Saturday, February 27, 2010

சின்னஞ்சிறு வயதில்....!


பதின்ம நினைவுகள் என்னும் தொடர்பதிவில் என்னை(யும்) அழைத்து விட்டார்கள் என்பதற்காக, அதிக மெனக்கெட்டு, எனது இயல்பான தோலை உரித்துப் புதிய சட்டையைப் போர்த்துக்கொண்டு எழுதிய பதிவல்ல. எவராயிருந்தாலும் சரி, நினைவுகளை நிறுத்துப்பார்க்கிறபோது அதில் தாழ்ந்திருக்கும் தட்டில் காயாமலிருக்கிற கண்ணீரின் முத்துக்களே அதிகம் குவிந்திருக்கும்- ஆனந்தக்கண்ணீர் உட்பட! நகைச்சுவையாய் எழுத யோசிக்க வேண்டியிருக்கிறது; எவரது முகமூடியையோ சிறிது நேரம் இரவல் வாங்கி அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், கடந்து வந்த காலங்களைப் பற்றிக் கணக்கெடுப்பு நடத்துகிறவர்களுக்கு, ஒப்பனைகள் தேவைப்படுவதில்லை. பால்ய பருவங்களில் தாமணிந்த துணிமணிகளை யாரும் இன்னும் வைத்திருப்பதில்லை என்றாலும் அப்பாவின் விரல்பிடித்துக்கொண்டு போய் வாங்கிய அந்த நாளும், அந்த ஜவுளிக்கடையின் புதுத்துணி வாசமும், வெளியேறும்போது உயிரற்ற பொம்மைகளுக்கு நாமும் திருப்பி வணக்கம் சொன்ன அறியாமைக்கணங்களும் யாருக்கு மறந்திருக்கக்கூடும்?

நீங்களே மறந்து விட்டிருக்கிற ஒரு பழைய தழும்பை எப்போதாவது ஒரு நண்பர் சுட்டிக்காட்டி இது எப்படி ஏற்பட்டது என்று கேட்கிறபோது, அந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் புன்னகையும், விதிவிலக்காக மவுனமும் பதிலாக அளிக்கத்தோன்றும். இரத்தம் வடித்துக் காய்ந்து தழும்பான சில நினைவுகளுக்குப் பின்புலத்தில் சில இனிமையான நினைவுகள் இருக்கலாம். சைக்கிளில் ஒரு குட்டிதேவதையை அமர்த்தி பயமும் பரபரப்பும் கலந்து மிதித்த பயணங்களில் தடுமாறி விழுந்து வாங்கிய விழுப்புண்களின் தழும்பாக இருப்பின், அந்தப் புன்னகையின் வெப்பத்தை சினேகிதர்களால் அறிய முடியாது. ஆனால், மறக்க முயன்றும் முடியாத அந்தத் தழும்பின் சரித்திரத்தை நினைவுகூர்கிறபோது, வேப்பெண்ணையும் வியர்வையும் கலந்து வீசிய நெடி நுரையீரலுக்குள் திரும்பவும் வந்து நிரம்பியது போலிருக்கும்.

சில சமயங்களில் நினைவுச்சின்னங்களை விடவும் கூரிய ஆயுதங்கள் இருக்க முடியாது என்று தோன்றும். ஒவ்வொன்றையும் பார்க்கிறபோதெல்லாம் சமநிலமாக முயன்றுகொண்டிருக்கும் இதயத்தில் எங்கிருந்தோ வந்த ஏர் உழுது உழுது உதிர ஈரத்தை உற்பத்தி செய்வது போலிருக்கும். தற்செயலாக சந்திக்கிற பழைய உறவுகள் போல, முகமும் பெயரும் மறக்காமலிருக்கிற பல நினைவுகள், வழியனுப்பினாலும் வலுக்கட்டாயமாக நம்மோடு இருந்து இம்சித்து விட்டுத்தான் போகும்.

நினைவுகள் பசுமையாக இருக்கிறதா, பழுப்பு நிறத்திலிருக்கிறதா என்பதைக் காட்டிலும் அவை மக்கிப்போகாமல் இருப்பதே அவசியமாகிறது.

ஆண்டுக்கணக்காய் செருப்புமின்றி பள்ளிக்கு நடந்தும் முள்குத்திய சம்பவங்கள் அதிகம் நினைவுக்கு வருவதில்லை. ஆனால், மனிதாபிமானத்தோடு ஏற்றிக்கொண்ட மாட்டுவண்டிகளில் என் உடலோடு உரசி உட்கார்ந்த சில இரட்டைப்பின்னல்களில் வெள்ளைச்சிரிப்பு இப்போது நினைத்தாலும் குத்தி இறங்குகிறது.

செம்மண்தரையில் வியர்க்க விறுவிறுக்க கபடியாடிவிட்டு, முங்கி முங்கி சுனையில் குளித்தபோதெல்லாம் சிராய்ப்புகளில் சுள்ளென்று கடித்த மீன்களைப் பற்றி நினைக்கிறேனோ இல்லையோ, அதே சுனையின் கரையில் எவருமின்றி வேப்பமரத்திலிருந்து உதிர்ந்த இலைகளை எண்ணிக்கொண்டிருந்த ஏகாந்தப்பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன.

ஓடுகள் விலகிய பள்ளிக்கூட அறைகளில், கிழிந்த கால்சராயின் மீது சிலேட்டை வைத்து மறைத்த கணங்களும், சரியான விடை சொல்லியபோதெல்லாம் எழும்பி நிற்க வைத்து, கைதட்டல் ஒலியால் காதுகளைக் குளிர வைத்த நல்லாசிரியைகளும் நினைவுக்கு வருகின்றனர்.

சொடலைமாடனின் சிலையைப் பார்த்துப் பயந்து கண்களை இறுக்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்ற பொழுதுகளும், கூடத்தில் முதல்முதலாய் ஒரு உயிரற்ற உடல்பார்த்து தூணை இறுக்கியணைத்த துக்கநிமிடங்களும் நினைவுக்கு வருகின்றன.

டயர் வண்டியோட்டி குருமலை ரயில் நிலையம் வரைக்கும் சென்று, விரைந்து செல்லுகிற வண்டிகளை வேலியின் மீது அமர்ந்தபடி வேடிக்கை பார்த்த நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

நெல்லயப்பர் கோவிலில் முதல்முறையாய்ப் பார்த்த குட்டியானையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அடம்பிடித்து அழுததும் நினைவுக்கு வருகிறது.

நண்பர்களோடு கூட்டு சேர்ந்து ஆளுக்கு ஒன்றாய் அவரவர் வீட்டிலிருந்து, வெல்லம்,உப்பு,மிளகாய்,புளி என்று கொண்டுவந்து படித்துறைக்கல்லில் இடித்து, குச்சியில் உருட்டி சுவைத்த நொட்டாம்புளி இப்போது நினைத்தாலும் ருசிக்கிறது.

கொடைவிழாவில் சிலம்பம் சுற்றிச்சென்றதும், அசட்டுத்துணிச்சலில் நண்பர்களோடு மயானத்துக்குள் சென்று எரிந்து எழும்பிய உடலைக்கண்டு அஞ்சியதும், பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு நெல்லைக்கு ரயில்பிடித்துச்சென்று பூர்ணகலாவில் படம் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

’என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று ஒரு அப்பாவி மாணவியிடம் கேட்டதும், அவள் அதைக் கெட்ட வார்த்தை என்று சொன்னதும்.....

சைக்கிளை வியர்க்க விறுவிறுக்க மிதித்துச் சென்று ஒரு புன்னகைக்காக மூச்சுவாங்கியபடி காத்திருந்த நாட்களும்...

எல்லா நண்பர்களும் எங்கேங்கோ சென்றுவிட, நாங்கள் சேர்ந்து சுற்றிய காடுகளில் செருப்பணிந்து நடந்தும் முள்ளாய்க் குத்திய நினைவுகளும்....

உடன் ஓடிவிளையாடிய சகோதரிகள் குமரிகளானதும், வீட்டுக்குள்ளே தனி ஆணாக விலகி வாழ நேர்ந்த காலங்களும்....

அவ்வப்போது அடிப்பதை வழக்கமாக வைத்திருந்த அண்ணன் வேலை கிடைத்து வெளியூருக்குப் புறப்பட்டபோது, பஸ் நிலையத்தில் என்னையுமறியாமல் சிந்திய கண்ணீரும்....

தன்னிரக்கம் போலிருக்கிறதோ? இந்தப் பருக்கைகள் சோற்றின் பதம் பார்ப்பதற்காக அல்ல. இன்னும் எங்கேயோ எனது உதட்டில் ஒட்டிக்கொண்டிருப்பது போல ஒரு எண்ணமும், எங்கிருந்தோ அம்மாவின் முந்தானைத்தலைப்பு அதைத் துடைத்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையும், தினசரியும் என்னுடன் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன.

அளவுக்கு மீறினால் நினைவுகளும் கூட நஞ்சுதான். அதனால், இப்போதைக்கு ஒரு காற்புள்ளி வைத்து விடுகிறேனே!

இதை யார் வேண்டுமானாலும் இங்கிருந்து தொடரலாம்; ஆனால், என்னை எழுத வைத்தவர்கள் இவர்கள்:

அநன்யா மஹாதேவன்

ஸ்டார்ஜன்


இவர்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பதிவுக்காக மட்டுமல்ல! இந்த சேட்டைக்காரனின் முகமூடியை சற்றே கழற்றி விட்டுக் காற்று வாங்க வைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வைத்ததற்காக! இருவருக்கும் நன்றி! இங்கு வருபவருக்கும் நன்றி!!

