Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, February 25, 2013

கவிதைக்காய்ச்சல்




கவிதைக்காய்ச்சல்

1.       தலைப்புக்கும் இடுகைக்கும் சம்பந்தம் கிடையாது.
2.       படத்துக்கும் இடுகைக்கும் சம்பந்தம் கிடையாது.
3.       படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் கிடையாது.
4.       கவிதைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.



      எடோ...அங்கே பாரு!                

      மொட்டைமாடியை அடைந்ததும், சுரேந்திரன் காட்டிய திசையைப் பார்த்த எனக்கு, பகல்காட்சியில் பலான படம் பார்க்கப்போய் பக்திப்படம் பார்த்ததுபோல பக்கென்று ஆயிற்று! ஆருயிர் நண்பன் வைத்தி மொட்டைமாடியின் குட்டிச்சுவரை ஒட்டி நின்றபடி எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்.

      ஐயையோ! சுரேந்திரா என்னடா ஆச்சு? தற்கொலை பண்ணிக்கப்போறானா?

      என் குரலைக்கேட்டுத் திரும்பிய வைத்தி எங்களைப் பார்த்து, பழைய தமிழ்ப்படத்தில் தனியாகச் சிக்கிய கதாநாயகியைப் பார்த்து வில்லன் சிரிப்பதுபோலச் சிரித்தான்.

      வாங்கடா! ஒரு அருமையான கவிதை சொல்றேன். கேட்கறீங்களா?

      என்னது கவிதையா?  அதிர்ந்தேன் நான். இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்குப் போய் வந்ததுமுதல் வைத்தி ஒரு மார்க்கமாகவே இருப்பதை கவனித்து வந்தாலும், இப்படிக் கவிதை எழுதுமளவுக்கு விஷயம் விபரீதமாகும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

      வேணாண்டா!சுரேந்திரன் கெஞ்சினான். “ஏற்கனவே சேட்டைக்கு உடம்பு சரியில்லை. நீ புக்-எக்ஸிபிஷன் போயிட்டு வர்றப்போ சொன்ன கவிதையே இன்னும் செரிமானம் ஆகலே!

      ரசனை கெட்ட ஜென்மங்களா!உறுமினான் வைத்தி. “அது எவ்வளோ நல்ல கவிதை.... இன்னொரு வாட்டி கேளுங்கடா...

புத்தகக்கண்காட்சி!
சுடச்சுடக் கிடைத்தன
கவிதை நூல்களும்
காப்பி போண்டாவும்!

      வைத்தி!அலறினேன் நான். “இதுவரைக்கும் நீ எவ்வளவோ இடைஞ்சல் பண்ணியிருக்கே! ஃபிரெண்ட்ஷிப் கெட்டுரக்கூடாதேன்னு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டோம். அதுக்காக கவிதையெல்லாம் சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்லை. உனக்கு நாங்க ரெண்டு பேரும் அப்படியென்ன கெடுதல் பண்ணிட்டோம்..?

      டேய் சேட்டை! சென்சார்போர்டுக்குப் போன சினிமா டைரக்டரைப் போலக் கெஞ்சினான் வைத்தி. எனக்காக ஒரே ஒரு கவிதை கேளுடா! அது நல்லாயில்லேன்னா அப்புறம் நான் கவிதையே எழுத மாட்டேன். சரியா?

       நானும் சுரேந்திரனும் ஜாடையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். வைத்தியின் கவிதைகளிலிருந்து தப்பிக்க நல்ல வழியை அவனே சொல்லி விட்டான்.

      சரிடா! ஒரே ஒரு கவிதை தான் அலவ்ட்! தப்பித்தவறி நாங்களே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாக்கூட நீ இன்னொரு கவிதை சொல்லுவேன்னு அடம்பிடிக்கக் கூடாது. சரியா?

      சேச்சே! அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைடா!

      எதுக்கு? நாங்க நல்லா இருக்குன்னு சொல்றதுக்கா...?

      கேளுங்கடா!என்ற வைத்தி தொண்டையைச் செருமிக் கொண்டான். பிறகு....

என்மீது தாழப்பறந்தும்
எச்சமிடாமல் செல்கிறது.....!

என்று நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தான் வைத்தி.

      எச்சமிடாமல் செல்கிறதா? பாவம், காக்காய்க்கு கான்ஸ்டிபேஷன் போலிருக்குது...!

      இல்லைடா!எரிந்து விழுந்தான் வைத்தி. “என்மீது தாழப்பறந்தும் எச்சமிடாமல் செல்கிறது.....ஆகாய விமானம்..

      எண்டே குருவாயூரப்பா...என்னை மாத்ரம் ரட்சிக்கணே!என்று தலையில் கைவைத்தவாறு அமர்ந்தான் சுரேந்திரன்.

      ஏண்டா....ஏன்....ஏன்...? பதறினான் வைத்தி.

      ஏனா..?உறுமினேன் நான். “ஏரோப்ளேன் எச்சம் போடலைன்னு ஒரு கவிதையா? மவனே, நீ இப்படியெல்லாம் கவிதையெழுதி டார்ச்சர் பண்ணுற ஆளுன்னு தெரிஞ்சிருந்தா உன் தலையிலே குண்டே போட்டிருக்கும் தெரியுமா?

      பாவிங்களா! எவ்வளவு நல்ல கவிதை சொல்லியிருக்கேன். அதை ரசிக்கத்தெரியலியே? என்னோட கவிதையெல்லாத்தையும் புஸ்தகமாப் போட்டா என்னாகும் தெரியுமா?

      கிலோவுக்கு  நாலே கால் ரூபாய் கிடைக்கும்!

      ஓஹோ!வைத்தி கறுவினான். “எனக்குப் புரிஞ்சிருச்சுடா; புரிஞ்சிருச்சு!

      மவனே, எழுதின உனக்குப் புரிஞ்சாப் போதுமா?எகிறினேன் நான். “எங்களுக்குப் புரியற மாதிரி கவிதை சொல்லுடா....

