Wednesday, September 15, 2010

உரத்த வலி!

இங்கு நான் விவரிக்கப்போகிற இடம் எனக்கு மட்டுமே பரிச்சயமானதல்ல. உங்கள் வீட்டருகிலோ அல்லது சற்றுக் காலாற நடக்கையில் வழியிலோ இப்படியொரு இடத்தை நீங்களும் பார்த்த ஞாபகம் நிச்சயமாய் உங்களுக்கு வரும்.

இரண்டுக்கு மேற்பட்ட சாலைகள் கூடுகிற ஏதோ ஒரு சந்திப்பில், பழகிப்போன தலைவர்களின் மார்பளவுச் சிலைகளும் மூலைகளில் குவிந்திருக்கும் குப்பைகளும் அந்த இடத்தின் அடையாளங்கள். அதிகாலையில், நடைபாதைகளில் செய்தித்தாள்களும், காய்கறியும், பால் பாக்கெட்டுகளும் மும்முரமாக விற்பனையாகிக்கொண்டிருக்கும். சில நாட்களில் பூக்கட்டிக்கொண்டிருக்கும் பெண்களையும் இங்கு காணலாம். இன்னும் வாழ வேண்டும் என்ற பேராசையிலோ அல்லது இம்சையின்றி சாகவேண்டும் என்ற நப்பாசையிலோ சில வயோதிகர்கள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருப்பதையும் அங்கு பார்த்துக்கொண்டிருக்கிறோம். சீருடையணிந்த பள்ளிச்சிறார்கள் வாகனங்களுக்காகக் காத்திருப்பதையும், அவ்வப்போது வரும் வெள்ளை வாகனங்களிலிருந்து களைத்துப்போய் இறங்குகிற கால்சென்டர் ஊழியர்களையும் தவறாமல் கவனித்து வருகிறோம்.

இந்த இடங்களோடு தொடர்புடைய ஏதாவது ஒரு சம்பவம், அதை நாம் கடக்கிறபோதெல்லாம் நமது நினைவுக்கு வருவதும் வாடிக்கையே. ஏதோ ஞாபகத்தில் அங்கிருந்த டீக்கடையில் காசு கொடுக்காமல் பத்தடி நடந்து போனபிறகு, யாரோ கைதட்டி அழைத்ததும் திரும்பிப் பார்த்து, புரிந்து கொண்டு அசடுவழிந்த நிகழ்வு முன்பெல்லாம் அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும். இந்த உதாரணம் தவிர, சில சம்பவங்கள், சில காட்சிகள் என்று ஒன்றன்பின் ஒன்றாய் நிறைய நினைவுகள் அந்த சந்திப்போடு தொடர்புடைத்தனவாயிருக்கின்றன, அல்லது இருந்தன....?

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில், ஒரு இளநீர்க்கடை இல்லாமலா போய் விடும்?

நான் குறிப்பிடுகிற இந்த இளநீர்க்கடையில் எப்போதும் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பவர் நடுத்தரவயதைத்தாண்டிய ஒரு பெண்மணி. அதே கடையில் அண்மையில் கிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ணனின் பொம்மைகளையும், விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையார் பொம்மைகளையும் பார்த்திருக்கிறேன். இருப்பினும், அந்தப் பெண்மணியின் முக்கிய வியாபாரம் இளநீர்தான்! அதையடுத்துள்ள கடையில் அதிகாலையில் டீ அருந்தியபிறகுதான் எனது ஒவ்வொருநாளும் துவங்குகிறது. விடுமுறை நாட்களில், ஊர் சுற்றித் திரும்பும்போது நானும் இளநீர் சாப்பிட்டிருக்கிறேன். அந்தப் பெண்மணி உட்பட, அந்த முச்சந்தியில் எனக்குப் பரிச்சயமானவர்களின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் அதிகரித்தே வந்திருக்கிறது.

அப்படித்தான் ஒரு நாளில், இளநீர் கொடுத்து விட்டு மீதி வாங்கியபோது, அவர் கொடுத்த ஐந்து ரூபாய்த்தாள் மிகவும் கசங்கி, கிழிந்திருக்கவே ’வேறே நோட்டு இருந்தாக் கொடுங்களேன்!’ என்று இயல்பாகத் தான் கேட்டேன்.

