Sunday, June 17, 2012

விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!-03


எஸ்.ஆர்.எம்.ஹோட்டலை நெருங்கும்வரைக்கும் காலிஃப்ளவரைப் போல மலர்ந்திருந்த எங்களது முகம், உள்ளே நுழைந்த அடுத்த வினாடியே கருவாடு போலச் சுருங்கிப் போனது. அட்வான்ஸ் புக்கிங் செய்யாமல் ஆல்பர்ட் தியேட்டருக்கு ரஜினி படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்க்கப்போனது போல, அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் மலைத்துப் போய் விட்டோம். சல்வார் தொடங்கி மடிசார் வரை, வாலிபம் தொடங்கி வழுக்கைத்தலை வரை, டீன்ஏஜ் தொடங்கி கூன்ஏஜ் வரை கும்பகோணம் அடுக்கு மாதிரி தினுசுவாரியாய், சைசுவாரியாய், மானாவாரியாய் கூட்டம் நின்று கொண்டிருந்தது.

       நாமெல்லாம் ஒண்டியா வந்திருக்கோம். இங்கே வண்டி வண்டியா வந்திருக்காங்களேய்யா!என்று புலம்பினார் உடன்வந்த ஒருவர்.

       டோண்ட் வொர்ரி, செண்ட்ரல் ஸ்டேஷனிலே ஊருக்குப் போக ஒருத்தர் போனா, வழியனுப்ப பத்து பேரு வர்றதில்லையா? அதுமாதிரி, பாதிப்பேரு கூட வந்தவங்களா இருப்பாங்க,என்று இன்னொருவர் சொல்லி, எங்கள் வயிற்றில் பாலை டிக்காஷனும், சர்க்கரையும் கலந்து வார்த்தார். அவர் சொன்னது சரிதான் என்று விரைவிலேயே தெரிந்தது. தேர்வு செய்யப்பட்டவர்கள் தவிர, பிறர் ஹோட்டலின் வெளியிலேயே காத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டார்கள். ஹோட்டலின் செக்யூரிட்டி நடையாய் நடந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

       கண்டம்ஸ் மட்டும் நில்லுங்க! மத்தவங்க தள்ளிப் போய் உட்காருங்க!

       ஐயா செக்யூரிட்டி,என்று அழைத்து விளக்கினேன். “கண்டம்ஸ் இல்லை; கண்டெஸ்டண்ட்-ன்னு சொல்லுங்க! செலக்ட் ஆகலேன்னா நாங்களே Condemn-ஆகிருவோம். முதல்லேயே சொல்லி வயத்துலே புளியைக் கரைச்சு ஈயச்சொம்புலே கொதிக்க வைக்காதீங்க! (மனதுக்குள் ‘ நல்ல வேளை, கண்டம்ஸ் என்று சொன்னார். கானாவுக்குப் பதிலாக, காவன்னா சொல்லித் தொலைத்திருந்தால், காஜாமலையில் ஒரு கலவரமே ஏற்பட்டிருக்கும்என்று எண்ணிக் கொண்டேன்.)

       ஆடிஷனுக்காக வந்திருந்தவர்களை அகரவரிசையில் நாலைந்தாகப் பிரித்து நிற்க வைத்திருந்தார்கள். வரிசை மெல்ல நகர ஆரம்பித்ததும், திருப்பதியில் தர்மதரிசனத்துக்கு நிற்கிற ஞாபகத்தில், நான் ‘கோவிந்தா கோவிந்தாஎன்று கொஞ்சம் உரக்கச் சொல்லவும், கோடீஸ்வரராக வந்தவர்கள் அனைவரும் என்னைப் பார்த்துப் பசுபதியைப் போல முறைத்தனர்.

       வரிசையில் நின்றபோதுதான் கவனித்தேன். ஒருவர் கையில் காம்பெட்டிஷன் சக்சஸ் என்றால் இன்னொருவர் கையில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை கைடு! ஒருவர் கையில் ஐ.ஏ.எஸ். எண்ட்ரன்ஸ் புத்தகம் என்றால் இன்னொருவர் கையில் ஐ.ஐ.டி. எண்ட்ரன்ஸ்! ஆளாளுக்குப் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி தலையிலடித்து அடித்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். (அவரவர் தலையில் தான்!)

