Monday, November 7, 2016

கிட்டாமணி! வேர் ஆர் யூ?

பாலாமணியின் முகம் ஜாடியில் ஊறவைத்த மாவடுபோலச் சுருங்கிப் போயிருந்தது. கிட்டாமணியில்லாத வீடு, கருவேப்பிலை தாளிக்காத ரசம்போலக் களையிழந்து காணப்பட்டது.  

”பாத்ரூமுக்குப் போனாக்கூட, இதோ சோப்புப்போட்டுட்டேன், இதோ தலைதுவட்டிட்டேன், இதோ வழுக்கி விழுந்திட்டேன்னு ரன்னிங் கமெண்டரி கொடுப்பாரே! ஒரு மாசமா எங்கே போனார், என்ன ஆனார்னு ஒரு தகவலும் இல்லையே!”

பாலாமணியின் தொண்டை ரிப்பேரான மிக்ஸிபோலக் கரகரத்தது. அவளுக்கு ஆறுதல் கூற வந்திருந்த சினேகிதிகள், டெபாஸிட் கிடைத்த சுயேச்சை வேட்பாளர்கள் போல அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர்.

”கவலைப்படாதீங்க பாலாமணி,” எதிர்வீட்டு செண்பகம் துணிந்து ஆறுதல் கூறினார். “அவர் என்ன சின்னக்குழந்தையா காணாமப் போக? எப்படியும் திரும்பி வந்திடுவார்.”

”ஐயோ, சின்னக்குழந்தை யாருகிட்டேயாவது அட்ரஸ் சொல்லித் திரும்பி வந்திடுமே!” பாக்கெட்மணி கிடைக்காத பள்ளிமாணவன்போல அரற்றினாள் பாலாமணி. ”இவருக்கு தான் காணாமப்போயிட்டோம்னே புரிஞ்சுதா இல்லையா தெரியலியே!”

முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, காலையில் டிபன் சாப்பிட்ட தன் கணவனை மனதுக்குள் நினைத்தபடி பேச்சைத் தொடர்ந்தாள் செண்பகம்.

”அன்னிக்கு குறிப்பிடும்படியா ஏதாவது நடந்துதா?”

”அன்னிக்கு அவர் ஆசைப்பட்டாரேன்னு ரொம்ப நாளைக்கப்புறமா புதீனா துவையல் அரைச்சேன்,” விசும்பினாள் பாலாமணி. “இன்னியோட ஒரு மாசம் ஆகப்போகுது!”

“ஒரு மாசமா?,” செண்பகம் அதிர்ந்தாள். “அப்ப துவையல் ஊசிப் போயிருக்கும்.”

”சும்மாயிருங்க செண்பகம்,” அடுத்த வீட்டு கனகவல்லி கடிந்து கொண்டாள். “துவையலைப்பத்திக் கவலைப்படுற நேரமா இது? பாவம் பாலாமணி, அவளோட கிரைண்டரே காணாமப்போயிடுச்சேன்னு, அதாவது, அவளோட புருஷனே காணாமப் போயிட்டாரேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க.”

ஊசிப்போன துவையலுடன் தனக்கிருந்த பிரிக்க முடியாத தொடர்புகாரணமாக, சட்டென்று எதையோ சொல்லிவிட்ட செண்பகம், அதே துவையலைச் சாப்பிட்டதுபோல சட்டென்று வாயடைத்து நின்றாள்.

”அவர் இல்லாம வீடு வீடாயில்லை,” பாலாமணி மூக்கைச் சிந்தினாள். “கோபத்துல நாலுவார்த்தை திட்டறதுக்காவது ஒரு ஆம்பிளை வேண்டாமா? வாழ்க்கையே வெறுத்துப் போயிருச்சு.”

”எங்கே பார்த்தாலும் ஆக்ஸிடெண்ட்னு நியூஸ் வருது,” கொதிக்கும் சாம்பாரில் மசித்த பருப்பைக் கலப்பதுபோல, பாலாமணியின் வயிற்றில் பயத்தைக் கரைத்தாள் கனகவல்லி. “ஒருவேளை அந்த மாதிரி ஏதாவது….”

“எங்க வீட்டுக்காரருக்கு ஆக்சிடெண்டேல்லாம் ஆகாது,” பாலாமணி அப்பல்லோ வாசலில் பேட்டிகொடுக்கும் அரசியல்வாதிபோல உறுதியாகச் சொன்னாள். “அவர் ரோட்டைக் கிராஸ் பண்ணாக்கூட, ஆட்டோ புடிச்சுத்தான் கிராஸ் பண்ணுவார்.”

”ஆமாமா,” செண்பகம் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “அவர் மார்னிங் வாக்கிங் போகும்போதே ஹெல்மெட் போட்டுக்கிட்டுத்தானே போவார்.”

”காலம் கெட்டுப்போச்சு,” கனகவல்லி பெருமூச்சு விட்டாள். “வரவர ஆம்பிளைங்களுக்குப் பொண்டாட்டிமேலே பயமே இல்லாமப் போயிடுச்சு.”

”தப்பா நினைக்காதீங்க பாலாமணி,” செண்பகம் மாசக்கடைசியில் மளிகைக்கடையில் கடன்கேட்பதுபோலக் குரலைத்தாழ்த்தினாள். “உங்க புருஷனுக்கு வேறே ஏதாவது பொண்ணோட அப்படி இப்படீன்னு…..”
”என்ன பேச்சுப் பேசறீங்க?” பாலாமணி தாளாமணியாகி இரைந்தாள். “இவர் எந்தப் பொண்ணையும் தலைநிமிர்ந்துகூடப் பார்க்க மாட்டாரு. இத்தனை வருசத்துல அவர் என்னையே நேராப்பார்த்துப் பேசினது கிடையாது தெரியுமா?”

’பொம்பளைங்க நாங்களே நேராப் பார்த்துப் பேச மாட்டோமே,’ என்று செண்பகமும் கனகவல்லியும் மனதுக்குள் எண்ணிக் கொண்டார்கள்.

எட்டாவது உலக அதிசயமாக, மூன்று பெண்மணிகளும் திடீரென்று மவுனமானார்கள். வீட்டில் குக்கர் மூன்றாவது விசில் அடிக்கிற நேரம் என்பதால், சீக்கிரம் வீடுதிரும்பாவிட்டால் அடுப்பைப் பற்ற வைத்தோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த செண்பகம் பேச்சை முடித்துக் கொள்ள முடிவு செய்தாள்.

”போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தீங்களே? என்னாச்சு?”

”அதையேன் கேக்கறீங்க?” பாலாமணி அலுத்துக் கொண்டாள். “இவர் போட்டோவைப் பார்த்திட்டு அந்த இன்ஸ்பெக்டர் வாய்விட்டுச் சிரிச்சாரா, பல்செட்டு கழண்டுபோய் எங்கேயோ விழுந்திருச்சு.”

”சரிதான்! கண்டுபிடிச்சிடுவாங்களா?”

”இன்ஸ்பெக்டர் பல்செட்டாச்சே, கண்டுபிடிக்காம விடுவாங்களா?”

”ஐயோ, உங்க புருஷனைக் கண்டுபிடிச்சிடுவாங்களாமா?”

”அப்படித்தான் சொன்னாங்க,” பாலாமணி பெருமூச்சு விட்டாள். “ஆனா, அந்த ஸ்டேஷன்ல காணாமப்போனவங்க நிறைய பேரோட போட்டோவை மாட்டியிருந்தாங்க. இவ்வளவு ஏன், இன்ஸ்பெக்டர் டேபிளுக்குப் பின்னாடியே சுவத்துல ஒரு தாத்தா படத்தைப் பெரிசா மாட்டியிருந்தாங்க. அவரையே இன்னும் கண்டுபிடிக்கலை. என் புருசனையா கண்டுபிடிக்கப் போறாங்க?”

