மாஸ்க்கிலாமணி
கை நிறைய பையுடன் கடைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மாசிலாமணிக்கு, அதிமுக்கியமான ஒரு சந்தேகம் எழுந்தது; எதற்குக் கடைக்குப் போகிறோம் என்பதே அது. சென்றமுறை, கடலைப்பருப்புக்குப் பதிலாக பொறிகடலையும், பாமாயிலுக்குப் பதிலாக பினாயிலும் வாங்கி வந்ததன் விளைவாக இரண்டு நாட்களுக்கு காப்பிக்குப் பதிலாக ரவா கஞ்சி குடிக்க நேரிட்ட துயரம் இன்னும் அவரது தொண்டையிலிருந்து ஒரு அங்குலம்கூட கீழே இறங்காமல், அழிச்சாட்டியமாக அங்கேயே எக்ஸிபிஷன் போட்டு அப்பள ஸ்டால் நடத்திக் கொண்டிருந்தது.
மாசிலாமணியின் சதக்தர்மிணி, மன்னிக்கவும், சகதர்மிணி குசலகுமாரி என்ற குஷி, பெட்ரூமில் உள்பக்கம் தாள்போட்டுக்கொண்டு, யூட்யூப் பார்த்தபடி குச்சுப்படி பயிற்சி பண்ணிக்கொண்டிருந்தாள். ஏற்கனவே குடியிருந்த பழைய வீட்டில் குஷியின் குச்சுப்பிடி காரணமாக மச்சுப்படி உட்பட கட்டிட்த்திலிருந்த காரையெல்லாம் உதிர்ந்ததால், கொஞ்ச நாளைக்கு எல்லாரும் மலைக்கள்ளன் எம்ஜியாரைப் போல கயிற்றை உபயோகித்துத்தான் மாடிக்குச் சென்றுவந்து கொண்டிருந்தார்கள். ஆகவே, பூகம்பமே வந்தாலும் அதிராத புத்தம்புது டெக்னாலஜியில் கட்டப்பட்ட குடியிருப்பில் கொள்ளைவிலை கொடுத்துக் குடிவந்திருந்தார் மாசிலாமணி.
என்னதான் ’தில்’லான ஆசாமியாக இருந்தாலும், மனைவியின் தில்லானாவுக்குத் தொந்தரவு செய்வது, மைதாமாவு தோசை என்ற மாபெரும் ஆபத்துக்கு வித்திடும் என்பதை அறிந்தவர் என்பதால், சத்தம்போடாமல் கதவைச் சாத்திவிட்டு, லிஃப்டு வழியாகக் கீழே வந்து, மெயின்கேட்டை நெருங்கினார்.
”யோவ், நில்லுய்யா!” என்று ஒரு குரல்கேட்கவே, திரும்பிய மாசிலாமணி, ஒரு செக்யூரிட்டி தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்டார்.
”யாருய்யா நீ, அபார்ட்மெண்ட்ஸ்ல துணிப்பை சேல்ஸ் பண்றியா?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டதும், மாசிலாமணிக்குக் கோபம் மூக்குக்கு மேல், கிட்டத்தட்ட முன்மண்டை வரை வந்தது.
பல்குத்தும் குச்சிக்குப் பாவாடை கட்டினாற்போல, தொளதொளவென்ற யூனிபாரம் அணிந்திருந்த அந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நெருங்கி வந்து நின்று முறைத்தார்.
”யோவ், வாயிலே என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கே? எப்படிய்யா உள்ளே வந்தே?” என்று அந்த செக்யூரிட்டி கேட்டுக் கொண்டிருந்தபோதே, அபார்ட்மெண்ட் மேனேஜர் ஒப்பனிங் சீனில் வரும் ஹீரோவைப் போல எங்கிருந்தோ குதித்தோடி வந்தார்.
”யோவ் செக்யூரிட்டி, அவர் யாரு தெரியுமா?” என்று நெருங்கி வந்தார் மேனேஜர். “இவரு புதுசா வீடுவாங்கி குடிவந்திருக்காருய்யா. மரியாதையாப் பேசு.”
அந்த செக்யூரிட்டி டென்ஷனில் அட்டென்ஷனுக்கு மாறி சல்யூட் அடித்த சத்தத்தைக் கேட்டு, எட்டாவது மாடியிலிருந்த புறாக்களெல்லாம் பயந்து எக்மோர் ஸ்டேஷனுக்குக் குடிபெயர்ந்தன.