      ஐயோ...வேண்டே....!கதறினான் சுரேந்திரன். “வைத்தி, போதும், இத்தோட நிறுத்திக்குவோம். எங்களுக்கு அறிவு கம்மி. ஏர்டெல் பிராட்பேண்ட் பில்லும் கவிதையும் எல்லாராலேயும் புரிஞ்சுக்க முடியாது. விட்டிரு!

      பொறாமை பிடிச்சவங்களா...!வைத்தியின் குரல் தழுதழுத்தது. “அவனவன் நண்பன் கவிதை எழுதினா எப்படியெல்லாம் ஊக்குவிக்கிறாங்க?

      சர்தான் நிறுத்துடா!அதட்டினேன் நான். “உன்னை ஊக்குவிக்கிறதுக்குப் பதிலா நான் லோக்கல் டிரெயினிலே ஊக்கு விப்பேன். ஊக்கு மட்டுமில்லேடா, குண்டூசி, குத்தூசி, பென்சில் எல்லாம் விப்பேன். காசாவது தேறும்!

      சேட்டை! நீ இவ்வளோ வயித்தெரிச்சல் புடிச்சவனா இருப்பேன்னு எனக்குத் தெரியாதுடா!

      எனக்கே தெரியாதே! நேத்துத்தான் டாக்டர் எனக்கு பெப்டிக் அல்ஸர் இருக்கு. எண்ணை, உப்பு, காரம், கவிதையெல்லாம் கூடாதுன்னு சொல்லியிருக்காரு!

      டேய் சேட்டை!சுரேந்திரன் மலையாளப்பட க்ளைமேக்ஸில் பொங்கியெழும் லாலேட்டன் போல வெகுண்டான். “ஈ வைத்தி நமக்குப் பொறாமைன்னு சொல்றாண்டா! நாம நினைச்சா கவிதை எழுத முடியாதா? என்னமோ இவன் ஒருத்தன் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்னுறா மாதிரியல்லே பேசுறான்?

      சுரேன்...எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவிதை எழுதத் தெரியாதுடா!

      இருக்கட்டுமே! வைத்திக்கு மட்டும் தெரியுமாக்கும்?

      டேய் சுரேந்திரா...!வைத்தி குரலெழுப்பினான். “என்னோட கவிதையை மட்டமாப் பேசறீங்களே, உங்களாலே என்னை மாதிரி ஒரு கவிதை சொல்ல முடியுமா...?

      உன்னை மாதிரி யாராலேயும் கவிதை எழுத முடியாதுடா!நான் ஒப்புக்கொண்டேன். “தலையிலே விக் வைச்சவனெல்லாம் பவர் ஸ்டார் ஆக முடியுமா?

      நீங்க நினைச்சாலும் கவிதை எழுத முடியாதுடா!கொக்கரித்தான் வைத்தி. “அதுக்கெல்லாம் அறிவு வேணுண்டா!

      எந்தாடா பறஞ்சது?சுரேந்திரன் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டான். “எந்து விஜாரிச்சு? ஞானும் கவிதை பறையும்....கேட்கான்.... யே ஓமனே....எண்டே ஓமனே...!

      டேய் சுரேந்திரா...!இடைமறித்தேன் நான். “அஞ்சாம் கிளாஸ் பசங்கல்லாம் ஐ-பேடோட சுத்திட்டிருக்காங்க; தினத்தந்தியிலே கன்னித்தீவே முடியப்போகுது. இன்னும் ஓமனையை விடலியா? லேட்டஸ்டா பாவனா, மீரா ஜாஸ்மின், மம்தா மோகன்தாஸ், காவ்யா மாதவன்னு சொல்லுடா! தமிழுலே சொல்லுடா!

      அது இன்னும் ஈஸி!என்றான் சுரேந்திரன். “நம்ம வைத்தி சொன்னதுமாதிரியே ஒரு தமிழ்க்கவிதை சொல்றேன் கேளு....

ஒவ்வொரு மதிய உணவு
இடைவேளைக்கு முன்பும்
நினைவுக்கு வருகிறது...
திறக்க முடியாத டிபன் பாக்ஸும்...
மூட முடியாத மனைவியின் வாயும்..

      சபாஷ் சுரேந்திரா!நான் கைதட்டினேன். “இது வைத்தியோட கவிதையை விட பெட்டராயிருக்கு!

      அடச்சீ!வைத்தி சீறினான். “கவிதையாடா இது?

      அப்படீன்னா நான் சொல்ற கவிதையைக் கேளு!என்று தோள்தட்டினேன்.

ஞாயிற்றுக்கிழமை நெருங்கினால்
அலுவலகங்களில் எல்லாரும்
அலைபாய்கிறார்கள்..!
சனிப்பெயர்ச்சிக்காக...

                வாவ் சேட்டை!சுரேந்திரன் கைகுலுக்கினான். “உனக்குள்ளே கவிதை இருக்குடா!

      தூங்கிட்டிருந்ததை எழுப்பிட்டீங்களே?சலித்துக்கொண்டேன். “அது எப்படிப் பாஞ்சு பிறாண்டப்போவுதுன்னு போகப் போகத்தான் தெரியும்.

      உங்க கவிதையை நீங்கதான் மெச்சிக்கணும்!பொருமினான் வைத்தி. “இயல்பா கவிதை எழுதுங்கடா... நான் எழுதியிருக்கேன் கேளுங்க...!

கல்யாண மண்டப வாசலில்
கைகுலுக்கிக்கொண்டனர்
பிச்சைக்காரனும்
பெண்ணின் தகப்பனும்.

      நீ எதுக்கு பெண்ணின் தகப்பனோட கைகுலுக்கினே?

      சேட்டை! வரதட்சணைக் கொடுமைடா! கவிதைன்னா சமூக அக்கறை வேணுண்டா!முழங்கினான் வைத்தி.

      சேட்டை!சுரேந்திரன் தோளைச் சுரண்டினான். “சமூக அக்கறையோட எப்படிக் கவிதை எழுதறது?

      அது ரொம்ப சிம்பிள் மேட்டர்டா! கவிதை எழுதுறவனைத் தவிர மத்தவன் எவனுக்கும் சூடு சூலாயி, வெக்கம் வேலாயி, மானம் மங்காத்தா எதுவும் கிடையாதுன்னுறா மாதிரி எழுதணும். கவிதையைப் படிச்சதும் நாக்கைப் பிடுங்கிட்டுச் சாவணும் போலிருக்கணும்.

