Saturday, October 2, 2010

ஆகட்டும் பார்க்கலாம்

திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கிற பெருந்தலைவர் காமராஜ் நினைவு இல்லத்தை, சென்னையில் குப்பை கொட்டத்தொடங்கிய இத்தனை வருடங்களில் இது வரை எத்தனை முறை கடந்து சென்றிருப்பேன்? நினைவில்லை...!

சென்றமாதம் மட்டும்...? குறைந்தபட்சம் நான்கு முறை கடந்து சென்றிருப்பேன். இதில் ஓரிரு முறை பக்கவாட்டில் திரும்பி அந்தக் கட்டிடத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு, பசுல்லா சாலையை நோக்கி விரைந்திருக்கிறேன்.

"ஒரு நாள் உள்ளே போய்ப்பார்க்க வேண்டும்," என்ற ஆசை ’காமராஜர்’ படத்தைப் பார்த்தபிறகே ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால், அதன்பிறகு கணக்கற்ற முறைகள் அந்தக் கட்டிடத்தைக் கடந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நிறுத்தாமல் போனதற்கு, குறிப்பிடும்படியாக எந்தக் காரணங்களும் இருந்ததில்லை.

எனக்குப் பிடித்த உணவகத்துக்குப் போகவோ, எனக்கு விருப்பமான திரைப்படம் பார்க்கவோ, எனது சினேகிதர்களைச் சந்திக்கவோ எப்போதாவது சால்ஜாப்பு சொல்லியிருக்கிறேனா என்றால் இல்லை!

ஆனால், பல முறை என் கண்ணில் பட்டு, இன்றளவிலும் பலமுறை படுகிற அந்தக் கட்டிடத்துக்குள் ஒரு முறை நுழைந்து, நமது கடந்தகாலத்தின் பிம்பமாக வாழ்ந்து மறைந்த ஒரு மாபெரும் தலைவரின் நினைவுச்சின்னங்களைப் பார்த்தேனும், எளிமையை எளிமையாகவே கற்றுக்கொள்ளுகிற ஆர்வம் என்னைத் தொற்றிக்கொள்ள மாட்டேன் என்கிறதே!

ஒரு மகானின் பிறந்த தினத்தன்று, இன்னொரு மக்கள் தலைவன் ’விளக்கை அணைத்துப் போ!’ என்று தனது இறுதிக்கட்டளையைப் பிறப்பித்து விட்டு மறைந்திருக்கிறார். அவரை வரலாற்றின் வெளிச்சம் வரவேற்று தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டது. இப்போது பளிச்சிடும் பகட்டான அரசியல் வெளிச்சத்தினால் கண்கள் கூசிக் கூசி, இருக்க இடமின்றி எங்கோ ஒரு கட்டிடத்திலோ அன்றி ஒரு சமாதியிலோ அமைதிகாத்துக்கொண்டிருக்கிற எளிமையைப் பார்த்தும் பாராமல் பயணத்தைத் தொடர்கின்றன.

பெருந்தலைவர்கள் குறித்துப் பேசுவதற்கும் தர்மசங்கடமாயிருக்கிறது. எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பாமல் இன்னும் கடந்தகாலத்தையே கடப்பாரையால் தோண்டிக்கொண்டிருக்கிறவர்கள் பெருகிவிட்ட சூழலில் ’இவர் ஓர் மாமனிதர்’ என்று சொல்வதற்கும் நிரம்ப யோசிக்க வேண்டியிருக்கிறது.

கனியிருப்பக் காய்கவரும் திறனை மட்டுமே மூலதனமாய் வைத்துப் பரபரப்பு ஒன்றையே குறிக்கோளாக்கி விட்ட சிலரின் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடுகளைக் காணும்போது, இவர்களை மறத்தல் அல்லது மறக்க முயல்தலே இன்றைய சூழலில் சாலச்சிறந்தது என்று எண்ணத்தோன்றுகிறது.

பலரது நிகழ்காலத்தின் அன்றாட முரண்பாடுகளை நியாப்படுத்துவதற்காக, கடந்தகாலத்தின் கல்லறைகளைத் தோண்டி சடலங்களின் எலும்புகளை வைத்து சர்ச்சை செய்பவர்கள் மத்தியில், சரித்திரம் பற்றிப் பேசுவதும் பிழையாயிருக்குமோ என்ற சஞ்சலம் ஏற்பட்டு விட்டது.

