(சேட்டைக்காரனை விசித்ரகுப்தன் வரவேற்கிறார்)
சேட்டைக்காரன்: யாரய்யா நீரு? இது எந்த இடம்? ஏன் மணிரத்னம் படம் மாதிரி எங்கே பார்த்தாலும் ஒரே இருட்டா இருக்கு?
விசித்ரகுப்தன்: நரனே, என் பெயர் விசித்ரகுப்தன்; இது எமலோகம்! நீ செத்து விட்டாய்! அதோ பார்! கூட்டம் கூட்டமாக மானிடர்கள் போகிறார்களே பார்த்தாயா?
சேட்டைக்காரன்: ஆமா, ஏன் அழுதிட்டிருக்காங்க? டிவியிலே ஏதாவது மெகாசீரியல் காட்டுறாங்களா?
விசித்ரகுப்தன்: நரனே, என்னதான் எமலோகம் என்றாலும், அவ்வளவு கொடூரமான தண்டனைகளை நாங்கள் ஒருபோதும் அளிப்பதில்லை. அவர்களெல்லாம் பாவிகள்; நீயும் அவர்களோடு சென்று வரிசையில் நின்று கொள்! எமதர்மராஜன் உனக்கு உரிய தண்டனையை வழங்குவார்!
சேட்டைக்காரன்: அட போய்யா! எங்களுக்கு அந்தகூபமெல்லாம் அயோனாக்ஸ் தியேட்டர்லே படம் பார்க்கிற மாதிரி! பெருசா தண்டனை கொடுக்கப்போறாங்களாம்!
எமதர்மராஜன்: நரனே, யார் நீ? கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் அரசியல்வாதிபோல பேசுகிறாயே? முதலில் உனக்கே தீர்ப்பு அளிக்கிறேன். சித்ரகுப்தா, இந்த மானிடனின் பாவக்கணக்கை அவிழ்த்து விடு!
சேட்டைக்காரன்: மிஸ்டர் எமதர்மன்! நான் ஒரு மறத்தமிழன்!
எமதர்மராஜன்: இது ஒண்ணே போதும், என்ன தண்டனை கொடுத்தாலும் கேட்க நாதியில்லை!
விசித்ரகுப்தன்: பிரபோ, சித்ரகுப்தன் தலையைச் சொரிவதைப் பார்த்தால் அவர் ஏதோ தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது!
சேட்டைக்காரன்: அடப்பாவீங்களா, ஆபீசிலே தான் எங்க வத்ஸலா மாமி தப்புத் தப்பாக் கணக்குப் போட்டு சம்பளத்தைப் பிடிக்கிறாங்கன்னா இங்கேயுமா?
சித்ரகுப்தன்: பிரபோ, நான் எந்தத் தவறும் செய்யவில்லை! விதிப்படி இவன் இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்து போலி டாக்டரின் மருந்தில் தான் இறக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறது. இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் இங்கு வந்தான் என்று எனக்கே புரியவில்லை!
சேட்டைக்காரன்: யோவ் சித்ரகுப்தா! அதான் தமிழ்நாட்டுலே எல்லா போலி டாக்டரையும் புடிச்சு உள்ளே போட்டுட்டாங்க இல்லே? அதுனாலே ஒரு அசல் டாக்டர் கிட்டே ஜலதோஷம்னு போனேன்; அவரு என் மூளையிலே நீர்கோர்த்திருக்குன்னு ஆபரேஷன் பண்ணி இங்கே அனுப்பிட்டாரு!
விசித்ரகுப்தன்: என்னது? உனக்கு மூளையிருக்கிறது என்றா அந்த டாக்டர் சொன்னார்? அப்படியென்றால் அவரும் போலிடாக்டராகத் தான் இருக்க வேண்டும்.
சேட்டைக்காரன்: என்ன கிண்டலா? என்னை எந்திரன் பார்க்க முடியாமப் பண்ணிட்டு, லொள்ளு வேறயா?
எமதர்மராஜன்: நரனே, தவறு நடந்து விட்டது! உன் உயிரைத் திருப்பித் தந்து உன்னை பூலோகத்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கிறேன்.
