Saturday, December 11, 2010

எங்கே பாரதி?

சிக்குபுக்கு’ படத்தைப் பார்த்துவிட்டு, முந்தைய நாளிரவு முழுவதும் கண்ணீரும் கம்பலையுமாய் ’பேசாமல் ஸ்ரேயா ரசிகர் மன்றத்தைக் கலைத்து விடலாமா?’ என்று யோசித்துக்கொண்டிருந்ததால், இன்று வழக்கத்தை விடவும் சீக்கிரமாக, அதிகாலை எட்டே முக்கால் மணிக்கே எழுந்து விட்டேன். கட்டிங் சாயா குடித்து விட்டு, கணினியை முடுக்கியதும் பல சகபதிவர்கள் பாரதியார் குறித்து இடுகைகள் எழுதியிருப்பதைக் கண்டேன்.

அடடா, இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாளாயிற்றே! சென்ற பாரதியாரின் நினைவுநாளன்றுதான் விஷயம் தெரியாமல் ஸ்ரேயாவின் பிறந்தநாள் குறித்த சிறப்பு இடுகை எழுதித் தொலைத்து விட்டேன். இன்றாவது, பாரதியாரைப் போய் தரிசித்து விட்டு, முடிந்தால் உருப்படியாக ஒரு காரியம் செய்யலாம்; அதாவது எந்த இடுகையும் எழுதாமல் இருக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதன் படியே, அடுத்த பஸ்ஸைப் பிடித்து மெரீனா கடற்கரையை அடைந்து, பாரதியாரின் சிலை இருந்த இடத்தை நோக்கி விரைந்தேன்.

ஐயோ!


பாரதியாரின் சிலையைக் காணவில்லையே!

"சார், சார், இங்கே ஒரு பாரதியார் சிலை இருந்திச்சே? பார்த்தீங்களா?" உடம்புக்கும் வயதுக்கும் சற்றும் சம்பந்தமேயில்லாமல், ஆங்கிலத்தில் அபத்தமாக ஏதோ வாசகம் போட்டிருந்த டி-ஷர்ட் அணிந்த பெரியவரைக் கேட்டேன்.

"அட ஆமாம்! எங்கே போச்சு?" என்று சுற்றும் முற்றும் கரைந்துகொண்டிருந்த காக்கைகளை சந்தேகத்தோடு பார்த்தவாறே கேட்டார். "கலி முத்திடுச்சி! சரி, அவர் சிலையில்லாட்டி என்ன, அது தான் இவ்வளவு சிலையிருக்கே, பார்த்திட்டுப் போய்ச் சேருங்க!"

அதெப்படி எளிதில் விட முடியும்? ’அவசர போலீஸ் உதவி’ என்று கண்ணில் தென்பட்ட அறிவுப்புப்பலகையிலிருந்த எண்ணைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

"சார், என் பேரு சேட்டைக்காரன்! மெரீனா பீச்சிலேருந்து பேசுறேன். இங்கே இருந்த பாரதியார் சிலையைக் காணோம் சார்!" என்று அழாக்குறையாகச் சொன்னேன்.

"என்னய்யா பேத்தறே? கடை திறந்தாப்போதுமே, உடனே ஏத்திட்டு பாரதியார் சிலையைக் காணோம், விட்டா மெரீனா கடற்கரையையே காணோமுன்னு புகார் கொடுத்திருவீங்களே...?"

"சார் சார், சொல்லுறதை நம்புங்க சார், மெய்யாலுமே சிலையைக் காணோம் சார்!"

"என்னய்யா இது புதுப்பிரச்சினை! இன்னிக்கு வி.ஐ.பிங்கெல்லாம் மாலை போட வேறே வருவாங்க! பெரிய தலைவலியா ஆயிரும் போலிருக்கே! அங்கேயே இருய்யா...இதோ வர்றோம்..!"

போலீஸுக்காகக் காத்திருந்தபோது, ’ஒரு வேளை பாரதியார் உயிர்த்தெழுந்து காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தப்போயிருப்பாரோ?’ என்ற சந்தேகமும், கூடவே ’காந்தி சிலையாவது இருக்கிறதா?’ என்ற பயமும் ஏற்பட்டது.

"சார், இங்கேயிருந்து பெசன்ட் நகருக்கு எப்படிப்போகணும்?" என்று என் நிலைமை புரியாமல் ஒருவர் வந்து வழிகேட்டதும் எனக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது.

