Friday, April 30, 2010

வாங்க,கோடீஸ்வரனாகலாம்!

சேட்டைக்காரன்: வணக்கம்! வந்தனம்! நமஸ்தே! நமஸ்கார்! டிவியைப் பார்த்தாலும் சரி, பேப்பரைப் படிச்சாலும் சரி, இவன் கோடிக்கணக்குலே ஊழல் பண்ணினான், அவன் கோடிக்கணக்குலே லஞ்சம் வாங்கினான்னு தான் செய்தி படிக்கிறோம். சே, நமக்கு ஒரு லட்ச ரூபாயாவது கொடுத்திருக்கக் கூடாதான்னு லபோதிபோன்னு மனசு அடிச்சுக்குதா இல்லியா? அந்தக் குறையைப் போக்கத்தான், சேட்டை டிவியிலே உங்க எல்லாரையும் கோடீஸ்வரனாக்கணுமுங்கிற நோக்கத்தோட தொடங்கப்பட்டது- வாங்க கோடீஸ்வரனாகலாம் என்ற நிகழ்ச்சி!"

நிகழ்ச்சியோட விதிமுறைகள் எல்லாருக்கும் தெரிஞ்சது தான்! மொத்தம் பதினைந்து கேள்விகள்! ஒவ்வொரு கேள்விக்கும் கம்ப்யூட்டரிலே நாலு விடை தெரியும். அதுலே மூணு விடை சரியான விடை; ஒரே ஒரு விடை தப்பானது. ஆக, சரியான கேள்விக்கு தப்பான விடையை சரியாக் கண்டுபிடிக்கிறது தான் இந்த வாங்க, கோடீஸ்வரனாகலாம் விளையாட்டு!

ஆயிரம் ரூபாயிலே ஆரம்பிச்சு பதினைந்தாம் கேள்விக்கு சரியாக நீங்க தப்பான பதிலைக் கண்டுபிடிச்சுச் சொன்னா உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் நாலணா,எட்டணா நாணயங்களாக மூட்டை மூட்டையாகக் கொடுக்கப்படும். ஐந்தாவது கேள்வி வரை வர்ற அறிவாளிங்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், பத்தாவது கேள்வி வரைக்கும் வர்ற அதிகப்பிரசங்கிகளுக்கு மூணு லட்சத்து இருபதாயிரம் ரூபாயும் கிடைக்கும். பதினைந்தாவது கேள்வி வரை வர்றவங்க...சரி, எதுக்கு? வேண்டாம், நம்மூரிலே அப்படி யாரும் வர மாட்டாங்கன்னுற தைரியத்துலே தானே நாங்களே நிகழ்ச்சி நடத்திட்டிருக்கோம்!

ஆட்டத்துக்கு நடுவுலே ஜூட் விட்டா, அதுவரை ஜெயிச்ச பணத்தை வாங்கிட்டுப் போயிரலாம். ஆனா, அம்பேல் ஆயிட்டீங்கன்னா, ரிட்டர்ன் டிக்கெட்டுக்குக் கூடக் காசு கிடைக்காது. மாறா நீங்க போட்டிருக்கிற வாட்சு,மோதிரம் எல்லாத்தையும் சப்ஜாடா கழட்டிக்கிட்டு அனுப்பிருவோம்.

மொத்தம் மூணு லைஃப்லைனிருக்கு! ஆடியன்ஸ் கிட்டே கேட்கலாம்; தொலைபேசியிலே யார் கிட்டேயாவது கேட்கலாம்; அப்புறம் ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி!

இன்னிக்கு என் கூட விளையாடப்போறவர் சுங்குவார்சத்திரம் சூடாமணி! இவரு நேத்தே விளையாட ஆரம்பிச்சு, முதல் ஐந்து கேள்விகளுக்கு சரியா தப்பான விடையைச் சொல்லி பத்தாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டாரு! நேத்து மின்வெட்டு காரணமாக அந்த நிகழ்ச்சியை நாங்க அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துலே மொட்டை மாடியிலே நடத்தினதாலே யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை! மீதி ஆட்டத்தை இன்று தொடர்வோம்.

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: வெல்கம் மிஸ்டர் சூடாமணி! உட்காருங்க!

சூடாமணி: நன்றிங்க!

சேட்டைக்காரன்: இதுவரைக்கும் பத்தாயிரம் ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க! எப்படியிருக்கு?

சூடாமணி: நல்லாத்தான் இருக்கு! ஆனா, பத்தாயிரம் ரூபாயை நாலணா, எட்டணா காயினாக் கொடுத்தா லாரி வாடகைக்கே சரியாப் போயிடுமே? அதான் இன்னிக்கு கோடி ரூபாய் ஜெயிச்சே ஆகணுமுன்னு வந்திருக்கேன். தனி கூட்ஸ் வண்டியே புக் பண்ண வேண்டி வந்தாலும் பரவாயில்லை!

சேட்டைக்காரன்: ஓ.கே! வாங்க கோடீசுவரனாகலாம் விளையாட்டு ஆரம்பமாயிருச்சு! நிகழ்ச்சியின் ஆறாவது கேள்வி!

மிஸ்டர் சூடாமணி! சமீபத்துலே வருமானவரித்துறை கிட்டே மாட்டிக்கிட்ட ஐ.பி.எல்.அணி எது? உங்களுக்கான நான்கு விடைகள் இதோ!

A.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
B.கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்.
C.ராஜஸ்தான் ராயல்ஸ்
D.ஆந்திரா பிக்கிள்ஸ்

சூடாமணி: டி.ஆந்திரா பிக்கிள்ஸ்!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! ஆந்திரா பிக்கிள்ஸ் என்ற விடையை லாக் செய்யுங்கள்! ஆந்திரா பிக்கிள்ஸ் என்பது சரியான விடை சூடாமணி! இருபதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: ஏழாவது கேள்வி! உங்களுக்குப் பொது அறிவு சம்பந்தப்பட்ட செய்திகளிலே ஈடுபாடு உண்டா மிஸ்டர் சூடாமணி?

சூடாமணி: பொதுவா, எனக்கு அறிவு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே ஈடுபாடு கிடையாதுங்க! சினிமா மட்டும் தான் பார்க்கிறது வழக்கம்!

சேட்டைக்காரன்: ஹாஹா! சரி, இதோ உங்களுக்கான ஏழாவது கேள்வி!

இந்த நான்கு போலி சாமியார்களில், போலீஸுக்குத் தண்ணி காட்டத் தெரியாதவர் யார்?

A.சுவாமி வெட்டியானந்தா
B.சுவாமி கத்தியானந்தா
C.சுவாமி நித்தியானந்தா
D.சுவாமி பக்கியானந்தா

சூடாமணி: சி. சுவாமி நித்தியானந்தா!

சேட்டைக்காரன்: ஆர் யூ ஷ்யூர்? போலீஸுக்குத் தண்ணி காட்டத் தெரியாதவர்???

சூடாமணி: ஆமாங்க! சுவாமி நித்தியானந்தா தான்!

சேட்டைக்காரன்: உறுதியா சொல்லுறீங்களே! விடையை லாக் பண்ணிடலாமா?

சூடாமணி: அவரையே "லாக்" பண்ணியாச்சு! விடை தானே, பண்ணுங்க!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! சி. சுவாமி நித்தியானந்தா என்ற விடையை லாக் செய்யவும். மிஸ்டர் சூடாமணி! சுவாமி நித்தியானந்தா என்பது..........மிகச் சரியான விடை! நாற்பதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: மிஸ்டர் சூடாமணி! எட்டாவது கேள்விக்குப் போகலாமா? சட்டசபை,பாராளுமன்றம் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது எது?

A.கூச்சல்
B.குழப்பம்
C.வெளிநடப்பு
D.அமைதி

சூடாமணி: டி.அமைதி!

சேட்டைக்காரன்: அமைதி! கம்ப்யூட்டர் அண்ணாச்சி! அமைதியை லாக் பண்ணுங்க! ஆஹா, சரியான விடை! மிஸ்டர் சூடாமணி! எண்பதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க! அடுத்து ஒன்பதாவது கேள்வி! இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு வழங்குவது எது? உங்களுக்கான நான்கு விடைகள்....!

A.பணம்
B.புடவை/வேட்டி
C.க்வார்ட்டர்
D.ஹூண்டாய் கார்

சூடாமணி: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி! அடுத்த தேர்தலிலே என்ன நடக்குமுன்னு தெரியாது. இப்போதைக்கு விடை ஹூண்டாய் கார் தான்.

சேட்டைக்காரன்: நல்லா யோசிச்சுச் சொல்லுங்க! ஹூண்டாய் கார் தானா விடை?

சூடாமணி: ஏன் சேட்டை சந்தேகமாக் கேட்கறீங்க? உங்களுக்கு யாராவது ஹூண்டாய் கார் கொடுத்தாங்களோ?

சேட்டைக்காரன்: இதையெல்லாம் ஸ்டூடியோவிலே வச்சுக் கேட்கப்படாது. சரியா? விடையைச் சொல்லுங்க!

சூடாமணி: ஹூண்டாய் கார்

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! ஹூண்டாய் காரை லாக் பண்ணுங்க! ஆஹா! மிகச்சரியான விடை! மிஸ்டர் சூடாமணி! ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: மிஸ்டர் சூடாமணி! பத்தாவது கேள்விக்கு சரியா தப்பான விடையைச் சொன்னா, கண்டிப்பாக மூணு லட்சத்து இருபதினாயிரம் ரூபாயை நீங்க வீட்டுக்கு எடுத்திட்டுப்போகலாம். கேள்வி என்னான்னா......தமிழ் சினிமாவுலே அதிக சம்பளம் வாங்குற நடிகர் யார்? உங்களுக்கான விடைகள்....

A.ரஜினிகாந்த்
B.விஜய்
C.அஜித்
D.ஜே.கே.ரித்தீஷ்

சூடாமணி: டி. ஜே.கே.ரித்தீஷ்! லாக் பண்ணுங்க!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! டி.ஜே.கே.ரித்தீஷ் என்ற விடையை லாக் பண்ணுங்கள்! மிகச் சரியான விடை! மிஸ்டர் சூடாமணி! இனிமேல் நீங்க தோத்தாலுமே மூன்று லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுத் தான் போவீங்க! எப்படி சரியா தப்பான விடையக் கண்டுபிடிச்சீங்க?

சூடாமணி: பெரிய கம்பசூத்திரமா? உங்க கம்ப்யூட்டர் அண்ணாச்சியிலே எது டி-ன்னு வந்தாலும் அது தான் விடையா இருக்குமுன்னு ஒரு ஊகம் பண்ணி அடிக்கிறது தான்.

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! கவனமாயிருங்க! சரி மிஸ்டர் சூடாமணி! இப்போ நீங்க மூணு லட்சத்தி இருபதினாயிரம் ரூபாய் பணத்தை ஜெயிச்சிட்டீங்க! அதை வச்சு என்ன பண்ணப்போறீங்க?

சூடாமணி: முதல்லே எண்ணிப்பார்ப்பேன்! உங்க முழியைப் பார்த்தாலே அதிலேருந்து ஒரு கை அள்ளிப் பாக்கெட்டுலே போட்டிருப்பீங்களோன்னு சந்தேகமாயிருக்கு எனக்கு!

சேட்டைக்காரன்: ஏன்யா மானத்தை வாங்குறே? காலையிலேருந்து சிங்கிள் டீ கூட குடிக்காம நிகழ்ச்சி நடத்திட்டிருக்கேன். என்னைப் போயி சந்தேகப்படறியே? சரி, பதினோராவது கேள்விக்குப் போகலாமா?

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: இப்போ இவங்க எதுக்குக் கை தட்டுனாங்க? கொடுத்த பணத்துக்கு மேலேயே கரகோஷம் பண்ணுறாங்கய்யா! சரி, கேள்விக்கு வருவோம்! கொஞ்சம் கஷ்டமான கேள்வி! நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு சினிமாக்கலைஞர்கள் மீது கோபத்தை உண்டாக்குவது எது?

A.அரசியல் பேசுவது
B.கற்பு பற்றி பேசுவது
C.சிகரெட் புகைப்பது
D.ஒதுங்கிப்போவது

சூடாமணி: ஹிஹி! இந்த வாட்டியும் டி தான் விடை! உங்க கம்ப்யூட்டரை மாத்துங்க சேட்டை! இல்லாட்டி பிச்சையெடுக்கிற நிலைமை வந்திரும்.

சேட்டைக்காரன்: இனிமேத் தானா? நாலணா, எட்டணாத் துட்டெல்லாம் எங்கேருந்து வந்ததுன்னு நினைக்கறீங்க? எல்லாம் காளிகாம்பாள் கோவில், கபாலீச்வரர் கோவில் வாசலிலே கலெக்ஷன் ஆனது தான். அது போகட்டும், விடையென்ன டி தானே? கம்ப்யூட்டர் அண்ணாச்சி! டி. ஒதுங்கிப்போவது என்பதை லாக் பண்ணுங்க ப்ளீஸ்! மிகச்சரியான விடை! சூடாமணி, ஆறு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் ஜெயிச்சிட்டீங்க! அடுத்த கேள்விக்குப்போகலாமா?

சூடாமணி: சீக்கிரமாக் கேளுங்க! லேட்டாச்சுன்னா லாரி கிடைக்கிறது கஷ்டம்!

சேட்டைக்காரன்: பனிரெண்டாவது கேள்வி இதோ! இந்தியாவில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ள மாநிலம் எது?

A.உத்திரப்பிரதேசம்
B.ஆந்திரா
C.தமிழ்நாடு
D.பஞ்சாப்

சூடாமணி: ஹையா! இதுவும் டி தானே? லாக் பண்ணுங்க சேட்டை! பஞ்சாப்! பனிரெண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஜெயிச்சிட்டேன்! எல்லாரும் ஜோராக் கைதட்டுங்கோ!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: ஆர்டர்! ஆர்டர்!! சைலன்ஸ்!! காசு வாங்குறது என் கிட்டே! கை தட்டறது அவன் சொன்னதுக்கா? இப்போ கேட்கிறேன் பாரு! கேள்வி நம்பர் பதிமூன்று! இந்தியாவிலேயே லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிற மாநிலம் எது? உங்களுக்கான நான்கு விடைகள் இதோ:

A.உத்திரப்பிரதேசம்
B.தில்லி
C.தமிழ்நாடு
D.தமிழ்நாடு

ஹை! மிஸ்டர் சூடாமணி! இப்போ நீங்க ’டி’ சொல்லுவீங்களா? சொல்லுவீங்களா?

சூடாமணி: அஸ்க்கு புஸ்க்கு! அதெப்படி சொல்லுவேன்? இந்த தடவை பி.தில்லி தானே விடை? ஹிஹிஹி!

சேட்டைக்காரன்: அப்படீன்னா இதையும் லாக் பண்ணட்டுமா? கம்ப்யூட்டர் அண்ணாச்சி...

கம்ப்யூட்டர் அண்ணாச்சி: லாக் பண்ணியாச்சு சேட்டை! நீயும் உன் டிவியும் உன் புரோகிராமும்...தூத்தெறி!

சேட்டைக்காரன்: அட எல்லாரும் கைதட்டுங்கப்பா! சூடாமணி இருபத்தி ஐந்து லட்சம் ஜெயிச்சிட்டாரில்லே? ஜோரா ஒரு தடவை கைதட்டுங்கோ!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சூடாமணி: என்ன சேட்டை? கொறளி வித்தை காட்டுறவன் மாதிரி சொல்லுறே?

சேட்டைக்காரன்: பழக்கதோஷம் தான்! சரி, இப்போ ஐம்பது லட்ச ரூபாய்க்கான கேள்வியைக் கேட்கப்போறேன். என்ன பதில் சொல்லுறீங்கன்னு பார்ப்போம். பதினான்காவது கேள்வி உங்களுக்காக இதோ! இந்தியாவிலேயே அதிக பாராட்டு விழாக்கள் நடக்கும் மாநிலம் எது? உங்களுக்கான ஆப்ஷன்ஸ் இதோ...

A.உத்திரப்பிரதேசம்
B.தமிழ்நாடு
C.தமிழ்நாடு
D.தமிழ்நாடு

சூடாமணி: சேட்டை! ஐம்பது லட்சம் ஜெயிச்சிட்டேன்! ஐம்பது லட்சம் ஜெயிச்சிட்டேன்!! விடை ஏ.உத்திரப்பிரதேசம்! லாக் பண்ணு!