       நீங்க புக் ஒண்ணும் கொண்டுவரலியா சார்?என்று என்னைக் கேட்டார் ஒருவர்.

       ஓ!என்று சொல்லியபடி, சட்டைப்பையிலிருந்து சினிக்கூத்துஎடுத்து வாசித்தேன்.

       இன்னொருவரோ “காக்க காக்க...கனகவேல் காக்க...தாக்க தாக்க...தடையறத் தாக்க... “ என்று பக்திப்பரவசத்துடன் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டிருந்தவர், திடீரென்று கண்விழித்து, “அடடா, மறந்துட்டேனே, ஏன் சார்? தடையறத் தாக்க-வுக்கு அப்புறம் என்ன வரும்?என்று வினவினார்.

       தடையறத் தாக்க-வுக்கு அப்புறமா சகுனி, பில்லா-II வரும்னுதான் பேசிக்கிறாங்க!என்று நான் பதிலளித்ததும், அத்திப்பூக்கள் சீரியலில் வரும் வில்லியைப் போல என்னை முறைத்துப் பார்த்தார்.

       நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிநிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களைச் சும்மாச் சொல்லக் கூடாது. கொஞ்சம் கூட குழப்பம் ஏற்படாதவாறு ஏற்பாடுகளை படு பக்காவாகச் செய்திருந்தார்கள். முதலில் ஒரு மேஜைக்குச் சென்று, பெயரையும் ஊரையும் சொன்னதும், அச்சிடப்பட்ட பட்டியலைச் சரிபார்த்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீட்டு எண்ணைச் சொன்னார்கள். அந்த எண்களையும் 1-100, 101-200, 201-300 என்று இன்னொரு இடத்தில் வரிசையாக நிற்கவைத்து, வந்த ஒவ்வொருவரின் அடையாள ஆதாரங்களையும் சரிபார்த்து ஆளுக்கு ஒரு கவரைக் கையில் கொடுத்தார்கள். பையை வாங்கியதும், ஹோட்டலின் வலது பக்கத்தில் இருந்த அரங்கத்துக்குச் செல்லச் சொன்னார்கள். அரங்கத்தின் வாசலில், வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு பரீட்சை அட்டையும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள். (மிக்ஸிங் பண்ணவும், சைட்-டிஷாகவும் ஏதாவது தந்திருக்கலாம் தான்!) எல்லாவற்றையும் வாங்கி உள்ளே நுழைந்ததும், உள்ளே மலையாள பாணியில் வெளிர்மஞ்சள் புடவையுடன் நின்றிருந்த பெண்கள் உட்கார வைத்தனர். ஏறக்குறைய நானூறு பேர் உட்கார்ந்தவுடன், முன்னால் வைக்கப்பட்டிருந்த திரையில், ஒரு காணொளி காட்டப்பட, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பல சின்னத்திரைகளிலும் அதே காணொளியைக் காண முடிந்தது.

       ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கவருக்குள் ஏழு படிவங்கள் இருந்தன. ஒவ்வொரு படிவத்தையும் எப்படி நிரப்புவது என்று ஒரு இளம்பெண் மிகப் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார். போட்டோ ஒட்டுவதற்குக் கூட, பசையைக் குழப்பமில்லாமல் வினியோகித்தார்கள். (எனக்கு சல்லிக்காசு கிடைக்காவிட்டாலும், அவ்வ்வ்வ்வ்வ்......), இவ்வளவு துல்லியமாய், இத்தனை பேர்களைத் திறமையாகச் சமாளித்த அந்தக்குழுவினரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

       அடுத்து, பரீட்சை! பத்து கேள்விகள்! பெரும்பாலானவை ஓரளவு சுலபமாகவே இருந்தபோதிலும், ஒரே ஒரு கேள்வியில் போட்டாங்கய்யா கூக்ளி! அது, ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் யார்?’. இந்தக் கேள்விக்கு அம்மாவாலேயே பதில் சொல்ல முடியாதே சாமீ! எம்புட்டு வாட்டி மாத்திட்டாய்ங்க!

