Sunday, July 25, 2010

ஒரே கணம்

இத்தனை நாட்களாக ஒவ்வொரு தினமும் தேடிச் சலித்த அந்த ஒரு கணம் அனேகமாக அன்று வந்தே விட்டது போலிருந்தது அவனுக்கு. இதுகுறித்து பல நாட்களாய்த் திட்டமிட்டும், தைரியத்துக்கும் கோழைத்தனத்துக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தான் அவன். இப்போது, அவனுக்குள் தைரியம் வலுத்திருந்தது - சாவதற்கு!

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக்கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றைத் துருத்தியை சோறிடும் தோற்பையைப் பேசரிய
காற்றுப் பொதிந்த பாண்டத்தைக் காதலினால்
ஏற்றுத் திரிந்துவிட்டேன் இறைவா...............................................

இடம் கூடத் தேர்ந்தெடுத்து விட்டான்! எழும்பூரிலிருந்து கிளம்பியதும் மின்சார ரயில் உற்சாகமாக சேத்துப்பட்டு வரை அதிவேகத்தில் செல்லும். வலதுபக்கக் கதவில் நின்று கொண்டு, எதிரே ரயில் வருகிறதா என்று பார்த்து, கண்களை இறுக்க மூடிக்கொண்டு குதித்து விட வேண்டியது தான்!

அம்மா! வந்து விட்டேன்!

வலிக்குமோ என்று முன்பிருந்த பயம் அன்று அவனுக்கில்லை. அதிகபட்சம் ஒரு நொடிப்பொழுதுதான். தலையிலோ கழுத்திலோ ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வருகிற ரயிலின் அந்த கனத்த சக்கரம் ஏறி இறங்குகிற ஒரு நொடி மட்டும் வலியைப் பொறுத்துக்கொண்டால் போதும். அவ்வளவு தான்! எத்தனை தடவை காய்ச்சலின் போது ஊசி போட்டுக் கொண்டிருக்கிறோம்? அது போல சுருக்கென்று அந்த ஒரு கணப்பொழுது மட்டும் வலிக்கலாம். அதன் பிறகு, எதுவும் இருக்காது! அவமானம், தன்னிரக்கம், கோபம், பயம், பசி, தாகம், ஏமாற்றம், கயமை, காமம் எல்லாவற்றிற்கும் இரத்தப்பொட்டு வைத்து வழியனுப்பி விடலாம்.

எதுவும் துரத்தாது! எல்லாரும் விரைவில் மறந்து விட நல்ல வழி! ஏற்கனவே மறந்தவர்களுக்கு இறுதியாக ஒருமுறை நினைவூட்டி விட்டு, மீண்டும் அவர்களை மறதியில் ஆழ்த்துகிற வழி! இதனால், அதிகபட்சம் பயணிகளுக்கு சில நிமிடங்கள் தாமதம் ஏற்படுவதன்றி, வேறெந்த இடைஞ்சலோ வேதனையோ ஏற்படப்போவதோ இல்லை! வேண்டாவெறுப்பாக ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிச் செல்லுகிற ரயில்வே ஊழியர்கள் கொஞ்சம் திட்டலாம்! தொலையட்டும்!

இதற்கு முன்னரும் இப்படியெல்லாம் தோன்றியதுண்டு. அப்போதெல்லாம் ஏதாவது சிந்தனைகள் வந்து கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றன. மனம் பெரியதும் சிறியதுமாகப் பல எண்ணக்குழப்பங்களுக்குள்ளே புதைந்து இழுத்துப் போட்டு அமுத்தி விடுகிறது.

காலையில் இஸ்திரிக்காரனிடம் துணி கொடுத்திருக்கிறோமே? வண்டிக்கடன் இன்னும் ஐந்து தவணை பாக்கியிருக்கிறதே! இன்னும் பதினெட்டு நாட்களுக்கு பாஸ் இருக்கிறது. மூர்த்தியிடம் இரவல் வாங்கிய கதாவிலாசம் திருப்பிக் கொடுக்கவில்லை. இன்னும், காரணமா சப்பைக்கட்டா என்று விளங்காத பல வினாக்கள் கொக்கி போட்டு அவனைச் சாவினருகே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், அன்றோ, சின்னச் சின்னக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது விரயம் என்ற ஞானோதயம் வந்தது போலிருந்தது.

ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தபோது தூரத்தில் போய்க்கொண்டிருக்கிறவர்களிடம் விடைபெற்றுக்கொள்வது போலிருந்தது. நாளை இதே இருக்கையில் எவனோ ஒருவன் உட்கார்ந்து கொண்டு, மூன்றுக்கு மூன்று சென்டி மீட்டர் பரப்பில் தனது தற்கொலைச் செய்தியை வாசித்துக் கொண்டிருப்பான் என்று தோன்றியது. ஆபீஸிலிருந்து விளம்பரம் செய்தாலும் செய்வார்கள்! எப்பொழுதோ கையொப்பமிட்ட பச்சை, சிவப்புக்காகிதங்கள் முடுக்கப்பட்டு ஒரு பெரிய தொகை நிரம்பிய காசோலை அரசாங்கத்தின் அழுக்கு உறையில் ஊருக்குப் பயணிக்கும். சற்று நேரம் முன்பு வரை தான் பணிபுரிந்த இருக்கையில் யாரேனும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு வேலைக்கு வரலாம். நண்பர்கள் சேர்ந்து சௌந்திரா அச்சகத்தில் கருப்பில் சுவரொட்டியடித்து சானட்டோரியம் முழுக்க ஒட்டலாம்.

சல்லி சல்லியாய் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிதறு தேங்காய் போல என்னென்னமோ சிந்தனைகள்.....!

வண்டி கோட்டையில் நின்றதும் முண்டியடித்துக் கொண்டு ஏறிய கூட்டம் சற்று கவனத்தைக் கலைத்தது. அவனுக்கருகிலும் எதிரிலும் ஒரு பெரிய குடும்பம் வந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்குழந்தை, சாக்லேட் அப்பிய கன்னங்களும், குதிரைவால் சடையுமாய் அவனோடு உரசி நின்று ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது. மெத்துமெத்தென்று பஞ்சுபோலிருந்த அந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தில் ஒரு கணம் மெய்சிலிர்த்தது.

"ஏய், ஜன்னலைத் தொடாதே; அசிங்கம்!" என்று கடிந்து கொண்டார் குழந்தையின் அப்பா போலிருந்த அந்த நபர்.

"இங்கே வா, அம்மா மடியிலே உக்காச்சி!" என்று அந்தப் பெண்மணி பிடித்து இழுக்க முயன்றார்.

ஜன்னலோரத்தில் உட்காரவேண்டும் என்ற அந்தக் குழந்தையின் சின்ன ஆசை அவர்களுக்குப் புரிபடவில்லை போலும். பெரியவர்களான பின்னும் எல்லாருக்கும் ஜன்னல் இருக்கை மாதிரி சில அற்ப சந்தோஷங்கள், யாரையும் உறுத்தாத கையடக்கக் கனவுகள் தொடர்கின்றன; அவை பெரும்பாலும் மறுக்கவும் படுகின்றன. அந்தச் சின்ன ஏமாற்றங்களின் துளிகள்தான் பின்னாளில் வாழ்க்கையை நீலம் பாரிக்கச் செய்து விடுவதுமுண்டு.

அவனுக்கு அந்தக் குழந்தையை ஏமாற்ற மனமில்லை! அவனோடு முடியட்டும் ஏமாற்றங்கள்!!

"பாப்பா! உன் பேர் சொல்லு! ஜன்னல் சீட் தர்றேன்!"

அந்தக் குழந்தையின் கண்களில் தெரிந்தது ஆர்வமா, அவநம்பிக்கையா புரியவில்லை.

"கக்..கக்..கா!" என்று மழலையில் சொன்னது.

"என்னது...?" அவனையுமறியாமல் சிரிப்பு வந்தது. "கக்கக்காவா...?"

"நட்சத்ரா!" என்று திருத்தி, பெருமையோடு சிரித்தார் அப்பா.

