சத்தியமூர்த்தி பவனுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் (பெயரு ஞாபகமில்லீங்க!) விஜயம் செய்திருந்ததால், வழக்கத்தைக் காட்டிலும் கட்டிடம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தலைவரின் அறையிலிருந்து வந்த சத்தத்திலிருந்தே, அவர் கோபமாக இருப்பதை வெளியிலிருந்த வாட்ச்மேனும் தோட்டக்காரனும் அறிந்து கொண்டனர்.
”என்னய்யா இது? ஆபீசுலே ஈ, காக்காய் இல்லை. இந்த மனுசன் எதுக்கு இப்படிக் கத்திட்டிருக்காரு?” என்று வியப்புடன் கேட்டார் வாட்ச்மேன்.
”ஒருத்தரும் இல்லேங்குறதுக்காகக் கட்சியை வளர்க்காமலா இருக்க முடியும்? அதான் கத்திட்டிருக்காரு!” என்று விளக்கினார் தோட்டக்காரன்.
”யோவ் வாட்ச்மேன்!” என்று தலைவரின் அறையிலிருந்து சத்தம் வெளிப்பட்டது.
”யோவ், உன்னைக் கூப்பிடுறாரய்யா!” தோட்டக்காரர் பதைபதைத்தார். “உஷாரா இரு, மனுசன் கோபமாயிருக்காரு! பார்த்து நடந்துக்க, இல்லாட்டி இருக்கிற கடுப்புலே உன்னை ராஜ்யசபா எம்.பியாக்கிட்டா விபரீதமாயிடும்.”
மிகுந்த அச்சத்தோடு தலைவரின் அறைக்குள் நுழைந்தார் வாட்ச்மேன்.
”குட் மார்னிங் சார்!”
”யோவ் வாட்ச்மேன்? இளையராஜா எங்கேய்யா போனாரு?”
”எந்த இளையராஜா சார்?”
”என்னய்யா இப்படிக் கேட்குறே? இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா!”
வாட்ச்மேன் தலைசொரிந்தார். “சார்..வந்து...அவரோட பேரு யுவராஜான்னில்லே நினைச்சிட்டிருக்கேன் சார்.”
” நினைப்பே நினைப்பே! இப்படி ஆளாளுக்கு ஒண்ணொண்ணு நினைக்கிறவனெல்லாம் எதுக்குய்யா இந்த ஆபீசுக்கு வர்றீங்க? போய் இளையராஜா எங்கேயிருந்தாலும் போய்க் கண்டுபிடிச்சு என்னை வந்து பார்க்கச் சொல்லு.”
குழப்பத்தோடு வாட்ச்மேன் வெளியே வருவதைப் பார்த்ததும், தோட்டக்காரன் கேட்டார்.
”என்னய்யா ஆச்சு?”
”இளையராஜாவைக் கண்டுபிடிக்கணுமாம்!”
”எதுக்கு? கட்சியிலே படமெடுக்கப் போறாங்களாமா?”
”அடப்போய்யா, இந்தக் கட்சிக்காரங்க அந்த மாதிரி குடிசைத்தொழிலெல்லாம் பண்ணற ஆளுங்களா? யுவராஜா சாரைப்போயி இளையராஜான்னு சொல்லிட்டிருக்காரு தலைவரு!”
”சும்மா உளறாதே! நம்ம கட்சி ஆளு யுவராஜா பேரை தலைவர் மறந்துடுவாரா? நீ சரியாக் காதுலே வாங்கியிருக்க மாட்டே!”
”சரிதான்! எது எப்படியோ, இந்தச் சாக்குலே நான் அப்படியே வெளியே போயி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வந்திடறேன். தலைவரு கூப்பிட்டுக் கேட்டா இளையராஜாவைத் தேடப்போயிருக்காருன்னு சொல்லு. சரியா?”
”யோவ், நீயாவது சரியாச் சொல்லு! அவரு பேரு யுவராஜா; இளையராஜா இல்லை!”
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல, காங்கிரஸ் ஆபீஸில் வாட்ச்மேன் கூட மற்றவர்கள் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டார் என்பதை அறியாத தோட்டக்காரன் கூவ, அதை அலட்சியம் செய்தபடி வாட்ச்மேன் வெளியேறினார்.
”யோவ் வாட்ச்மேன்!” மீண்டும் தலைவர் அறையிலிருந்து போன் வந்தது.
”ஐயா!” தோட்டக்காரர் பவ்யமாகக் கைகட்டியபடி தலைவர் முன் நின்றார். “ வாட்ச்மேன் இளையராஜாவைத் தேடப் போயிருக்காரு!”
”யாருய்யா?”
” நான் தோட்டக்காரனுங்க!”
”அது எனக்குத் தெரியாதா? வாட்ச்மேன் இளையராஜாவைத் தேடிப் போயிருக்கிறதா சொன்னியே! யாரு இளையராஜா?”
