒரு ஆற்றங்கரையில் எரித்து, சாம்பலை தண்ணீரில் கரைத்துவிட்டு, திரும்புகிற வழியில் தலா ஒரு பாலியல் தொழிலாளியோடு பொழுதைக் கழித்துவிட்டு, ஊருக்குப்போகிறபோது, அவர்களது கார் விபத்துக்குள்ளாகி, அதே ஆற்றில் விழுந்து அவர்கள் மூழ்குகிறார்கள். அம்புட்டுத்தேன்!

அது ஜெர்மன் படமா, பல்கேரியன் படமா, ரஷியப் படமா என்றெல்லாம் தெரியவில்லை சாமீ! (தெரிஞ்சிட்டா மட்டும்? )

படம் முடிந்ததும் ஒரு சிலர் கைதட்டினார்கள். பாவம், படம் எப்படா முடியும் என்று ரொம்ப நேரம் காத்திருந்தார்கள் போலிருக்கிறது.

படம் முடிந்து வெளியேறியதும், யாரோ வெளிநாட்டுப் பெண் இயக்குனர் நாற்காலியில் அமர்ந்திருக்க, நம்மூர் பத்திரிகையாளர் (அ) ரசிகர் அவரைப் பார்த்து, ’இப்படியொரு படம் எடுக்க உங்களுக்கு எப்படித் தோன்றியது?’ என்று (இங்கிலிபீஷில்) கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி நறுக்குன்னு கேளு ராஜா-நாக்கைப் புடுங்கிக்கிறாப்புலே!


அன்று மாலை வரை, எஜமான் படத்தில் ரஜினி ஒவ்வொருத்தரது சாப்பாட்டிலிருந்தும் கொஞ்சம் ருசிப்பதுபோல, எல்லா படத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்துவிட்டு, கடைசியாக ஒரு படத்தைப் பார்க்க நான் போய் உட்கார்ந்த நேரம் எல்லாரும் கைதட்டினார்கள். படம் முடிஞ்சிருச்சாம்! என்ன கொடுமை சரவணன்?

ஆண், பெண் வித்தியாசமின்றி, வயது வேறுபாடின்றி எல்லாத் தரப்பிலிருந்தும் பார்வையாளர்களைப் பார்க்க முடிந்தது. மீசையை வைத்துத்தான் ஆண் என்று கண்டுபிடிக்குமளவுக்கு, பாராசூட் தேங்காய் எண்ணை விளம்பரத்துக்கு இலவச விளம்பரம் தருகிறவர்கள் போல அள்ளி முடிந்து கொண்டிருந்த பல ஆண்களைப் பார்த்தேன். அதே சமயம், வெளிநாட்டு இயக்குனர்கள் அல்லது குழுவினர் சர்வசாதாரணமாக பெர்முடாவும் டி-சர்ட்டும் அணிந்து கொண்டு கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

இது மாதிரி திரைப்பட விழாவுக்குப் போனால், தமிழில் பேசுபவர்களை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ’இதையெல்லாம் கலைக்கண் கொண்டு பார்க்க வேண்டும்,’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எனது துரதிர்ஷ்டம், ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து, ஜாம்பஜார் வரைக்கும் நடையாய் நடந்தும் ஒரு ஜோடி கலைக்கண் கூட கிடைக்கவில்லை. ’மன்மதன் அம்பு’ ரிலீஸ் ஆகியிருந்ததால், கமல் ரசிகர்கள் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய்விட்டதாக, ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே விழாவில் ’அங்காடித்தெரு,’ ’மைனா,’ ’நந்தலாலா’ போன்ற தமிழ்ப்படங்களும் திரையிடப்பட்டிருந்தன என்பது பெருமைக்குரிய தகவல் தான். ’முற்றத்து முல்லைக்கு மணமில்லை,’ என்று போய் விடாமல், தமிழ்த்திரைப்படங்களில் எப்போதாவது சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபோது, அவற்றை ரசிகர்கள் மட்டுமன்றி, உலகத்திரைப்பட ஆர்வலர்களும் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். சில சமயங்களில் வர்த்தகரீதியாக வெற்றி பெறாத திரைப்படங்களை எடுப்பவர்களை, தட்டிக்கொடுத்து உசுப்பி விட வேண்டியதும் அவசியம். இல்லாவிட்டால், அரைத்த மாவையே அரைக்கிற வாடிக்கை தொடர்ந்து நமக்கு எரிச்சலூட்டும் என்பது தான் உண்மை.