"நானா அடிக்கிறேன் நோட்டு?"

ஒரு கணம் அதிர்ந்து போனேன். என்னாயிற்று இந்த அம்மாவுக்கு? ஆனால், சுர்ரென்று கிளம்பிய எரிச்சலை அடக்கியவாறு, எதிர்பேச்சு எதுவும் பேசாமல் அவர் கொடுத்த நோட்டை சட்டைப்பையில் போட்டுக்கொண்டு, வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டேன்.

அதன்பிறகு, ஒவ்வொரு முறை அந்த இடத்தைக் கடக்கும்போதும், சொல்லப்போனால், ஒவ்வொரு முறை அந்த இடத்தை நெருங்கும் முன்னரே, கையில் இளநீர் சீவுகிற கத்தியுடன் அந்தப் பெண்மணி ’நானா அடிக்கிறேன் நோட்டு?" என்று உரக்கக் கேட்பது போலவே மனதுக்குள் ஒரு பிரமை! தன்னிச்சையாக அந்தப் பெண்மணியின் மீது எனக்கு ஒரு கோபம்; அது படிப்படியாக வளர்ந்து எங்கு இளநீர் குடித்தாலும் அந்தப் பெண்மணியைப் பற்றிய ஞாபகம் தந்து எரிச்சலூட்டியது. சற்றே அதீதமாகக் கற்பனை செய்கையில், இது மேலும் வளர்ந்து இளநீரின் மீதே எனக்கு வெறுப்பாகி விடுமோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அந்த இடத்தோடு எனக்கிருந்த பழைய பரிச்சயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இளநீர்க்காரப் பெண்மணி மட்டுமே ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வந்தார்! என்ன ஒரு அசட்டுத்தனம்! அந்த சம்பவத்தை ஏன் இன்னும் வலுக்கட்டாயமாகச் சுமந்து திரிகிறேன் என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.

அந்தச் சுமை அண்மையில் இன்னொரு சுமைக்கு இடமளித்துவிட்டு இறங்கிப்போனது.

அதே சந்திப்பு; அதே டீக்கடை! செய்தித்தாளை வாங்குவதா வேண்டாமா என்ற யோசனையில் டீ பருகியபடியே நான் பராக்குப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். தெருவைச் சுத்தம் செய்கிற சீருடையணிந்த பெண்மணிகள் சத்தமாகச் சிரித்துப் பேசியபடி, டீ அருந்தியபடி இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல கடைக்குள்ளே அரசியல் பேசுபவர்களின் கெக்கலிப்புக்களும் கேட்டுக்கொண்டிருந்தன. யார் யார் என்னென்ன செய்து கொண்டிருந்தார்களோ, அதையெல்லாம் சட்டென்று நிறுத்தியபடி சட்டென்று ஒரு சத்தம் கேட்டது!

பளார்!

சத்தம் வந்த திசையை திரும்பி நோக்கியபோது, அடிவாங்கி, கன்னத்தைப் பிடித்தபடி அந்த இளநீர் விற்கும் பெண்மணி. அவளை அடித்துவிட்டும், மேலும் அடிக்கப்போகிறவன் போல அபாயகரமாக கையை உயர்த்தியபடி ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன்!

"காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று சலித்தபடி, தலையைத் தாழ்த்திக்கொண்டு கடமையைச் செய்து கொண்டிருந்த டீக்கடைக்காரர்.

"அதுக்குள்ளே கடை திறந்திட்டாங்களா?" என்று பின்னாலிருந்து ஒரு நக்கலான கேள்வி.

பளார்! அடுத்த அடி அந்தப் பெண்மணியின் முதுகில்!

"பெத்த அம்மாவை அடிக்கிறானே பொறம்போக்கு! இவனையெல்லாம்.....!"

