எழுமணிக்கெல்லாம் எஸ்.ஆர்.எம்.ஹோட்டலுக்குள் நுழைய வேண்டுமென்பதால், ஆறு மணிக்கெல்லாம் டிப்-டாப்பாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள் வந்துபோகும் இடத்தில் போய் நின்றாகி விட்டது.
”எக்ஸ்கியூஸ் மீ சார், காஜாமலைக்கு எந்த பஸ் போகும்?”
யாரோ தோளைச் சுரண்டிக் கேட்கவே திரும்பிப் பார்த்தேன்.
” நீங்க சென்னையா?”
”எப்படி ஸார் கண்டுபிடிச்சீங்க?” – அவருக்கு ஆச்சரியம்!
”காலையிலே ஆறுமணிக்கு தலையிலே அடிடாஸ் தொப்பியைப் போட்டுக்கினு, பாடி-ஸ்ப்ரே பூசிக்கினு நிக்கிறீங்களே?”
”ஹிஹிஹி! நீங்களும் சென்னையா ஸார்?”
”எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” எனக்கு ஆச்சரியம்.
”கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம, சம்பந்தா சம்பந்தமில்லாமப் பேசறீங்களே? அதை வைச்சுக் கேட்டேன்.”
இதற்கு மேல் சென்னையின் மானத்தை, திருச்சியில் வாங்க விரும்பாமல் வினவினேன்.
“தம்பி, நானும் காஜாமலைக்குத் தான் போகணும். நீங்க விஜய் டி.வி. புரோகிராம் ஆடிஷனுக்கா வந்திருக்கீங்க?”
”ஆமா சார், நீங்க...?”
”பயப்படாதீங்க! நான் ஒண்ணும் சூர்யா இல்லை. நானும் உங்களை மாதிரி ஆடிஷனுக்குத்தான் வந்திருக்கேன்.”
”க்ளாட் டு மீட் யூ சார்!” என்று நாங்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோதே, ஒரு பேருந்து வர ஏறிக்கொண்டோம். எங்களுக்குப் பின்னால் இன்னும் சில அடிடாஸ் தொப்பிகளும் பாடி ஸ்ப்ரேக்களும் ஏறிக்கொள்ள, டிரைவரும் கண்டக்டரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
”எங்கே சார் போகணும்?”
”காஜாமலை!”
”இது போகாது சார், மன்னாபுரம் நாலுரோட்டுக்கு அடுத்த ஸ்டாப்புலே இறங்கிக்கோங்க! அப்படியே நடந்து போனா காஜாமலை வந்திரும்!”
”அதுவே வரும்போது நாங்க எதுக்கு நடக்கணும்?” என்று கேட்க ஆசைதான். ஆனால், ஒரு பாவமும் அறியாத ஒரு திருச்சி கண்டக்டருக்கு அதிகாலையிலேயே கொலைவெறியை ஏற்படுத்த விரும்பாமல் பேசாமலிருந்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபோது, சென்னையிலிருந்து படையெடுத்து வந்திருந்த பலர் முதுகில் ஒரு பெரிய ஏர்-பேகைச் சுமந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை, ஒரு கோடியையும் சில்லறையாகக் கொடுத்துவிடுவார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.
ஒரு வழியாக பஸ் ஸ்டாப்பில் இறங்கியதும், நாலாபுறமும் பொட்டல்காடாக இருந்தது.
”என்னையா இது? ஒரு கோடிக்காக ஊருவிட்டு ஊருவந்தா, ஊர்க்கோடியிலே இறக்கி விட்டுட்டாங்க போலிருக்கே?”
யோசித்துக் கொண்டிருக்கும்போதே, குஜராத்தி பாணியில் புடவையணிந்தபடி ஒரு பெண்மணி எதிர்ப்பட்டார்.
”எக்ஸ்கியூஸ் மீ!” உடன்வந்த ஒரு இளைஞர் துணிச்சலாக அந்தப் பெண்ணிடம் விசாரித்தார். “வேர் இஸ் காஜாமலை? எஸ்.ஆர்.எம்.ஹோட்டல்...?”
” நோ இங்கிலீஷ்! நோ டமில்!” என்றாள் அந்தப் பெண்மணி.
”இருங்க, நான் பெங்காளியிலே கேட்கறேன்,” என்று முன்வந்தேன் நான்.
”ஹலோ சார், அவங்க குஜராத்தி; அவங்களுக்கு பெங்காளி தெரியாது.” என்றார் ஒருவர்.
”அதுனாலேன்ன? எனக்கும்தான் பெங்காளி தெரியாது.” என்றேன் நான்.
அந்த நேரம் பார்த்து ஒருவர் வேப்பங்குச்சியால் பல்விளக்கியபடியே வந்தார்.
”சார், காஜாமலை எஸ்.ஆர்.எம்.ஹோட்டலுக்கு எப்படி சார் போகணும்?”
”இதே ரோட்டுலே நடந்திட்டேயிருங்க... ஒரு அரை மணி நேரம் நடந்தீங்கன்னா.....”