      வைத்தி கவிதையைக் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் தோணிச்சு! இதுக்குச் செத்துப்போறது எத்தரையோ பெட்டர்...!

      டேய் சேட்டை! டேய் சுரேந்திரா!விஜய் போல விரல் சொடுக்கினான் வைத்தி. “என்னை மாதிரி பின்நவீனத்துவத்தோட ஒரு கவிதை சொன்னீங்கன்னா, ஒரு பக்க மீசையை எடுக்கறேண்டா!

      எடோ சேட்டை! ஈ பின்நவீனத்துவம் எந்தாணு?

      அது ஒண்ணுமில்லேடா! நீ வெனிலா ஐஸ் க்ரீம் சாப்பிட்டிருக்கியா?

      ஓ! அத்தரை ரசமாணோ ஈ பின்நவீனத்துவம்...?

      அவசரப்படாதேடா! அந்த வெனிலா ஐஸ் க்ரீம்லே வேப்பெண்ணையை ஊத்திச் சாப்பிட்டா எப்படியிருக்கும்? அதான் பின்நவீனத்துவம்!

                கிண்டல் போதும்! முடிஞ்சா கவிதை சொல்லுங்க!சீறினான் வைத்தி.


      இதோ எடுத்து வுடறேன் பாரு! க்கும்...!என்று தொடங்கினேன்.

பேருந்துப் பயணங்களில்
பரிதவிக்கிறது மனம்...

உனது புன்னகைக்காகவும்..
கண்டக்டர் தர வேண்டிய
பாக்கி சில்லரைக்காகவும்...!

     பிரமாதம் சேட்டை!கைதட்டினான் சுரேந்திரன். “இப்ப என்னடா சொல்றே வைத்தி?

     விழுந்தாலும் எழுவேன்; எழுந்து ஓடுவேன்! என்று கம்பீரமாய்ச் சொன்னான் வைத்தி.

      ஏன்? நாய் துரத்துதா? என்று வைத்தியைக் கடுப்பேற்றினேன்.

      சே! உங்க கிட்டே போயி கவிதை சொன்னேனே! என் புத்தியைச் செருப்பாலே அடிக்கணும்!

      அதெல்லாம் வேண்டாம்! அதுக்குப் பதிலா என் கவிதையைக் கேளு!

சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய முதலீடா?
அதிர்ந்து போய்
ஆங்கிலம் கற்க
முடிவு செய்தனர்
பிச்சைக்காரர்கள்!

     அடிபொளி!என்று ஆர்ப்பரித்தான் சுரேந்திரன். “ நானும் இன்னொரு கவிதை சொல்லட்டுமா?

ஒவ்வொரு மின்தடங்கலின் போதும்..
ஓடிப்போய்ப் பார்க்கிறேன்..
பக்கத்து வீட்டிலும்
போய் விட்டதா என்று...

      சூப்பர்ப்!

      டேய் சேட்டை! டேய் சுரேந்திரா! நிறுத்துங்கடா!கெஞ்சினான் வைத்தி.

      இருடா! கவிதைன்னா பொண்ணுங்களைப் பத்தி ஒண்ணாவது சொல்ல வேணாமா? கேளுடா...
அவளது இடையும்
ஆண்டவனும் ஓன்று..
உண்டென்பர் சிலர்..
இல்லைஎன்பார்கள் சிலர்..
கண்டவர் விண்டதில்லை
கண்டவர் உள்ளம் மட்டும்
விண்டு போகிறதே...!

      கவிஞர் சேட்டை வாழ்க!என்று கோஷமிட்டான் சுரேந்திரன். “சேட்டை, இப்போ எனக்கு இந்த ஆட்டம் நல்லாப் புரிஞ்சிருச்சு! நானும் சமுக சர்க்கரையோட ஒரு கவிதை சொல்லட்டுமா?

      டேய், அது சமுக சர்க்கரை இல்லேடா; அக்கறை!

      ஓ.கே!என்று கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு சுரேந்திரன் அடுத்த கவிதையைச் சொன்னான்.

மனநல மருத்துவமனையில்
கால்பந்தாட்டம்!
காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும்
நடந்த போட்டி
டை-பிரேக்கரில்முடிந்தது.


      அற்புதம்டா!என்று சுரேந்திரனைக் கட்டித்தழுவிக்கொண்டேன். அடுத்த வினாடி வைத்தியைக் காணவில்லை. மொட்டைமாடியிலிருந்து ஏதோ ஒரு கனமான பொருள் உரத்த சத்தத்துடன் ‘ஐயோஎன்ற அலறலுடன் கீழே விழுந்தது புரிபட இரண்டொரு நொடிகள் பிடித்தன.


**************

Tuesday, September 27, 2011

அன்னை காளிகாம்பாள்


ஆழியலை சூழ்ந்த அவனிதனை உருவாக்கி
      அண்டிவருவோரை அன்னையென ஆதரித்து
ஊழின்வலி போக்கி உவகைபெறச்செய்பவளே
      உள்ளந்தனில் நிறைந்த மாகாளிகாம்பிகையே!
வேழின் உருக்கொண்ட வினைநீக்கும் கணநாதன்
      வெற்றிவடிவேலன் கதிர்காம முருகனுடன்
தோழியென நிற்கும் வைணவியும் புடைசூழ
      தோன்றி அருள்புரியும் மாகாளிகாம்பிகையே!

அண்டந் தனையாக்கி அகிலமதைக் காத்தருளி
      அல்லல் அளித்தகொடும் அரக்கர்தமையழிக்கக்
கொண்டாய் காளியெனும் கோலமதை அம்பிகையே
      கோவிலுற்ற அடியோரின் குறைதீர்க்கும் மாகாளி
விண்ணோர் வேந்தன்முதல் வியாசபராசரரும்
      விசுவகருமருடன் வேதமுனி அகத்தியனும்
மண்ணில் மழைபொழியும் வருணனுமே வணங்கினரே
      மாயை நீக்குமெங்கள் மாகாளி அம்பிகையே!