(பார்வையாளர்கள் கரகோஷம்)

சேட்டைக்காரன்: அடுத்த தடவை கேள்வியை மாத்தறேனோ இல்லியோ, பார்வையாளர்களை மாத்தியே தீரணும்? போகட்டும்! மிஸ்டர் சூடாமணி! இதோ இறுதியாக, பதினைந்தாவது கேள்வி! அண்மையில் பாராளுமன்றத்தொடரின் போது உல்லாசப்பயணம் சென்ற மத்திய மந்திரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

A. தமிழ்நாடு
B. தமிழ்நாடு
C. தமிழ்நாடு
D. தமிழ்நாடு

சூடாமணி: சேட்டை, கேள்வி ரொம்ப கஷ்டமாயிருக்கு! லைஃப்லைனை உபயோகப்படுத்திக்கலாமா?

சேட்டைக்காரன்: தாராளமா! எந்த லைஃப்லைனை உபயோகப்படுத்தப்போறீங்க?

சூடாமணி: ஆடியன்ஸ் போல்! பார்வையாளருங்க கிட்டே கேட்கப்போறேன்.

சேட்டைக்காரன்: லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்! ஒரு கோடி ரூபாய்க்கான கேள்விக்காக சூடாமணி உங்களது உதவியை நாடுகிறார். உங்கள் கையிலிருக்கிற டப்பாவில் அனேகமாக A,B,C,D என்ற நான்கு எழுத்துக்கள் தெளிவாக இருந்தாலும் இருக்கும். உங்களது விடைகளை அதற்குரிய பொத்தானை அழுத்தித் தெரிவிக்கவும். டப்பாவுக்கு வாரண்டி தீர்ந்துவிட்டபடியால் கொஞ்சம் மெதுவாக அழுத்தவும். யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ!

பார்வையாளர்கள் பொத்தானை அழுத்த, திரையில் அவர்கள் அளித்த வாக்குகளின் முடிவு தெரிகிறது. அது......

A.தமிழ்நாடு 25%
B.தமிழ்நாடு 25%
C.தமிழ்நாடு 25%
D.தமிழ்நாடு 25%

சேட்டைக்காரன்: சூடாமணி! பார்வையாளர்களே சற்றுக் குழம்பித்தான் போயிருக்கிறார்கள் போலிருக்கிறது.

சூடாமணி: யாரு சொன்னாங்க, அவங்க ரொம்பத் தெளிவாத் தான் இருக்காங்க! வேலியிலே போறதை வேட்டியிலே விட்டுக்க அவங்க என்ன சேட்டை டிவியா?

சேட்டைக்காரன்: அது சரி, இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்? இதுவரை ஐம்பது லட்சம் ஜெயித்து விட்டீர்கள்! இதை வாங்கிக்கொண்டு போயி சுங்குவார்சத்திரத்துலே நிதிநிறுவனம் ஆரம்பித்தால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து எல்லா டிவிக்களிலும் பேப்பர்களிலும் உங்கள் புகைப்படத்தோடு பெயர் வருமே?

சூடாமணி: சரி, ஒரு கை பார்த்திடலாம்! நான் இன்னொரு லைஃப்-லைனை யூஸ் பண்ணப்போறேன். ஃபிஃப்ட்டி-ஃபிஃப்ட்டி!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! சூடாமணி இரண்டாவது லைஃப்-லைனை உபயோகப்படுத்த விரும்புகிறார். எனவே கேள்விக்கான நான்கு விடைகளில் இரண்டு சரியான விடைகளைக் கடாசிவிட்டு, ஒரு சரியான பதிலையும் ஒரு தப்பான பதிலையும் மட்டும் காட்டுங்க ப்ளீஸ்!

திரையில் இரண்டு விடைகள் மறைந்து, இரண்டு விடைகள் மட்டுமே தெரிகின்றன. அவை:

A.தமிழ்நாடு
D.தமிழ்நாடு

சேட்டைக்காரன்: ஓ! சூடாமணி! கம்ப்யூட்டரும் உங்களுக்குக் கைகொடுக்கவில்லையே!

சூடாமணி: எப்படிக் கைகொடுக்கும்? ஏற்கனவே உடைச்ச கம்ப்யூட்டரெல்லாம் பத்தாதா?

சேட்டைக்காரன்: இப்போது என்ன செய்யப்போகிறீர்கள் சூடாமணி? இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இன்னும் ஒரு லைஃப்-லைன் மீதமிருக்கிறது. தொடர்ந்து ஆடப்போகிறீர்களா அல்லது கிடைத்தது போதும் என்று அம்பது லட்ச ரூபாயைச் சில்லறையா வாங்கிக்கிட்டு அடுத்த லாரியைப் பிடித்து ஊருக்குப்போகப்போறீர்களா?

சூடாமணி: சரி, மூன்றாவது லைஃப்-லைனையும் உபயோகப்படுத்துகிறேன். Phone A Friend! ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுவின் செல்நம்பருக்கு போன் போடுங்கள்!

சேட்டைக்காரன்: கம்ப்யூட்டர் அண்ணாச்சி! சூடாமணி இறுதியாக ஃபோன்-ய-ஃபிரண்டையும் உபயோகிக்க விரும்புகிறார். ஆந்தைக்குளம் அய்யாக்கண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச வையுங்கள் ப்ளீஸ்!

ட்ரிங்...ட்ரிங்...! ட்ரிங்...ட்ரிங்...!!

சேட்டைக்காரன்: ஹலோ!

ஆ.அய்யாக்கண்ணு: அலோ, எவம்லே இது? நான் இங்கண இருக்கேமுண்ணு உனக்கு எப்படிலே தெரியும்?

சேட்டைக்காரன்: மிஸ்டர் அய்யாக்கண்ணு! நான் வாங்க கோடீஸ்வரனாகலாம் நிகழ்ச்சியிலிருந்து சேட்டைக்காரன் பேசுகிறேன்.

ஆ.அய்யாக்கணு: லேய், நீ பிளாக்குப் போட்டுத் தொல்லை கொடுக்குது போதாதுண்ணா போனிலேயும் வாறே? திருநேலி பக்கம் வந்திராதே! தச்சநல்லூர் தாண்ட மாட்டே சொல்லிப்புடுகேன்.

சேட்டைக்காரன்: மிஸ்டர் அய்யாக்கண்ணு! உங்க நண்பர் சுங்குவார் சத்திரம் சூடாமணி எங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்! இது வரை ஐம்பது லட்சம் வென்றிருக்கிறார்.

ஆ.அய்யாக்கண்ணு; யாரு, அந்த எளவெடுத்த பயலா? அம்பது லட்சமா? லே சேட்டை, என்னியும் கூப்புடுலே மக்கா! நானும் அமெரிக்கா போறேனில்லா?

சேட்டைக்காரன்: இறுதிக்கேள்விக்கு அவரால் தப்பான விடையைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். உங்களிடம் அவர் அந்தக் கேள்வியைக் கேட்பார்! மிஸ்டர் சூடாமணி, ஒரே ஒரு நிமிஷம் தான்...யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ....!

சூடாமணி: அண்ணாச்சி,நல்லா இருக்கீயளா? அதாவது அண்ணாச்சி, பாராளுமன்றத்தொடருக்குப் போகாம பிக்னிக் போன மந்திரி எந்த மாநிலமுன்னு கேக்காரு இந்த சேட்டை! ரெண்டு பதிலிருக்கு அண்ணாச்சி! ஒண்ணும் தமிழ்நாடு, இன்னொண்ணு தமிழ்நாடு! இதுலே எது தப்பான விடை அண்ணாச்சியோவ்?

ஆ.அய்யாக்கண்ணு: லேய் பொச கெட்டபயலே! ஊருக்கு மதுரை வழியா திரும்பி வாறியா கேரளா வழியா சுத்திப் போகப்போறியா? கோயில்பட்டி பஸ் ஸ்டாண்டுலே வெள்ரிப்பிஞ்சு சீவுற மாதிரி சீவிருவாங்கலே...! கெடைக்கிற வண்டியைப் புடிச்சு ஊருக்கு வந்து சேருலே கோட்டிக்காரப்பய மக்கா! செத்தம்பொறவு கோடி ரூபாய் இருந்தா என்ன, கோடித்துணி கூட இல்லாட்டாத் தான் என்னா? கிளம்புலே நீ!

சேட்டைக்காரன்: ஒரு நிமிஷம் முடிந்தது! என்ன பதில் சூடாமணி!

சூடாமணி: சேட்டை, என்னை விட்டிரு! எனக்கு ஒரு கோடி ரூபாயெல்லாம் வேண்டாம். எங்காத்தாவுக்கு நான் ஒரே புள்ளே! இன்னும் காது கூட குத்தாம வச்சிருக்காக! நான் போறேன், இந்த ஆட்டத்துக்கு நான் வரலே...

சேட்டைக்காரன்: சூடாமணி, ஜூட் விட்டால் அம்பது லட்ச ரூபாய் கிடைக்கும்!

சூடாமணி: அதை நீயே வச்சுக்க சேட்டை! எப்படியும் நாளைக்கு உன் டிவி இருக்கப்போறதில்லே! அம்பது லட்ச ரூபாயை வச்சு ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சு நல்லபடியாப் பொழைக்கிற வழியைப் பாரு! நான் ஊருக்குப்போறேன்.

சேட்டைக்காரன்: மிஸ்டர் சூடாமணி! ஒரு நிமிஷம்!

சூடாமணி: சேட்டை! எனக்கு எக்மோர் வரைக்கும் போக ஒரு ஆட்டோ புடிச்சுத்தர்றியா? நான் சென்னைப்பக்கமே வர மாட்டேன்.

சேட்டைக்காரன்: ஆஹா, இதோ ஆட்டோவே வந்திருச்சு போலிருக்கே!

ஆட்டோ: இங்கே சேட்டைக்காரன்னுறவன் யாரு?

சூடாமணி: ஐயோ, ஆட்டோக்காரர் கையிலே அருவா! நான் ஜூட்!

சேட்டைக்காரன்: ஐயையோ, இது வேறே ஆட்டோ மாதிரியில்லே இருக்கு! நான் அம்பேல்!

Monday, April 26, 2010

பயணத்தில் ஓர் நாள்!

எனது நண்பர்களும் சகபதிவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்கிற ஒரே கேள்வி: அடுத்து என்ன எழுதப்போகிறாய் சேட்டை?

பெரும்பாலும் என்னிடம் பதில் தயாராகவே இருந்து வந்திருக்கிறது. அனுபவசாலிகளுடன் கிடைத்திருக்கிற நட்பு காரணமாய், அவர்களின் அறிவுரை காரணமாய், எனது கண்கள் எப்போதும் அகலத் திறந்து என் நாலாபக்கங்களிலும் நடக்கிற நிகழ்ச்சிகளை அவதானித்து, அசைபோட்டு, சில நேரங்களில் துணிந்து எழுதவும் தூண்டியிருக்கின்றன. ஆனால், இது, நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்து, தள்ளிப்போட்டு, இதில் வண்டல் படிவதற்கு முன்னர் எழுதிவிடலாம் என்று இப்போது முடிவெடுத்து எழுதியது.

இந்தப் பதிவை எழுத நான் படித்த இரு பதிவுகளும் காரணம். ஒன்றை எழுதியவர் பெண்; மற்றொன்றை எழுதியவர் ஆண்! இருவருமே சொல்ல வந்த கருத்து பெரும்பாலோனோரின் ஆதங்கத்தின் மற்றோர் வெளிப்பாடுதான்! ஆனால், வாசிப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட எழுத்துக்குயுக்தி அருவருப்பானது. அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்காக வார்த்தைகள் போர்த்த வேண்டிய கண்ணியத்தைத் துகிலுரிந்து அரைநிர்வாணமாக ஆட விட்டிருந்தது அவர்களது நோக்கத்தைக் கொச்சைப்படுத்தியிருந்தது என்பதே என் முடிபு.

ஒரு விதத்தில் சென்னையில் நானும் ஒரு தினசரி கூட்டுவண்டிப்பயணியாக இருப்பது எழுத மிகவும் உதவியாக இருக்கிறது. தினசரிப்பயணங்களின் போது பல குணாதிசயங்கள் என்னுடன் பயணிக்கின்றன; பக்கத்தில் அமர்ந்து செய்தித்தாளையோ, கந்தர் சஷ்டி கவசத்தையோ, முரசொலியையோ அல்லது ஏதேனும் கேள்விப்பட்டிராத ஆங்கிலப்புத்தகத்தையோ விரித்துப் படித்துக் கொண்டு வருகிற மனிதர்கள்! ’இது எக்மோரா பார்க்கா?’ என்று ஜன்னல் வழியாகக் கேட்டு விட்டு, பெட்டிக்குள்ளே தட்டுத்தடுமாறி ஏறி மைக்கைப் பிடித்துக்கொண்டு ’பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த...,’ என்று பாடிப் பிச்சையெடுக்கிற பார்வையற்றவர்கள்! பத்து ரூபாய்க்கு சென்னை வரைபடம் விற்பவர்கள்! எழும்பூரிலும், பூங்காவிலும் இறங்கி யாரையோ வழியனுப்பவோ அன்றி வரவேற்கவோ செல்லுகிற நடுத்தரக் குடும்பங்கள்! நெரிசலில் உச்சுக்கொட்டியபடி நின்று பயணிக்கிறவர்கள்! உரக்க உரக்க வானொலி கேட்டுக்கொண்டு வருகிறவர்கள்! கதவருகே காற்றில் கேசம் பறக்க நின்று ஆபத்தாய் பயணிக்கிற மாணவர்கள், மாணவிகள்! இவர்களைப் பற்றி எழுதுவதற்கே இன்னுமோர் ஆயுளும், இன்னும் சில நூறு பதிவுகளும் தேவைப்படலாம் போலிருக்கிறது.

அப்படியொரு கூட்டுவண்டி நெரிசலில் தான் அந்தக் குடும்பத்தைப் பார்த்தேன். சொந்த வேலை காரணமாக, அரை நாள் விடுப்பு எடுத்திருந்ததால், நண்பகலில் நான் ஏறிய வண்டியில், மாம்பலத்தில் அந்தக் குடும்பமும் ஏறியது.

அந்தத் தம்பதியருக்கு வயது நாற்பதுக்குள் இருக்க வேண்டும். இரட்டை ஜடையுடன் ஒரு பள்ளி மாணவி-சீருடையைக் கழற்றாமலே! உடன் அவளை விடவும் இளைய ஒரு சிறுவன் - அவனும் சீருடையில் தானிருந்தான். அவர்கள் இருவரது புத்தகப்பைகளையும் பெற்றோர்கள் ஆளுக்கு ஒன்றாக வாங்கி வைத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களது தமிழ் உச்சரிப்பு, மற்றும் பேச்சில் அடிபட்ட "காந்திபுரம் பஸ் நிலையம், பீளமேடு, அவிநாசி சாலை’ போன்ற பெயர்களிலிருந்து அவர்கள் கோவைக்காரர்களாய் இருக்கலாம் என்று தோன்றியது. அந்தப் பெண்ணும், அந்தச் சிறுவனும் உற்சாகக்குவியலாகப் பேசிக்கொண்டே வந்து கொண்டிருக்க, அவர்களின் அம்மாவின் முகத்தில் மிகுந்த மலர்ச்சியும், அப்பாவின் முகத்தில் சற்றே அடக்கமுயன்றும் அடங்காப் பெருமிதமும் தென்படுவதை என்னால் கவனிக்க முடிந்தது. மகிழ்ச்சியான குடும்பங்களை அல்லது மகிழ்ச்சியாக இருப்பவர்களாய்த் தென்படுகிற குடும்பங்களைக் காண்பதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கலகலவென்று சிரித்துப்பேசுகிற குழந்தைகளை, அவர்களுக்கு இரண்டுங்கெட்டான் வயதாகியிருந்தாலும் காண்பது ஒரு சுகானுபவம் தான்!

அவர்கள் நால்வர் முகத்திலும் நின்றுகொண்டே பயணம் செய்வது குறித்த வருத்தமிருப்பதாய்த் தெரியவில்லை. அனேகமாக அவர்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்திருக்கலாம்; எழும்பூரிலோ பூங்காவிலோ இறங்கி, எங்கிருந்தோ வருகிற அல்லது எங்கேயோ போகிற யாரையோ பார்க்க சென்று கொண்டிருக்கலாம். அந்தக் குழந்தைகளின் சீருடைகளைப் பார்த்தபோது, இப்படித் தான் இருந்தாக வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.

கோடம்பாக்கத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பி நுங்கம்பாக்கத்தை ரயில் சென்று சேரும்வரை, சிலர் புருவங்களை உயர்த்திப் பார்க்கிற அளவுக்கு அந்தப் பெண்ணும், அவள் தம்பியும் உரக்கச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

கொடுமை! அவர்களது சிரிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை!