நல்ல வேளை, ரசிகர்களைப் போலவே இதுபோல சிந்திக்கிற ஆர்வலர்களும் இருக்கிறார்கள்! உதாரணத்துக்கு, இந்த விழாவுக்கு சற்று முன்பு எனக்குப் பரிச்சயமாகி, நண்பராகி விட்ட திரு.வேல்முருகன்! அவரது ’சதர்ன் மன்ஸூன் மீடியா & எண்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்தார் இந்தத் திரைப்படவிழாவில் பரீட்சார்த்தமான, துணிச்சலான தமிழ்ப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ’சிறந்த படம்,’ என்ற விருதை வழங்கி வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இருவருக்கும் தலா இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு ’ஓர் இரவு,’ என்ற வித்தியாசமான தமிழ்ப்படத்துக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகையைக் காட்டிலும், சற்றே மாறுபட்டு சிந்திக்கிற இயக்குனர்களுக்கும், வர்த்தக வற்புறுத்தல்கள் இருந்தாலும் புதுமுயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிற தயாரிப்பாளர்களுக்கும், இது போன்ற விருதுகள் உற்சாகமளிக்கும்; அளிக்க வேண்டும். உலகளாவிய திரைப்படங்களைப் பார்த்து உச்சுக்கொட்டிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், நமது உள்ளூர்த் திறமைகளை உசுப்பிவிடுகிற இத்தகைய முயற்சிகள்தான், நல்ல சினிமாவை எளிதில் நமக்குக் கொண்டுவருகிற வாகனங்களாய் இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்காகவே திரு.வேல்முருகன் போன்றவர்களின் முயற்சிகளை தாராளமாகப் பாராட்ட வேண்டும்.

இது போன்ற உலகத்திரைப்படவிழாக்களில், பிரபலங்களை அருகிலிருந்து பார்ப்பதும், முன்பின் கேள்விப்பட்டிராத பல உலகப்படங்களைப் பார்த்து மலைத்துப்போவதும், சில நேரங்களில் உண்மையிலேயே நமது திரைப்படங்கள் நமக்கு நியாயம் செய்கின்றனவா என்று யோசிப்பதும் சரியே! ஆனால், ஒவ்வொரு விழாவிலும் தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்றால், பாசாங்குகளின்றி, உண்மையிலேயே வித்தியாசமான பார்வையோடு எடுக்கப்படும் தமிழ்ப்படங்களை ஊக்குவிப்பதே நம்மால் இயன்றது!

செய்வோம்!

10 comments:

Philosophy Prabhakaran said...

// வலையுலகின் பிரபல பதிவர்களும் வந்திருந்ததை உடனிருந்தவர் சுட்டிக்காட்டினார். (அவர்கள் என்னைப்பார்த்து பயந்துவிடக் கூடாதே என்று அவர்கள் அருகிலும் போகவில்லை!) //

ஏன் இப்படி...? நிஜ முகத்தை வலையுலகிற்கு காட்டவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவது ஏன்...? இதெல்லாம் டூ மச்சாக தெரியவில்லையா... நாங்கள் என்ன உங்களிடம் காசு பணமா கேட்டோம்... உங்கள் போட்டோவை வலைப்பூவில் போட்டா என்னவாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு..

தாங்கள் கூறிய பரிசு பெற்ற "ஓர் இரவு" என்ற படத்தின் இயக்குனரும் ஒரு பதிவர் தான்... Dreamer என்ற தளத்தில் எழுதுகிறார்.

பொன் மாலை பொழுது said...

// பாசாங்குகளின்றி, உண்மையிலேயே வித்தியாசமான பார்வையோடு எடுக்கப்படும் தமிழ்ப்படங்களை ஊக்குவிப்பதே நம்மால் இயன்றது! //

------------------சேட்டை.


உண்மைதான். நல்ல கருது.

சேலம் தேவா said...

//இது மாதிரி திரைப்பட விழாவுக்குப் போனால், தமிழில் பேசுபவர்களை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ’இதையெல்லாம் கலைக்கண் கொண்டு பார்க்க வேண்டும்,’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எனது துரதிர்ஷ்டம், ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து, ஜாம்பஜார் வரைக்கும் நடையாய் நடந்தும் ஒரு ஜோடி கலைக்கண் கூட கிடைக்கவில்லை. ’மன்மதன் அம்பு’ ரிலீஸ் ஆகியிருந்ததால், கமல் ரசிகர்கள் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய்விட்டதாக, ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.//

செம நக்கலு சேட்டை..!!

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை வணக்கம்...

உங்களை ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பில் நிறைய பேர் வந்து இருக்கிறாரா என்று விசாரித்தனர்...

சிநேகிதன் அக்பர் said...

தங்களது கருத்து நியாயமானது.

suneel krishnan said...

அடுத்த உலக சினிமாவுக்கு நீங்க கதைய வெளிய சொல்லிடீங்க !!

அகல்விளக்கு said...

வணக்கம் சேட்டை...
உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....



(நீ எங்கய்யா நேர்ல பாத்தன்னு யோசிக்காதீங்க....
அதான் நேத்து கனவுல மீட் பண்ணமே.... அவ்வ்வ்வவ்வ்வ்வ்...... )

vasu balaji said...

/உடனிருந்தவர் சுட்டிக்காட்டினார்./

அந்தப் பயபுள்ளயயாவது ஆருன்னு சொல்லப்படாதா:))

புதிய பரிதி said...

உலகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற எனது பல நாள் கனவு நிறைவேறாவிட்டாலும்... "நம்மள மாதிரியே நெறைய பேர் இருப்பாங்கே போல.." என எண்ண வைத்தது இந்த பதிவு..