Wednesday, January 26, 2011

கருத்துச் சுதந்திரம்

"வாங்க வாங்க!" என்று சிரித்தமுகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்றார் கல்லுளிமங்கன் என்ற கே.எம். அவரருகே நின்று கொண்டிருந்தவர் நொள்ளக்கண்ணன் என்ற என்.கே.

"அட, என்.கே சார், நீங்க எப்படி?" ஆச்சரியத்தோடு கேட்டேன்.

"நான் கே.எம்முக்குத் தாய்மாமன்!" என்று கைகுலுக்கியவாறே புதிய தகவலை அளித்தார் என்.கே.

"அட அப்படியா?" ஆஹா, நமது சகபதிவர்கள் உறவினர்கள் என்று அறிவது எவ்வளவு மகிழ்ச்சி. "கே.எம்.சார், இன்னிக்கு குடியரசு தினத்துக்கு நீங்க போட்ட இடுகை படு சூப்பர்!"

"சந்தோஷம் சேட்டை, பின்னூட்டம் போட்டீங்களா?" என்று அசட்டுச்சிரிப்பு சிரித்தவாறே கேட்டார் கே.எம்.

"ஓ, பார்க்கலியா நீங்க? முதல் பின்னூட்டமே என்னுதுதான். ’வடை எனக்கே’ன்னு போட்டிருந்தேனே?"

"நன்றி சேட்டை!" என்று இன்னும் அகலமாகச் சிரித்த கே.எம், "மாமா, நம்ம சேட்டையைக் கூட்டிக்கிட்டுப்போயி டிபன் சாப்பிட வையிங்க! வடைக்காக ரொம்ப அலையுறாரு! நான் மத்தவங்களை கவனிச்சுக்கிறேன்." என்றார்.

"வாங்க சேட்டை," என்று என்னை என்.கே உள்ளே அழைத்துச் சென்றார். "இடுகையா போட்டிருக்கான் இடுகை? அதுக்குப் போயி பின்னூட்டம் வேறே போட்டிருக்கீங்களே சேட்டை?"

"உங்க இடுகை கூட பார்த்தேன் சார். அதுவும் சூப்பர்தான்," என்று சமாளித்தேன் நான். "அவருக்கு நாட்டு நடப்பு மேலே இருக்கிற ஆதங்கத்தை அவரு எழுதியிருக்காரு! நீங்க குடியரசு தினம் ஒரு நாளைக்காவது நாட்டைத் திட்ட வேணாமேன்னு கொஞ்சம் பாந்தமா எழுதியிருக்கீங்க! இதைப் போயி பெரிசு பண்ணுவாங்களா? விடுங்க சார்!"

"சரி அதை விடுங்க சேட்டை! சாப்பிட்டுப்புட்டு மேடையிலே ஏறி ரெண்டு வார்த்தை நீங்க பேசியே ஆகணும். உங்களுக்கு அப்புறமா சப்பைமூக்கனும் பேசப்போறாரு!" என்று தலையில் குண்டைத் தூக்கிப்போட்டார் என்.கே.

"ஐயையோ, மேடையிலே பேசறதா? பழக்கமில்லீங்க," என்று பதறினேன். விட்டால் தானே? சாப்பிட வைத்தபின், என்னை மேடையில் ஏற்றியே விட்டார். வேறு வழி? பேசியே ஆக வேண்டும்.

"பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரர்களே, சகோதரிகளே, பதிவர்களே! இன்று அறுபதாம் கல்யாணம் காணுகிற என் அன்புக்குரிய சகபதிவர் கல்லுளிமங்கனின் தந்தை ரெட்டைமண்டை அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர். அவரது துணைவியும் எனது சகபதிவர் நொள்ளக்கண்ணனின் மூத்த சகோதரியுமான திருமதி. சகுண்டலா ஒரு மாதர்குல திலகம். இந்த ரெட்டை மண்டை-சகுண்டலா ஜோடியைப் போன்றதோர் ஆதர்ச தம்பதியினரை அகிலம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. இவர்கள் பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!" என்று பழைய தமிழ் சினிமாவைப் போல பதினெட்டு ரீல்களை அவிழ்த்து விட்டு, மொய்யெழுதிவிட்டு கீழே இறங்கினேன்.

"அடுத்து பேசவிருப்பவர் திரு.சப்பைமூக்கன்!"