ரயில் நுங்கம்பாக்கம் நிலையத்தில் நின்றதும் திபுதிபுவென்று கல்லூரி மாணவர்களின் கூட்டம் பெட்டிக்குள்ளே பிழியப் பிழிய ஏறி நிரம்பினர். அதன்பிறகு, அந்தக் குடும்பத்தை என்னால் பார்க்க முடியாத அளவுக்கு ரயிலில் கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ, பூங்கா ரயில் நிலையம் வரும்வரையில் அந்தப் பெண்ணும், அவளது தம்பியும் பேசிய பேச்சோ, சிரித்த சிரிப்போ எனது காதுகளில் விழவில்லை. எழும்பூர் வரும்வரையில் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று என்னால் பார்க்கவே முடியவில்லை.

எழும்பூரில் சற்றுக் கூட்டம் குறைந்தது. தற்செயலாக நான் பார்த்தபோது, அந்தப் பெண்ணை அவளது தாயார் ஆதுரமாக அணைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சிறுமி அழுது கொண்டிருப்பது போலிருந்தது. அந்தச் சிறுவன் அப்பாவுடன் நின்றவாறே, அழுது கொண்டிருந்த தனது அக்காவையும், அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த அம்மாவையும் மலங்க மலங்க வெறித்துக்கொண்டிருந்தான்.

’என்ன நடந்திருக்கும்’ என்று உறுதியாக என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், அந்தப் பெட்டியில் இன்னும் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒரு சில கல்லூரி மாணவர்கள் இவர்களைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது.

எழும்பூரிலிருந்து ரயில் கிளம்பி பூங்காவை அடைந்ததும், அந்தக் குடும்பம் இறங்கிச் சென்றது. இப்போது, அந்தப் பெண்ணின் தோளைப் பிடித்து அணைத்தவாறே அந்த அப்பா, அவளுக்கு ஏதோ ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். அந்தச் சிறுவன் அம்மாவிடம் ’என்னம்மா நடந்தது?’ என்று கேட்கிறான் என்று ஊகிக்க முடிந்தது; ஆனால், அம்மா பதில் சொல்லாமல் கணவனைப் பின்தொடர்ந்து செல்வதை ரயில் கிளம்பும் வரையில் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ரயிலும் ஏறக்குறையக் காலியாகியிருந்தது.

பூங்காவை விட்டு ரயில் கிளம்பியதும், அந்த ஒரு சில கல்லூரி மாணவர்கள் உரக்கச் சிரித்தனர். அவர்களின் சிரிப்பு எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிய வைத்தது.

அப்பாவித்தனமாக கலகலவென்று சிரித்துப்பேசி வந்து கொண்டிருந்த அந்தச் சிறுமியிடம் இந்த மாணவர்களில் ஒருவனோ அன்றி இவர்கள் அனைவருமோ ஏதேனும் சில்மிஷம் செய்திருக்கக்கூடும் என்பது புரிந்தது. சிறுமியிலிருந்து குமரியாகப்போகிற அந்த இடைப்பட்ட இக்கட்டான வயதில், அந்தப் பெண்ணை அதிர்வுக்குள்ளாக்கி, அழவைக்கிற அளவுக்கு அவளை அந்த சில்மிஷம் தாக்கியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

நடுத்தரக்குடும்பங்களில் இது போன்ற நிகழ்ச்சிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. ’நம் பெண் நமக்குத் தான் குழந்தை; மற்றவர்களுக்கு அல்ல,’ என்று உறைத்திருக்கும் அவர்களுக்கு! அனேகமாக அதன் பிறகு அந்தப் பெண்ணால் முன்னைப் போல கலகலவென்று சிரித்து விளையாட முடியாமல் போகலாம். அந்தச் சிறுவனுக்கே கூட பெற்றோர்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் - அக்காவேயானாலும் கூட, சிலபல எல்லைக்கோடுகள் வரையப்படலாம்.

நேற்றுவரை குழந்தையாயிருந்தவள், திடீரென்று பெண்ணாகி விட்டாள் என்ற திடுக்கிடும் உண்மையை அந்தச் சம்பவம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். அவர்களது பொறுப்பை அதிகரித்திருக்கும்; சுமையைக் கூட்டியிருக்கும். நான்கு சுவர்களைத்தாண்டி வருவதென்றால் என்னவென்று அந்தப் பெண்ணுக்கு சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் துருவித் துருவிப் பல கேள்விகளைக் கேட்டிருக்கலாம் - ஏன் அக்கா அழுகிறாள் என்பது தொடங்கி! அனேகமாக, அந்தத் தகப்பன் மவுனத்தைத் தவிர வேறு எதையும் பதிலாகச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால்...! கண்டிப்பாக அந்தச் சிறுவனுக்கு அவன் அப்பா சொன்னால் நல்லது. கலகலவென்று சிரித்துக்கொண்டு வந்த அக்காவைக் கண்ணீர் விடச் செய்தது எது என்று விளக்கிச் சொன்னால் நல்லது. அவனுக்கும் நல்லது! எதிர்காலத்தில் அவன் பேருந்திலோ, ரயிலிலோ பார்க்கப்போகிற பெண்களுக்கும் நல்லது!

அன்று சொல்லியிருக்காவிட்டாலும் பரவாயில்லை; பிறிதொரு சந்தர்ப்பத்தில், அவன் சற்று முதிர்ச்சியடைகிற போது சொல்ல வேண்டியது, அவரது கடமையென்றே நினைக்கிறேன்.

அந்தத் தகப்பன் ரயில்வே காவல்நிலையத்தில் ஏன் புகார் செய்யவில்லை? நீ ஏன் அந்த மாணவர்களைத் தட்டிக் கேட்கவில்லை? - இது போன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை! நானும் உருண்டு சென்று கொண்டிருக்கும் கூழாங்கற்களில் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கிறேன்.

ஆனால், இனி ஒவ்வொரு முறை அந்தப் பெண் ரயிலில் போனாலோ, ரயிலின் சத்தம் கேட்டாலோ, தொலைக்காட்சியில் பார்த்தாலோ கூட அவளும், அவள் குடும்பத்தாரும் வெம்புவார்களோ என்னவோ? அந்தப் பெண்ணுக்கு தன்னைத் தீண்டியவனின் விகாரம் கண்முன்னே விசுவரூபமெடுத்து நிற்குமோ என்னவோ?

அதே சமயம், எங்கோ ஒரு ரயிலிலோ, பேருந்திலோ, எவனோ ஒருவன் தனது வக்கிர விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கக்கூடும் என்பதும் உறைக்காமலில்லை!

Friday, April 23, 2010

IPL ஜிந்தாபாத்

"சேட்டை! பால் தாக்கரேயைப் பார்க்கப்போயி சொதப்பினது மாதிரி பண்ணிராதீங்க," என்று எச்சரித்தான் சூடாமணி. "நான் சொல்லுறது மாதிரி சொல்லுங்க, லாலு பிரசாத் யாதவ் அப்படியே சரண்டர் ஆயிருவாரு!"

லாலுவுக்காகக் காத்திருந்தபோது, எனது நினைவலைகள் சற்றே பின்னோக்கிச் சுழன்றன. (டேய், நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ஃபிளாஷ்-பேக்கெல்லாம் ரொம்ப அவசியமா என்று கேட்பது காதில் விழுகிறது.)

கொசுவும் மூட்டைப்பூச்சியும் சசி தரூரும் லலித் மோடியும் போல போட்டி போட்டுக்கொண்டு எனது உடம்பிலிருந்த கொஞ்சநஞ்ச இரத்தத்தையும் ஸ்ட்றா போட்டு உறிஞ்சிக்கொண்டிருந்த அந்த பின்னிரவில், செல்போன் அலறவே உறக்கம் கலைந்து விழித்தேன்.

அட நம்ம ப்ரீத்தி ஜிந்தா! எதுக்கு நேரங்கெட்ட நேரத்துலே எனக்கு போன் பண்ணனும்?

"சேட்டை! எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது! வ்வ்வ்வ்வ்வே!" என்று ப்ரீத்தி சண்டிகரில் அழுத அழுகையில் சென்னையில் என் சட்டை நனைந்தது.

"க்யா பாத் ஹை?" என்று எனக்குத் தெரிந்த ஹிந்தியில் வினவினேன்.

"பகாளாபாத் ஹை!" என்று எரிச்சலோடு பதிலளித்தார் ப்ரீத்தி. "எங்க ஐ.பி.எல்லை தேசியமயமாக்கணுமுன்னு லாலு யாதவ் பாராளுமன்றத்திலே பேசியிருக்காரு! நீ சாவகாசமா க்யா பாத் ஹைன்னா கேக்குறே?"

"ஓ! அதுவா!! வேறொண்ணுமில்லை ப்ரீத்தி! லாலுவோட பையனை ஐ.பி.எல்லிலே விளையாட தேர்வு செஞ்சிட்டு, அவரை சும்மா கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு போய் கொடுக்கிறதுக்கும், முதுகு சொரிஞ்சு விடறதுக்கும் தான் உபயோகப்படுத்தினாங்களாமே, அந்தக் கோபத்திலே இப்படிச் சொல்லியிருப்பாரு ப்ரீத்தி! கவலைப்படாதீங்க, நாளைக்கே நான் நம்ம சூடாமணியோட பாட்னாவுக்குப் போயி அவரை சமாதானப்படுத்திடறேன்," என்று உறுதியளித்தேன்.

இந்த ஐ.பி.எல்.சோதனையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ப்ரீத்தி தான். முன்னெல்லாம் அவரது கன்னத்தில் ஒரு குழி தெரியும். இப்போது அவர் கன்னமே பல்லாங்குழி போலாகிவிட்டது பாவம்.

நான் ஒரு தடவை சொன்னா ஒண்ணே முக்கால் தடவை சொன்ன மாதிரிங்கிறதுனாலே, மறுநாளே சூடாமணியைக் கூட்டிக்கிட்டு பாட்னாவுக்குப் போயிட்டேன்.இது தான் நடந்தது; ஃபிளாஷ் பேக் முடிந்தது.

இப்போ லாலு பிரசாத் யாதவுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.

"சேட்டை, லாலு வர்றாரு! நான் சொன்னது மாதிரி சொல்லுங்க!" என்று என்னை முடுக்கினான் சூடாமணி.

"லாலுஜீ வாழ்க! வருங்காலப் பிரதம மந்தி வாழ்க!" என்று கோஷமிட்டேன். சூடாமணி என் மணிக்கட்டில் கிள்ளினான்.

"சேட்டை! அது பிரதம மந்தியில்லை; பிரதம மந்திரி," என்று பல்லைக்கடித்தவாறே திருத்தினான். "மந்தின்னா அர்த்தமே வேறே!"

மீண்டும் ஒரு முறை திருத்தி கோஷமிட்டு விட்டு, லாலுஜீக்கு ஒரு ஆளுயர மாலையைப்போட்டு, அவர் பக்கத்தில் கடவாய்ப்பல் தெரிய சிரித்தவாறே போஸ் கொடுத்து நின்று போட்டோவெடுத்து, விஷயத்துக்கு வந்தோம்.

"சேட்டை! வெரி ஹேப்பி சீயிங் யூ ஐ! சிட் டவுண்! சேர் டேக்கிங் யூ அண்டு சிட்டிங் ஆன் யூ!" என்று ஆங்கிலத்தில் என்னை நாற்காலியில் உட்காருமாரு கூறினார் லாலுஜீ.

"லாலுஜீ! கிரிக்கெட் போர்டை தேசியமயமாக்கணுமுன்னு நீங்க பேசினதைக் கேட்டு உங்க கிட்டே அதுவிஷயமாப் பேசலாமுன்னு வந்தேன்!" என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"அது செஞ்சிர வேண்டியதுதான் சேட்டை!" என்றார் லாலுஜீ ஆவேசமாக. "ஆயிரக்கணக்கான கோடிப்பணத்தை மோசடி பண்ணியிருக்காங்க! கறுப்புப்பணம் கப்பல் கப்பலா வந்திருக்குது. அந்நியச்செலாவணி மோசடி வேறே! பகல்கொள்ளையடிச்சிருக்கானுங்க, ஊழலோ ஊழல்!"

"அதானே, முப்பது வருஷத்துலே நீங்க செய்யாததை மூணே வருஷத்துலே பண்ணி ரிக்கார்டை ப்ரேக் பண்ணிட்டாங்க," என்று இன்னும் கொஞ்சம் உசுப்பி விட்டேன். நல்ல வேளை, லாலுஜீக்குப் புரியவில்லை.

"அது மட்டுமில்லே சேட்டை!" லாலுஜீ கண்களைத் துடைத்துக்கொண்டார். "என் பையனுக்கு புதுசா பேட்டெல்லாம் வாங்கிக் கொடுத்து அனுப்பினேன். அவனை சும்மா கோட்-ஸ்டாண்டு மாதிரி தோளுலே டவல் காயப்போடறதுக்குத் தான் யூஸ் பண்ணினாங்களே தவிர ஒரு மேட்ச் கூட ஆடவே விடலே!"

"வருத்தப்படாதீங்க லாலுஜீ!" என்று அவரை சமாதானப்படுத்தினேன். "உங்க வீட்டுலே நீங்க, ராப்ரிஜீ, அப்புறம் உங்க ஒன்பது குழந்தைங்கன்னு மொத்தம் பதினோரு பேர் இருக்கீங்க! பேசாம நீங்க எல்லாருமா சேர்ந்து புதுசா கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மாதிரி ஒரு டீம் ஆரம்பிக்கலாமே? பீஹார் பஃபல்லோஸ்னு?"

"சுத்தி வளைக்கக்கூடாது சேட்டை!" என்று இடைமறித்தார் லாலுஜீ."இந்த கிரிக்கெட்டை தேசியமயமாக்கிட்டா, அப்புறம் எல்லாம் நம்ம விருப்பம் போல தானே நடக்கும்?"

"லாலுஜீ! நான் சொல்றதைக் கேளுங்க! கிரிக்கெட்டை எதுக்கு தேசியமயமாக்கணும்? ஏற்கனவே அதுலே சரத்பவார், அருண் ஜேட்லி, நரேந்திர மோதி,நீங்கன்னு நிறைய அரசியல்வாதி இருக்கீங்க! இப்பவே பாதி தேசியமயமாயிருச்சே! இதுக்கு மேலேயும் பண்ணினா பல ஆபத்தான விளைவுகள் ஏற்படும். எல்லா அரசியல்வாதிகளும் கிரிக்கெட்டுலே குதிச்சிருவாங்க!" என்று லாலுஜீக்கு விளக்க ஆரம்பித்தேன்.

"என்ன ஆபத்து?" என்று கேட்டார் லாலுஜீ. "நான் பிரதம மந்திரியா வர்றதைத் தவிர வேறே என்ன ஆபத்து இருந்தாலும் சொல்லு!"

"அப்படி வாங்க வழிக்கு!" என்றேன் நான். "இப்போ பாருங்க லாலுஜீ! நம்மூருலே கிரிக்கெட் மேட்ச் நடக்குறபோது மைதானத்துலே அடிக்கடி நாய் நுழையுறதைப் பார்த்திருக்கோமில்லையா?"

"சேட்டை! ஒண்ணு அரசியல்வாதியைப்பத்திப் பேசு; இல்லாட்டி நாயைப் பத்திப் பேசு!" என்றார் லாலுஜீ ரோஷமாக.

"கோவிச்சுக்காதீங்க லாலுஜீ! நான் சொல்ல வர்றது என்னான்னா, மைதானத்துலே நாய் புகுந்தா, விளையாட்டை நிறுத்திட்டு போலீஸ்காரங்க நாயை விரட்டுவாங்க தானே? கிரிக்கெட்டை தேசியமயமாக்கினா அது நடக்காது. உங்களாலே நாயை விரட்ட முடியாது," என்றேன்.

"ஏன்?"

"மேனகா காந்திக்குக் கோபம் வந்திருமே? எப்படி ஒரு வாயில்லா ஜீவனை கிரிக்கெட் மைதானத்துலேருந்து விரட்டலாமுன்னு பாராளுமன்றத்துலே கேள்வி கேட்டுற மாட்டாங்க?"

"அட ஆமாம்!" ஒப்புக்கொண்டார் லாலுஜீ.

"அப்புறம் பாருங்க, இப்பெல்லாம் பேட்ஸ்மேன் அவுட்டா இல்லையான்னு பார்க்க டிவி அம்பயர் ஒருத்தர் இருக்காரில்லையா? தேசியமயமாக்கினா, அதுக்கு ஒரு உயர்மட்டக்குழு அமைச்சு, அவங்க ஆறுமாசம் கழிச்சு அறிக்கை தாக்கல் பண்ணற மாதிரி ஆயிராது? அப்புறம் ஒவ்வொரு T20 மேட்சும் அஞ்சு வருஷம் நடக்கும். இது தேவையா?"

"இது வேறயா?" தலையைச் சொரிந்தார் லாலுஜீ.

"இன்னும் இருக்கு! தப்பா அவுட் கொடுத்திட்டா கொல்கத்தா அணியும், கொச்சி அணியும் பந்த், ஸ்டிரைக், மறியல்னு ஆரம்பிச்சிடுவாங்க!"