       எப்படியோ, பரீட்சை எழுதி முடித்தபோது மணி பன்னிரெண்டாகி விட்டது. ( அரங்கத்துக்குள் ஏ.சி.இருந்ததோ தப்பித்தோமோ? என்ன வெயிலய்யா திருச்சி வெயில்!)

       அடுத்து நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆடிஷன்!என்றார் நிகழ்ச்சி இயக்குனர். அப்பாடா, சீக்கிரம் முடிந்தால், திருவரங்கனையோ, சமயபுரம் அம்மனையோ தரிசித்துவிட்டு, ராத்திரி பஸ் பிடித்து சென்னை திரும்பி விடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே....

       முதலில் பெண்களுக்கு முன்னுரிமை. அப்புறம் ஐம்பத்தி ஐந்து வயதானோருக்கு முன்னுரிமை. மீதமுள்ளவர்கள் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள். ஆகவே, மற்றவர்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்.என்று அவர்கள் சொல்லி வாய்மூடுவதற்குள், நான் வெளியே ஓடிவந்து, பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடிச் செல்லப் பரபரத்தேன். ஏழுமணிக்கு ஹோட்டலில் இருக்க வேண்டும் என்று சொன்னதால், ஆறு மணிக்கு ஒரு காபி குடித்ததோடு சரி. பசி வயிற்றைக் கிள்ளியது என்று சொல்வார்களே, இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால், என்னுடைய பசி பக்கத்திலிருந்தவரின் வயிற்றையும் கிள்ளியிருக்கும்.

                பொதுவாக ஹோட்டல்களில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதை விரும்பாத நான், அன்று ஸ்பெஷல் மீல்ஸ், எக்ஸ்ட்ரா அப்பளம், எக்ஸ்ட்ரா தயிரோடு ஒரு வெட்டு வெட்டிவிட்டு, வாசலில் கிடைத்த பனாரஸ் பானையும் மென்றுவிட்டு, மீண்டும் பஸ் பிடித்து எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் சென்றடைந்தேன். அரங்கத்துக்குள் நுழைந்து, ஏசியின் சுகத்தில் காலை நீட்டி அமர்ந்து உறங்கியே போனேன். கனவு வந்ததா என்றுதானே கேட்கிறீர்கள்? ஹிஹி! உங்களுக்குத் தெரியாதா என் கனவின் லட்சணத்தைப் பற்றி?

       ஏறத்தாழ மூன்று மணிக்கெல்ல்லாம் அரங்கம் முகூர்த்தம் முடிந்த கல்யாண மண்டபம் போல கந்தர்கோளமாகியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் ஆடிஷனுக்குப் போயிருக்கவே, பலர் ஒரு நாற்காலியில் தலையும், இன்னொரு நாற்காலியில் காலும் வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் காப்பி, டீ சாப்பிடலாமென்றால், விலையைக் கேட்டதும் தலை சுற்றியதில் என் முதுகை என்னாலேயே பார்க்க முடிந்தது. அக்கம்பக்கத்தில் டீக்கடை வேறு இல்லையா, இருந்த கொஞ்ச நஞ்ச மூளையும் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் பசுமாடு போல மண்டையோட்டுக்குள் மல்லாந்துவிட்டது. ஆனால், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு ஃப்ளாஸ்க் மேல் ஃப்ளாஸ்காக டீ போய் வந்து கொண்டிருக்கவே, அவர்களில் ஒரு பெண் பக்கத்தில் வந்ததும் நிறுத்தினேன்.

