Sunday, September 11, 2011

மேரே பிரதர் கி துல்ஹன்-கத்ரீனாவுக்கு ஜே!

மேரே பிரதர் கி துல்ஹன் (என் அண்ணனின் மணப்பெண்-என்று மொழிபெயர்த்தால் சற்றே டகால்டியாய் தொனிக்கிறது) ஒரு பதினைந்து வருடங்களுக்கு முந்தைய பாணியைப் பின்பற்றி, படம் முழுக்க வசவசவென்று பாடல்களை வைத்துத் தாளித்த ஒரு படம். ஆனால், இசை தவிரவும் இந்தப் படத்தில் கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இல்லாமல் இல்லை. (குறிப்பாக, கத்ரீனா கைஃபின் பக்தகோடிகள் தவறாமல் பார்த்து விடவும்; இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தும்!)

கதை என்று வியந்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. யுகயுகமாய் அரைத்துப் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு தொன்றுதொட்டு விற்பனையாகிவரும் அதே முக்கோணக்காதல் மாவுதான்! இருந்தாலும், திரைக்கதையை சாமர்த்தியமாக, ரசிகர்களை இழுத்துப் பிடித்து வைக்குமளவுக்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

லவ், குஷ் இருவரும் அக்னிஹோத்ரி குடும்பத்தில் சகோதரர்கள். லண்டனில் வசிக்கும் லவ் காதலியோடு ஏற்பட்ட பிணக்கினால், ஒரு வீம்பில் தன் தம்பி குஷ்ஷிடம் தனக்காக ஒரு பெண் தேடுமாறு சொல்கிறார். பாலிவுட்டில் உதவி இயக்குனராய் இருக்கும் குஷ், அண்ணனுக்காக பெண்தேடும் படலத்தில் மும்முரமாக இறங்குகிறார். இந்தத் தேடலில் பல சுவாரசியமான சம்பவங்கள், சில மொக்கை காமெடிகளுக்குப் பிறகு கதாநாயகி டிம்பிளைச் சந்திக்கிறார். இங்கு ஒரு சிறிய கொசுவத்தி சுழல்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே டிம்பிளை குஷ் சந்தித்திருக்கிறான். அண்ணனுக்கு அவள் பொருத்தமாக இருப்பாள் என்றெண்ணி, திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறவனுக்கு, தன்னையுமறியாமல் அவள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருப்பது புரிகிறது. அதன்பிறகு, விறுவிறுவென்று கதையில் ஏற்படும் சில சின்னச் சின்னத் திருப்பங்களும், படம் நெடுக விரவிக்கிடக்கின்ற பாடல்களுமாய், எல்லாருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே படத்தை முடிந்தவரை கழுத்தறுக்காமல் நகர்த்தியிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸும், யஷ்ராஜ் பிலிம்ஸுமே கூட ஏகப்பட்ட படங்களை எடுத்திருக்கிறார்கள் என்றாலும், இந்தப் படத்தை நடிகநடிகைகளும், இயக்குனர்களும் பிரமாதமாகத் தேற்றியிருக்கிறார்கள். லவ் அக்னிஹோத்ரியாக நடித்திருக்கிற அலி ஜபர், தம்பி குஷ்ஷாக நடித்திருக்கும் இம்ரான் கான், டிம்பிளாக நடித்திருக்கிற கத்ரீனா கைஃப் ஆகிய மூவரும் கொஞ்சம் கூட தளர்ச்சி காட்டாமல், கொடுத்த பாத்திரத்தை பெரும்பாலும் கனகச்சிதமாகவும், சில இடங்களில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்கள்.

குஷ் அக்னிஹோத்ரியாக வருகிற இம்ரான் கான், அவருக்கென்றே உருவாக்கப்பட்டது போன்ற கதாபாத்திரம் என்பதால், மனிதர் அனாயாசமாக ஊதித்தள்ளியிருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பல சீனியர் நடிகர்களுடன் நடித்த கத்ரீனாவுக்கும் இவருக்கும் தென்படும் பிரமிக்கத்தக்க ஜோடிப்பொருத்தம்.

