Monday, January 4, 2016

காலண்டரில் கிழிந்த நாட்கள்–சாதனா

காலண்டரில் கிழிந்த நாட்கள்சாதனா



டிசம்பர் 25-2015, வெள்ளிக்கிழமை. உலகமே கிறிஸ்துமஸ் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, பழம்பெரும் இந்தி நடிகை சாதனாவின் உயிர் மும்பையில் அமைதியாகப் பிரிந்த செய்தியை, ஊடகங்களில் திரையின் கீழ்ப்பகுதியில் உருளவிட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டென்று எனது மனம் விரைந்து பின்னோக்கிப் பறந்து, எழுபதுகளின் மத்தியில்நாகர்கோவில் நியூ சரஸ்வதி தியேட்டரில், மருந்துக்கும் இந்தி தெரியாதபோதிலும், ஜம்பத்துக்காகப் பார்த்தவற்றில் ஒன்றானகீதா மேரா நாம்படத்துக்குக் கொண்டு சேர்த்தது.

அது ஒரு வாடிக்கையான இந்தி மசாலாப்படம். ஒரு குடும்பம் தும்முகிற நேரத்துக்குள் பிரிந்து, ஆளாளுக்கு வெவ்வேறு குணாதிசயங்களுடன் வளர்ந்து, சண்டைகள்பலதும், பாடல்கள் சிலதும், தாளிப்பதற்கு கொஞ்சம் காதலுமாய், உரத்த பின்னணி இசையுடன் கண்மூடித்தனமாக ஓடி, கிளைமேக்ஸில் வில்லனை உதைத்து, ரத்தவிளாறாக்கி கடைசியாக 35 எம்.எம்முக்குள் எல்லாரும் தோளில் கைபோட்டுக் கொண்டு, தியேட்டரைப் பார்த்துப் புன்னகைத்து ‘The End’ போடுகிற டிப்பிக்கல் 70களின் இந்திப்படம். அந்தப் படத்தில் சாதனா கதாநாயகி மட்டுமல்ல; இயக்குனரும் கூட! சற்றேரிவால்வர் ரீட்டாவை நினைவூட்டும் உடையலங்காரத்துடன், விஜயசாந்தியிஸத்துக்கு வித்திட்டிருந்தார். போதாக்குறைக்கு, பழிவாங்கும் படலத்தின் ஒரு பகுதியாக, எதிராளியை மயக்குகிற ஒரு பாடல்வேறு! இத்தனை வருடங்கள் கழித்தும், அந்தப் படத்தில் இடம்பெற்றஸுனியே ஜரா தேக்கியே நாஎன்ற அந்த லதா மங்கேஷ்கரின் பாடலும், பாடலில் மையலூட்டிய சாதனாவும் பிசிறின்றி ஞாபகத்துக்கு வருகிறார்கள். (அந்தப் படத்தில் ஃபிரோஸ்கான், சுனில்தத் ஆகியோரும் இருந்ததாக விக்கிப்பீடியானந்தா சொல்கிறார். அப்படியா?)

அப்போதெல்லாம் ஷர்மிளா தாகூர், ஹேமாமாலினி ஆகிய பார்பி பொம்மைகளைப் பார்ப்பதற்கென்றே இந்திப்படங்கள் போகிற சம்பிரதாயத்தைக் கடைபிடித்ததால், அவர்களுடன் ஒப்பிடுகையில்சுமார்தான்; 35 மார்க் கொடுக்கலாம்,’ என்ற அளவில்தான் சாதனாவை மதிப்பிட முடிந்தது. இனி, சாதனா நடித்த இந்திப்படங்கள் வந்தால், அவற்றைசாய்ஸில்விட்டு விடலாமென்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றியதாக ஞாபகம். ஆனால், சிலபல ஆண்டுகள் கழித்து, தூரதர்ஷன் சாதனா குறித்த எனது அபிப்ராயத்தை மாற்றியது.

மேரே மெஹபூப் துஜே மேரி மொஹப்பத் கீ கஸம்என்று ரஃபியின் ஒரு பாடலைசித்ரஹார்நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். அந்தக் காலத்து பேபி மோரிஸ் கார்போல ஆடியசைந்து, சாவகாசமாக, (எரிச்சலே ஏற்படுமளவு) கொஞ்சம் நீளமாகவே அமைந்த அந்தப் பாடலில், மீண்டும் சாதனாவைப் பார்க்க நேர்ந்தது.