சென்னை எனும்பெயரை இந்நகர்க்கு ஈந்தவளே!
      செம்மை அருள்பவளே சென்னம்மா மாகாளி
மின்னும் பொற்தாலி மூக்குத்தி கங்கணமும்
      மிஞ்சியுடன் சிலம்புணிந்தே உவந்திருக்கும் மாகாளி!
கன்மம் மாயையுடன் ஆணவமாம் மும்மலத்தை
      கண்ணால் அழிப்பவளே கமடேசுவரி தாயே!
தொன்மை மிக்கதொரு திருக்கோவில் தனிலுறைந்தே
      தொழுவோர் குறைதீர்க்கும் தூயவளே மாகாளி!

செல்வந் தனையருளும் மலைமகளே ஓர்கண்ணாம்
      செம்மைக் கல்விதரும் அலைமகளும் ஓர்கண்ணாம்
கல்வி செல்வமுடன் வீரமென மூன்றுமிகக்
      கருணையுடனருளும் மாகாளிகாம்பிகையே!
பல்கி அருளவெனப் பாங்குடனே உறையீசர்
      பாகமுறைந்தவொரு பார்வதியே மாகாளி!
சொல்வர் பரதபுரி சொர்ணபுரி எனபலவாய்
      சோர்வு பிணிநீக்கும் மாகாளிகாம்பிகையே!

தஞ்சம் புகுந்தவர்க்குத் தாயாகி நின்றவளே!
      தரணியைக் காப்பவளே தாயே மாகாளி
நெஞ்சம் தனிலுனையே நிதமும் நினைப்பவர்க்கு
      நெற்றிச் சக்கரத்துள் நின்றுலவும் மாகாளி
பஞ்சம்பசியின்றிப் பாரெங்கும் செழித்திடவுன்
      பார்வைத் திருவருளைப் பாலிக்கும் மாகாளி
அஞ்சும் அடியார்க்குன் அபயக்கரங்காட்டி
      அன்னை எனவிளங்கும் அம்பிகையே மாகாளி!

Monday, August 30, 2010

நதியைப்போல......!

தரம்பிரித்துப் பாராமல்
தாகத்தைத் தணிக்கும்

கழிவுகள் வருகின்றபோதிலும்
கரிசனத்துடன் ஏற்றுக்கொள்ளும்

பாறைகளில் மோதியும்
பதறாமல் நடக்கும்

எடுப்பார்கைப்பிள்ளையாய்
எங்கு செலுத்தினாலும் பாயும்!

சிறைப்படுத்தினாலும்
சிரித்தபடி காத்திருக்கும்

உலகத்தின் பாவத்தையெல்லாம்
உள்வாங்கிச் செரிக்கும்

நடுங்கிநிற்கும் நாணல்தனை
நட்போடு உரசும்

பாதையில் கரைகளுக்கு
பாதபூசை செய்யும்

கூழாங்கற்களோடு
குலாவிக் குதூகலிக்கும்

களைப்பாற நேரமின்றி
கடமையை நிறைவேற்றும்

இறந்த மரங்களுக்கும்
இறுதிச்சடங்கு நடத்தும்

ஆகாயநிழலெடுத்து
ஆடையாய்ப் புனையும்

கரையோரக் கவிஞருக்குக்
கற்பனையைத் தெளிக்கும்

இறைவனுக்கு அடுத்தபடி
நிறைவுதரும் நதியே!

இறுதியிலே ஆழ்கடலுள்
இறப்பதென்ன விதியே!

Sunday, August 29, 2010

வழித்துணையாய் ஒரு வலி


வாரத்தின் இறுதிநாளை
வாழ்க்கையின் கடைசிநாளாய்க் கொண்டாட
நண்பர்கள் எல்லோரும்
நகர்வலம் போய்விட்டார்கள்!

செய்தித்தாள்களின் தலைப்புக்கள்
செரிமானமாகி விட்டன.

பரிகாசமாய்ச் சிரிக்கிறது
பரிச்சயமான பகல்வெளிச்சம்

ஆளரவமற்ற அறையில் நான்!
வலியவந்து கைகுலுக்கிய
வலிமட்டுமே என்னுடன்
வசித்துக்கொண்டிருக்கிறது!

வழித்துணைக்குப் பதிலாய்
வலித்துணை வாய்த்தது!

இனி விலகமுடியாதபடி
இரண்டறக்கலந்துவிட்டோம்!

வந்தவலியை துணைவியாய்
வரித்துக்கொண்டுவிட்டேன்!
எங்கள் திருமணத்திற்கு
எதிர்காலத்தேதிகளில் ஒன்றை
என்வலியே தேர்ந்தெடுக்கும்!

என் வலி விதவையாகுமா?
உடன்கட்டையேறுமா?

இதற்கோர் விடையளிக்க
இருவருக்கும் தெரியவில்லை!

Tuesday, August 10, 2010

கீதாஞ்சலி (ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி)


( இது தமிழ் ஒளி கூகிள் குழுமத்தின் ஆகஸ்ட் மாத மின்னிதழில் பிரசுரிக்கப்பட்டது)

விழித்துக்கொள் தேசமே!

உள்ளமதனில் அச்சமென்னும்
உணர்விலாத தெவ்விடம்
கொள்கைகொண்டு தலைநிமிர்ந்த
கூட்டம்வாழ்வ தெவ்விடம்
கள்வர்போலே சிறையினுள்ளே
கால்விலங்குமின்றியே
வெள்ளம்போலே விரையுஞானம்
வேகங்கொள்வ தெவ்விடம்

சொந்தவீடு ஒன்றுமட்டும்
சொர்க்கமென்று எண்ணிடா
எந்தைதாயை ஈன்றநாட்டில்
இயைந்திருப்ப தெவ்விடம்
நொந்துபோக வைத்திருக்கும்
நோயையொத்த பிரிவினை
வந்திடாது மனிதர்கூடி
வாழ்ந்திருப்ப தெவ்விடம்

வாக்கிலென்றும் மெய்யறங்கள்
வாழ்ந்திருப்ப தெவ்விடம்
ஊக்கமுற்று உண்மைமாந்தர்
உயருகின்ற தெவ்விடம்
தேக்கமற்றுத் தெளியுமுண்மை
தேடுவோர்கள் எவ்விடம்
மாக்களேத்தும் பழமைநீங்கி
மனிதங்காண்ப தெவ்விடம்

விண்ணளாவும் பார்வைகொண்டு
விரியுமுள்ளமொன்று கொண்டு
எண்ணுமோர் இலக்கிலெம்மை
எவ்விடம் இருத்தினாலும்
கண்ணெனுஞ் சுதந்திரத்தைக்
கண்டுயாம் விழித்தெழுந்து
மண்மிசை இருப்பதற்கே
மனமிரங்கி யருளுமையா

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments
by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening
thought and action-
Into that heaven of freedom, my Father, let my country awake.

