Sunday, February 13, 2011

பசு

அதிகாலையில் அந்தப் பசு குறுகிய சாலையின் நட்டநடுப்பில் அக்கடாவென்று படுத்திருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவ்வப்போது சுவரொட்டிகளையும் கிழித்து மெல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில் குப்பைத்தொட்டியருகே, சில சமயங்களில் தெருவிலிருக்கிற அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல்களில், சில சமயங்களில் மளிகைக்கடையருகே என்று அந்தத் தெருவில் அத்தனை பேருக்கும் அந்தப்பசு மிகவும் பரிச்சயமான ஒரு ஜீவனாக உலாவந்து கொண்டிருக்கும். சில தெருக்களுக்கு அங்கு வசிக்கிற மனிதர்கள் மட்டுமன்றி, அங்கே கண்ணில் தட்டுப்படுகிற வாயில்லா ஜீவன்களும் ஒரு அடையாளம் தான் போலும். அவைகளைக்கூட வேறு எங்கேனும் பார்த்தால் ’அட’ என்று ஆச்சரியப்படத்தான் செய்கிறோம்.

இப்போது இரண்டொருநாட்களாக அந்தப் பசு அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் வாசலே கதியாகக் கிடக்கிறது. அங்கிருக்கிற ஏதோ ஒரு வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், இரண்டு பெரிய வாழைமரங்களை ஒரு வண்டியில் ஏற்றிவந்து, போக்குவரத்தை ஒரு பத்து நிமிடம் நிலைகுலைய வைத்துக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது அந்த இரண்டு மரங்களும் அந்தக் குடியிருப்பின் இரும்புக்கதவின் இரண்டு பக்கத்திலும், இரண்டு துவாரபாலகர்களைப் போல நின்று கொண்டிருந்தன. நேற்றுவரை உயிரற்ற கட்டிடமாய்த் தெரிந்த அந்தக் குடியிருப்புக்கே திடீரென்று ஒரு கல்யாணக்களை வந்துவிட்டது போலிருந்தது. போதாக்குறைக்கு வாசலில் சாலையைப் பாதி வளைத்துப் போடப்பட்ட பெரிய பெரிய கோலங்களை, அதிகாலையில் கடக்கிறபோது மிதிக்கவோ அல்லது வண்டியை அதன்மீது செலுத்தவோ சற்று சங்கடமாக இருக்கும். திருமணம் போன்ற சந்தோஷங்களின் போது போடப்படுகிற கோலங்களின் ஒவ்வொரு புள்ளியிலும் அவர்களது மகிழ்ச்சியின் குறியீடுகள் இருக்கும். அந்தக் கோடுகளும், வளைவுகளும் அவர்களது குதூகலத்தின் எளிமையான வெளிப்பாடுகளாயிருக்கும்.

இதுபோல சுபநிகழ்ச்சிகள் நடைபெறுகிறபோது, வீட்டு வாசலில் வாழைமரம் கட்டுவதற்கும் பல காரணங்கள், ஐதீகம் என்ற பெயரில் சொல்லப்படுகின்றன. வாழைமரம் ஒரே ஒரு முறைதான் பூக்குமாம்; ஒரே ஒரு முறைதான் குலைதள்ளுமாம். அது போல திருமணம் என்பதும் வாழ்க்கையில் ஒருமுறைதான் நடக்க வேண்டும் என்பதைக் குறிப்பால் அறிவிக்கவே வாழைமரம் வாசலில் கட்டப்படுகிறதாம். இன்னும் சிலர், வாழைத்தண்டு கருநாகத்தின் விஷத்தையும் கூட முறித்துவிடும் என்று சொல்கிறார்கள். அதைப்போலவே, வாழ்க்கையில் தீயதென்றும், கொடியவிஷமென்றும் சொல்லப்படுகிற சங்கதிகளை முறித்து, சுத்தமாக இருப்பதை வலியுறுத்தவே வாழைமரம் என்றும் சொல்வதுண்டு. வாழைமரத்தின் அடியில் வாழை முளைத்து எழுவது போல, வாழையடி வாழையாக வம்சவிருத்தி ஏற்பட்டு வாழ வேண்டும் என்று ஆசிகளைத் தெரிவிக்கவே வாழைமரம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் சடங்குகள் என்பதால், இவை இருப்பதாலோ, இல்லாமல் போனாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. குறைந்தபட்சம் வெளியூரிலிருந்து வருகிறவர்களுக்கு இந்த வாழைமரங்கள் ’இதுதான் கல்யாண வீடு,’ என்று காண்பிக்கவாவது முடிகிறதே! நகரங்களில் மனிதர்களால் வழிகாட்ட முடியாமல் போகிற முகவரிகளை சில சமயங்களில் வாழைமரங்களாவது காட்டிவிட்டுப்போகட்டுமே!