இந்தியின் Wooden Face நாயகர்களில் ஒருவரானாலும், ஜூப்ளி குமார் என்று பெயர்பெற்ற ராஜேந்திரகுமார் கல்லூரி மேடையில் ஷெர்வாணியணிந்து பாட, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து சாதனா கேட்பது போல அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாடல், பின்னாளில் ரஃபியின் தீவிர ரசிகனானதும் இன்னும் இனிக்க ஆரம்பித்தது. சாதனாவின் துருதுரு விழிகளைப் பார்த்து, அந்தப் படத்தில் ராஜேந்திரகுமார் பிரமித்ததுபோலவே, எனக்கும் சற்றே பிரமிப்பு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டே தீர வேண்டும். அந்தப் பாட்டை சாதனாவின் கண்களைப் பார்ப்பதற்கென்றே திரும்பத் திரும்பப் பார்த்ததாக எனது வடநாட்டு நண்பர்கள் சொன்னபோது, பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை.

அந்தப் பாடலில், பர்தாவணிந்து வரும் சாதனாவும், ராஜேந்திரகுமாரும் மோதிக்கொண்டு, புத்தகங்கள் விழ, அதை ராஜேந்திரகுமார் சிரத்தையாக சேகரித்து எடுத்துக் கொடுக்கிற மான்டேஜ், ‘காதலுக்கு மரியாதைபடம் பார்க்கும்போது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது. பர்தாவின் கருமைக்கு ஊடே பளிச்சென்று தெரிந்த சாதனாவின் கண்களை, ‘மெல்லத் திறந்தது கதவுஅமலாவைப் பார்த்தபோது மீண்டும் நினைவுபடுத்த நேர்ந்தது. இவற்றுக்கிடையில் தூரதர்ஷன் புண்ணியத்தில் பார்த்தவக்த்’, ’மேரா சாயா’, ’வோ கௌன் தீபோன்ற பல படங்களில் சாதனாவைப் பார்த்தபோது, அவசரப்பட்டு அவருக்கு வெறும் பாஸ்மார்க் கொடுத்த தவறு புரிந்தது.

ராஜ்கபூரின்ஸ்ரீ 420’ படத்தை திரையரங்கிலேயே இரண்டு முறை பார்த்திருக்கிறேன் என்றாலும், அந்தப் படத்தில் வருகிற ஒரு க்ரூப் டான்ஸில்தான் சாதனா முதன்முறையாகத் திரையில் தோன்றினார் என்ற தகவலை, பல வருடங்கள் கழித்து, ‘டைம்ஸ் நௌநிகழ்ச்சியொன்றைப் பார்த்தபோது அறிந்து கொண்டேன். ‘முட் முட்கே தேக் முட்முட்கே’- (திரும்பித் திரும்பிப் பார்க்காதே) என்ற அந்தப்பாடலுடன் சாதனாவின் திரையுலகப்பயணம் தொடங்கியது, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.. காரணம், 60களில் இந்தித் திரையுலகில் சாதனா ஏற்படுத்திய அலை மிகவும் பிரம்மாண்டமானது. அவர் அடுத்த பத்தாண்டுகளில் திரும்பியே பார்க்காமல், வெற்றிப்படங்களாய் நடித்துத் தள்ளினார்.



மீனாகுமாரி, மதுபாலா போன்ற நடிகைகளின் சகாப்தம் முடிந்திருந்தபோதிலும், வஹீதா ரஹ்மான், வைஜயந்திமாலா, மாலா சின்ஹா, சாயிரா பானு, ஆஷா பாரீக், நூதன் போன்ற நடிகைகள் ஏறத்தாழ ஆக்கிரமித்த 60களில், சாதனா சத்தமின்றி நுழைந்து, அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பிரபலமான நட்சத்திரமாக மட்டுமன்றி, அன்றைய நவநாகரீக யுவதிகளுக்கு ஒரு பெரும் முன்னுதாரணமாக மாறினார்.

      ஆட்ரி ஹெபர்ன்! இந்த அம்மணி யாரென்று சாதனாவின் அபிமானியாக மாறுவதற்கு முன்புவரை அறிந்திலேன். ‘மை ஃபேர் லேடிபடத்தில் நடித்த ஹாலிவுட் நடிகையாம். கிட்டத்தட்ட அந்த ஹாலிவுட் நடிகையைப் போலவே, நெற்றியை முக்கால்வாசி மூடுகிறாற்போல, கேசத்தால் மறைத்து ஒப்பனை செய்துதான் பெரும்பாலான படங்களில் சாதனா நடித்திருந்தார். இப்படி ஒரு வித்தியாசமான சிகையலங்காரத்தை சாதனா கையாண்டதற்கு அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.நய்யார்தான் காரணம் என்று பல இடங்களில் படித்திருக்கிறேன். சாதனாவின் முன்நெற்றி சராசரியைவிட கொஞ்சம் அகலமாக இருந்ததால், அதை மறைப்பதற்காக இப்படியொரு பாணியைக் கடைபிடிக்கப்போக, அதுசாதனா கட்என்று படுபிரபலமாகிப் போனது. எப்படி ராஜேஷ்கன்னா காலர், ராஜேஷ்கன்னா கைக்குட்டை, ராஜேஷ்கன்னா பெல்ட் என்று ஒருகாலத்தில் கணக்கற்றகண்டிருந்த வான்கோழிகள்பின்பற்றத் தொடங்கினார்களோ, அப்படியே சாதனாவையும் அவர் உச்சத்திலிருந்த காலத்தில் ஈயடிச்சான் காப்பியடிக்க அந்தத் தலைமுறையில் பல இளைஞிகள் முயன்றுபார்த்திருக்கிறார்கள்.

