Wednesday, November 24, 2010

இங்கே துப்பாதீர்கள்!


பீகார்! இந்தியாவின் ஏனைய பகுதியினரின் ஏளனத்துக்கும் அலட்சியத்துக்கும் எப்போதும் இலக்காகிற பீஹார்! சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று வேளச்சேரி நிலையத்திலிருந்து கடற்கரைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டபோது சென்னை நகரத்தில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு முளைத்து அடர்ந்து படரத்தொடங்கியிருக்கிற முரண்பாடுகளைக் கண்கூடாகப் பார்க்க நேரிட்டது.

பெருங்குடி, தரமணி, திருவான்மியூர் என ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், தமிழில் பேசுவது பஞ்சமாபாதகம் என்பது போல நுனிநாக்கு ஆங்கிலமும், ஆடம்பரமான அலைபேசிகளும், அலட்சியமான உடைகளுமாக ஏறிய பன்னாட்டு நிறுவனங்களின் நவயுகக் கொத்தடிமைகள்!

அவர்களுடன் அலைபேசியின் பண்பலைகளை அலறவிட்டபடி ’டோச்சே..டொரிகிண்டி டோச்சே...அந்தமைன நிதிடோச்சே’ என்று ரஹ்மானின் தெலுங்குப்புயலில் தலையாட்டியபடி வந்து கொண்டிருந்தவர்களும் உடன் ஏறிக்கொண்டிருந்தனர்.

இவர்களுக்கும், ஏனைய சென்னைவாசிகளுக்கும் சற்றும் தொடர்பில்லாமல், செம்பட்டைத் தலைகளுடனும், புகையிலை குதப்புகிற வாய்களுமாய், முடைநாற்றமடிக்கிற உடைகளோடு கூட்டம் கூட்டமாக ஏறிக்கொண்டு உடன்வந்த பீகாரிகள்!

திருமயிலை நிலையம் வரைக்கும் ரயில் நிலையங்களில், இருபுறங்களிலும் சுவர்களில் பான்-பராக், புகையிலை மென்று குதப்பித் துப்பிய கறைகள், சென்னையில் கட்டிடவேலைகள் பெருமளவு நடக்குமிடங்களிலெல்லாம் சாரிசாரியாய் வந்து குடியேறத்தொடங்கியிருக்கும் பீகாரிகளின் எண்ணிக்கையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க.....


"மும்பையைக் கெடுத்தது போதாதுன்னு இங்கேயும் வந்திட்டானுங்க! சே!"

"என்ன பண்ணுவாங்க சார்? அது ஒரு உருப்படாத ஸ்டேட்! சோத்துக்கு வழியில்லேன்னா வெளியே போய்த்தானே தீரணும்?"


"இந்த ஆறுமாசமா ரொம்ப அதிகமாயிருக்கு சார்! கன்ஸ்ட்ரக்சன் தொடங்கி டீக்கடை வரைக்கும் பத்தடிக்கு ஒரு பீகார்க்காரன் இருக்கான்!"


"அதுக்கென்ன பண்ண? நம்மாளு நாளைக்கு மூன்னூறு ரூபாய் கூலி கேட்குறான். அஞ்சு மணியாயிடுச்சுன்னா ஆபீசர் மாதிரி கிளம்பிடுவான். சம்பளத்தை வாங்கினான்னா நாலு நாளு ஆளையே பார்க்க முடியாது. கமல், ரஜினி சினிமா ரிலீஸ் ஆனா லீவு போட்டிருவான். தண்ணியடிச்சிட்டு மேஸ்திரி கூட சண்டை போடுவான். ஏதாவது சொன்னா, வட்டம் மாவட்டமுன்னு எவனாச்சும் ரவுடியைக் கூட்டிக்கிட்டு வந்து வேலையை நிறுத்துவான். இந்த பீகார்ப்பசங்க அப்படியா? நூறு நூத்தி இருபத்தஞ்சு ரூபா கூலியும், ஒரு வேளை சோறும் போட்டா, எருமை மாடு மாதிரி உழைக்கிறான். ஏழு மணிவரைக்கும் வேலை பார்க்கிறான். ஓவர்டைம் தர்றேன்னு சொன்னா, ராப்பூரா வேலை பார்க்க தயாராயிருக்கான். இவனுங்க நிறைய பேரு வந்து, நம்மாளுங்களுக்கு வேலை கிடைக்காமத் திண்டாடினாத் தான் புத்திவரும்!"


என் முதுகுக்குப் பின்னால் நடந்துகொண்டிருந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

எனக்கு முன்னால், கழுத்தில் பரமசிவன் டாலர் தொங்கிய கறுப்புக்கயிறணிந்து கொண்டிருந்த அந்த பீகார்க்கார இளைஞன் ஒவ்வொரு நிலையம் வந்தபோதும், ஜன்னல் வழியே பிளாட்பாரத்தில் துப்பிக்கொண்டே வந்தான். அசல் சென்னைவாசியாய் லட்சணமாய், நான் எழுந்து போய் எதிர்ப்பக்கத்தில் காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

அந்தப் பயணம் முடிந்து பலமணி நேரங்கள், அந்த பீகாரி இளைஞன் துப்பிக்கொண்டிருந்ததையும், இரயில் நிலையங்களின் கறைபடிந்த சுவர்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருந்ததும் இப்போது நினைவுக்கு வந்தது.
ஆனால், இன்று.....! வன்முறை, சாதிக்கொடுமை, தீவிரவாதம் என பல கொடுநோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் பீகார் என்ற மாநிலம், ஜனநாயகத்தின் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

’இது தேறாது!" என்று கழித்துக்கட்டப்பட்ட ஒரு மாநிலம், பண்பலம், அடக்குமுறை, குடும்ப அரசியல், மதச்சார்பு என்ற பல்வேறு ஆயுதங்களை மழுங்கடித்து, சுரண்டியவர்களையெல்லாம் துரத்தியடித்திருக்கிறது.