“ஐயோ, அது காந்தி படமா இருக்கப்போவுது.”

“அவர்தான் காந்தியா? அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.”

”சரிதான். எதுக்கும் உங்க புருஷன் திரும்பிவந்தா பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்குங்க!”

“ஊரில இருக்கிற எல்லாப் பிள்ளையாருக்கும் வேண்டியாச்சு! அவர் திரும்பி வந்தப்புறம்தான் தேங்காய் வாங்க கோயம்பேடு போறதா இல்லை கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போறதான்னு யோசிக்கணும்.”

”அப்ப நான் வர்றேன்,” செண்பகம் கிளம்பினாள். “உடம்பைப் பாத்துக்குங்க பாலாமணி. சுவர் இருந்தாத்தான் வரட்டி தட்ட முடியும்.”

செண்பகம் கிளம்பிப்போனதும், கனகவல்லியும் கிளம்ப முடிவெடுத்தாள்.

”அப்ப நானும் கெளம்பறேன் பாலாமணி! எங்க வீட்டுக்காரர் வர்ற நேரம். நான் போகலேன்னா பத்துப்பாத்திரம் தேய்க்காம படுத்துத் தூங்கிருவார்.”

”சரிம்மா, நீ கிளம்பு,” பாலாமணி அசுவாரசியமாய் பதிலளித்தாள்.

கிட்டாமணி காணாமல் போனதிலிருந்து, எதுவுமே சரியில்லை. சொல்லி வைத்த மாதிரி எல்லா சீரியலிலும் யாராவது ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையானார்கள் அல்லது போலீஸ் வந்து கைது செய்து கொண்டு போனது. இந்தக் கவலைகள் போதாதென்று புருசன் வேறு பொறுப்பில்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டார்.

’கிட்டாமணி, வேர் ஆர் யூ?’

பாலாமணி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தபோது, அவளது செல்ஃபோன் அழைத்தது.

”ஹலோ! மிசஸ் பாலாமணிதானே பேசறது?”

”ஆமாங்க! நீங்க யாரு?”

”ஆந்திரா போலீஸ்! உங்க புருஷன்தானே கிட்டாமணி?”

“ஆமாம்,” பத்தேமுக்கால்மணிக்கு டாஸ்மாக் போகிற குடிமகனைப் போல பாலாமணியைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

”ஆந்திரா போலீஸா? எப்படி இவ்வளவு நல்ல தமிழுல பேசறீங்க?”

”மேடம்! காமெடி ஸ்டோரியிலே லாஜிக்கெல்லாம் பார்க்கப்படாது. உங்க புருஷன்மேலே சந்தேகப்பட்டு அரெஸ்ட் பண்ணியிருக்கோம்.”

”என்ன அக்கிரமம்? அவர்மேலே நானேகூட சந்தேகப்பட்டது கிடையாது. நீங்க யாரு சந்தேகப்படறதுக்கு?”

”ஹலோ! உங்க புருஷன் மரம் வெட்டுற கும்பல்லே இருப்பாரோன்னு சந்தேகப்படறோம்.”

”அட ராமா! அவருக்கு நகம் வெட்டக்கூட தெரியாதே! மாசத்துக்கொரு தடவை நடேசன் பார்க்குல போயி காசுகொடுத்து நகம்வெட்டிட்டு, காதுகுடைஞ்சுட்டு பஞ்சைக் கூட எடுக்காம அப்படியே வருவாராக்கும்.”

“இத பாருங்க மேடம்! உடனே ஒரு வக்கீலை இங்கே அனுப்புங்க. இல்லாட்டா இவரை மாஜிஸ்ட்ரேட் முன்னால ஆஜர்படுத்தி போலீஸ் கஸ்டடியிலே எடுத்து விசாரிக்க வேண்டிவரும்.”

”தயவுசெய்து என் புருசனை அடிச்சிராதீங்க,”பாலாமணி கரைந்தாள். “அவசரத்துல எக்ஸ்ட்ரா அண்ட்ராயர் எடுத்திட்டுப் போனாரா தெரியலை.”

”அதெல்லாம் அடிக்க மாட்டோம். உடனே வக்கீலை அனுப்பி வையுங்க. அடிலாபாத் தெரியுமா?”

”எனக்கு பகாளாபாத் தான் தெரியும்.”

”மேடம்! அடிலாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வக்கீலை அனுப்புங்க.”
வக்கீல்! வக்கீல்!!

பாலாமணிக்குச் சட்டென்று தன் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகன் வக்கீல் என்பது ஞாபகம் வந்தது. உடனே போன் செய்தாள்.

”ஹலோ! வக்கீல் அஃபிடவிட் அலங்காரம் ஹியர்!”

”டேய் அலங்காரம்! பாலாமணி பேசறேண்டா!” பாலாமணி பழைய கே.எஸ்.ஜி.படத்தில் கே.ஆர்.விஜயா போலக் குமுறினாள். “உங்க மாமாவை ஆந்திரா போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்கடா.”

”ஐயையோ! இவ்வளவு அப்பாவியா இருந்தா போலீஸ் அரெஸ்ட் பண்ணாம என்ன செய்யும்? கொஞ்சமாவது மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம் பண்ணிட்டு லண்டனுக்குப் போயிருக்கலாமில்லே?”

”எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா!”

”கவலைப்படாதேக்கா! நான் உடனே ஏற்பாடு பண்ணி, வர்ற வெள்ளிக்கிழமையே ரிலீஸ் பண்ணிடறேன்.”

“அடேய், வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ண அவரென்ன விஜய்சேதுபதி படமா? சீக்கிரம் ரிலீஸ் பண்ணுடா.”

”அக்கா! ரொம்ப முக்கியமான கேஸ்ல ஆஜராக வேண்டியிருக்கு. அதை முடிச்சிட்டு அடுத்த வண்டியைப் பிடிச்சு, ஆந்திரா போயி மாமாவை பெயில்லே கூட்டிட்டு வர்றேன்.”

”பெயில்லே கூட்டிட்டு வராதேடா! ரயில்லேயோ பஸ்லேயோ கூட்டிட்டு வா,” என்ற பாலாமணி, “அவரை அடிலாபாத் ஸ்டேஷன்லே வைச்சிருக்காங்களாம்.” என்று முடித்தார்.

”நோ பிராப்ளம். நான் பார்த்துக்கிறேன்.”

அலங்காரத்துடன் பேசிய பிறகு, பாலாமணியின் வயிற்றில் யாரோ, பால்வார்த்து, டிகாஷனும் சர்க்கரையும் சேர்த்ததுபோலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லா சீரியல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து, மகிழ்ச்சியுடன் மூக்கைச் சிந்தினாள். எப்படியும் பாலாமணி விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில், சற்று சத்தமாகவே குறட்டை விட்டு உறங்கிப் போனாள்.

இரண்டு நாள் கழித்து….

”ஹலோ அக்கா,” அலங்காரம் போனில் கூவினான். “உன் புருஷனைக் கூட்டிட்டு வரப்போறேன்.”

“நீ நல்லாயிருக்கணும்டா,” பாலாமணி நெகிழ்ந்தாள். “கடவுள் புண்ணியத்துலே உனக்கு தினமும் ரெண்டு கொலை கேஸ், ரெண்டு ஃபிராட் கேஸ், ரெண்டு அசால்ட் கேஸ் கிடைச்சு நீ சீரும் சிறப்புமா இருக்கணும்டா.”

”அதெல்லாம் இருக்கட்டும்,” அலங்காரம் திடீரென்று சீறினான். “மாமா அரசியலுக்குப் போகணும்னா வேற கட்சியா இல்லை?”

”என்னாச்சுடா?”

