Monday, January 18, 2016

தாரை தப்பட்டை




படம்: தாரை தப்பட்டை
இயக்கம்: பாலா
இசை: இளையராஜா
நடிப்பு: சசிகுமார், வரலட்சுமி, ஜி.எம்.குமார்
ஓளிப்பதிவு: செழியன்

ரஜினிமுருகன், கதகளி புண்ணியத்தால், அமைந்தகரை பி.வி.ஆரில் ’தாரை தப்பட்டை’க்கு சாவகாசமாக டிக்கெட் வாங்கி சௌகரியமான இருக்கையில் அமரும் பேறு கிடைத்தது. சமூகவலைத்தளங்களில் பல நண்பர்கள் எழுதிய விமர்சனங்களை வாசித்து, நிறைய பேர் ‘எதற்கு வம்பு?’ என்று சிவகார்த்திகேயனிடமும் விஷாலிடமும் சரணடைந்திருப்பார்களோ என்ற சந்தேகமும்  நிறையவே உள்ளது. நன்றி நண்பர்காள்!

சிவாஜியின் 200-வது படம் என்பதற்காக, ‘திரிசூலம்’ படத்தையே செரித்து ஏப்பம் விட்ட தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதால், இசைஞானியின் 1000-வது படத்தைப் பார்ப்பதற்கு எனக்கு எந்த விட்டமின் ஊசியும் தேவைப்படவில்லை. எது சொதப்பினாலும், பின்னணி இசையைப் பொறுத்தவரை, இளையராஜா லவுட் ஸ்பீக்கர் வைத்துக் கூப்பிடுகிற தூரத்தில்கூட இந்தியாவில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை; இந்த அடாவடியான அபிப்ராயம் ‘தாரை தப்பட்டை’ பார்த்தபிறகு மேலும் அழுத்தமாகி, கொழுப்பெற்றியிருக்கிறது. ராஜா கையை வைச்சா-அது-ராங்காப் போனதில்லை. தாரை தப்பட்டை விமர்சனத்துக்குள் இறங்குவதற்கு முன்னர், இசைஞானி கடந்துவந்திருக்கிற பாதையை, ஒரு ஆத்மார்த்த ரசிகனாய் யோசித்துப் பார்க்க விருப்பம்.

மச்சானைப் பார்த்தீங்களா?’வுக்குப் பிறகு இளையராஜா கடந்துவந்திருக்கிற தொலைவு மிகமிக நீண்டது. திரையிசைக்கு அவர் வழங்கிய புதிய பரிமாணங்களைக் கணக்கிடுவதற்குப் பதிலாக, ஒரு அரிசிமூட்டையைக் கொட்டி ஒவ்வொரு மணியாக எண்ணுவது புத்திசாலித்தனம். ‘செந்தூரப்பூவே’ என்ற அப்பட்டமான கிராமீயப் பின்னணியிலான பாட்டில், அந்த மெல்லிய கிடாரின் இசையைத் துய்க்காமல் தப்ப முடியாது. ‘ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே’ என்ற ஒரு அபத்தமான பாட்டில், ’மேயுற கோழியெல்லாம்…’ என்ற வரியில் ‘ஏரிக்கரையின் மேலே’ என்ற இன்னொரு ஆரபிராகப் பாடலை சட்டென்று மண்டையில்குட்டி ஞாபகப்படுத்துவார். ‘அடியே மனம் நில்லுன்னா நிக்காதுடி’ பாட்டில் கிராமிய மெட்டுக்கு மேற்கத்திய வாத்தியங்களைப் பயன்படுத்தியிருப்பார். கடைந்தெடுத்த மசாலாப்படமான ‘குரு’வில் கதாநாயகன் வருகையில் பின்னணியில் ஒலித்த இசை டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்க ஒலி. ’நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா’ பாட்டில் ஒரு கடம்; ஒரு மோர்சிங்- அம்புட்டுத்தேன்! ’ராஜபார்வை’ படத்தில் வயலினுடன் கிடார்களும் கலந்து நடத்திய சிம்பொனி தாண்டவம். இதெல்லாம் ஒரு சோறுபதம்கூட இல்லை என்பதுதான் உண்மை. குறைந்தபட்சம், கடந்த முப்பதாண்டுகளையேனும் இசைஞானி இளையராஜாவுக்கே திரையுலகம் சமர்ப்பணம் செய்தாக வேண்டும்; அவர் தொடக்கி வைத்த புதிய பாணிக்காக! அவரது சில பாடல்களையும், பின்னணி இசையையும் சில படங்களில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்துகிற கத்துக்குட்டிகளின் துடுக்குத்தனம் தொடரட்டும். அவர்கள் ஒரு சிந்துபைரவி; ஒரு சலங்கை ஒலி; ஒரு பயணங்கள் முடிவதில்லை; ஒரு காதல் ஓவியம் – இதில் எதையும் தருகிற வீரியமற்றவர்கள்!
இனி, விமர்சனத்துக்குப் போகலாம்.
பாலா படம்; அதுவும் ‘ஏ’ சான்றிதழ் வாங்கிய படம் என்று தெரிந்தும், தயார்ப்படுத்திக் கொள்ளாமல் டிக்கெட் வாங்குவது, சிகையலங்காரக்கடையில் அயர்ந்து உறங்குவதற்கு ஒப்பானது என்பதால், நையப்புடை படுவதற்குத் தயாராகவே போயிருந்தேன். கடைசி பத்து நிமிடங்கள் தன்னிச்சையாகக் குரல்வளையைப் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தேன் என்பதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும். ஆனால், ஒரு தடவைகூட ‘ஏன் இந்தப் படத்துக்கு வந்தோம்?’ என்று சத்தியமாக எனக்குத் தன்னிரக்கம் ஏற்படவே இல்லை. 