Tuesday, July 27, 2010

இன்னும் ஒரு கவிதை!


குதித்துச்செல்லும் நதி
குளிரடிக்கும் காற்று!
குவிந்து படர்ந்த மேகம்
குதூகலமான வாழ்க்கை!

இரவுபெய்த மழையில்
ஈரமான மரங்கள்!
இலைகள் சொட்டிய நீருடன்
மரம் வடித்த கண்ணீர்....!

நதியின் ஓட்டமும்
காற்றின் கதகதப்பும்
மேகத்தின் குவியலும்
வாழ்க்கையின் சிரிப்பும்
என்றோ ஒருநாள்
எங்கோ நிற்கும்!

இதோ...

ஒவ்வொருவரும் என்னைப்போல்
ஒளிந்திருக்கிறார்கள்!

பெரிய இருட்டுக்கு அஞ்சி
சின்ன இருட்டுக்குள்ளே
சிறையிருக்கிறோம்!

வசந்தத்துக்காகத் திறந்து வைத்தது
இதோ..!

அந்தம் வந்து கதவருகே
அழைப்புமணியடிக்கிறது!

காலிக்கோப்பைகள் கேலியாய்க்
கண்சிமிட்டுகின்றன

இன்றைக்குக் காலையில்
இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?

பறவைகளின் பள்ளியெழுச்சி...
படர்ந்த காலைப்பனி...
தூளியிலிருந்து விழுந்த பூக்கள்
தூரத்தில் கேட்ட கோவில்மணி...!

இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?

ஆசையில் வாங்கிய உடமைகள்
அன்னியமானது போல...

இன்று மட்டும் தான்
கண்ணாடியே என்னைக்
காண்பதுபோலிருக்கிறது!

எனது புகைப்படத்தை
ஏன் இத்தனை நேரம்
வாஞ்சையோடு வருடுகிறேன்?

கண்களைத் திருப்பிக்கொள்கிறேன்
கடியாரம் தெரியவில்லை!
ஆனாலும்...
முட்கள் ஒடுகிற சத்தம் மட்டும்
முன்னை விட உரக்க....உரக்க...!

Wednesday, February 10, 2010

அடையாளம்




குப்பைத்தரைமீது குத்திட்டிருந்தபடி
கூவித்தினசரியும் பூவிற்கும் பெண்ணவளே

அழுந்தத்தலைசீவி அழகாய்ப்பொட்டுமிட்டு
அடர்ந்தகூந்தலிலே அணிந்திடுவாள் மலர்ச்சரத்தை

மாலைப்பொழுதினிலே பணிமுடிந்துதிரும்புகிற
மாதர் அவளிடத்தில் பூவாங்கிச் சூடிடுவர்

கூடைமலர் விற்றபின்னே நடைமேடைதனிலிருக்கும்
குழாயில் முகம்கழுவி குங்குமத்தை அழித்திடுவாள்

தலையிலணிந்தபூவைத் தரைமேல்வீசிவிட்டு
தளர்ந்தநடையுடனே தன்வழியே சென்றிடுவாள்

காலிக்கூடைதனைக் கைம்பெண்சுமந்துசெல்வாள்
கனத்தமனத்துடனே கண்ணீர்மல்கிடுவாள்

Thursday, February 4, 2010

காதறு தினம்

பிப்ருவரி பதினாலாம் தேதிதான்-சும்மாப்
பீட்டர்வுட்டு அனுப்புவாங்க சேதிதான்-வரும்
பிப்ருவரி பதினாலாம் தேதிதான்-நல்லா
பீட்டர்வுட்டு அனுப்புவாங்க சேதிதான்
லாண்டுமார்க்குலே பரிசுவாங்கக் கூட்டம்தான்-இன்னும்
லவ் பண்ணாத பயவுடுவான் நோட்டம்தான்

பப்புக்குப்போய் பீர்குடிச்சாப் புண்ணியம்-யாரும்
பார்ப்பதில்லே பொதுவிடத்தில் கண்ணியம்
கடற்கரையில் குடைக்குக்கீழே கிஸ்ஸுதான்-நல்ல
காதலின்னா அன்னிக்குச்சொல்வா யெஸ்ஸுதான்
கலர்கலராப் பொட்டலம் காதலுக்குப் பரிசுதான்
காதலர்க்கு வேலன்டைன் கடவுளிலும் பெரிசுதான்

பிப்ருவரி பதினாலாம் தேதிதான்-சும்மாப்
பீட்டர்வுட்டு அனுப்புவாங்க சேதிதான்

காதலத்தான் காசைவச்சு அளக்குறார்-இப்போ
காலம் மாறிப்போச்சுன்னுதான் விளக்குறார்
பகட்டைக்கண்டு மாட்டிக்கிட்டு தவிக்கிறார்-நல்லாப்
பட்டபின்னால் உலகத்தையே சபிக்கிறார்
வேலைகெட்டு ஊரச்சுத்த சாக்குத்தான்-இந்த
வேலன்டைனின் பேரில் நடக்கும் ஜோக்குதான்

பிப்ருவரி பதினாலாம் தேதிதான்-சும்மாப்
பீட்டர்வுட்டு அனுப்புவாங்க சேதிதான்-வரும்
பிப்ருவரி பதினாலாம் தேதிதான்-நல்லா
பீட்டர்வுட்டு அனுப்புவாங்க சேதிதான்
லாண்டுமார்க்குலே பரிசுவாங்கக் கூட்டம்தான்-இன்னும்
லவ் பண்ணாத பயவுடுவான் நோட்டம்தான்