”போனமாசம் ரயில்மறியல் பண்ணறதுக்கு அனுப்பியிருக்காங்க. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சங்கிலியைப்பிடிச்சு இழுத்து ரயிலை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. உங்க வீட்டுக்காரர் என்ன பண்ணினார் தெரியுமா?”

“என்ன?”

“ரயில்லே ஒரு பாசஞ்சர் ரெண்டு பவுன் செயின் போட்டுக்கிட்டுப் போயிருக்காங்க. அவர் அதைப் புடிச்சு இழுத்திருக்காரு.”

“அப்புறம் என்னாச்சு?”

“டிரெயின் நின்னுடுச்சு.”

“அதை யாரு கேட்டாங்க? இவரை என்ன பண்ணினாங்க?”

”ரயில்வே போலீஸ் பிடிச்சிட்டு, ஆளைப் பார்த்திட்டு பாவம்னு விட்டுட்டாங்களாம்.”

”அப்ப ஒரு மாசமா என்ன பண்ணிட்டிருந்தாராம்?”

”அதைக் கேளு, ஒழுங்கா ஊருக்குத் திரும்பி வர்றதை விட்டுட்டு, ’பிரேமம்’ தெலுங்குப் படத்தைப் பார்த்திருக்காரு. தேவையா இது? அப்புறம் புத்தி பேதலிச்ச மாதிரி சுத்தி ஒருவழியா அடிலாபாத் ஸ்டேஷன்லே மாட்டியிருக்காரு.”

”ஐயையோ! அவருக்கு உண்மையிலேயே புத்தி பேதலிச்சிருக்கணும்டா! உடனே அவரைக் கூட்டிட்டு வந்திரு.”

”அவர்கிட்டே பேசறியாக்கா?”

“நேர்லே பேசிக்கிறேன். அவருக்கு வேளாவேளைக்கு வடிச்சுக்கொட்டி, குழந்தை மாதிரிப் பாத்துக்கிட்டேனே. அவருக்கு என்ன குறை? எதுக்காக இந்த மாதிரி விபரீதமா ‘பிரேமம்’ படத்தையெல்லாம் பார்த்து என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டுறார்னு கேளுடா.”

கோபத்துடன் போனை வைத்தாள் பாலாமணி.