பிரமாதமான கதையெல்லாம் கிடையாது. காதல், தியாகம், வாழ்க்கைப்போராட்டம், சோகம், கோபம், கடைசியில் வில்லனையும் அவர்தம் பரிவாரங்களையும் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துப் போடுகிற புராதனமான கதை. இதில் கதைக்கான களமும், பாத்திரங்களும் வழக்கம்போலவே பாலாவின் இதயத்துக்கு மிக நெருக்கமான விளிம்புநிலை மனிதர்கள். அவ்வளவே!

அந்தக்காலத்திலேயே எம்.ஜி.ஆரிடம் கலைமாமணி விருதுவாங்கிய இசைக்கலைகர் சாமிப்புலவர்(ஜி.எம்.குமார்), இந்தக் காலத்தில் சீண்ட ஆளின்றிச் சீரழிந்து கிடக்கிறார். அவரது மகன் சன்னாசி(சசிகுமார்) கரகாட்டத்தில் கொஞ்சம் ஜனரஞ்சகத்தைச் சேர்த்து ஒரு குழு நடத்திக்கொண்டிருக்கிறார். அதில் முக்கிய ஆட்டக்காரியான சூறாவளி(வரலட்சுமி) சசிகுமாரை வெறித்தனமாகக் காதல் செய்ய, சசிகுமார் எதையும் வெளிக்காட்டாமல் ரொம்ப நல்லபிள்ளையாக இருக்கிறார். திடீரென்று ஒரு பசுத்தோல் போர்த்திய புலி, வரலட்சுமியைத் தந்திரமாகத் திருமணம் செய்துகொண்டுபோக, சன்னாசியின் கரகாட்டக்குழு மவுசு இல்லாமல் படாதபாடு படுகிறது. விரக்தியில் சன்னாசி அப்பா சாமிப்புலவர் மீது எரிந்துவிழ, ஒரு இரவில் அந்த வயோதிகரும் இறந்து போய்விடுகிறார். இதற்கிடையில், திருமணமாகிப் போன சூறாவளி, விபச்சாரம் தொடங்கி சகலவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிற ஒரு கும்பலில் அல்லல்படுவதைப் பார்த்து, பொங்கியெழுகிற நாயகன் சன்னாசி கண்ணில் பட்டவர்களையெல்லாம் கையில் பட்டதால் அடித்து, குத்தி, ரத்தவிளாறாக்கி வன்மம் தீர்ப்பதுதான் கதைச்சுருக்கம்.