       சிஸ்டர், டீ குடிக்கிறதுதான் குடிக்கறீங்க. கொஞ்சம் அந்த ஸ்க்ரீனுக்குப் பின்னாலே போய் குடியுங்களேன்! நாங்கல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர் டீ குடிக்கிற ஆசாமிங்க! கொடுக்காமக் குடிக்கிறதை விட பெரிய பாவம், மத்தவங்க பார்க்கக் குடிக்கிறது. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க,என்று சொன்னதும், அந்தப் பெண் தாயுள்ளத்தோடு என்னைப் பார்த்தார். அங்கிருந்து நகர்ந்து போனவர், நிகழ்ச்சிக் குழுவினரிடம் எதையோ சொல்ல, ஓரிருவர் எழுந்து பார்த்தார்கள்.

       ’அவ்வளவுதான், ஒரு டீக்கு ஆசைப்பட்டு, கோடி ரூபாயைக் கோட்டை விடப்போறோம்,என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே, மீண்டும் ஃப்ளாஸ்க் வர ஆரம்பித்தது. இம்முறை கூடவே ஏகப்பட்ட டிஸ்போஸபிள் தம்ளரும் வர, அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் அவுன்ஸ் டீ வழங்கப்பட்டது. மாடர்ன் டிரஸில் நின்றிருந்த அந்த மதர் தெரஸாவுக்கு நான் இங்கிருந்தே ஒரு கும்பிடு போட, என் புண்ணியத்தில் டீ குடித்த பலர் என்னை எஜமான் ரஜினியைப் பார்ப்பது போலப் பார்த்துப் பார்வையாலேயே நன்றியைத் தெரிவித்தனர்.

       ஐந்து ஐந்து பேர்களாக ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒவ்வொருத்தருக்கும் தலா இருபதிலிருந்து அரை மணி நேரம். மொத்தம் ஐந்து ஸ்டூடியோக்கள்! மொத்தம்  நானூறு கண்டம்ஸ், அதாவது கண்டெஸ்டண்ட்ஸ்! எவ்வளவு நேரம் ஆகுமென்று கண்டுபிடிக்க வேண்டுமென்றால், வேலை வெட்டியில்லாதவர்கள் கணக்குப் போட்டுப் பாருங்கள். நானும் இன்னும் நால்வரும் இறுதியாக அரங்கத்தை விட்டுக் கிளம்பியபோது மணி மாலை ஆறு! ஒவ்வொரு ஸ்டூடியோ வாசலிலும் பத்துப் பேர் ஏற்கனவே காத்திருந்தனர்.

       ஸ்ரீரங்கமாவது, சமயபுரமாவது! நள்ளிரவுக்குள் திருச்சியிலிருந்து கிளம்ப முடிந்தாலே பெரிய விஷயம் என்றாகி விட்டது. ஒவ்வொரு ஸ்டூடியோ வாசலிலும், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் புருசனைப்போல எல்லாரும் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

       கடைசியாக நான் ஆடிஷனுக்கு உள்ளே போனபோது, மணி எட்டே கால்! போனவுடன் முன்னாலே ஒரு மைக்கை வைத்தார்கள். காமிரா ஓடிக் கொண்டிருக்க, இரண்டு பேர் என்னிடம் இயல்பாகப் பேச்சுக் கொடுத்தார்கள். என்னைப் பற்றி விசாரித்தார்கள். பேச்சுவாக்கில் நான் சேட்டைக்காரன் என்ற பெயரில் ஒரு பிளாக் எழுதிவருவதைச் சொன்னதும், இருவரின் முகமும் கடுக்காய் சாப்பிட்டதுபோல மாறியதைக் கண்டுபிடித்தேன். இருபது நிமிடங்கள் பேச்சு முடிந்ததும், ‘ தேங்க் யூஎன்று அவர்கள் சொன்னதுமே, ‘போதும் சாமீ, நடையைக் கட்டு,என்று சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு வெளியே வந்தேன்.

       டிபனைச் சாப்பிட்டுவிட்டு, சென்னைக்குப் பஸ்பிடித்து, ஜன்னலோரம் உட்கார்ந்ததும், அன்று நடந்ததெல்லாம் கனவு போலிருந்தது.  நான் தேர்வு செய்யப்படாதது குறையாக இருந்தாலும், அந்த அனுபவம் நன்றாகத் தான் இருந்தது. பாருங்களேன், அதை வைத்து மூன்று மொக்கைகளை எழுதினேனா இல்லையா?