Friday, February 26, 2010

ஐயோ பாவம்


முன்குறிப்பு: இது என் படைப்புக்களைப் படிக்கிறவர்கள் பற்றிய பதிவு அல்ல!

அழைத்தபோதெல்லாம் தோன்றி அருள்பாலித்த கூகிளாண்டவருக்கு நேற்று என்ன எரிச்சலோ?

"உன்னோட நச்சு தாங்கலடா சேட்டை! கொஞ்ச நேரம் தூங்க விட மாட்டியா?" என்று இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு வந்து கதவைத் தட்டியதும், எழுந்து திறக்க வரும் மேன்சன் மேனேஜரைப் போல கடுப்புடன் கேட்டார்.

"கோச்சுக்காதே மாம்ஸ்! எனக்கு ஒரே வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் சொல்லேன் ப்ளீஸ்!" என்று கெஞ்சினேன். என் அவசரம் எனக்கு, அடுத்த பதிவு போட்டாக வேண்டுமே?

"கேட்டுத்தொலை!" என்று முணுமுணுத்தார் கூகிளாண்டவர். "இவனெல்லாம் பிளாக் ஆரம்பிக்கலேன்னு யாரு அழுதாங்க?"

"ஒரு வார்த்தை! ரெண்டே ரெண்டு எழுத்து! அர்த்தம் மட்டும் சொல்லு மாம்ஸ்!"

"டேய் சேட்டை, ஓவரா பில்ட்-அப் கொடுக்காதே! அது என்ன வார்த்தைன்னு சொல்லு!" என்று பற்களை நறநறவென்று கடித்தார் கூகிளாண்டவர்.

"எதுக்கெடுத்தாலும் ஐயோ ஐயோங்கிறோமே! இதுக்கென்ன மாம்ஸ் அர்த்தம்?"

"இது ஒரு சப்பை மேட்டர்!" என்று எரிந்து விழுந்தார் மாம்ஸ். "Interjection expressing sorrow,distress or sympathy."

"இப்போ எதுக்கு பீட்டர் வுடுறே? தமிழ்லே பேச மாட்டியா? மனசுக்குள்ளே பெரிய மெட்ராஸ்வாசின்னு நினைப்பா?" என்று கடுப்படித்தேன் மாம்ஸை!

"உன் கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்குப் பேசாம நான் அஜித்தாவோ ரஜினியாவோ பொறந்திருக்கலாம்," என்று தலையில் மடேர் மடேரென்று அடித்துக்கொண்டார் கூகிளாண்டவர்.

"தெரியாதுன்னு சொல்லு! அதுக்காக இங்கிலீஷுலே பேசி என்னை குழப்பாதே! ஒரு உதாரணம் கூடவா சொல்ல முடியலே உன்னாலே?" நான் விடுவதாக இல்லை கூகிளாண்டவரை!

"சரி, உதாரணம் தானே? ’ஐயோ குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டது!’ போதுமா உதாரணம்?" மாம்ஸ் அப்பீட் ஆவதற்கு ஆயத்தமானார்.

"ஏன்? தாத்தா கட்டில்லேருந்து விழுந்தா ஐயோன்னு சொல்லாம ஹையான்னா சொல்லுவாங்க?"

"சேட்டை, முடியலேடா!"

"இரு இரு, எஸ்கேப் ஆக ட்ரை பண்ணாதே! சாமி படம் பார்த்திருக்கியா?"

"ஓ! கந்தன் கருணை, திருவிளையாடல்,திருவருட்செல்வர், திருமலை தென்குமரின்னு ஏகப்பட்ட சாமிப்படம் பார்த்திருக்கேன்!"

"உன் கிட்டே கேட்டேன் பாரு, என் புத்தியை...,"

"செருப்பாலே அடிக்கணுமா? இரு கழட்டித்தர்றேன்!" கூகிளாண்டவர் முகத்தில் குதூகலம்.

"எதுக்கு மாம்ஸ் பறக்கறே? இப்போத் தானே பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அதுக்கப்புறம் செருப்படி தானாவே வரும்! விக்ரம்-த்ரிஷா நடிச்ச சாமி படம் பார்த்தியான்னு கேட்டா நீ பக்திப்படத்தோட பெயரா சொல்லிட்டிருக்கே?"

"ஓ! த்ரிஷாவா?"

"வாயை மூடு மாம்ஸ்! உள்ளே க்வாலியர் ஒன்டே மேட்ச் லைவ் டெலிகாஸ்ட் தெரியுது. அந்தப் படத்துலே ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்குன்னு ஒரு பாட்டு வரும் தெரியுமா?"

"ஹி..ஹி! தெரியுமே!"

என்ன கொடுமைங்கண்ணா இது? த்ரிஷான்னா கூகிளாண்டவர் கூட வழியுறாரு பாருங்க!

"அந்தப் பாட்டுலே என்ன விக்ரம் த்ரிஷாவைப் பார்த்து சோகமாவா பாடறாரு?"

"இல்லை!"

"எம்.குமரன் ஸன் ஆஃப் மஹாலட்சுமி படத்துலே ஐயோ..ஐயையோ..உன் கண்கள் ஐயையோன்னு ஜெயம் ரவி அசினைப் பார்த்துப் பாடுவாரே, அவரென்ன அசினைப் பார்த்து மிரண்டு போயா பாடுனாரு?"

"இல்லை!"

"அதையும் விடு! ரிதம் படத்துலே ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு ரம்யா கிருஷ்ணன் பாடுனாங்களே...அதுக்கு என்ன அர்த்தம்?"

"டேய் சேட்டை! உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன்? ஆத்துலே போற தண்ணியை அய்யாகுடி அம்மாகுடிங்கிறா மாதிரி உனக்கும் இலவசமா ஒரு பிளாக் கொடுத்ததுக்கா இந்த டார்ச்சர்?"

"மழுப்பாதே மாம்ஸ்! உனக்கு ஐயோங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியலேன்னு சொல்லு! இனிமே நீ கூகிளாண்டவர் இல்லை. கூகிளடியார் தான்னு ஒத்துக்கோ!"

"டேய் விக்கி சொல்லறதைத் தானேடா நானும் சொல்றேன்," என்று அழவே ஆரம்பித்து விட்டார் மாம்ஸ்.

"நீ விக்கி சொல்றியோ இல்ல திக்கி சொல்றியோ, தப்பு தப்பு தானே?" நானா விடுவேன்.

"எப்படிடா தப்பு?"

"கேளு மாம்ஸ்! ஒரு அழகான பொண்ணு "ஐயோ, எனக்குக் கூச்சமா இருக்கு,"ன்னு சொல்லறதில்லையா?"

"சமீபகாலத்துலே அப்படியொரு சம்பவம் நடந்ததா எனக்குத் தெரியலியே சேட்டை!" என்று விசும்பி விசும்பி அழுதார் கூகிளாண்டவர்.

"என்னைப் பார்த்தே,’ஐயோ சேட்டை, இந்தச் சட்டையிலே நீ பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டாயிருக்கேன்.’னு சொல்றாங்களே, அதுக்கென்ன சொல்லறே?"

"ஆதாரமில்லாத புரளியெல்லாம் நான் சீரியஸா எடுத்துக்கிறதில்லே சேட்டை!"

"மொத்தத்துலே உனக்கும் சரி, விக்கிக்கும் சரி, ஒரு சின்ன வார்த்தைக்குக் கூட அர்த்தம் தெரியலே. ஆனா ரெண்டு பேரும் பெரிய பருப்பு மாதிரி அல்டாப் பண்ணிட்டுத் திரியறீங்க. இல்லையா?"

என்னை ஏற இறங்கப் பார்த்த கூகிளாண்டவர் மறுகணமே "ஐயையோ தெய்வமே, என்னைக் காப்பாத்து,"ன்னு ஜூட் விட்டுப்புட்டாரு!

அவர் போனாப் போறாருங்க! நீங்களாவது சொல்லுங்க! ஐயோன்னா என்னங்க அர்த்தம்?

Thursday, February 25, 2010

சாருவைப் பற்றி...!

தலைப்பைப் பார்த்து வேறு எதையோ எதிர்பார்த்து வந்தால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல.

சமீபகாலமா அஜித்-ரஜினிக்கு அடுத்தபடியா செய்தித்தாள்களில் அடிபடுற போலி ஐபிஎஸ் அதிகாரி சாருலதாவைப் பத்தி எழுதப்போறேன். இதை எழுதற தூண்டுதல் எனக்கு எப்படி வந்ததுன்னு கேட்கறீகளா?

அதாவதுங்க, ஒரு ஊரிலே சமீபத்துலே ஊரடங்குச்சட்டம் போட்டிருந்தாங்களாம். நாலு பேருக்கு மேலே யாரும் கூடிநிக்கக் கூடாதுன்னு. ஆனா பாருங்க, அந்த ஊருலே காவல்துறை உதவி ஆய்வாளரா இருந்த பெண்மணிக்கு ஒரு போன் வந்ததாம்- ஒரு இடத்துலே மக்கள் கூட்டம் கூட்டமா நிக்குறாங்கன்னு! உடனே இந்தம்மாவும் விஜயசாந்தி மாதிரி வீராவேசமாக் கிளம்பிப்போயி. தனியொரு ஆளா நின்னே, கூட்டமா நின்னுக்கிட்டிருந்த மக்களையெல்லாம் லத்தி சார்ஜ் பண்ணி கலைச்சிட்டு வந்தாங்களாம். அடுத்த நாள் பத்திரிகையெல்லாத்திலேயும் அந்த பெண் அதிகாரியைப் பத்தித்தான் நியூஸ்! இருக்காதா பின்னே, தடையுத்தரவை அமல் படுத்துறேன்னு, பாவம், பஸ் ஸ்டாப்புலே ஊருக்குப் போகறதுக்காக நின்னுக்கிட்டிருந்தவங்களையெல்லாம் விரட்டி விரட்டி வீட்டுக்கே திரும்பிப் போக வச்சிட்டாங்களாமே!