"எல்லாருக்கும் வணக்கம்!" என்று சுருக்கமாக ஆரம்பித்தார் சப்பைமூக்கன். "இந்த மேடையில் அமர்ந்திருக்கிற தம்பதியினரைப் பார்க்கும்போது, ஆப்பிரிக்காவிலிருந்து நீந்திவந்த ஒரு காண்டாமிருகத்துக்கும், வண்டலூர் மிருகக்காட்சிசாலையிலிருந்து தப்பித்துவந்த ஒரு நீர்யானைக்கும் மாலை போட்டு உட்கார வைத்திருப்பது போலிருக்கிறது!"

கூட்டத்தில் சலசலப்பு. "யோவ் சப்பை!" என்று அலறியபடி கல்லுளிமங்கன் ஓடிவந்தார். கூடவே நொள்ளக்கண்ணனும். "என்னய்யா பேசறே? கீழே இறங்குய்யா!"

"இறங்க மாட்டேன்," என்று மைக்கை விடாப்படியாக இறுக்கிக்கொண்டு பேசினார் சப்பைமூக்கன். " உனக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா? நீ குடியரசு தினத்தன்னிக்கு நம்ம நாட்டைத் திட்டி எழுதினேல்லே? நான் உங்கப்பா அறுபதாம் கல்யாணத்தன்னிக்கு அவரைத் திட்டுறேன். கேட்டுக்கோ!"

"இப்போ கீழே இறங்கலே, கொலை விழும்!" என்று முட்டியை மடக்கினார் நொள்ளக்கண்ணன்.

"அட போய்யா, நீ கூடத்தான் உன் அக்கா புருசன் வடிகட்டின கஞ்சன், கடைஞ்செடுத்த பொறுக்கி, மொள்ளமாறி, முடிச்சவிக்கின்னு எத்தனை வாட்டி என் கிட்டேயே சொல்லியிருக்கே?"

"யோவ், அதையெல்லாம் இன்னிக்கு ஏன்யா சொல்றே? எதை எப்போ பேசுறதுன்னு ஒரு நேரம் காலமே கிடையாதா? கீழே இறங்குய்யா," என்று பதட்டத்தோடு கெஞ்ச ஆரம்பித்தார் என்.கே.

"என்னது? எங்கப்பாவைப் பத்தியா அப்படிச் சொன்னீங்க மாமா?" இப்போது கே.எம்-மின் கோபம் தாய்மாமன் மீது பாய்ந்தது. "நீயே ஒரு தண்டச்சோறு! நீ எப்படிய்யா எங்கப்பாவைப் பத்திப் பேசலாம்?"

"யாரு தண்டச்சோறு?" நொள்ளக்கண்ணன் ஆத்திரத்தில் குதித்தார். "எங்க அக்காவை மட்டும் கல்யாணம் பண்ணிக்கலேன்னா, உங்கப்பன் தெருத்தெருவா பிச்சையெடுத்திட்டிருப்பான். அவன் யோக்யதை எங்களுக்குத் தெரியாது?"

"என்னலே சொன்னே?" மாலையைக் கழற்றி எறிந்துவிட்டு பொங்கி எழுந்தார் ரெட்டை மண்டை. "நான் ஏமுலே பிச்சை எடுக்கணும்? உங்க அக்காவைக் கட்டிக்கோன்னு உங்க ஐயன் தாம்லே என் காலுலே வந்து விழுந்தாரு! இல்லாட்டி இந்த சவத்து மூதியை எவம்லே கட்டுக்குவான்?"

"நானா சவத்து மூதி?" இப்போது சகுண்டலா மாலையைக் கழற்றிவிட்டு, புருசன் மீது பாய்ந்தார். "நீரு வெங்கலப்பானையிலிருந்து பித்தளைச்சொம்பு வரைக்கும் அடகு வச்சுத்தின்ன குடும்பத்திலேருந்து தானே வாரீரு? உம்ம யோக்யதைக்கு எங்கப்பனை விட்டா வேறே எவன் பொண்ணு கொடுப்பான்...?"

"ஆமா, இவ பெரிய பத்மினி பாரு!"

"நீரு பெரிய ஜெமினி கணேசன் பாரும்!"

