Friday, January 22, 2016

எடுத்ததும் கெடுத்ததும்-0



கொஞ்ச நாட்களாக, யாரைப் பார்த்தாலும்சௌக்யமா?என்பதற்குப் பதிலாக, ‘பிரேமம் பார்த்தாச்சா?’ என்று கேட்கிறார்கள். சென்னையிலேயே சக்கைபோடு போடுகிற இந்த மலையாளப்படத்தையும், மலரையும் குறித்து மருகாதவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டுக்காரர்கள் என்ற பரிகாசத்துக்கு உள்ளாகிற ஆபத்தும் நிரம்பவே இருக்கிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை; ஒன்று, ஆண்டுவிழாக்களில் சிறுவர்கள் பள்ளிகளில் நடத்துகிற நாடகங்கள் போன்ற நகைச்சுவைப் படங்கள், இல்லையேல், நெற்றியில் ஒரு அதிரசம் சைஸுக்குக் குங்குமப்பொட்டு வைத்த நாயகிகளின் பேய்ப்படங்கள் என்று பெரும்பாலான தமிழ் சினிமா திருத்தப்படாத வாலிபர் சங்கமாயிருக்கிறது. எவ்வளவுதான் பிறாண்டுதலுக்கு ஆளானாலும், பிரதி வெள்ளிக்கிழமையும் வேண்டுதல்போல, புதுப்புதுப் படங்களைப் பார்த்து, புண்பட்டுக் கிடக்கிற நம்மவர்களுக்கு மலையாளப் படங்கள் பார்ப்பது மசாஜ் பார்லர்போவதற்கு ஒப்பாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
இத்தனைக்கும், இங்கேஆஹா ஓஹோஎன்று கொண்டாடப்படுகிற சில மலையாளப்படங்களை, அவிடே கிழித்து நாராக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கவனித்தால், இலுப்பம்பூவை இன்முகத்துடன் உண்ணுமளவுக்கு தமிழ் சினிமா விரும்பிகள் காய்ந்து கிடப்பது உள்ளங்கை நாரங்காயாகப் புரிகிறது. வி.சேகரின்வரவு எட்டணா; செலவு பத்தணாபோன்ற படங்கள் தவிர்த்து, வேறு எந்தத் தமிழ்ப்படத்தைப் பார்த்தாலும், அவற்றின் பூர்வீக வரலாற்றை கொரியா, ஜப்பான், ஐரோப்பாவிலிருந்து அகழ்ந்தெடுத்து வந்து கொட்டுகிற நம்மவர்கள், ஒருவழியாக பிறமொழி இந்தியப்படங்களையும் பார்க்க ஆரம்பித்திருப்பது மெச்சற்குரியது. அடியேனும் சில குஜராத்தி, மராட்டி, வங்காளப்படங்களைப் பற்றி எழுதி, சமூகத்தில் சான்றோன் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதற்காக, மலையாளப்படங்கள் எனக்கு எட்டிக்காய் என்று எண்ணி, என்னைக் கிட்டத்தில் சேர்க்காமல் விட்டுவிடாதீர்கள்.
தமிழும் மலையாளமும் கலந்து புழங்கிய மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில், மலையாளப் படங்களின் மீதான எனது காதல், பதின்ம வயதிலேயே தொடங்கி விட்டது. ’செம்மீன்படம்பார்த்த அன்றே ஷீலா, சத்யன், மது, கொட்டாரக்காரா, சலீல் சௌத்ரி ஆகியோர் மனதுக்குள் பாய்விரித்துப் படுத்துக் கொண்டனர். (அந்தப் படத்தையும் சேரநன்னாட்டின் விமர்சகர்கள் செதில்செதிலாக்கியிருந்தனர் என்பது வேறு விஷயம்). ஆவிபறக்கப் பறக்க, புத்தம்புது மலையாளப்படங்களை சுடச்சுடப் பார்த்து வளர்ந்தவன்; அதே படங்கள் ஆரல்வாய்மொழிக்கு அப்பால், விபரீதமான தமிழ்ப்பெயர்களுடன், கதாநாயகியின் கல்மிஷமான படமிட்ட சுவரொட்டிகளுடன் வெளியாவது வழக்கம். இப்போது இருப்பதுபோன்றே, அப்போதும் சிலர் ஆதங்கப்படத்தான் செய்தார்கள்: ’சே! இந்த மாதிரி தமிழிலே ஒரு பயலும் படமெடுக்க முடியாது.
அத்தகைய ஆகச்சிறந்த’ மலையாளப்படங்களை மட்டுமே பார்த்து வியப்பில் விழிபிதுங்கி நிற்கும் அந்த அப்பாவிகளைப் பார்த்து எனக்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு வருவதுண்டு. காரணம், அப்போதும் சராசரி தமிழ் சினிமாவைவிட மோசமான பல மலையாளப்படங்களும் வராமல் இல்லை. அக்குளில் கட்டிவந்ததுபோல நெஞ்சை விரித்து நடந்த ஜெயன் படங்களை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் தெரியவில்லை. பிரேம் நசீர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படங்கள் தெரியுமோ?