அண்ணனாக வரும் அலி ஜபர் பாகிஸ்தானிய நடிகராம். அதிகம் வசனம் இல்லாதபோதும், அவரது டைமிங் காமெடியும், மெனக்கெடும் நடிப்பும் அவரது திறமையை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றன.

பெரும்பாலும் கண்களைச் சிமிட்டிக்கொண்டு, பார்பி பொம்மை போலச் சிரித்து வந்து போகும் கத்ரீனா கைஃப் இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு, ஓரிரு காட்சிகளில் சற்று ’ஓவரோ?’ என்றுகூட யோசிக்க வைக்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். வெறும் சிக் உடை சிங்காரியாய் இதுவரை வலம்வந்த கத்ரீனா இந்தப் படத்தில் திரையிலிருந்து மனதுக்குள் இறங்கி நிரம்பிவிடுகிறார். தைரியமாக இது கத்ரீனா கைஃபின் படம் என்று (அவரைப் போல) கண்சிமிட்டாமலே சொல்லிவிடலாம்.

சுமாராக இந்தி தெரிந்தவர்களும் புரிந்து கொள்கிற அளவுக்கு எளிமையாகவும், நறுக்கென்றும் வசனம் இருப்பது இன்னொரு நல்ல விஷயம். இயல்பான, மெலிதான நகைச்சுவைக் கதையென்பதால், தனது வரம்பினை அறிந்து வசனகர்த்தா பணியாற்றியிருப்பது புலப்படுகிறது.

ஒளிப்பதிவு பளிச்சென்று, கண்ணுக்குக் குளுமையாய் ஜிகினா வேலைகள் காட்டாமல் கதைக்களத்தையும், பாத்திரங்களையும் இயல்பான அழகாய்க் காட்டியிருப்பது இன்னொரு ஆச்சரியம். (கத்ரீனா முன்னை விட அழகாய்த் தெரிவதற்கும் அதுதான் காரணமோ?)

இயக்குனர் அலி அப்பாஸ் ஜபருக்கு இது முதல் படமாம்! இருந்தபோதிலும், நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாரையும் செமத்தியாக வேலை வாங்கியிருப்பதற்கே ஒரு பாராட்டுத் தெரிவித்தாக வேண்டும். பலமுறை பார்த்த கதையை, விதிவிலக்காய் சில காட்சிகள் தவிர, பெரும்பாலும் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியபடி கோர்வையாகச் சொல்லியிருப்பது அழகு! இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு, சற்றே வேகம் குறைந்து, அங்கங்கே தலைசொரிய நேரிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தை தலைமேல் சுமந்து கொண்டு போகிற இன்னொரு அம்சம் சொஹைல் சென்-னின் இசை! நகைச்சுவைக் கதைக்கு ஏற்றவாறு, வேடிக்கையும் இனிமையும் கலந்து சற்றே திரைக்கதை தளரும்போதெல்லாம் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

பெரிதாகக் கதைபற்றிய கவலையில்லாமல், முகம் சுளிக்க வைக்கிற வசனங்களோ, காட்சியமைப்போ இல்லாத ஒரு பொழுதுபோக்குப் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இது குஷி தருகிற படம். கூடவே கத்ரீனாவின் விசிறியாய் இருந்து தொலைத்துவிட்டால், ’முடிந்தால் இன்னொரு தடவை பார்க்கணும்,’ என்று ஆசைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - என்னை மாதிரி!

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் சூப்பர், படம் பாக்கணுமே [[கத்ரீனா]] ஹி ஹி...

ரிஷபன் said...

சுமாராக இந்தி தெரிந்தவர்களும் புரிந்து கொள்கிற அளவுக்கு எளிமையாகவும், நறுக்கென்றும் வசனம் இருப்பது இன்னொரு நல்ல விஷயம். இயல்பான, மெலிதான நகைச்சுவைக் கதையென்பதால், தனது வரம்பினை அறிந்து வசனகர்த்தா பணியாற்றியிருப்பது புலப்படுகிறது.

ஓ.. அப்ப நானும் பார்க்கலாம்..

Anonymous said...