"டேய்.....!" டீ குடித்துக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளிப் பெண்களில் ஒருவர் துள்ளியெழுந்தார். விடுவிடுவென்று சாலையைக் கடந்து போவதற்கு முன், புடவையை வரிந்து கட்டி முடித்திருந்தார். மூன்றாவது அடிக்காக, அந்த இளைஞனின் கையோங்கியிருந்தபோது அவனது தலைமயிற்றை இந்தப் பெண்மணி கொத்தாகப் பிடித்திருந்தார்.

"நடறா டேசனுக்கு...இன்னிக்கு உன்னை சுளுக்கெடுத்தாத் தான் நீ சரிப்படுவே...! நடறா....பெத்த அம்மாவையா அடிக்கிறே நாயே...?"

எனது கண்கள் இயல்பாகவே அந்த இளநீர் விற்கும் பெண்மணியின் மீது விழுந்தது. ’ஐயையோ, என் மகனைப் போலீஸில் பிடிச்சுக்கொடுத்திராதே!’ என்று சினிமாக்கார அம்மாவைப் போல அவர் வசனம் பேசவில்லை; மாறாக, இன்னும் கன்னத்தைப் பிடித்தபடி மகனும் அந்தத் துப்புரவுத் தொழிலாளிப் பெண்மணியும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் கவனித்தபடி, தனது இளநீர்க்கடைக்குச் சென்றார். ஒவ்வொருவராகக் கூட்டம் சேர, அம்மாவை அடித்த மகன் நடுவில் சிக்கித் திணறிக்கொண்டிருக்க, அம்மாவோ கடையில் இளநீரைச் சீவியபடி தனது வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து, கொச்சையான சில கெட்ட வார்த்தைகளையும், சந்தடி சாக்கில் கிடைத்த ஓரிரு மொத்துக்களையும் வாங்கிக்கொண்டு அந்த மகன் அங்கிருந்து நகர்ந்தான். நானும் நகர்ந்தேன்!

இனிமேல் அந்த இடத்தை நெருங்கும்போது எனக்கு ’நானா அடிக்கிறேன் நோட்டு?’ என்ற கேள்வி நினைவுக்கு வராது போலத் தோன்றுகிறது! காரணம், அந்தக் கேள்விக்குள்ளே எங்கோ எப்போதோ யாரிடமோ வாங்கிய அறைகளின் உரத்த ஒலி ஒளிந்து கொண்டிருக்கிறது என்று புரிந்துவிட்டது. இனிமேல், எனக்கு ’பளார்’ என்ற சத்தம் மட்டுமே கேட்கும் - ஒருவேளை, அதைவிடவும் உரத்த , அதைவிடவும் வலிக்கிற தருணங்களுக்கு நான் மீண்டும் சாட்சியாகாத வரையில்!

19 comments:

Anonymous said...

//ஒருவேளை, அதைவிடவும் உரத்த , அதைவிடவும் வலிக்கிற தருணங்களுக்கு நான் மீண்டும் சாட்சியாகாத வரையில்!//

போதும் சேட்டை! வேண்டாம். அந்தப் பையன் அடித்த வலியைவிட, பெத்து வளர்த்த பையன் இப்படி அடிக்கிறானே என்ற மனதின் வலிதான் மிகுந்த துயர் உடையதாய் இருக்கும் என நினைக்கிறேன்.

VELU.G said...

உண்மையிலேயே மனம் சங்கடப்பட்டது

நீங்கள் சொல்வது நிஜம் தான், நம் மீது பாயும் வசவுகள் அவர்கள் யாரோ ஒருவரிடம் வாங்கியதாகவும் இருக்கலாம்

நல்ல பதிவு

vasu balaji said...

என் அலுவலக வீதியோரக் குடிகளில் நான் தினம் படிக்கும் பாடத்தின் ஒரு பக்கம். :)

Anonymous said...

என்னேன்னமோ யோசிக்க வைச்சிட்டீங்க சேட்டை

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம் :( நல்ல பதிவு சேட்டை

Raju said...

சூப்பரா எழுதியிருக்கீங்கண்ணே!
இப்படியும் அடிக்கடி எழுதுங்களேன்.

என்னது நானு யாரா? said...