"ஐயையோ!"

"ஹர்பஜன் சிங் யாரையாவது அடிச்சாலோ, யுவராஜ் சிங் யாரையாவது திட்டினாலோ, விசாரணைக் கமிஷன் வைப்பீங்க! அறிக்கை வெளியாகுறதுக்குள்ளே அவங்க கிரிக்கெட்டை விட்டே ரிட்டயர் ஆயிடுவாங்க!"

"சேட்டை, உண்மையிலேயே நீ உட்கார்ந்து ரொம்ப யோசிக்கிறே!"

"ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என், டென் ஸ்போர்ட்ஸ்லே வர்ணனையாளருங்க பாடு திண்டாட்டமாயிரும்."

"ஏன்?"

"மம்தா பேனர்ஜி வந்து அவங்க மட்டும் தான் கமெண்டரி கொடுப்பேன்னு சொல்லிட்டாங்கன்னா...?"

"அரே பகவான்....!"

"இது மட்டுமா? உ.பியிலே நீங்க ஒரு மேட்ச் கூட நடத்த முடியாது. மாயாவதி அம்மா, பிட்சுக்கு நட்ட நடுப்புலே அவங்களோட முப்பதடி உருவச்சிலையை வச்சிருப்பாங்க!"

"பாப்ரே பாப்...!"

"தமிழ்நாட்டுலே இராம.கோபாலன் சச்சினுக்கு சப்போர்ட் பண்ணுவாரு, சுயமரியாதைக்காரங்க சச்சினைப் பிடிச்சுக் கண்டபடி திட்டுவாங்க!"

"ஏன் சேட்டை?"

"ஏன்னா சச்சின் கிரிக்கெட்டோட கடவுளாச்சே? தமிழ்நாட்டு ஆளுங்களுக்கு கடவுள்னா பிடிக்காதே?"

"தமிழ்நாட்டு அரசியல்வாதியைப் பத்திக் கவலைப்படாதீங்க சேட்டை! அவங்க காலையிலே திட்டுவாங்க, சாயங்காலமான ஸ்டேடியத்துக்கு வந்து மேட்ச் பார்ப்பாங்க! குடும்பத்துக்கு ஒரு பாஸ் கொடுத்திட்டா கம்முன்னு இருப்பாங்க!"

"என்னது, குடும்பத்துக்கு ஒரு பாஸா? அப்படீன்னா பொதுமக்களுக்கு டிக்கெட்டே மிஞ்சாதே..?"

"அரசியலைப் பத்திப் பேசும்போது பொதுமக்களைப் பத்திப் பேசக்கூடாது சேட்டை! மேலே சொல்லு!"

"கிரிக்கெட் பிட்ச் தயார் பண்ணறதுக்காக நீங்க மண்ணைத் தோண்ட முடியாது. மேதா பட்கர் வந்து தொண்ணூத்தி ஒன்பதாவது முறையா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாங்க!"

"ஹே ராம்!"

"தமிழ்நாட்டுலே யாராவது தற்கொலை பண்ணிக்கிட்டா, சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோத்ததுனாலே தான்ன்னு ராமதாஸ் அறிக்கை விடுவாரு!"

"சேட்டை! நீ சொல்லுறதைப் பார்த்தா கிரிக்கெட்டை தேசியமயமாக்கினா நிறைய பிரச்சினை வரும்போலிருக்கே?" என்று லாலுஜீ தாவாங்கட்டையைச் சொரிந்தார்.

"ஆமாம் லாலுஜீ! இந்த செய்தியைக் கேட்டதிலேருந்து ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா எல்லாரும் பாவம் கதிகலங்கிப்போயிருக்காங்க!" என்றேன் நான்.

"அவங்க ஏன் கவலைப்படறாங்க? நாங்க கிரிக்கெட்டை மட்டும் தான் தேசியமயமாக்குவோம்!"

"அதில்லே லாலுஜீ! ஏற்கனவே அவங்கவங்க டீம் தோத்துருச்சேன்னு நொந்துபோயிருக்காங்க! இதுலே நீங்க வேறே இப்படியொரு ஸ்டேட்மெண்ட் விட்டீங்களா? அதிர்ந்து போயிட்டாங்க!"

"அதுக்காக, கிரிக்கெட்டுங்கிற பேருலே நடக்கிற பகல்கொள்ளையைப் பார்த்தும் பார்க்காமலும் இருக்க முடியுமா? அத்தனையும் தில்லுமுல்லு...!"

"லாலுஜீ! உங்க கணக்குப்படி பார்த்தீங்கன்னா, பாராளுமன்றத்தேர்தலிலேருந்து பாலிலே தண்ணி கலக்குறது வரைக்கும் எல்லாத்திலேயுமே தில்லுமுல்லுதானே நடக்குது? இதையெல்லாம் தேசியமயமாக்கினா நடக்கிற காரியமா?"

"இப்போ என்னதான் சொல்லவர்றே சேட்டை?" லாலுஜீ பொறுமையாகக் கேட்டார்.

"லாலுஜீ! கறுப்புப்பணம், வருமானவரி மோசடி, தனிமனிதவழிபாடு, தில்லுமுல்லு, மொள்ளமாறித்தனம், பொய், பித்தலாட்டம் இதெல்லாம் கிரிக்கெட்டுலே இருக்கிறதை விடவும் நூறு மடங்கு அதிகமாயிருக்கிறது உங்க அரசியல்லே தான்! முதல்லே அரசியலை தேசியமயமாக்குங்க! கிரிக்கெட்டைப் பத்தி அப்புறமாக் கவலைப்படலாம்," என்று சொல்லிவிட்டு, லாலுஜீயின் வீட்டிலிருந்து சிட்டெனப் பறந்தேன்.

பாவம், சூடாமணி! லாலுஜீ கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடு பட்டுக்கிட்டிருக்கானோ?

Thursday, April 22, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.09








தனுசு ராசிக்கார வலைப்பதிவர்களே!

நீங்கள் வெளுத்ததெல்லாம் பால்பாயாசம் என்று நம்புகிற வெள்ளந்தியாக இருப்பீர்கள். தொடர்ந்து பின்னூட்டம் மற்றும் ஓட்டு போடுகிறவர்கள் மின்னரட்டைக்கு அழைத்தால், தயங்காமல் ஒப்புக்கொண்டு கூமுட்டைத்தனமாக மனதிலிருப்பதையெல்லாம் உளறிவைப்பீர்கள். அதை வைத்துக்கொண்டு உங்களை யாராவது ரவுண்டு கட்டி அடித்தாலும் கூட "எல்லாம் இறைவன் செயல்," என்று தத்துவார்த்தமாகப் பேசி மனதை திடப்படுத்திக்கொண்டு, அடுத்த மொக்கைக்கு ஆயத்தம் செய்யத் தொடங்குவீர்கள்.

ஒரு பதிவு போடவேண்டும் என்று முடிவெடுத்தால், பணிப்பளு,மின்வெட்டு, புதுப்படங்கள் வெளியீடு, நண்பர்களோடு ஊர்சுற்றுதல் ஐ.பி.எல் என்று எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்கொண்டு, பதிவை வெற்றிகரமாக போட்டே தீருவீர்கள்!

இன்று காலையில் வலைப்பதிவை ஆரம்பித்தவர்களுக்கும் மிகுந்த மரியாதை அளிப்பீர்கள் என்பதால், சிலர் மனதில் "ஒரு அடிமை கிடைச்சிட்டாண்டா," என்று உங்களைப் பற்றிய ஒரு தவறான எண்ணம் ஏற்படுவது இயல்பே!

"யாம் இட்ட மொக்கை இடுக இவ்வலையகம்," என்ற உயர்ந்த சிந்தனையுள்ளவர் நீங்கள் என்பதால், முப்பது நிமிடத்தில் மொக்கை எழுதுவது எப்படி என்பதை உங்கள் நண்பர்களுக்கு முகம் சுளிக்காமல் சொல்லித் தருவீர்கள்.

தனுசு ராசிக்கார பதிவர்களுக்கு விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு இருக்கும் என்பதால், ஐ.பி.எல் மற்றும் சசி தரூர் குறித்த பதிவுகளை அதிகமாக எழுதுகிற வாய்ப்பிருக்கிறது. இது தவிரவும், பல்லாங்குழி, கேரம்-போர்டு, ரம்மி போன்ற வீரவிளையாட்டுக்களில் இவர்கள் விற்பன்னர்களாயிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்காலத்தைப் பற்றி ஓரளவு துல்லியமாகக் கணிக்கிற திறமை இந்த ராசிக்கார பதிவர்களுக்கு இருக்குமென்பதால், ’சுறா’ எப்போது வெளியாகிறது, T20 உலகக்கோப்பை எப்போது துவங்குகிறது போன்ற அதிசயிக்கத்தக்க தகவல்கள் பற்றி பல பதிவுகள் எழுதுவீர்கள்.

இவ்வளவு நற்குணங்கள் (?!) இருந்தும் ஏதேனும் ஒரு பிரச்சினையில், உங்களுக்கு ஒவ்வாத கருத்துடன் யாராவது பதிவு போட்டால், வரிந்து கட்டிக்கொண்டு வசைமாரி பொழிந்து குறைந்தபட்சம் ஒன்றரைப் பதிவாவது போட்டே தீருவீர்கள். (அரைப்பதிவு என்பது உங்களுக்குப் பிடிக்காத பதிவருக்கு நீங்கள் போட்ட பின்னூட்டம் என்று பொருள் கொள்க!)

நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் அவசியம். இல்லாவிட்டால் "அருமை," என்று பின்னூட்டம் போட்டு விட்டு மைனஸ் ஒட்டுப் போடுகிறவர்களை உங்களால் அடையாளம் காண முடியாமல் போய் விடலாம்.

இந்த ராசிக்காரப்பதிவர்களுக்குப் பொதுவாக அனுபவம் மிகுதியென்பதால், ரயில்வே ஸ்டேஷன் கடையில் பார்த்த புத்தகங்களை, அவற்றின் அட்டையை வைத்தே விமர்சனம் எழுதுகிற வல்லமை படைத்தவர்களாயிருப்பார்கள். இந்தப் பதிவர்களைப் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரண்டு இலக்கத்திலேயே இருந்தாலும் அது குறித்துக் கவலைப்பட மாட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம், இவர்களின் பதிவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, ஆரம்பத்தில் தொடர்ந்தவர்களின் புகைப்படங்கள் பின்னுக்குத் தள்ளபடும் என்பதால், அவர்கள் மீண்டும் தங்களது புகைப்படத்தை முன்னுக்குக்கொண்டுவருவதற்காக, பின்தொடர்வதை நிறுத்தி விட்டு, மீண்டும் பின்தொடர எண்ணுவார்கள்; ஆனால் திரும்ப இணைய மறந்து விடுகிற சாத்தியக்கூறுகள் அதிகம்.

சுயமாக சிந்தித்து மொக்கை போடுவதே சிறப்பு என்ற தனித்தன்மை உடையவர்கள் என்பதால், இவர்கள் ஆங்கில மின்னஞ்சல்களை உட்டாலக்கிடி செய்யாமல், இருக்கிற மூளையை வைத்து ஏதோ அவர்களால் இயன்ற அளவு சொந்தமாக இடுகை போடுவார்கள். புது இடுகை போட்டாலும், அதன் சுட்டியை ஆன்லைனில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பாமல், அவர்களாக வந்து படித்தால் போதும் என்று தன்னிறைவோடு இருப்பார்கள்.

சகபதிவர்களோடு அடிக்கடி மின்னரட்டையில் சண்டையிடுவது இந்த ராசிக்கார பதிவர்களுக்கு வாடிக்கை என்பதால், அவ்வப்போது செல்போன்களை சுவிட்ச்-ஆஃப் செய்து வைப்பதும் உண்டு. இந்த ஒரு குறை தவிர, எவ்வளவு காட்டமாகப் பின்னூட்டம் போட்டாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருப்பார்கள் என்பதும் இந்த ராசிக்காரர்களின் தனிக்குணமாகும்.

இந்த ராசிக்காரர்கள் முன்பு எழுதிய இடுகைகளை இப்போது படித்தால் அவர்களாலேயே ஜீரணிக்க முடியாது என்பதால் தினசரி ஜெல்யூஸெல், டைஜீன் போன்ற மாத்திரைகளைத் தற்காப்பாக எப்போதும் வைத்திருப்பார்கள். இது தவிர, இவர்களின் மொக்கைக்கு எதிர்மொக்கை போடுகிறவர்களால் பின்னூட்டங்களில் வருகிற தொல்லை போன்ற சவாலான சூழ்நிலைகளையும் இவர்கள் சந்திக்க நேரிடும்.

இந்த ராசியில் ஒன்பதாமிடத்தில் இருந்த சனி பகவானின் கருணை காரணமாக, "இன்றைக்கு பதிவு போடவில்லை," என்று பதிவு போட்டாலும், அதற்கும் பத்து ஓட்டு விழுந்து கொண்டிருந்தது. சகபதிவர்களின் பின்னூட்டமும் தொடர்ந்து கிடைத்து வந்தன. நிறைய அலைச்சலும் குடைச்சலும் கூடவே இருந்தன. ஆனால் இப்போது சனிபகவான் பத்தாமிடமான பிளாகர் ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி செய்திருப்பதால், மீள்பதிவுகளுக்கும் இருபது ஓட்டுக்கள் விழுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பின்தொடர மறந்தவர்கள் பின்தொடரத்தொடங்குவார்கள். பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்வதற்காவது நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டி வரும்.

புது ஹிட்-கவுன்ட்டர், புது டெம்ப்ளேட் மற்றும் இன்னபிற கேட்ஜெட்டுகளை உபயோகிக்க இது தக்க தருணமாகும். உங்களது இடுகைகளால் இனிவரும் காலங்களில் உண்மையாகவே சிலருக்கு சிரிப்பு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொடர்பதிவுகளுக்கான அழைப்புகளும் அதிகமாவதற்கான அறிகுறிகள் தசாபலன்களில் உள்ளன. அதே சமயம், சகமொக்கையாளர்கள் கோஷ்டி சேர்த்துக்கொண்டு, எதிர்மறையான பின்னூட்டங்கள் மற்றும் மைனஸ் ஓட்டுகள் போடுவதற்கான அபாயமும் இருந்தே தீரும் என்பதால் தினமும் ஒரு ரவுண்டு எல்லா பதிவுகளையும் இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்து ஓட்டைக் குத்திவிட்டு வருவது நன்மை பயக்கும்.

நீங்களே எதிர்பாராதவிதமாக, உங்களது சில பதிவுகள் மிகவும் பிரபலமாகக்கூடும் என்பதால் இறைநம்பிக்கை திடீரென்று அதிகரிக்கலாம்.

இருப்பினும், கணினியின் மீது கவனம் செலுத்த வேண்டிவரும். அடிக்கடி கணினிக்கு சில உபாதைகள் ஏற்படலாம் என்பதால், பிரதி செவ்வாய்க்கிழமையன்று காஸ்பர்ஸ்கை கவசம் சொல்வது நல்ல பலனளிக்கும்.

பெரிதாக எந்தக் கெடுதலும் இல்லையென்றாலும், நல்ல பலன்கள் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் போல மிகவும் தாமதமாகவே வரும். ஆனால், போகப்போக, இதுவே பழகிவிடும் என்பதால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திருவள்ளூர்-புட்டுலூர் நடுவே அமைந்துள்ள அருள்மிகு நார்ட்டனாலயத்துக்கு சென்று அங்கப்பிரதட்சிணம் செய்வது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது.

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கடக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் சிம்ம ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் கன்னி ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் துலாம் ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் விருச்சிக ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

தனுசு ராசி வரைக்கும் வந்திட்டானே என்று மிச்சமிருக்கிற ராசிக்காரர்கள் வயிறு கலங்கிக்கொண்டிருப்பது புரிகிறது. விட்டிருவோமா என்ன?

Tuesday, April 20, 2010

பராசக்தி-ரிப்பீட்டேய்.....!


தமிழன்:

அரசியல் பல உட்டாலக்கிடி வேலைகளைப் பார்த்து இருக்கிறது. பல டுபாக்கூர் அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த பதிவு உட்டாலக்கிடியும் அல்ல; எழுதுகிற நான் டுபாக்கூரும் அல்ல. அரசியலில்வாதிகளிடம் அன்றாடம் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு அல்லல்படுகிற சாதாரண குடிமகன்தான்.

மனிதாபிமானத்தை இழந்தேன்; மனசாட்சியைப் புதைத்தேன்; மருத்துவத்துக்காக வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதைப் பார்த்தும் மவுனம் சாதித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று! இல்லை; நிச்சயமாக இல்லை!

மனசாட்சியைப் புதைத்தேன்- மனசாட்சி வேண்டாம் என்பதற்காக அல்ல; மனசாட்சியை வைத்துக்கொண்டு மலிவு விலைக்கடையில் மளிகை கூட வாங்க முடியாது என்பதற்காக!

வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதை வாளாவிருந்து பார்த்தேன்; அன்னை வேண்டாம் என்பதற்காக அல்ல! இந்த அன்னையை வரவேற்றால் வேறுசில அன்னைகள் வெகுண்டு எழுவார்களே என்பதற்காக!

உனக்கேன் இந்த கையாலாகாத்தனம்? உலகத்தில் யாருக்கும் இல்லாத கையாலாகாத்தனம் என்று கேட்பீர்கள்!

நானே பழக்கப்பட்டுவிட்டேன்;நன்றாகப் பழக்கப்பட்டுவிட்டேன்.

சுயநலம் என்பீர்கள்- என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. அண்டப்புளுகர்கள் அள்ளி வழங்கும் பணத்துக்காக அவ்வப்போது வாக்குப்போட்டு ஜனநாயகக்கடமையாற்றுகிறோமே, அதைப்போல!

என்னை சொரணைகெட்டவன் என்கிறீர்களே? இந்த சொரணைகெட்டவனின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவனை குப்புறப்போட்டு குமுறியவர்கள் எத்தனை, மல்லாக்கப்போட்டு மிதித்தவர்கள் எத்தனை, நிற்க வைத்து உதைத்தவர்கள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும்.

நாங்கள் நல்லாட்சியைப் பார்த்ததில்லை; நமீதாவின் நடனத்தை நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்திருக்கிறோம். கஞ்சி குடித்ததில்லை; ஜொள்ளு வடித்திருக்கிறோம்.

கேளுங்கள் என் கதையை! எம்மை இடித்தபுளி என்று இகழ்வோரே! திட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்!

தமிழ்நாட்டிலே இந்தப்பாடாவதி மாநிலத்திலே பிறந்தவன் நான். மாநிலத்தில் ஒரு பேச்சு; மத்தியில் ஒரு பேச்சு! தமிழக அரசியல்வாதிகளின் இரட்டைவேடத்துக்கு நானென்ன விதிவிலக்கா?

தில்லி! அவர்களின் வயிறை வளர்த்தது; சிலரை ஆசியப்பணக்காரர்களின் வரிசையில் சேர்த்தது.

கனவு கண்ட தமிழகத்தைக் கண்டேன்; கண்றாவியாக! ஆம், கையாலாகாததாக!

மாநிலத்தின் பெயரோ தமிழ்நாடு! மங்களகரமான பெயர்; ஆனால் டிவியில் கூட தமிழில்லை.

நிமிர்ந்து நின்ற தமிழனின் தலை குனிந்துவிட்டது. கையிலே டாஸ்மாக் பாட்டில்; கண்ணெதிரே சினிமா போஸ்டர்! வீட்டிலே இலவச டிவி! தமிழகம் முடங்கியது; தமிழகத்தோடு நானும் முடங்கினேன்.

தமிழனுக்கு தயவு காட்டியவர் பலர். அவர்களிலே சில தறுதலைகள் அவனது தலையிலே மிளகாய் அரைத்தனர். மரத்தடியில் திருடிவிட்டு பிள்ளைகளுக்கு மாநிலத்தை வடை போல பிய்த்துக் கொடுத்து அழகு பார்த்தனர்.

கள்ளச்சாமியார்களும் தமிழனுக்குக் கருணைகாட்ட முன்வந்தனர். பிரதி உபகாரமாக பக்தைகளோடு மெத்தையிலே வித்தை காட்டினர். அதில் தலையானவன் தான் நித்தி! எங்கள் தலையிலே போட்டான் சுத்தி! முதுகிலே இறக்கினான் கத்தி! காவியின் பெயரால், அதை அணிந்த பாவியின் பெயரால்!

தமிழன் சட்டையைக் கிழித்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்காவது போயிருப்பான். ஆனால், அவனை தன் மீதே கல்லை எடுத்து எறிந்து கொள்ள வைத்தவன் அவன் தான்!

தன் வயிறு பட்டினியில் காய்வதைத் தமிழன் விரும்பவில்லை; மாதத்திற்கு நாலு சினிமா கூட பாராமல் தவிக்க விரும்பவில்லை. அவனே மனசாட்சியைக் கொன்றுவிட்டான். ஒன்றுக்கும் உதவாதத்தை உத்தரத்தில் போடுவது தமிழகத்துக்குப் புதியதல்ல: சிங்கிள் டீக்காகச் சிங்கியடித்த வட்டச்செயலாளர்கள் எல்லாம் சிகையலங்காரம் செய்ய சிங்கப்பூர் போகிறார்கள். மாடுகட்டிப் போரடித்த தமிழனுக்கு மானாட மயிலாட போரடிக்கவில்லை.இது எப்படிக் குற்றமாகும்?

தமிழனுக்கு சொரணை வந்திருந்தால் பீஹாருக்கு ஓடிப்போய் ஐந்து வருடம், உத்திரப்பிரதேசத்துக்கு உருண்டு போய் பத்துவருடம், பாகிஸ்தானுக்கு ஓடிப்போய் பதினைந்து வருடம் - இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை? அதைத் தானா எல்லாரும் விரும்புகிறீர்கள்?

பணபலம் தமிழனை மிரட்டியது; பயந்து ஓடினான்.

ஆள்பலம் மிரட்டியது; மீண்டும் ஓடினான்.

ஆன்மீகம் தமிழனை விரட்டியது.

ஓடினான், ஓடினான் டாஸ்மாக்கின் கவுன்டருக்கே ஓடினான்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்; இலவசமாய் தினமும் பாட்டிலைக் கொடுத்திருக்க வேண்டும் என்று காட்டமாய்த் திட்டுபவர்கள். செய்தார்களா, வாழ விட்டார்களா எம் தமிழரை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

தமிழன்: யார் வழக்குமல்ல! அதுவும் என் வழக்குத்தான்! தமிழனைச் சொரணைகெட்டவன் என்று எழுதுகிறவர்களுக்காக இன்னொரு சொரணைகெட்டவன் பதில் சொல்வதில் என்ன தவறு?

தமிழன் சொரணையில்லாமல் இருப்பது ஒரு குற்றம்; சொரணை வந்தாலும் வராத மாதிரி நடிப்பது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்?

தமிழனை டாஸ்மாக் வாசலில் தத்தளிக்க விட்டது யார் குற்றம்? கடையின் குற்றமா? அல்லது கடையிலே ஊசிப்போன வடையின் குற்றமா?

திரையரங்க வாசலில் தமிழனை நிறுத்தியது யார் குற்றம்? நடிக நடிகையரின் குற்றமா? அல்லது நடிக நடிகையரின் நிகழ்ச்சிகளை அன்றாடம் ஒளிபரப்பும் டிவிகளின் குற்றமா?

அரசியல் என்ற பெயரில் அப்பத்தைப் பங்குபோடும் குரங்குகளை வளர்த்தது யார் குற்றம்? குரங்கின் குற்றமா? அல்லது குரங்கு போல தாவுகிறவர்களுக்கும் கூட்டம் கூட்டமாகப் போய் ஓட்டுப்போடும் வாக்காளர்கள் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும்வரை ஹவுஸ்ஃபுல் போர்டுகளும், பீர் விலையேற்றமும் குறையப்போவதுமில்லை.

இது தான் தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக் கடைக்குப் போனாலும் கிடைக்கிற மொக்கை, அலப்பறை, மப்பில் உளறுகிற தத்துவம்.

Monday, April 19, 2010

ராஜபார்வை

இடம்: கண்ணாயிரம் கண் ஆஸ்பத்திரி

சேட்டைக்காரன்: டாக்டர்! டாக்டர்! எனக்கு கொஞ்ச நாளா கண்ணே சரியாத் தெரிய மாட்டேங்குது டாக்டர்!

எதிரே நின்ற நபர்: அதை நீங்க சொல்லவே வேண்டாம்! ஏன்னா நான் டாக்டரில்லே; கம்பவுண்டர்! டாக்டர் உள்ளேயிருக்காரு!

சே.கா: ஓ சாரி! நான் உள்ளே போய்ப்பார்க்கலாமா?

கம்பவுண்டர்: போங்க போங்க! (மனதுக்குள்) நல்லாக் கண்ணு தெரியறவன் எதுக்கு இந்த ஹாஸ்பிட்டலுக்கு வரப்போறான்?

சே.கா: குட்மார்னிங் டாக்டர்!

டாக்டர்: குட்மார்னிங்! உட்காருங்க! என்ன பிரச்சினை?

சே.கா: டாக்டர்! எனக்கு சில சமயம் கண்ணு தெரியுது; சில சமயம் தெரிய மாட்டேங்குது! சில சமயம் எல்லாம் முழுசாத் தெரியுது. சில சமயம் பாதியாத் தெரியுது!

டாக்டர்: இன்டரஸ்டிங்! சமீபத்துலே என்ன சினிமா பார்த்தீங்க?

சே.கா: ராஜலீலை!

டாக்டர்: நினைச்சேன்! உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கப்போறேன். நான் காட்டுறதையெல்லாம் நீங்க படிச்சுச் சொல்லணும். சரியா?

சே.கா: தெரியும் டாக்டர்! ஒண்ணாம் கிளாஸ் பசங்க மாதிரி போர்டைப் பார்த்து அ..ஆ..இ..ஈ..படிச்சுக்காட்டச் சொல்லப்போறீங்க. அதுதானே?

டாக்டர்: அது தான் இல்லை! இந்தாங்க, இந்தப் பேப்பரிலே பெரிய எழுத்திலே என்ன எழுதியிருக்கு படிங்க பார்க்கலாம்...

சே.கா: என்ன டாக்டர் இது? ஒண்ணுமே தெரியலியே!

டாக்டர்: நிஜமாவா? நானே வாசிச்சுக்காட்டுறேன் பாருங்க! "பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா - முதல்வர் கடுந்தாக்கு!" இப்போ தெரியுதா?

சே.கா: இல்லியே டாக்டர்! ஏதோ கொசகொசன்னு தெரியுது! ஒரு எழுத்துக்கூட கண்ணுக்குத் தெரியலியே! அது போகட்டும், பதிபக்தின்னா என்ன டாக்டர்?

டாக்டர்: அதுவா, சிவாஜியும் பத்மினியும் நடிச்ச சினிமா! என்னப்பா இது, இவ்வளவு பெரிய எழுத்தே கண்ணுக்குத் தெரியலியா? அப்படீன்னா இந்த சின்ன எழுத்துலே அச்சாகியிருக்கிறது உன்னோட கண்ணுக்குத் தெரியவே தெரியாதே?

சே.கா: இல்லை டாக்டர்! ரொம்பவே க்ளீனாத் தெரியுது! வாசிக்க முடியுது!

டாக்டர்: (அதிர்ச்சியுடன்) என்னது? வாசிங்க பார்க்கலாம்!

சே.கா: "தமன்னாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த தெலுங்கு நடிகர்!"

டாக்டர்: அட, சுலபமா வாசிச்சிட்டீங்களே?

சே.கா: அந்த நடிகருக்கு அறிவே கிடையாது டாக்டர்! அவனவன் தமன்னாவை ஒருவாட்டி பக்கத்துலே நின்னு பார்க்கணுமுன்னு க்ரீன் பார்க் ஹோட்டல் வாசலிலே பல்லு கூட விளக்காம காலையிலேயே போய்க் காத்துக்கிட்டிருக்கான். இந்தாளுக்கு முத்தம் கொடுக்கக் கசக்குதா?

டாக்டர்: ஒரே குழப்பமாயிருக்கே! சின்ன எழுத்துலே எழுதினத வாசிக்கறீங்க! பெரிய எழுத்துலே எழுதறதை வாசிக்க முடியலியா? சரி, இதோ இதை வாசிக்க ட்ரை பண்ணுங்க!

சே.கா: என்ன டாக்டர்? வெத்துப் பேப்பரைக் கையிலே கொடுத்து வாசிக்கச் சொல்றீங்க?

டாக்டர்: என்னது வெத்துப்பேப்பரா? யோவ், இவ்வளவு கொட்டை எழுத்துலே பிரிண்ட் பண்ணியிருக்கு...."ஐ.பி.எல்.அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை,’ன்னு..! இதைக்கூடவா வாசிக்க முடியலே!

சே.கா: இல்லை டாக்டர்! எனக்குக் கிரிக்கெட்டுலே இன்டரஸ்ட் கிடையாது! அது போகட்டும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் செமி-ஃபைனலுக்குப் போயிருச்சா டாக்டர்?

டாக்டர்: கருமம், இன்னிக்கு யாரு முகத்துலே முழிச்சேனோ, இப்படியொரு பாடாவதி பேஷியன்ட் வந்து உயிரை எடுக்கிறாரு! இந்தாங்க இதையாவது ஒழுங்காப் படிங்க!

சே.கா: ஆஹா! நல்லாத் தெரியுது டாக்டர்! ’ரீமா சென்னுக்கு முத்தம் கொடுக்க 30 டேக்!’ பார்த்தீங்களா டாக்டர்? அந்த நடிகர் எவ்வளவு புத்திசாலித்தனமா வேணுமின்னே தப்பு தப்பா நடிச்சு நடிச்சு ரீமாவுக்கு முப்பது முத்தம் கொடுத்திருக்காரு! சும்மா சொல்லக் கூடாது!

டாக்டர்: க்கும், இதெல்லாம் கண்ணுக்கு நல்லாத் தெரியுது! ஆனா, பெருசு பெருசா இருக்கிற எழுத்து மட்டும் கண்ணுக்குத் தெரியலியா?

சே.கா: கோவிச்சுக்காதீங்க டாக்டர், இன்னொரு சான்ஸ் கொடுங்க, வாசிச்சுக் காட்டுறேன்!

டாக்டர்: ஓ.கே! இதோ இதை வாசியுங்க பார்க்கலாம்!

சே.கா: என்ன டாக்டர், போனவாட்டி வெத்துப்பேப்பரைக் கொடுத்தீங்கன்னா, இந்தவாட்டி கண்ணாடிப் பேப்பரைக் கொடுத்திருக்கீங்க! ரெண்டு பக்கமுமும் ஒண்ணுமே காணோமே!

டாக்டர்: (தலையிலடித்துக்கொண்டு) கடவுளே! நல்லாப்பாரு தம்பி, "தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு!" எங்கே, ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க!

சே.கா: வேண்டாம் டாக்டர்! எனக்கு ஒரு எழுத்துக்கூட கண்ணுக்குத் தெரியலே! இதுக்கு முன்னாடி கொடுத்தீங்களே, அது மாதிரி கொடுங்க படிச்சுக்காட்டுறேன்.

டாக்டர்: இந்தாங்க, படிச்சுத்தொலைங்க!

சே.கா: ஹையா! ’ஆஸ்பத்திரியில் பிரசவம்: நடிகை கோபிகாவுக்கு பெண் குழந்தை’. அடடா, தலைச்சன் குழந்தை ஆம்பிளையாப் பொறந்திருக்கலாமே! பரவாயில்லை, தமிழ்நாட்டுக்கு எதிர்காலக் கனவுக்கன்னி பொறந்தாச்சுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்.

டாக்டர்: ஐயோ எனக்குத் தலையைப் பிச்சுக்கலாம் போலிருக்கே! என் கண்ணுக்கே தெரியாத குட்டிக் குட்டி எழுத்தெல்லாம் படிக்கிறே! ஆனா கொட்டை எழுத்திலே இருக்கிற விஷயம் ஒண்ணு கூடவா உன் கண்ணுக்குத் தெரியலே!

சே.கா: அதுனாலே தானே உங்களைத் தேடி வந்திருக்கேன் டாக்டர்! ப்ளீஸ் ஹெல்ப் மீ!

டாக்டர்: ஓ.கே! ஓ.கே! இதோ இதைப் படியுங்க!

சே.கா: இதென்ன டாக்டர்? எதையுமே கொடுக்காமப் படிக்கச் சொல்லுறீங்க?

டாக்டர்: என்னது? எதையுமே கொடுக்கலியா? வியாதி ரொம்ப முத்திருச்சு போலிருக்கே? எதுக்கும் கடைசியா உங்களுக்குத் தெரியுற செய்தியாத் தர்றேன். படிச்சுக்காட்டுங்க சரியா! இந்தாங்க....!

சே.கா: "படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அசின்!"

டாக்டர்: அச்சச்சோ!

சே.கா: பார்த்தீங்களா? உங்களுக்கே பரிதாபம் வருதில்லையா டாக்டர்?

டாக்டர்: நாசமாப்போச்சு! நான் அசினை நினைச்சுப் பரிதாபப்படலே! உங்களை நினைச்சுப் பரிதாப்படறேன் தம்பி!

சே.கா: டாக்டர், எனக்கு என்ன வியாதி டாக்டர்?

