ஞாயிறுதோறும் ஓசியில் வருகிற ஆங்கிலப்பேப்பரை, அலட்சியமாக உதறியபோது, வழுவழுப்பான வண்ணக்காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த நோட்டீஸ் கண்ணைக் கவர்ந்தது.
“இந்த நோட்டீசைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.950/- பெறுமான முழு உடல் பரிசோதனை ரூ.350/-க்கு செய்து தரப்படும். முன்பதிவு செய்து கொள்ளவும்.”
நியாயமாகப் பார்த்தால், என் உடம்பை முழுசாகப் பரிசோதிக்க வெறும் ரூ.175/- போதுமென்றாலும், ஒரு தபா உடம்பில் எலும்பு நரம்பெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் தவறில்லை என்று தோன்றவே, தொலைபேசியில் முன்பதிவு செய்ய முடிவு செய்து போனில் தொடர்புகொள்ளவும், எதிர்முனையில் சாதனா சர்கம் போலக் குரல் பதிலளித்தது.
“காலையிலே ஏழுமணிக்கெல்லாம் வெறும் வயித்தோட வாங்க சார்.”
“வெறும் வயித்தோடவா? அப்போ சட்டை பனியன் போடாமலா வரணும்?”
“எண்டே பகவானே! டீ, காப்பி, டிபன் எதுவும் சாப்பிடாம வாங்கன்னு சொன்னேன்.”
“ஆல்ரைட்!”
அடுத்த நாள், நோட்டீசைத் தூக்கிக் கொண்டு அந்த ஆஸ்பத்திரியை அடைந்தபோது, ரிசப்ஷனில் தூக்கக்கலக்கத்தோடு ஒரு பெண் வரவேற்று, சொளையாக ரூ.350/- வாங்கிக்கொண்டு, ஏறக்குறைய ஐ.ஏ.எஸ் வினாத்தாள் போலிருந்த ஒரு படிவத்தில், எனது பெயர், வயது இன்னபிற விபரங்களைக் குறித்துக் கொள்ளத்தொடங்கினாள்.
“நீங்க எந்த குரூப் சார்?”
“ஸாரி, எல்லா குரூப்புலேருந்தும் தொரத்திட்டாங்க! வெறும் பிளாக்-லே மட்டும் தான் எழுதிட்டிருக்கேன்!”
“ஐயோ, அதை யாரு சார் கேட்டாங்க, உங்க இரத்தம் என்ன குரூப்?”
“ஓ பாசிடிவ்!” என்று சொன்னதும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்த அந்தப் பெண், ‘எடீ சுமா, இவிடே ஒரு செக்-அப் வன்னுட்டுண்டு; விளிச்சோண்டு போ!” என்று சொல்லவும் சுமா என்ற பெயரில் ஒரு சுமோ என்னை நோக்கி ஏறக்குறைய உருண்டு வந்தார்.
“வாங்க சார்,” என்று அழைத்துப்போய் ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கையைப் பிடித்து நாடி பார்த்தார். பிறகு, இரத்த அழுத்தம் பார்த்தார்.
“எனக்கு பிளட் பிரஷர் கிடையாது!”
”உங்களுக்கு பிளட் இருக்குதான்னே சந்தேகமாயிருக்கு! சரி, எழுந்திரிச்சு இந்த மெஷின் மேலே நில்லுங்க! வெயிட் பார்க்கலாம்!”
நான் ஏறி நின்றதும், என்னை நிமிர்ந்து நிற்கச் சொல்லியவர், குனிந்து பார்த்தார்.
“ஐயையோ, என்னது முள்ளு நகரவேயில்லை?”
“ஏன், இல்லாட்டா நகர்ந்து நாயர் கடைக்குப் போயி சாயா குடிக்குமா?”
அந்தப் பெண் என்னை முறைத்து விட்டு, செயற்கையாகச் சிரித்தார்.
“அடுத்தது பிளட் செக்-அப் பண்ணுவாங்க; அப்புறம் எக்ஸ்-ரே; அப்புறம் ஈ.சி.ஜி; அப்புறம் டாக்டர் செக்-அப்; அப்புறம் ஸ்கேன்; அப்புறம் சர்ஜன் பார்ப்பாரு! அப்புறம் டயட்டீசியன் பார்ப்பாரு! சரீங்களா?”
ஆஹா, வெறும் ரூ.350/-க்கு இத்தனை பரிசோதனைகளா? என்று நான் வாயைப் பிளந்தபடியே சுமோவின் பின்னாலேயே சென்று, இரத்தப் பரிசோதனை செய்யும் அறைக்குள் நுழைந்தேன். அங்கே ‘கலாகௌமுதி’ வாசித்துக் கொண்டிருந்த பெண் என்னைப் பார்த்ததும் சலிப்புடன் எழுந்தாள்.
“மிஸ்டர் சுமா!” பதற்றத்தோடு அழைத்தேன்
“என்னது?”