”சார், நம்ம இளைஞர் அணித் தலைவர் சார்!” தோட்டக்காரர் பணிவுடன் கூறினார்.
”என்னய்யா விளையாடறீங்க? அவரு பேரு இளையராஜாவா? யுவராஜா! இப்படித்தான், அமெரிக்காவுலேருந்து வெளிவர்ற ‘டைம்ஸ்’ பத்திரிகையைக் கொளுத்துறதுக்குப் பதிலா நம்ம ஊரு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வைக் கொளுத்தி மானத்தை வாங்கியிருக்காங்க! அது விஷயமாக் கேட்கலாம்னு கூப்பிடச்சொன்னா, யுவராஜாவுக்குப் பதிலா இளையராஜாவைத் தேடிப் போயிருக்காரு வாட்ச்மேன்!”
”சார், நீங்க சொன்னதைச் சரியாக் காதுலே வாங்கிக்கலே போலிருக்கு!”
”கரெக்ட்! இந்தக் கட்சியிலே எப்படி உருப்படுறதுன்னு வாட்ச்மேனுக்குக் கூடத் தெரிஞ்சிருக்குய்யா! சரி, யுவராஜா வந்தவுடனே ரூமுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லு! தில்லிலேருந்து போன் மேலே போன் வந்திட்டிருக்கு! பிரதமர் சரண்சிங் ரொம்பக் கோபமாயிருக்காரு!”
”என்னது?” தோட்டக்காரர் அதிர்ந்தார். “ நம்ம பிரதமர் பேரு மன்மோகன் சிங் சார்! சரண்சிங்னு சொல்றீங்க?”
”என்ன நீ, மமதா பானர்ஜீ மாதிரி கேள்வி மேலே கேள்வி கேட்டுட்டிருக்கே? எல்லாம் இந்த யுவராஜா கொடுக்கிற இடம்! வரட்டும், அடுத்தவாட்டி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வரட்டும். எல்லாரையும் போட்டுக் கொடுக்கிறேன்!” என்று உறுமினார் தலைவர்.
”ராஜீவ் காந்தியா?” தோட்டக்காரர் அதிர்ந்தார்.
”ஏன்யா அதிர்ச்சியடையுறே? எங்களுக்குச் சொல்லாம மாத்திட்டாங்களா?” தலைவர் முகத்தில் கவலை படர்ந்தது.
”ஒண்ணுமில்லே சார்!” தோட்டக்காரன் நகர ஆரம்பித்தார். “ நீங்க சொல்றதுதான் சரி சார். நான் போயி யுவராஜா வந்தா உள்ளே அனுப்புறேன் சார்!”
”என்னது, நான் சொல்றது சரியா?” வியப்புடன் கேட்டார் தலைவர். “என்கிட்டே இப்படிச் சொன்ன முத ஆளு நீ தான்யா! அடுத்தவாட்டி தமிழ்நாட்டுக்கு அன்னை இந்திரா காந்தி வரும்போது உன்னைப் பத்திச் சொல்றேன்யா!”
தோட்டக்காரர் துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று வெளியே ஓடவும், யுவராஜா உள்ளே நுழைந்தார்.
”என்னய்யா ஆச்சு?” என்று பதட்டமாக இருந்த தோட்டக்காரரை வினவினார்.
”தலைவர் ரொம்ப டென்ஷனா இருக்காருங்க!” என்றார் தோட்டக்காரர்.
”இருக்காதா பின்னே? ஜனாதிபதி தேர்தல் முடியுறவரைக்கும் அப்படித்தான் இருக்கும். எப்படியாவது ராணி முகர்ஜீ ஜெயிச்சிடணும்னு ரொம்ப டென்சனா இருப்பாரு தலைவரு!’ என்றார் யுவராஜா.
”ராணி முகர்ஜியா?” தோட்டக்காரர் பரிதாபமாகக் கேட்டார்.
”இல்லியா? மேலிடத்தோட செலக்ஷன் எப்பவுமே சூப்பர்தான்! அதுவும் இப்போ ஜனாதிபதியா இருக்கிற மேடம் ஸ்மிதா பாட்டீல் மாதிரியே ஒரு நல்ல வேட்பாளரைத் தான் தேர்ந்தெடுத்திருக்காங்க!”
” நீங்க உள்ளே போங்க சார்,” தோட்டக்காரர் வழி விட்டார். “எனக்குக் காதுலே அல்சர் வரும் போலிருக்குது. போய் கொஞ்சம் மோர் சாப்பிடுறேன்.”
தோட்டக்காரர் மோர் குடித்துவிட்டுத் திரும்பியபோது, வாசலில் வாட்ச்மேன் மூர்ச்சையுற்றுக் கிடந்தார். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார் தோட்டக்காரர்.
”யோவ், ஏன்யா விழுந்து கிடக்கே? என்னாச்சு?”