டாக்டர்: தம்பி, இது உனக்கு மட்டும் இருக்கிற வியாதியில்லே, நம்ம ஊருலே நிறைய பேருக்கு இந்த வியாதி ரொம்ப நாளாயிருக்கு! இந்த வியாதியாலே பாதிக்கப்பட்டவங்களுக்கு பெரிய விஷயங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாது; சின்ன விஷயங்கள் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும்.

சே.கா: இதை எப்படி குணப்படுத்துறது டாக்டர்?

டாக்டர்: எதுக்கு குணப்படுத்தணும்? இப்படியே இருக்கிறது தான் பெட்டர்! பெரிய விஷயங்களைப் பத்திக் கவலைப்பட்டுப் பயனில்லை. சின்ன விஷயங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கிறது எவ்வளவோ மேல் இல்லையா?

சே.கா: அது சரி டாக்டர், நீங்க நாலா மடிச்சு வச்சிருக்கீங்களே நியூஸ் பேப்பர், அதுலே அஞ்சாவது பக்கத்துலே மீரா ஜாஸ்மின் 25 லட்சம் அபராதம் கட்டின நியூஸ் தானே போட்டிருக்கு?

டாக்டர்: அட ஆமா! பார்த்தீங்களா, இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பேப்பரை மடிச்சு வந்திருந்தாலும் படிச்சிடறீங்க! முக்கியமான நியூஸை விரிச்சுக்காட்டினாலும் படிக்க முடியலே உங்களுக்கு! அது தான் இந்த வியாதியோட ஸ்பெஷாலிட்டி...

சே.கா: இந்த வியாதிக்கு என்ன பெயரு டாக்டர்....?

டாக்டர்: தமிழிலே இந்த வியாதியை....

சே.கா: யாருக்கு வேணும் தமிழ்ப்பெயர்? இதென்ன சினிமாவா? இந்த வியாதியைச் சொல்லி நான் என்ன வரிவிலக்கா கேட்கப்போறேன்? புதுசா யாரும் இதுவரை கேள்விப்படாத வாயிலே நுழையாத நல்ல இங்கிலீஷ் வியாதி பெயரைச் சொன்னீங்கன்னா, நாலு பேரு கிட்டே சொல்லிப் பெருமைப்பட்டுக்குவேன்!

டாக்டர்: நாளைக்கு இதே நேரத்துக்கு வாங்க! யோசிச்சிட்டு சொல்லுறேன். சரியா? இப்போ இந்த சீட்டுலே எழுதியிருக்கிற ஃபீஸை ரிசப்ஷனிலே கட்டிட்டுப் போயிட்டு வாங்க!

சே.கா: என்ன டாக்டர்? ஃபீஸை எழுதியிருக்கிறதா சொல்றீங்க? என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலியே...?

(டாக்டர் கண்ணாயிரம் மூர்ச்சையடைந்து விழுகிறார்)

Saturday, April 17, 2010

மா’நரக’க்காவல்


(டி.எஸ்.பி.டார்ச்சர் வெற்றிவேல் ஜீப்பில் வந்து இறங்கவும், ஏட்டு டிலக்ஸ் பாண்டியன் வந்து சல்யூட் அடிக்கிறார்)

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ், என்னய்யா இது? பீச்சுலே எங்கே பார்த்தாலும் ஜோடி ஜோடியா உட்கார்ந்திட்டிருக்காங்க? லா அண்டு ஆர்டர் என்னா ஆவுறது?

டிலக்ஸ் பாண்டியன்: சார்! அவங்கெல்லாம் புருசன் பொஞ்சாதிங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னய்யா உளர்றே? எனக்கே காதுகுத்தறியா? அதோ பாரு, அந்த ப்ளூ சுடிதார் பொண்ணும்...வெள்ளை டி-ஷர்ட்டும்! அவங்க கண்டிப்பா புருசன் பொஞ்சாதியா இருக்க முடியாதுய்யா!

டிலக்ஸ் பாண்டியன்: எப்படி சார் சொல்றீங்க?

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ், இவ்வளவு சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டிருக்காங்க! எப்படி புருசன் பொஞ்சாதியா இருக்க முடியும்? என் சர்வீஸுலே கல்யாணத்துக்கப்புறமும் இவ்வளவு சிரிக்கிற ஆம்பிளையை நான் பார்த்ததே கிடையாது தெரியுமா?

டிலக்ஸ் பாண்டியன்: சார், நீங்க உங்க அனுபவத்தை வச்சு ஒரு முடிவுக்கு வராதீங்க! நான் விசாரிச்சிட்டேன்! அந்தம்மா கழுத்துலே தாலி கூட இருக்கு சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னய்யா ஏட்டு நீ? நாம இந்த கெடுபிடியை ஆரம்பிச்சதிலேருந்து திர்லக்கேணியிலே ஒரு புது பிசினஸ் ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா உனக்கு?

டிலக்ஸ் பாண்டியன்: என்ன சார் அது?

டார்ச்சர் வெற்றிவேல்: பெல்ஸ் ரோட்டுலே ஒரு கடையிலே இமிடேஷன் தாலி வாடகைக்குக் கொடுக்கிறாங்க! ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாய்! அதை மாட்டிக்கிட்டு வந்து கப்பிள்ஸ்னு சொல்லி நம்ம கண்ணுலேயே மண்ணைத் தூவுறாங்கய்யா பப்ளிக்!

டிலக்ஸ் பாண்டியன்: உங்களுக்கு அந்தக் கடைதான் தெரியும்! ஸ்டார் தியேட்டராண்ட ஒரு கடையிலே குழந்தைங்களையே வாடகைக்கு விடுறாங்க சார்! லவர்ஸ் அந்தக் குழந்தைக்கு பலூனும் ஐஸ் க்ரீமும் வாங்கிக் கொடுத்து விளையாட விட்டுட்டு ஜாலியா தம்பதிங்க போல வேஷம் போட்டுக்கினு கடலை போட்டுக்கிட்டு இருக்காங்க சார்!

(இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு இளம்பெண் ஓடி வருகிறாள்.)

பெண்: சார்...சார்! ஹெல்ப் ஹெல்ப்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னம்மா பொண்ணு? என்னாச்சு?

பெண்: சார், அந்தப் பக்கம் நாலஞ்சு பசங்க பொண்ணுங்களைப் பார்த்து விசிலடிக்கிறாங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ் ஒன் நாட் த்ரீ! போய் அவனுங்களை இழுத்திட்டு வாய்யா!

டிலக்ஸ் பாண்டியன்: சார், அது யாரு தெரியுமா? சைதாப்பேட்டை சொக்குவோட பிள்ளையும் அவன் சினேகிதங்களும்! ஞாபகமிருக்கா, போன வாரம் கூட சொக்குவோட ஒண்ணு விட்ட அண்ணனோட கொள்ளுப்பேத்திக்கு நடந்த காதுகுத்துக்கு தலைவர் போயிருந்தாரே! மறுநாள் எல்லாப் பத்திரிகையிலேயும் போட்டோ போட்டிருந்தாங்களே! அந்த சொக்குவோட பையன்!

டார்ச்சர் வெற்றிவேல்: நல்ல வேளை! இந்தாம்மா! விசிலடிக்கிறதெல்லாம் இ.பி.கோவிலே அஃபென்ஸ் இல்லேம்மா. நாங்க கூடத்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் விசிலடிக்கிறோம். இதையெல்லாம் பெரிசா கம்ப்ளைன் பண்ண வந்திட்டியே...போம்மா..போ!

பெண்: சார்..சார்..என்னைப் பார்த்து கண்சிமிட்டுறான் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: ஏம்மா? அவனோட கண்ணை அவன் சிமிட்டுறான்; உனக்கென்ன வந்தது? இப்போ போறியா இல்லே மெரீனா பீச்சுலே காதலனோட வந்திருக்கேன்னு உங்கப்பாவுக்கு போன் பண்ணட்டுமா?

பெண்: சார்..சார்..எனக்குக் கல்யாணமாயிடுச்சு சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: ரொம்ப நல்லதாப்போச்சு! உன் புருஷனோட செல்போன் நம்பரைக்கொடு! அவர் கிட்டே சொல்லறேன்.

பெண்: ஐயோ சார், நான் அவரு கூட தான் வந்திருக்கேன் சார்! அவரு பர்ஸை பிக்-பாக்கெட் அடிச்சவனைத் துரத்திட்டுப் போயிருக்காரு சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: யோவ் ஒன் நாட் த்ரீ! யாருய்யா நம்ம ஏரியாவுலே புது பிக்-பாக்கெட்?

டிலக்ஸ் பாண்டியன்: எல்லாம் நம்ம பிச்சுவா பக்கிரி கேங்தான்!

டார்ச்சர் வெற்றிவேல்: ஓ சரி சரி, நான் எனக்குத் தெரியாம வேறே புது பார்ட்டி வந்திருச்சோன்னு ஒரு நிமிஷம் பயந்திட்டேன். இந்தாம்மா பொண்ணு...மரியாதையா உன் புருசனைக் கூட்டிக்கிட்டு வூடு போய்ச்சேரு! இல்லாட்டி உங்க புருசன் தான் பிக்பாக்கெட் அடிச்சான்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவோம்...புரியுதா..?

பெண்: வேண்டாம் சார்! நாங்க சென்னையை விட்டே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப்போயிடறோம் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: போய்ச்சேரும்மா! சே, வர வர எதுக்குத்தான் கம்ப்ளைன் பண்ணறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமப்போயிருச்சு! அது போகட்டும், அதென்னய்யா அங்கே கும்பலா உட்கார்ந்திட்டிருக்காங்க?

டிலக்ஸ் பாண்டியன்: சார், அவங்களும் லவ்வர்ஸ் இல்லை; தம்பதிங்க தான்! நாம தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு கல்யாண மண்டபத்துலேருந்து டைரக்டா வந்திருக்காங்க! சந்தேகம் வரக்கூடாதுன்னு இன்னும் மாலையைக் கூடக் கழட்டலே! எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஐயரையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க!

டார்ச்சர் வெற்றிவேல்: கஷ்டம்! அதுசரி, அந்தப் பக்கம் சுண்டல் சாப்பிட்டுக்கிட்டிருக்காங்களே? அவங்களை விசாரிச்சியா?

டிலக்ஸ் பாண்டியன்: சார், அவங்க காதல்ஜோடிதான்! ஆனா பாருங்க...டீட்டெயில் கேட்டா இங்கிலீஷுலே திருப்பிக் கேள்வி கேட்குறாங்க!

டார்ச்சர் வெற்றிவேல்: ஓஹோ! அவங்களை விட்டிரு, யாராவது மினிஸ்டரோட சொந்தக்காரங்களா இருப்பாங்க! அப்புறம், அதோ பலூன் சுடுற இடம் பக்கத்துலே இருக்காங்களே...அது கண்டிப்பா ல்வ்வர்ஸ் தான்!

டிலக்ஸ் பாண்டியன்: ஆமா சார்! ஆனா, அந்தப் பையன் நம்ம பிளேடு பக்கிரியோட மகன் சார்! பெரிய இடத்து விவகாரம் நமக்கெதுக்கு சார்?

டார்ச்சர் வெற்றிவேல்: அடடா, என்னய்யா இது? பெரிய மனுசன் வீட்டுக்குழந்தைங்கெல்லாம் எதுக்குய்யா இந்த அசிங்கம் புடிச்ச இடத்துக்கு வர்றாங்க? நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஒரு நல்ல டி.பியோ, சர்க்யூட் ஹவுஸோ, ஹோட்டலோ ஏற்பாடு பண்ணிக்கொடுத்திருக்க மாட்டோமா?

டிலக்ஸ் பாண்டியன்: அதையும் நானே கேட்டேனே! அவனுக்கு எல்லா ஹோட்டலும் தெரியுமாம். அதுனாலே, ஏதாவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க, பார்க்கலாமுன்னு சொல்லிட்டான் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: சாராயம் விக்குறவன் கூட நம்மளை மதிக்க மாட்டேங்குறாங்களேய்யா?

டிலக்ஸ் பாண்டியன்: அதோ ஐஸ் க்ரீம் ஸ்டால் கிட்டே இருக்காங்களே! அது யாரு தெரியுதா? ஓட்டேரி நரியோட பொண்ணு!

டார்ச்சர் வெற்றிவேல்: இருக்கட்டும் பாவம்! நரி ஒருத்தன் தான் முப்பதாம் தேதியே சரியா மாமூல் கொண்டு வந்து கொடுக்கிறவன்; ரொம்ப நேர்மையான ரௌடி! விட்டிரலாம். நிலைமையைப் பார்த்தா நம்ம கெடுபிடியை ஆரம்பிச்சதுக்கப்புறம் மெரீனாவுலே காதலர்களே வர்றதில்லை போலிருக்குதே!

டிலக்ஸ் பாண்டியன்: ஆமா சார், இப்படியே போச்சுன்னா கிரைம்-ரேட்டை குறைக்கவே முடியாமப் போயிரும் போலிருக்கே?

டார்ச்சர் வெற்றிவேல்: இந்த நிலைமை இப்படியே நீடிச்சா, அந்தக்காலத்து போலீஸ் மாதிரி நாமளும் திருடறவன், கொள்ளையடிக்கிறவன், சாராயம் விக்கிறவனையெல்லாம் பிடிக்க வேண்டி வந்திருமோன்னு பயமாயிருக்கு பாண்டியன்!

டிலக்ஸ் பாண்டியன்: பயமுறுத்தாதீங்க சார்! எனக்கு அதெல்லாம் பழக்கமேயில்லை சார்! இன்னிக்கு வந்ததுக்கு யாராவது இளிச்சவாயனைப் பிடிச்சுக்கொண்டாந்திடறேன் சார்.

டார்ச்சர் வெற்றிவேல்: அதுக்கு அவசியமேயில்லை! நம்ம லேடி கான்ஸ்டபிள் ரீட்டா ஒரு ஜோடியைப் பிடிச்சுத்தள்ளிக்கிட்டு வர்றாங்க பாரு!

ரீட்டா: சார், இவங்க ரெண்டு பேரும் பீச்சுலே லவ் பண்ணிட்டிருந்தாங்க சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: யாரும்மா நீ? இந்தப் பையன் யாரு? என்ன தைரியமிருந்தா மெரீனா பீச்சுலே வந்து காதல் பண்ணுவீங்க?

இளம்பெண்: சார்..சார்! எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் தெரியும் சார்!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னது? பெத்தவங்க கிட்டே சொல்லிட்டு காதல் பண்ணுறீங்களா? இதுக்கே உங்களைப் புடிச்சு உள்ளே போடணும்.

இளம்பெண்: ஐயோ சார், எங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு சார்!

டிலக்ஸ் பாண்டியன்: கல்யாணம் நிச்சயமானாலும் அதுவரைக்கும் நீங்க காதலருங்க தான்!

இளைஞன்: சார்! எங்களைப் பிடிக்கிறது இருக்கட்டும். படகுமறைவிலே உங்க டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க ரெண்டு பேரு ரொமான்ஸ் பண்ணிட்டிருக்காங்க! அவங்களைப் புடியுங்க!

டார்ச்சர் வெற்றிவேல்: என்னது? கான்ஸ்டபிள் ரீட்டா! இது உண்மையா?

ரீட்டா: ஆமா சார், மண்ணடி ஏட்டு கனகாவும் மந்தவெளி ஏட்டு மயில்சாமியும்...!

டார்ச்சர் வெற்றிவேல்: என்ன கருமமய்யா இது? நம்ம டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படிப்பண்ணினா எப்படிய்யா?

டிலக்ஸ் பாண்டியன்: சார், நான் அன்னிக்கே சொன்னேனே சார்! மெரீனா பீச்சு டியூட்டிக்கு புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கிறவங்களைப் போடாதீங்க...வயசானவங்களாப் பாத்துப் போடுங்கன்னு...நீங்க கேட்டாத்தானே...?

ரீட்டா: கொடுமை சார்! இங்கே வர்ற காதலர்களைப் பார்த்து நம்ம ஆளுங்களும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! இப்போ கூட நீச்சல்குளம் பக்கத்துலே நம்மாளுங்க ரெண்டு பேரு ’நான் தேடும் செவ்வந்திப்பூவிது,’ன்னு டூயட் பாடிட்டிருக்காங்க! ஏதோ ஷூட்டிங் போலிருக்குன்னு பப்ளிக் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்திட்டிருக்காங்க! ஒருத்தன் துண்டை விரிச்சு நிறைய சில்லறையே தேத்திட்டான்னா பாருங்களேன்.

டார்ச்சர் வெற்றிவேல்: ஐயோ மானம் போகுது! யோவ் ஒன் நாட் த்ரீ! மத்த லவர்ஸை விட்டிரு..நம்ம ஆளுங்க யாரைப்பார்த்தாலும் அவங்களையெல்லாம் இமீடியட்டா இங்கிருந்து விரட்டிரு! இதுக்கு மேலே நான் இருந்தா அசிங்கமாயிடும்...நான் போறேன்..