//முடிந்தால் இன்னொரு தடவை பார்க்கணும்,’ என்று ஆசைப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - என்னை மாதிரி!//

சின்ன கரெக்சன்: நம்மை மாதிரி. நானும் படம் பார்த்தேன். காத்ரீனவுக்காக மட்டும்!!

Philosophy Prabhakaran said...

நான் இந்தி படங்கள் பார்ப்பதில்லை... இருப்பினும் பதிவை விரும்பி வாசித்தேன்...

நேற்றுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது... முந்தய பதிவிற்கு வாஜி வாஜி என்று பெயர் வைத்ததற்கு என்ன காரணம்...? ஸ்ரேயா தானே...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க...

நிரூபன் said...

யுகயுகமாய் அரைத்துப் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டு தொன்றுதொட்டு விற்பனையாகிவரும் அதே முக்கோணக்காதல் மாவுதான்//

அவ்.....இது சேட்டை ஸ்டைல் விமர்சனம்...

ஹா...ஹா.....

நிரூபன் said...

முக்கோணக் காதல் கதை பற்றிய....காமெடி கலந்த விமர்சனத்தை ரசித்தேன்.
கண்டிப்பாக டைம் கிடைக்க்கும் போது படத்தைப் பார்க்கிறேன் பாஸ்.

Anonymous said...

விமர்சனம் ரசித்தேன்...இந்தி அவ்வளவா தெரியாததால் பார்க்கமாட்டேன்னு தோணுது...இன்னொரு காரணம் வீட்டுக்காரம்மா கத்ரீனாவோட கண்ணுக்கு அழகா தெரியறதால...-:)

Rizi said...

அழகாக சொல்லியிருக்கிங்க,, சேட்டை..

கத்ரினா கைப்புக்காக பார்ப்போம்..

சாந்தி மாரியப்பன் said...

படமும் பரவாயில்லாம இருக்கும்ன்னுதான் தோணுது.

'தேரே பின் லேடன்' படத்தில் கதாநாயகனாய் நடிச்சவர்தான் இந்த 'அலி ஜாபர்'

shortfilmindia.com said...

காத்ரீனா ரொம்பத்தான் சுழட்டி அடிச்சிருககா போலருக்கு.
கேபிள் சங்கர்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

இன்னும்
எதிர்பார்க்கின்றோம்

அன்புடன்
யானைக்குட்டி

www.eraaedwin.com said...

அப்படியா தோழா

Unknown said...

மாப்ள விமர்சனம் நல்லா இருக்கு...இன்னும் நம் மக்கள் தொடர்ந்து பல மொழி...முக்கியமா ஹிந்தி கத்துக்கிட்டா எல்லோருக்கும் நல்லது....இது என் தாழ்மையான கருத்து!

கே. பி. ஜனா... said...

பளிச்சிடும் படத்துக்கு பளிச்சென்று உங்கள் விமரிசனம்...

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் சூப்பர், படம் பாக்கணுமே [[கத்ரீனா]] ஹி ஹி...//

ஹிஹி, நீங்களும் நம்ம கட்சி ஆளுதான் போலிருக்குது! மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

ஓ.. அப்ப நானும் பார்க்கலாம்..//

தாராளமாப் பாருங்க, இட்ஸ் வொர்த்! மிக்க நன்றி! :-)

//! சிவகுமார் ! said...

சின்ன கரெக்சன்: நம்மை மாதிரி. நானும் படம் பார்த்தேன். காத்ரீனவுக்காக மட்டும்!!//

கரெக்சன் கிடக்குது. கத்ரீனா விஷயத்துலே எனக்கும் எத்தனை பேருக்கும் கனெக்சன் இருக்குது கவனிங்க! :-)
மிக்க நன்றி!

//Philosophy Prabhakaran said...

நான் இந்தி படங்கள் பார்ப்பதில்லை... இருப்பினும் பதிவை விரும்பி வாசித்தேன்...//

மிக்க மகிழ்ச்சி! படம் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சியின் பகிர்வே இது!