சித்ரகுப்தன்: பிரபோ, மிகவும் தாமதமாகி விட்டது. சேட்டைக்காரனின் உடலை அவனது உறவினர்கள் எரித்து விட்டார்கள்! இவனது உடம்பில் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவுமில்லாததால் தீக்குச்சி பொசுங்குவதற்குள் இவனது உடல் பொசுங்கிவிட்டது.
எமதர்மராஜன்: ஐயையோ! இப்போது என்ன செய்வது?
சேட்டைக்காரன்: என்ன செய்வதா? அதிசயப்பிறவியிலே ரஜினிக்கு அவரு மாதிரியே இன்னொரு உடம்பைக் கண்டுபிடிச்சுக் கொடுத்தீங்க இல்லே? அதே மாதிரி எனக்கும் என்னை மாதிரியே ஒரு உடம்பைக் கண்டு பிடிச்சுக் கொடுங்க!
சித்ரகுப்தன்: பிரபோ, சோதனை மேல் சோதனை! பொதுவாக பிரம்மதேவன் ஒரே மாதிரி ஏழு பேரைப் படைப்பார். நமது போதாத காலம், இந்த சேட்டைக்காரனைப் படைத்ததும் அவரே பயந்துபோய் அத்தோடு போதுமென்று நிறுத்திவிட்டார்.
எமதர்மராஜன்: அதனாலென்ன சித்ரகுப்தா? எனக்கொரு யோசனை! மானிடனே, சற்று தள்ளிநில்!
சேட்டைக்காரன்: ஏன்? உங்களுக்கு என்ன பன்றிக்காய்ச்சலா?
விசித்ரகுப்தன்: பிரபோ! நல்ல நாளிலேயே இவன் ஒழுங்காகப் பேச மாட்டான். இப்போது ஆவியாக வேறு வந்து தொலைத்திருக்கிறான். இவனை இங்கிருந்து கழித்துக் கட்டுவோம். வாருங்கள், அந்தப் பக்கமாகப் போய்ப் பேசுவோம்.
எமதர்மராஜன்: விசித்ரகுப்தா, இந்த சேட்டை ஒரு அருமையான யோசனை சொல்லியிருக்கிறான். தந்தை பிரம்மதேவன் ரஜினிகாந்த் மாதிரியும் ஏழு உருவங்களைப் படைத்திருப்பார் அல்லவா? அதில் ஒரு உருவத்தை இவனுக்கு அளித்து பூலோகத்துக்குத் திருப்பி அனுப்பி விடுவோம்.
விசித்ரகுப்தன்: நல்ல யோசனை பிரபோ! ரஜினிகாந்த் போன்ற உருவம் என்றால் கசக்கிறதா? உடனே ஒப்புக்கொண்டு பூலோகம் போய்விடுவான். தப்பித்தோம்! இல்லாவிட்டால் இங்கேயும் வலைப்பதிவு எழுதி நம் உயிரையே வாங்கினாலும் வாங்கி விடுவான்.
எமதர்மராஜன்: சரி, இந்த நல்ல செய்தியை இந்த நரம்புமனிதனிடம் நீயே சொல்லிவிடு!
விசித்ரகுப்தன்: சேட்டைக்காரா! நீ மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறாய். பிரம்மதேவன் ரஜினிகாந்தைப் போலவே இன்னும் ஆறு உருவங்களைப் படைத்திருக்கிறார். அதில் ஒரு உருவத்தை உனக்கு அளிக்கப்போகிறோம். இனிமேல் உன்னை பூலோகத்தில் பார்க்கிறவர்கள், உன்னையே ரஜினிகாந்த் என்று எண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மகிழ்ச்சியா? கிளம்பத்தயாராகு!
சேட்டைக்காரன்: என்னது, நான் பார்க்கிறதுக்கு ரஜினிகாந்த் மாதிரி ஆயிருவேனா?
எமதர்மராஜன்: அதிலென்ன சந்தேகம்? உருவத்தில் அப்படியே ரஜினியை உரித்து வைத்திருப்பாய். உன்னையும் எல்லாரும் ’ரஜினி, ரஜினி’ என்றே அழைப்பார்கள். போதுமா?
சேட்டைக்காரன்: நீங்க குசுகுசுன்னு ரகசியமாப் பேசும்போதே நினைச்சேன், இந்தமாதிரி வில்லங்கமா ஏதாவது நடக்குமுன்னு! ஏன்யா, என்னை ரஜினிகாந்தை மாதிரியே ஆக்கி, என்னையும் பூலோகத்துலே படாத பாடு படச்சொல்றியா? இப்படி எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க?