************

Monday, September 26, 2016

பின்க் – உரத்த அறிவுரை


பின்க் – உரத்த அறிவுரை
இந்தியாவில் ‘கோர்ட்-ரூம் டிராமா’ வகையிலான படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதில்லை என்று அவ்வப்போது எதார்த்த சினிமா விரும்பிகள் ஆதங்கப்படுகையில், எண்பதுகளில் தில்லி சாணக்யா திரையரங்கில் ‘க்ராமர் வர்ஸஸ் க்ராமர்’ என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து பிரமித்தது நினைவுக்கு வரும். ஆனால், பாலிவுட்டில் இவ்வகைப் படங்கள் 60-களிலேயே வரத் தொடங்கியதாக ஞாபகம். ‘வக்த்’ ‘மேரா சாயா’ போன்ற படங்களின் குறிப்பிடத்தக்க காட்சிகள் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தன. 80-களில் கூட ‘மேரி ஜங்’(தமிழில் ‘ஒரு தாயின் சபதம்’), 90-களில் ‘தாமினி’ (தமிழில் ப்ரியங்கா) போன்ற படங்கள் வெளியாகத்தான் செய்தன. 2014-ல் வெளியான மராத்திப்படம் ‘கோர்ட்’ ஆஸ்கார்வரைக்கும் போனது. ஆனால், ஏனைய மசாலாப்படங்களில் கோர்ட் சீன் என்ற பெயரில் நடத்திய கேலிக்கூத்துகள் காரணமாக, கோர்ட் சீன் என்றாலே ஒரு விதமான நக்கல் விளைவது இயல்பாகி விட்டது. கடுப்பேத்துறார் மைலார்ட்!
அந்த வகையில், ‘பின்க்’ திரைப்படம் நிச்சயம் குறிப்பிடத்தக்க, பிரமிப்பூட்டுகிற, சமகால நிகழ்வுகளுடன் இயைந்த ஒரு உண்மையான திரைப்படம் என்று முதலிலேயே ஒப்புக் கொள்ள வேண்டும். படம் முடிந்து வெளியேறுகையில் கணிசமான நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதால், இந்தப் படத்தை இன்னும் சிறிது நாட்களுக்கு நினைவில் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.
      ஒரு நிகழ்ச்சியில் மூன்று இளம்பெண்கள் மூன்று வாலிபர்களைச் சந்தித்து, மானபங்கத்திலிருந்து தப்பிக்கிற முயற்சியில் ஒருவனுக்குப் படுகாயம் ஏற்படுத்தி, அடுத்தடுத்து சந்திக்கிற சிக்கல்களைச் சித்தரிக்கிற முயற்சியில், பாலின சமன்பாடு குறித்த ஒரு அழுத்தமான செய்தியை, இயன்றவரை பிரச்சார நெடியின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதை வலியுறுத்த சில ‘நச்’ வசனங்கள்.
      ”ஷராப் கோ யஹான் கலத் கேரக்டர் கி நிஷானி மானா ஜாதா ஹை; ஸிர்ஃப் லட்கியோன் கே லியே! லட்கோன் கே லியே தோ யே ஸிர்ஃப் ஏக் ஹெல்த் ஹஜார்ட் ஹை!
      ”மது அருந்துவது ஒழுக்கக்கேடாகக் கருதப்படுகிறது; பெண்களைப் பொறுத்தவரை மட்டும். ஆண்களைப் பொறுத்தவரை அது ஒரு உடல்நலக் கேடாகவே கருதப்படுகிறது.
      பெரும்பாலானோருக்கு இந்தக் கருத்து நெருடலாக இருக்கலாம் என்றாலும், இதில் இருக்கிற எதார்த்தம் உறைக்காமல் இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை, இந்தப் படத்தின் முக்கியமான செய்தியே வேறு என்று தோன்றுகிறது.
’நா’ ஸிர்ஃப் ஏக் ஷப்த் நஹி! அப்னே ஆப் மே பூரா வாக்ய ஹை! இஸே கிஸி தர்க், ஸ்பஷ்டிகரண் யா வ்யாக்யா கி ஜரூரத் நஹீ!
      ”’வேண்டாம்’ என்பது ஒரு வார்த்தை இல்லை; அதுவே ஒரு முழு வாக்கியம் ஆகும். இதற்கு ஒரு பதவுரை, விளக்கம், பொழிப்புரை அவசியம் இல்லை.
      ”வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜி சொல்வாரே! ‘சரீன்னா யாரா இருந்தாலும் விடப்படாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடப்படாது.”
      யெஸ்! இந்தப் படத்திலிருந்து முக்கியமாகச் சென்றடைய வேண்டிய செய்தி இதுவாகத்தான் இருக்க வேண்டும். விருப்பமில்லாத பெண்களை பலாத்காரமாக அடைய நினைக்கிற மூர்க்கத்தனம், குடிப்பழக்கத்தைக் காட்டிலும் தீமை விளைவிப்பது, ஆபத்தானது என்று அடித்துச் சொல்லலாம்.
      சுருக்கமான கதை!
      மினல்(தாப்ஸி), ஃபலக்(கீர்த்தி குல்ஹாரி) மற்றும் ஆண்ட்ரியா(ஆண்ட்ரியா தரியங்) மூவரும் தில்லியில் ஒரே அறையில் வசிக்கிற இளம்பெண்கள். ஒவ்வொருவர் பின்புலத்திலும் ஒரு குட்டிக் கிளைக்கதை இருக்கிறது; அவர்களுக்கென்று ஒரு கடந்தகாலம் இருக்கிறது. அது குறித்து கச்சிதமாக ஆங்காங்கே இயக்குனர் தொட்டுக் காட்டியிருக்கிறார். (மினல் 19 வயதில் தன் கன்னித்தன்மையை இழந்து, அதன்பிறகும் பிற ஆடவர்களுடன் சில முறை உடலுறவு கொண்டதாக நீதிமன்றத்திலேயே ஒப்புக் கொள்வது ஒரு சாம்பிள்). அவர்கள் வசிக்கிற குடியிருப்புக்காரர்கள் சிலர் இவர்களது நடத்தையை சந்தேகத்துக்குரியதாகக் கருதுகிறார்கள். ஆனால், இதெல்லாம் அவர்களை வலுக்கட்டாயமாக சுகிக்க அனுமதிக்கிற டிக்கெட்டுகள் இல்லை அல்லவா?
      ஒரு ராக் இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் இந்த மூன்று பெண்களும் மதுவருந்திய நிலையில், ராஜ்வீர் என்ற பெரிய இடத்துப் பையன் மினலை மானபங்கப்படுத்த முயல, தன்னைக் காப்பாற்றிக் கொள்கிற முயற்சியில் அவனை ஒரு பாட்டிலால் தாக்கி காயப்படுத்துகிறாள் மினல். மூன்று பெண்களும் அங்கிருந்து தப்பித்து, ஒரு சில நாட்கள் தயக்கத்துக்குப் பிறகு, தங்களைப் பழிவாங்கத் துடிக்கிற அந்தப் பணக்கார இளைஞர்களிடமிருந்து தப்பிக்க, காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். வழக்கம்போல, பெரிய இடத்துத் தலையீடுகளால் பிராது கொடுத்த மினலே கைது செய்யப்படுகிறாள். உடல்நிலை குலைந்து, வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, உயிருக்குப் போராடுகிற தன் மனைவிக்கும் சேவை செய்து கொண்டிருக்கும் தீபக் செஹ்கல்(அமிதாப் பச்சன்) என்ற வக்கீலின் உதவியுடன், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுபடுகிறாள். இந்தப் போராட்டத்தின் இடையில் அவர்கள் சந்திக்கிற அவமானங்கள், அவர்கள்மீது சுமத்தப்படுகிற களங்கங்கள், அபாண்டங்கள், கண்ணீர், வேதனை இவையெல்லாம்தான் இந்தப் படத்தின் சதையும் நரம்பும் இரத்தமுமாய் படம் நெடுக!
                ரத்தக்காயங்களுடன் அந்தப் பணக்கார வாலிபன் ஹோட்டலிலிருந்து மருத்துவமனை நோக்கி விரைகிற முதல்காட்சி தொடங்கி, இறுதியில் டைட்டிலில் நடந்த நிகழ்வுகளைப் பக்கவாட்டில் காட்டி முடிப்பதுவரை, இத்தனை விறுவிறுப்பாக கதை சொல்லிய ஒரு இந்திப்படத்தை அண்மையில் நான் பார்த்ததாக நினைவுகூர முடியவில்லை. அபாரம்! ஒரு குற்றசாட்டு; ஒரு வழக்கு; வாதப்பிரதிவாதங்கள் என்ற அளவில் நேர்கோட்டில் பயணித்தாலும், அவ்வப்போது பொதுப்புத்தியை    நினைவூட்டுகிற வசனங்களும், காட்சியமைப்புகளும் திரைக்கதைக்கு வலு சேர்ப்பதுடன், கதையோட்டத்துடன் முற்றிலும் ஒன்ற வைத்து விடுகிறது. ஒரு வறண்ட ஆவணப்படத்தைப் போல, நிறைய பெண்ணியத்தைத் தாளித்துக்கொட்டி, அனாவசியமான மூன்றாம்தரமான வசனங்களைச் சேர்த்து, படம் பார்க்க வந்தவர்கள் முகத்திலேயே காறித்துப்புவது மாதிரி (உதாரணம்: ஜோக்கர்) தன்னை ஒரு யோக்கியசிகாமணி என்று படத்தின் இயக்குனர் எந்த இடத்திலும் முன்னிலைப்படுத்த முயலவில்லை. அதுதான் இந்தப் படத்தின் மிகமுக்கியமான அம்சம்.
      கிட்டத்தட்ட இதே கருவுடன் வெளிவந்த ‘தாமினி’ படத்தில், ‘நீ உங்கம்மாகிட்டேயிருந்து எந்த வழியா வந்தியோ அங்கே கைவைச்சான். உங்கம்மாகிட்டே எங்கிருந்து பால்குடிச்சியோ அங்கே கைவச்சான்’ என்றெல்லாம் பச்சைகொச்சையாய் வசனம் எழுதி, படபடவென்று கைதட்டலுக்காக ஆலாய்ப் பறக்கவில்லை. தர்மசங்கடமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு உணர்ச்சிப்பெருக்குடன் கூடிய பதில்கள் கொட்டப்படுகின்றன. ஆனால், கேள்விகளிலும் பதில்களிலும் இருக்கிற உண்மை சுடுகின்றது.
                அமிதாப் பச்சன்! 90களில் பல சிக்கல்களுக்குள் ஆட்பட்டு, செக்கு எது, சிவலிங்கம் எது என்று தெரியாமல், மனீஷா கோய்ராலாவுடனும் ரம்யா கிருஷ்ணனுடனும் டூயட் பாடி, ‘இனிமே பச்சன் படம்னா எடு ஓட்டம்’ என்று எண்ணவைத்தவர், ஒரு ஆறேழு வருடங்கள் கழித்து, தன் வயதுக்கொத்த பாத்திரங்களை ஏற்று, இன்று திலீப்குமாருக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த நடிகர் என்று பெரும்பாலானோரால் ஏற்கப்படுமளவுக்கு தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய விஷயம்! (நம்மூரு சூப்பர் ஸ்டாரும் இப்படி நடிக்க ஆரம்பித்தால் எப்படியிருக்கும்! ஹும்!)
      ‘மருந்துகளில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்; என்னால் வாதிட முடியாது’ என்று மனைவியிடம் சொல்வது; அதற்கேற்றாற்போல கோர்ட்டில் முதல் நாளன்று தடுமாறுவது; அதன்பிறகு, மெல்ல மெல்ல தனது சமயோசிதத்தையும் வாதத்திறமையையும் வெளிக்கொணர்வது என்று அந்தக் கதாபாத்திரத்துக்குள் கூடுகட்டி வாழ்ந்திருக்கிறார். அந்தக் குரல்; அந்த உச்சரிப்பு; அந்த முகபாவங்கள்! ‘சிவாஜி என்ற சிங்கம் உயிரோடில்லை; அந்த சிங்கத்தின் இடத்தை இந்த சிங்கம்தான்  நிரப்ப முடியும்’ என்று கமல்ஹாசன் சொன்னது எவ்வளவு உண்மை!
      தாப்ஸி பன்னு! சத்தியமாக நம்பவே முடியவில்லை. முதல் இந்திப்படம், அதிலும் அமிதாப் பச்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிற படம். அதில் தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் நடித்து மெய்யாலுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்துக் கணிக்கக் கூடாது என்பதை உணர்வோமாக!
      ஃபலக் அலியாக வரும் கீர்த்தி குல்ஹாரி, நீதிமன்றத்தில் ‘ நாங்கள் பணம் வாங்கிக்கொண்டோம்’ என்று கதறுகிற காட்சியில், சற்றே இளகிய மனம் கொண்டவர்கள் நிச்சயம் அழுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேகாலயா பெண்ணாக வருகிற ஆண்ட்ரியாவின் பாத்திரத்தின் மூலம், வடகிழக்கு இந்தியப் பெண்கள் குறித்த அலட்சிய மனோபாவத்தையும் ஓரிரு வசனங்களில் குத்திக் காட்டியிருக்கிறார்கள்.
      பொதுவாக நீதிமன்றக்காட்சிகளுக்கு வலுவூட்ட, வசனங்களில் கூர்மை மிக அத்தியாவசியமாகும். இந்தப் படத்தில் அண்மைக்கால இந்திப்படங்களிலேயே மிகவும் சிறப்பான வசனம் திறம்பட எழுதப்பட்டிருக்கிறது.
      ”ஹமாரா யஹா கடி கீ ஸூயி கேரக்டர் டிஸைட் கர்தீ ஹை”
      ”இங்கே கடிகாரத்தின் முள் ஒழுக்கத்தை நிர்ணயிக்கின்றன.”