"உங்களுக்கெல்லாம் யாரு ட்ரெயினிங் கொடுத்தாங்க?"ன்னு விசாரணையின் போது கேட்டிருக்காங்க. அப்போ தான் சாருலதா ஐ.பி.எஸ்னு அந்த உதவி ஆய்வாளர் சொல்லவும், இந்தம்மா மாட்டிக்கிட்டாங்களாம்.

சாருலதாவை சும்மாச் சொல்லக்கூடாது. போலீஸுக்கே தொப்பி போட்டுவிட்டவங்க இந்த ஒரு அம்மணி தான்! இவங்களைப் பத்தி ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து மக்களெல்லாம் படித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்காங்க!

என்னமோ பணத்தை மட்டும் தான் மோசடி பண்ணியிருக்காங்கன்னு நினைக்காதீங்க! கல்லூரிகளிலே நடக்கிற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முகாம்களுக்கு அம்மணி சிறப்பு விருந்தினராகப் போயி, வருங்கால சந்ததிக்கு பயிற்சியெல்லாம் கொடுத்திருக்காங்களாம். இவங்க பயிற்சி கொடுத்ததைப் பார்த்து நிறைய மாணவர்கள் "நம்ம வாத்தியாருங்களை விட இந்த அம்மா நல்லா பாடம் நடத்துறாங்களே,"ன்னு மூக்கு மேலே விரல் வச்சிருக்காங்களாம்.(அவங்கவங்க மூக்கு மேலே தான்!)

இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுமுன்னு சொல்றாங்க! அது வர்ற வரைக்கும் நாம ஏன் காத்திருக்கணும்? பெயரை வெளியிட விரும்பாத சில காவல்துறை அதிகாரிகள் சொன்ன சில திடுக்கிடும் தகவல்கள் இதோ, உங்களுக்காக:

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.தேர்வுகளை எப்படி எழுதணும், கண்காணிப்பாளருடைய கண்ணில் மண்ணைத்தூவிட்டு எப்படி காப்பியடிக்கிறது, இவ்வளவு கஷ்டப்பட்டும் தேர்வுலே தோல்வியடைஞ்சா ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பட்டங்களே இல்லாமல் எப்படி மக்கள் தலையத் தடவறது, அதாவது எப்படி மக்களுக்கு சேவை செய்யறதுன்னு ரொம்பவே விலாவரியா அம்மணி பயிற்சி கொடுத்திருக்காங்களாம். இவரோட பேச்சைக் கேட்டு ஆசிரியப்பெருமக்கள் எல்லாம் மிரண்டு போயிட்டாங்களாம். இருக்காதா பின்னே, மெனக்கெட்டு பி.எட், எம்.ஃபில்னு கஷ்டப்பட்டுப் படிச்சு தினமும் தொண்டைத்தண்ணி வத்துற அளவுக்குக் கத்துறதை விடவும் பேசாம போலீஸ் உத்தியோகத்துக்குப் போயிருந்தா நின்ன இடத்திலேயே சம்பாதிச்சிருக்கலாமா இல்லையா?

இத்தோட திடுக்கிடும் செய்திகள் முடிவுற்றதான்னா அது தான் இல்லை.

அண்மையில் நிறைவுற்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சாருலதா எழுதிய "மாமூல் மகாத்மியம்," என்ற புத்தகத்தை முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டதாகவும் இப்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி ஏற்கனவே "முப்பது நாட்களில் தொப்பை போடுவது எப்படி?" என்ற புத்தகம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதாவதற்கு சில தினங்கள் முன்பு, சித்தப்பா டி.வியில் சாருலதாவின் பேட்டி ஒரு செவ்வாய்க்கிழமை காலையில் நேரடியாக ஓளிபரப்பானதாகவும், பிடிபடாமல் லஞ்சம் வாங்குவது குறித்து நேயர்கள் தொலைபேசியில் அழைத்துக் கேட்டு அறிந்து கொண்டதாகவும் ஒரு "பகீர்"தகவல் இப்போது வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகியிருக்கிறது. இதே நேரலைப் பேட்டியில் தமிழகத்தில் லஞ்சநிலவரம் குறித்த நேயர்களின் சந்தேகங்களுக்கு சாருலதா பதிலளித்திருப்பதாகவும், நகரவாரியாக யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் அளிக்க வேண்டும் என்பன போன்ற விபரங்களை மிகவும் துல்லியமாக அளித்திருப்பதாகவும் அனுபவஸ்தர்கள் ஆச்சரியத்தோடும், அடக்கத்தோடும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த தகவல்: போலி ஐ.பி.எஸ்.அதிகாரி சாருலதாவின் வாழ்க்கை வரலாறு(?) திரைப்படமாகிறது. ஒரே நேரத்தில் 420 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கழுத்தறுத்தான்பட்டி கார்மேகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சினேகாவின் நடிப்பில் "வைஜயந்தி ஐ.பி.எஸ்," ரீமேக் ஆகிக்கொண்டிருப்பதால், சாருலதா பற்றிய படத்திற்கு அனேகமாக "பொய்ஜெயந்தி ஐ.பி.எஸ்," என்ற பெயர் சூட்டப்படலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து வருகிற செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னும் போகப்போக நிறைய திடுக்கிடும் தகவல்கள் வருமென்று தான் தோன்றுகிறது.

Wednesday, February 24, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.04


அடுத்து நாம் காணப்போகும் கடகராசிக்கார வலைப்பதிவர்கள் கடியில் கட்டெறும்பு என்றாலும் சுறுசுறுப்பானவர்கள். மிகுந்த விழிப்புணர்ச்சி கொண்டவர்கள் என்பதால், அயர்ந்த உறக்கத்திலிருந்து அலறிப்புடைத்து கண்விழித்து அரைமணி நேரத்தில் அடுத்த பதிவை எழுதுபவர்கள். இவரது பதிவுகளுக்கு வாடிக்கையாக கருத்தெழுதுகிறவர்கள் இவரது கண்பார்வையிலிருந்து எளிதில் தப்பி விட இயலாது. பின்னூட்டமிட மனமேயில்லாமல், கடனே என்று ஆங்கிலத்தில் "good," என்று ஒரே வார்த்தை எழுதினாலும், அதற்கு இரண்டுவரிநீள நன்றி சொல்லச் சளைக்கவே மாட்டார்கள். மறுமொழிகளில் இவ்வளவு தாராளம் காட்டினாலும் உங்களுக்குப் பரிச்சயமானவர்கள் உங்களை "பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய கஞ்சன்," என்று உங்கள் காதுபடவே கூறுவார்கள். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் எதிர்கொண்டாலும் கொள்கையிலிருந்து சற்றும் பிறழாமல் தொடர்ந்து முன்னைவிட மொக்கைபோடுவதில் சக்கைபோடு போடுவார்கள்.

கடகராசிக்காரர்களுக்கு இயல்பாகவே ஞாபக சக்தி அதிகம் என்பதால், தங்கள் பதிவை மறந்தாலும், மறுமொழி எழுதிக் கடுப்படித்தவர்களை எளிதில் மறக்க மாட்டார்கள். எதையுமே எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு அதிகம் என்பதால், பல சமயங்களில் டிரைலர் பார்த்தும், சில சமயங்களில் போஸ்டர் பார்த்துமே திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி ஜமாய்த்து விடுவார்கள். பொதுவாக பதிவு போடுவதற்கு முன்னர் மிகவும் யோசிக்கிற வழக்கமுள்ள இவர்கள், பதிவு போட வேண்டும் என்று முடிவெடுத்தால் பதிவு போடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தோ அல்லது அடுத்து தாங்கள் போடவிருக்கும் ஒரு பதிவு குறித்தோ ஒரு விபரமான பதிவைப் போட்டே தீருவார்கள். இயல்பிலேயே மிகுந்த துணிச்சலுள்ளவர்கள் என்பதால் இந்த ராசிக்காரர்கள் தாங்கள் எழுதுகிற ஹைக்கூ கவிதைகளை தைரியமாக "நையாண்டி," பிரிவில் சேர்த்து விடுவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு அவர்களது சகபதிவர்களே அனுகூலசத்ருக்களாக இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்கள் தாயகத்தை விட்டு ஒரு கடலாவது தாண்டியே வசிப்பார்கள். கடந்த சில பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தபோதிலும், இந்த ராசிக்காரர்களுக்கு இதுவரையிலும் தோராயமாக மிகவும் கஷ்டதசையே இருந்து வந்தது. வாசகர்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து வாயெல்லாம் பல்லாகி, விழுந்தடித்து எழுதிய அடுத்த பதிவுகளுக்குத் தாங்களே போட்டுக்கொண்ட ஒரு ஓட்டுக்கு மேல் மறு ஓட்டு விழுந்திருக்காது.