Tuesday, February 2, 2010

இவ்வளவு போதும்

இரவு

சில்லிடும் ஒலி!
சிலிர்த்து விழித்தேன்!
ஜன்னலுக்கு வெளியே
சிரித்தபடி நிலவு


நட்சத்திரங்கள்

உறங்கும் உலகத்தின் கழுத்தில்
நட்சத்திரம் பதித்த மாலையிட்டு
ஆகாயம் அழகு பார்த்தது


மாலை

தொடுவானப்போர்வைக்குள்
சூரியன் ஒளிவதைப் பார்த்து
இரவு சிரித்தது

பனி

குளிர்கால இரவுகளில்
மிச்சமிருந்தது வெப்பம்
இதயங்களில்....

கடல்

கடலுக்கருகே
கால்நீட்டிப்படுத்திருந்தும்
தாகந்தணியாத
மணல்மேடுகள்

மழைக்காலம்

தொடங்கிவிட்டது!
மேகத்தின் மீது
மின்னல் தொடுத்த போர்

அதிகாலை

ஆதவன் எழுப்பியதும்
அரைத்தூக்கத்தில்
அனற்றியது இரவு


(இதை மட்டும் விட்டு வைப்பானேன்....?)

கடும்பாக்கள்-ஸ்ரேயா



(முன்னெச்சரிக்கை: இது கடும்பாக்கள்! வெண்பாக்கள் அல்ல)

தனக்கென வோர்முழந் தானே யெனினும்
மெனக்கிடு மெல்லிடை யாளே-எனக்கு
இருப துனக்குப் பதினெட் ட
தனிற்
பெருமது ஸ்ரேயா எழில்

எழிலுறு சேல்விழி காணுவர் நெஞ்சிற்
பொழிலுறு பூம்புன லோடும்-வழிதனிற்
வான்தரு வரமென யாங்கணும் பெய்திடும்
மானிவள் நோக்கில் மழை

மழையெனுங் கார்குழல் மாதிவள் காணின்
தழைந்திடுந் தாவரம் யாவும்-விழைந்தே
திருவிளை யாடலின் திங்கள் முகத்தால்
மருவிய தென்மனம் பார்

பாரினிற் பாவையர் ஆயிர மாயினு
ஆரிவள் போலுளர் ஆயிழை-ஓர்ந்தால்
அவாவும் மிகுமே அணங்கின் அழகை
சிவாஜி படந்தனிற் காண்

காண இருவிழி போதா தெனமனங்
கோணக் கிடந்தேன் கோதையால்-வீணாய்
உமியெனக் காற்றில் உழன்றேன் அழகால்
தமிழ்மகன் ஆசை மிக

மிகவும் மனதினில் மீன்விழி யாள்பெயர்
பகலும் இரவும் பகன்றேன்-அகந்தனில்
யாரணை போடுவர் ஆவலுக் கேமுகத்
தோரணை கண்டதன் பின்

பின்வரு நாளினில் பித்தந் தொடர
முன்வரு இன்முகம் காட்டியே-என்மனம்
வெந்ததே விண்முகில் போல்குழல் கண்டதும்
கந்தசா மிப்படத் தால்

ஆலாய்ப் பறந்தேன் அணங்கால் சுணங்கி
நூலாய் இளைத்தேன் நிதமுமே-வேலென
எட்டியே நின்றவள் எய்திடும் பார்வையை
குட்டி படத்தில் பார்

Moral of the story: வார்த்தைகளை மடித்து எழுதினால் கவிதை; ஒடித்து எழுதினால் வெண்பா.

Wednesday, January 27, 2010

தவம்

போகுமிடமெங்கும்
பொறுமையுடன் காத்திருப்பதாய்
நாளும் நடித்தபடி
காதலர்கள் காத்திருக்கிறார்கள்
எப்போதோ நான் இருந்த
வெயில்விரதங்களுக்கு
விளக்கமளித்தபடி...!

நேற்றுப்போலவே இன்றும்
காத்திருந்த கணங்களை கழித்துவிட்டு
கனவில் சந்திப்போமென
காரிருளில் காணாமல் போகிறார்கள்

தனிமையின் இருட்டில்
குமுறும் நெஞ்சத்தினுள்
குச்சியொன்றினைக் கொளுத்தி
கோபத்தில் சில நிமிடங்கள்
குளிர்காய்கிறார்கள்

அவளாய் அழைக்கும்வரை
தீண்டமாட்டேன் உன்னையென
கைபேசியிடம் கடிந்துகொள்கிறார்கள்

ஆனால்...

இந்த
திருநீலகண்டர்களின் திமிர்
அடுத்த நாளின் விடியலில்
அனாதையாகி விடுகிறது

பள்ளிச்சிறுமியின் தலையில்
பளிச்செனச் சிரித்த
ஒற்றை ரோஜாவைப் பார்த்ததும்
சினத்தைத் துறந்த ராஜரிஷிகள்
மேனகைக்கு
கூச்சத்தை விட்டு
குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்

Saturday, January 23, 2010

ஆமைபோல பொறுமைகொள்ளு!

தாடிமீசை வச்சிடாம தவமெதுவும் செய்திடாம
தத்துவமாக் கொட்டுறானே மேதையாட்டமா-அட
ஓடியாடும் வயசுலேயே ஓஞ்சுபோன கெழவனாட்டம்
ஓரத்துலே ஒதுங்குறானே பேதையாட்டமா

கூனுபோட்டு தலகுனிஞ்சு குத்துயிராக் கொலையுயிரா
குறுகிப்போயி வாழ்க்கைசிலரு நடத்துறாங்களே-அட
தானும்நொந்து தனிமையாகி தக்கநண்பர் துணையும்போயி
தளர்ந்துபோயி நாளதெனமும் கடத்துறாங்களே

பாதிதூரம் வந்தபின்னே பயந்துபோயி சுவத்தில்பட்ட
பந்துபோல பறந்து திரும்பி போகலாகுமா?-அட
ஊதினாலே பறந்துபோகும் இலவம்பஞ்சு போலிருந்து
உள்ளுக்குள்ளே தினம்பொசுங்கி சாகலாகுமா?