ஒரு வகையில் இன்னும் நான் அந்தக் கட்டிடத்துக்குள் செல்லாமல் இருப்பது நல்லதே! இனியும் ஒவ்வொரு முறையும் அதைக் கடக்கையில் ’ஒரு முறை பார்க்க வேண்டும்,’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வளைவில் திரும்பியதும் மறந்து விடுவதே நல்லது! இந்த ஆவல் ஒன்றாவது ஒவ்வொரு முறையும் நமது தற்காலிகப் பயணங்களில் தலைதூக்கினால் போதாதா?

காந்தியோ, காமராஜோ - அவர்களது நினைவிடங்களுக்குள் நுழைகிற அருகதை பெற நான் எதையேனும் செய்தாக வேண்டும். குறைந்தபட்சம்....

திருமலைப்பிள்ளை சாலையில், பட்டப்பகலில் கூச்சமின்றி இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொண்டிருந்த நம் குடிமகனை ஒரு வார்த்தை தட்டிக்கேட்டிருந்தால் கூட எனக்கு அந்த தார்மீக உரிமை கிடைத்திருக்கும். அதுவும் செய்யத் திராணியன்றி, என்னைச் சுற்றியிருப்பவர்களை விமர்சிப்பதோடு என் கடமை முடிந்தது என்று எண்ணி, சோற்றுவேட்டையைத் தொடரும்வரையிலும்....

’ஒரு முறை உள்ளே சென்று பார்க்க வேண்டும்,’ என்ற ஆசை மட்டும் என்னுடன் தொடர்ந்து வரும்; வர வேண்டும்.

22 comments:

Unknown said...

//காந்தியோ, காமராஜோ - அவர்களது நினைவிடங்களுக்குள் நுழைகிற அருகதை பெற நான் எதையேனும் செய்தாக வேண்டும். //

நல்ல சிந்தனை. 'ஏதாவது' செய்ய வாழ்த்துக்கள்!!

Unknown said...

v nice..thanks. u r thinking like me..thanks again...

Mahi_Granny said...

a good thought really. i love allrounder settaikkaaran

என்னது நானு யாரா? said...

சேட்டையாரே! உங்க வாழ்க்கையில ஒரு சில முறையாவது இரத்த தானம் செய்திருக்கீங்களா?

புகை, மது மாதுன்னு இல்லாம நல்ல மனுஷனா இருக்கீங்களா?

லஞ்சம் வாங்கிற சூழ்நிலையில இருந்தாலும் லஞ்சம் வாங்காத உத்தமரா இருக்கீங்களா?

இந்த தகுதிகள் போதுங்க நீங்க காமராஜர் இல்லத்தில நுழையறதுக்கு. நம்மால என்ன முடியுமோ அந்த நல்லவைகளை மட்டும் செய்தா போதுமுங்க.

இதோ இப்போ காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் கொடுக்கிறதுக்கு கிளம்பிட்டு இருக்கேன். இது போதுங்க. இந்த ஆதம் திருப்தி போதுங்க. நீங்க் தைரியமா அவரோட இல்லத்தில நுழையுங்க.

பிரபாகர் said...

கண்டிப்பாய் சேட்டை நண்பா!...

நினைக்கவாவது வேண்டும்.

பிரபாகர்...

பொன் மாலை பொழுது said...

1967 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திருமலை பிள்ளை சாலையில் இருந்த இந்த காமராஜரின் வீட்டை படம் பிடித்து
போஸ்டரில் போட்டு "ஏழை பங்காளரின் பங்களாவை பாருங்கள் " என்று நாடு முழுவதும் ஒட்டி கேவலப்படுத்தினார்கள் தி.மு.க. காரர்கள். ஆனால் இன்று அவர்கள் உள்ள நிலையோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை. கட்சி வேறுபாடு இன்றி எல்லோருக்கும் பத்து கிரவுண்டில் பெரிய அரண்மனை போன்ற வீடுகள் சகல வசதிகளுடன்.

velji said...

நியாயமான ஆதங்கம்!

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஆதங்கமும் இல்லை. நாம் ஆதங்கப்பட்டு வெளியில் சுற்ற ஆரம்பித்தால் தலைவர்களின் இல்லங்களும் மறக்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது!

கலகலப்ரியா said...