சுருக்கமாகச் சொல்வதானால், அச்சுதன் டீ ஸ்டாலுக்குப் போய் ஆர்டர் கொடுத்து விட்டு, கிளாஸை கைதவறிக் கீழே போட்டு உடைத்து, டீயும் குடிக்காமல் பத்து ரூபாய் தண்டம் மட்டும் அழுதுவிட்டு வருவது போல, சும்மாயிருந்தாலும் வில்லங்கம் விசிட்டிங் கார்டு கொடுத்து விருந்துக்குக் கூப்பிடுகிற ராசியாக இருந்தது இவர்களுக்கு. ஆனால், இனிமேல் அப்படியிருக்காது; டீ சாப்பிட்டு விட்டு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்தாலே போதும்.

ராகுவும், கேதுவும் பெரும்பாலான கடகராசிக்காரர்களைப் போலவே வாடகை வீட்டில் வசிக்கிறவர்கள் என்பதால், அவ்வப்போது அளவுக்கு மீறி ஆணியடிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், திருமணமான பதிவர்களுக்கு அவர்களது பதிவு காரணமாக வீட்டில் சில சின்னச் சின்ன பூசல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. (இதில் "இந்தப் பதிவு உண்மையிலேயே நீங்கள் எழுதியது தானா?" என்று வழக்கமாகக் கேட்கிற கேள்வி அடங்காது). அதே சமயம் திருமணமாகாதவர்களுக்கு அவர்களின் பதிவு காரணமாக, திருமணம் ஆவதற்குரிய அறிகுறிகள் தென்படலாம் என்பதால் வாசகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளாமல் இருத்தல் மிக அவசியம்.

கேதுவுக்கு குருபார்வை கிடைக்கும் என்பதால், உள்ளூர் இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்புகள் வருவதன் மூலம் பின்னூட்டம் எழுத மேலும் இரண்டிலிருந்து மூன்று பேர்கள் மாட்டிக்கொள்வதற்கான லட்சணங்கள் இருக்கின்றன. இதனால், சில பதிவர்களுக்கு திடீரென்று ஆன்மீகம் மீது ஈடுபாடு ஏற்படுகிற அபாயமும் இருக்கிறது. சுக்கிரன், சனி இவர்களது தூண்டுதலால் கடகராசிக்காரர்கள் அரசியல் ஆரூடங்கள் சொல்வதற்கான வாய்ப்பும் இருக்கின்றது.

"சிங்கம் பசித்தாலும் சிங்கிள் டீ குடிக்காது," என்பதை சிந்தனையில் நிறுத்தி விடாமுயற்சியுடன் நீங்கள் அடாத பல பதிவுகளை அடிக்கடி எழுதினால், நட்சத்திரப்பதவி உறுதி!

உங்களது ஜன்மராசியில் நிற்கிற கேதுவை ராகு கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்பது உங்களின் அதிர்ஷ்டம். இனி நீங்கள் எழுதப்போகிற பதிவுகளெல்லாமே பட்டையைக் கிளப்பப்போகின்றன. வி.ஐ.பிக்கள் அதாவது விடாமல் இம்சிக்கிற பதிவர்கள் உங்களது படைப்புக்களைப் பாராட்டப்போகிறார்கள். நீங்கள் பின்னூட்டம் போடாததால் டூ விட்ட நண்பர்கள் திடீரென்று உங்கள் வலைப்பக்கம் வந்து பாராட்டி உங்களை மகிழ்விப்பார்கள்.

மேலும் இதுவரை நீங்களே வடிவமைத்துக்கொண்ட பல விருதுகளை உங்கள் வலைப்பதிவின் முகப்பில் போட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, உண்மையிலேயே சகபதிவர்கள் "ஃபோட்டோ ஷாப்," பயிற்சிக்காக தாங்கள் உருவாக்கிய மாதிரி சான்றிதழ்களை, "பாழாய்ப் போவதை பசுவுக்குக் கொடு," என்ற பழமொழியின் அடிப்படையில் உங்களுக்கு அனுப்பி வைக்கிற வாய்ப்புகளும் காணப்படுகின்றன. மொத்தத்திலே கடகராசிக்காரர்கள் காட்டில் அடைமழை பெய்யும் நேரமிது.

நீங்கள் மேஷ ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் ரிஷப ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

நீங்கள் மிதுன ராசிக்காரரா? இங்கே செல்லவும்!

மற்ற ராசிக்காரர்களா? எங்கேயும் செல்ல வேண்டாம்!தயவு செய்து காத்திருக்கவும்!


Tuesday, February 23, 2010

பால்டீ-பன் கனவு


அதென்ன பால்டீ, பன் கனவுன்னு கேட்கறீங்களா? நாளு பூராவும் உழைச்சும் ஒரு டீயும், பன்னும் கூட இல்லாம வெறும் வயத்தோட தூங்குறவனோட கனவு என்னவா இருக்கும்? கண்டிப்பா அதுலே அவன் ஹாங்காங்குலேயே, பேங்க்-காக்குலேயோ யார் கூடவாவது டூயட் பாடிக்கிட்டு இருக்க மாட்டான். அவன் கனவுலே தோசை வந்து "பார்த்த ஞாபகம் இல்லையோ?"ன்னு பாடும். இட்டிலி வந்து "வருவியா வரமாட்டியா...வரலேன்னா உன் பேச்சு கா,"ன்னு பாடும். காப்பி டபரா வந்து,"சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய்.."னு பாடும். இவன் வயிறே ஒரு எஃப்.எம்.ரேடியோ ஸ்டேஷனா மாறி, எக்கச்சக்கமாப் பாட்டு ஒலிபரப்பாகிட்டிருக்கும்! ஆனா, அதுலே கூட சுத்தமான தமிழிலே யாராச்சும் பேசுவாங்களாங்கிறது சந்தேகம் தான்!

இவனோட பசியாற, இவனோட கனவு நிறைவேற ஒரு நல்ல வழி பொறந்திருக்கு! நாம எல்லாரும் நினைச்சா இன்னும் கொஞ்ச நாளிலே தமிழ்நாட்டுலே எங்கே பார்த்தாலும் சுபிட்சமாயிருக்கும்! வேலையில்லாத்திண்டாட்டம் இருக்காது; தற்கொலைகள் குறைஞ்சு போயிடும்; ஏன், விலைவாசி கூட குறைஞ்சிடும். ரொம்ப முக்கியமானது என்னான்னா, எல்லாரும் கன்னிமாராவுக்கோ, அங்கங்கே இருக்கிற லெண்டிங் லைப்ரரிக்கோ போயி புத்தகம் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சிருவாங்க! நாடகம், கூத்து எல்லாம் கொடிகட்டிப்பறக்க ஆரம்பிச்சிடும்! இப்படி நிறைய நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருந்தாலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும் வரும். அதைக் கடைசியிலே சொல்லுறேன்.

என்ன ஒரே பீடிகையா போடுறானேன்னு நினைக்காதீங்க! இன்னும் இருக்கு! பள்ளிக்கூடம்,கல்லூரியிலே படிக்கிறவங்க வகுப்பிலேருந்து எஸ்கேப் ஆகி காலை,மதிய காட்சி பார்க்கப்போக மாட்டாங்க! அப்படீன்னா என்னா அர்த்தம், வீட்டுலே பொய் சொல்லி பணம் வாங்கிட்டு வர மாட்டாங்க! அதாவது, இனிமேல் வரப்போகிற தலைமுறை பொய்யே பேசாத அரிச்சந்திரன்களாகிற வாய்ப்பிருக்குது. அது மட்டுமில்லை, பள்ளிக்கூடம், கல்லூரி விட்டு வீட்டுக்குத் திரும்பினதும் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சிடுவாங்க!

தீபாவளி,பொங்கல்,புதுவருஷமுன்னா முன்னே மாதிரி வீட்டுலே முடங்கிக்கிடக்காம எல்லாரும் வெளியே தெருவே போவாங்க; வருவாங்க! கோயில்குளமுன்னு சுத்துவாங்க! அடுத்த தலைமுறைக்கு நல்ல பழக்கவழக்கங்களெல்லாம் வரும்!

சினிமா பார்க்கப்போனா, கதாநாயகன் அறிமுகமாகிறபோது காதை அடைக்கிற மாதிரி விசிலடிக்கிற கூட்டமும் இருக்காது; கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணுற கூட்டமும் கண்ணுலே தென்பட மாட்டாங்க! பிளாக்குலே டிக்கெட்டா? ஊஹும், பேச்சுக்கே இடமில்லை போங்க! தியேட்டர் இருட்டுலே காதலர்களோட சில்மிஷங்களெல்லாம் சுத்தமா நின்னுபோயிடும்.

அட,அடிமடியிலேயே கை வச்சிட்டியேன்னு கேட்கறீங்களா? பால்-டீ பன் கனவு மட்டும் நிறைவேறினா காதல் சரிபாதி குறைஞ்சிடுமண்ணே! காதல் குறைஞ்சா தோல்வியும் குறையும்; தோல்வி குறைஞ்சா டாஸ்மாக் வியாபாரமும் குறையும்; தற்கொலையும் குறையும்.

இதெல்லாம் நடக்கிற காரியமான்னு கேட்கறீங்களா?

ஏற்கனவே தமிழக திரைப்படத்துறையினர் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சிட்டாங்க! நாம எல்லாருமா சேர்ந்து எக்கச்சக்கமா ’பிட்’ போட்டு, இப்போ நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இருக்குற சண்டையை எப்படியாவது பெரிசு பண்ணிட்டோமுன்னா, கொஞ்ச வருஷத்துக்காவது புது தமிழ் சினிமாவே வராதுங்க! இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினோமுன்னா, தமிழ் சினிமாவே இல்லாமப் போயிடும். நாம செய்ய வேண்டியதெல்லாம், ஆளுக்கு ஒரு பக்கம் நின்னுக்கிட்டு நடிகருங்களுக்கும், தயாரிப்பாளருங்களுக்கும் உள்ள சண்டையை இன்னும் நல்லா ஊதி ஊதிப் பெருசாக்கிட்டாப்போதும். தமிழ் சினிமா குளோஸ்!