”கால்வலி வந்திரும்..” என்று முனகியபடி நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் உதிரி உதிரியாகப் பலர் கையில் பையுடன் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருந்தார்கள்.
”எல்லாருமே நம்மளை மாதிரி கோடீஸ்வரங்களாகப் போறவங்க போலிருக்கு,” என்று ஒருவர் சொல்லவும், இன்னொருவர் உரக்க, “ஹலோ, வாங்க சார், எல்லாரும் சேர்ந்தே போகலாம். வருங்கால கோடீஸ்வரர்கள் திருச்சியில் ஊர்வலம்னு பேப்பர்லே நியூஸ் போடுவாங்க!” என்று கலகலப்பூட்டவும், ஏறக்குறைய பதினைந்து பேர் கும்பலாக எஸ்.ஆர்.எம்.ஹோட்டலை நோக்கி நடக்கவும், தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஒருவிதமாகப் பார்க்க ஆரம்பித்தனர்.
ஏறக்குறைய அரை மணி நேரம் நடந்திருப்போம்.
”என்னய்யா இது? இன்னும் கொஞ்சம் நடந்தா தஞ்சாவூர் வந்திரும் போலிருக்கே?” என்று புலம்பிக்கொண்டிருக்கும்போதே, தூரத்தில் எஸ்.ஆர்.எம். ஹோட்டல் என்று ஒரு உயர்ந்த கட்டிடம் தென்பட்டது.
”அதோ! அதோ!” என்று நான் உற்சாகமிகுதியில் கத்தியபடி, கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
”சார், அது என்ன ஸ்ரீரங்கம் ராஜகோபுரமா? எதுக்கு சார் கன்னத்துலே போட்டுக்கறீங்க?” என்று ஒருவர் நக்கலடித்தார்.
ஒருவழியாக, எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் வளாகத்துக்குள் நுழைந்ததும்....அனைவரும் விக்கித்துப்போய் நின்று விட்டோம்.
ஏறக்குறைய ஆயிரம் பேர்கள், விஜய் டி.வி பேனர்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய வெளியில், நான்கு வரிசைகளில் நின்று கொண்டிருந்தனர். கண்ணுக்கெட்டிய திசையெல்லாம் சூர்யா கைகட்டிக்கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் – ஃப்ளக்ஸில்!
(தொடரும்)
Tweet |
13 comments:
திருச்சில இன்னும் வேப்பங்குச்சியில் பல் விளக்குறாங்களா?!! :-))
தொடருங்க, ரொம்ப சுவாரஸ்யமாகப் போகிறது!
ஹூம் நடக்கட்டும் சேட்டை, நல்லதான் போயிட்டிருக்கு தொடர்.
ஒரு முறை எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் நடந்த புதிய தலைமுறை நேர்காணலுக்கு மன்னார்புறத்தில் இருந்து நடந்து சென்ற நினைவு வருகிறது :-)
சூப்பரா போகுது தல. தொடருங்கள்....
தொடர் அருமையா வந்திருக்கு சேட்டை. வாழ்த்துகள்... தொடருங்க...
பலர் முதுகில் ஒரு பெரிய ஏர்-பேகைச் சுமந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை, ஒரு கோடியையும் சில்லறையாகக் கொடுத்துவிடுவார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.
அருமை.
//”இது போகாது சார், மன்னாபுரம் நாலுரோட்டுக்கு அடுத்த ஸ்டாப்புலே இறங்கிக்கோங்க! அப்படியே நடந்து போனா காஜாமலை வந்திரும்!”
”அதுவே வரும்போது நாங்க எதுக்கு நடக்கணும்?” என்று கேட்க ஆசைதான்.//
நல்ல நகைச்சுவையாகப் போகுது.
தங்களின் நகைச்சுவையான எழுத்துக்களே ஒரு கோடிக்கு மேல் மதிப்புள்ள்து எங்களுக்கு, தொடருங்கள். vgk
சீசன் 2லாம் உண்டா? கலகலன்னுகீது.
ஹாஹா,,,,கலக்கலா கீதுபா!
உங்கள் பதிவால் எங்களுக்குதான் லாபம் வாய்விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும்.தொடருங்கள் உங்கள் கலக்கல் நகைச்சுவையை... :)
‘‘ஹலோ சார், அவங்க குஜராத்தி. பெங்காலி தெரியாது’’ ‘‘அதுனாலென்ன... எனக்கும்தான் பெங்காலி தெரியாது’’
-சூப்பர்! வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறீர்கள். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்!
”கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம, சம்பந்தா சம்பந்தமில்லாமப் பேசறீங்களே? அதை வைச்சுக் கேட்டேன்.”
நல்லாத்தான் வார்ரீங்க..
இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து இடுகையை பெரிதுபடுத்தவும். 4, 5 என்று போனாலும் பரவாயில்லை.
btw, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
அன்புடன்
கண்ணன், கடலூர்.
Post a Comment