அதைக்காட்டிலும்.....


"நிதிஷ்குமாருக்கு எனது பாராட்டுகள்! எனது நல்வாழ்த்துகள்! இவ்வளவு மோசமான தோல்வியை ஏன் அடைந்தோம் என்று நாங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது,’ என்று தொலைக்காட்சியில் ஒப்புக்கொண்ட லாலு பிரசாத் யாதவ்.


"எங்கள் கட்சியை இனி துவக்கநிலையிலிருந்துதான் பீகாரில் மேம்படுத்த வேண்டும் போலிருக்கிறது,’ என்று மென்றுவிழுங்காமல், மழுப்பாமல் தோல்வியை ஏற்றுக்கொண்ட திருமதி.சோனியா காந்தி.


இந்தத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து அம்மாநில அளவிலும் சரி, தேசீய அளவிலும் சரி, தலைவர்கள் வெளிப்படுத்துகிற நாகரீகமான கருத்துக்களும், ’இந்த தேசம் உருப்படுமா?’ என்று தொடர்ந்து எழும் கேள்வியின் வேகத்தைச் சற்றே கட்டுப்படுத்தியிருக்கிறது.


இலவசமாய் எதையோ தருகிறேன் என்று எந்தக் கட்சியும் பிரசாரம் செய்யவில்லை! தோல்வியுற்ற பிறகு, கள்ள ஓட்டுப்போட்டு ஜெயித்து விட்டார்கள் என்று அழுகுண்ணியடிக்கவில்லை. ஜனநாயகத்தைப் பணநாயகம் வென்றுவிட்டது என்று மக்களின் தீர்ப்பை யாரும் கொச்சைப்படுத்தவில்லை.

இவையெல்லாவற்றையும் விட, வாக்குப்பதிவு நடைபெறும் இடமொன்றில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தும் மக்கள் பெருவாரியாக வாக்களித்து தங்களது அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.


திடீரென்று பீகாரையும், பீகார்க்காரர்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது. இனி ஒவ்வொரு முறை, பான்பராக் துப்பிய கறையைப் பார்த்தாலும், எனக்கு பீகார் மக்களின் நம்பிக்கை நினைவுக்கு வரும்.

அத்துடன், இந்தச் சுவர்களை சுத்தப்படுத்துவது பற்றி நம்மூரில் யாரும் கவலைப்படப்போவதில்லை என்பதிலும் மாற்றமில்லை என்பதால், இனி சென்னையில் இருக்கும்போதெல்லாம் பீகாரிகளைப் பற்றியே அதிகம் யோசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

12 comments:

Unknown said...

பீகாரின் நல்ல பக்கம்.....அருமை.

Philosophy Prabhakaran said...

// அதுக்கென்ன பண்ண? நம்மாளு நாளைக்கு மூன்னூறு ரூபாய் கூலி கேட்குறான். அஞ்சு மணியாயிடுச்சுன்னா ஆபீசர் மாதிரி கிளம்பிடுவான். சம்பளத்தை வாங்கினான்னா நாலு நாளு ஆளையே பார்க்க முடியாது. கமல், ரஜினி சினிமா ரிலீஸ் ஆனா லீவு போட்டிருவான். தண்ணியடிச்சிட்டு மேஸ்திரி கூட சண்டை போடுவான். ஏதாவது சொன்னா, வட்டம் மாவட்டமுன்னு எவனாச்சும் ரவுடியைக் கூட்டிக்கிட்டு வந்து வேலையை நிறுத்துவான். //
இந்த பத்தி அருமை...

பீகார் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்... அப்படி என்ன பாசம்...?

சென்னையில் தான் இருக்கிறீர்கள் என்றால் ஏன் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

திடீரென்று பீகாரையும், பீகார்க்காரர்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது. இனி ஒவ்வொரு முறை, பான்பராக் துப்பிய கறையைப் பார்த்தாலும், எனக்கு பீகார் மக்களின் நம்பிக்கை நினைவுக்கு வரும்.
//

நச்...

Chitra said...

திடீரென்று பீகாரையும், பீகார்க்காரர்களையும் எனக்குப் பிடித்திருக்கிறது. இனி ஒவ்வொரு முறை, பான்பராக் துப்பிய கறையைப் பார்த்தாலும், எனக்கு பீகார் மக்களின் நம்பிக்கை நினைவுக்கு வரும்.


.... Royal Salute!

Riyas said...

ம்ம்ம் நல்லதொரு பதிவு.. சேடடை

Unknown said...

nammidamum marram varum

பிரபாகர் said...

ஏற்கனவே வைத்திருந்த முடிவினை மாற்றிக்கொண்டு பீகார் மக்கள்தான் உண்மையில் புத்திசாலிகள் என எண்ணினேன் நண்பா!...

மனவோட்டத்தை தாங்களும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...

பிரபாகர்...

துமிழ் said...

பீகார் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்... அப்படி என்ன பாசம்...?

good doubt

vasu balaji said...

:))

Anonymous said...

பீகார் பற்றிய பதிவு அருமை

மங்குனி அமைச்சர் said...

சேட்ட நல்ல பதிவு ........ நமக்குதான் திருந்தக்கூட வாய்ப்பு இல்லையே ??? எல்லாரும் திருட்டுபசங்க ......யாருக்கு ஓட்டுப்போடுறது ??

அருள் said...

பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_25.html