ஐயையோ, அறுபதாம் கல்யாணம் நடக்கிற வீட்டில் அடிதடி நடந்து விடும் போலிருக்கிறதே! நான் மேடையில் ஏறி சப்பைமூக்கனை கீழே இறக்குவதற்குள்ளாக, கணவன்-மனைவி-மகன்-தாய்மாமன் ஆகியோரின் குடும்ப ரகசியங்கள் அசிங்க அசிங்கமாக அம்பலத்தில் ஏறின. சப்பைமூக்கனை வெளியே இழுத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு விழுந்த அடியில் சில என் முதுகின் மீதும் விழுந்தன. ஒருவழியாக அவரை வெளியே கொண்டுவந்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து அங்கிருந்து நகர்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

"என்னண்ணே, இப்படிப் பேசிப்புட்டீங்க? உங்களாலே எனக்கும் ரெண்டு அடி விழுந்திருச்சே!"

"சேட்டை, நான் ஏன் இப்படிப் பேசினேன்னு எனக்கே தெரியலே! ஏதோ ஒரு வேகத்துலே பேசிப்புட்டேன். கருத்து சுதந்திரத்தை வலைப்பதிவோட நிறுத்திக்கணுமுன்னு எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது! நல்ல வேளை, என் உசிரைக் காப்பாத்திட்டீங்க!" என்று நன்றி கூறினார் சப்பைமூக்கன்.

"நல்ல வேளையா? என் முதுகுலே எவனோ இதுதான் சாக்குன்னு நல்லா மொத்திட்டாண்ணே! உங்களை வீட்டுலே விட்டுப்புட்டு நானு டாக்டரு கிட்டே போகணும். கருத்து சுதந்திரமாமில்லே கருத்து சுதந்திரம்! ஆளை விடுங்க சாமி! இனிமே நானுண்டு என் மொக்கையுண்டுன்னு இருக்கப்போறேன் சாமி! உங்க சங்காத்தமே வேண்டாம்!"

நாளையிலிருந்து ஒழுங்கு மரியாதையா இருக்கணும். யோசித்தபடியே வெளியே வேடிக்கை பார்த்தபோது கடையில் தொங்கிக்கொண்டிருந்த செய்தித்தாள் தலைப்புச்செய்தி கண்ணில் பட்டது. "ரஜினியோடு தீபிகா நடிப்பாரா?"

அப்பாடா, நாளக்கு இடுகை எழுத மேட்டர் கிடைச்சாச்சு. நம்ம கிட்டே தீபிகா படம் நல்லதா இருக்கா தெரியலியே? எப்படி கருத்து சுதந்திரத்தைக் காப்பாத்துறது?

36 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

long article .i couldn't read it on mobile.so i come later

பொன் மாலை பொழுது said...

சேட்டை, உங்க சிண்டு முடியும் வேலை புரிகிறது. மொத்தத்தில் நம் அரசியல் வாதிகளை அம்பலத்தில் அவிழ்த்து விட்டதுபோல உள்ளது. நல்ல IRONY AND SATIRE.
அதுசரி , நொள்ளக்கண்ணன், கல்லுளிமங்கன் இரண்டுமே ஒருவர்தான் என்று கேட்டேன்? அப்படியா??

தங்கராசு நாகேந்திரன் said...

கலக்கல். இது மாதிரி நிசத்துலயும் ஆட்கள் நிறைய இருக்காங்க. வாழ்க உங்கள் கருத்து சுதந்திரம்

சிநேகிதன் அக்பர் said...

குடியரசு தின வாழ்த்துகள்.

பிரபாகர் said...

எதை வேண்டுமானாலும் எழுதலாம் என மனதிற்கு தோன்றியதை எழுதுவோருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள் நண்பா...! ம்... நடக்கட்டும்...

பிரபாகர்...

கோமதி அரசு said...

அரசியல்வாதிகள் கல்யாணமேடையில் மணமக்களை வாழ்த்தாமல் அரசியல் பேசும் மேடை ஆக்கிவிடுவார்கள்.

60 கல்யாண மேடை அப்படித்தான் இருக்கு.

சக்தி கல்வி மையம் said...

வாழ்க உங்கள் கருத்து சுதந்திரம்.

சாந்தி மாரியப்பன் said...

நகைச்சுவையுடன் அருமையா சொல்லியிருக்கீங்க..

Speed Master said...

neenga unmayelee Settai kaaraan thaan

எல் கே said...

hmmmm

வெங்கட் நாகராஜ் said...