யாராக இருந்தாலும் சரி, திருமணமாகப்போகிற அந்தப் பெண்ணும், அவளது குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வீடுநிரம்ப விருந்தாளிகளிருப்பது போல ஒரு மகிழ்ச்சியும் இருக்க முடியுமா? வயோதிகர்கள் தொடங்கி வாண்டுகள் வரைக்கும் எத்தனை குணாதிசயங்களை ஒரே நேரத்தில் காணமுடிகிறது? பழைய நினைவுகளைப் புதுப்பிப்பதற்கும், சற்றே ஆட்டம் கண்ட உறவுகளைப் பலப்படுத்தவும் திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகள் தானே உதவுகின்றன? அந்தமட்டில் அதன் ஆடம்பரங்களை மன்னித்து விடலாம்.

நேற்று மீண்டும் அந்தப் பசுவைப் பார்த்தேன். அந்தக் கதவின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டிருந்த வாழைமரத்தைக் கடித்து மென்று கொண்டிருந்தது. உள்ளேயிருந்து ஓடிவந்த காவலாளி அதை விரட்டுமுன்னரே வாய்நிறைய கடித்து இழுத்து அடைத்துக்கொண்டு அது சாலைக்குள்ளே பின்வாங்கியபோது எனது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து நிறுத்தி, அதன் மீது மோதாமல் தவிர்த்தேன். இரண்டு வாழை மரங்களுமே கீழிருந்து மேலாக பாதி உயரத்துக்கு அந்தப்பசுவாலும் அல்லது அதுபோன்ற பல மாடுகளாலும் மென்று முடித்திருந்ததால், பலவீனமுற்று எப்போது வேண்டுமானலும் ஒடிந்து விழுந்து விடுகிற அபாயம் இருப்பதை கவனித்தேன். ஒரு வேளை அப்படி நேர்ந்தால், அது திருமண வீட்டாரால் அபசகுனமாகவும் கருதப்படுகிற வாய்ப்பிருக்கிறது என்பதும் புரியாமலில்லை. ஆனால், முக்கிய சாலையில் கட்டப்பட்டிருந்த அந்த வாழைமரங்கள் மாடுகளின் பசிக்கு இரையாகாமல் இருக்க என்னதான் செய்ய முடியும்?

நல்ல வேளை, மாலை திரும்பியபோது, யாரோ ஒரு புத்திசாலித்தனம் செய்திருந்தார்கள். வாழைமரத்தின் கீழ்ப்பகுதியில், உரச்சாக்கு ஒன்றை சுற்றி கயிறுபோட்டு மீண்டும் இறுக்கிக் கட்டியிருந்தார்கள். பரவாயில்லையே என்று மனதுக்குள் மெச்சிக்கொண்டு என்வழியே போனேன். மனிதனுக்கு எல்லாப் பிரச்சினைக்கும் எளிமையான தீர்வு தெரிந்திருக்கிறது என்பது சந்தோஷப்படுகிற விஷயம்தானே?

இன்று அதே சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, மீண்டும் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. புதுமணப்பெண்ணும், மாப்பிள்ளையும் உறவினர்களோடு ஒரு சில வாகனங்களில் வந்திருந்ததால், அந்தக் குறுகலான சாலையைக் கடப்பது பொறுமையை சோதிப்பதாக இருந்தது.

பூரிப்பும் பெருமிதமுமாய் அந்த மணப்பெண்ணும், செயற்கையான சிரிப்பும், சற்றே ஆயாசமுமாய் அந்த மணமகனும் வாசலில் நின்றிருக்க, பெண்கள் ஆரத்தி எடுத்துக்கொண்டிருந்தனர். தற்செயலாக எனது கண்கள் அந்த வாழைமரங்களைப் பார்வையிட்டபோது, அதில் கட்டப்பட்டிருந்த உரச்சாக்கும் கடிபட்டுச் சேதமுற்றிருந்ததையும் கவனிக்க முடிந்தது. நல்ல வேளை, திருமணம் முடிகிற வரையிலுமாவது அந்த மரங்கள் தாக்குப்பிடித்திருக்கின்றனவே என்று எண்ணிக்கொண்டு கடக்க முயன்றபோது, எதிர்ப்பக்கத்தில் அந்தப் பசுவைப் பார்த்தேன்.

அது, வாயிலிருந்து நுரை தள்ளியவாறு, தனது கடைசிக்கணங்களுடன் போராடியவாறு அரைமயக்கத்தில் கிடந்தது.

36 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்தோம்ல! எப்புடி?