      ”ராத் கோ லட்கியான் ஜப் அகேலி ஜாத்தீ ஹை தோ காடியா ஸ்லோ ஹோஜாத்தி அவுர் உன்கே ஸீஷே  நீச்சே ஹோஜாத்தே ஹை! தின் மே யே மஹான் ஐடியா கிஸீ கோ நஹீ ஆத்தா
      ”இரவில் பெண்கள் தனியாகப் போனால், வாகனங்களின் வேகம் குறைந்து, அதன் கண்ணாடிகள் கீழே இறக்கப்படுகின்றன. பகலில் யாருக்கும் இந்தச் சிறந்த எண்ணம் வருவதில்லை.

      ”ஜோ லட்கியான் பார்ட்டி மே ஜாத்தீ ஹை அவுர் ட்ரிங்க் கர்த்தீ ஹை, வோ புஷ்தைனி ஹக் பன்ஜாத்தீ ஹை ஆப் கா
      ”பார்ட்டிக்குப் போய், மதுவருந்தும் பெண்கள் உங்களுக்கு எளிதான உரிமைப்பொருள் ஆகிவிடுகிறார்கள்.

      ”ஆஜ்தக் ஹம் ஏக் கலத் டைரக்‌ஷன் மே எஃபர்ட் கர்தே ரஹே! வீ ஷுட் ஸேவ் அவர் பாய்ஸ்; நாட் கேர்ள்ஸ்! பிகாஸ் இஃப் வீ ஸேவ் அவர் பாய்ஸ், அவர் கேர்ள்ஸ் வில் பீ ஸேஃப்
      ”இன்றுவரை நாம் தவறான திசையில் முயற்சி செய்து வருகிறோம். நாம் நம் ஆண்களைப் பாதுகாக்க வேண்டும்; பெண்களை அல்ல. ஏனெனில், ஆண்கள் பாதுகாக்கப்பட்டால், பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.”
      சமீபகாலங்களாகவே, இந்தியில் மீண்டும் நல்ல படங்கள் வரத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் ‘No one killed Jessica’, ‘Jolly LLB’, ‘Shaurya’ போன்ற படங்களின் வரிசையில் சட்டம், நீதிமன்றம் தொடர்புடைய படமாக இருந்தாலும், சலிப்பின்றி அலுப்பின்றி, ஒருவித பதைபதைப்புடன் பார்க்க முடிகிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றி!
      இறுதியாக….
These boys must realise that ’No’ கா மத்லப் No ஹோத்தா ஹை!. உஸே போல்னேவாலி லட்கி கோயி பரிச்சித் ஹோ, ஃப்ரெண்ட் ஹோ, கேர்ள்ஃப்ரெண்ட் ஹோ, கோயி செக்ஸ் வொர்க்கர் ஹோ யா அப்னி பீவி க்யூ நா ஹோ! ‘No’ means no and when someone says No, you stop!”
      வேண்டாம் என்று சொல்லும் பெண் அறிமுகமானவரோ, தோழியோ, காதலியோ, பாலியல் தொழிலாளியோ அல்லது உங்கள் மனைவியோ, வேண்டாம் என்றால் வேண்டாம். நிறுத்துங்கள்
       சினிமாவால் சமூகத்தைத் திருத்த முடியும் என்று நம்புகிற இளிச்சவாயன் அல்ல நான். ஆனால், இந்தப் படம் ஒரு நபரையாவது திருத்தினால் நன்றாக இருக்குமே என்று நப்பாசைப்படுகிறேன்.
       பின்க் – ஒரு தேவையான படம்.