டைட்டிலில் தவிலும், நாதஸ்வரமும், தொடர்ந்து தாரை, தப்பட்டையும் ஒலிக்கிற அந்த இரண்டு சொச்ச நிமிடங்களுக்குள்ளேயே படத்துக்குள் நுழையத் தயாராகி விட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஜி.எம்.குமாரின் தனி ஆவர்த்தனம், சசிகுமாரின் அறிமுகம், வரலட்சுமியும் சூறாவளி நடனம் என்று அடுத்தடுத்து பிரமிப்பூட்டும் காட்சிகளும், அவற்றை பளிச்சென்று படம்பிடித்திருந்த செழியனின் ஓளிப்பதிவும், எல்லாவற்றிற்கும் மேலாக இளையராஜாவுமாகச் சேர்ந்து, கழுகுப்பார்வையில் முதலில் காட்டிய தஞ்சாவூர்ப்பக்கத்துக்கே கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். ஏதோ ஒரு பெயரில்லாத கிராமத்தின் திருவிழாவில் அலைபாயும் கூட்டத்துக்கிடையே, வட்டமாகக் குவிந்து நிற்கும் கூட்டத்தில் ஒருவனாய், வியர்வையில் கரையும் ரோஸ்பவுடர் பூச்சுடன் ஆடுகிற கரகாட்டக்கோஷ்டியைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. தாரை தப்பட்டை மட்டுமல்ல, எக்காளத்தின் பிளிறலும், கொக்கறையின் கூவலும், கொடுகொட்டியின் அதிர்வுகளும், கொம்பின் சீற்றமும், தவண்டையின் பேரொலியும், ஆஹா! அந்தக் கடைசி 10-15 நிமிடங்களை மன்னித்து இன்னொரு தபா பார்க்கலாமா என்று சப்புக்கொட்ட வைக்கிற விஷயங்கள்!

சசிகுமார்! தான் ஒரு ’சிங்கிள் டைமென்ஷனல் ஆக்டர்’ என்ற பிம்பத்திலிருந்து வெளிவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பது நல்ல மாற்றம். தோற்றத்தில் மட்டுமின்றி, நடிப்பிலும் மிகவும் உழைத்திருக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

வரலட்சுமி சரத்குமார்! பொதுவாக பாலா படங்களில் நாயகர்கள்தான் பெயரைத் தட்டிக் கொண்டு போவார்கள். ‘தாரை தப்பட்டை’ வரலட்சுமிக்காகவே பேசப்படலாம். கரகாட்டத்தில் காட்டுகிற சுறுசுறுப்பாகட்டும்; படித்துறையில் சசிகுமார் கல்யாணத்தைப் பற்றிப் பேசுகிற காட்சியில் ஆரம்பத்தில் காட்டுகிற குதூகலமும், பின்னால் பீறிட்டு எழும்புகிற ஆத்திரமும் அனாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த ‘மாமா’ என்ற அழைப்பே கலகலப்பை ஏற்படுத்துகிறது. சபாஷ்! ஒருவழியாக தமிழ் சினிமாவில் கொஞ்சம் நடிக்கவும் தெரிந்த நாயகி இருக்கிறார்.

ஜி.எம்.குமார்! இன்றைக்கு பல்வேறு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிற பல இயக்குனர்களில் இவர்தான் சரியான நடிகர்! முதல் காட்சியில் இவர் தவில்வாசிப்பது தொடங்கி, ‘என்னுள்ளம் கோவில்’ பாடலும், அதைத் தொடர்ந்து வருகிற அடுத்தடுத்த இரண்டு காட்சிகளும், மனிதர் பாத்திரத்தை எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கின்றன.

வில்லனாக நடித்த சுரேஷ்! சாமி, குலைநடுங்க வைக்கிறாரய்யா! ஜோசியருடன் அந்தப் பணக்காரர் வீட்டுக்குச் சென்று, சிற்சில அலப்பறைகள் செய்வதை நீக்கிப் பார்த்தால், ஒரு கொடூர வில்லன் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்.

இசைஞானியைப் பற்றி முன்பே நிறைய எழுதியாகி விட்டது. ராஜாவின் பின்னணி இசை, கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரம்போல படம் நெடுகிலும் கூடவே வந்து கொண்டிருக்கிறது. ‘பாருருவாய’ –பாடல் இருமுறை இடம்பெறுகிறது என்றபோதிலும், அதைக் கச்சிதமாக இரண்டு காட்சிகளுக்கும் பொருத்தமாக பாலா சேர்த்திருக்கிறார். ’என்னுள்ளம் கோவில்’ பாடல் உருக்கம்.

ஓளிப்பதிவாளர் செழியன்! கரகாட்டத்தின்போது புழுதி பறக்கிறது; இரவுக்காட்சிகளில் அரையிருட்டில் நம்மை அழைத்துச் செல்கிறது; வில்லனின் இருப்பிடத்தில் நடக்கும் காட்சிகளின்போது, சற்றே அச்சுறுத்துகிறது. பாலாவின் பார்வையாகவே காமிராவும் பயணித்திருக்கிறது.