(டார்ச்சர் வெற்றிவேல் ஜீப்பைக் கிளப்பிக்கொண்டு சொல்கிறார்)

டிலக்ஸ் பாண்டியன்: ஹி..ஹி! ரீட்டா! உன் புருசன் வெளியூருலேருந்து வந்தாச்சா?

ரீட்டா: இல்லீங்க சார், அதுசரி, உங்க வீட்டுக்காரி பிரசவம் முடிஞ்சு வந்திட்டாங்களா?

டிலக்ஸ் பாண்டியன்: இல்லே ரீட்டா!

(எங்கேயோ எஃப்.எம்.ரேடியோவில் ’அடியே கொல்லுதே,’ பாடல் கேட்கிறது.)

Friday, April 16, 2010

மனிதநாயம்



நீண்டநாட்களுக்குப் பிறகு, தபால்பெட்டியில் அவனுக்காக ஒரு கடிதம் காத்திருந்தது. ஆயுள் காப்பீட்டுக்கழகத்திலிருந்து வந்திருந்த வருடாந்திர நினைவூட்டல்! பெட்டியிலிருந்து எடுத்தவேகத்திலேயே இரண்டாய் மடித்து சட்டைப்பையில் திணித்துக்கொண்டு படியேறி அறைக்குச்சென்றான்.

இப்போதெல்லாம் கடிதங்கள் அபூர்வமாகி விட்டன. முன்போல இப்போதெல்லாம் பொங்கல்,தீபாவளி வாழ்த்துக்கள் வருவதில்லை. பரிச்சயமானவர்களின் கையெழுத்துக்கள் ஏறக்குறைய மறந்து போய்விட்ட யுகத்தில் வாழ்த்துக்களும் வார்த்தைப் பரிவர்த்தனைகளும் கைபேசியிலும், கணினியிலுமே தொடர்கின்றன. எனவே சம்பிரதாயத்துக்காகவேனும் ’அன்புள்ள’ என்று தொடங்கி, ’இப்படிக்கு உன் அன்புள்ள,’ என்று முடிகிற கடிதங்களின் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இன்னும் அவர்களுக்கெல்லாம் அன்பு இருக்க வேண்டுமே என்ற விசித்திரமான பயம் எங்காவது யாராவது அவர்களுக்கு வந்த கடிதத்தை வாசிக்கிறதைப் பார்க்கும்போது மேலிடுகிறது.

கடைசியாக தபால்காரரிடமிருந்து நேரடியாக எப்போது கடிதம் வாங்கினோம் என்று அவனால் உறுதியாக நினைவுகூர முடியவில்லை. இங்கு குடிபெயர்ந்தபிறகு சிலமுறை பார்த்த தபால்காரரின் முகம் மறந்து விட்டது. ஆனால்......

போஸ்ட்மேன் ஆவுடையின் முகம் மட்டும் எண்ணிய கணத்தில் முழுமையாக நினைவுக்கு வருகிறது. அவர் அவனது பால்யநினைவுகளின் ஒரு பகுதி!

கொளுத்தும் வெயிலில் சைக்கிளின் பாகங்கள் அலறிக் கட்டியம்கூற, கரிசல்மண்ணில் சக்கரங்கள் அழுந்த அழுந்த, வியர்க்க விறுவிறுக்க தபால்கொண்டு வருவார் தபால்காரர் ஆவுடை! வழியில் செருப்பின்றி நடக்கிற சிறுவனையோ, சிறுமியையோ பார்த்தால் முன்னால் உட்காரவைத்து வீடுவரை கொண்டுவிட்டுப் போகிற நல்ல மனிதர் ஆவுடை!

ஆவுடையைப் பற்றி யோசிக்க நிறையவே இருந்தும், அவனுக்கு நினைவு வந்ததெல்லாம் ஒரு பிள்ளைப்பிராய சம்பவம் தான்.

தெருநாய் போட்டிருந்த ஒரு குட்டியைக் குளிப்பாட்டுகிற சாக்கில், அதை ஐயனார் கோவில் சுனையில் அவனும் அவனது நண்பர்களும் வீசி எறிவதை வழக்கமாக வைத்திருந்தனர். குளிரிலும் பயத்திலும் நடுநடுங்கிய அந்தக் குட்டிநாய், நீந்தி குளத்தின் அக்கரைக்குச் செல்லுமுன்னரே, அங்கிருந்து இன்னொருவன் குளத்தில் கல்லெறிந்து அதை மேலும் கலவரப்படுத்துவான். சுற்றிலும் நின்றபடி கல்லெறிகிற சிறுவர்களுக்குப் பயந்த அந்த நாய்க்குட்டி குளத்துக்குள்ளேயே பல நிமிடங்கள் சோர்வைப் புறந்தள்ளிவிட்டு பயத்தோடு தொடர்ந்து நீந்திக்கொண்டிருக்கும். ஒருவழியாக இரக்கம் பிறந்ததும் அந்த நாய்க்குட்டியைக் கரைக்கு வரவிட்டு, பிறகு அது சுத்தமாகக் குளித்துவிட்டது என்று சந்தோஷப்படுவது அந்தச் சிறுவர்களின் வழக்கமாக இருந்தது.

இந்தக் கொடூரமான விளையாட்டை முதலில் கண்டித்தவர் ஆவுடைதான்.

"என்னலே பண்ணுதீய?" கேட்ட வேகத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு, சுனைப்பக்கம் வந்தவர் முகத்தில் அதுவரை கண்டிராத கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது.

"கோட்டிக்காரப்பய மக்கா! அது செத்துரும்லே!" என்று இரைந்ததும் சிறுவர்களின் சிரிப்பும், கல்லெறிதலும் நின்றுவிடவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று கரையேறிய அந்த நாய்க்குட்டி, குளத்தில் எறிந்த இவன் காலடிக்கே வந்து வாலாட்டியபடி நின்றது.

அடுத்து ஆவுடை செய்ததை இப்போது நினைத்தாலும் இவனுக்குக் குலைநடுங்கியது.

"தண்ணியிலே இறங்கு!" என்று உத்தரவிட்டார். இவனும் சுனைக்குள்ளே மெல்ல மெல்ல இறங்கினான். "இன்னும் பின்னாலே போ....இன்னும்...," ஆவுடை அதட்ட அதட்ட, இவன் இடுப்புவரை ஆழமாக இருந்த பகுதிவரைக்கும் போய்விட்டான்.

"இன்னும் போ...போ!" என்று கூறியதோடு நிறுத்தாத ஆவுடை, ஒரு கல்லை எடுத்து இவன் பக்கமாகத் தண்ணீரில் எறிந்தார்.

"ஐயோ...ஆழமாயிருக்கு...பயமாயிருக்கு....மீன் வேறே கடிக்கு....!"

"நல்லாக் கடிக்கட்டு....போலே இன்னும்...போ!"

"பயமாயிருக்கு...!" இவன் அழவே தொடங்கினான்.

"மேலே வா!" அழுகையும் அச்சமாகவும் இவன் கரையேறியதும், ஆவுடை இவனை சமாதானப்படுத்தினார். பிறகு, விளக்கினார்.

இவனைப்போல அழத்தெரியாத, இவனைப்போல பேசத்தெரியாத அந்த நாய்க்குட்டியின் உயிரோடு விளையாடிய குரூரத்தை ஆவுடை உணர்த்தினார். ஒருவேளை இவன் மூழ்குகிறாற்போலிருந்தால் உதவிக்கு வருகிறவர்கள் அந்த நாய்க்குட்டிக்காக வரமாட்டார்கள் என்பதையும் அவனுக்கு நினைவூட்டினார். இவனுக்குப் புரிந்ததோ இல்லையோ, தலையாட்டியிருந்தான்.

அது, பள்ளிக்கூடத்திலும் கிடைக்காத ஒரு பாலபாடம்! தபால்காரர் ஆசிரியரானார். அதன்பிறகு, பஞ்சதந்திரக்கதைகள் படித்தபோதெல்லாம் ஆவுடையின் முகம் கண்முன் தோன்றியது. நேரில் பார்த்ததைக் காட்டிலும், அவரது முகம் அடிக்கடி கற்பனையில் தென்படத்தொடங்கியது.

இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த சம்பவம் இவனுக்கு நினைவிருக்கிறது. புரிந்து கொள்ள முடியாத வயதில் ஆவுடை மீது கோபமிருந்தது; புரியத்தொடங்கியதும் வியப்பு மேலிட்டது. இப்போதும், ஆவுடை போன்றவர்கள் இருக்கலாம்; யார் கண்டது?

தபால்காரருக்காகக் காத்திருந்த நாட்கள் முடிந்து விட்டது போலிருந்தது. இந்தத் தெருவுக்கு யாரேனும் தபால்காரர் வருவாரா என்று பார்க்கவேண்டும் போலிருந்தது. ஜன்னல் வழியாக நோட்டமிட்டான். தெருவின் ஒரு பக்கத்தை அவனால் முழுமையாகப் பார்க்க முடிந்தது.

அதே கட்டிடத்தின் வாசலில், துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்தவனும், அவனது மனைவியும் சிரித்துப்பேசியபடி நின்று கொண்டிருந்தனர். இருப்பவர்களும், இல்லாதவர்களும் ஏதோ ஒரு விதத்தில் சிரிப்பதற்கான காரணங்களை வைத்திருக்கிறார்கள் போலும்! ஆனால்...

இவர்களின் சிரிப்பில் ஏதோ நெருடியது. என்னவென்று பார்த்தபோது, தூரத்தில் அவ்வப்போது தான் பார்த்த அந்த மனநிலை சரியில்லாத தாடிக்காரன் சென்று கொண்டிருப்பதையும், அவ்வப்போது நின்று தரையைக்க்கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். என்ன நடக்கிறது என்பதைப்புரிந்து கொள்ள இவனுக்கு சில கணங்கள் பிடித்தன; ஆனால், புரிந்ததும் இரத்தம் மூளைக்குள்ளே கொதிப்பாகப் பாய்வது போலிருந்தது.

அந்த மனநோயாளியின் மீது இந்த இஸ்திரிக்காரன் கல்லை எறிந்து கொண்டிருந்தான்; அதைப் பார்த்து அருகிலிருந்து அவனது மனைவி சிரித்துக்கொண்டிருந்தாள். தன் மீது எவரோ கல்லெறிகிறார்கள் என்பதை மட்டும் உணரமுடிந்த அந்த பைத்தியக்காரன், தரையில் விழுந்த கல்லையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். யார் தன் மீது கல்லெறிகிறார்கள் என்று திரும்பிப்பார்க்கிற சொரணையோ, அறிவோ அவனுக்கு இல்லை போலும்! அவனது கண்கள் தன் மீது விழுந்த கல்லை மட்டுமே கோபத்தோடு வெறித்துக்கொண்டிருந்தன.

இவர்களின் சிரிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது - அந்தப் பைத்தியக்காரன் தெருமுனையில் திரும்பி, கண்ணுக்குத்தென்படாமல் போனபிறகும் கூட!

அவர்கள் சிரிப்பது இவனுக்குத் தன்மீது யாரோ கல்லெறிவது போலிருந்தது; ஜன்னலைச் சாத்தினான். கண்களை மூடியபடி யோசித்தான்.

அந்த நாய்க்குட்டி நிச்சயம் பலவருடங்களுக்கு முன்னாலேயே இறந்திருக்கக் கூடும்; தபால்காரர் ஆவுடை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று இவனால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் அவனால் உறுதியாகச் சொல்ல முடிந்தது.

இந்த உலகத்தில் உயிரோடு இருப்பவர்கள் இவன்; அந்தப் பைத்தியக்காரன்; அவன் மீது கல்லெறிந்த இஸ்திரிக்காரன்; அதைப்பார்த்து சிரித்த அவனது மனைவி ஆகியோரும் அவர்களைப்போன்றோரும் தான்!

Thursday, April 15, 2010

டாப் 10 தமிழ்ப்படங்கள்- என் பார்வையில்

நம்ம பிரபாகர் "எனக்குப் பிடித்த சினிமாக்கள்," என்று ஒரு இடுகை போட்டு, அதை என்னையும் தொடரச் சொல்லியிருக்காருங்க! இதுக்கு சில நிபந்தனைகள் வேறே போட்டிருக்காரு...!

நிபந்தனைகள்

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே (தப்பிச்சேன்....!)


2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும். ( சபாஷ்! நான் ஜக்குபாய் படம் வர்றதுக்கு முன்னாடியே ’நெட்’டிலே பார்த்தவனாச்சே!)

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட) (அடிவயித்திலேயே கைவச்சுட்டாரே! ஒரு ஷகீலா படத்தைப் பத்திக் கூட எழுத முடியாமப் போச்சே!)

சரி, சமாளிக்க வேண்டியது தான்....! பொதுவா, எனக்குப் பிடிச்ச திரைப்படமுன்னா எல்லாரும் டைரக்டருங்க, இசையமைப்பாளருங்க, கதாநாயகருங்களைப் பத்தியே பெரும்பாலும் எழுதறாங்க! இது பெரிய ஆணாதிக்க சதின்னு தோணுது! (பாருங்க, தாய்க்குலத்தின் பிரதிநிதிகளின் அரங்கு நிறைந்த கரகோஷத்தைக் கேளுங்க!) அதுனாலே, எனக்குப் பிடிச்ச பத்து படங்களிலே எனக்குப் பிடிச்ச பத்து கதாநாயகிகளைப் பத்தி எழுதப்போறேன்.





















10. மின்னலே


கௌதம் மேனனுக்கு ஜே!

ஜில்லுன்னு மழைபெய்து கொண்டிருக்கையிலே, டெலிபோன் பூத்துக்குக்கு வெளியிலே, சின்னப்பசங்களோட சேர்ந்துக்கிட்டு மழைத்தண்ணீரைக் காலாலே அளைஞ்சு விளையாடுறா மாதிரி கதாநாயகியை அறிமுகப்படுத்தின விதமிருக்கே! அது கவிதை!

ரீமா சென்! பெரிய அழகுன்னெல்லாம் சொல்ல முடியாது. (கொஞ்சம் துணிச்சல் இருக்கிறவங்க அழகேயில்லேன்னு கூட சொல்லுவாங்க!) இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டுத்தான் படத்துலேயே ரீமாவுக்கு நிறைய மேக்-அப், குறைச்சலான குளோஸ்-அப்புன்னு சமாளிச்சிருப்பாங்க! ஆனா, ரீமாவைப் பார்த்ததும் பக்கத்து வூட்டுப்பொண்ணை, எதிர்த்த வூட்டுப்பொண்ணைப் பார்க்கிற ஃபீலிங் வராம, சென்னைக்கு வந்தபுதுசுலே மத்யகைலாஷ் ஸ்டாப்பு கிட்டே முதமுதலா ஜீன்ஸும் சட்டையும் போட்டுக்கினு நின்ன ஒரு பொண்ணைப் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான்.

இன்னும் சொல்லப்போனா, ’மின்னலே’ படத்துலே ரீமாவோட தோழியா வர்ற அந்த உயரமான பொண்ணு சில காட்சிகளிலே கதாநாயகியை விடவும் அழகாத் தெரிஞ்சாங்க! (அவங்க யாரு, இப்போ எங்கே இருக்காங்க?)

படத்துலே வர்ற மாதவனோட நம்மளை அடையாளம் காணலாம். ரீமா சென் மாதிரி பொண்ணுங்களும் அசாதாரணமானவங்க கிடையாது. அது தான் அந்தப் படத்தோட வெற்றிக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். "வசீகரா" பாட்டுக் கேட்டா, டாஸ்மாக்கு போயிட்டு வந்த எஃபெக்டு கிடைக்குதா இல்லியா?

ரீமா அக்கா, எவ்வளவு வேண்ணா மேக்-அப் போட்டுக்கோங்க- அது உங்க இஷ்டம்! ஆனா, அதிகமா குளோஸ்-அப்புலே முகத்தைக் காட்டாதீங்க; பார்க்கிறவங்களுக்குக் கஷ்டம்!



