***********************************************************************************************************

Thursday, August 25, 2016

ஜோக்கர் – எதிர்மறை கோடல்


இது - திரைப்படம் என்பது அடிப்படையில் கேளிக்கையாக இருத்தல் போதுமானது என்ற எளிமையான அணுகுமுறையுடன் சினிமா பார்த்து வருகிற ஒரு சராசரி மனிதனின் விமர்சனம். ஆகவே, ‘சினிமா விமர்சனத்துக்கு நாங்கள்தான் அதாரிட்டி’ என்று கூரைமேல் ஏறி நின்று கூவுகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல், அடுத்த படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதி சமூகத்தொண்டு ஆற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம், அடியேன் காலிவுடத்திலிருந்து(Hollywood) கரைபுரண்டோடி வருகிற ஆங்கிலப்படங்களைக் கண்டுகளித்துக் கொண்டிருப்பவனல்லன்; கொரிய மொழிதனில் கொட்டிக்கிடக்கிற அரிய படங்களை அள்ளித்தின்று அஜீரணத்தில் அவதிப்படுபவனும் இல்லை; கிறித்தோபர் நோலனார்(Christopher Nolan), இசுடீவன் இசுபீலபர்க்(Steven Spielberg) இன்னாரன்னோரின் இணையற்ற திரைக்காவியங்களைக் கண்டு இன்புற்றவனும் அல்லன். சிதபீளடர்(Sydfield) எழுதிய திரைக்கதைச் சாத்திரத்தைக் கரைத்துக் குடித்து, அனைத்து சினிமாக்களுக்கும் பிரேதப்பரிசோதனை செய்கிற திறனும் எனக்கில்லை. சராசரி, அல்லது அதற்கும் கீழான ரசிகன் என்பதில் எனக்கு ஒரு வெட்கமும் இல்லை.
சத்யத்ஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், பார்த்தோ கோஷ், கிரீஷ் கர்னாட் போன்ற அதிமேதாவிகளின் படங்களைப் பார்ப்பது எனக்கு அல்சரில் அவதிப்படுவதற்கு ஒப்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிறைவேறாத ஆசையுடன் அகாலமரணம் அடைந்த இந்த ‘ஆர்ட் ஃபிலிம்’ என்பதன் ஆவி, அவ்வப்போது தலைகாட்டியபோதெல்லாம் அந்தப் பக்கம் நான் நடமாடுவதையே தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவது வழக்கம்.
மனோதத்துவத்துவத்தில் ‘எதிர்மறை கோடல்(Negative Bias)’ எனப்படுகிற ஒரு சங்கதி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு சில அழகான ஓவியங்களையும் சில அலங்கோலமான ஓவியங்களையும் காட்டுகிறபோது, இரண்டாம் ரக ஓவியங்கள் மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சற்று உடல்கூறியலும் தெரிந்தவர்களிடம் உரையாடினால், இந்த எதிர்மறை கோடல் எனப்படுவது மனிதனின் தற்காப்பு உணர்ச்சியை வளர்த்துக் கொள்வதற்காக இயற்கையாகவே சற்று அதிகப்படியாக அளிக்கப்பட்டிருப்பதை அறிய நேரிடும். ‘ஜோக்கர்’ திரைப்படம் என்னைப் பொறுத்தமட்டில், அனேகமாக தமிழ்த் திரையுலக வரலாற்றில், அலுப்பூட்டுகிற அளவுக்கு எதிர்மறைக்கோடலைக் கையாண்ட படமாக இருக்கிறது. ஒரு எழவு வீட்டுக்குச் சென்று வந்தது போலிருக்கிறது.
அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமங்கள் இந்த நாட்டில் இன்னும் ஏராளம் இருக்கின்றன. இந்த ஒற்றைக்கருவை வைத்துக் கொண்டு, அதில் உலகமயமாக்கல், மணல் கொள்ளை, நிலத்தடி நீர் பிரச்சினை, மூட நம்பிக்கை, லஞ்சம், ஊழல், அலட்சியம் என்று எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் தலா ஒரு துளி சேர்த்து ஒரு மிகைப்படுத்தப்பட்ட இருளோவியத்தை வரைந்து, ‘எல்லாரும் ஜோக்கர்கள்’ என்று முடித்திருக்கிறார்கள்.
4ஜி செல்போன் புழங்குகிற கிராமத்தில் கழிப்பறை கிடையாது. அதனால், நாயகி திருமணத்துக்கு முதலில் மறுத்து, பிறகு சம்மதித்து, அதே கழிப்பறையில் காயமுற்று கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறாள். உடனே நாயகன், ஒரு செல்போன் கோபுர உச்சியிலிருந்து நாட்டின் குடியரசுத்தலைவராகப் பிரகடனம் செய்து கொண்டு, உத்தரவுகளாகப் பிறப்பித்துத் தள்ளுகிறார். இந்த அபத்தமான கற்பனையின் அடிப்படையில், ஒரு மேடை நாடகத்தின் பாணியில் எல்லாரையும் கலாய்த்து, எல்லாவற்றையும் குற்றம்சாட்டி ஒரு மிகையான ஆவணப்படத்தை எடுத்து இம்சித்திருக்கிறார்கள். நல்ல வேளை, பாத்திரப்படைப்பில் இருக்கிற குறைபாடுகள் தெரியாதபடி, நடித்தவர்கள் மெனக்கெட்டு ஒப்பேற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு நம்மை பாப்பிரெட்டிபட்டியில் வலம்வரச் செய்திருக்கிறது. பாடல்கள் சற்றே கேட்கும்படியாக இருக்கிறது. (பின்னணி இசை நாராசம்)
அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட பல வசனங்களை எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. திரையரங்கில் பலர் வலிந்து வலிந்து கைதட்டினார்கள். இது போன்ற படங்களில் அமங்கலமான வார்த்தைகளைப் புழங்க விடுவது ஒரு நல்ல வர்த்தக உத்தி. ’இங்கே வாழறதுதான் கஷ்டமா இருக்குன்னா, இப்ப பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்க’ என்று ஒரு வசனம் ஒரு சாம்பிள். என்னவோ இதையெல்லாம் ராஜு முருகன் சொல்லித்தான் தமிழ்கூறும் நல்லுலகமே புரிந்து கொண்டிருப்பதுபோல, அதற்கு ஜல்லியடிக்கிற ஒரு முகநூல் கும்பல் வேறு!
நிலத்தடி நீரை பாட்டிலில் அடைக்கிற தொழிற்சாலையில் வேலைபார்த்து, லாரியில் ஏறி அரசியல் கூட்டங்களுக்குப் போய், முண்டியடித்து குவார்ட்டரையும் பிரியாணியையும் வாங்குகிற நாயகனுக்கு, தன் வீட்டில் ஒரு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான், ஞானோதயம் பிறக்கிறது. இவனுக்கும் சராசரி மசாலாப்பட நாயகனுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறதோ தெரியவில்லை. (யாராவது ஆராய்ச்சி பண்ணி எழுதுவார்கள் என்று நம்புவோம்). ஒவ்வொரு சராசரி மனிதனும் தனக்கு ஒரு இடையூறு ஏற்படுகையில்தான், எதிர்க்கிற எண்ணம் துளிர்க்கும் என்பது இயல்பு. சில சினிமாக்காரர்கள் அவரவர் படங்களின் திருட்டு விசிடி வந்தால் குய்யோ முய்யோவென்று கத்துவார்கள் இல்லையா, அது போல! உலகமெங்கும் இதே விதிப்படித்தான் மனித சமூகம் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு ஊரில் எவனோ ஒரு கிறுக்கன் எதையெதையோ உளறித் திரிவதையெல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பக்ருதீன் அலி அகமது அவசரநிலைப் பிரகடனத்தைப் பிறப்பித்தார் என்பதை வைத்து நாயகன் தன்னை ஜனாதிபதியாக அறிவிப்பதாகக் காட்டியிருப்பதெல்லாம் சரியான காமெடி. ஆகவேதான், மன்னர் மன்னன் நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அறிவிக்கிறபோதும் எனக்கு ஒரு நமுட்டுச் சிரிப்பே வந்தது. டைரக்டர் சார், ராணுவ ஆட்சி அமல்படுத்தினால், நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று எந்த வரலாற்றில் படித்தீர்கள்? ஒரு எமர்ஜென்ஸி இந்த நாட்டை எப்படிப் புரட்டிப் போட்டது என்று தெரியுமா?
மன்னர் மன்னனை அனைவரும் காமெடிப்பீஸ் என்று கருதுவதில் எந்தத் தவறும் இல்லையென்றே நான் கருதுகிறேன். ஒரு கழிப்பறை விஷயத்தில்கூட இந்த நாட்டில் பல அவலங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது என்பதுவரையில் மறுப்பதற்கில்லை. ஆனால், அங்கிருந்து பிரச்சினைகளை நேர்கொள்ள நாயகன் மேற்கொள்ளுகிற உத்திகள், அவனது குறிக்கோள் தீர்வுகள் காண்பதா அல்லது வெறும் விளம்பரம் தேடலா என்பதைத் தெளிவாகச் சொல்லித் தொலைத்திருக்கலாம். காரணம், அவ்வப்போது ‘ஃபேஸ்புக்’ ‘வாட்ஸாப்’ நிலவரங்களை அறிந்து கொள்கிறார். சரி, அவருக்குத்தான் மறைகழண்டு போயிருக்கிறது என்றால், அவரது அபத்தமான போராட்டங்களுக்கு ரெண்டு பேர் சப்போர்ட் வேறு! தும்மினால் வழக்குப்போடுகிற பொன்னூஞ்சல் என்ற கதாபாத்திரம், திடீரென்று ஒருவன் ‘ நான் பிரெசிடெண்ட் பேசுகிறேன்’ என்று போன் செய்தவுடன், அகமும் முகமும் மலர்ந்து ‘சொல்லுங்க பிரெசிடெண்ட் சார்’ என்று அவரது தலைமையில் போராட்டத்தில் குதிக்கிறாராம். இப்படியொரு அபத்தத்தை ஒரு பக்கா மசாலாப்படத்தில்கூட நான் பார்த்ததில்லை.
மன்னர் மன்னனாக நடித்திருக்கும் சோமசுந்தரம், மல்லியாக வருகிற ரம்யா பாண்டியன், இசையாக வரும் காயத்ரி கிருஷ்ணா, பொட்டி கேஸ் பொன்னூஞ்சலாக வருகிற ராமசாமி இவர்கள் இந்தப் படத்துக்கு தங்களது நடிப்பால் நிறையவே ஆக்ஸிஜன் ஏற்றியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இடைவேளையோடே தேவி பாலாவை விட்டு தலைதெறிக்க ஓடித் தப்பித்திருப்பேன்.
ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்புகளிலும் வருகிற ‘மீம்ஸ்’களைத் தொகுத்து ஒரு படம் எடுத்தால், அது எப்படியிருக்கும் என்பதற்கு இந்த ‘ஜோக்கர்’ ஒரு உதாரணம். வேடிக்கை என்னவென்றால், கடவுள் தொடங்கி கடைக்கோடி குடிமகன் வரை அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் இயக்குனர் நிறுத்தியிருப்பதால், நிறைய பேருக்கு ‘இந்தப் படம் பிரமாதம்’ என்று சொல்லுவதன்மூலம் தங்களைத் தாமே தூக்கிப் பிடிக்க வசதியாக இருக்கிறது. ஆனால், நம்மைச் சுற்றி நிகழும் பல அவலங்களுக்கு நானும் பொறுப்பானவன் என்ற சொரணை எனக்கு இருப்பதால், இதுபோன்ற பொத்தம்பொதுவான மூர்க்கத்தனமான விமர்சனங்களை ‘பலே’ என்று பாராட்டி, ‘இது திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போடப்போடுகிற படம்’ என்றெல்லாம் கொடிதூக்கிக் கூவ முடியவில்லை.