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத ஆளா வந்தோம்ல! எப்புடி?

ம்ம்ம்ம். பாவம் பசு!

இதையும் படிங்க:
இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

பொன் மாலை பொழுது said...

கடைசியில் சொல்லியதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. புத்திசாலிதனமாய் கட்டி வைத்த (பிளாஸ்டிக் ) உர சாக்கையும் தின்று விட்டு அந்த பசு சாக கிடப்பது மனதை நோக செய்கிறது.
நம்மை, மனிதர்களை தவிர வேறு யாரும் எந்த ஜீவனும் வசிக்க லாயக்கற்ற நிலமா இது? ஆனால் இவர்கள் தான் பசுவை சகல தெய்வங்களும் குடி கொண்ட கோவிலாக எண்ணி அதனை பூசித்து அதன் கோமியம் புனிதம் என்று வேதம் பேசுவார்கள்.

Philosophy Prabhakaran said...

நெகிழ வைக்கும் கதை... அப்படியே கதையின் ஓட்டத்தில் சொன்ன மெசேஜஸ் சூப்பர்...

எல் கே said...

என்னா சொல்ல ??

மங்குனி அமைச்சர் said...

காங்ரீட் காடுகள்

வெங்கட் நாகராஜ் said...

இன்னும் எத்தனை எத்தனை இழப்புகள் இந்த பிளாஸ்டிக் அசுரனால்! சிந்திக்க வைத்த நல்ல பகிர்வு. நன்றி சேட்டை ஐயா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.., எதிர்பாராத நாளில் எதிர்பாராத சப்ஜெக்டில் வித்தியாசமான அனுபவ பதிவு

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு அந்த கடைசி வரிகள் மனசை கனக்க வைத்து விட்டது....

சிநேகிதன் அக்பர் said...

//திருமணம் போன்ற சந்தோஷங்களின் போது போடப்படுகிற கோலங்களின் ஒவ்வொரு புள்ளியிலும் அவர்களது மகிழ்ச்சியின் குறியீடுகள் இருக்கும். அந்தக் கோடுகளும், வளைவுகளும் அவர்களது குதூகலத்தின் எளிமையான வெளிப்பாடுகளாயிருக்கும்.//

class

மனதை பாதித்தது.

சக்தி கல்வி மையம் said...

கதையின் ஓட்டத்தில் சொன்ன மெசேஜஸ் சூப்பர்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான சமூக விழிப்புணர்வைத் தூண்டிவிடும் பதிவு.
சொன்ன விதம் மிகவும் நகைச்சுவையாக விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் பாவம் அந்த பசு. பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Pranavam Ravikumar said...

Good one!

சேலம் தேவா said...

கொடுமை..!! பிளாஸ்டிக்கிற்கு மாற்றே கிடையாதா..?!

Sivakumar said...

நகரத்தின் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு பல பசுக்கள் வயிற்று வழியால் துன்பப்படுவதும் கொடுமையாக உள்ளது!

Unknown said...

எதோ மொக்கைக்கு அடி போடுகிரிர்கள் என்று பார்த்தல் மெசேஜ் அல்லவா இது

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

மொத ஆளா வந்தோம்ல! எப்புடி?//

ஹிஹி! வாங்க வாங்க! :-)

ம்ம்ம்ம். பாவம் பசு!//

ஆமாமுங்க, ரொம்ப நன்றி! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

கடைசியில் சொல்லியதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. புத்திசாலிதனமாய் கட்டி வைத்த (பிளாஸ்டிக் ) உர சாக்கையும் தின்று விட்டு அந்த பசு சாக கிடப்பது மனதை நோக செய்கிறது.//

இதை கண்கூடாகப் பார்த்ததும், எனக்கு ஏற்பட்ட மனவேதனை சொல்லிமாளாது நண்பரே!

//நம்மை, மனிதர்களை தவிர வேறு யாரும் எந்த ஜீவனும் வசிக்க லாயக்கற்ற நிலமா இது?//

மனிதர்கள் மட்டும் என்ன உசத்தி? :-((

//ஆனால் இவர்கள் தான் பசுவை சகல தெய்வங்களும் குடி கொண்ட கோவிலாக எண்ணி அதனை பூசித்து அதன் கோமியம் புனிதம் என்று வேதம் பேசுவார்கள்.//

உண்மையே! ஆனால், இப்படி பால்கொடுக்கிற பசுவை அசட்டையாக வெளியே திரிய விடுகிற அதன் சொந்தக்காரர்களின் பொறுப்பின்மையை என்னவென்று சொல்ல? சாகக்கொடுக்கவா வளர்க்கிறார்கள்?