"நட்சத்ரா! அங்கிள் பக்கத்துலே உட்கார்ந்துக்குவீங்களா? ஜன்னலைத் தொடக்கூடாது, சரியா?"

கண்கள் அகல அகல நட்சத்ரா தலையாட்டியபோது, அள்ளியெடுத்து மடியில் உட்காரவைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஜன்னலோரத்தில் நட்சத்ராவை அமர்த்தியதும், அதன் ஒரு கை அவனது தொடையின் மீது விழ, ஒரு கணம் கண்களை மூடி சிலாகித்தான். இறுதிக்கணங்களில் இப்படியும் ஒரு சுகமா?

அவ்வப்போது அந்தக் குழந்தை தனது பஞ்சுப்பொதி போன்ற கையால் தட்டித் தட்டி, இவனைப் பார்த்து ’அக்கி..அக்கி..’ என்று அழைத்து எதையோ காட்டியது. அக்கி என்றால் அங்கிளாம்!

பூங்காவில் திபுதிபுவென்று கூட்டம் ஏறியது. வேலை முடித்துத் திரும்புகிறவர்கள், வெளியூரிலிருந்து வருகிறவர்கள் என்று களைத்துப்போனவர்களின் கூட்டம்! அடைத்து அடைத்துக் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்தும் உட்கார இடம் கிடைக்காதா என்று பேராசையுடன் உள்ளே நோட்டமிடுகிற கூட்டம்!

இதோ, எழும்பூர் வந்து விடும்! அவனுக்கு லேசாகப் படபடப்பது போலிருந்தது. அதிகபட்சம் இன்னும் நான்கு நிமிடங்கள்! அதன்பிறகு, ரயில் கிறீச்சிட்டு நிற்கப்போகிறது.

"எவனோ குதிச்சிட்டாண்டா....!"

நட்சத்ரா என்ன செய்வாள்? அழுவாளோ?

எழும்பூர் வந்தது. இறங்குகிற கூட்டமும் ஏறுகிற கூட்டமும் முட்டி மோதிக்கொள்ள, நட்சத்ராவின் பிஞ்சுவிரல் நடைமேடையிலிருந்த குளிர்பானக்கடையைப் பார்த்து நீண்டது.

"ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!"

"அது உவ்வே! வீட்டுக்குப் போயி அம்மா ஊஸ்ஸ் பண்ணித் தரேன்!"

"ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!" நட்சத்ரா சிணுங்கத் தொடங்கினாள்.

ரயில் நகரத்தொடங்கியது. அவன் எழுந்து கொண்டான். இறுதியாக ஒரு முறை நட்சத்ராவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது; பார்த்தான். கூட்டத்தைப் பிளந்து கொண்டு கதவை நோக்கி நடந்துபோகத் தொடங்கினான். ரயில் இன்னும் ஊர்ந்து கொண்டிருக்க, எழும்பூரின் நடைமேடை பின்வாங்கிக்கொண்டிருக்க....

"அட நாசமாப் போறவனே!"

"ஏண்டா இப்படி ஓடற வண்டியிலே ஏறுறீங்க? விழுந்து கிழுந்து செத்துத் தொலைச்சா யாரு கொடுப்பா...?"

சீருடையில், முதுகில் புத்தகப்பையோடு ஓடுகிற வண்டியில் ஏறமுயன்று, நிலைதடுமாறி விழப்போன அந்த விடலைச்சிறுவனை கதவருகே நின்றிருந்தவர்கள் கைத்தாங்கலாய்ப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டிருக்க, அந்தச் சிறுவன் முகம் வெளிறி, உடல் படபடக்க, நெற்றியில் வியர்வையுடனும், கண்களில் மரணபயத்துடனும் வெடவெடத்துக் கொண்டிருந்தான்.

"வீட்டுலே சொல்லிட்டு வந்திட்டியா? என்ன அவசரம் தம்பி? அடுத்த ரெண்டு நிமிசத்துலே இன்னொரு வண்டி வருதில்லே...?"