இந்தியாவிலேயே அதிகப்படங்கள் தயாரிக்கிறவர்கள் என்பதால், வருடத்துக்கு எப்படியும் 10-20 சுமாரானதுமுதல் மிக நல்லபடங்கள் அங்கு தேறிவிடும். இப்போது நகைச்சுவை நடிப்பு, தயாரிப்பு என்று கொடிகட்டிப் பறக்கிற சீனிவாசன் கூட ஆரம்பத்தில், 'ஆர்ட் பிலிம்' என்ற பெயரில் திரையரங்கத்துக்கு வருகிற சாமானியனை 'கோமா'னியனாக்கும்  முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பிறகு, பிரியதர்ஷன் லாலேட்டனுடன் கூட்டணி வைத்து, ஜனரஞ்சக சினிமாவில் கால்பதித்து கம்பீரமாய் நிற்கிறார். போதாக்குறைக்கு அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றஅறிவுஜீவிகள்திரைப்படவிழாக்களுக்கென்றே எடுக்கிற சில டாக்குமெண்டரி போன்ற படங்களும் திரைகடலோடி திரவியம் தேடிய சாதனைகள் வேறு; ஆதலால், மலையாளப்படங்கள் என்றாலே ஒரு விதமான மையல் பாரசாலை தாண்டி வசிக்கிறவர்களுக்குப் பரவலாக ஏற்படுவது தொன்றுதொட்ட வழக்கம். சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்! என்ன இருந்தாலும் ஷகீலாபடங்களை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட கேரளமாயிற்றே! வாழ்க வளமுடன்!
ஆனால், நம்மவர்களுக்கு மலையாளத்தில் நல்ல படங்கள் வருகிறதேஎன்ற மகிழ்ச்சியைக் காட்டிலும், ‘அந்தப் படங்களைத் தமிழிலும் எடுக்கிறார்களாமேஎன்ற துயரம்தான் தொண்டையை அடைக்கிறது. இந்த விசனத்தை விட்டொழித்து எதிர்காலத்தை நம்மவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை. குறிப்பாக, பிரேமம் படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்று ஒரு இயக்கமே நடக்கிறதாம். எனது பேஸ்புக் நண்பர் ஒருவர் 'எல்லாரும் மலர் மலர் என்று சிலிர்க்கிறார்களே' என்று வியப்பில் ஆழ்ந்தும், 'கவலைப்படாதீர்கள்; தமிழ் 'பிரேமம்' படத்தில் சுருதி ஹாசன் மலராக நடிக்கிறார். அதன் பிறகு தமிழர்களுக்கு மலர் என்றாலேயே அலர்ஜி ஏற்பட்டு, தினமலர் மாலைமலர் வாங்குவதைக் கூட நிறுத்தி விடலாம்' என்று ஆறுதல் அளித்தேன். வருத்தத்தை வழக்கொழித்து, வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் தோழர்களே! ’தேன்மாவில் கொம்பத்துஎன்ற படத்தைத் தமிழ் நாட்டில் எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று கேட்டால், பட்டென்று பதிலளிப்பீர்களா? அதுவேமுத்துவான பிறகுதான், இந்தியாவோடு நிறுத்தாமல் ஜப்பான்வரை போய் தமிழர்தம் பெருமையைத் தரணிக்கே அறிவித்தது. ஆகவே, ‘பிரேமம்தமிழில் வந்தால் மலரின் புகழ் மங்கோலியாவரை பரவலாம். எனவே, எதிர்மறை சிந்தனைகளை விடுத்து, நேர்மறையான எண்ணங்களுக்கு இடமளித்து, அனைத்து சுமார்-நல்ல-மிக நல்ல மலையாளப்படங்களையும் தமிழிலே எடுத்து, ஏழுகடல் ஏழுமலை தாண்டி எல்லா இடங்களிலும் திரையிட்டு மனிதகுலம் மேம்படுமாறு மகத்தான சேவை செய்வோமாக!
காப்பியடிப்பது, சுட்டுப்போடுவதுஇவையெல்லாம் கருடபுராணத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால், எமலோகத்தில் எண்ணைச்சட்டி வாங்கிக் கட்டுப்படியாகாது. அத்தனை இலுப்புச்சட்டிகள் வேண்டுமென்றால், ஜாம்ஷெட்பூரிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். (அது ஏற்றுமதியோ?) எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என்று அத்தனை அப்பாடக்கர் நடிகர்களின் வெற்றிப்படங்களிலிருந்தும் சுட்ட படங்களைக் கழித்தால், எத்தனை மிஞ்சும் என்ற கணக்குப் போடலாம். யார் யார் வருகிறீர்கள் இந்த ஆட்டத்துக்கு?
தமிழ் சினிமாவில் கண்ணில் பட்ட இடமெல்லாம் கதாசிரியர்கள் தென்படுகிறார்கள்; கதையைத்தான் கண்குளிரக் கண்டு மாமாங்கமாகிறது.