கண்முழிச்சு ஜன்னலுக்கு வெளியிருக்கும் உலகம்பாரு
காற்றைக் கொஞ்சம் நெஞ்சுக்குள்ளே சேகரிக்கலாம்
எண்ணுவதில் தெளிவிருந்தா எதுவந்தாலும் துணிவிருந்தா
எப்போழுதும் குழந்தைபோல நீ சிரிக்கலாம்

ஆமைபோல பொறுமைகொள்ளு ஆலைப்போல உறுதிகொள்ளு
ஆசைப்படுவ தத்தனையும் ஓடிவந்திடும்-அட
தீமையின்றி மனசிருக்க தினமும்கோவில் சென்றுவந்தா
தெய்வகுணம் அத்தனையும் ஒடிவந்திடும்

Thursday, January 21, 2010

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

மஞ்சக்கறுப்புச் சாயம்பூசி மனசுபோல மனுசங்களை
பஞ்சுமூட்டை போல்திணிக்கும் ஷேர் ஆட்டோவே-போட்டுப்
பழரசம்போல் பிழியுறியே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

அஞ்சுபத்துக்கு எங்களப்போல அலயுறியே நாள்முழுக்க
பிஞ்சுபோன சீட்டுமேலே ஷேர் ஆட்டோவே-எங்களப்
பிதுங்கி இருக்கச் சொல்லுறியே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

பேருந்துநிறுத்தம் அருகில்வந்து பெரிய ஆரனை அடிச்சுக்கிட்டு
பெருச்சாளிபோல நிக்கும் ஷேர் ஆட்டோவே-வித்தாப்
பேரீச்சம்பழம் தேறிடுமா ஷேர் ஆட்டோவே!

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

அம்பத்தூர் ஓட்டியில் ஏறுனவங்க அண்ணாசாலையில் இறங்கையிலே
ரொம்பத்தான் மெலிஞ்சு போனதுபோல் ஷேர் ஆட்டோவே-பொலம்பி
ரோதனையாச் சொல்லுறாங்க ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

மோசமான ரோட்டுமேலே மொதமொதலா ஏறிவந்த
மாசமான கர்ப்பிணிக்கும் ஷேர் ஆட்டோவே-வண்டியில்
மகப்பேறு நடத்திப்புடுறே ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

வெடலப்பையன் பக்கத்துலேதான் வெவரமில்லாப் பொண்ணயிருத்திக்
கடலபோட வைக்குறியே ஷேர் ஆட்டோவே-உன்னால்
காதலிப்போ கூடிப்போச்சுது ஷேர் ஆட்டோவே

ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே
ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே

Monday, January 18, 2010

தள்ளாட்டம் தள்ளாட்டம்

தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்
கொளுத்தும் வெயிலில் குடிக்கிறான்
கோல்டுபீரை அடிக்கிறான்
சனிக்கு சனி குடலைரொப்பி சாக்கடையிலே விழுந்து புரண்டு
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

சாக்குத்தேடி அலையுறான் சந்தோசன்னு நினைக்கிறான்
சாயங்காலமாகிட்டா சரக்குலேதான் நனைகிறான்
அவுச்சமுட்டை வறுத்தமீனு பொரிச்சகோழி கடிக்கிறான்
ஆரம்பிச்சு அடுத்தடுத்து பாட்டில் வாங்கிக்குடிக்கிறான்
மாஞ்சுமாஞ்சு குடிச்சுப்புட்டு ஓஞ்சுபோயி உருப்படாம
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

காசில்லாமப்போச்சுன்னா கடனவாங்கிக் குடிக்குறான்
கண்டபடித்திட்டுறான் பொஞ்சாதியை அடிக்குறான்
கழுத்துச்சங்கிலி கைக்கடியாரம் சேட்டுக்கடையில் வைக்குறான்
கடைசியிலே கிறுக்குப்புடிச்சுத் தெருமுனையில் நிக்குறான்
வீடுவாசல் தாலிவரைக்கும் வித்துக்குடிச்சு விரயமாக்கித்
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

குந்தித்தின்னா கரைஞ்சிடும் குன்றுங்கூட கேளுங்க
குடியினாலே தெருவிலே குடும்பம்நிக்குது பாருங்க
பச்சைப்புள்ளே பிச்சையெடுக்க வைக்குமிந்தக் குடியும்தான்
பழக்கத்துக்கு அடிமைப்பட்டா வாழ்க்கைவிரைவில் முடியும்தான்
காசைத்தொலச்சு கருமங்குடிச்சு காணும்பேர்கள் காறித்துப்பிட
தள்ளாட்டம் தள்ளாட்டம் எங்கும் தள்ளாட்டம்-இப்போ
டாஸ்மாக்கு புண்ணியத்துலே கொல்லுது தள்ளாட்டம்

தீ....நகர்!

ஊருக்குள்ளே சனமெல்லாம் வூட்ட இளுத்துப் பூட்டிக்கினு
உசுமாரோட்டுக்கு வந்திருச்சா பையைத் தோள்லே மாட்டிக்கினு
அல்லாக்கடயும் பார்க்கசொல்ல கூட்டம் தலையைப் பிய்க்குதே!
எல்.கே.எஸ்சிலும் ஜி.ஆர்.டியிலும் சனங்க நகைக்கு மொய்க்குதே!