”மேனேஜர், என்னைப் பார்த்து துணிப்பை சேல்ஸ் பண்றியான்னு கேட்கிறாரு இந்தாளு,” என்று பொருமினார் மாசிலாமணி.
”அடப்பாவி,” என்று மேனேஜர் தலையில் கைவைத்தார்.
”யோவ் மேனேஜர், அவன் தப்பு பண்ணினதுக்கு எதுக்குய்யா என் தலையிலே கைவைக்கறீங்க?” என்று உறுமினார் மாசிலாமணி.
”சாரி சார், பதட்டத்துல எது என்னோட தலைன்னு தெரியாமக் குழம்பிட்டேன்,” என்று வருந்திய மேனேஜர், செக்யூரிட்டி பக்கம் திரும்பினார்.
“எல்லாம் உன்னாலே வந்தது! சார் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா? கவர்மெண்டுல அண்ட்ராயர் செகரட்டரியா இருக்காரு!”
”யோவ் மேனேஜர், உன் வாயை பாமாயில் போட்டுக்கழுவுய்யா! அது அண்டர் செகரட்டரி; அண்ட்ராயர் செகரட்டரி இல்லை.” எரிந்து விழுந்தார் மாசிலாமணி.
”அண்டர் செகரட்டரின்னா பேஸ்மெண்டுலதான் ஆபீஸா சார்?” என்று பவ்யமாகக் கேட்டார் மேனேஜர்.
”ஆண்டவா,” மாசிலாமணிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “என்னய்யா இங்கே செக்யூரிட்டியும் சரியில்லை; மேனேஜரும் சரியில்லை. இந்த அப்பார்ட்மெண்ட் ரொம்பத் தப்பார்ட்மெண்ட்டா இருக்கும் போலிருக்கே.”
”கோவிச்சுக்காதீங்க சார்,” என்று கைகூப்பினார் மேனேஜர். “வந்ததுலேருந்து எப்பவும் மாஸ்க் போட்டுக்கிட்டுத்தான் நடமாடுவீங்க. இன்னிக்கு மாஸ்க் போடாம வந்திருக்கீங்களா, எனக்கே அடையாளம் தெரியலை.”
”என்னது? மாஸ்க் போடலியா?” மாசிலாமணி அதிர்ந்தார். “நல்லாப் பார்த்துட்டுச் சொல்லுய்யா. நெஜமாவே நான் மாஸ்க் போடலியா?”
”இதுக்கெல்லாமா பொய் சொல்லுவாங்க? என் பொஞ்சாதி தங்கலட்சுமி மேலே சத்தியமா நீங்க மாஸ்க் போடலை சார்.”
”ஐயையோ!” அலறினார் மாசிலாமணி. “வழக்கமா கடைக்குப்போயி என்ன சாமான் வாங்கணும்கிறதைத்தான் மறப்பேன். இன்னிக்கு மாஸ்க் போடவே மறந்திட்டேனா?”
“அப்படீன்னா இன்னிக்கு என்ன சாமான் வாங்கணும்னு ஞாபகம் வைச்சிருக்கீங்களா சார்? வெரிகுட்!”
”சும்மாயிருய்யா,” மாசிலாமணி சலித்துக்கொண்டார். “நானே என்ன வாங்கணும்னே தெரியாம எந்தக்கடைக்குப் போறதுன்னு குழம்பியிருக்கேன். ஆனாலும், ஆண்டவன் ஒரு மனுசனை இப்படியெல்லாமா சோதிக்கிறது?”
”இதுக்கெல்லாம் ஆண்டவன் என்ன சார் பண்ணுவாரு?” என்று பரிதாபமாக்க் கேட்டார் மேனேஜர். “சார், முக்குக்கடையிலேதான் அஞ்சு ரூபாயிலிருந்து அம்பது ரூபா வரைக்கும் மாஸ்க் தொங்க விட்டிருக்கானே? ஒண்ணு வாங்கிட்டுப் போறதுதானே?”
”வெரிகுட்!” மாசிலாமணி மெச்சினார். “மேனேஜர்னதும் நான்கூட தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீங்க ரொம்ப உண்மையிலேயே புத்திசாலி.”