காதலிக்க நேரமில்லைபடத்தில் நடுக்காட்டில் நின்றுகொண்டு நாகேஷ் சொல்வாரே ஒரு வசனம்: ‘புரொட்யூசர் ரெடி; டைரக்டர் ரெடி; ஹீரோயின் ரெடி. கதைதான் வேணும்? கதை எங்கே கிடைக்கும்?என்று காட்டில் அங்குமிங்கும் தேடுவதுபோலப் பார்ப்பாரே! அப்படித்தான் இன்றைக்கு கோடம்பாக்கம்- விருகம்பாக்கம் இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் பலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவுதான், 20-25 வருடங்களுக்கு முன்புவந்த படங்களை திரும்ப எடுத்துப் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிடில், பழைய படங்களை தூசுதட்டி, டிஜிட்டலாக்கி வெளியிட்டு சில்லறை பார்க்கிறார்கள். ஆனால், வழிவழியே வந்த பண்பாடு யாதெனில், பிறமொழிகளில் சக்கைபோடு போட்ட படங்களின் உரிமையை வாங்கி, அதிகம் கஸரத் எடுக்காமல் தமிழில் எடுத்துக் கல்லாகட்டுவதுதான். இதில் மலையாளமென்ன, தெலுங்கென்ன, இந்தியென்ன? யாதும் ஊரே; யாவரும் கேளிர்.
கொஞ்சம் சீரியஸாகப் பேசினால், ஒரு மொழிப்படத்தை இன்னொரு மொழியில் எடுப்பதாலேயே வெற்றிக்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. இதற்கு சமீபத்திய உதாரணம் ‘திருஷ்யம்’. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் சக்கைபோடு போட்டாலும், இந்தியில் எடுபடாமல் போனது. ஸ்ரேயாவுக்கு சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி பரிசு கிடைக்கிற கடைசி வாய்ப்பும் போச்சு. (சிரிக்காதீங்கய்யா; நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்) பற்பல ஆண்டுகளுக்கு முன்னால், சஞ்சீவ்குமார்- அமிதாப் பச்சன் நடித்து ‘குத்-தார்’ என்று ஒரு படம் வந்து, சுருண்டது. அதே படம் சிவாஜி-ரஜினி இருவரது நடிப்பில் ‘படிக்காதவன்’ என்று வெளியாகி சக்கைபோடு போட்டது. ஆகையினால், ஒரிஜினலைப் போலவே, தழுவலும் வெற்றியடைய சில முனைப்புகள் தேவைப்படுகின்றன. அந்த முனைப்புகள் இருந்து, படமும் ரசிக்கும்படி இருந்தால், தாராளமாக செய்துவிட்டுப் போகட்டுமே! பாபநாசம் போலப் படங்கள் வந்தால், பார்க்க மாட்டோமா என்ன?
எப்படி அங்கிருந்து படங்களை சல்லிசாக வாங்கி இவிடத்தில் எடுக்கிறார்களோ அதே போல, இங்கிருந்து மனவாடு தேசத்துக்கும் அம்ச்சி மும்பைக்கும் போன தமிழ்ப்படங்களும் ஏராளம். கே.பாலசந்தரின் ‘பாமா விஜயத்தை’ ஜெமினி ‘தீன் பஹுரானியான்’ என்று அப்போதே எடுத்திருக்கிறார்கள். எண்பதுகளில் ஜிதேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்த பெரும்பாலான டி.ராமராவ் இயக்கிய படங்கள் தமிழ்ப்படங்கள்தான். கொஞ்சம் ரிவர்ஸ் கியர்போட்டு ‘சவாலே சமாளி’, ‘குலமா குணமா?’ போன்ற படங்களையும் பாலிவுட்காரர்கள் பந்திவிரித்தார்கள். கமலஹாசனின் பல படங்களை (சகலகலாவல்லவன் உட்பட) அனில்கபூரை வைத்து எடுத்துச் சித்திரவதை செய்தார்கள் மும்பைக்காரர்கள்.
இங்கிருந்தும் அங்கிருந்து இங்கும் கதைகள் பயணித்துப் பயணித்து, அந்தந்தக் கதைகள் பட்ட பாட்டைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். விதிவிலக்காக, ஒரிஜினலைவிடவும் இது நல்லாயிருக்கே என்று வியக்கவைத்த சில படங்களும் உண்டு. அவைகளைப் பற்றி எழுதலாமென்று ஒரு நப்பாசை உள்ளது. அதை விடவும், பிள்ளையார் பிடிக்கப்போய் அவை குரங்காகவும் மாறாமல், பிள்ளைபிடிக்காரர்கள் போல பயமுறுத்தியதே அதிகம்.
சத்தமில்லாமல், வெளிநாட்டுப்படங்களைச் சுட்டுப்போட்டு படமெடுக்கிற மேதாவிகளை மெச்சுவதுபோல, உள்ளூர்ச்சரக்கை லேபிள் மாற்றி விற்பனை செய்கிறவர்களையும் கொஞ்சம் தட்டிக்கொடுக்கலாம்.தவறில்லை.
அதையும் அபசாரம் என்று அங்கலாய்த்தால், ஆயுசு முடிவதற்குள் மேலும் சில டாஸ்மாக் பாடல்களும், மேலும் சில போலீஸ் உறுமல்களும், மேலும் சில கிச்சுக்கிச்சு சினிமாக்களும்தான் நமக்குக் கொடுப்பினையாயிருக்கும்.