அப்புறம் கமலா தியேட்டரிலே கன்னடப்படம் ஓடும்! தேவியிலே தெலுங்குப்படம் ஓடும்! என்னை மாதிரி ஆளுங்களுக்கு ரெண்டும் ஒண்ணு மாதிரித்தானிருக்கும். இப்பக்கூட "த்ரீ இடியட்ஸ்," இந்திப் படத்தைப் பார்த்தபோது ஒண்ணும் புரியாம "ஃபோர்த் இடியட்,"மாதிரித் தான் உட்கார்ந்திருந்தேன்.

இல்லாட்டிப் பழைய படங்களைத் திருப்பி ரிலீஸ் பண்ணுவாங்க! அப்புறமென்ன, அயோனாக்ஸிலே "ஔவையார்" படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணணும். அபிராமியிலே "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி," பார்க்கலாம். நாமெல்லாம் பி.யூ.சின்னப்பா மாதிரி ஹேர்-ஸ்டைல் வச்சுக்குவோம். பொண்ணுங்கெல்லாம் டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி புருவத்தை வில் மாதிரி வச்சுப்பாங்க! இப்போ "ஹோஸோன்னா," பாட்டை காலர் ட்யூனா வச்சிருக்கிறவங்களுக்குப் போன் பண்ணினா "அவள் செந்தமிழ்த்தேன்மொழியாள்,"னு டி.ஆர்.மஹாலிங்கம் அண்ணாச்சி பாடுவாக! காதலிக்க ஆளு கிடைக்காதவங்க, காதல்லே தோத்தவங்க "சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே...,"ன்னு காலர் ட்யூனை வச்சிருப்பாங்க! பழைய படங்களைப் பார்த்துப் பார்த்து பசங்க பொண்ணுங்களை "அன்புக்கரசியே, ஆரமுதே,"ன்னு கொஞ்சுவாங்க! பொண்ணுங்கெல்லாம் பாய் ஃபிரண்ட்சுங்களை "ஸ்ஸ்வாமி,"ன்னு அழைப்பாங்க! கவுண்டமணி,வடிவேலு, விவேக் எல்லாரையும் மறந்திட்டு நாம எல்லாரும் காளி.என்.ரத்தினத்தைப் பத்திப் பேசிட்டிருப்போம். புளிமூட்டை ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன் ரெண்டு பேரோட காமெடியெல்லாம் சூப்பர் ஹிட்டாயிரும். சரோஜாதேவிக்கு யாராவது கோவில் கட்டுனாலும் கட்டுவாங்க!

ஏன் இந்தக் கொலைவெறி? ஒரு துறையே இல்லாம போயி, ஆயிரக்கணக்கானவங்க வேலையில்லாம திண்டாடுவாங்களேன்னு கேட்கறீங்களா? இந்த அஞ்சாறு வருஷத்துலே தமிழ்நாட்டுலே எத்தனை தொழிற்சாலைகள் மூடியிருக்காங்க, எத்தனை நெசவுத்தொழிலாளிகள், எத்தனை விவசாயிகள், எத்தனை தினக்கூலிகள் பிழைக்க வழியில்லாமத் திண்டாடியிருக்காங்க! அப்பல்லாம் நாம கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்த மாதிரியே இதையும் பார்க்க வேண்டியது தான். ஆனா, அந்த மாதிரியெல்லாம் ஆகாதுங்க!

ரஜினி மராட்டிப்படத்துலே நடிப்பாரு! கமலைப் பத்திச் சொல்லவே வேண்டாம்! எப்படிப் பார்த்தாலும் இங்கே செட்டில் ஆயிருக்கிற நடிகர்,நடிகைங்க அவங்கவங்க பாஷையிலே படத்திலே நடிப்பாங்க! பேல்பூரி சாப்பிட்டுக்கிட்டே நிறைய போஜ்பூரி படம் பார்க்கலாம். ஆக, சினிமாத்துறைக்கும் பெரிய நஷ்டமொண்ணும் ஆகிராது. ஒழுங்காத் தமிழ் பேசுற ஹீரோ,ஹீரோயின் எத்தனை பேருங்க இருக்காங்க இன்னிக்கு?

சரி, தமிழ் சினிமா இல்லேன்னா சுபிட்சம் வந்திருமான்னு கேட்கறீங்களா? ஏன் வராது? ஒரு அப்பா-அம்மா, ரெண்டு குழந்தைங்க இருக்கிற ஒரு சின்னக் குடும்பம் ஒரு மல்ட்டி-ப்ளெக்ஸிலே சினிமா பார்க்கப்போனா குறைஞ்சது ஆயிர ரூபாய் செலவாகும். ஆக, குடும்பத்துக்கு வருஸத்துகு பன்னிரெண்டாயிரம் மிச்சமாகும். சினிமாவைப் பார்த்து அந்த மாடல் கண்ணாடி வேணும், இந்த மாதிரி டிரெஸ் வேணுமுன்னு கேட்கிறது குறையும். இந்த வகையிலே வருசத்துக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் மிச்சம். புது சி.டி.வாங்குற கணக்கிலே ஒரு இரண்டாயிரம் சேர்த்துக்கோங்க! எப்படியும் குடும்பத்துக்கு இருபதாயிரத்துலேருந்து முப்பதாயிரம் வரைக்கும் மிச்சம் பிடிக்கலாம். சுபிட்சமா இல்லையா? விலைவாசியும் குறையும்.

வேலையில்லாத்திண்டாட்டம் எப்படி ஒழியும்? முதல்லே தினமும் சினிமா வாய்ப்பு தேடி எழும்பூரிலே வந்து இறங்குறவங்க கூட்டம் சுத்தமா இருக்காது. எல்லாரும் அவங்கவங்க ஊருலே கிடைச்ச வேலையைச் சந்தோசமாப் பார்ப்பாங்க! ஏற்கனவே வந்தவங்களும் அவங்கவங்க படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு வேலையைத் தேடிக்கிட்டுப் போவாங்க! மேன்சன் உரிமையாளர்களுக்கெல்லாம் வருசக்கணக்குலே வராம இருந்த பாக்கியெல்லாம் வசூலாகும். சினிமாவிலே சான்ஸ் கிடைக்கலேன்னோ, சினிமாவைப் பார்த்துட்டு வர்ற வழியிலே பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டிருக்கிற பொண்ணு மேலே ஏற்பட்ட காதல் தோல்வின்னோ யாரும் தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க!

இதுலே ஒரே ஒரு பிரச்சினை இருக்குன்னு சொன்னேனில்லே! அது என்னான்னா, தமிழ் சினிமாவே சுத்தமா இருக்காதுன்னுறதுனாலே, எல்லாரும் டி.வி.சீரியலுக்கு வந்திருவாங்க! இது வரைக்கும் தினமும் சாயங்காலமான விளக்கேத்திட்டு மங்களகரமா சீரியல் பார்த்து அழுதவங்கெல்லாம் நாள் முழுக்க அழுவாங்க! அதுனாலென்ன, பணத்தை தியேட்டருக்கு அழுதுட்டு, பார்த்துப்புட்டு வயித்தெரிச்சலிலே அழுறதுக்கு வீட்டுலே சீரியல் பார்த்துக்கிட்டு அழுறது எவ்வளவோ தேவலை இல்லீங்களா?

அதுனாலே, தமிழ்நாட்டுலே இருக்கிற எல்லா சங்கங்களும் ஆளுக்கு ஒருத்தரை ஆதரிச்சு, இன்னொருத்தரைத் திட்டி போஸ்டர் அடிச்சு,அறிக்கை விட்டு, இவங்க சண்டையை இப்படியே ஒரு ரெண்டு வருஷம் இழுத்தடிச்சோமுன்னா தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஜப்பானை மிஞ்சிடும். பார்த்துட்டேயிருங்க! முதல்லேருந்து ஒருவாட்டி திரும்பப் படிச்சுப் பாருங்க! இதெல்லாம் தமிழ்நாட்டுலே நடக்கணுமுன்னா இவங்க சண்டை நீடிக்கணுமுன்னு எல்லாரும் சாமியை வேண்டிக்கோங்க!

பால்டீ-பன் கனவு பலிக்குங்களா?

Monday, February 22, 2010

அமெரிக்காவில் ஒரு அம்மா


"குட்டி" படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என்று ஒரு கூகிள் குழுமத்தில் ஸ்ரேயாபுராணம் பாடியிருந்தேன். போதாக்குறைக்கு ஸ்ரேயாவின் ஒரு படத்தையும் போட்டிருந்தேன். அதற்கு முதலில் வந்த பதில் இது தான்:

"உருப்படாதவன், உன் மூஞ்சிக்கு இது வேறயா? கண்ணாடியில உன் முக்த்தைப் பாரு!அப்புறம் உனக்குப் பொருத்தமா பாரு!!"

இதற்கெல்லாம் சளைத்தவனா நான்? உடனே பதிலடி கொடுத்தேன்:

"எனக்குப் பொருத்தமா பார்க்கணுமுன்னா, முதல்லே பாஸ்போர்ட் எடுக்கணும். உகாண்டா போக வேண்டியது தான்."