”எனக்கு நினைவு வந்திருச்சா?” மலங்க மலங்க விழித்தார் வாட்ச்மேன். “யோவ், இந்த இடத்தை விட்டு ஓடிரலாம்யா! இன்னும் கொஞ்ச நாள் இருந்தோம், நாமளும் இவங்க மாதிரியே பேச ஆரம்பிச்சிடுவோம்!”
”விசயத்தைச் சொல்லுய்யா!”
” நான் திரும்பி வந்தபோது உள்ளே தலைவரும் யுவராஜாவும் பேசிட்டிருந்தாங்களா? அப்போ டெல்லிலேருந்து போன் வந்தது. நான் தான் எடுத்தேன். அவங்ககூட பேசிட்டிருக்கும்போதே தலை கிறுகிறுன்னு வந்து அப்படியே பொத்துன்னு விழுந்திட்டேன்யா!” புலம்பினார் வாட்ச்மேன்.
”அப்படியா? என்னய்யா அப்படிக் கேட்டாங்க?”
”வரவர தமிழ்நாடு காங்கிரஸ் ரொம்ப மோசமாயிருக்கு! ‘டைம்ஸ்’ பத்திரிகைக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியாதாய்யா உங்களுக்கு? தலைமை ரொம்பக் கோபத்துலே இருக்காங்க.! தலைவரை உடனே தில்லிக்குப் போன்போட்டுப் பேசச்சொல்லுங்கன்னு சொன்னாங்கய்யா!”
”இது தினசரி நடக்குறதுதானே? நீ இதுக்கா மயக்கம்போட்டு விழுந்தே?”
”இல்லையா! கடைசியா அவங்க சொன்னதைக் கேட்டுத்தான் மயங்கிட்டேன்!”
”என்னய்யா சொன்னாங்க கடைசியா?”
”அடுத்த தலைவர்.....அடுத்த தலைவர் காமராஜ்னு சொன்னாங்கய்யா!”
தோட்டக்காரர் தலைசுற்றி விழுந்து மூர்ச்சையானார்.
Tweet |
17 comments:
:)))))))))))))))))))))))))))
கலக்கல் சேட்டை...
சூப்பரா வாரி இருக்கீங்க!
The top most....of yours.....
This is.....!!!!!!!!!!!
NO CHANCE...!!!!!!!
KALAKKAL......
சிரிச்சேன்...வெளங்கிரும்
நான் தலைசுத்தி மயக்கமா விழுந்துட்டேன் சேட்டையண்ணா... இதைவிட அங்கதம் எழுத உங்களைத் தவிர யாரும் இல்ல... சூப்பர்.
“எனக்குக் காதுலே அல்சர் வரும் போலிருக்குது. போய் கொஞ்சம் மோர் சாப்பிடுறேன்.”
ahaa..
தமிழக காங்கிரஸ்காரர்களின் “டைம்”.
நீங்கள் வாரும்படி ஆயிற்று.
நீங்க எல்லாம் இப்படி எழுதிட்டா மட்டும் நாங்க மாறிடுவோமா?
அதான் நடக்காது சாரே! சட்டியல் இருந்தால் தானே அகப்பையில வரும்??
சும்மா வம்படி வழக்கா போச்சு இந்த பிளாக் எழுதுறவுங்க கூட.
ஏதாவது புதுசா இட்டால் நல்ல இருக்குமே! அரத பழசான மேட்டரை போயி போட்டுகிட்டு.... ?!
தலைய சுத்துதுசார்!வடிவேலு படம் பாக்கிறமாதிரி இருக்கு
ரொம்ப அழகா சொல்லிடீங்க.. தமிழ்நாடு காங்கிரஸ் பத்தி... சூப்பர் சார்...
நல்ல பகிர்வு... ரசித்தேன்... சிரித்தேன்...
வலைச்சரம் மூலம்
(http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_17.html)
உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! இனி தொடர்வேன்...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
பாவம் தமிழ் மாநில காங்கிரஸ்!!!
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
சிரிக்காட்டி சுட்டுடுவாங்க
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
சிரிக்காட்டி சுட்டுடுவாங்க
என்னய்யா சொன்னாங்க கடைசியா?”
”அடுத்த தலைவர்.....அடுத்த தலைவர் காமராஜ்னு சொன்னாங்கய்யா!”
தோட்டக்காரர் தலைசுற்றி விழுந்து மூர்ச்சையானார்.//
இப்போது உள்ள அரசியல் தலைவர்களை பேசுவதை கேட்டால் சிரிப்புதான் வரும்.
அன்பின் சேட்டைக்காரன் - வலைச்சரத்தில் இப்பதிவினைஅறிமுகம் செய்துள்ளார்கள் - http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html - அதனைப் பர்த்து விட்டுத்தான் இங்கு வந்தேன் - சூப்ப்ரா வழக்கம் போஅல் உண்டு இல்லைன்னு ஆக்கிட்டிங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment