”ஐயையோ!” என்று அலறியடித்துக் கொண்டு தூக்கத்திலிருந்து கண்விழித்தார் கிட்டாமணி.
”என்னாச்சுங்க?” பதறியபடி விழித்தாள் பாலாமணி. “கெட்ட கனவு ஏதாவது கண்டீங்களா? நான் பக்கத்துலே இருக்கும்போது அதெல்லாம் வராதே?”
”பாலாமணி, பயங்கரமான கனவு!” நடுங்கியபடி கூறினார் கிட்டாமணி. “ நம்ம பிரணாப் முகர்ஜீக்குப் பதிலா நான் நிதியமைச்சராகுறா மாதிரி ஒரு கனவு கண்டேன்.”
”அதான் பிரதமரே அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டதா நியூஸ்லே சொன்னாங்களே?”
”வாஸ்தவம்தான்! ஆனா நம்ம பிரதமர் ரொம்ப நல்லவர். ஒருத்தர் ரெண்டு வேலையை எடுத்துட்டு ரெண்டையும் நாஸ்தி பண்ணுறது அவருக்குப் பிடிக்காது. அதுனாலே ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருத்தரைப் போட்டு ரெண்டுபேரும் தனித்தனியா நாஸ்தி பண்ணனும்னுதான் நினைப்பாரு!”
”ஏன் கவலைப்படறீங்க? நிதியமைச்சர் வேலை ரொம்ப ஈஸியான வேலைங்க! தினமும் ஒருவாட்டியாவது டிவியிலே வருவீங்க! ஜாலியா இருக்கும்! சான்ஸ் கிடைச்சா விட்டுராதீங்க!” என்று கணவரை உற்சாகப்படுத்தினாள் பாலாமணி.
”விளையாடறியா?” அரற்றினார் கிட்டாமணி. ”விலைவாசி சகட்டுமேனிக்கு ஏறிக்கிடக்கு. பணவீக்கம் குறைய மாட்டேங்குது. டாலரோட ஒப்பிட்டா இந்திய ரூபாயோட மதிப்பு குறைஞ்சிட்டே போகுது. உலகத் தரப்பட்டியல்லே நம்ம இந்தியாவோட பொருளாதாரத்தோட குறியீட்டைக் குறைச்சிட்டே போறாங்க! இதையெல்லாம் என்னாலே எப்படி சமாளிக்க முடியும்? பத்திரிகைக்காரனுங்க நாக்கைப் புடுங்குறா மாதிரி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லறது?”
”அதைப் பத்தியெல்லாம் ஜனங்க மேலே அக்கறை உள்ளவங்க கவலைப்படுவாங்க! நீங்கதான் மந்திரியாகப் போறீங்களே?”
” நீ சொல்றதைப் பார்த்தா, எந்தப் பிரச்சினையைப் பத்தியும் நான் கவலையே படக்கூடாதுங்குற மாதிரியில்லே இருக்கு?”
”தப்பு! எல்லாப் பிரச்சினையைப் பத்தியும் கவலைப்படணும். அப்போத்தான் நல்ல நிதியமைச்சரா இருக்க முடியும்! “ கணவரைத் திருத்தினாள் பாலாமணி.
”எப்படி?”
”இப்போ நான் ஒரு பத்திரிகை நிரூபர்னு வைச்சுக்கோங்க! நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க பார்க்கலாம்.”
”இந்த ஆட்டத்துலே கூட நீதான் கேள்வி கேட்பியா? கஷ்டம்! சரி, கேளு,” என்று மனைவியைக் கூர்ந்து கவனித்தார் கிட்டாமணி.
”முதல் கேள்வி! டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்து விட்டதே? இதை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?”
”அது வந்து... வெளிநாட்டு முதலீடுகளுக்கு உற்சாகமளித்து, ஏற்றுமதியாளர்களுக்குச் சலுகையளித்து....”
” நிறுத்துங்க! என்னாது வளவளான்னு பேசிக்கிட்டு? இதுவே நம்ம பிரணாப் முகர்ஜீயா இருந்தா இந்தக் கேள்விக்கு ரெண்டே வார்த்தையிலே பதில் சொல்லியிருப்பாரு தெரியுமா?”
”ரெண்டே வார்த்தையா? என்ன அது?”
”ரொம்பக் கவலையாயிருக்கு!”
”என்னாது?” அதிர்ந்தார் கிட்டாமணி.
”ஆமாங்க!” சிரித்தாள் பாலாமணி. “பிரணாப் முகர்ஜீ நிதியமைச்சரா இருந்தபோது, அவர் கிட்டே என்ன கேட்டாலும் ‘கவலையா இருக்கு’ன்னு ரெண்டு வார்த்தையைச் சொல்லிட்டு ஜூட் விட்டிருவாரு!”
”எதையாவது உளறாதே! அவர் எவ்வளவு பெரிய மனுசர்? இப்படியா பதில் சொல்லுவாரு?”
” நம்ப முடியலியா? கேளுங்க,“ என்று பட்டியலிட ஆரம்பித்தாள் பாலாமணி.” ஜூன் 13-ம்தேதி அவர்கிட்டே ‘தொழில்துறை வளர்ச்சி இப்படித் தரைமட்டமாயிருச்சே’ன்னு கேட்டதுக்கு அவர் என்ன பதில் சொன்னாரு தெரியுமா? ‘கவலையா இருக்கு’ன்னுதான்!”
”ஏதோ ஒருவாட்டி வாய்தவறிச் சொல்லியிருப்பாரு!”
”இல்லீங்க! மேமாசம் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் பற்றி கேட்டபோது என்ன சொன்னாருதெரியுமா? ‘கவலையா இருக்கு’ன்னு தான்.”
”அது போன மாசம்; நான் சொல்றது இந்த மாசம்!”
”அட, அதே மே மாசத்துலே இந்தியரூபாயோட மதிப்பு வீழ்ச்சியைப் பத்திக் கேட்டதுக்கும் இதையேதான் சொன்னாருங்க! ‘கவலையா இருக்கு!’”
”ஐயையோ!”
”இதுக்கே பதறுனா எப்புடி? பிப்ருவரியிலே மானியங்களோட அளவு அதிகரிச்சதைப்பத்திக் கேட்டபோதும் இதையேதான்சொன்னாரு! போன வருஷம் அக்டோபர் மாசத்துலே உணவுப் பொருட்கள் விலையேற்றம் பற்றிக் கேட்டபோதும்இதையேதான் சொன்னாரு! ஆகஸ்ட் மாசம் அமெரிக்க இந்தியப் பொருளாதாரத்தோட குறியீட்டைக் குறைச்சபோதும் இதையேதான் சொன்னாரு! இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்!”
”ஆஹா!” கிட்டாமணி முகம் மலர்ந்தார். “அப்படீன்னா, நிதியமைச்சர்னா ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும் கவலைப்பட்டா மட்டும் போதுமா?”
”சுத்தப் புரியாத ஜன்மமா இருக்கீங்களே?” எரிந்து விழுந்தாள் பாலாமணி. “உங்களை யாரு கவலைப்படச் சொன்னாங்க? அதுக்குத்தான் நூறு கோடிக்கும் மேலே மக்கள் இருக்காங்களே? மந்திரியா லட்சணமா ‘கவலையா இருக்கு’ன்னு கவலைப்படாமச் சொல்லிட்டு கவலையில்லாம இருந்தாப் போதும்! என்ன கண்ணா, லட்டு திங்க ஆசையா?”
”பாலாமணி! எனக்கு இந்த நிதியமைச்சர் வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்று ஆர்வம் ததும்பக் கூறினார் கிட்டாமணி. “சொல்லப்போனா, உன்னோட குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுறதுக்குப் பேசாம சாமியாராப் போயிடலாம்னு முன்னெல்லாம் நினைப்பேன். இப்போ, நிதியமைச்சராப் போயிடலாம்னு தோணுது!”
”உங்களுக்கு ஜாலியாத் தான் இருக்கும்,” என்று அங்கலாய்த்தாள் பாலாமணி. “ஆனா, ஜனங்க பாட்டைப் பத்தி யோசிச்சீங்களா?”
”யோசிக்கிறதா? அவங்க நிலைமையை நினைச்சா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!”
”ஐயையோ, எதுக்கு அழறீங்க?”
”பின்னே நானும் சும்மா ‘கவலையா இருக்கு’ன்னு வாய்வார்த்தையா சொன்னாப் போதுமா? கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்றேனே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!”
”வெரிகுட்! இப்படியே ப்ராக்டீஸ் பண்ணினீங்கன்னா, ஈஸியா பிக்-அப் பண்ணிடுவீங்க!”
”அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!”
”இத பாருங்க, அப்படித் தப்பித்தவறி நீங்க டெல்லி போறதா இருந்தா, கிளம்புறதுக்கு முன்னாடி ஒருவாட்டி ஷாப்பிங் போயிட்டு வரணும். சரியா?”
”அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!”
Tweet |
8 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
:)))
எனக்கு இப்ப ரொம்ப கவலையா இருக்கு..
குவாலிஃபிகேஷன் எவ்வளவு சின்ன விஷயமாப் போச்சு இல்லே?!! கவலையாத்தான் இருக்கு!
super
அப்போ பிரதமர் ஆகணும்னா?
நிதியமைச்சர் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணனும்னு எனக்கு இப்ப ஆசை வந்திடுச்சு. அவ்வ்வ்வ்வ்
ஹஹா பிச்சிட்டேள்!
ஆஹா ஆஹா ஆஹா..
அருமை நண்பா..
Post a Comment