"பஸ் வர்ற நேரமாப் பாத்து போய் நடுரோட்டுலே நில்லுய்யா! ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் வழியா அவங்களே பெசன்ட் நகருக்கு அனுப்பிருவாங்க!" என்று எரிந்து விழுந்தேன்.

சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து வினு சக்கரவர்த்தியின் ஒன்று விட்ட சித்தப்பா போலிருந்த ஒருவர் காக்கிச்சீருடையில் இறங்கினார்.

"வணக்கம் சார், நான் தான் சார் போன் பண்ணுனேன்! நேத்து சாயங்காலம் கூட பார்த்தேன் சார்! ஏகத்துக்கும் காக்காய் எச்சம் போட்டு சிலையே வெள்ளை வெளேருன்னு இருந்திச்சு! இன்னிக்குப் பார்த்தா சிலையையே காணோம் சார்!" என்று அவரிடம் தெரிவித்தேன்.

யோசனையோடு காலியாயிருந்த மேடையையே பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை அழைத்தார்.

"ஒன் நாட் த்ரீ! நீங்க வண்டியை எடுத்திட்டு அப்படியே போய் விவேகானந்தர் இல்லம், மெட்றாஸ் யூனிவர்சிட்டி, அண்ணா சமாதி, லைட் ஹவுஸ் எல்லாம் பத்திரமாயிருக்கான்னு பார்த்திட்டு வாங்கய்யா. அப்படியே நம்ம ஐ.ஜி.ஆபீஸையும் ஒருவாட்டி நோட்டம் போட்டுட்டு வாங்க!"

"என்ன அநியாயம் சார் இது? வர வர தமிழ்நாட்டுலே திருட்டு ரொம்ப அதிகமாயிடுச்சு சார்! பொதுமக்களுக்குத் தான் பாதுகாப்பில்லைன்னா, தலைவர்களோட சிலைக்குமா ஆபத்து?"

"என்னய்யா ஜெயா டிவி நியூஸ் மாதிரி பேசறே? உங்க பாடு எவ்வளவோ தேவலாம். திண்டுக்கல் பக்கத்துலே ஒருத்தரு போலீஸ் ஸ்டேஷனையே திருட்டுப்பத்திரம் ரெடி பண்ணி வித்துப்புட்டாரு தெரியுமா? நாங்களே அரண்டு போய் கிடக்கோம்."

"இது பொறுக்குதில்லை; எரிதழல் கொண்டுவா!" என்று வாய்தவறிச் சொல்லிவிட்டேன்.

"என்னதுய்யா இது?" இன்ஸ்பெக்டர் எரிச்சலோடு கேட்டார்.

"பாரதி பாட்டு சார்!"

"அட, இதெல்லாம் படிப்பியா நீ? எங்கே, திருவிளையாடற்புராணத்துலேருந்து ஒரு பாட்டு சொல்லு!"

"பாத்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம்...!"

"அடச்சீ! நீதான் நேரங்கெட்ட நேரத்துலே கவிதை சொல்லுறேன்னா, உங்கிட்டே அது தெரியுமா இது தெரியுமான்னு நானும் கேட்டுக்கிட்டிருக்கேன் பாரு!" என்று சலித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

ஜீப் திரும்பி வர, அதிலிருந்து இறங்கிய கான்ஸ்டபிள் "சார், எல்லாம் அதது இருக்க வேண்டிய இடத்துலே தான் இருக்கு சார், ஐ.ஜி.ஆபீஸ், டெலிவிஷன் ஸ்டேஷன், லைட்-ஹவுஸ், விவேகானந்தர் இல்லம், அண்ணா சமாதி எல்லாம் இன்-டாக்டா இருக்கு சார்!" என்று தகவல் தெரிவித்தார்.

"சார்...சார்...க்வீன் மேரீஸ் காலேஜ் இருக்கா பார்த்தீங்களா சார்?" என்று அவசரக்குடுக்கைத்தனமாய் நான் கேட்கவும், இன்ஸ்பெக்டர் என்னை முறைத்தார்.

"இதென்னய்யா புதுப்பிரச்சினை? ஐம்பொன் சிலையைத் தான் திருடுறாங்கன்னா இதையுமா? இவங்க கான்சப்டே புரிய மாட்டேங்குதே?" என்று அலுத்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர்.

"சார், பாரதியார் அமரகவியாச்சே, ஒரு வேளை உயிர்வந்து ஊருக்குள்ளே போயிருப்பாரோ?" என்று கேட்டேன்.

