Monday, September 6, 2010

"பீப்ளி-லைவ்" - சிரிக்க, சிந்திக்க....!

"எஸ்கேப்" மல்டிப்ளக்ஸில் இதுவரை படம்பார்க்காமலிருந்த ஆறாத்துயர் ஒருவழியாக ஒழிந்தது. (அனேகமாக, இதுவே முதலும் கடைசியுமாகவும் இருக்கலாம்; நம்ம நிதிநிலைமைக்குத் தோதுப்படாது!). எல்லாம் நண்பர்களது வற்புறுத்தல்! இல்லாவிட்டால், அழகாக ’சிந்து சமவெளி,’ படம் பார்த்துவிட்டு, ’மனத்துக்கண் மாசிலன் ஆனவர்கள்,’ மட்டும் பாருங்கள்; ஏனையோர் பார்க்க வேண்டாம் என்று அட்வைஸ் பண்ணுகிற ஒரு அருமையான வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன். இயக்குனர் சாமியையும் ஒரு பிடிபிடித்து ரொம்ப நல்லவனாகியிருக்கலாம்; ஹும்! சரி, போகட்டும்!

பீப்ளி லைவ்! ஆமீர்கான் மீது எனக்கு ஏற்பட்டிருக்கிற அபிமானத்தை அதிகரித்திருக்கிறது. அவர் தலைகாட்டாவிட்டாலும், தயாரிப்பு அவருடையது தான்!

புத்தியா, நத்து இருவரும் சகோதரர்கள். மூத்தவன் புத்தியாவுக்குத் திருமணம் ஆகவில்லை. இளையவன் நத்துவுக்கு நையப்புடைக்கிற ஒரு மனைவியும், நண்டும் சிண்டுமாய் பல குழந்தைகளும் இருக்கின்றனர். கயிற்றுக்கட்டிலில் பள்ளிகொண்டிருந்தவாறே, மருமகளோடு சதா அக்கப்போர் செய்யும் ஒரு நோயாளித்தாயார் வேறு!

சகோதரர்கள் நிலத்தின் பெயரில் வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பிக் கட்ட முடியாத நிலையில், உள்ளூர் அரசியல்வாதியைச் சென்று சந்திக்கிறார்கள். இவர்களை உதாசீனம் செய்வதோடு இல்லாமல், ’தற்கொலை செய்து கொண்டால், ஒரு லட்சம் நஷ்ட ஈடு கிடைக்கும்,’ என்று அரசியல்வாதி கிண்டல் செய்யவே மனமுடைந்து திரும்புகின்றனர். ஆனால், இருக்கிற நிலத்தையும் கோட்டைவிட்டால், நடக்கிறதே வேறு என்று நத்துவின் மனைவி சண்டைபிடிக்கவே, தம்பி நத்துவைத் தற்கொலை செய்து கொள்ளுமாறு அண்ணன் புத்தியா உற்சாகப்படுத்துகிறான். காரணம், அவனுக்குத் திருமணமாகாததால், வாரிசு இல்லையென்று நஷ்ட ஈடு தர மாட்டார்கள் என்பது அவன் சொல்லுகிற காரணம். குடிபோதையில் இதுகுறித்து அவர்கள் உரையாடுவதை, உள்ளூர் பத்திரிகை நிரூபர் செய்தித்தாளில் போட்டுவிட, அதன் பிறகு ’பீப்ளி’ என்ற அந்தத் தூங்குமூஞ்சி கிராமம் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தித்தொலைக்காட்சிகளின் கையில் சிக்கிச் சின்னாபின்னமாவதை ஏறக்குறைய ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில் வருவது போன்ற காட்சியமைப்புகளோடு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் பெண் இயக்குனர் அனுஷா ரிஸ்வி- முதல் படமாம்! கலக்கல்!

தொலைக்காட்சிகளை இந்தப் படத்தில் உண்டு இல்லையென்று பண்ணியிருக்கிறார்கள். எல்லா செய்தித்தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு, நத்துவின் தற்கொலை அறிவிப்பை வைத்து அவரவர் டி.ஆர்.பியை ஏற்றப் படுகிற அவஸ்தையை, இயக்குனர் காட்டியிருக்கிற விதமே அலாதி. தற்கொலை செய்து கொள்ளப்போகிறவனின் வீட்டுக்குப் பக்கத்தில் கிராமத்துத் திருவிழா போல குச்சி ஐஸ் தொடங்கி, ரங்கராட்டினம் வரை வந்து விழாக்கோலம் ஆகிவிடுகிறது.

சிவனே என்று படுத்துறங்கிக்கொண்டிருக்கிற நத்து குறட்டை விடுவதை குளோஸ்-அப்பில் படம்பிடித்துக்கொண்டே தொலைக்காட்சி சேனல்கள் அவனது வீட்டுக்குள் நுழைகின்றன. நத்து பதறியடித்துக்கொண்டு எழுந்து, கூக்குரல் இடுவதும், கயிற்றுக் கட்டிலிலிருந்த அம்மா மூத்தமகனை, "யாரோ ஒரு பொம்பளையைக் கூட்டிக்கிட்டு வந்திட்டியே,’ என்று திட்டுவதும், அந்தப் பெண் நிருபர் "நத்து, பயப்படாதே, நானோ எங்க கேமிராவோ உன்னை ஓண்ணும் பண்ணமாட்டோம்," என்று கூறுவதும் செமத்தியான கலாட்டா!

கதை முக்கியப்பிரதேஷ் என்ற கற்பனை மாநிலத்தின் பீப்ளி என்ற ஊரில் நடைபெறுகிறது. நத்துவின் தற்கொலைச் செய்தி வெளியாகிற நேரம் அம்மாநிலத்தில் தேர்தல் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கேட்கவா வேண்டும்? கிராம அபிவிருத்தி அதிகாரி வந்து ’உனக்கு அரசாங்கம் லால்பஹாதூர் சாஸ்திரி திட்டத்தின் கீழே ஒரு லால்பகதூரை வழங்கியிருக்கிறது,’ என்று சொல்லவும், அவர் வந்த வண்டியிலிருந்து ஒரு பச்சைநிற அடிபம்பு இறக்கப்படுகிறது.

"இதுக்கு ஃபிட்டிங் சார்ஜ்?" என்று கேட்கவும், "தற்கொலை பண்ணிக்கப்போறவனுக்கு இதுவே அதிகம்,’ என்று அதிகாரி உறுமுகிறார். தியேட்டரில் மீண்டும் சிரிப்பலை!

எதிர்க்கட்சி சும்மாயிருக்குமா? ஒரு பெரிய கலர் டி.வியைக் கொண்டு வந்து பரிசாக அளிக்கிறது. ஒரு கட்டத்தில் முதலமைச்சரே வந்து, "புத்தியா, நத்து இருவருக்கும் அரசு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கும்," என்று அறிவித்துவிட்டுப் போய் விடுகிறார். ஆனால், தேர்தல் விதிமுறைகளை அந்த அறிவிப்பு மீறுவதாக அதை கமிஷன் ரத்து செய்யச் சொல்கிறது. மீண்டும், நத்து தற்கொலை செய்தே ஆக வேண்டிய நிலை.

"அப்பா, நீ எப்போ தற்கொலை செய்துக்குவே?" என்று மகனே வந்து கேட்கிற அளவுக்கு நத்துவின் தற்கொலை கேலிக்கூத்தாகி விடுகிறது. இத்தனை நடக்கும்போதும், செய்தித்தொலைக்காட்சிகள் பீப்ளியிலேயே டேரா போட்டு, அடிக்கடி பல ’திடுக்கிடும்’ தகவல்களை நேரடி ஒளிபரப்புச் செய்கிறது.

நத்து காலைக்கடன் கழிப்பதைக் கூட துரத்தித் துரத்திக் கேமிராவில் படம் பிடிக்கவே, வெறுத்துப்போய் அவன் ஊரை விட்டே தலைமறைவாகி விடுகிறான்.

"நத்து எங்கே போனான்? உயிரோடு இருக்கிறானா செத்து விட்டானா? அவனை யார் கொன்றது? மாவோயிஸ்டுகளா? இஸ்லாமிய தீவிரவாதிகளா? அமெரிக்காவின் சதித்திட்டமா? அரசியல் சூழ்ச்சியா?" என்று தொலைக்காட்சிகள் இஷ்டத்துக்கும் ரீல் விட்டு அவரவர் டி.ஆர்.பியை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.