//நேற்றுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது... முந்தய பதிவிற்கு வாஜி வாஜி என்று பெயர் வைத்ததற்கு என்ன காரணம்...? ஸ்ரேயா தானே...//

நோ! நோ! அதுலே ஒருத்தரு என்னை வார்த்தைக்கு வார்த்தை ’ஜி’ போட்டுக் கூப்பிட்டாரே, கவனிக்கலியா? :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் பாஸ்,எப்படி இருக்கிறீங்க...//

நலம் சகோ! நலமறிய ஆவல்!

//அவ்.....இது சேட்டை ஸ்டைல் விமர்சனம்...ஹா...ஹா.....//

எது செய்தாலும் என்னோட குரங்குப்புத்தி கூடவே இருக்குதே? :-)

// முக்கோணக் காதல் கதை பற்றிய....காமெடி கலந்த விமர்சனத்தை ரசித்தேன். கண்டிப்பாக டைம் கிடைக்க்கும் போது படத்தைப் பார்க்கிறேன் பாஸ்.//

அவசியம் பாருங்கள் சகோ! இந்தியில் சுமாரான படங்கள் வருவதை அபூர்வம் என்கிறார்கள்; இது ஓரளவு நல்ல படமென்றே சொல்லலாம். மிக்க நன்றி! :-)

//ரெவெரி said...

விமர்சனம் ரசித்தேன்...இந்தி அவ்வளவா தெரியாததால் பார்க்கமாட்டேன்னு தோணுது...இன்னொரு காரணம் வீட்டுக்காரம்மா கத்ரீனாவோட கண்ணுக்கு அழகா தெரியறதால...-:)//

ஹாஹா! ரெண்டாவதா சொன்ன காரணம்தான் மிக முக்கியமானது நண்பரே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Raazi said...

அழகாக சொல்லியிருக்கிங்க,, சேட்டை..கத்ரினா கைப்புக்காக பார்ப்போம்..//

கத்ரீனா ஹாங்க்-ஓவர் தீராமலே எழுதின விமர்சனமாச்சே! :-))
அவசியம் நீங்களும் பாருங்க! மிக்க நன்றி! :-)

//அமைதிச்சாரல் said...

படமும் பரவாயில்லாம இருக்கும்ன்னுதான் தோணுது.//

மெய்யாலுமே பரவாயில்லாமத் தானிருக்குது.

//'தேரே பின் லேடன்' படத்தில் கதாநாயகனாய் நடிச்சவர்தான் இந்த 'அலி ஜாபர்'//

ஓஹோ! அந்தப் படம் பார்க்கலே! எப்பவாவது சோனியிலோ, ஜீயிலோ போடாமலா இருக்கப்போறாங்க? மிக்க நன்றி! :-)

//shortfilmindia.com said...

காத்ரீனா ரொம்பத்தான் சுழட்டி அடிச்சிருககா போலருக்கு. - கேபிள் சங்கர்//

இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் கிள்ளிப்பார்த்துக்கினேன். கேபிள் சங்கர் இங்கேயா? நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து கருத்து இட்டதற்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

இன்னும் எதிர்பார்க்கின்றோம் அன்புடன் யானைக்குட்டி//

ஆஹா, பானா ராவன்னாவை மாதிரி யானா ஞாவன்னாவா? வாங்க வாங்க!
மிக்க நன்றி! :-)

//இரா.எட்வின் said...

அப்படியா தோழா//

வாங்க தோழர்! அப்படியே! :-)
மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

மாப்ள விமர்சனம் நல்லா இருக்கு...இன்னும் நம் மக்கள் தொடர்ந்து பல மொழி...முக்கியமா ஹிந்தி கத்துக்கிட்டா எல்லோருக்கும் நல்லது....இது என் தாழ்மையான கருத்து!//

சத்தியமா இந்தி கத்துக்கணும்கிறது எனது கருத்தும்கூட! அது தெரியாம நான் அல்லல்பட்டது கொஞ்சநஞ்சமில்லை! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//கே. பி. ஜனா... said...

பளிச்சிடும் படத்துக்கு பளிச்சென்று உங்கள் விமரிசனம்..//

அதற்குப் பளிச்சென்று உங்களது பின்னூட்டமும்! :-)
மிக்க நன்றி நண்பரே! :-)