      (நடிகை மீனாகுமாரிக்கு ஒரு சாலைவிபத்தில் வலதுகையில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகளை மறைக்க, அவர் தனது வலது முழங்கையை பெரும்பாலும் புடவை அல்லது துப்பட்டா தலைப்பை மேலே போட்டு மூடியிருப்பார் என்பதையும் நிறைய பேர் அறிந்திருக்கலாம்.) 

      உடம்பைச் சிக்கென்று பிடிக்கிற சல்வார்-கமீஸ் பாணியும் சாதனாவால்தான் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ’தில் சாஹ்தா ஹை’, ‘ஓம் சாந்தி ஓம்போன்ற படங்களில் 60-70களின் சினிமா ஒப்பனையைக் குறித்துக்காட்ட, சாதனாவின் அன்றைய ஒப்பனை, உடையலங்காரம் ஆகியவற்றைக் கையாண்டிருந்தார்கள்.

      அனேகமாக, தேவ் ஆனந்துடன் சாதனா நடித்தஹம் தோனோநீங்கலாக, அனைத்துப் படங்களிலும்சாதனா கட்தான்; அதுமேரா சாயாபடத்தின் ஒரு கிராமிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் சரி. ஆனால், அதை பார்வையாளர்கள் கண்டுகொள்ளவில்லை; மாறாக ரசித்தார்கள் என்பதையே அந்தந்தப் படங்களின் இமாலய வெற்றிகள் அழுத்தம்திருத்தமாகச் சொல்கின்றன.

      தேவ் ஆனந்த், சசிகபூர், ஷம்மி கபூர், சுனில்தத், மனோஜ்குமார், ராஜேந்திரகுமார் என்று பல முன்னணி கதாநாயகர்களுடன் சாதனா நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களே! பிமல்ராய் தொடங்கி ராஜ் கோஸ்லா வரைக்கும் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் சாதனா நடித்திருக்கிறார். இதில் ராஜ் கோஸ்லா சாதனாவைவோ கௌன் தீ?’, ‘மேரா சாயா’, போன்ற படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் நடிக்கவைத்து வெற்றியும் கண்டார். (“வோ கௌன் தீதமிழில்யார் நீ?’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது.) அமானுஷ்யமான கதாபாத்திரங்கள் என்றால், சாதனாவின் சில படங்களைத்தான் இன்னும் பாலிவுட்டில் முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்.




      60களிலும் எழுபதுகளின் முற்பகுதியிலும் இந்தித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகைகள் கிறீச்சிட்டு, கதறியழுது, கண்ணீர் பெருக்கி மிகைப்படுத்திக் கொண்டிருக்கையில், மிதமான நடிப்புக்கென்று நூதனும் சாதனாவும்தான் மிச்சமிருந்தார்கள். சற்றே அப்பாவித்தனம், நிறையவே நளினம், அடித்துப் போடுகிற அளவுக்கு இல்லையென்றாலும், பார்த்தால் மனதுக்குள் விசுக்கென்று இறங்குகிற அழகுஇவ்வளவுதான் சாதனா!

      எப்படி ராஜேஷ்கன்னாகிஷோர்குமார் கூட்டணியில் பல மறக்க முடியாத பாடல்கள் அமைந்தனவோ, அதேபோல சாதனாலதா மங்கேஷ்கர் ஜோடியும் பல அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள். குறிப்பாக, ‘வோ கௌன் தீ? படத்தின் அனைத்துப் பாடல்களுமே உச்சபட்ச இனிமையென்று சொல்லலாம்.

      ’லக்ஜா கலே..’ (தமிழில்பொன்மேனி தழுவாமல்..) என்ற பாடல் இன்றளவும் சாதனாவின் அழகுக்காகவும், லதா மங்கேஷ்கரின் குரல் இனிமைக்காகவும் நினைவுகூரப்படுகிறது.