இதுபோன்ற படங்கள் நிறைய வர வேண்டும் என்று ஊடகங்களில் நிறைய எழுதுகிறார்கள். அப்பாடா, சினிமாவை இப்படி ஒழித்தால்தான் உண்டு; நடக்கட்டும். 

Saturday, June 25, 2016

சுவாதி! நான்தான் சாமானியன் பேசுகிறேன்!

photo: indianexpress.com 

ஒரு துர்மரணம்; அதுவும் ஒரு இளம்பெண்ணின் கோரமான படுகொலை என்றால், அதனால் விளையும் பின்விளைவு என்பது இயல்பானது. ஆகையினால், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உனக்கு நிகழ்ந்த பயங்கரம், குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனின் இதயத்திலும் இடியைவிடக் கொடிதாக இறங்குவது. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கொடூர நிகழ்வு நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் அருகாமையில் வசிக்கிறவன் என்பதனால், இந்த நிகழ்வு முகம்தெரியாத ஒரு உறவினருக்கோ அன்றி நண்பருக்கோ ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத இழப்பு என்பதையும், இது சராசரி மனிதனின் இயலாமைக்கு இன்னோர் உதாரணம் என்பதனையும், எவ்வித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டு, ஒரு தனிமனிதனாக நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய பழியையும் ஏற்று, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கோரசம்பவத்தால் உயிரிழந்த உனது ஆத்மா அமைதியுற வேண்டுகிறேன். துடைக்கவியலாத உனது குடும்பத்தாரின் துயரத்தில் ஒரு சாமானியனாய் பங்கும் கொள்கிறேன். உனக்கு ஏற்பட்ட இந்த நிலை, பிறிதொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்றும் உளமார வேண்டுகிறேன்.
      ஆனால், ஒவ்வொரு அசாதாரணமான நிகழ்வுக்குப் பிறகும், கையில் சாட்டையுடன் வீறுகொண்டு எழுகிற சில அறிவுஜீவிகள், தாம் சார்ந்திருக்கும் சமூகத்தை வார்த்தைகளால் சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டு, தத்தம் தலைகளில் ’போலி சமூகப்பொறுப்புடைமை’ என்ற அட்டைக்கிரீடத்தைப் பொருத்திக்கொண்டு அழகுபார்க்கின்றனர். இத்தகைய எரிச்சலூட்டுகிற போலித்தனம் உனது படுகொலைக்குப் பிறகும், தலைதூக்கியிருப்பது சற்றே வேதனையாய் இருப்பதால், எதிர்வினை ஆற்ற வேண்டிய ஒரு தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். தெய்வமாகிவிட்ட நீ இதையும் பொறுப்பாயாக!
      உனது படுகொலை நிகழ்ந்த தினத்தன்று, சென்னையில் மேலும் நான்கு பெண்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முந்தைய தினசரிகளை வாசித்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காகப் படுகொலைகள் நிகழ்ந்து வந்திருப்பதும் தெரிந்தே இருக்கும். அவற்றிலும் பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். வீடுபுகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தி மூதாட்டிகளை ரத்தவெள்ளத்தில் மிதக்கவிட்டு, பணம், நகைகளைக் கொள்ளையடித்த சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ந்து சிலபல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. வேதனை என்னெவென்றால், உனது படுகொலையைத் தொடர்ந்து ‘நான்தான் ஸ்வாதி பேசுகிறேன்’ என்று கட்டுரை எழுதி, சமூகத்துக்குச் சாட்டையடி கொடுக்கிறவர்கள், பிற கொலைகள் நிகழ்ந்தபோது, திரைப்பட விமர்சனங்களை எழுதி, தேசத்தொண்டு ஆற்றிக் கொண்டிருந்தனர். 
இறந்தது இளம்பெண்ணோ, மூதாட்டியோ – இத்தகைய சம்பவங்கள் சட்டத்தின் பிடி தளர்ந்து வருவதன் அறிகுறி என்பதையோ, குற்றவாளிகளின் துணிச்சல் அதிகரித்து வருகிறது என்பதன் அளபீடு என்பதையோ, ஒவ்வொரு சட்டவிரோதமான செயலும் ஏதோ ஒரு குடும்பத்துக்கு இழப்பு ஏற்படுத்துகிறது என்பதையோ, ஏதோ ஒரு விதத்தில் பெருகிவருகிற அலட்சியத்தின் பின்விளைவு என்பதனையோ, சில அறிவுஜீவிகளின் ஞானக்கண்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் உறுமீன் வருமளவும் காத்துக்குக் கொண்டிருந்தார்கள் போலும், வாடி நின்று சமூகத்தை வசைபாடுவதற்கு!
      உனக்கு நினைவிருக்கிறதா ஸ்வாதி? புது தில்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, உலகமே ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்தது. அதே தினத்தன்று தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி கிட்டத்தட்ட அதே மிருகத்தனத்துக்கு ஆளானபோது, அதை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்திலிருந்து நாமெல்லாம் ஆதங்கப்பட்டோம். “தில்லி மட்டும்தான் இந்தியாவா? தமிழகத்தில் ஒரு நிர்பயா பலியானால் கேட்க நாதியில்லையா?
      இன்று, தமிழகத்தின் பிற பகுதியில் வசிப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். “சென்னை மட்டும்தான் தமிழகமா? தென்கோடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் அதுகுறித்துக் கொதித்தெழ எவரும் இல்லையா? ஒரு படித்த இளம் பொறியாளரின் உயிருக்கு அளிக்கிற மதிப்பு, எங்கோ ஒரு பொட்டல் காட்டில் கொலைசெய்யப்படுகிற ஒரு பெண்ணின் உயிருக்கு இல்லையா?
      ’நான்தான் ஸ்வாதி பேசுகிறேன் என்று கட்டுரை எழுதியவர், உனது கனவுகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன்.
 கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் கொலை செய்யப்பட்ட பெண்களுக்கும் கனவுகள் இருந்திருக்கும். அது குறித்து அவருக்குப் பெரிய அக்கறையில்லை; உண்மையில் உனது மரணம் குறித்தும் அவருக்குப் பெரிய அக்கறையில்லை என்பதுதான், என்னை எழுதவைக்கிற தூண்டுகோலாக அமைந்தது. அவரது கட்டுரையிலிருந்து சில துளிகள் உன் பார்வைக்காக….!
உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது.
கட்டுரையாளரைப் பொறுத்தவரை ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.
ஸ்வாதி! நீ ஒரு படித்த பொறியாளர்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகத்திலேயே மிகச்சிறந்தவற்றுள் ஒன்றாகக் கருதப்படும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாய்; அந்தப் பணிக்குச் செல்வதற்காகக் காத்திருக்கையில்தான் ஒரு கொலைகாரனின் மிருகத்தனத்துக்கு இரையானாய். ஒரு வகையில் நீ பெண்கள் முன்னேற்றத்தின் ஒரு குறியீடு. ஆகையால், உனது படுகொலை பெண்கள் முன்னேற்றத்துக்கு ஏற்பட்ட களங்கம்; அதுவே ஏதோ ஒரு கிராமத்தில், படிப்பறியாத ஒரு பெண் கொலைசெய்யப்பட்டால், அது குறித்து பெண்கள் முன்னேற்ற ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதை நீ ஏற்றுக் கொள்வாயா?
உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள்?
