பகவான் தோசாராமின் ஆசிரமத்துக்கு முன்னால், எலிமெண்டரி
ஸ்கூல் வாசலில் எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு நிற்பதுபோல ஏகத்துக்கும் க்யூ நின்று
கொண்டிருந்தது. சுடலையும் கருமுத்துவும் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தெருவில்
கிடத்தப்பட்ட தௌசண்ட்வாலாவின் திரியைப் போலக் கடைசியில் நின்று கொண்டிருந்தனர். தரிசனம்
முடிந்த பக்தகோடிகளில் பலர், ’பிள்ளை நிலா’ சீரியல் பார்த்ததுபோலப் பிழியப் பிழிய
அழுதவாறு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
”எதுக்கு அழறாங்க?” சுடலை கருமுத்துவிடம்
குழப்பத்துடன் கேட்டான். “உள்ளே சினிமா நூற்றாண்டுக்காக, நண்பகல் காட்சியிலே ’நல்ல தங்காள்’ படமா காட்டுறாங்க?”
”சுடலை! வலியில்லாம
சந்தோஷமில்லைங்குறதுதான் பகவான் தோசாராமோட தத்துவம்!” சுடலைக்குக் கருமுத்து
விளக்கினான். “அதுனாலே அவர் எல்லாருக்கும் வலிக்கிறாமாதிரிதான் ஆசீர்வாதம்
பண்ணுவாரு! காதைப் பிடிச்சு முறுக்குவாரு, கன்னத்துலே கிள்ளுவாரு, முதுகுலே ஓங்கி
ஒரு மொத்து வைப்பாரு! ரொம்பப் புண்ணியம் செஞ்சிருந்தா அவங்க மண்டையிலே நறுக்குன்னு
குட்டுவாரு!” கருமுத்து சொல்லச் சொல்ல,
சுடலையின் அடிவயிறு கலங்கியது.
”இதுக்கு நான் பாவியாவே
இருக்கலாம் போலிருக்கே?” முணுமுணுத்தான் சுடலை. “என்ன ஆசீர்வாதம்டா இது? பகவான் முன்னாடி கணக்கு வாத்தியாரா
இருந்தாரா?”
”இல்லைடா! உடுப்பி
கிருஷ்ணபவன்லே தோசை மாஸ்டரா இருந்தாரு! அதான் சன்னியாசம் வாங்கினதும் பகவான்
தோசாராம்னு பெயரை மாத்திக்கிட்டாரு!”
”டேய் கருமுத்து! காதல் விசயமா
வந்திருக்கேண்டா! இவர் ஆசீர்வாதம் பண்ணியே எனக்குப்
பக்கவாதம் வர்றா மாதிரிப் பண்ணிடப்போறாரு!”
”ஏய்! பகவானைப் பத்தி
அப்படியெல்லாம் பேசாதே! அவரு மனசு வைச்சார்னா, அந்தப் பொண்ணு அப்படியே மயங்கி
பின்னாடியே வர ஆரம்பிச்சிடுவா!”
”அட பாவி! அவர் பின்னாடியே அவ வர்றதுக்காடா
இவ்வளவு செலவுபண்ணி நான் இங்கே வந்திருக்கேன்?”
”அடேய், அவ உன் பின்னாடி
வருவான்னு சொன்னேண்டா! இந்த பகவான் அப்படிப்பட்டவரில்லை! ஆசிரம போர்டை நல்லாப்
பாரு! பெருசா ‘U’ன்னு போட்டிருக்கு கவனிச்சியா? இந்த
ஆசிரமத்துலே ‘அடல்ட்ஸ் ஒன்லி’ மேட்டரே கிடையாது.”
பக்தர்கள்
நின்றிருந்த வரிசையானது, அரசு அலுவலகத்துக்கு அனுப்பிய மனுவைப் போல ஆமைவேகத்தில் மெதுவாக
நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டம் அவ்வப்போது ’தோசாராமுக்கு ஜே!” என்று கூவிக்கொண்டிருந்தது.