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பதில் வந்தது.

"அடப்பாவி! சிரிச்சு வயத்தை வலிக்குது!"

சங்கிலித்தொடராக நிகழ்ந்த இந்த கலாய்ப்பில் "உனக்காக அமெரிக்காவில் பெண் பார்த்து வைத்திருக்கிறேன். சீக்கிரமாக பாஸ்போர்ட் எடு!" என்று மிகவும் கரிசனத்தோடு அல்லது அனுதாபத்தோடு ஒரு மடல் வந்து விழுந்தது.

"அமெரிக்காவா? உங்கள் வீட்டிலிருந்து ஆஞ்சலினா ஜோலி வீடு எவ்வளவு தூரம்?" என்று ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டேன். (அப்போது ஆஞ்சலினா ஜோலியும் பிராட் பிட்டும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற செய்தி என் காதில் தேன் வந்து பாய்ந்தது போல பரவியிருந்த சமயம்)

"உன்னை ஏர்போர்ட்டில் துப்பாக்கியோடு வரவேற்கிறேன்," என்று பதில் வந்தது.

யார் இவர்? இந்த சேட்டைக்காரனோடு சரிக்குச் சமமாகக் கலாய்க்கிறவர் யாராக இருக்கலாம் என்று கேட்கத்தோன்றுகிறதா? இதோ, கீழே நான் தந்துள்ள சுட்டிகளைச் சொடுக்கிப்படியுங்களேன்:

அக்கினிப்பிரவேசம்

சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன்


சீதாலட்சுமி சுப்ரமணியன்! கொஞ்சம் அறிமுகமானவர்களுக்கும் "சீதாம்மா." எழுபத்தி ஐந்து வயது! வசிப்பது அமெரிக்காவில்! வாழ்வது மனதளவில் தமிழர்களோடு! இவர்களுக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் இருக்கலாம்; ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம். ஆனால், நான் தான் சுட்டிப்பயல்!

இந்தச் சேட்டைக்காரனுக்கு யாரோ செல்லம் கொடுத்துக் கெடுக்கிறார்களோ என்ற சந்தேகமிருந்தால், அம்மா மீது பழி போடலாம். "தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செல்லும் ஜாலத்தைக் கேளு," என்று கண்ணனைப் பற்றி புகார் சொன்னபோது யசோதை கேட்டமாதிரியே முகத்தளவில் கோபமும் உள்ளளவில் பெருமிதமாகக் கேட்டாலும் கேட்பார்கள் அம்மா.

"எட்டயபுரத்துக்காரி," என்பதில் அம்மாவுக்குப் பெருமை. பக்கத்து ஊர்க்காரனான எனக்கே இருக்கிறபோது அம்மாவுக்கு இருக்காதா? அந்தக் காலத்து முதுகலை தமிழ் இலக்கியம்! அம்மாவைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்தால் எவராலும் ஒரு முடிவுக்கு வர முடியும்.

நான் செல்லப்பிள்ளை மாதிரி! அம்மா சிரத்தையாக சமையல் பண்ணிக்கொண்டிருக்கும்போது கூடத்தில் ஓடிப்பிடித்து விளையாடுபவனாக இருப்பது தான் அம்மாவுக்குப் பிடிக்கும் அல்லவா?

சிந்தனையூற்றாக எழுதித்தள்ளுகிற அம்மா, என்னை மட்டும் சின்னப்பிள்ளையைச் சீண்டுவது போல சிரித்து விளையாடுவார். குழந்தை எதையாவது கிறுக்கினால் அதைப் பார்த்துக் குதூகலிக்கிற அம்மாவாகி உச்சிமோந்து மெச்சுவார். அடிக்கடி காதைப் பிடித்து முறுக்குவதும் உண்டு.

எந்தப் புத்தகம் படிக்க வேண்டும் என்று பட்டியல் தருவார். எட்டு வருடங்களில் வாரத்திற்கு இரண்டு முறையேனும் நான் போய்வருகிற காளிகாம்பாள் கோவில் குறித்து நான் கேள்விப்படாத தகவல்களைச் சொன்னவர். "முதலில் மனிதனாயிரு; ஜாதிமதமெல்லாம் உனக்கெதுக்கு?" என்று சர்வசாதாரணமாகக் கேட்டு ஒரு நிமிடத்தில் என்னை உலுக்கியவர்.

முகம் பார்த்திராத ஒரு அம்மா! ஆனால் நம் எல்லாருக்கும் பக்கத்தில் உட்கார்ந்து சோறு ஊட்டி விடுவது போல ஒரு உணர்வு, அவர்களது எழுத்துக்களை வாசிக்கும்போது ஏற்படுகிறது.

"எதிர்நீச்சல்," திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் தன்னை "படவா ராஸ்கல்," என்று சொல்ல வைப்பதற்காக, நாகேஷ் இறுதிக்காட்சியில் ஒரு நாடகம் ஆடுவாராமே? அதே மாதிரி அம்மாவின் "அடப்பாவி"யைக் கேட்காவிட்டால் உறக்கம் வர மாட்டேனென்கிறது எனக்கு.

நேரில் பார்த்தால் சொல்வார்களா தெரியவில்லை! ஆனால் ஒவ்வொரு முறை எழுத்தில் பார்க்கிறபோதும், நகரவாழ்க்கையின் அவலங்களையெல்லாம் ஒரு கணத்துக்கு ஒத்திவைத்து விட்டு நான் மனம் விட்டுச் சிரிப்பேன்.

Saturday, February 20, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.03

அடுத்து மிதுனராசி வலைப்பதிவர்களின் பலன்களைப் பார்க்கலாமா? (ஹி..ஹி..மறந்திட்டேன்னு நினைச்சீங்களா? விடறதா இல்லை யாரையும்...)

இந்த ராசிக்காரர்கள் மிகவும் மதிநுட்பம் படைத்தவர்கள். மிகவும் புத்திகூர்மையென்பதால் இவர்கள் உறங்குகிறபோது தலையணை கூட வைத்துக்கொள்ள மாட்டார்கள் - கிழிந்து விடும் என்பதால்! ஆத்திலே போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழிக்கு மிதுன ராசிக்காரர்களை விட சிறந்த உதாரணத்தை எங்கும் பார்க்க முடியாது. பெரும்பாலானோர்கள், அளந்து போட்டாலும் போட்டு விடுவோமோ என்று ஆறு, குளம் பக்கமே போகாமல் குழாய்த்தண்ணீரிலேயே குதூகலமாகக் குளிக்கிறவர்களாக இருப்பார்கள்.

வளவளவென்று பதிவுகளை எழுதுகிற வழக்கமில்லாதவர்கள் இவர்கள். செய்தித்தாளிலிருந்து ஒரு சுட்டியை ஒற்றியெடுத்துப்போட்டு விட்டு, "நாம் எங்கே போகிறோம்?" என்று இறுதியில் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுதி விட்டு பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குச் சென்று விடுவார்கள். எதையும் நிதானமாக சிந்தித்துச் சொல்பவர்கள் என்பதால், இவர்களில் பலர் இப்போது தான் "சந்திரமுகி," படத்திற்கே விமர்சனம் எழுதிக்கொண்டிருப்பார்கள் என்பதையும் அறிக.

இந்த ராசிக்காரர்களின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், செமத்தியான கடுப்பிலும் கூட நன்றி தெரிவிக்கும்போது நிறைய நகைப்பான்களைப் பயன்படுத்துவார்கள். மனதுக்குள் "என் பதிவையா மொக்கை என்று சொன்னாய்?" என்று கறுவியபடியே, பின்னூட்டமிட்ட நண்பரின் அடுத்த பதிவு எப்போது வரும் என்று எம்.என்.நம்பியாரைப் போல கையைப்பிசைந்து கொண்டு காத்திருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக நக்கலில் நயாகராவாகவும், குத்தலில் குற்றாலமாகவும் இருப்பார்கள்.

மிகவும் நுட்பமாகச் சிந்திக்கிற அறிவுஜீவிகளாகவும், மற்ற வலைப்பதிவர்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகவும், அப்பழுக்கற்ற சிந்தனாவாதிகளாகவும் - இவர்களே தங்களைப் பற்றிய கருத்துக்களை வைத்திருப்பார்கள் என்பதை (இப்போதாவது) அறிக! பதிவு போட்டு விட்டு ஜகா வாங்குவதில் படுசமர்த்தர்களாக இருப்பார்கள். புதிதாகப் பதிவு போடுகிறார்களோ இல்லையோ, வாரத்துக்கு ஒரு புதிய கேட்ஜெட்டையும், மாதத்திற்கு ஒரு புதிய டெம்ப்ளேட்டையும் சேர்த்து அல்லது மாற்றி அவரவர் வலைத்தளத்தைப் புதியது போல காட்டுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இந்த ராசியைச் சேர்ந்த ஆண் வலைப்பதிவாளர்களுக்கு தாய்க்குலத்தின் ஆதரவு பரிபூரணமாக இருக்கும் என்பதால், அம்மா, மனைவி குறித்த பல புனைவுகளை, அதிலும் குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நிறையப் பார்க்க முடியும்.

முகப்பிலே வீரமான வார்த்தைகளிருந்தாலும் மறுப்புத் தெரிவித்து ஒரு பின்னூட்டம் வந்தாலே வெலவெலத்துப்போய் விடுவார்கள். இவர்களின் வெற்றியின் ரகசியம் என்னவென்றால், இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது பெரும்பாலான வாசகர்களுக்கு இறுதிவரையிலும் புரியாமலே இருப்பது தான்.