"விளையாடுறியா? அந்த மாதிரியெல்லாம் நடக்கக்கூடாதுன்னு தானே நாங்க, ஸ்ட்றாங்கா கான்க்ரீட் போட்டு ஆழமாக் குழிதோண்டி, பலமா அஸ்திவாரம் போட்டு சிலையை வைக்கிறோம். அதையும் மீறி எப்படிய்யா உயிர்வந்து போயிருவாங்க?"

"சார், இன்னும் கொஞ்ச நேரத்துலே வி.ஐ.பிங்கெல்லாம் மாலை போட வருவாங்களே, வந்து சிலை எங்கேன்னு கேட்டா என்ன சார் பதில் சொல்லுறது?" என்று கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டர் காதில் கிசுகிசுத்தார்.

"ஆமாய்யா...பெரிய வில்லங்கமாப்போச்சே!" என்று தலையைச் சொரிந்தார் இன்ஸ்பெக்டர்.

"எனக்கொரு ஐடியா இருக்கு சார்," என்று நான் யோசனை தெரிவித்தேன். "பேசாம திரு.வி.க.சிலைக்கு மீசை வச்சு இது தான் பாரதியார் சிலைன்னு சொல்லிடலாம். யாரு கண்டுபிடிக்கப்போறாங்க?"

"யோவ் சேட்டைக்காரா, இப்பவாவது என்னை தர்மபுரி பக்கம் டிரான்ஸ்பரோட நிறுத்துவாங்க. நீ சொன்ன மாதிரி பண்ணினா, என் சீட்டையே கிழிச்சிருவாருங்கய்யா!"

"சார், சென்னையிலே எங்கெங்கே பாரதியார் சிலையிருக்குதுன்னு பார்த்து, ஒரு நாளைக்கு இரவல் வாங்கிட்டு வரலாமா சார்?"

"என்னய்யா, மாசக்கடைசியிலே கைமாத்து கேக்குறா மாதிரி சொல்லுறே? சென்னையிலே ரெண்டோ, மூணோ சிலையிருக்கும். எல்லாரும் இன்னிக்கு ஒருநாளுதான் விழுந்து விழுந்து மாலைபோட்டுக் கும்பிடுவாங்க! இன்னி பூராவும் பாரதி சிலை ரொம்ப பிஸியா இருக்கும்யா!"

"அதுவும் சரிதான்," என்று வாயை மூடிக்கொண்டேன். வருடத்தில் ஒருநாள் தான் பாரதியார் சிலைக்கே மவுசு வருகிறது. அன்றைக்கா அவரது சிலை காணாமல் போக வேண்டும்?

"திருடினவன் வேறே ஏதாவது சிலையைத் திருடிட்டுப் போயிருக்கக் கூடாதா?" என்று புலம்பினார் இன்ஸ்பெக்டர்.

"சார், கடைசியா ஒரு ஐடியா!" என்றேன் நான்.

"என்ன?"

"அதோ தூரத்துலே ஒருத்தரு கருப்புக்கோட்டு, முண்டாசோட போயிட்டிருக்காரு! அவரை இந்தப் பீடத்தின் மேலே நிறுத்தி, நிறைய மாலைபோட்டு முகத்தைத் தவிர மத்தது எல்லாத்தையும் மூடிருவோம். வர்றவங்க அவங்க பாட்டுக்கு மாலையைப்போட்டுட்டுப் போயிருவாங்க!"

"யோவ் கான்ஸ்டபிள், போய் அந்தாளைக் கூப்பிட்டுக்கிட்டு வாங்க, அவருக்கு மீசை இருக்கா பாருங்க!"

பொம்மண்டபள்ளியிலிருந்து சென்னையைச் சுற்றிப்பார்க்க வந்த அந்த ஆளை வலுக்கட்டாயமாக மேடையின் மீது ஏற்றி சிலைபோல் நிற்கவைத்து, அவர் மீது ஏகத்துக்கும் மாலைகளைப்போட்டு மூடி மறைத்ததும், ஒவ்வொருவராக வந்த வி.ஐ.பிக்கள் மாலையணிவித்து விட்டு, போட்டோவுக்குப் போஸ் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.

"அப்பாடா! யோவ், அந்தாளை இறங்கச் சொல்லுய்யா! இனி ஒருவருசத்துக்கு டென்சன் இல்லை! அடுத்த பிறந்தநாள் வர்றதுக்குள்ளே பாரதிக்கு ஒரு புது சிலை வச்சிட்டாப்போகுது!"

