Wednesday, February 13, 2013

கடலோரக் கப்சாக்கள்எச்சரிக்கை.01: இந்த இடுகையின் நீளம் உங்களது பொறுமையைச் சோதிக்கிற அபாயம் உள்ளது.

எச்சரிக்கை.02: நான் ‘கடல்படம் இன்னும் பார்க்கவில்லை. (ஹையா!)

      கடலின் பிரம்மாண்டமும், அலைகளின் வசீகரமும், மணலில் பாதம்புதைய நடக்கிற சலிப்பு கலந்த சுகமும், உப்புக்காற்றின் தீண்டலும் குழந்தைப்பருவத்தைப் போலவே இப்போதும் பிடித்துத்தானிருக்கிறது. அது முட்டமோ, கன்னியாகுமரியோ, மும்பை சௌபாட்டியோ, சென்னை மெரீனாவோ, எல்லாக் கடல்களும் பரிச்சயமானதாய்த் தென்படுகின்றன. அதைப் போலவே, கடலோரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களும், ஒன்றைப் பார்க்கையில் முந்தையதை நினைவூட்டுவதும் தவிர்க்க முடியாத உபாதையாகி விட்டது. சொல்லப்போனால், இந்த இடுகை கூட கடலோர சினிமா குறித்து எழுத வேண்டுமென்ற விருப்பத்துக்கும் எனது நினைவாற்றலுக்கும் இடையே நிகழ்கிற மல்யுத்தம் என்றும் சொல்லலாம். இரண்டில் ஏதோ ஒன்று சொற்பப்புள்ளிகளில் சிற்சில சிராய்ப்புகளுடன் வீழ்வது நிச்சயம் என்பது எனக்கு மட்டுமே தெரிகிற உண்மை.

      கடலோரத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள் பல இருப்பினும், அவை எல்லாவற்றையும் ரசிக்க முடிந்ததில்லை. எல்லாக் கடற்கரைகளிலும் அலைகளில் கால்களை அலம்ப முடிவதில்லையே! அதைப் போல, சில படங்கள் முழங்கால்கள் ஈரமண்ணில் புதைந்திருக்க சூரியோதயத்தை ரசித்த கணங்களைப் போல இன்னும் சுகானுபவமாய் இருக்கின்றன. சில படங்கள், பவுர்ணமி இரவுகளில் ஆவேசமாய் அலையெழுப்புகிற கடலைப்போல சற்றே கிலியை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் சில படங்கள் மணலோடு கலந்து வருகிற மங்கலான அலைகளைப் பார்ப்பதுபோன்ற அருவருப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. கடலின் நவரசங்களை கடல் சார்ந்த திரைப்படங்களும் கிளர்ந்தெழச் செய்கின்றன.

      இந்தத் தொடக்கமே சற்று நீண்டு விட்ட முன்னெச்சரிக்கை அல்லது முன்னேற்பாடாயிருக்கும் என்பதால், நேரடியாக நான் பார்த்த கடலோர சினிமாக்களைப் பற்றிப் பார்க்கலாம்.

செம்மீன்-(மலையாளம்)

      ஜனாதிபதி பரிசு பெற்ற படம் என்பதைக் காட்டிலும், மலையாளத்தில் கலர்ப்படம் என்பதாலேயே பார்த்த படம். தகழி சிவசங்கரன் பிள்ளையின் நாவலைத் தழுவி, ராமு கரியத் எடுத்திருந்த இப்படம் இற்றைக்கும் மலையாள சினிமாவின் ஒரு அற்புதமாகப் பேசப்படுகிறது. விமர்சகர்களின் சீற்றத்துக்கும் தப்பவில்லை என்றாலும், எளிதில் செரிமானம் செய்ய முடியாத சில திருப்பங்களைத் தாண்டியும் ‘செம்மீன்ஒரு வியப்பூட்டும் படம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு அழகான கடற்கரையை எப்படியெல்லாம் காட்டலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம் என்று மிக அண்மையில் இதை தொலைக்காட்சியில் மீண்டும் பார்த்தபோது உணர்ந்தேன். 1965-ல் ஒளிப்பதிவுக்கு ஒத்துழைக்கிற உயர்ந்த தொழில்நுட்பம் இருந்திருக்கச் சாத்தியமில்லை என்பதால், இந்தப் படம் ஒரு ஒளிப்பதிவாளரின் படம் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்ததாக, சலீல் சௌத்ரியின் இசை. வங்காள வாடை வீசிய இப்படத்தின் பாடல்களையும் அக்காலத்தில் விமர்சித்தார்களாம். ஆனாலும் என்னால் அந்தப் பாடல்களில் லயிக்க முடிந்தது.