”யோவ் செக்யூரிட்டி,” மேனேஜர் மீண்டும் அந்த செக்யூரிட்டி பக்கம் திரும்பினார். “இனிமேல் சார்கிட்டே மரியாதையா நடந்துக்கணும் தெரியுதா? ஏழாவது மாடிக்குக் குடிவந்திருக்காரு சார்! இவர் பேரு மாஸ்கிலாமணி..ச்சீ.. மாசிலாமணி!”
”இனிமே ஜாக்கிரதையா இருப்பேன் சார்,” என்று பணிவன்புடன் கைகுவித்தார் செக்யூரிட்டி.
”என்னத்தை ஜாக்கிரதை? நீ அடிச்ச சல்யூட்டுல உன் பேண்ட் அவுந்து விழுந்திருச்சு. ரிஸைன் பண்ணிட்டுப் போனவன் யூனிஃபாரத்தையெல்லாம் போட்டுக்காம இனிமேலாவது ஜாக்கிரதையா இரு,” என்று அறிவுரைத்த மாசிலாமணி, காம்பவுண்டை விட்டு வெளியேறி கடையை நோக்கி நடந்தார்.
மாஸ்க் போடுவதை மறந்த விஷயம் அதற்குள் மறந்துபோய்விடவில்லையென்பதால், முக்குக்கடைக்குள் நுழைந்தார்.
”சார்,” கடைக்காரர் அலறினார். “மாஸ்க் போட்டுக்கிட்டு உள்ளே வாங்க சார்.”
”மாஸ்க் வாங்கத்தான் உள்ளே வரணும்.”
”உள்ளே வரணும்னா மாஸ்க் போடணும் சார்.”
”மாஸ்க் இல்லேன்னுதானே மாஸ்க் வாங்க உள்ளே வர்றேன்.”
“மாஸ்கே வாங்கணும்னாலும் மாஸ்க் இல்லாம உள்ளே வந்து மாஸ்க் வாங்க முடியாது.”
”யோவ் வெளக்கெண்ணை முண்டம்!” மாசிலாமணி பையிலிருந்து ஒரு பத்து ரூபாயை கடைக்காரரை நோக்கி வீசியெறிந்தார். “இதுக்கு ஒரு மாஸ்கை எடுத்து விட்டெறி! நான் கேட்ச் புடிக்கிறேன்.”
கடைக்காரர் ஒரு மாஸ்க்கை எடுத்து எறிய, மாசிலாமணி அதைக் கரெக்டாகக் கேட்ச் பிடித்தார்.
”சூப்பர் சார், ரோஹித் ஷர்மாவைவிட நல்லாவே கேட்ச் புடிக்கறீங்க,” என்றார் கடைக்காரர்.
’ரோஹித் ஷர்மா எப்பவாச்சும் பூந்திக்கரண்டி, பூரிக்கட்டையைக் கேட்ச் புடிச்சிருந்தாத்தானே?’ என்று மனதுக்குள் எண்ணியவருக்குச் சட்டென்று பொறிதட்டியது.
’யுரேகா! பூரிக்கட்டை…பூரி…ஞாபகம் வந்திருச்சு… நான் கடைக்குப்போய் வாங்க வேண்டியது கோதுமை மாவும், கோல்ட்வின்னர் எண்ணையும்! யெப்பா ரோஹித் ஷர்மா… நீ இன்னும் பத்து வருசத்துக்கு டெஸ்ட் மேட்ச் ஆடணும் சாமி..’
மறதி வருவதற்குள் மாஸ்க்கை அணிந்துகொண்ட மாசிலாமணி, திருவருட்செல்வர் சிவாஜிபோல சிங்கநடை போட்டார்.
வழக்கமாக மளிகை சாமான் வாங்க தான் செல்லுகிற அந்த டப்பார்ட்மெண்டல், மன்னிக்கவும், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் நுழையை முற்பட்டபோது, அங்கிருந்த செக்யூரிட்டி மாசிலாமணியை நிறுத்தினார்.
”சார், ஒரு நிமிஷம்! சூடு இருக்கான்னு பார்க்கணும்.”
”என்னய்யா இது, இன்னிக்கு எல்லா செக்யூரிட்டிகளும் ஒரு மார்க்கமாவே இருக்கீங்க. யாரைப் பார்த்துய்யா சூடு இருக்கா, சொரணை இருக்கான்னு கேட்கறே?”