அந்த காட்சியின் வலியை உணர வைத்து விட்டீர் சேட்டைகாரரே! என்ன ஆழமாக உங்களை பாதித்த விஷயத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்து கூர்மையான ஆயுதமாக காட்சி அளிக்கிறது

பல நேரங்களில் சிரிப்பு பதிவுகளை இட்டு, எங்களை நன்றாக சிரிக்க வைக்கவும் முடிகிறது. இது போன்று சீரியஸான பதிவுகளை எழுதி எங்கள் மனங்களை கனக்க செய்யவும் முடிகிறது.

நீங்கள் ஒரு சகலகலா வல்லவர் தான் சேட்டைகாரரே!

தனி காட்டு ராஜா said...

//நான் மீண்டும் சாட்சியாகாத வரையில்!//
சாட்சியாகாத வரையில் இன்பம் துன்பம் கலந்தது தான் இருக்கும்...

Chitra said...

காரணம், அந்தக் கேள்விக்குள்ளே எங்கோ எப்போதோ யாரிடமோ வாங்கிய அறைகளின் உரத்த ஒலி ஒளிந்து கொண்டிருக்கிறது என்று புரிந்துவிட்டது. இனிமேல், எனக்கு ’பளார்’ என்ற சத்தம் மட்டுமே கேட்கும் - ஒருவேளை, அதைவிடவும் உரத்த , அதைவிடவும் வலிக்கிற தருணங்களுக்கு நான் மீண்டும் சாட்சியாகாத வரையில்!


.......இந்த காட்சிகளை சாதாரண விஷயமாக ஒதுக்கி தள்ளாமல், இந்த அளவுக்கு மனதில் ஏத்தி எங்கள் மனதிலும் ஆழமாய் பதிய வைத்த உங்கள் மேலும் மதிப்பு கூடுகிறது.

அண்ணாமலை..!! said...

தங்களின் எழுத்து கனம் நிறைந்தது!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,ஒரு தேர்ந்த சிறுகதைக்கான நடை இதில் உள்ளது.நகைச்சுவையாகவே உங்கள் எழுத்துக்களை படித்து எங்கள் மைண்ட்செட் சேட்டை காமெடிக்குத்தான் லாயக்கு என நினைத்தோம்,அதை தூள் தூள் ஆக்கி விட்டீர்கள்,கலக்கீட்டீங்க.

suneel krishnan said...

எப்படி சந்தோஷம் என்பது பரவுமோ , அதே போல் வெறுப்பு என்பது ஒரு தொத்து நோய் , அந்த மகனின் அறைக்கு பின்னால் நிச்சயமாக ஒரு வெறுப்பு இருக்கும் , இது இப்படி சுழன்று சுழன்று எல்லார் மனதயும் புண்படுத்தும் .அருமையான் எழுத்து .நன்றி

Mahi_Granny said...

'அந்தச் சுமை அண்மையில் இன்னொரு சுமைக்கு இடமளித்துவிட்டு இறங்கிப்போனது.' என்னவாயிருக்கும் என்று படித்துக் கொண்டே போனால் உண்மையாகவே உரத்த வலி தான். சேட்டையின் இந்த எழுத்தும் அபாரம் . வாழ்த்துக்கள்.

Thuvarakan said...

தங்களைப் பின்தொடர்வதட்காக இன்னும் இன்னும் மகிழ்வடைய வைக்கின்றன உங்கள் எழுத்துக்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொரு சுமையுமே அடுத்தடுத்த தோள் மாற்றி கடத்தப்படுவதாகவே தோன்றுகிறது..

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு.

பிரபாகர் said...

ஆருயிர் நண்பா!

உங்களின் எழுத்துக்களில் தான் எத்தனை பரிமாணம்! வியக்கிறேன்.

பிரபாகர்...

Anonymous said...

உணர்வுப்புர்வமான பதிவு.
எழுத்துநடையும் அருமை..

Anisha Yunus said...

படித்தபின் மனதில் வலி. நம்மில் பெரும்பாலானோர் இப்படித்தான் இன்னொரு தருவாயில் நம்முடைய இயலாமையை வெளிப்படுத்துகிறோம். ஆயினும் அந்தம்மாவை நினைக்கும்போது இன்னும் கனக்கிறது மனது!