விசித்ரகுப்தன்: சேட்டை, ரஜினிகாந்த் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அல்லவா? அவரது உருவத்தை அடைய நீ கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?
சேட்டைக்காரன்: ரஜினியா இருந்தா, அரசியல்வாதிங்க, பத்திரிகைக்காரங்க, ரசிகருங்க, வலைப்பதிவருங்க தான்யா கொடுத்து வச்சிருக்கணும். அவருக்கு எவ்வளவு அவஸ்தைன்னு உங்களுக்கு என்னய்யா தெரியும்?
எமதர்மராஜன்: அப்படி என்ன அவஸ்தை?
சேட்டைக்காரன்: நான் பாட்டுக்கு பிளாட்பாரத்துலே கட்டிங் டீ குடிச்சிட்டு, பொறையைத் தின்னுட்டுப் போயிட்டிருப்பேன். ரஜினிகாந்தா இருந்தா முடியுமா? அவரு சாயா குடிச்சாலும் பேப்பரிலே போடுவாங்க, பாயா குடிச்சாலும் பேப்பரிலே போடுவாங்க! பப்ளிசிட்டி இல்லாம பாத்ரூம் மட்டும் தானய்யா போக முடியும்.
விசித்ரகுப்தன்: இதெல்லாம் ஒரு பிரச்சினையா உனக்கு?
சேட்டைக்காரன்: இல்லியா பின்னே? அடுத்த வருசம் தேர்தல் வரப்போவுது. அவரு யாருக்கு ஓட்டுப்போடணுமுன்னு சொன்னாலும் திட்டுவாங்க; சொல்லாட்டியும் திட்டுவாங்க! சேட்டைக்காரனா இருந்து சொன்னா எவனாவது திட்டுவானா?
எமதர்மராஜன்: இப்படியொண்ணு இருக்கோ?
சேட்டைக்காரன்: வேறென்ன, அரசியல் பேசினா அரசியல்வாதிங்க திட்டி போஸ்டர் அடிப்பாங்க; பேசாட்டி ரசிகருங்க போஸ்டர் அடிப்பாங்க! சும்மாயிருந்தா பத்திரிகைக்காரனுங்க கிழிகிழின்னு கிழிச்சிருவாங்க!
எமதர்மராஜன்: அட பாவமே!
சேட்டைக்காரன்: படம் ஓடிச்சுன்னா, எல்லாரும் ரஜினியை நக்கல் பண்ணுவாங்க! ஓடலேன்னா ரசிகருங்களை நக்கல் பண்ணுவாங்க! லாபம் வந்தா பணமுதலைன்னு திட்டுவாங்க; நஷ்டம் வந்தா ரஜினிதான் திருப்பிக் கொடுக்கணுமுன்னு சொல்லுவாங்க!
விசித்ரகுப்தன்: இதென்ன கொடுமை சேட்டை?
சேட்டைககாரன்: மேலே இருக்குய்யா! அவரு ஈச்சம்பாக்கத்துக்குப் போனாலும் சரி, இமயமலைக்குப் போனாலும் சரி, துரத்தித் துரத்தி போட்டோ எடுத்துப் போட்டு பரிகாசம் பண்ணுவாங்க!
எமதர்மராஜன்: கேட்கவே ரொம்ப கஷ்டமாயிருக்கே சேட்டை!
சேட்டைக்காரன்: இதெல்லாம் கூட பரவாயில்லைய்யா! ஒழுங்கா பெயரைக் கூட தமிழிலே தட்டச்சு பண்ண முடியாத பயலுவ எல்லாம் வலைப்பதிவு ஆரம்பிக்கிறானுங்க! முதல்லே பிள்ளையார் சுழிக்குப் பதிலா ரஜினியைத் திட்டி ஒரு இடுகை போட்டாத் தான் ராசின்னு ஒரு மூட நம்பிக்கை இருக்கு தெரியுமா?
விசித்ரகுப்தன்: சேட்டை, நீ சொல்வதைப் பார்த்தால் உனக்கு ரஜினிகாந்தைப் போன்ற உருவம் சரிப்பட்டுவராது போலிருக்கிறதே!