நத்து கடைசியாகக் காலைக்கடன் கழித்த இடத்தை, படு விமர்சையாகப் படம் பிடித்து, "தற்கொலை செய்து கொள்ளப்போகிறவன் என்றால் என்ன, அவனும் மனிதன் தானே? அவனுக்கு மட்டும் இந்த உபாதை இருக்கக்கூடாதா?" என்றெல்லாம் ரன்னிங் கமெண்டரி நடக்கும்போது, அரங்கத்தில் பார்வையாளர்கள் ’இதற்கு மேல் சிரிக்க முடியாது,’ என்பது போல வயிற்றைப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்ததைப் பார்த்தேன். அதிலும் ’இந்த இடத்தில்தான் நத்து கடைசியாக குந்தியிருந்தான்,’ என்று கேமிராவை குளோஸ்-அப்பில் கொண்டு போய், சாக்பீஸால் வட்டமிட்டுக் காட்டுகிறபோது, சிரித்துச் சிரித்துக் கண்களில் தண்ணீரே வந்துவிட்டது.

எவ்வளவோ திட்டங்களிலிருந்தாலும், அவை வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள் என்பதை ஒரே காட்சியில் காட்டியிருக்கிறார்கள். ஓட்டுக்காக, அரசியல்வாதிகள் ஆடுகிற சந்தர்ப்பவாத நாடகங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். செய்திக்காக, எந்த அளவுக்கும் ஊடகங்கள் கீழே இறங்கும் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தது போல வெளிப்படையாக்கியிருக்கிறார்கள்.

ஊருக்கு வெளியே கிடங்கில் ஒளிந்து கொண்டிருக்கிற நத்துவைப் பிடிக்க, எல்லா தொலைக்காட்சி சேனல்களும் அங்குபோக, எதிர்பாராதவிதமாக ஒரு தீவிபத்து நிகழ்கிறது. நத்து அதில் இறந்துவிட்டான் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, அவன் ஒசையின்றி நகரத்துக்குப் போய் (கோவெறு கழுதையின் மீது ஏறி!) கட்டிடவேலை செய்ய ஆரம்பிக்கிறான்.

1980-ம் ஆண்டு முதல் இதுவரை 80 லட்சம் விவசாயிகள், விவசாயத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்குப்போய் விட்டார்கள் என்ற புள்ளிவிபரத்தைக் காட்டி படத்தை முடிக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து நாங்கள் சிரித்தது சரி; ஆனால், ஆமீர் கான் காட்டிய விசேஷக்காட்சியில் பார்த்த பிரதமர் மன்மோகன் சிங், ’சீரியஸாக’ எடுத்துக்கொண்டால் நல்லது. காரணம், முக்கியப்பிரதேசம் என்ற ஒரு மாநிலமோ, பீப்ளி என்ற கிராமமோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கிராமத்திலும் புத்தியாக்களும், நத்துக்களும் இருக்கின்றனர்; அதில் ஒரு சிலர் இறக்கின்றனர் - உண்மையாகவே!

10 comments:

சிநேகிதன் அக்பர் said...

மிகச் சிறந்த விமர்சனம்.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,நீங்களும் விமரசனத்துல கலக்க ஆரம்பிச்சுட்டீங்களா?வாழ்த்துக்கள்

suneel krishnan said...

நல்ல விமர்சனம் , இந்த படத்தை பத்தி நெறைய சொல்லிடாங்க , கட்டாயம் பாக்கணும் , நமக்கு ஹிந்தி அந்த அளவுக்கு புரியாது அதனால dvd subtitle வந்த உடனே பாக்கணும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எவ்ள ரூவா டிக்கெட்டு..?

வெங்கட் நாகராஜ் said...

பீப்ளி லைவ் - தமிழ் விமர்சனம் - உங்கள் பாணியில் - நன்றி. “எவ்வளவு ரூபா டிக்கெட்?” :)

வெங்கட்.

Chitra said...

Good review :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான் விமர்சனம் பண்ணியிருக்கீங்க!

அச்சு said...

படத்தை பார்க்கத்தூண்டும் அருமையான விமர்சனம்....

ADHI VENKAT said...

விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு.

Anonymous said...

விமர்சனம் நல்ல இருக்கு சேட்டை