சரி, மிதுனராசிக்காரார்கள் செய்ய வேண்டியது என்ன? எக்காரணம் கொண்டும் எளிதில் புரிகிற மாதிரி எழுதாமலிருக்கிற பழக்கத்தைக் கைவிடவே கூடாது. இந்த ஒரு மாதத்திற்கு எவரது தொடர்பதிவுகளுக்கும் சம்மதம் தெரிவிக்காமல் இருப்பது உத்தமம். கூடுமானவரை வலையுலகப் பிரமுகர்களின் சண்டை குறித்த பதிவுகளை இன்னும் ஒரு மண்டலத்துக்குத் தவிர்த்தல் நலம். மொக்கை போடுபவர்கள், போனால் போகிறது என்று சற்றே வித்தியாசமாக அதைக் கவிதை வடிவில் முயற்சி செய்தால் பாதகமில்லை. அனேகமாக நீங்கள் எழுதுகிற நகைச்சுவையான பதிவுகளைப் படித்துப் பலர் "நெகிழ்ச்சி தந்த பதிவு," என்று பின்னூட்டமிடுவதற்கான சாத்தியங்களை உங்களது தசாபலன்கள் காட்டுகின்றன.

மேலும் இன்னும் சில நாட்களுக்கு அலுவலகக்கணினியிலிருந்து உங்களால் வெறும் பின்னூட்டங்கள் மட்டுமே அளிக்க முடியும். புதிய பதிவுகள் ஏதும் வராத நிலையில் பிரிந்த நட்புகள் கூடுகிற அறிகுறிகள் இருக்கின்றன. அடிக்கடி கண்ணி தொங்குவதும், இணைய இணைப்பு அடிக்கொருமுறை துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பதினைந்து நாட்கள் இவை. காரணம், இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் துவங்க இருப்பதால், கொஞ்ச காலத்துக்கு இவரைப்போலவே பலர் சச்சின்,தோனி,ஹர்பஜன் ஆகியோரை சகட்டுமேனிக்குத் திட்டி கடும்போட்டியை ஏற்படுத்துவார்கள். புதுப்பேட்டை,நமச்சிவாயபுரம்,கண்ணம்மாபேட்டை போன்ற இடங்களுக்குச் சென்று புதிய வார்த்தைகளைக் கேட்டறிந்து உங்களது சொற்செறிவை மேம்படுத்தினால், உங்களது கிரிக்கெட் குறித்த பதிவுகள் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

இவையனத்தையும் மீறி உங்களது வாக்கினில், வழக்கத்துக்கு மாறக சில உயர்ந்த சிந்தனைகள் வெளிப்படும் என்பதால், வாசகர்கள் அதற்குண்டான பரிகாரங்களைச் செய்ய வேண்டி வரலாம். அதிகமாகப் பதிவு போடாமல், பிற பதிவுகளுக்குச் சென்று பின்னூட்டங்களை அதிகமாக இட்டால், இந்தக் காலகட்டத்தின் முடிவில் நல்ல பலன் விளையும். அத்துடன் உங்களது நினைவாற்றல் மிகவும் சிறப்பாகி விடும் என்பதால் திடீரென்று டேவிட் லீனின் "ரையான்ஸ் டாட்டர்," மற்றும் பீம்சிங்கின் "படிக்காத மேதை," போன்ற படங்களைக் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Friday, February 19, 2010

சிரிப்புத்தான் வருகுதையா


"டேய் சேட்டை,நீ அடங்க மாட்டியாடா?"ன்னு ஒரு அக்கா தெனமும் திட்டுது. "தம்பி, கல்யாணத்துக்கப்புறம் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி விடாட்டாலும் பாவமில்லே; வலைப்பதிவுலே ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் நடுவுலே கண்டிப்பா போதுமான இடைவெளி விடு,"ன்னு இன்னொரு அண்ணன் என் காதுலே சங்கு ஊதறாரு! "இப்படியே போச்சுன்னா, உன் வலைப்பதிவுக்கு ’தினச்சேட்டை’ன்னு பெயர் வச்சிருவோம்,"னு இன்னொரு தம்பி மெரட்டுறாரு! ஆனா பாருங்க, அட்டையைக் குளுப்பாட்டித் தொட்டில்லே போட்ட கதை மாதிரி, எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு தெனமும் பதிவு போட்டு சேட்டை பண்ணுறதே பொளப்பாப் போச்சுண்ணே எனக்கு!

என்ன பண்ணறதுண்ணே? தெனமும் யாராவது எதையாவது எழுதியோ,பேசியோ எனக்குள்ளே குப்புறப்படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிட்டிருக்கிற "சிந்தனாவாதி" தலையிலே, குடம் குடமாத் தண்ணியை ஊத்தி எழுப்பி விட்டுடறாங்களே!

இன்னிக்குப் பாருங்க, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கங்கள் ஒரு அறிக்கை விட்டிருக்காங்க! " இனிமே வேட்டைக்காரன் மாதிரி படமெல்லாம் எடுக்க மாட்டோம்,"னு தான் சொல்லிட்டாங்களோன்னு ஆசை ஆசையாப் பார்த்தா, திரையரங்குகளிலே ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு கண்டனம் தெரிவிச்சிருக்காங்கப்பு!

நமக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரமண்ணே! சுத்த ஏமாத்து வேலை இந்தக் கிரிக்கெட்! ஒரு வாட்டி ரேடியோவிலே வர்ணனை கேட்டுப்பயந்தே போயிட்டேன்! இந்த ப்ரெட் லீங்கிற ஆளுக்கு நம்மளை மாதிரியே ரெண்டு காலுதான் இருக்குமுண்ணு நினைச்சிட்டிருந்தேன். ரேடியோவிலே "Brett Lee is bowling with one square-leg, one fine-leg, one backward square-leg and one forward short-leg"ன்னு சொன்னதும் ஒரு ஆளுக்கு மொத்தம் நாலு "leg"கான்னு எனக்கு பக்குன்னு ஆயிருச்சு! டிவியிலே பார்த்தப்புறம் தான் தெரிஞ்சுது ப்ரெட் லீக்கும் ரெண்டே ரெண்டு கால் தானுண்ணு. சரி, நம்ம கிரிக்கெட் அறிவுக்கு ஒரு சாம்பிள் சொல்லிப்புட்டேன். இனிமேல் விஷயத்துக்கு வருவோம்.

இந்த வருசம் ஐ.பி.எல்.போட்டி எல்லாத்தையும் சினிமாத் தியேட்டரிலே காட்டப்போறாங்கன்னு சொன்னதும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாரும் ரொம்ப அதிர்ச்சிக்குள்ளாகியிருக்காங்களாம். அதுக்கு அவங்க சொல்லுற காரணங்கள் இருக்கே, அதைப் படிக்கிறதுக்கு முன்னாலே ஒரு பரால்கான் மாத்திரையும், பாட்டில் தண்ணியையும் ரெடி பண்ணி வச்சுக்கோங்க! இதைப் படிச்சு ஒருத்தர் சிரிச்ச சிரிப்புலே சிறுகுடல் வாய்வழியா வெளியே வந்துருச்சுன்னா பார்த்துக்கோங்க! அவங்க பண்ணின காமெடி மாதிரி நம்மளாலே பண்ண முடியாதுன்னுறதுன்னாலும், ஏதோ என்னாலே முடிஞ்ச அளவு முயற்சி பண்ணியிருக்கேன்.

அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

அவங்க சொன்னது:

"விளையாட்டு என்பது உலகமெங்கும் உணர்வு பூர்வமான அங்கமாக உள்ளது. அதில் விளையாடுபவர்கள் கதாநாயகர்கள் அளவுக்கு கருதப்படுகின்றனர். அதற்கு காரணம் விளையாட்டு போட்டிகளில் தேசப்பற்று இருப்பது தான். தங்கள் நாடு ஜெயிக்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்ததால் விளையாட்டுகள் உயர்வாக மதிக்கப்பட்டன."

அவங்க சொல்லாதது:

"ஆனால், தமிழ் சினிமா அப்படியா? எங்களுக்கும் உணர்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதுன்னு ஆதாரபூர்வமாக யாராவது நிரூபிக்க முடியுமா? விளையாட்டுலே தேசப்பற்று இருக்கலாம்; ஆனால் நாங்க சமீபத்துலே அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணியிருக்கோமா? ரசிகர்கள் தங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்று விளையாட்டை உயர்வா மதிக்கிறா மாதிரி, நாங்க சினிமாவையும் ரசிகர்கள் உயர்வாக மதிக்க வேண்டும் என்று அனாவசியமாக எண்ணியிருக்கிறோமா? கிடையவே கிடையாது.கிரிக்கெட்டை தாத்தாவும் பேரனும் பக்கத்துலே பக்கத்துலே உட்கார்ந்து பார்க்கலாம். எங்க சினிமாவை பாட்டியும் பேத்தியும் பக்கத்துலே பக்கத்துலே உட்கார்ந்து பார்க்க முடியுமா?முடியவே முடியாது."

அவங்க சொன்னது:

"ஆனால் சமீப காலமாக அந்த நிலைமைகள் மாறி விட்டன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பெரிய பெரிய பணமுதலைகள் ஒருத்தருக் கொருத்தர் போட்டி போட்டு லாபம் சம்பாதிக்க நடத்த ஆரம்பித்து விட்டனர். தேசப்பற்றை இவர்கள் நாசமாக்கி விட்டார்கள்."