(தொடர்ந்தாலும் தொடரும்)

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// தினமலர் மாலைமலர் வாங்குவதைக் கூட நிறுத்தி விடலாம் // ஹா... ஹா...

கண்டிப்பாக தொடருங்கள்...

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான அலசல்! தொடருங்கள்! நன்றி!

காரிகன் said...

I always Like your post. Waiting for the next one.

Unknown said...

நீங்க சொன்ன காரணத்தைக் கேள்வி பட்ட உடனேயே நானும், தினமலர் ,மாலை மலரை நிறுத்தி விட்டேன் :)

ஸ்ரீராம். said...

தொடரட்டும்!

பிரேமம் பார்த்து சாபல்யம் அடையும் வாய்ப்பு மிக யதேச்சையாக நேற்றுதான் கிட்டி! (நல்ல பிரிண்ட்!) இன்று அதை விட யதேச்சையாக அதைப்பற்றிய பகிர்வு! (பகிர்வுக்கு மலையாளத்தில் என்ன?)

ஹம் எனும் அமிதாப்பின் சுமாரான வெற்றிப் படம் தமிழில் பிளாக்பஸ்டர் பாட்ஷா ஆனதையும் நினைவு படுத்த விரும்புகின். அதேபோல இன்னொரு மிகச் சுமார் வெற்றியான மகான் அந்த ளவு கூட இல்லாமல் தமிழில் மாவீரனாக படுத்ததையும்!
தம +1

ஆல் இஸ் வெல்....... said...