9. அந்நியன்


கிராமத்துலே பொறந்து வளர்ந்தவனுக்கு, பட்டணவாழ்க்கையிலே அதிகமாப் பார்க்க முடியாத சங்கதிங்க பாவாடை-தாவணி தான்! (பின்னே, இதுக்குன்னு தினமும் நங்கநல்லூர், மயிலாப்பூர் போகவா முடியும்?) "ஜெயம்" படம் முழுக்க பாவாடை-தாவணியிலே வலம்வந்த சதா, "அந்நியன்" படத்துலே விதவிதமான காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு வந்ததுலே என்னோட அப்பள இதயம் நொறுங்கிப்போச்சுங்க! "அய்யங்காரு வீட்டு அழகே," பாட்டுலே தெரியுற நளினம் வேறே; "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாட்டுலே காட்டுற வேகம் வேறே; "அண்டங்காக்காய் கொண்டைக்காரி," பாட்டுலே இருக்கிற துள்ளலே அலாதி! ரெமோ ரோஜாப்பூ அனுப்புற காட்சியிலே டிப்பிக்கல் நடுத்தர வர்க்கப் பெண்மாதிரியே, குளிச்சு முடிச்ச ஈரத்தலையிலே துணியைச் சுத்திட்டு வந்து நிற்குறபோது, "வாவ்"ன்னு மனசுக்குள்ளேருந்து ஒரு கூச்சல் வந்தது. திருவையாறு ஆராதனைக்குப் போகிற அந்த ரயில்காட்சிகள் "அந்நியன்" படத்திலேயே மிகவும் மென்மையான, இளமையான பகுதி! அதே மாதிரி இறுதிக்காட்சியிலே திருமணம் முடிஞ்சு ரயிலில் போகிறபோது, திருவல்லிக்கேணியிலேருந்து புதுசாக் கல்யாணமாகி வெளியூர் போகிற ஒரு பெண்ணைப் பார்க்கிற நிறைவு -சதாவைப் பார்த்தபோது வந்திச்சு! சும்மா டூயட் பாடி, ஆடிட்டிருக்காம பயம்,அருவருப்பு,பரிதாபம்,சந்தோஷம்னு பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துற ஒரு கதாபாத்திரம்! "அந்நியன்" படத்தை ஷங்கருக்காக ஒருவாட்டியும், விக்ரமுக்காக ரெண்டுவாட்டியும், சதாவுக்காக மூணுவாட்டியும் பார்த்தேன். சதாப்பொண்ணு! ’தல’யே போனாலும் ’திருப்பதி’ மாதிரி படங்களிலே நடிக்காதீங்க!




















8. சச்சின்


’சந்திரமுகி’ படத்துக்கு டிக்கெட் கிடைக்காமப் போய்ப் பார்த்தபடம். விஜய் ரொம்ப நாளைக்கப்புறம் இயல்பா நடிக்க முயற்சி பண்ணின படம். வடிவேலு காமெடி சூப்பர்! ஆனா, இந்தப் படத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம், வேறேன்ன? ஜெனிலியா தான்! பேருலே என்னங்க இருக்கு? ஹரிணியோ ஜெனிலியாவோ, க்யூட்!

அந்த மழைக்காட்சியிலே விஜய் மயங்குனதுலே என்ன ஆச்சரியம் இருக்கு? அவ்வளவு அழகாப் படம்பிடிச்ச ஒரு காட்சி அது. கண்களிலே அலாதியான ஒரு துறுதுறுப்பு! அந்த அடர்த்தியான புருவம் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டுன்னு தோணுது. ஒன்றிரெண்டு காட்சிகள் தவிர, இந்தப் படத்துலே ஜெனிலியா போட்டுக்கிட்டு வர்ற காஸ்ட்யூம் பாந்தமா, கல்லூரி மாணவி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாயிருந்தது. உணர்ச்சிகரமான நடிப்பெல்லாம் அம்மணிக்கு வராதுங்கிறது உண்மைதான். (யாருக்கு வேணும்?). திரையிலே பார்த்ததும் மனசுக்குள்ளே பட்டாசு கொளுத்திப்போட்ட மாதிரி ஒரு பரபரப்பை ஏற்படுத்துற அழகான, கொஞ்சம் குழந்தைத்தனமான முகம்! (இந்தப் படத்துலே பிபாஷா பாசுவுக்குப் பதிலா வேறே யாரைப்போட்டிருந்தாலும் கூட ரெண்டு வாட்டி பார்த்திருப்பேன்- ஜெனிலியாவுக்காகவே!

குருவி தலையிலே பனங்காயை வச்சா மாதிரி, ஜெனிலியாவுக்கெல்லாம் சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி கதாபாத்திரத்தைக் கொடுக்காதீங்க! அம்மணி பொம்மை மாதிரி வந்திட்டுப் போறது தான் நல்லது!




















7. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்


கமல்,பிரகாஷ்ராஜ் ரெண்டு பேரும் தூள் கிளப்பின ஒரு படத்துலே, அதிகம் வாய்ப்பில்லாம ஃபுல் மீல்ஸ் தட்டுலே ஓரமா இருக்கிற ஊறுகாய் மாதிரி வந்து போற கதாபாத்திரம் சினேகாவுக்கு! கமலுக்கு ஜோடிங்கிறதுனாலேயே என்னமோ, இந்தப் படத்துலே முன்னைக்காட்டிலும் இளமையா இருந்தாங்க! டாக்டர் மாதிரி வரும்போதும் சரி, ’பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு,’ பாட்டிலேயும் சரி - சினேகா பளிச்சின்னு இருந்தாங்க! அளவோட சிரிச்சு, அவஸ்தைப்பட வைக்காம அருமையாக நடிச்ச ஒரு படம். காஸ்ட்யூம் டிசைனர் யாராயிருந்தாலும் சரி, கனவு சீனுலே கூட கண்ணியமா உடையலங்காரம் பண்ணி, சினேகாவைப் படம் முழுக்க ஒரு அழகுச் சித்திரமாக் காண்பிச்சதுக்கே பாராட்டணும். "சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனா தானாடோய்," பாட்டு கூட சினேகாவுக்கு அப்புறம் தான் எனக்கு! புடவை சினேகாவுக்குப் பொருந்துறா மாதிரி வேறே யாருக்கும் பொருந்துதான்னு ஒப்பிடக்கூட எனக்கு விருப்பமில்லை. சினேகா அத்தை! அளவோட திறந்து மூடறதுக்குப் பேருதான் வாய் அளவுக்கதிகமா திறந்தா அதுக்குப் பேரு கால்வாய்....!




















6. சண்டக்கோழி


’ரன்’ படத்துலே பெருசா ஒண்ணும் வாய்ப்பில்லேங்கிறதுனாலேயோ, ஆள் ரொம்பவே குள்ளமா இருக்காங்குறதுனாலேயோ, மீரா ஜாஸ்மினை நான் சீரியஸா எடுத்ததே கிடையாதுங்க!

ஆனா, நம்ம ரூம்-மேட் சுரேந்திரன் கூட ஏசியாநெட்டுலே ரெண்டு மூணு மலையாளப்படம் பார்த்ததுக்கப்புறம், மீரா ஜாஸ்மின் மேலே ஒரு பெரிய மரியாதையே வந்திருச்சு! அதுலேயும் "அஷுவிண்டே அம்மா,"ன்னு ஒரு படத்திலே, கிளைமேக்ஸிலே ஊர்வசியும், மீரா ஜாஸ்மினும் அவங்க அழாம நம்மளையெல்லாம் அழ வச்சிருவாங்க! சண்டைக்கோழியிலே குறும்பு மட்டுமில்லே, குணச்சித்திரத்தையும் பலவிதங்களிலே வெளிப்படுத்துற கதாபாத்திரம்! பாவாடை தாவணியிலே அழகா பொம்மை மாதிரி தெரிஞ்சதோட, சின்னச் சின்ன முகமாறுபாடுகளைக் காட்டி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பாங்க! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னுறதுக்கு மீரா ஜாஸ்மின் ஒரு நல்ல உதாரணம். லிங்குசாமி,விஷால்,ராஜ்கிரண்-ன்னு "சண்டக்கோழி" படத்திலே பல பாராட்டத்தக்க விஷயங்கள் இருந்தாலும், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், யாரை பாவாடை தாவணியிலே பார்த்தாலும் மீரா ஜாஸ்மின் ஞாபகம் வந்ததென்னமோ உண்மைதான்.

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாம, அம்மணி கூப்பிடுற படத்துலேயெல்லாம் நடிச்சு "மரியாதை"யைக் கெடுத்துக்கிறாங்களேங்கிறது தான் ஒரே குறை!



















5. சித்திரம் பேசுதடி


கானா பாட்டுன்னா எனக்கு உசுரு! "வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும் கல்யாணம்," பாட்டை எஃ.எம்மிலே கேட்டதுமே, படத்தைப் பார்க்கணுமுன்னு முடிவு பண்ணிட்டேனில்லா? ஆனா, படத்தைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே கண்ணைப் பறிச்சது பாவனா தான். அதிக ஒப்பனையில்லாமலே, படத்துலே எல்லாக் காட்சிகளிலும் ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க! முதல்லே அந்த தெத்துப்பல்லு கொஞ்சம் உறுத்திச்சு; அப்புறம் பாவனாவோட சிரிப்பழகோட சூத்திரமே அதுதான்னு புரிஞ்சதும், சரண்டராயிட்டேன்! பாவனாவைப் பார்த்தா கண்டிப்பா, இந்த மாதிரி ஒரு முகத்தை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கோமோன்னு ஒரு கேள்வி வரும் எனக்கு! (அப்புறம் தான், அந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்திட்டேன்கிறது ஞாபகத்துக்கு வரும்!) சித்திரம் பேசுதடி படத்துலே பாவனாவுக்கு அதிக வாய்ப்பில்லே! ஆனாலும், அந்தப் படத்தின் வெற்றிக்கு பாவனாவோட ஹோம்லி அழகு ஒரு முக்கியமான காரணம்கிறதை யாராலாவது மறுக்க முடியுமா? (ப்ளீஸ்..மறுத்திடாதீங்க!)




















4. ஐயா


"ஒருவார்த்தை கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்,"- இந்தப் பாட்டை எங்கே, எப்போ கேட்டாலும் எனக்கு நயன்தாரா ஞாபகத்துக்கு வருவாங்க! இந்தப் படத்தைப் பார்த்திட்டு வெளியே வந்தபோது சுரேந்திரன் சொன்னது: "தமிழ்சினிமாவுக்கு அடுத்த அம்பிகா!" (இப்போ அனுராதா மாதிரி ஆயிட்டாங்கன்னுறது வேறே விஷயம்!)

பாவாடை தாவணிக்காகவே ஒரு கதாநாயகியைப் பிடிச்சதுன்னா, அதுலே "ஐயா"வும் உண்டு. குறிப்பா "ஒரு வார்த்தை..." பாட்டுலே முகத்திலே நிறையவே வெகுளித்தனம் தெரியும். ஆரம்பக்காட்சிகளிலே கிராமத்துப் பெண்களுக்கே உரித்தான அந்த குறும்பு, நக்கல் எல்லாத்தையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருப்பாங்க! தலைநிறைய பூவும், நெற்றியிலே பெரிய பொட்டும், வெகுளிச்சிரிப்புமா ஒரு தென்பாண்டிப் பெண்ணை அப்படியே கண் முன்னாலே கொண்டுவந்து நிறுத்தியிருப்பாங்க!

ஆனா, இப்போ...? ஹூம்!

ஐயா, யாரடி மோகினி போன்ற படங்களில் நான் பார்த்ததே நயன்தாரா! அடுத்தடுத்து நடிக்கிற படங்கள் எதுவும் பயன்தாரா....!



















3. கிரீடம்


தல தலதான்னு நிரூபிச்ச இன்னொரு படம் இது!

த்ரிஷா
வை இந்தப் படத்துலே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னா காரணம் தாவணின்னு இதுக்குள்ளே கண்டுபிடிச்சிருப்பீங்களே...?

பிள்ளையாரை தல திருடுற காட்சி, அந்த மோட்டார்சைக்கிள் ஸ்டேண்டு காட்சி, தண்ணித்தொட்டி காட்சி எல்லாமே த்ரிஷாவின் நகைச்சுவை, குறும்பு போன்று அதிகம் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்களை வெளிப்படுத்தின படம்! மிக மிக அழுத்தமான, இறுக்கமான ஒரு கதை கொண்ட இந்தப் படத்துலே த்ரிஷா ஒரு பெரிய ஆறுதல்! இந்தப் படத்தோட டெம்போவை விவேக் காமெடி குறைச்சிருச்சோன்னு எனக்கு ஒரு சந்தேகமுண்டு; ஆனா, விவேக்கோட மனைவியா வந்தாங்களே, அவங்க சில காட்சிகளிலே பார்க்க சூப்பராயிருந்தாங்க...ஹிஹி!
நடிக்கிறதுக்கும் த்ரிஷாவுக்கு இந்தப் படத்துலே ஓரளவு வாய்ப்பிருந்ததுனாலே, இது எனக்குப் பிடித்த தல படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்த த்ரிஷா படங்களிலும் ஒன்று. அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் ஊஹூம்! எனக்கு வேண்டாம், அங்கே த்ரிஷா படம் ரிலீஸ் ஆகாதே!




















2. கஜினி


"சிம்ரன்" கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனதும் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அவ்வ்வ்வ்! அதை நிரப்புறதுக்கு அசின் தான் சரின்னு நான் நினைக்கிறேன். (தமன்னா தான் நிரப்பப்போறாங்கன்னு இயக்குனர் ஷங்கர் சொல்லியிருக்காரம்; அவரு கிடக்குறாரு, சினிமாவைப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?)

கஜினியிலே அவங்களோட கதாபாத்திரமே ரொம்ப அழகா வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த அழகுக்கு அழகு சேர்த்தது அசின் தான். நடிப்பாகட்டும்; நடனமாகட்டும் - இல்லாட்டி அப்பப்போ ஆளைப் புடிச்சுத்தள்ளுற அந்த சிரிப்பாகட்டும்....சூப்பர்!

ஒருமாலை இளவெயில்நேரம்- பாட்டின்போது நான் மெய்மறந்து விசிலடிச்சிட்டேன்! சுட்டும் விழிச்சுடரே பாட்டுலே வர்ற நடன அசைவுகள் சூர்யா செய்யும்போது வேடிக்கையாகவும், அசின் செய்தபோதும் ரொம்ம்ப அழகாகவும் தெரிஞ்சது....

கஜினி - இந்தியையும் பார்த்தேன்-அசினுக்காகவே!

அசின் அசின் தான்! :-))


1.சிவாஜி


மேட்டருக்கு வந்திட்டேன் பார்த்தீங்களா? :-)))

ஸ்ரேயாவைப் பத்தி நிறைய எழுதிட்டேன்கிறதுனாலே இந்தப் பதிவுலே அதிகம் எழுத வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க! ’சிவாஜி’ படத்துலே ஸ்ரேயாவோட விதவிதமான காஸ்ட்யூம்களைப் பார்க்கிறதுக்காகவே பலதடவை பார்த்தேன்! ஒரு தடவை தமிழ் சிவாஜிக்கு டிக்கெட் கிடைக்காம தெலுங்கு சிவாஜி பார்த்தேன். அப்போ தான் ஒரு விஷயம் தெரிஞ்சுது! நீங்களும் ’சிவாஜி’ படக்காட்சிகளை டிவியிலே போட்டா கவனியுங்க! ’சிவாஜ்’ தமிழ்ப்படத்துலே ஸ்ரேயா மட்டும் தெலுங்கு வசனத்துக்கு ஏற்றா மாதிரி வாயசைச்சிருப்பாங்க! இதைக் கண்டுபிடிச்ச எனக்கு ஏதாவது விருது கொடுக்கிறதா இருந்தா தனிமடல் போட்டுத் தெரிவிக்கலாம்.

பாவாடை-தாவணியிலிருந்து(ஐயோ, இதை விட மாட்டேங்கிறானேன்னு முணுமுணுக்காதீங்க!), மாடர்ன் டிரஸ்லே என்னென்ன வகையுண்டோ,அத்தனையும் போட்டு ஸ்ரேயா கலக்கின படம். நான் என்ன சொல்றது, விஜய் டிவியிலே மதனே சொல்லிட்டாரு:" இந்தப் படத்துலே கதாநாயகியின் அழகை வெளிப்படுத்திய மாதிரி ஷங்கர் இதுக்கு முன்னாடி எந்தக் கதாநாயகியையும் வெளிப்படுத்தலே!"

ஸ்ரேயா, இன்னும் என்னோட ஈ-மெயிலுக்கு பதில் வர்லே! க்யா பாத் ஹை....?

இந்தத் தொடர்பதிவை யார் வேண்ணாலும் தொடரலாம். ஆனா, குறிப்பா இவங்க மூணு பேரும் கண்டிப்பாத் தொடர்ந்தே ஆகணும்.

விஸ்வாமித்திரன்

மசக்கவுண்டன்

கொன்றல்காற்று

பின்னே என்னங்க? இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத் தான் உண்டு. என்னா நான் சொல்றது?

(இதுக்கும் இவங்க மசியலேன்னா, இன்னும் வலைப்பதிவே ஆரம்பிக்காதவங்களைத் தான் அடுத்த தொடர்பதிவுக்குக் கூப்பிடுவேன்னு இந்த நேரத்தில் எச்சரிக்கிறேன்...ஆமா...!)