கல்யாண மேடை கலாட்டா மேடை ஆகிவிட்டது! :) ம்!

Unknown said...

பாஸ் சான்சே இல்லை இந்த மாதிரி எழுத உங்களால மட்டும்தான் முடியும் ரொம்ப நல்லா இருக்கு ...

Chitra said...

இனிமே நானுண்டு என் மொக்கையுண்டுன்னு இருக்கப்போறேன் சாமி! உங்க சங்காத்தமே வேண்டாம்!"


.......ஹா,ஹா,ஹா,.... மீண்டும் உங்கள் முத்திரை பதித்து வந்துள்ள பதிவு.

ரிஷபன் said...

ஏதோ ஒரு வேகத்துலே பேசிப்புட்டேன். கருத்து சுதந்திரத்தை வலைப்பதிவோட நிறுத்திக்கணுமுன்னு எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது!
ம்ம்.. அப்படித்தான் இருக்கணும் போல!

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே பதிவு வழக்கம் போல செம காமெடி.. ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?யாரையோ சிலேடையா தாக்கற மாதிரி இருக்கே..

settaikkaran said...

//மாத்தி யோசி said...

vada?//

ஆமாம்! :-)

//long article .i couldn't read it on mobile.so i come later//

நிதானமா வாங்க, காக்கா கொத்திட்டாப் போகப்போகுது? மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

சேட்டை, உங்க சிண்டு முடியும் வேலை புரிகிறது. மொத்தத்தில் நம் அரசியல் வாதிகளை அம்பலத்தில் அவிழ்த்து விட்டதுபோல உள்ளது. நல்ல IRONY AND SATIRE.//

நம்ம வலைப்பதிவுக்கு வழக்கமா வர்றவரு கேட்ட ஒரு கேள்வியோட விளைவுதான் இந்த இடுகைண்ணே! :-)

//அதுசரி , நொள்ளக்கண்ணன், கல்லுளிமங்கன் இரண்டுமே ஒருவர்தான் என்று கேட்டேன்? அப்படியா??//

இல்லீங்க! நொள்ளக்கண்ணன் ரொம்ப சீனியரு! கல்லுளிமங்கன் நம்ம ஜெனரேஷன்! மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//தங்கராசு நாகேந்திரன் said...

கலக்கல். இது மாதிரி நிசத்துலயும் ஆட்கள் நிறைய இருக்காங்க. வாழ்க உங்கள் கருத்து சுதந்திரம்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

குடியரசு தின வாழ்த்துகள்.//

குடியரசு தின வாழ்த்துகள் அண்ணே! நன்றி! :-)

settaikkaran said...

//பிரபாகர் said...

எதை வேண்டுமானாலும் எழுதலாம் என மனதிற்கு தோன்றியதை எழுதுவோருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள் நண்பா...! ம்... நடக்கட்டும்...//

எதை வேண்டுமானாலும் எழுதுவீங்களா?- என்ற ஒரு கேள்வியின் விளைவுதான் இந்த இடுகை நண்பரே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கோமதி அரசு said...

அரசியல்வாதிகள் கல்யாணமேடையில் மணமக்களை வாழ்த்தாமல் அரசியல் பேசும் மேடை ஆக்கிவிடுவார்கள். 60 கல்யாண மேடை அப்படித்தான் இருக்கு.//

ஆமாங்க, இப்போ அங்கிங்கெனாதபடி எங்கும் அரசியல் ஆக்கிரமிப்பு அதிகரிச்சிருச்சு! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//sakthistudycentre-கருன் said...

வாழ்க உங்கள் கருத்து சுதந்திரம்.//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அமைதிச்சாரல் said...

நகைச்சுவையுடன் அருமையா சொல்லியிருக்கீங்க..//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Speed Master said...

neenga unmayelee Settai kaaraan thaan//

ஹாஹா! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//எல் கே said...

hmmmm//

நன்றி கார்த்தி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

கல்யாண மேடை கலாட்டா மேடை ஆகிவிட்டது! :) ம்!//

ஆமாம் ஐயா, வாடிக்கையாகி விட்டது. மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//இரவு வானம் said...

பாஸ் சான்சே இல்லை இந்த மாதிரி எழுத உங்களால மட்டும்தான் முடியும் ரொம்ப நல்லா இருக்கு ...//

ஆஹா! உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Chitra said...