      கருத்தம்மா(ஷீலா), கொச்சு முதலாளி(மது), பழநி(சத்யன்) இவர்களையெல்லாம் தகழி தனது கதையில் எப்படிச் சித்தரித்திருந்தாரோ தெரியாது; ஆனால், படத்தின் பிற்பகுதியில் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களுமே சறுக்கியதாகவே எனக்குத் தோன்றியது. அப்பா பேச்சைக் கேட்டு, காதலித்தவனை விட்டு, இன்னொருவனைக் கைப்பிடித்து, ஒரு குழந்தையும் பெற்றவள், சட்டென்று முன்னாள் காதலன் வந்ததும், அவனைத் தழுவிக்கொண்டு, புருஷனையும் குழந்தையையும் அம்போவென்று விட்டுவிட்டுத் தற்கொலை செய்வதும், கடலுக்குப் போன புருஷனும் சுழலில் அகப்பட்டு இறப்பதும், ‘ஏன்யா சாவடிக்கிறீங்க?என்று அப்போதும் கேட்க வைத்தது; இப்போதும் கேட்க வைக்கிறது. ஓவர் சோகம் உடம்புக்கு ஆகாது என்றாலும், இது ஒரு மறக்க முடியாத படம்தான்.

தூரத்து இடிமுழக்கம்

      அனேகமாக இந்தப் படத்தைப் பார்த்தும், முன்னோர் செய்த நல்வினை காரணமாக, இன்னும் உசிரோடு இருப்பவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய கே.விஜயன் சிவாஜியை வைத்து கே.பாலாஜி தயாரித்த சில படங்களையும், ‘திரிசூலம்போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களையும் இயக்கியவர். ஜனாதிபதியிடம் வெண்கலத் தாம்பாளம் இல்லாவிட்டாலும் ஒரு அலுமினிய ஸ்பூனாவது  பரிசாக வாங்குகிறேன் என்று, விஜய்காந்த், பூர்ணிமா (இதே ஜோடி ‘சட்டம் ஒரு இருட்டறைபடத்திலும் தோன்றினர்) இருவரையும் வைத்து முழுக்க முழுக்க கடற்கரையில் ஒரு படம் எடுத்துப் படுத்தினார். இந்தப் படத்துக்காக, சிவாஜியின் தயாரிப்பான ‘சுத்த மோசம்என்ற படத்தை, மன்னிக்கவும், ‘ரத்த பாசம்என்ற படத்தைச் சரியாக கவனிக்காமல் விடவே, சிவாஜி விஜயனுக்கு ‘கல்தாகொடுத்து, மீதமுள்ள படத்தை அவரே இயக்கி, அவரே நடித்து வெளியிட்டு, கடைசியில் அவரே பார்த்ததாகவும் அந்தக் காலத்தில் பல வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தன.

      செம்மீனைப் பார்த்து விஜயனும் சூடுபோட்டுக் கொண்டு, அதே சலீல் சௌத்ரியை இசையமைக்கச் சொல்லியிருந்தார். அறுசுவை நடராசனைக் கூட்டிக் கொண்டுவந்து அஞ்சப்பரில் நான்வெஜ் சமைக்கச் சொன்னால், அவர் என்ன செய்வார்? இருந்தும், ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே...உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே’ என்ற பாடல் அப்போது கொஞ்சம் பிரபலமாகியது.

      அப்படி, சிவாஜியையே முறைத்துக் கொள்ளுகிற அளவுக்கு, விஜயன் எடுத்த கடலோரக்கதை என்ன? கடலோரத்தில் மண்பாண்டங்கள் செய்கிறவர்களின் கதை.  நம்ம இந்தியாவிலேயே, ஏன் ஆல் ஓவர் தி வேர்ல்டிலேயே, கடலோரத்தில் மண்பாண்டம் செய்து காண்பித்த பெருமை இயக்குனர் கே.விஜயனுக்கே உரித்தாகும். இந்த அழகுக்கு இந்தப் படத்துக்கு ஏதோ விருது கூட கிடைத்ததாம்! இப்போது புரிகிறதா, நான் ஏன் ஆர்ட் ஃபிலிம்என்று அட்டூழியம் பண்ணுகிற அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், பார்த்தோ கோஷ் இன்னோரன்னாரின் படங்கள் என்றால், காலரா வந்தவன்போலக் கம்பளியைப் போர்த்துக் கொண்டு விடுகிறேன் என்று..?