"அது சரி சார், யாராவது சிலை எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?" என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.

"சிலை காணலேன்னு போன் பண்ணினது யாரு? நீ தானே? அப்போ நீதான் திருடியிருக்கே! கான்ஸ்டபிள், இந்தச் சேட்டைக்காரனைப் பிடிச்சு ஜீப்புலே ஏத்து!"

"ஐயையோ! நான் திருடலே சார்! சத்தியமா நான் திருடலே சார்! என்னை விட்டுருங்க சார்!"

முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்கவும் விழித்தேன். அட, வைத்தி! சுரேந்திரன்!!

"சேட்டை, ஏண்டா தூக்கத்துலே கத்துனே? கனவா?"

ஆஹா! அப்படியென்றால் நான் கண்டது கனவா?

"தனியாவெல்லாம் போயி விருதகிரி பார்க்காதே, பார்க்காதேன்னு சொன்னாக் கேட்கிறானா? எதையோ பார்த்து நல்லா பயந்திருக்கான். காலையிலே சிவா விஷ்ணு கோவிலுக்குக் கூட்டிட்டுப்போயி திருநீறு பூசி விடணும்!"

14 comments:

மதுரை சரவணன் said...

நல்ல கனவு .. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே செம காமெடிதான்.

>>நமது நட்பு நீங்கள் போடுகிற ஓட்டை வைத்து அளவிடப்படுவதன்று.

இதுல ஏதாவது உள்குத்து இருக்கா.இத்தனை நாளா இல்லாமா புதுசா போட்டிருக்கீங்க?

Philosophy Prabhakaran said...

nice...

மாணவன் said...

//ஆஹா! அப்படியென்றால் நான் கண்டது கனவா?//

என்னாது கனவா? நான்கூட உண்மையோன்னு கடைசி வரைக்கும்...

செம்ம கலக்கல்.........

தொடரட்டும் உங்கள் பணி....

Unknown said...

nice nice nice

வெங்கட் நாகராஜ் said...

நான் கூட ஏதோ நிஜமாகவே பாரதி சிலை காணாமல் போய் விட்டதோ என்று பயந்து விட்டேன். வருடத்தில் இரண்டு நாட்கள் தானே நாம் அந்த முண்டாசு கவிஞனை நினைக்கிறோம்.. நல்ல பகிர்வு சேட்டை.

பிரபாகர் said...

ஒருநாள் மட்டும்தான் அந்த மகாகவியை எல்லோரும் நினைப்பார்கள் என்பது கொடுமையான விஷயம்தான் நண்பா!... கலிகாலம், என்ன சொல்ல!...

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

நல்லா காணுறீங்க கனவு :)

vasu balaji said...

நல்லகாலம் ஸ்ரேயாக்கு பாரதி மீசை வரலையே கனவுல:))

Anonymous said...

//ஆஹா! அப்படியென்றால் நான் கண்டது கனவா?//

அடப்போங்கப்பா..
சப்புனு முடிஞ்சிடுச்சு.

எல் கே said...

சேட்டை இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணி இருக்கலாமோ ??

ரிஷபன் said...

கனவா.. நடக்கப் போவுதா?

P.P.S.Pandian said...

மகாகவி பாரதியை வச்சி இப்படியா காமடி பண்ணுவீங்க ! அவரது பிறந்தநாள் அன்னிக்கு தான் தலைவர்கள் தமிழுக்கு உயிர் தந்த கவிஞனின் சிலைக்கு மாலை போடுவாங்க! அப்புறம் ரேடியோவில அவன் பாட்டுப் போடுவாங்க !அப்புறம் வசதியாக மறந்துபோயிடுவனுக ! என்பதை ரொம்பச் சரிய சொல்லியிருக்கிங்க !

Sermuga Pandian said...

மகாகவி பாரதியை வச்சி இப்படியா காமடி பண்ணுவீங்க ! அவரது பிறந்தநாள் அன்னிக்கு தான் தலைவர்கள் தமிழுக்கு உயிர் தந்த கவிஞனின் சிலைக்கு மாலை போடுவாங்க! அப்புறம் ரேடியோவில அவன் பாட்டுப் போடுவாங்க !அப்புறம் வசதியாக மறந்துபோயிடுவனுக ! என்பதை ரொம்பச் சரிய சொல்லியிருக்கிங்க !