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

நெகிழ வைக்கும் கதை... அப்படியே கதையின் ஓட்டத்தில் சொன்ன மெசேஜஸ் சூப்பர்...//

புதுசா எதுவும் இல்லியே, எல்லாருக்கும் தெரிந்ததுதான். சம்பவத்துக்குத் தொடர்பிருந்ததால் எழுதினேன். மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//எல் கே said...

என்னா சொல்ல ??//

அதுவும் சரிதான்! நன்றி கார்த்தி!

settaikkaran said...

//மங்குனி அமைச்சர் said...

காங்ரீட் காடுகள்//

சரியாகச் சொன்னீர்கள் மங்குனி! நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

இன்னும் எத்தனை எத்தனை இழப்புகள் இந்த பிளாஸ்டிக் அசுரனால்! சிந்திக்க வைத்த நல்ல பகிர்வு. நன்றி சேட்டை ஐயா.//

சில ஊர்களில் கண்டிப்பாய் தடை செய்திருக்கிறார்கள். இது பரவ வேண்டும்.
மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//மாத்தி யோசி said...

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )//

நிதானமாக வாங்க நண்பரே! எங்கே போய்விடப்போகிறது இடுகை! நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.., எதிர்பாராத நாளில் எதிர்பாராத சப்ஜெக்டில் வித்தியாசமான அனுபவ பதிவு//

பார்த்ததும் எழுதிவிடலாம் என்று தோணிச்சு தல. அதான் தாமதம் பண்ணாம எழுதிட்டேன். மிக்க நன்றி!

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு அந்த கடைசி வரிகள் மனசை கனக்க வைத்து விட்டது....//

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

class மனதை பாதித்தது.//

மிக்க நன்றி அண்ணே!

settaikkaran said...

//sakthistudycentre-கருன் said...

கதையின் ஓட்டத்தில் சொன்ன மெசேஜஸ் சூப்பர்...//

கதையல்ல; நிஜ சம்பவம் நண்பரே! மிக்க நன்றி!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான சமூக விழிப்புணர்வைத் தூண்டிவிடும் பதிவு. சொன்ன விதம் மிகவும் நகைச்சுவையாக விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் பாவம் அந்த பசு. பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.//

விழிப்புணர்வு நோக்கமெல்லாம் பெரிதாக இல்லையென்றாலும், மனதை மிகவும் பாதித்த சம்பவம் என்பதால் எழுதினேன். மிக்க நன்றி!

settaikkaran said...

//Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good one!//

மிக்க நன்றி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

கொடுமை..!! பிளாஸ்டிக்கிற்கு மாற்றே கிடையாதா..?!//

தெரியவில்லை நண்பா, ஆனால், இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் விளைவுகள் இவ்வளவு அபாயகரமாய் இருக்காது என்று தோன்றுகிறது. மிக்க நன்றி!

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

நகரத்தின் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு பல பசுக்கள் வயிற்று வழியால் துன்பப்படுவதும் கொடுமையாக உள்ளது!//

பசுக்கள் மட்டுமா? ஆடுகளும் கூட! இதுதவிர பாதாளச்சாக்கடைகள் அடைபட்டு மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் இதுவும் ஒரு காரணமாம்.

//எதோ மொக்கைக்கு அடி போடுகிரிர்கள் என்று பார்த்தல் மெசேஜ் அல்லவா இது//

அப்பப்போ, இது மாதிரி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். இது மெஸேஜ் என்பதை விடவும், பாதித்த ஒரு நிகழ்வு! மிக்க நன்றி!

கே. பி. ஜனா... said...

மனதைக் கனக்க வைத்தது, ரொம்ப நேரத்துக்கு மீள முடியாமல்! அந்தப் பசுவின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்! நீங்கள் எழுதியிருக்கும் விதமும் மிக அருமை!

settaikkaran said...

//கே. பி. ஜனா... said...

மனதைக் கனக்க வைத்தது, ரொம்ப நேரத்துக்கு மீள முடியாமல்! அந்தப் பசுவின் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்! நீங்கள் எழுதியிருக்கும் விதமும் மிக அருமை!//

மிக்க நன்றி! நம்மைச் சுற்றி நிகழ்வதை எழுதுவது சுலபம் என்பதோடு, இயல்பாகவே அதில் ஈடுபாடும் வருவதால் தான் எழுதினேன். உங்களைக் கவர்ந்திருப்பதில் மகிழ்ச்சி!

மாதேவி said...

நல்ல சம்பவத்தைச் சொல்லி விழிக்க வைத்துள்ளீர்கள்.

settaikkaran said...

//மாதேவி said...

நல்ல சம்பவத்தைச் சொல்லி விழிக்க வைத்துள்ளீர்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!