சேட்டைககாரன்: யாருக்குமே சரிப்பட்டு வராதுய்யா! சென்னையிலே கன்னடக்காரன்னு சொல்லுவாங்க, பெங்களூருலே மராட்டிக்காரன்னு சொல்லுவாங்க, மும்பையிலே மதறாஸின்னு சொல்லுவாங்க! இதெல்லாம் தேவையா எனக்கு?
எமதர்மராஜன்: எல்லாம் சரிதான், இருந்தாலும் இவ்வளவு புகழ்....
சேட்டைக்காரன்: அட நிறுத்துங்க மிஸ்டர் எமன்! வீட்டுலே ஒரு காதுகுத்து, ஒரு கல்யாணம் பண்ணினா, அவனவன் வலைப்பதிவுலே இடுகை போட்டு நாருநாராக் கிழிச்சிருவாங்க! ஒண்ணுமே எழுதக் கிடைக்கலேன்னா, ரஜினியோட தாடியைப் பத்தி ஒரு இடுகை போட்டு தமிழ்மணத்துலே பத்து ஓட்டு வாங்கிருவாங்க! ஆளை விடுங்க சாமி! நான் இங்கேயே இருக்கேன்!
விசித்ரகுப்தன்: அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதே சேட்டை! இன்று மாலைதான் பூலோகத்தில் முந்திரிக்கொட்டை என்ற வலைப்பதிவாளர், தனது முதல் பதிவுக்கு தமிழ்மணத்தில் ஐந்து ஓட்டு விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இங்கு வந்து கொண்டிருக்கிறார். அவரது உடலை எடுத்துக் கொள்கிறாயா?
சேட்டைக்காரன்: இது பேச்சு! வலைப்பதிவாளர் உடம்பாயிருந்தா டபுள் ஓ.கே! பொழுதுபோகலேன்னா எவனையாவது திட்டி எழுதி ஒப்பேத்திட்டு டென்சனே இல்லாம இருக்கலாம். ஊருக்கு உபதேசம் பண்ணினா மாதிரியும் ஆச்சு! பொழுதும் போயிடும்! ஹை ஜாலி!
எமதர்மராஜன்: விசித்ரகுப்தா! எப்படியோ இந்த சேட்டை எமலோகத்தை விட்டுத் தொலைந்தாலே போதும். இங்கு இருந்தால், நாளைக்கு நம்மையே திட்டி இடுகை போட்டாலும் போடுவான் படுபாதகன்!
Tweet |
19 comments:
Very Interesting... I enjoyed a lot :) Keep Rocking Settai.
//இதெல்லாம் கூட பரவாயில்லைய்யா! ஒழுங்கா பெயரைக் கூட தமிழிலே தட்டச்சு பண்ண முடியாத பயலுவ எல்லாம் வலைப்பதிவு ஆரம்பிக்கிறானுங்க! //
நானும் அந்த கேட்டகிரி தான்....
திட்டுறது ரொம்ப ஈசி வேலை.. அதனால தான் எல்லாரும் வாய்க்கு வந்த மாறி திட்டுராணுக.. இன்னைக்கு என்னோட சொந்த அனுபவம் ஒன்னை சொல்றேன்..
ஒரு கல்யாணத்துக்கு போறதுக்குள்ள என்னவொரு வாகன நெரிசல்.. அப்பா க்ளட்ச் பிடிச்சு பிடிச்சு கை வலி வந்துடுச்சு.. எல்லா எடத்திலையும் கல்யாணம்.. பொம்பளைக எல்லாம் பட்டு சாரி நகைகளுடன்.. பேருந்து முழுக்க கூட்டத்துடன் நகர்ந்தன. அப்போது தான் தோனுச்சு.. ரஜினி ஏன் அப்படி சொன்னார் என்று.. சாதாரண மக்களுக்கு நடக்கும் கல்யானத்திற்கே இவ்வளவு கூட்ட நெரிசல்.. பொது மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தது தவறா.? இந்த விஷயத்தில் ரஜினியைத் திட்டி எழுதுபவர்கள் அனைவரும் தங்கள் சுய விளம்பரத்துக்காகவே எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஒன்று ரஜினி ரசிகன் அல்ல.