சாவுக்கு மிக அருகே சென்று மீண்ட அதிர்ச்சியில், கணப்பொழுதில் நடந்து முடிந்தவற்றை செரிக்க முடியாமல் விக்கித்துப்போயிருந்த அந்தச் சிறுவன் பதிலேதும் சொல்லாமல், தன்னைக் கைகொடுத்து உள்ளே இழுத்தவர்களுக்கு நன்றியும் சொல்ல முடியாமல் நின்றிருந்தான்.

அவனது கண்களில் ஒரு செய்தி தெரிந்தது; அவனுக்கு மரணம் அச்சத்தைத் தந்திருக்கிறது. அவனுக்குச் சாக விருப்பமில்லை! அவன் அதற்காக ஓடுகிற ரயிலில் ஏறவில்லை! அது அவனது வீறாப்பாகாவோ அல்லது விளையாட்டாகவோ கூட இருந்திருக்கக் கூடும்! ஆனால், நிச்சயம் அவனது குறிக்கோள் மரணமாக இருக்க வாய்ப்பேயில்லை!

கதவருகே போனவனின் கண்கள், அந்தச் சிறுவனையே வெறித்தன. எங்கே குதிக்க வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தானோ, அந்த இடம் கடந்து போய், வண்டி சேத்துப்பட்டு நிலையத்தில் நின்றபோது, குழப்பத்தோடும் குறிக்கோளில்லாமலும் கீழே இறங்கினான்.

"அக்கி..அக்கி...!" என்று ஜன்னலிலிருந்து நட்சத்ரா அழைத்து பிஞ்சுக்கையால் ’டாட்டா’ காட்டியது.

அவன் பார்த்துக்கொண்டேயிருக்க, ’பிறகு சந்திப்போம்,’ என்று சொல்வது போல கூவியபடி, தடதடவென்று தண்டவாளங்கள் அதிரச் சத்தம் எழுப்பிக்கொண்டே, அவன் வந்த ரயில் அது போக வேண்டிய இலக்கை நோக்கிக் கிளம்பியது.

16 comments:

பெசொவி said...

//அவன் வந்த ரயில் அது போக வேண்டிய இலக்கை நோக்கிக் கிளம்பியது//

எத்தனை அர்த்தங்கள், இந்த ஒரு வரியில் - சேட்டை, கலக்கல்!

துளசி கோபால் said...

முயற்சிக்கு வெற்றிதான் சேட்டை.! 'கதை' நல்லா இருக்கு. பாராட்டுகள்.

Unknown said...

சேட்டை அருமை...

vasu balaji said...

பின்னிட்டீரய்யா. பிரமாதம். நான் படித்தவரை இது இரண்டாவது ரயில் கதை என்று நினைக்கிறேன். கலந்தாங்கட்டியான ஒரு சமூகம் ஒவ்வொரு ரயில் பெட்டி பயணிகளும். அந்த கும்பலில் பல்வேறு உணர்ச்சிகளை இனம் கண்டு தரும் விதம் அபாரம். லேபிளில் ரயில் கதைகள் என்றும் போடலாம்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அக்கி பேட் அக்கி
ஒரு ஊஸ் வாங்கிக்குடுக்கல பாப்பாக்கு.. :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

பயணம் அருமையாக உள்ளது.. தொடருங்கள் சேட்டை.. நானும் பயணிக்கிறேன்.

Jey said...

எப்பா, தொடர்ந்து எழுதுப்பா,படிக்க ஆரம்பிச்சி, கடைசிவரையும் விரிவிருப்பா இருந்துச்சி, ச்சே சூப்பரப்பு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல். நல்ல கதையை பகிர்ந்ததற்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

கதை நல்லா இருக்கு சேட்டை.

Chitra said...

அருமை....கட கடவென்று கலக்குறீங்க.... தொடர்ந்து எழுதுங்க....

Anonymous said...

நல்லா இருக்குங்க சேட்டை

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அருமை... வேறு வார்த்தைகள் வரவில்லை...

maniam said...

pamaran said
arumai

அன்புடன் நான் said...

கதை மிக கலக்கல் பாராட்டுக்கள்.

தனி காட்டு ராஜா said...

உணர்வு பூர்வமான அருமையான கதை .....