”கருமுத்து! எப்படியாவது என்
திவ்யா எனக்குக் கிடைக்கணும்டா! அப்புறம் என் ஆயுசுமுழுக்க இந்த தோசாராமுக்கு
சாம்பாரா, ஐ மீன், அடிமையா இருப்பேண்டா!” என்று உருக்கத்துடன் கூறினான் சுடலை.
”பகவானுக்கு இதெல்லாம்
பிரியாணி சாப்பிட்டுட்டு பல்குத்தற மாதிரி,”
என்று
சிரித்தான் கருமுத்து. “அவரோட குரு அல்வானந்தாவுக்குத் தெரிஞ்ச எல்லா வித்தையும்
இவருக்கும் தெரியும்!”
”அப்ப உண்மையாவே திவ்யா
என்கிட்டே மயங்கி என் பின்னாடியே வருவாளா?”
”என்ன அப்படிக் கேட்டுட்டே?” கருமுத்து சுடலையின்
கழுத்தைப் பிடித்துக் குலுக்கினான். “உன் திவ்யா போடற துணிமணி ஏதாவது கிடைச்சாப்
போதும். அதை வைச்சே அவளை வசியம் பண்ணிருவாரு பகவான்!”
”மொதல்லே அவ துணிமணி எனக்குக்
கிடைக்கிறதுக்கு என்னடா வழி?” சுடலை அப்பாவியாய்க் கேட்டான். “இதுக்குன்னு தனியா இட்லிராம்,
பொங்கல்ராம்னு வேறே சாமியாருங்க இருக்காங்களா?”
”கடவுளே!” கருமுத்து நொந்துகொண்டான். “ஒரு
பொண்ணோட மனசைத்தான் திருட முடியலே; டிரஸ்ஸைக் கூடவா திருட முடியாது? சரி, இன்னொரு
ஆப்ஷன் இருக்கு! திவ்யாவோட ஒரே ஒரு தலைமயிர் கிடைக்குமா?”
”டேய்!” அலறினான் சுடலை. “உங்க பகவான்
என்னை அடிக்கப்போறாரோ, கடிக்கப்போறாரோ தெரியாது. ஆனா, திவ்யாகிட்டே செமத்தியா
செருப்படி கிடைக்கப்போவுது.”
”நல்லதாப் போச்சு!” என்று கூவினான் கருமுத்து. “செருப்படி
வாங்கினா வேலை இன்னும் சுலபமா முடிஞ்சிடும். டேய், நீ திவ்யாகிட்டே செருப்படி வாங்கும்போது நான்
சொல்றமாதிரி செய்!”
”டேய்! நான் என்னமோ
பாண்டிபஜார்லே பனியன் வாங்கப்போறா
மாதிரிப் பேசறே? செருப்படி வாங்கப்போறேண்டா!” பல்லைக்கடித்து இரைந்தான்
சுடலை.
”கத்தாதேடா!” கருமுத்துக் கிசுகிசுப்பாகச்
சொன்னான். “திவ்யா செருப்பாலே அடிக்கும்போது, அவ காலடி மண்ணு உன் கன்னத்துலே
ஒட்டிக்கும் இல்லையா? அதை அப்படியே ஒரு பேப்பர்லே பொட்டலமாக் கட்டி எடுத்துட்டு
வந்து பகவான்கிட்டே கொடுத்தாப் போதும்! அவளோட காலடி மண்ணை வைச்சே அவளை வசியம்
பண்ணிடுவாரு பகவான்!”
”அப்படியா?” சுடலை வியந்தான்.
“காலடிமண்ணுக்கு அவ்வளவு பவரா? அதுக்கு ஏண்டா செருப்படி வாங்கணும்? அவ செவ்வாய்,
வெள்ளின்னா அம்மன்கோவிலுக்குப் போவா! அப்ப நைஸா அந்தச் செருப்பைத் திருடிட்டு
வந்துடறேனே?”
”அதெல்லாம் வொர்க்-அவுட்
ஆவாதுடா!”