ம்ம்... பதிகிறது மனதில்...

Anonymous said...

காமராஜர் பற்றி அருமையான பதிவு..
தலைவா கேட்ஜட் அருமை..நானும் வைத்துக்கொண்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

good post annae, the lines touches my heart are

>>>>
பலரது நிகழ்காலத்தின் அன்றாட முரண்பாடுகளை நியாப்படுத்துவதற்காக, கடந்தகாலத்தின் கல்லறைகளைத் தோண்டி சடலங்களின் எலும்புகளை வைத்து சர்ச்சை செய்பவர்கள் மத்தியில், சரித்திரம் பற்றிப் பேசுவதும் பிழையாயிருக்குமோ என்ற சஞ்சலம் ஏற்பட்டு விட்டது.<<<<<


wonderfull

முகுந்த்; Amma said...

good one, you have all rights to enter into the Kamarajar house.

Gandhi Jayanthi wishes.

vasu balaji said...

ஆமாம் சேட்டை. மாசம் ஒரு முறையாவது கடந்து போவேன். ஒரு வேளை ஒருத்தருமே இல்லாததால தெரியாத வீட்டில நுழையிற தயக்கமோ. :(

ரிஷபன் said...

அவரைப் பிழைக்கத் தெரியாத மனிதர் லிஸ்ட்டில் சேர்த்து ரொம்ப நாளாச்சு..

கோமதி அரசு said...

அருமையான தலைவரைப் பற்றி அருமையாக எழுதிவிட்டீர்கள்.

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

NaSo said...

சேட்டை நமக்காவது அவர் யாரெனத் தெரிந்தது. இப்போதுள்ள வரலாற்று பாடத்தில் காமராஜர் பெயராவது உள்ளதா எனத் தெரியவில்லை!!

Anisha Yunus said...

நல்ல பதிவு. நல்ல எண்ணம். காமராஜர் ஏழைகளுக்காகவும், கல்விக்காகவும் நிறைய பாடுபட்டுள்ளார். அதே பாதையிலும் செய்யலாம் இல்லை, வேறென்ன வழி கிடைக்கிறதோ அதிலும் செய்யலாம். சிந்தனை, முயற்சியாகி, நல்விதமாய் முடிவு பெற வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

அன்புள்ள ராகவன்...

மனசு கசிய வைத்த பதிவு. காமாராஜர் நினைவிடத்திற்கு செல்லமுடியாத உறுத்தல் சரியானதே. ஆனால் நாம் அந்த உறுத்தலர்ல் கவலை கொள்ளவேண்டியதில்லை. அவரை நினைப்பதன் வழியாகவே இன்றைய அயோக்கியர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது. பெற்ற தாயைத் தெருவில் தண்ணீர்பிடித்துக்கொள்ள குடிநீர் இணைப்பைத் துண்டிக்கச் சொன்னவர். இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எல்லாம் இருக்கும் ஆனால் அவர்களுக்கு யாருக்கும் காமராசரின் தகுதி ஒருபோதும் இல்லை. தவிரவும் கடைசிவரை அவர்கள் மனிதப் பட்டியலில் வரப்போவதும் இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் வழிவழி வாரிசுகளுக்கும் எப்பிறவிக்கும் மனித அடையாளம் இல்லை. வள்ளுவர் சொன்னதுபோல் மக்களே போல்வர் கயவர். நாம் மானசீகமாக காமராசரின் நினைவிடத்திற்குள் போகலாம். நமக்கு மட்டுமே அந்த தகுதி முழுமையாக இருக்கிறது. சென்று வணங்கி வாருங்கள் அந்த மனித தெய்வத்தை. உறரணி

Unknown said...

பதிவு நல்லா இருக்கு.
நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்!!

Anonymous said...

சேட்டை இல்லாத பதிவு.
இருந்தாலும் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

நல்ல மனிதரைப் பற்றி நல்லதொரு பதிவு. 'என்னது நான் யாரா' கமெண்ட் ஆமோதிக்க வைக்கிறது.

Radhakrishnan said...

மனிதாபிமானம் உள்ளவர்களுக்குத்தான் இந்த பூமி என இருந்தால் பலர் மரிக்க வேண்டிவரும்.

ஒரு நல்ல தகுதி இல்லாதபோது அதை வளர்ப்பது நல்லது.

நல்ல பதிவு.