“சாரி சார், டெம்பரேச்சர் கன் வேலை பண்ணலை. அதான், உடம்புல சூடு இருக்கான்னு கேட்டேன் சார்.”
”உடம்புல சூடு இருக்கிறதுனாலதான்யா கடைக்கு வந்திருக்கேன். இல்லாட்டி கண்ணம்மாபேட்டைக்குக் கொண்டுபோயிருப்பாங்கய்யா.”
”ஐயோ சார், காய்ச்சல் இருக்கான்னு கேட்டேன் சார்!”
”அதை எங்கிட்டே ஏன்யா கேட்குறே? உனக்குக் காய்ச்சல் இருக்கான்னு பார்க்க நான் என்ன டாக்டரா? நான் அண்ட்ராயர்…ச்சீ, அண்டர் செகரட்டரிய்யா!”
“சார்” அந்த செகரட்டரி அழாதகுறையாக கைகூப்பினார். “ நீங்க உள்ளே போங்க சார்!”
ஒருவழியாகக் கடைக்குள் சென்று வாங்க வேண்டிய பொருட்களை மறக்காமல் வாங்கிக்கொண்டு வெற்றிப்பெருமிதத்துடன் வீட்டை நோக்கி நடந்தார். காம்பவுண்ட் அருகே மேனேஜரும், இன்னொருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
”அந்த ஏழாவது மாடியிலே புதுசா குடிவந்த ஆள் யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்,” இரைந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். “தொம்முதொம்முன்னு ஒரே சத்தம். ரெண்டு ட்யூப்லைட் ஃபியூஸ் ஆயிருச்சு. இன்னிக்கு என்னடான்னா நல்லா ஓடிட்டிருந்த சீலிங் ஃபேன் நின்னுருச்சு. அந்தாளு மட்டும் என் கையிலே கிடைச்சான், அவனைக் கொலை பண்ணிருவேன்.”
”ஏய்ய்ய்!” மாசிலாமணியின் ரத்தம் கொதித்து, காதுவழியாக ஆவி பறந்தது. “எவண்டா கொலை பண்றவன்? தில்லிருந்தா வாடா பார்க்கலாம்.”
திரும்பிப்பார்த்த மேனேஜர்,’ யோவ் யாருய்யா நீ? சம்பந்தமில்லாத மேட்டர்ல எதுக்கு நுழையறே? இவரு புதுசா குடிவந்திருக்காரே, மாசிலாமணி, அவரைப்பத்திப் பேசிட்டிருக்காரு!”
”யோவ் மேனேஜர், நான்தான்யா மாசிலாமணி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தோமேய்யா?”
“சார் நீங்களா? மாஸ்க் போட்டிருக்கீங்களா, அதான் அடையாளம் தெரியலை.” என்று தலையை, அதாவது அவரது சொந்தத்தலையைச் சொறிந்தார் மேனேஜர்.
”படுத்தாதீங்கய்யா,” பொறுமையின்றிக் கூச்சலிட்டார் மாசிலாமணி. “முதல்ல மாஸ்க் போடாம அடையாளம் தெரியலை; இப்போ மாஸ்க் போட்டா அடையாளம் தெரியலியா?”
”அது இருக்கட்டும் மிஸ்டர் மாசிலாமணி,” அந்த நபர் குறுக்கிட்டார். “ நீங்கதானே ஏழாவது மாடியிலே குடிவந்திருக்கீங்க? உங்க வீட்டுல யாராவது குதிச்சுக் குதிச்சு விளையாடறாங்களா? ஏன் இவ்வளவு சத்தம்?”
”நீங்க ஆறாவது மாடியிலே இருக்கீங்களா?” கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டார் மாசிலாமணி.
“நான் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கேன் சார்,” அந்த நபர் உறுமினார். “என்ன சார் நடக்குது உங்க வீட்டுல?”
“லூசாய்யா நீ?” கொதித்தார் மாசிலாமணி. “ஏழாவது மாடியிலே என் பொஞ்சாதி குச்சுப்புடி ஆடினா, கிரவுண்ட் ஃப்ளோர்ல எப்படியா கேட்கும்?”