சமூகத்தின் மீது போலியாகக் கோபப்படுகிறவர்கள், சந்தடி சாக்கில் மூன்றாம்தரமான விமர்சனங்களை வைத்து, வாசிப்பவர்களை உசுப்பேற்றுவது வாடிக்கையல்லவா? அந்த உத்தியைத்தான் கட்டுரையாளரும் பயன்படுத்தியிருக்கிறார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அப்போது அந்தப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருந்த எந்த ஆண்மகனுக்கும் ஆண்மையில்லை; அதேபோல, எந்தப் பெண்ணுக்கும் பெண்மையுமில்லை என்று எழுதியிருந்தால், மகளிர் சங்கங்கள் கொடிதூக்கிக்கொண்டு அவரது அலுவலகத்தை நோக்கிப் படையெடுத்திருக்கும் என்பதனால், சவுகரியமாக அதைச் சொல்லவில்லை. அனேகமாக, அவர் ஆண்மையில்லை என்று தன்னையும் சேர்த்தேதான் குறிப்பிட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டிருப்பார். (கட்டுரையாளர் கவனிக்க: அது வரிஜினிட்டி அல்ல; விரிலிட்டி.)
சென்னை மட்டுமின்றி, தமிழகமே உனது படுகொலை செய்திகேட்டு பதைபதைத்துக் கொண்டிருக்கையில், உனது பிரேதத்தின் தோளில் துப்பாக்கி வைத்து அவர் நடத்தியிருக்கிற தாக்குதல், உனக்குக் கொச்சையாகப் பட்டிருந்தால், அவர் சார்பாக நானே வருத்தம் தெரிவிக்கிறேன். ஆணல்லவா, உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாவம்!
அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா?
 நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் அறிவுஜீவி! உண்மையில், நுங்கம்பாக்கம் உட்பட சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லையென்பதோ, பல பறக்கும் ரயில் நிலையங்களில் பெண்களுக்குப் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதோ, பயணிகளின் உயிர் மற்றும் உடமைகளுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு என்பதோ கட்டுரையாளருக்கு நீ கொலைசெய்யப்படும் வரைக்கும் தெரியாது. தொடர்வண்டிகளில் பயணிக்கிறவர்கள் அன்றாடம் படுகிற அல்லல்கள், பெண்களுக்கு நிகழ்கிற அவலங்கள் இவையெல்லாம் கட்டுரையாளரின் மேலான பார்வைக்குக் கொண்டுசெல்லாத இந்த சமூகம் உண்மையிலேயே ஆண்மையற்ற சமூகம்தான். முன்கூட்டியே அறிந்திருந்தால், கட்டுரையாளர் மேற்கூறிய தவறுகளுக்குப் பொறுப்பானவர்களை அறம்பாடியே அழித்திருப்பார். காரணம், அவரது சமூக அக்கறையானது அவ்வளவு உறுதியானது. மேலொரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.
உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாதப் பொருளாக வைத்து விவாதித்துக் கொண்டே இருங்கள்.
கட்டுரையாளர் அனேகமாகக் கடவுளாக இருந்தாலும் இருக்கலாம். இறந்தபின்னும் உன் மனம் என்ன நினைக்கிறது என்பதை மட்டுமல்ல, உன்னைக் கொலை செய்தவனின் மனம் என்ன நினைக்கக்கூடும் என்பதுகுறித்தும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார். ஒரு பெண் கொலை செய்யப்பட்டால், அதற்கும் அவளது ஒழுக்கத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்ற மிக முற்போக்கான சிந்தனையை அவர் கோடிட்டுக் காட்டியிருப்பதை என்னவென்று வியப்பது?
ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவைப் பரிசாக அளித்து அவனைக் கொன்றுவிடும். அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். மிஞ்சிப் போனால் ஒரு கவிஞனின் இறங்கற்பா. ஒரு பேச்சாலனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை... இது தானே என் சாவின் எச்சங்கள்.
இல்லை! ஒரு கொலையைத் தடுக்கிற மன உரமும், உடல் வலுவும் பெறுவதற்கு முன்னர், கட்டுரையாளர் உட்பட அனைவரும் செய்யத்தக்கவை நிரம்ப இருக்கின்றன. சின்னச் சின்னத் தவறுகளை இழைக்கிறவர்களைக் கண்டும் காணாமலும் போகிற மனப்போக்கை விட்டுவிட்டு, உடனுக்குடன் தட்டிக் கேளுங்கள். பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் தொடங்கி அன்றாடம் நம் கண்முன்னே சமூக அலட்சியத்துடன் புழங்குபவர்களைக் கண்டிக்கிற துணிச்சலை வரவழைத்துக் கொள்ளுங்கள். கட்டுரைகள் எழுதுவதோடு நிறுத்தாமல், செயலில் இறங்குங்கள். சமூகத்தைத் திட்டுவதோடு பொறுப்பு முடிந்துவிட்டது என்று எண்ணாமல், களத்தில் இறங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு தனிமனிதன் செய்கிற ஒரு சிறிய தவறையாவது சுட்டிக்காட்டி, அவனைத் தடுத்து நிறுத்துங்கள். தவறு செய்தால், பார்ப்பவர்கள் தட்டிக் கேட்பார்கள் என்ற பயத்தை சிறுதுளி பெருவெள்ளமாக்க முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் அளவில் ஒரு இயக்கமாகச் செயல்படுத்தி, உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஈடுபடுத்துங்கள். இதையெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டும்; காவல்துறை செய்ய வேண்டும்; நீதிமன்றம் செய்ய வேண்டும் என்று பழிபோட்டுவிட்டு ‘என்னால் முடிந்தது புலம்புவதும் சாபமிடுவதும் மட்டும்தான்’ என்று உட்காராமல், முடிந்ததைச் செய்யுங்கள். – இது தானே நீ சமூகத்துக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஸ்வாதி?  
      கட்டுரையாளர் மட்டுமல்ல. ‘கொலையைக் கண்டும் கொலையாளியைத் தடுக்காதவர்களும் குற்றவாளிகள்தான்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் இன்னொரு முன்னாள் நடிகை; இன்னாள் அரசியல்வாதி. பெண்களைக் கேவலமாக நடத்துகிறார் என்று கட்சியின் எம்.எல்.ஏக்களே புகார் கொடுக்குமளவுக்கு யோக்கியமான தலைவர் உள்ள கட்சியிலிருந்து கொண்டு, இவர்களெல்லாம் இப்படிப் பேசுவது உன் ஆன்மாவைக் காயப்படுத்துவதன்றி வேறேன்ன ஸ்வாதி?
      கட்டுரையாளரின் முடிவுரையையே முத்தாய்ப்பாய் வைக்கிறேன்.
நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை.ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.
அப்படி வீழ்ந்து கிடக்கிற சமூகத்தில் ஸ்வாதியும், அவளது மரணத்தை வேடிக்கை பார்த்தவர்களும் மட்டுமல்ல; அதை மையப்படுத்தி சமூகத்தை மட்டும் குற்றம்சாட்டி, அவரவர் கடமைகளைத் தட்டிக்கழிக்கிற கட்டுரையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதை மாற்ற ஒரு சிறு அடியை முன்வைத்து, முனைவதே ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து, பெண்களுடன் சகோதரனாய் வளர்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து, பெண்ணுக்குத் தகப்பனாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொரு ஆண்மகனின் கண்ணியத்துக்குப் பெருமை சேர்ப்பதாய் இருக்கும்.

ஸ்வாதி! உன் படுகொலை உறங்கிக்கொண்டிருக்கிற மனசாட்சிகளை உலுக்கி எழுப்புகிற அழைப்புமணியாவதாக!