இயக்குனர் பாலா! ‘and they lived happily thereafter’ என்று முடிவதுபோன்ற fairy tale சொல்லுகிற இயக்குனர் இல்லை மனிதர். தனக்கே உரித்தான பாணியில் கொஞ்சம் மூர்க்கத்தனமாகவே கதையைச் சொல்ல முனைந்திருக்கிறார். அந்த ஆபாச வசனங்களும், இரட்டை அர்த்தப்பாடலும் கதையின் சூழலோடு ஒவ்வியே அமைந்திருக்கின்றன. கேட்பதற்கு நாராசமாகத் தான் இருக்கின்றது என்றாலும், அதுவும் அவர்களின் வாழ்வியலில் ஒரு அங்கம் என்பதை மறுப்பதற்கில்லை.

கொஞ்சம் சேது, கொஞ்சம் பிதாமகன், கொஞ்சம் அவன் –இவன் என்று ஒரு தினுசான உப்புமா கிண்டியிருக்கிறார் பாலா என்பதை மறுப்பதற்கில்லை. ‘நான் கடவுள்’ படத்தில் ஒரு குரூபி ஒரு பிச்சைக்காரியைக் கேட்பதுபோல, இந்தப் படத்தில் வாரிசில்லாத ஒரு செல்வந்தரின் குழந்தைக்கு, நாயகி வாடகைத்தாயாக வேண்டும் என்பனபோன்ற சில ஒற்றுமைகள். நாயகன் ஏன் தனது காதலை வெளிப்படுத்தாமல் கல்லுளிமங்கன் போலிருக்கிறான் என்பதற்கோ, நாயகி எதற்கு இப்படிச் சரக்கடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதற்கோ காரணங்களைக் கற்பிக்க பாலா மெனக்கெடவில்லை.

‘ஏனய்யா, ஒரு சராசரி தமிழ் சினிமாவில், அத்தனை கெட்ட பழக்கங்களையும் குத்தகைக்கு எடுத்திருக்கிற ஒரு ஹீரோவை, ஒரு படித்த, அழகான, பணக்காரப் பெண் காதலிப்பதுபோல, எத்தனை கதை பார்த்திருப்பீர்கள்? அதேபோல, ஒரு குடிகாரப்பெண்ணை ஒரு ஹீரோ காதலிப்பது மாதிரி காண்பித்தால் என்னய்யா தப்பு?’ என்று வீம்பு பண்ணியிருக்கிறாரோ மனிதர் என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

இதுதான் இவர்கள்; இதுதான் இவர்களது குணாதிசயங்கள்; அனாவசியமா கேள்வியெல்லாம் கேட்கப்படாது என்று கொஞ்சம் அழிச்சாட்டியம் பண்ணியிருக்கிறார் பாலா. அனேகமாக, இந்தப் படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் பலவற்றிற்கு இதுவே ஆணிவேர் என்று தோன்றுகிறது.

ஆனால், இதைவிட மோசமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம்; இனியும் பார்க்கப்போகிறோம். ஆனால், இன்னும் நல்ல படங்களைத் தருவார் என்றே பாலாவிடம் எதிர்பார்ப்போம்.

பார்த்தால் குடியொன்றும் முழுகிவிடாது; பாருங்கள்

14 comments:

நெல்லைத் தமிழன் said...

யாம் பெற்ற இன்பம் (துன்பம்?) பெறுக இவ் வையகம் என்று நினைத்து படத்தை எங்களைப் பார்க்கச் சொல்லுகிறீர்களா.. அல்லது "நான்தான் ஏமாந்தேன்..நீங்களும் போய் சாகுங்கடா" என்று நினைக்கிறீர்களா? படம் பார்த்துட்டுவந்து உங்களைக் கவனிச்சுக்கறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொன்னால் சரி தான்... குடும்பத்தோடு இல்லாமல் தனியாக செல்கிறேன்... நன்றி...

Unknown said...

எவ்வளவோ பார்த்துட்டோம் ,இதையும் பார்க்க மாட்டோமா :)

bandhu said...

மிக நேர்மையான விமர்சனம். வருத்தப் படாத வாலிபர் சங்கம் தொடங்கி இப்போது வரை தொடரும், எந்த ஆழமும் , எந்த நம்பகத் தன்மையும் இல்லாத படங்கள் பேய் வெற்றி பெறுவதை என்ன என்று சொல்ல? உண்மையாகச் சொல்லுங்கள். இந்தப் படங்களில் வரும் ஹீரோக்களின் குணாதிசயம் உள்ளவர்களை நேரில் பார்க்கும் பொழுது ஹீரோ என்றா தோன்றும்? வெத்து என்று தோன்றாது?