சட்டென்று
கூறினான் கருமுத்து. “அம்மன் கோவில் வாசலிலே ஏகப்பட்ட பொண்ணுங்களோட காலடிமண்ணு
இருக்கும். அப்புறம் ஆள் மாறிட்டாப் பிரச்சினையாயிடும். செருப்படிதான்
இருக்கிறதுலேயே ரொம்ப ஸேஃப்! நியாயமாப் பார்த்தா நீயெல்லாம் காதலிக்கிறதுக்கு நானே
உன்னைச் செருப்பாலே அடிக்கணும். காதலிக்கிற பொண்ணேதானே அடிக்கப்போறா.
வாங்கிக்கோயேன்!”
”சரிடா, முதல்லே பகவான் என்
பிரார்த்தனையை நிறைவேத்தணுமே?”
”டோண்ட் வொரி!” சிரித்தான் கருமுத்து.
“பகவான் சம்மதிக்கலேன்னா, அவரோட சம்சாரத்துகிட்டே சொல்லி காரியத்தை
நிறைவேத்திடறேன்.”
”என்னது? சாமியாரு கல்யாணம் வேறே கட்டிக்கிட்டாரா?”
”பின்னே? சாமியார்னா ஆசிரமம்
கட்டி, கல்யாணம் கட்டி, மெடிக்கல் காலேஜ் கட்டி, இஞ்ஜினீயரிங் காலேஜ் கட்டி,
கோர்ட்டுலே ஜாமீனுக்குப் பணம் கட்டின்னு எவ்வளவு பண்ண வேண்டியிருக்கு?”
”என்னமோடா! என் காதல் உன்
கையிலேதான் இருக்கு!”
”இல்லை!” திருத்தினான் கருமுத்து.
“திவ்யா காலிலேதான் இருக்கு!”
வரிசை
மெல்ல மெல்ல நகர்ந்தது.
”டேய் கருமுத்து! எனக்கொரு
சந்தேகண்டா!”
”நீ என்ன கேட்கப்போறேன்னு
தெரியும்! இடதுகால் செருப்படியா, வலதுகால் செருப்படியான்னு தானே?”
”இல்லைடா! செருப்பாலே
கன்னத்துலே அடிச்சா காலடிமண்ணு ஒட்டிக்குமாடா?”
”நியாயமான சந்தேகம்தான்!” என்ற கருமுத்து பக்கத்தில்
நகர்ந்துகொண்டிருந்த வரிசையிலிருந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டான். “எக்ஸ்க்யூஸ்
மீ மேடம்! என் ஃபிரண்டுக்கு ஒரு சின்ன டவுட்டு! க்ளியர் பண்ணுவீங்களா?”
”என்ன டவுட்டு?” அந்தப்பெண் வினவினாள்.
”நீங்க வரும்போது பாஸஞ்சர்
டிரெயினிலே வந்தீங்களா, கூட்ஸ் வண்டியிலே வந்தீங்களா?”
”என்னது?” அந்தப் பெண்மணி, சட்டென்று
காலிலிருந்த செருப்பைக் கழற்றி சுடலையின் கன்னத்தில் அடித்தாள். “இப்ப டவுட்டு
கிளியராச்சுதா?”
ஒரு
நிமிடம் சுடலையின் கண்முன்னால் இந்திரலோகத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர்
அமர்ந்துகொண்டு ‘வதனமே சந்த்ரபிம்பமோ’ என்று பாடுவதுபோலவும், அதற்கு ரம்பை,ஊர்வசி,
திலோத்தமை ஆகியோர் ஆடுவதுபோலவும் காட்சி தோன்றி மறைந்தது. ஊத்தப்பத்தைப் போல
வழவழவென்றிருந்த அவனது கன்னம், செருப்படியில் சில்லி பரோட்டாவைப் போலச்
சின்னாபின்னமாகியது.