“சாரி, உங்களை மேடம்னு அழைக்கிறதா சிஸ்டர்னு அழைக்கிறதான்னு குழம்பி, மிஸ்டர்னுட்டேன். அதாவது சிஸ்டர் சுமா, என் உடம்புலேருந்து ரொம்ப இரத்தம் எடுத்திராதீங்க! வெயிட் குறைஞ்சிரும்! தப்பிப் போய் அதிகம் எடுத்தா, மிச்சமிருக்கிறதை ஊசிபோட்டாவது திருப்பிக் கொடுத்திரணும்.”
”அதெல்லாம் எடுக்க மாட்டாங்க! ஜென்சி, சாம்பிள் எடு, நான் போய் சாருக்குத் தண்ணி பாட்டில் கொண்டு வர்றேன்.”
“ஊசி போட்டா அழுவீங்களா சார்?” அந்த ஜென்சி அக்கறையோடு கேட்டாள்.
“சேச்சே! ஊசியைப் பார்த்தாலே அழுதுருவேன். வலிக்காமப் போடுங்க சிஸ்டர்!”
எனது உடம்பில் நரம்பைக் கண்டுபிடிப்பது, ஆற்காட்டு ரோட்டில் பள்ளத்தைக் கண்டு பிடிப்பது போல சுலபமானது என்பதால், அநியாயத்துக்கு ஒரு அவுன்ஸ் டீ அளவுக்கு இரத்தத்தை ஊசியால் உறிந்து எடுத்தார் ஜென்சி. குத்திய இடத்தில் பஞ்சை வைத்து விட்டு, அப்படியே உட்கார வைத்து விட்டு மீண்டும் கலாகௌமுதியில் மூழ்கினார்.
“வாங்க சார்,” என்று ஒரு கையில் தண்ணீர் பாட்டிலும், இன்னொரு கையில் ஒரு அரையடி நீளத் துவாலையுமாகத் திரும்பி வந்தார் சுமா. “எக்ஸ்ரே எடுக்கப்போலாம் வாங்க!”
எக்ஸ்ரே அறையிலிருந்தவன் என்னைப் பார்த்ததும் ‘உனக்கெல்லாம் எக்ஸ்ரே எடுப்பது எக்ஸ்ரேவுக்கே அவமானம்,’ என்பதுபோல கேவலமாகப் பார்த்தார்.
“சட்டை பனியனைக் கழட்டுங்க சார்!”
“அண்ணே, லேடீஸ் பக்கத்துலே நிக்குறாங்கண்ணே!” நான் கெஞ்சினேன்.
“ஆமா, இவரு பெரிய சல்மான் கான். சிக்ஸ் பேக் வச்சிருக்காரு! நியாயமாப் பார்த்தா உங்க உடம்புக்கு பனியனைக் கழட்டினா, எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. என்ன பண்றது, கழட்டுங்க!”
எனது தாவாங்கட்டையை ஒரு தகரச்சட்டத்தின் மீது அழுத்தி வைத்து விட்டு, அவர் கூறினார்.
“மூச்சை இழுத்துப் பிடிங்க! நான் சொல்லுற வரைக்கும் மூச்சு விடக்கூடாது!”
“அண்ணே, ஸ்மைல் ப்ளீஸ் சொல்லுவீங்க தானே?”
அவர் எரிச்சலோடு பார்க்கவும், வாயைப் பொத்திக்கொண்டு நான் மூச்சைப்பிடித்துக் கொண்டு நிற்கவும், சட்டென்று படம்பிடித்து விட்டு என்னைக் கழுத்தைப்பிடித்துத் தள்ளாத குறையாக வெளியேற்றினார்.
“சார், சட்டையைப் போட்டுக்காதீங்க! ஈ.சி.ஜி.எடுக்கணும்!”
ஈ.சி.ஜி அறையில் மாறுதலாய் ஒரு பெண் விகடன் வாசித்துக் கொண்டிருக்க, சுமா என்னை அங்கிருந்த உயரமான கட்டிலுக்கருகே அழைத்துச் சென்றார்.
“இதுலே படுத்துக்கோங்க சார்! ஈ.சி.ஜி. எடுத்ததும் இந்த ஒரு பாட்டில் தண்ணியையும் குடிச்சிரணும். அப்பத்தான் ஸ்கேன் பண்ண முடியும்.”
“ஒரு பாட்டில் தண்ணியா? மிக்சிங்குக்கு ஏதாவது கிடைக்குமா?”
“என்னது?”
“சாரி, பழக்கத்தோஷத்துலே கேட்டுட்டேன்.”
தண்ணீர் பாட்டிலையும், துண்டையும் வைத்து விட்டு, சுமா வெளியேறியதும், அந்த இன்னொரு பெண், கட்டிலில் படுத்திருந்த என் மீது பற்பசை போன்ற திரவத்தை ஆங்காங்கே ஒட்டி, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கேபிளாக ஓட்டத்தொடங்கினார்.
“சிஸ்டர், கேட்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க! எதுக்கு என் உடம்புலே இத்தனை கேபிளை சொருகறீங்க? என்னையும் போதிதர்மனாக்கப் போறீங்களா?”
“ஷட் அப்!” தமிழ்ப்பெண்ணாய் லட்சணமாய் அந்தப் பெண் அதட்டவும், புதிதாய் அமைச்சர் பதவியேற்றது போல, கையது கொண்டு வாயது பொத்தி நான் அமைதியானேன்.