பாலா படங்களில் வரும் பாத்திரங்களே உண்மைக்கு அருகில் இருக்கிறது. இது போன்ற அநியாயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. என்ன. அந்த மக்கள் வியாபாரத்துக்கு உதவாதவர்கள். அதனால் பத்திரிக்கைகளில் வருவதில்லை. அதிக பட்சம் இருந்தால் ஓரிரு நாள் நாமெல்லாம் பேசி மறந்துவிடும் தன்மை உள்ளவர்கள்.

இப்போது பரவலாக வரும் மீடியாக்கர் படங்களுக்கு நடுவில், ஓடினாலும் ஓடாவிட்டாலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் படம் எடுக்கும் பாலா ஒரு உண்மையான படைப்பாளி!

கே. பி. ஜனா... said...

ராஜபார்வை அட்டகாச சிம்பனி ... அருமையான இசையை ஞாபகமாக குரிப்பிட்டதில் மகிழ்ந்தேன்.

கே. பி. ஜனா... said...

அருமையான விமரிசனங்களில் ஒன்று... பாராட்டுவதில் மகிழ்கிறேன்

காரிகன் said...

பார்வைகள் பலவிதம்

பொன் மாலை பொழுது said...

முதல் பிரேமில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை காட்டிவிட்டு கதைகளம் தஞ்சைப்பகுதி என உணரவைத்து பின்னர் அது பற்றி மூச்சு விடவேயில்லை. தஞ்சைபகுதி வட்டார வழக்கு கூட வசனமாக இல்லை.

pudugaithendral said...

படிச்சேன்

r.v.saravanan said...

இளையராஜாவை பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க சார் படம் பற்றியும் தான்

r.v.saravanan said...

இளையராஜாவை பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க சார் படம் பற்றியும் தான்

aavee said...

Good review.. I haven't watched yet

settaikkaran said...

@'நெல்லைத் தமிழன்
படம் பார்த்தீங்களா இல்லையா.? :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@திண்டுக்கல் தனபாலன்
தனியாப் போறீங்களா? 'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பது வலைச்சித்தருக்கும் பொருந்தும் போல! நன்றி நண்பரே! :-)

@Bagawanjee KA
அதே அதே! என் கட்சிக்கு ஆளு நிறைய வர்றாங்க போலிருக்குதே. மிக்க நன்றி! :-))
@bandhu
திரைப்பட நாயகர்களின் குணாதிசயங்கள் 80களில் சிற்சில மாற்றங்களை உள்வாங்கி, அது தொடர்ந்து தற்போது நாயகனுக்கு என்ற தனி குணாதிசயமும் தேவை இல்லை என்ற தடுப்புச்சுவருக்கு வந்து நிற்கிறது. இதன் மிகப்பெரிய அபாயம், எல்லா படங்களிலும் வரும் எல்லா நாயகர்களும் ஒரே மாதிரி தோற்றமளிப்பார்கள் என்பதுதான். இதனால், ரசிகர்களுக்கு விளையவிருக்கும் அலுப்பு குறித்து யாரும் பெரிதாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இது உண்மையிலேயே கவலையளிக்கிற ஒரு பாணி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)
@கே. பி. ஜனா
நீங்களும் இசைஞானியின் விசிறியாய் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. இனிவரும் நாட்களில் ராஜாவைப் பற்றி நிறைய எழுத ஆசை. வந்து போய்க் கொண்டிருங்கள். மிக்க நன்றி. :-)
@காரிகன்
சந்தேகமில்லாமல்! ரசனைகள் மாறுபடாமல் போயிருந்தால், இன்னும் யாரோ ஒரு பாகவதர் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே' என்று பாடுகிற படங்களைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருப்போம். மிக்க நன்றி. :-)
@Manickam sattanathan
இந்தப் படத்தில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது; நிறையவே இருக்கின்றன- நீங்கள் குறிப்பிட்டது உட்பட. ஆனால், இவ்வளவு அடித்துத் தோய்த்து, பிழிந்து, கிளிப் போட்டு உலர்த்துகிற அளவுக்கு இது மோசமான படம் இல்லை என்றுதான் நான் (இன்னும்) நினைக்கிறேன். மிக்க நன்றி. :-)
@புதுகைத் தென்றல்
நன்றி. :-)
@r.v.saravanan
மிக்க நன்றி நண்பரே! :-)
@Anandaraja Vijayaraghavan
Not a “MUST-WATCH” movie anyway. But, not worthless. 

Adhee said...

அருமையான விமர்சனம்.
இந்த படம் பற்றிய என் எண்ணங்களை நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள். நன்றி.
நேத்துதான் இரண்டாவது தடவை பார்த்தேன்.