நீங்க பல பாஷைகளில் வரும் படங்கள் பார்க்கறீங்களா. நல்லா அலசி காயப்போட்டிருக்கீங்க. பாராட்டி சொல்றீங்களா மண்டையில் குட்டி சொல்றீங்களா வஞ்ச புகழ்ச்சியோ????? எப்படியோ படிக்க சுவாரசியமாதான் இருக்கு.

சீனு said...

ஹா ஹா ஹா படத்தின் அவுட் வந்ததும் பார்ப்போமா அவுட்டா இன்னா என்று :-)

பால கணேஷ் said...

ஸ்ரீராம்... மாவீரனாக தமிழில் வந்து படுத்துப் போன படம் அமிதாப் நடித்த ‘மஹான்’ அல்ல. ‘மர்த்’ என்ற படம்தான் தமிழில் மாவீரனாகி படுத்தியது. ‘மஹான்’ படத்தை சிவாஜி ஸார் தமிழில் திரிசூலமாக பிரமாண்டப்‘படுத்தி’ எடுத்தார். ஹா.. ஹா... ஹா...

settaikkaran said...

கணேஷ்! :-))

மாத்தி சொல்றீங்க. முதல்ல 'சங்கர்-குரு' (கன்னடம்); அப்புறம் 'திரிசூலம்' (தமிழ்);அப்பாலிக்காத்தான் 'மகான்'.
சிவாஜியை கலாய்க்கலேன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே! :-))
இருங்க, எம்.ஜி.ஆர் ரீமேக் பண்ணின படங்களும் 'ஹிட்-லிஸ்ட்'ல இருக்கு. ஒவ்வொண்ணா எடுத்து விடுறேன்.

manjoorraja said...

அலசல் தொடரட்டும்.

ஸ்ரீராம். said...

ஆமாம் கணேஷ்... கை தப்பி விட்டது!!! மர்த் தான் அது.

திரிசூலமாவது வெற்றிப் படம். நசீப் திரைப்படத்தை சந்திப்பு என்ற பெயரிலும், மு.கா. சி படத்தை அமரகாவியம் என்ற பெயரிலும் எடுஹ்துக் கொடுமைப் படுத்தினார்கள்! அதில் சந்திப்பு மகாக் கொடுமை.


settaikkaran said...

@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@‘தளிர்’ சுரேஷ்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@காரிகன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@ Bagawanjee KA
சரி, 'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்' ன்னு திருக்குறள் இருக்கே? என்ன பண்ணப்போறீங்க? :-)))
@ஸ்ரீராம். said...
நீங்கள் குறிப்பிட்டதுபோல, அங்கிருந்து இங்குவந்த சில படங்களைப் பற்றித்தான் விலாவரியாக எழுதலாமென்று முடிச்சு போட்டு வைத்திருக்கிறேன். பார்க்கலாம். :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@ஆல் இஸ் வெல்
ஒரு சாண் வயிற்றுக்காக, இந்தியாவில் சுற்றாத ஊரே இல்லை; பார்க்காத பிறமொழிப் படங்களும் இல்லை; ருசி கண்ட பூனையாகி, அந்தப் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. ஹிஹி...கொஞ்சம் வஞ்சப்புகழ்ச்சி, கொஞ்சம் நெஞ்சப்புகழ்ச்சி ரெண்டுமே இருக்கு. :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@சீனு
அந்தக் கண்றாவியைப் பார்க்க வேற செய்யணுமா? சமந்தா, ஸ்ரீதிவ்யா போதாதுன்னு லட்சுமி ராய் வேற இருக்காங்க போலிருக்குதே! அந்தப் படம் வந்து தூக்குற வரைக்கும் வீட்டை விட்டு வெளியே கூட வர மாட்டேன். அக்காங்...! :-)
@manjoorraja said...
நன்றி அண்ணல். எம்புட்டு நாளாச்சு உங்களை இங்கன பார்த்து. :-)
@ஸ்ரீராம்
'சந்திப்பு' கூட வெற்றிப்படம் தான். அமிதாப் செய்த ரோலை சிவாஜி செய்து சோபிக்காத படங்கள், 'நமக் ஹராம் (உனக்காக நான்) - அது குறித்துத்தான் அடுத்து எழுத விருப்பம். அப்புறம் அதாலத்(விஸ்வரூபம்), முக்கதர் கா சிக்கந்தர்(அமர காவியம்). ஒவ்வொண்ணா எடுத்து வுடலாம்னு இருக்கேன். மிக்க நன்றி.