கிஜ்ணா சூட்டுக்கடயிலே மாசூர் பாகு வாங்குது
கிஜுணவேணித் தேட்டராண்ட மல்லிகைப்பூ வாங்குது
நல்லிஜில்கிலே பொண்ணுங்கோ பொடவைரவுக்க வாங்குது
நாய்டுஹாலில் ஒண்டியிலே இன்னாத்தையோ வாங்குது

சென்னஜிலுக்கு சரவணா போத்தீஜிலும் கூட்டம்தான்
செருப்புப்போட கோவிலாண்ட சேர்ந்துநிக்குது கூட்டம்தான்
கரும்புசூஸ் பழரசத்துக்கு டோக்கன்வாங்கக்கூட்டம்தான்
காயிவாங்க மார்க்கெட்டுலே காலைமரிக்கும் கூட்டம்தான்

காலேஜுக்குக் கட்டடிச்சு சைட்டடிக்கும் ஆளுமுண்டு
கவனம் கொஞ்சம் பெசகினா ஜேப்படிக்கிற ஆளுமுண்டு
கடைக்கு வெளியே மனைவிக்காகக் காத்திருக்கும் ஆளுமுண்டு
காசில்லாம சும்மானாச்சும் நோட்டம் வுடுற ஆளுமுண்டு

பணமில்லேன்னு பொலம்புறான் பாதிப்பேரு வெளியிலே
பாண்டிபஜாரு ரோட்டாண்டதான் நடக்கக்கூட முடியலே
தேஞ்சுதேஞ்சு சேர்த்த பணத்தைத் டிநகருலே தொலைக்குறோம்
தெருவில்பிச்சை கேட்குறவனை எமனப்போல முறைக்குறோம்

Sunday, January 17, 2010

தாம்பரம் டு பீச்

தளயத் தளய பொடவ கட்டி
தலயில் மல்லிப்பூவும் வச்சி
தாம்பரத்துலே ஏறினாளே தங்கமீனா-அவ
தங்கநிறத்தில் தகரம்நானும் ஒட்டுவேனா?

சருகைவேலை சல்வார்போட்டு
சல்லுன்னு வெள்ளிக்கொலுசும்போட்டு
சானடோரியம் டேசனில் வந்தா புஷ்பலதா-நான்
சப்புக்கொட்டியே பாத்துக்கிட்டே நிக்குறதா?

குனிஞ்சதலை நிமிராமலே
குறுகுறுன்னு பார்க்காமலே
குரோம்பேட்டையில் ஏறினாளே குமுதினி-ஒரு
கூட்டம்தினம் அவளைப் பார்க்க வருமினி

கல்லாப்பெட்டி குலுங்குனாப்புலே
கலகலன்னு சிரிச்சுக்கிட்டே
பல்லாவரத்தில் ஏறினாளே பத்மாவதி-அவ
பார்க்குறவரை மனுசுக்குள்ளே பாடாவதி

திமுசுக்கட்டை ஜீன்ஸுமாட்டி
டி-சர்ட்டையும் போட்டதுபோல
திரிசூலத்துலே திவ்யாப்பொண்ணு ஏறுனா-என்
திருட்டுப்பார்வை பாத்து முகம்மாறினா

மீனம்பாக்கம் டேசனில்வந்து
மிதிச்சுப்புட்டா மனசிலேறி
மினுமினுக்கும் கண்ணுக்காரி மைதிலி-பஞ்சு
மிட்டாய்ச்சிரிப்பில் மனசுமாச்சு நரபலி

பழவந்தாங்கல் வந்தாப்போதும்
பசங்களுக்கு வரும்சந்தோஷம்
பரிமளான்னு பொண்ணொருத்தி ஏறுவா-அவ
பக்கத்தில்போனா பூனைபோல சீறுவா

பாந்தமாக நடந்துவந்து
பதவிசாக ஏறுவாளே
பரங்கிமலை கனவுக்கன்னி பூங்கொடி-அவ
படபடன்னு பேசுறப்போ சரவெடி

கீச்சுக்குரலில் பேசுவாளே
கிறுக்கனாக்கிப் போடுவாளே
கிண்டியிலே கீதாப்பொண்ணு தெனசரி-நான்
கிட்டேவந்து பேசுறப்போ அனுசரி

சைதாப்பேட்டை வந்தாப்போதும்
சத்தமெல்லாம் அடங்கிப்போகும்
மைதாமாவு பொம்மைபோல மதுமிதா-என்
மனசுக்குள்ளே விறகடுப்பு எரியுதா

ஆம்பல்போல மொவ்வல்போல
அழகழகா தாவணிபோட்டு
மாம்பலத்துலே மஞ்சுவந்தா புழுக்கந்தான்-மனசு
மடிஞ்சுசுருண்டுபுலம்புறது வழக்கந்தான்

கோணல்சிரிப்பு சிரிச்சுக்கிட்டு
கொழஞ்சு வளைஞ்சு பேசிக்கிட்டு
கோடம்பாக்கம் டேசனிலே காஞ்சனா-நான்
குத்துப்பட்டவன் போலத்தரையில் சாஞ்சேனா?

தங்கம்மான்னு பொண்ணொருத்தி
தலவிரிச்சுப்போட்டுக்கிட்டு
நுங்கம்பாக்கம் டேசனிலே வாராளே-மனசை
நுங்குபோல நோண்டியெடுத்துப்போறாளே

சேலைக்கடை பொம்மையாட்டம்
செவத்தபொண்ணு சங்கீதாவும்
சேத்துப்பட்டிலே ஏறினதப் பார்த்தேனே-நான்
செங்கச்சூளையில் விழுந்தவனா வேர்த்தேனே

எக்மோர்டேசன் வந்ததும்
எறங்கத்தொடங்கும் பொண்ணுங்க
ஏறிப்போகும் மனசில்ரொம்ப பாரந்தான்-அவுங்க
என்னைவிட்டுப் போறாங்க வெகுதூரந்தான்

பார்க்குடேசன் வந்ததும்
பறவையெல்லாம் பறந்திடும்
பரிதவிச்சுப் பார்த்திருப்பேன் சோகமா-இந்தப்
பயணமும்தான் முடியுதுவெகுவேகமா

கோட்டையிலே பொட்டியிலே
கோட்டானைப்போல் நானிருப்பேன்
கூட்டுவண்டிப்பயணம் முடியப்போவுதே-மனம்
குழைஞ்சுபோன சாதம்போல ஆவுதே

வந்திருச்சு பீச்சுதான்
வருதேபெருமூச்சுதான்
வாழ்க்கையிலே பயணமபல பாக்கிதான்-நான்
வாழ்ந்திருப்பேன் காரணம் உருவாக்கிதான்