”ஆச்சா?” என்று கருமுத்து ஆர்வத்தோடு கேட்க,
சுடலை கன்னத்தைத் தடவிப்பார்த்துவிட்டு “ஆஹா, கிளியர் ஆயிடுச்சு! ரொம்ப தேங்க்ஸ்
மேடம்! நீங்க நல்லாயிருக்கணும்!” என்றான்.
”லூசு!” என்று அந்தப் பெண்மணி வெடுக்கென்று
திரும்பி ‘தோசாராமுக்கு ஜே!’ என்று கோஷமிட்டாள்.
”பார்த்தியா? செருப்படி
வாங்கினாக் காலடிமண்ணு கண்டிப்பாக் கிடைக்கும்” என்று அமெரிக்காவைக்
கண்டுபிடித்த கொலம்பஸ் போல அகமகிழ்ந்து சொன்னான் கருமுத்து.
”ஆனா என் திவ்யா இந்தம்மா
மாதிரி இல்லையேடா!” சுடலைக்கு இன்னும் சந்தேகம் இருந்தது. ”அவ அடிச்சா இம்புட்டு
வலிக்குமா, இம்புட்டுக் காலடி மண்ணு ஒட்டுமான்னு தெரியலியே!”
”அதுக்கென்னடா? பகவானோட
பக்தைகள் நிறைய பேரு நின்னுட்டிருக்காங்க! இன்னும் எத்தனை செருப்படி வேணும்னாலும்
வாங்கி ட்ரையல் பார்க்கலாம். நமக்கும் பொழுது போனமாதிரி இருக்கும்! நம்பிக்கையில்லாம
எந்தக் காரியத்துலேயும் இறங்கக்கூடாதுன்னு பகவான் சொல்லுவாரு!”
”போதுண்டா!” காதைப் பிடித்துக் கொண்டான்
சுடலை. “இன்னும் சாமியார்கிட்டே வேறே ஆசீர்வாதம் வாங்கணும். சும்மா டிபனே
சாப்பிட்டுக்கிட்டிருந்தா லஞ்ச் டயத்துலே என்ன பண்றது?”
ஒருவழியாக
கருமுத்துவும், சுடலையும் உள்ளே சென்றதும், பகவான் தோசாராம் டார்பாலின் போட்டு
மூடப்பட்ட டெம்போ டிராவலர் போல வீற்றிருந்தார். அவர் பக்கத்தில் அவரது சகதர்மிணி, ஆரணிப்புடவை
கட்டிய ஆட்டோ ரிக்ஷாபோல அமர்ந்திருந்தார்.
”குருவே! இவன் பேரு சுடலை!
இவன் ஒரு பொண்ணைக் காதலிக்கிறான். அந்தப் பொண்ணே இவனுக்குக் கிடைக்க நீங்கதான்
அருள்பாலிக்கணும்!”
”ஓ!” பகவான் தோசாராம் முகத்தில்
எந்த ஹாஸ்யமுமின்றி மந்தகாசப்புன்னகை புரிந்தார். “மங்களம் பிராப்தி ரஸ்து!”
”அவ பேரு திவ்யா!” என்று இடைமறித்தான் சுடலை. “மங்களம்கிறது
அவ அம்மா பேரு! நீங்கதான் எப்படியாவது என்
திவ்யாவை வசியம் பண்ணி என்கூட சேர்த்து வைக்கணும். என்னைப் பார்த்தாலே அவ
மயங்கணும்.”
”குழந்தாய்!” பள்ளிக்கூடத்தில் ஆஜர்
சொல்லும் பையனைப் போலக் கையை உயர்த்தினார் பகவான் தோசாராம். “இப்போதே உன்னைப்
பார்த்தால் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் அலறி மயங்கி விழுகிற மாதிரித்தானே
இருக்கிறாய்?”
”குருவே, எனக்குக் காதல்
பிச்சை போடுங்க!” சுடலை கெஞ்சினான்.
”விதி வலியது!” என்று தாடியை நீவினார் பகவான்
தோசாராம். “உனக்குத் தனியாக விசேஷ ஆசீர்வாதம் செய்ய வேண்டும். அந்தத் தனியறையில்
போய் உட்கார்!”