கடல் மீன்கள்

      இந்தப் படத்தை நான் ஐந்தாறு தடவை பார்த்தேன். முதல் காரணம், டைட்டில் போடும்போது, இசைஞானி வழங்கிய இசை; கேட்டதும் எழுந்து ஆடவில்லையென்றால், உங்களுக்கு ஏதோ பிரச்சினையென்று பொருள். இரண்டாவது காரணம், ‘சக்களத்திஎன்ற படத்தில் சப்பில்லாமல் வந்துபோன அம்பிகா, ‘என்றென்றும் ஆனந்தமே...எண்ணங்கள் ஆயிரமேபாடலில் அறிமுகமாகும்போது எனது மனதில் கிளர்ந்தெழுந்து, சிறகுவிரித்துப் படபடத்துப் பறந்த பட்டாம்பூச்சிகள்! மூன்றாவதாக, இடைவேளைக்குப்பின் வருகிற சண்டைக்காட்சிகள். யார் யாரை அடிக்கிறார்கள், எதற்கு அடிக்கிறார்கள் என்றெல்லாம் அனாவசியமாகக் கேள்வி கேட்காமல், கமலின் சண்டை ஸ்டைலுக்காகப் பார்த்தால், விசிலடித்து விசிலடித்து உதடு வீங்கி உளுந்தூர்ப்பேட்டை வரைக்கும் நீண்டு விடும். நான்காவது காரணம், ஹி...ஹி...ஹி...ஹி!

      இந்தப் படத்தில் ‘மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே? கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்குறே?‘ என உடைபட்ட உறியடிப்பானைபோல இலக்கியரசம் சொட்டிய பாடலும், அதற்குக் கமல் ஆடிய விறுவிறு ஆட்டமும். அதிலும் ‘ஆஹா எனக்கு உங்களைப் பார்த்தா ஏதோ போல ஆச்சுஎன்ற வரிகளுக்கு உலகநாயகன் பிடிக்கிற அபிநயத்தைப் பார்த்துவிட்டு, அப்பாலிக்கா விஸ்வரூபம் கதக் டான்ஸ் பத்திப் பேசுங்கப்பா! இந்தப் பாடல் தமிழ்க் கலாச்சாரத்துக்கே இழுக்கு என்று அனைவரும் அல்சர் வந்தது போல ஆவேசமாகக் கத்தவே, நெல்லை, குமரி மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மட்டும் ‘மயிலு மயிலு மச்சான் இல்லையா இப்போ வீட்டுலே?என்று பல்வலி, அதாவது பல்லவி மாற்றப்பட்டது.

      இந்தப் படத்தில் கமலுக்கு இரண்டு வேடங்கள். மகன் கமல் ஆரம்பத்தில் லுங்கி கட்டிக்கொண்டும், பேண்ட் போட்டபிறகு அப்பா கமலின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுமிருப்பார். அப்பா கமல், வயிற்றில் ஒரு டக்-பேக் தலையணையைக் கட்டிக்கொண்டு, ரகுவரனுக்குத் தொண்டைகட்டியதுபோல கரகர குரலில் பேசிக்கொண்டிருப்பார். தமிழ் சினிமாவின் நிரூபமா ராயான சுஜாதா அப்பா கமலுக்கு மனைவியாகவும், மகன் கமலுக்கு அம்மாவாகவும், நமக்கு எப்போதும்போல அழுமூஞ்சியாகவும் வந்து இம்சை பண்ணுவார். இந்தப் படத்தில் கமலின் இன்னொரு ஜோடியாக ஸ்வப்னா என்ற நடிகை அறிமுகமானார். (அவரையெல்லாம் எனது சிலபஸில் நான் ‘சாய்ஸில்விட்டபடியால், அதிகப்படியாகக் குறிப்பிட ஒன்றுமில்லை.)

      மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க விரும்பாதவர்களும், என்னைப் போல அதிகம் மூளை இல்லாதவர்களும், ரெண்டே கால் மணி நேரம் செலவழிக்க சரியான படம் ‘கடல் மீன்கள்

தியாகம்

      இந்தப் படத்தை நான் கதாநாயகி லட்சுமிக்காகப் பார்த்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ‘வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்என்ற பாதோஸ்-சாங்கில் கூட லட்சுமி படு அழகாய் இருப்பார்.