       எப்படியும் ஒருவராவது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில், ஒரு கோடி வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை! அப்படி வெல்பவரை ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் ஜெயித்தார் என்று சொன்னால், என்னால் ஏற்க முடியாது. காரணம், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைத் தேர்ந்தெடுக்கிற முறையை அனுபவத்தில் பார்த்ததால், இறுதியாக சூர்யாவுக்கு முன்போய் நிற்பவர்கள் அனைவருமே தகுதியுடையவர்கள் என்பதே எனது கருத்து.

       அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! விஜய் டி.வி.க்கு எனது நன்றிகள்!

       சூர்யாவைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? ஹும், நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! J

10 comments:

ரிஷபன் said...

அரங்கத்துக்குள் ஏ.சி.இருந்ததோ தப்பித்தோமோ? என்ன வெயிலய்யா திருச்சி வெயில்!)

இப்ப மழை அடிக்குது..

ரிஷபன் said...

ஒவ்வொரு ஸ்டூடியோ வாசலிலும், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் புருசனைப்போல எல்லாரும் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

ஹா.ஹா..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முடிந்தது. சுபம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முடிந்தது. சுபம்!

கே. பி. ஜனா... said...

//”தடையறத் தாக்க-வுக்கு அப்புறமா சகுனி, பில்லா-II வரும்னுதான் பேசிக்கிறாங்க!” என்று நான் பதிலளித்ததும்,// ஹா ஹா !

பெசொவி said...

// டீன்–ஏஜ் தொடங்கி கூன்–ஏஜ் வரை//
// திருப்பதியில் தர்மதரிசனத்துக்கு நிற்கிற ஞாபகத்தில், நான் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கொஞ்சம் உரக்கச் சொல்லவும்,//
// ” நீங்க புக் ஒண்ணும் கொண்டுவரலியா சார்?” என்று என்னைக் கேட்டார் ஒருவர்.

”ஓ!” என்று சொல்லியபடி, சட்டைப்பையிலிருந்து ’சினிக்கூத்து’ எடுத்து வாசித்தேன்.
//
//இந்தக் கேள்விக்கு அம்மாவாலேயே பதில் சொல்ல முடியாதே சாமீ!//
// இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால், என்னுடைய பசி பக்கத்திலிருந்தவரின் வயிற்றையும் கிள்ளியிருக்கும்.//

Agmark Settai varigal!
:))

பால கணேஷ் said...

நான் ஸ்டாப் சிரிப்பு அதிரடி! தெளஸண்ட் வாலா சிரிப்பு சரவெடி! உங்களுக்கு கோடி கிடைக்காவிட்டால் என்ன... எங்களுக்கு வாய்விட்டுச் சிரிக்க மூன்று (மொக்கை) பகுதி நகைச்சுவைக் கதை கிடைத்‌ததே...! தொடரட்டும் சேட்டை கலாட்டா!

MANO நாஞ்சில் மனோ said...

சேட்டைகாரனின் செட்டை ச்சே சேட்டை....ரசித்தேன்...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//’அவ்வளவுதான், ஒரு டீக்கு ஆசைப்பட்டு, கோடி ரூபாயைக் கோட்டை விடப்போறோம்,’ என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே,//

//என் புண்ணியத்தில் டீ குடித்த பலர் என்னை எஜமான் ரஜினியைப் பார்ப்பது போலப் பார்த்துப் பார்வையாலேயே நன்றியைத் தெரிவித்தனர்.//

சூப்பராக நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க. உங்களின் திருச்சி வருகையைத் தெரிவித்திருந்தால் நானே டீ யுடன் உங்களை சந்திக்க வந்திருப்பேனே. ;)

amaran said...

சொல்லுங்க மாப்பிள்ள !
இன்னும் நிறைய சொல்லுங்க !