”குருவே! நானென்ன செய்ய
வேண்டும்?” குருபக்தியில் கருமுத்துவின் முதுகு காற்றுபோன சைக்கிள் டியூப் போல
வளைந்தது.
”ஆசிரம வளாகத்திலிருக்கும்
மருந்துக்கடைக்குச் சென்று அரை டஜன் பாட்டில் அயோடெக்ஸ் வாங்கி வா!”
கருமுத்து
ஆசிரம மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று ‘ஆறு அயோடக்ஸ்!’ என்று சொன்னதும் கடையிலிருந்த
சிப்பந்தி கன்னத்தில் போட்டுக்கொண்டு எடுத்துக் கொடுத்தார்.
”அமாவாசையன்னிக்கு அயோடக்ஸ்
பூஜை பண்ணினா நினைச்ச காரியம் நடக்கும் சார்! பக்கத்துலே பாத்ரூம் கட்டி
வைச்சிருக்கு பார்த்தீங்களா? அங்கே போயி ஒரு பக்கெட் வென்னீருக்கு நூத்தியோரு ரூபா
தட்சணையைக் கட்டுங்க! அனேகமா ஒத்தடபூஜையும் பண்ண வேண்டிவரும்!”
பகவானும்
சுடலையும் இருந்த அறைக்குள் கருமுத்து நுழைந்தபோது, அறையின் ஒரு மூலையில்
அவிழ்த்துப்போட்ட பழம்துணிபோல சுடலை குவிந்து கிடந்தான். இன்னொரு மூலையில் பகவான்
தோசாரம் ’ஆசீர்வாதம்’ செய்த களைப்பில்
மூச்சுவாங்கியபடி வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தார்.
”டேய் சுடலை!” எழுப்பினான் கருமுத்து. “ரொம்பக்
கொடுத்து வைச்சவண்டா நீ! பகவான் நிறைய ஆசீர்வாதம் பண்ணிட்டார் போலிருக்கே?”
”அது இருக்கட்டும்டா!” என்று மெதுவாக எழ முயன்றான் சுடலை.
“நீ எதுக்குடா தலைகீழா நின்னுட்டிருக்கே?”
”என்னது? தலைகீழா நிக்குறேனா?” அதிர்ந்தான் கருமுத்து. “நான்
நேராத்தாண்டா நிக்குறேன். உனக்கு என்னடா ஆச்சு?”
”எல்லாம் பகவானோட ஆசீர்வாத மகிமைடா!” சுடலை ஈனசுரத்தில்
முணுமுணுத்தான். “எல்லாம் தலைகீழாத் தெரியுதுடா! அதுவும் கண்ணாடி போடாம 3D படம் பார்க்குறா மாதிரி கொசகொசான்னு தெரியுது. என்னா
ஆசீர்வாதம் தெரியுமாடா? ஏழெட்டு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாத்தான்எது எது எங்கெங்கே
இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறேன்.”
”வலியில்லாம சந்தோஷமில்லேடா!” என்று வாஞ்சையோடு கூறினான்
கருமுத்து.
”அதுக்குன்னு இப்படியாடா?
காதல் மேட்டரா வந்தவனை கஞ்சாக்கேசுலே பிடிபட்டவனை உதைக்கிற மாதிரி மிதிமிதின்னு
மிதிச்சிட்டாருடா! ஆஸ்ரமத்துலே ஆம்புலன்ஸ் இருந்தா அட்வான்ஸ் கொடுத்துட்டு வாடா!”
”இதுக்கே அலுத்துக்கிட்டா
எப்படி?”
கருமுத்து
உசுப்பேத்தினான். “இன்னும் திவ்யாகிட்டே செருப்படி வேறே வாங்கணும். மறந்திட்டியா?”