      வின்னர்படத்தில் வடிவேலு நம்பியாரிடம் சொல்வார்: ‘எம்.ஜி.ஆர். இல்லாதது உனக்கு ரொம்பக் குளிர்விட்டுப் போயிடுச்சு’. அப்படி, எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி, தனக்குப் போட்டியில்லாத துணிச்சலில், (என்னைப் போன்ற) உண்மையான ரசிகர்களே முகம் சுளிக்கிற மாதிரி படங்களில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த படங்களில் ஒன்று ‘தியாகம்’. தயாரிப்பாளர் கே.பாலாஜி, ஆஸ்தான இசையமைப்பாளர் எம்.எஸ்.வியைக் கழற்றி விட்டிருந்த நேரம். இளையராஜாவின் இசையில் அனேகமாக எல்லாப் பாடல்களுமே ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். இது மீனவ கிராமத்தில் நடக்கிற கதையென்றாலும், கடல் பெரிதாகக் காட்டப்படவில்லை. பண்ணையார், ஜமீன்தார், காதல், மோதல், தியாகம், (மானே, தேனே எல்லாம் நீங்களே சேர்த்துக்கோங்க!). ஆனால், இந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது எப்படியென்று இப்போதும் புரியவில்லை. சிவாஜியின் முந்தைய படங்களில் வசூல் சாதனைகளை முறியடித்து இந்தப் படம் சக்கைபோடு போட்டது.
      ஆனந்த விகடன்’ பத்திரிகையும், மணியனின் ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையும் படத்தின் விமர்சனத்தில் தீபாவளி சீசனில் சரவணா ஸ்டோர்ஸில் ஷர்ட்-பீஸ் கிழிப்பதுபோலக் கிழித்துத் துண்டு துண்டாக்கினர். இதனால், பொங்கியெழுந்த தயாரிப்பாளர் கே.பாலாஜி 100-வது நாள் சுவரொட்டியில், தான் படத்தில் கையில் சவுக்கோடு வருகிற படத்தைப் போட்டு, “விஷமத்தனமாக விமர்சனம் செய்த விகடர்களின் மண்டையில் சவுக்கால் அடித்தீர்கள். இதயம் பேசுகிறது என்ற இதயமற்ற மடையர்களுக்குத் தக்க பாடம் புகட்டினீர்கள். வெள்ளிவிழாவை நோக்கி துள்ளுநடை போடுகிறதுஎன்று அச்சடித்திருந்தார்.


      ஸ்...ப்பா, இதுக்கு மேலே எழுதினா, கூகிளுக்கே தூக்கம் வந்திரும். அடுத்த பார்ட் விரைவில்....! (ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள், ஏக் தூஜே கே லியே & சாகர் (ஹிந்தி))


வர்ட்டா....?

(தொடரும்)
 


25 comments:

Philosophy Prabhakaran said...

கடல் படத்தை பார்த்துவிட்டு ஆளாளுக்கு அடித்துவிடும் இலக்கிய கப்சாக்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

Siva said...

வழக்கம் போலவே கலக்கல்.

"உள்ளமெல்லாம் தள்ளாடுதே" அப்போ மட்டும் இல்ல இப்பவுமே பிரபலமாக தான் இருக்கிறது. ஒரு அற்புதமான மெலடி. இந்த படம் தன் சலீல் அவர்களுடைய தமிழில் கடைசி இசை அமைத்த படம்.

நீங்க கலக்குங்க சித்தப்பு..

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடல் பற்றிய படங்களைப்பற்றிய அலசல் உங்கள் பாணியில் நகைச்சுவையுடன் அருமையோ அருமை. பாராட்டுக்கள்.

தொடருங்கள்.

கவியாழி கண்ணதாசன் said...

கடலை போடாம (ஹிஹி)கடல் பற்றியவிமர்சனம் அருமை. மீண்டும் பழைய படங்கள் பற்றி நினைவுகூர்ந்தமைக்கு நன்றி

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

மதினியும் கொழுந்தனும் மயிலும் குயிலுமா மாறினபிறகுதான் நான் படம் பார்த்திருக்கேன் போல!

படியலில் ரெண்டு பார்க்காதவை தூரத்து இடி முழக்கம் தியாகம்.

தப்பிச்சு நான் உயிர்வாழ்வதின் மர்மம் இப்போ புரிஞ்சது:-)))))))

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

துளசி கோபால் said...

படியலில் = பட்டியலில்.......

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை எத்தனை நுணுக்கமான ரசனை...

பாராட்டுக்கள்...

விக்கியுலகம் said...

அடடா பின்னிட்டேள் போங்கோ...

சமீரா said...

இவ்வோ பெரியா பதிவான்னு முதலில் பயமாத்தான் இருந்தது!! ஆனால் உங்க நகைசுவையோட தந்த தகவல்கள் சலிப்ப எற்படுத்தல.. உங்கள் எச்சரிக்கையை மீறி படிச்சிட்டேன்....