ஒருத்தர் கேட்டிருந்தார்.. கல்யாணத்துக்கு ரசிகர்களாகிய எங்களை வரவேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே... உங்கள் படம் ரிலீஸ் ஆனாலும் இதையே சொல்வீர்களா என்று. சுத்த பைத்தியக்காரத் தனமான வாதம். படம் பார்க்க செல்பவன் ஒன்றும் "நான் கொடுக்கும் இந்த நூறு ரூபாயைக் கொண்டு ரஜினியின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறேன்" என்ற எண்ணத்தில் செல்வதில்லை.. மூன்று மணி நேரம் தான் குதூகலமாக இருக்க வேண்டும் என்று செல்கிறான். நடிகனும் அதற்காகவே நடிக்கிறான். கல்யாணம் என்பது அப்படியல்ல... தனிப்பட்ட விஷயமான கல்யாணத்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டால் அது ஒட்டு மொத்த மக்களுக்கும் இடைஞ்சல் தரும் விஷயமாகி விடும்...
//Your comment has been saved and will be visible after blog owner approval.//
அப்படின்னு மெசேஜ் வருதே.. முதல் வடை எனக்கா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும் போல...
annae,orae kallula 2 maangkaa.rajini rasikarkalaiyum kavarndhuttiinga.comedy fans also u attract.good shot
வேறென்ன, அரசியல் பேசினா அரசியல்வாதிங்க திட்டி போஸ்டர் அடிப்பாங்க; பேசாட்டி ரசிகருங்க போஸ்டர் அடிப்பாங்க! சும்மாயிருந்தா பத்திரிகைக்காரனுங்க கிழிகிழின்னு கிழிச்சிருவாங்க!
.....என்ன கொடுமை சார், இது? பாவம்தான்......
ரஜினியா இருக்கிறதோட கஷ்டம் ரஜினிக்குத்தான் தெரியும். என ஆனந்த விகடனில் ஒருமுறை படித்தேன். அதை நீங்க சொன்ன விதம் அருமை சேட்டை.
ம்... காமெடி கலந்த சவுக்கடி... கலக்கல் சேட்டை நண்பா...
பிரபாகர்...
பிரபலம்னாலே ப்ரொபளம் தான். நல்லாவே அதை சொல்லி இருக்கீங்க. ஆனாலும் ரொம்ப ஓவர் ஜால்ரா சத்தம் கேக்குது.
ஹா ஹா ஹா.. நல்ல ரசிச்சு படிச்சு சிரிச்சேன்..
நல்ல ரசனை உங்களுக்கு.. ஆரம்பம் முதல் முடிக்கிற வரைக்கும்..
அந்த தொடர்பு கெடாம அழகா எழுதி இருக்கீங்க...
எமலோகத்தையே ஆட்டி வச்ச பெருமை உங்களுக்கு தாங்க...!!
சூப்பர்.. பதிவு.. :-)))
ரஜினி படற கஷ்டமெல்லாம் சொன்னது... அருமை.. :-))
உங்க கற்பனை சேட்டைக்கு வானமே எல்லை!
சேட்டை வெல்கம் பேக் டு பதிவுலகம்...
சேட்டை கலக்கலோ கலக்கல். உங்கள் கற்பனைத் திறனுக்கு வானமே எல்லை.
சேட்டை கலக்கிடீங்க
நல்லா இருக்கு சேட்டை....ன்னு ஒரு வரியில எல்லாரும் தான் எழுதறாங்க, ஆனா அப்படி இல்லாம விலாவரியா விமரிசிச்சு நல்லா இருக்குன்னு எழுதினாதான ஒரு பதிவருக்கு சந்தோசம்? ஆனா பாருங்க, இந்த ஒரு வரியைத் தவிர வேறு எதுவுமே தோணாததால, ஒரே வரியில சொல்றேன், நல்லா இருக்கு சேட்டை!
மிகவும் நன்றாக உள்ளது , ஆனால் ஒன்று சொல்லிகிறேன் அவருக்கு இந்த மாறி எத்தனையோ எதிர்ப்பு வந்தாலும் அவரு பாட்டுக்கும் மேலே போய்கிட்டே தான் இருக்காரு..உண்மைலயே உங்களுக்கு நல்ல நக்கல்
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சகா அட்டகாசம் அருமை. கொஞ்சம் சொல்லி குடுங்க எங்களுக்கும்..
Post a Comment