”ஆளை விட்றா சாமி!” கையெடுத்துக் கும்பிட்டான்
சுடலை. “எனக்குக் காதலும் வேண்டாம்; காலடி மண்ணும் வேண்டாம்! இந்த பகவான் கிட்டே
ஆசீர்வாதம்கிற பேருலே உதை வாங்கினதுக்கு திவ்யாவோட அப்பாகிட்டேயே உதை வாங்கியிருக்கலாம்
போலிருக்குடா! நானும் சன்னியாசம் வாங்கிட்டு, சாமியாராப் போறேண்டா!”
”குழந்தாய்!” பகவான் தோசாராம் சிரித்தவாறு
வந்தார். “சாமியாராப் போறது ரொம்பக் கஷ்டம்பா! ஒரு லோட்டோ ஷூ போட்டுக்க முடியுமா?
ஒரு டபுள் புல் ஜீன்ஸ் போட்டுக்க முடியுமா? ஒரு ரீபோக் டி-ஷர்ட் போட முடியுமா?
ஃபேஸ்புக்குலே போயி ஸ்டேட்டஸ் போட முடியுமா? அட் லீஸ்ட், ஒரு ‘லைக்’காவது போட முடியுமா?
காதலிக்கிறது சுலபம்; சாமியாராப் போறது ரொம்பக் கஷ்டம்!“
”இந்த
ஆசிரமத்துக்கு யாரு ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்தாங்க?” தேம்பினான் சுடலை. “இங்கே
நடக்குற வயலென்ஸுக்கே டபுள் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்கணுமே? இப்படியா
ஒரு பக்தனை உதைப்பாங்க?”
”அதுக்குக் காரணமிருக்கு!” என்றார் தோசாராம். “ஒரு
பொண்ணை மந்திரத்தாலே மயக்க நினைக்கிறது ரொம்பத் தப்பு! ரொம்ப வருஷத்துக்கு
முன்னாடி இப்படித்தான் ஒருத்தர் பஸ் ஸ்டாப்புலேருந்து காதலியோட காலடி மண்ணை
எடுத்திட்டுப் போயி ஒரு சாமியார்ட்டே கொடுத்து வசியம் பண்ணச் சொன்னாரு. கடைசியிலே
பார்த்தா, அது அதே பஸ்-ஸ்டாப்புலே இருந்த பிச்சைக்காரியோட காலடி மண்ணு! அந்தப்
பிச்சைக்காரி அந்தாளைத் துரத்தோ துரத்துன்னு துரத்தி, ஊரே சேர்ந்து அவங்களுக்குக்
கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க!”
”ஹாஹா!” வலியிலும் சந்தோஷமாகச்
சிரித்தான் சுடலை. “சுத்த கூமுட்டையா இருப்பான் போலிருக்கே அந்தாளு?”
”வாயை மூடு!” கர்ஜித்தார் பகவான் தோசாராம்.
“அந்தக் கூமுட்டை வேறே யாருமில்லே. நானே தான்! என் ஆசையிலே மண்ணள்ளிப்போட்ட அந்த
சாமியாரையும், எனக்குக் கட்டாயக் கல்யாணம் பண்ணிவைச்ச ஊரையும் பழிவாங்கத்தான்
சாமியாரா மாறினேன். அந்தக் கடுப்புலேதான் இந்த ஆசிரமத்துக்கு வர்ற எல்லாரையும்
நல்லா அடிச்சு, கிள்ளி, உதைச்சு என் கோபத்தைத் தீர்த்துக்கறேன். அதைக்கூடப்
புரிஞ்சுக்காம இந்த ஜனம் எல்லாம் ஆசீர்வாதம்னு சொல்லிக்கிட்டுத் திரியுது. என்
வாழ்க்கையே பாழாப்போச்சு! “
கருமுத்துவும்
சுடலையும் ஆசிரமத்திலிருந்து வெளியேறியபோது, க்யூவில் ஒரு இளைஞன் கையில்
துப்பட்டாவுடன் நின்றிருந்தான்.
”பிரதர்! போயி அரை டஜன்
பாட்டில் அயோடக்ஸ் வாங்கிட்டுப் போங்க! மருந்துக்கடையிலே ஸ்டாக் குறைச்சலாத்தான்
இருக்கு!”
*******************