டாக்டர்.மன்மோகன் சிங்குக்குப் போதாத காலம் இது! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ‘டைம்’ பத்திரிகை அவரை ‘செயல்படாத பிரதமர்’ என்று வருணித்திருந்தது. இதனால் ஆத்திரமடைந்த நம்மூரு காங்கிரஸ் அதிபுத்திசாலிகள் சென்னைப்பதிப்பு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வை எரித்து, அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.
(இம்முறை சத்தியமூர்த்தி பவன் தொண்டர்படை என்ன செய்யுமோ? வாஷிங்டன் போஸ்டை-க் கண்டித்து வண்ணாரப்பேட்டை போஸ்ட் ஆபீஸ்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நடத்தலாம்.)
”என்னுடைய மவுனம் பல ஆயிரம் பதில்களைவிடச் சிறந்தது,” என்று பிரதமர் கூறியிருந்ததை ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏன் கிண்டல் செய்திருக்கிறது என்பது புரியவில்லை. ஓபாமாவைப் போல உளறுவாயராக இருப்பதைக் காட்டிலும், சும்மாயிருப்பதே சுகம் என்று நம்ம பிரதமர் சொல்லியிருக்கலாம் அல்லவா? இதையெல்லாமா கிண்டல் பண்ணுவது? வர வர இந்த அமெரிக்கர்கள் பண்ணுற அலப்பறை தாங்கலை சாமீ! (சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதித்துத் தொலைத்திருந்தால், ‘டைம்ஸ்’ ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பத்திரிகைகள் இப்படிக் கரித்துக் கொட்டியிருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.)
’அட, என்ன சேட்டை, திடீர்னு பிரதமருக்கு வக்காலத்து வாங்குறா மாதிரியிருக்கே?’ன்னு யோசிக்கிறதுக்குள்ளே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நாமளாவது காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்குறதாவது..! இதோ, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நான் குழுமங்களில் எழுதிய இன்னொரு பாடல்....!
(’அங்காடித்தெரு’ படத்தில் வரும் ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ மெட்டில் எழுதப்பட்ட பாட்டு.)
அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை
அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை
அவர் தேர்தல் எதிலும் ஜெயித்ததில்லை
தெரிந்தும் தவறைத் தடுத்ததில்லை
அவர் பேரைக் கேட்டால் அதிர்வதில்லை
பெரிதாய் ஓட்டும் குதிர்வதில்லை
(அவர் அப்படியொன்றும் அசடில்லை)
அவர் மேதாவி என்பார் மறுக்கவில்லை
மேல் நாட்டுப்படிப்பும் உதவவில்லை
அவர் பாராளுமன்றத்தில் உறங்கவில்லை
இன்னும் பாழும் விலைகள் இறங்கவில்லை
அவர் அன்னை சொல்லைத் தட்டவில்லை
அவர் அமைச்சர் தலையில் குட்டவில்லை
அவர் வாயில்வருவதைத் திட்டவில்லை
அவர் வார்த்தைகள் எதையும் கொட்டவில்லை
அவர் வேலை என்ன புரியவில்லை
நமக்குப் புரியவில்லை
(அவர் அப்படியொன்றும் அசடில்லை)
அவர் திட்டம்போட்டு எதுவும் நடப்பதில்லை
அவர் திமிராய்ப்பேசுவோரை அடக்கவில்லை
அவர் கட்சிக்குள் கூட நண்பரில்லை
அவர் காசிக்குப் போகவும் நேரமில்லை
அவர் அரசியல்பேச்சில் இரைச்சலில்லை
அவர் அறிக்கைவிடுவதில் குறைச்சலில்லை
அவர் தடுத்தால் கேட்கிற ஆளுமில்லை
புதுத்தலைவலி இல்லா நாளுமில்லை
அவர் சிங்கென்றாலும் சிங்கமில்லை
அவர் சிங்கமில்லை
அவர் அப்படியொன்றும் அசடில்லை
அவருக்கு ஏனோ பவர் இல்லை
அவர் மற்றவர் போலே டெரர் இல்லை
அவர்மேல் எவர்க்கும் பயம் இல்லை