.......ஹா,ஹா,ஹா,.... மீண்டும் உங்கள் முத்திரை பதித்து வந்துள்ள பதிவு.//

கருத்துக்கு மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//ரிஷபன் said...

\\ஏதோ ஒரு வேகத்துலே பேசிப்புட்டேன். கருத்து சுதந்திரத்தை வலைப்பதிவோட நிறுத்திக்கணுமுன்னு எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது!\\

ம்ம்.. அப்படித்தான் இருக்கணும் போல!//

என்னை மாதிரி நோஞ்சானாயிருந்தா அப்படி இருக்கிறது உடம்புக்கு நல்லது தான்! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே பதிவு வழக்கம் போல செம காமெடி.. ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?யாரையோ சிலேடையா தாக்கற மாதிரி இருக்கே..//

இல்லே தல, நம்ம தோஸ்த் ஒருத்தர் சில அசவுகரியமான கேள்வி கேட்டாரு. அவரு கேட்டதுலே நியாமிருந்ததாப் பட்டுது. அதுனாலே தான் இந்த இடுகை! மிக்க நன்றி! :-)

தமிழ்நதி said...

கருத்துச் சுதந்திரமா? அது பாரிஸ் கார்னரில் மலிவு விலைக்குக் கிடைக்குமா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் சேட்டைக்காரன்.

நல்லா சிரிக்க வைக்கிறீங்க... “எல்லாம்“காமெடியாவே இருக்கு:))) ஆனா அதை சீரியஸ் மாட்டர்ங்கிறாங்க. எதுக்கு இவ்ளோ இங்லீஷ்ங்கிறீங்களா... தமி்ழ்நாட்ல இருக்கமுல்ல...:)))

Unknown said...

Hi,

I am somewhat regularly reading your blogs and they are really very good and entertainng. I have one request to you. You are using words like "nollakannan" & "rettaimandai" as character's name. Since these words literally meaning physically handicapped people they would be hurt by reading this. I do not agree in calling physically challenged people in names. And I fully understand that hurting those people is not your intention.

I request you to avoid these in future. Thanks in advance, Ranjani

settaikkaran said...

//தமிழ்நதி said...

கருத்துச் சுதந்திரமா? அது பாரிஸ் கார்னரில் மலிவு விலைக்குக் கிடைக்குமா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் சேட்டைக்காரன்.//

கருத்துச் சுதந்திரம் என்று ஏதாவது படம் வந்தால், அதன் திருட்டு சிடிக்கள் மலிவு விலையில் பாரிஸ் கார்னரில் கண்டிப்பாகக் கிடைக்கும். :-)

//நல்லா சிரிக்க வைக்கிறீங்க... “எல்லாம்“காமெடியாவே இருக்கு:))) ஆனா அதை சீரியஸ் மாட்டர்ங்கிறாங்க. எதுக்கு இவ்ளோ இங்லீஷ்ங்கிறீங்களா... தமி்ழ்நாட்ல இருக்கமுல்ல...:)))//

நானும் கூட இங்...அதாவது ஆங்கிலம் கலக்காம எழுத முயற்சிக்கிறேன். முடிய மாட்டேங்குது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//UmaRanjani said...

I am somewhat regularly reading your blogs and they are really very good and entertainng. I have one request to you. You are using words like "nollakannan" & "rettaimandai" as character's name. Since these words literally meaning physically handicapped people they would be hurt by reading this. I do not agree in calling physically challenged people in names. And I fully understand that hurting those people is not your intention.//

முதலில் உங்களுக்கு எனது இருகரம் கூப்பிய வணக்கம். நகைச்சுவைக் காரணங்களுக்காக, நான் தெரியாமலே ஒரு பெரிய தவறைச் செய்து வந்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் சரியே!அது போன்ற வார்த்தைகளை உபயோகித்தமைக்காக வருந்துகிறேன்.

//I request you to avoid these in future. Thanks in advance, Ranjani //

இனி ஒருபோதும் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். உங்களுக்கு எனது கோடி நன்றிகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் இந்தப் பதிவு மிகவும் நகைச்சுவையாக இருந்தது.
நகைச்சுவைப் பிரியரான எனக்கு இது ஒரு நல்ல விருந்து போல அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.