“சார்,” மேனேஜர் குரலைத்தாழ்த்தினார். “கிரவுண்ட் ஃப்ளோர் கூட பரவாயில்லை சார். பக்கத்து பில்டிங்ல கவுன்சிலர் குடியிருக்காரு. உங்க வொய்ஃப் குச்சுப்புடி சத்தம் கேட்டு, நம்ம பில்டிங்க்ல என்னமோ வேலை நடக்குதுன்னு சந்தேகப்பட்டு மாமூல் கேட்க வந்திட்டாரு சார்!”
”ஐயையோ!” மாசிலாமணி வாயடைத்துப்போனார்.
”மாசிலாமணி சார்,” அந்த நபர் குழைந்தார். ‘ஒரு புருஷனோட மனசு இன்னொரு புருஷனுக்குத்தான் புரியும். என்னதான் லக்ஸுரி அபார்ட்மெண்ட்னாலும் குச்சுப்புடி ஆடறதெல்லாம் ரொம்பவே ஓவர். குழந்தை குட்டிங்க இருக்காங்க; ஹார்ட் பேஷண்ட்ஸ் இருக்காங்க. இந்த லாக்டவுணுக்கு அப்புறம் ஒவ்வொரு பிளாக்லயும் குறைஞ்சது ரெண்டு வீட்டுலயாவது யாராவது கர்ப்பமா இருக்காங்க. இந்த அபார்ட்மெண்ட் செகரட்டரின்னுற முறையிலே சொல்றேன். விஷப்பரீட்சையெல்லாம் வேணாம் சார்.”
”அடாடா, நீங்கதான் செகரட்டரியா?” என்று ஆதங்கத்துடன் கேட்டார் மாசிலாமணி. “செகரட்டரின்னா கையிலே ஒரு டார்ச் லைட்டோ, ஸ்க்ரூ டிரைவரோ வைச்சிட்டிருக்கணும் சார். அதான் நம்ம பண்பாடு! இல்லாட்டி எப்படி அடையாளம் தெரியும்?”
பேசிமுடித்துவிட்டு, வீடு திரும்பியவர் கதவைத்தட்டிவிட்டு, மாஸ்க்கைக் கழற்றிவிட்டுக்கொண்டார். கதவைத் திறந்த குஷி…
“என்னங்க, மாஸ்க் போட்டுக்கிட்டுப் போகலியா?” என்று கேட்டார்.
அடுத்த நொடி…
ஏழாவது மாடியிலிருந்து தொப்பென்று ஏதோ விழும் சத்தம் கேட்டது.
Tweet |
14 comments:
ஏன்யா இப்படி , இப்படிலாம் சிரிக்க வெச்சா நாங்க என்ன பண்ண
அதகளம். அதுவும் ரோஹித் :)
செம்ம
மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி பிளாக் கால சேட்டைக்காரன் அண்ணாத்த ரிட்டர்ன்ஸ் அப்படினு ஒரு பேனர் ரெடி பண்ணனும் போலயே. சூப்பர்... சிரிச்சு சிரிச்சு முடியல போங்க 😆🤣😂
ஆஹா... வந்தாரையா சேட்டை மறுபடியும்... ரசிரித்தேன்.
அற்புதம்....
நகைச்சுவை பதிவு அருமை ரசித்தேன்
Super
Nice sir
அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/?m=1
Super
மாசிலாமணி ... மாஸ்க்கிலாமணி ... ஹாஹா... பின்னிட்டீங்க போங்க!!!
https://www.scientificjudgment.com
Dating is a stage of romantic relationships whereby two people meet socially with the aim of each assessing the other's
suitability as a prospective partner in a future intimate relationship. It represents a form of courtship, consisting of social
activities carried out by the couple, either alone or with others. The protocols and practices of dating, and the terms used to
describe it, vary considerably from society to society and over time. While the term has several meanings, the most frequent
usage refers to two people exploring whether they are romantically or Funually compatible by participating in dates with the
other. With the use of modern technology, people can date via telephone or computer or arrange to meet in person.
E*scorts Service in Mahipalpur
Hi Profile E*scorts in Delhi
Hotel Fun Service in Delhi
E*scorts Service in Chanakyapuri
Dating Girls in Coimbatore
Dating Girls in Coimbatore
Dating Girl Haridwar
Housewife E*scorts in Faridabad
Dating Girls in Manali
Independent E*scorts in Agra
Click Here To Read More Articles {Articlepins.com}
மிக அருமை நன்றி...
Post a Comment