கிறுக்கல்கள் said...

அருமை ! மிக அருமை!
1980 ல் வெள்ளி விழா கொண்டாடிய ஒரே படம் தியாகம்! (அப்படி விளம்பரம் பார்த்ததாக நினைவு) நாம் இரத்தபாசம், இமயம், சந்திப்பு போன்ற காவியங்களை இரசிப்பவர்கள் தானே நாம்!!
வாழ்க !

Surya Narayanen S said...

Sopna vai choicela vittingala?? shame shame

சங்கவி said...

கடலை பற்றி அருமையான கடலை தலை...

suryajeeva said...

water world?????????

Madhu Mathi said...

பிரமாதம் தலைவரே.. வேறென்ன சொல்ல.

G.M Balasubramaniam said...

/இந்த இடுகை கூட கடலோர சினிமா குறித்து எழுத வேண்டுமென்ற விருப்பத்துக்கும் எனது நினைவாற்றலுக்கும் இடையே நிகழ்கிற மல்யுத்தம் என்றும் சொல்லலாம். இரண்டில் ஏதோ ஒன்று சொற்பப்புள்ளிகளில் சிற்சில சிராய்ப்புகளுடன் வீழ்வது நிச்சயம் என்பது எனக்கு மட்டுமே தெரிகிற உண்மை/ உண்மையை எழுதியதற்குப் பாராட்டுக்கள். செம்மீன் படப் பாடல்கள் பிரசித்தம் “மானச மைனே வரூ..”

புலவர் சா இராமாநுசம் said...

விரிவான ஆய்வு!

இராஜராஜேஸ்வரி said...

கடல் அலைகள் போல் நினைவலைகளில் நீந்தி அளித்த பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

Job foryou said...

மூலிகை முருகன்
http://www.tamilkadal.com/?p=1817
பழநி மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணியின் சிலை நவ பாஷாணம் என்னும் ஒன்பது வித மூலிகைக் கலவையால் ஆனது. இந்தச் சிலைக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் மருத்துவகுணம் பெறுகிறது. மூலவர் சிலை உயிர்ப்புள்ளது. என்பதும், வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடியில் இருந்து தீர்த்தம்
http://www.tamilkadal.com/?p=1817

Job foryou said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

கும்மாச்சி said...

நல்ல அலசல் சேட்டை அதுவும் உங்கள் டச்சில். அடுத்த கடல்களுக்கு காத்திருக்கிறேன்.

பால கணேஷ் said...

சேட்டைக்கார அண்ணா, உமக்கு ரசனை அதிகம்யா!

தூரத்து இடி முழக்கம்... பேர் தெரியும், அந்த உள்ளமெல்லாம் தள்ளாடுதே பாட்டும் மட்டும் பாத்திருக்கேன். இப்பதான் முழு விஷயம் தெரிஞ்சுது. சுத்த மோசம்... ஸாரி, ரத்தபாசம் சிவாஜி அருமையா நடிச்சுக் கெடுத்திருந்த படம். விஜயன் தலைகீழா நின்னாலும் தேத்தியிருக்க முடியாது அதை. நீங்க ‌சொன்ன மாதிரி சிவாஜி ஸார் மட்டும்தான் பாத்திருப்பார். இன்னும் நிறைய பேச வேண்டியிருக்கு. இந்த இடம் போதாது கடற்கரைக்கு வாங்க, சந்திக்கலாம்.

sethu said...

enna sivaji sethuttara

Joe P K said...

அண்ணே,

தூரத்து இடிமுழக்கம் படம் பார்த்து நானும் உயிரோடு இருக்கேன் :-)

நல்ல அலசல் பதிவு, அடுத்த பதிவிற்க்கு காத்திருக்கிறேன்.

ஆதிரா said...

சேட்டைக்காரன் சார். ஒரு முழுநீலக் கடல் படம் பார்த்த அனுபவம். மன்னிக்கனும். ஒரு முழுநீல நகைச்சுவைக் கடல் படம் பார்த்த அனுபவம்.

Amirtha Raja said...

" சிவாஜி விஜயனுக்கு ‘கல்தா’ கொடுத்து, மீதமுள்ள படத்தை அவரே இயக்கி, அவரே நடித்து வெளியிட்டு, கடைசியில் அவரே பார்த்ததாகவும் அந்தக் காலத்தில் பல வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தன.... " உச்சகட்ட காமெடி...கலக்குறீங்க சார்...