      ஆனால், ‘மேரா சாயாபடத்தில் இடம்பெற்றஜும்கா கிராரேஎன்ற பாடல், பார்வையாளர்களைத் திரையை நோக்கிச் சில்லறையை வீசவைத்த அட்டகாசமான கிராமிய நடனப்பாடல்.



      அறுபதுகளின் இறுதியில் தைராய்டு உபாதைகளால் அவதிப்பட்ட சாதனாவின் வெற்றிப்பயணம் சற்றே வேகமிழக்கத் தொடங்கியது. எழுபதுகளின் துவக்கத்தில் அவர் நடித்த ஓரிரு படங்கள் படுதோல்வியடைந்தன. அப்போது ஹேமாமாலினியின் வெற்றிப்பயணம் துவங்கியிருந்தது. போதாக்குறைக்கு, வங்காளமொழியின் எதார்த்த சினிமாவிலிருந்து இடம்பெயர்ந்துவந்த ஷர்மிளா தாகூரும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். அறுபதுகளில் கோலோச்சிய நாயகிகள், எழுபதுகளில் அக்கா, அண்ணி, அம்மா வேடங்களை ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்து கொண்டுபோயினர். ஆனால், சாதனா அதை விரும்பவில்லை.

      கணவர் ஆர்.கே.நய்யார் தயாரிப்பில் ஒரு படத்தைத் தானே இயக்கி, அதில் தானே இரட்டை வேடங்களில் நடித்து வெளியிட்டார். அது ஒரு சூப்பர் ஹிட் படமானது. அதுதான், நான் தொடக்கத்தில் குறிப்பிட்டகீதா மேரா நாம்’. அந்த வெற்றியுடன் சாதனா படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திக் கொண்டு, அவரது சில படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களைப் போல, அமானுஷ்யமாய், எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்திகள்கூட வெளியே வராத அளவுக்கு, வெளியுலகிலிருந்து முற்றிலும் விலகி வாழ்ந்து வந்தார்.

      சாதனா என்றால்சாதனைஎன்ற பொருளோடு, ‘முழு அர்ப்பணிப்புடன் கூடிய இசைப்பயிற்சிஎன்ற இன்னொரு பொருளும் உண்டு. உண்மையில், சாதனாவை நினைவுபடுத்திப் பார்த்தால், அடுத்தடுத்து பல இனிமையான மெல்லிசைப்பாடல்களும் கூடவே ஞாபகம் வரத்தான் செய்கிறது. RIP!



  
(ஒரு தமிழ்ப் பத்திரிகையில் இரண்டுபக்கத்துக்கு சாதனாவைப் பற்றி எழுதித்தாருங்கள் என்று கேட்டார்கள் என்றுதான் முதலில் எழுதியிருந்தேன். அப்பாலிக்கா, அந்தப் பத்திரிகையில் அசோசியேட் எடிட்டரின் பெயரில்தான் போடுவோம்; காசு வேணும்னா வாங்கிக்குங்க என்று சொன்னார்கள். ‘போடா ஞொய்யாலன்னு எழுதினதை மூலையிலே போட்டு வச்சிருந்ததை நேத்துத்தான் பார்த்தேன். கொஞ்சம் கூடப்போட்டு எழுதி இப்ப இங்கன போட்டிருக்கேன்.)

3 comments:

ஸ்ரீராம். said...

நேற்று கூட லக்ஜா கலே பாடல் கேட்டேன். சாதனா பற்றியும் அவர்தம் சாதனைகள் பற்றியும் அதிகம் அறியேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் மும்தாஜ், ஆஷா ப்ரேக், ஹேமாமாலினி, மாதுரி தீட்சித்... ஆனால் அவர் இடம் பெற்ற பாடல் காட்சிகள் பாடல் காரணமாக எனக்கும் பிடித்தவை!

தம +1

வெங்கட் நாகராஜ் said...

ஜும்கா கிரா ரே.... எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

நினைவலைகளை ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ராஜ் குமார் படத்தில் அவர் பாடிய ஆ ஜா பாடல் எனக்குப் புகழ் வாங்க்கிக் கொடுத்தது.
வெகு நளினமான நடிகை.
நேனா பர்சே எங்கள் குடும்பப் பாடல்.
மேரே மெஹ்பூப் வாஹ். என்ன ரொமான்ஸ் பா.
அதிலும் மேரே மெஹ்பூப் மே க்யா நஹி பாடலும் சூப்பர் ஹிட்.
மேரா சாயா அற்புதம்.
மிக மிக நன்றி வேணு ஜி. என் பதின்ம வயது ஹீரோயினி.
அஞ்சலிகள்.