அவங்க சொல்லாதது:

"ஆமாம்! வர வர கிரிக்கெட்டும் எங்களுக்குப் போட்டியா தமிழ் சினிமா மாதிரியே மோசமாயிருச்சு. இங்கே தான் பணமுதலைகள் சினிமாக் கம்பனி ஆரம்பிச்சு, உருட்டி மிரட்டி எங்க படங்களை தவிட்டு விலைக்கு வாங்கி காசு பண்ணுறாங்கன்னு பார்த்தா, கிரிக்கெட்டுலேயும் இது ஆரம்பிச்சிட்டாங்க! இதுலே என்ன கொடுமைன்னா, எங்க சினிமாக்காரங்களிலேயே ஷாரூக் கான், ஷில்பா ஷெட்டி,ப்ரீத்தி ஜிந்தா மாதிரி நிறைய பணமுதலைங்க கிரிக்கெட்டை விலைகொடுத்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க! எங்களுக்குப் போட்டியா இவங்க வேறே தேசப்பற்றை நாசம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! நாங்கெல்லாம் பொழைப்பு நடத்துறதா வேண்டாமா? அவ்வ்வ்வ்!"

அவங்க சொன்னது:

"மரபணு மாற்றம் போல் சென்னை அணியில் பாகிஸ்தான் வீரர் என்றும், கொல்கத்தா அணியில் ஆஸ்திரேலிய வீரர் என்றும் விளையாட்டுகளை ஈனப்படுத்தி விட்டார்கள். இதன் மூலம் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது."

அவங்க சொல்லாதது:

"நாங்க தான் தமிழ்ப்படத்துலே தமிழே தெரியாத நடிகைங்களை நடிக்க வச்சோமுன்னா, இவங்க ஒரு படி மேலேயே போயிட்டாங்க! தமிழ் சினிமாவாலே மாணவர்கள் பள்ளி,கல்லூரியைக் ’கட்’ பண்ணிட்டு பகல்லே சினிமா பார்த்துத்தான் படிப்பைக் கெடுத்துக்கிட்டாங்க! இவங்க என்னடான்னா, கிரிக்கெட்டை தியேட்டருக்குக் கொண்டு வந்து மாணவர்களை வீட்டுக்கே "கட்" அடிக்க வைச்சிருவாங்க போலிருக்கே!"

"இதுவரை நாங்கள் மட்டும் தான் அரைகுறை உடைகளுடன் பெண்களை ஆடவிட்டுக்கொண்டிருந்தோம் என்றால், இப்போது இவர்களும் ’சியர் லீடர்ஸ்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளோடு, அயல்நாட்டுப்பெண்களை ஆடவிட்டு, சில்லறையை அள்ளத்தொடங்கி விட்டார்கள்."

அவங்க சொன்னது:

"இப்போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்புவது சினிமா, தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்."

அவங்க சொல்லாதது:

"அது மட்டுமல்ல. தமிழ் சினிமா ரசிகர்களையே மலை போல நம்பியிருக்கிற மருந்துக்கடை உரிமையாளர்கள், மனநல மருத்துவர்கள், பூச்சி மருந்து சில்லறை வணிகர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானவர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்."

அவங்க சொன்னது:

"மத்திய மாநில அரசுகள் சலுகைகள் வழங்கி திரைப்படத்துறைக்கு உயிரூட்டும் இந்த நேரத்தில் அத் தொழிலை நாசமாக்குவது போன்ற காரியங்கள செய்வதை ஏற்க மாட்டோம். தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதை முழு மனதோடு எதிர்ப்போம். இதுபற்றி அனைத்து சங்கத்தினர் கூடி ஆலோசிக்க உள்ளோம்."

அவங்க சொல்லாதது:

"எப்போதோ மோசமாக விளையாடுகிற கிரிக்கெட், எப்போதுமே மோசமாகப் படம் எடுக்கிற எங்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசும் மாநில அரசும் தலையிட்டு திரையரங்குகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதைத் தடை செய்யாவிட்டால், நாங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வேட்டைக்காரன் போன்ற எங்களது அரிய திரைப்படங்களைத் திரையிட நேரிடும் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்."

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன் சொன்னது: "தியேட்டர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவது சினிமா தொழிலை அழித்து விடும்,"

அவர் சொல்லாதது: "எந்தக் காலத்திலும் கிரிக்கெட் சினிமாவை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களை அழிக்க எங்களுக்கே தெரியும்."

கிரிக்கெட்டுக்கும் அரசியலுக்கும் இருக்கிற தொடர்பு எல்லாருக்கும் தெரிஞ்சது தான். இன்னும் சொல்லப்போனா, இந்திய கிரிக்கெட் வாரியத்தோட தலைவரு தான் இந்தியாவோட விவசாயத்துறை மந்திரி. அவரைக் கூப்பிட்டு "என்னங்க,விலைவாசியெல்லாம் இப்படி ஏறிடுச்சே, ஏதாவது செய்ய வேண்டாமான்னு," கேட்டா, அவரு "ஆமாம் சேட்டை, போன வருசம் அம்பது லட்சம் டாலருக்கு ஏலத்துக்கு எடுத்த கிரிக்கெட் வீரருக்கு இந்த வருஷம் எழுபத்தி அஞ்சு லட்சம் டாலர் கொடுத்திருக்கோம். விலைவாசி ரொம்பத்தான் ஏறிடுச்சு ஒரு வருசத்திலே,"ன்னு குறைப்பட்டுக்கிறாரு பாவம். ஹூம், அவர் கவலை அவருக்கு!

ஐ.பி.எல்.போட்டிகள் திரையரங்குகளில் வெளியாகுமா? இதைச் சாக்கிட்டாவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்ச நாள் சாபவிமோசனம் கிடைக்குமா?-ன்னு சிலர் முணுமுணுத்திட்டு இருக்காங்கன்னுறது இன்னொரு விஷயம். ஆனால்.....

இந்தியாவில் மக்களை மகிழ்விக்கிற கிரிக்கெட், சினிமா இரு துறைகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, விரைவிலேயே சென்னையில் இன்னொரு பாராட்டு விழா நடைபெறலாம் என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிச்சமிருக்கிறது அரசியல் மட்டும் தானே, மூணையும் போட்டு ஒரேயடியா குழப்பறதுக்கு நம்ம நாட்டுலே பாராட்டு விழாவைத் தவிர வேறே என்ன வழியிருக்கு சொல்லுங்க!

பின்குறிப்பு: என்ன சேட்டை, உங்களோட முந்தைய பதிவு மாதிரி இதுலே சிரிப்பு வரலியேன்னு கேட்காதீங்க! சினிமாக்காரங்க கூட காமெடி பண்ணி நம்மாலே ஜெயிக்க முடியுங்களா? இதை விட சிரிக்கணுமுன்னு பேராசைப் பட்டீங்கன்னா, ஒரிஜினல் அறிக்கையைப் பேப்பரிலே படிச்சுக்கோங்க! சிரிப்புக்கு நான் கியாரண்டி!

Thursday, February 18, 2010

அப்பா என்றால்....?


அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால்...? அழுத்தமாக இருக்குமோ? அப்பாவாக இருப்பதற்கு கண்டிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான தகுதி என்ற மாயை ஆண்களை ஆட்டுவிக்கிறது போலும். சில குடும்பங்களில் அம்மா எப்பொழுதும் போல இளகிய மனதுடன், பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசுகிற பலவீனமான வழக்குரைஞராக இருப்பதும், தகப்பனார்கள் கண்டிப்பான நீதிபதிகளைப் போல தங்களைக் காட்டிக்கொள்ள மிகவும் மெனக்கெட்டு முயற்சிப்பதும் கண்கூடு. ஆனால், நிறைய அப்பாக்களுக்கு தங்களது கண்டிப்பானவன் என்ற அவதாரம், பிள்ளைகளிடமிருந்து விலக்கி வைத்து விட்டதோ என்ற ஒருவிதமான குற்ற உணர்ச்சியை அல்லது உறுத்தலை உண்டாக்கி விடுகிறதோ என்று சில முகங்களைப் பார்த்து ஒரு எண்ணம் ஏற்படுவதுண்டு. இன்று காலையில் எதையோ தேடியபோது, அக்கா திருமணத்தில் எடுத்த புகைப்படத்தைப் பார்த்ததும், வழக்கத்துக்கு மாறாக அப்பாவின் முகத்தில் எனது கண்கள் அதிக நேரம் நிலைத்தன.

பிள்ளைப்பருவத்திலே ஒரு நாள் இரவு! அப்பாவின் விரல்கள் தலைகோதி விட்டுக்கொண்டிருந்தன.

"என்னப்பா?"

"தூக்கத்துலே உளறிக்கிட்டு இருந்தே!"

"நான் இன்னும் தூங்கவேயில்லியேப்பா!"

அரையிருட்டில் அப்பா எழுந்து போவதைப் பார்த்தபோது, அன்று காலையில் அவரிடம் அடிவாங்கியதை அவரது சொறசொறப்பான விரல்கள் அளித்த சுகத்துக்காக மறந்துவிடலாம் போலிருந்தது. உறங்குவது போல நடித்திருந்தால் இன்னும் சிறிது நேரம் அப்பா தொடர்ந்து கோதி விட்டிருப்பாரோ என்று கூடத் தோன்றியது. ஆனால், நாட்பட நாட்பட...

ஒவ்வொரு இரவும் கால்மேல் கால் போட்டபடி, அவர் பீடி பற்றவைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பது தெருக்கூத்து ராஜாக்கள் போடுகிற வேஷத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல என்று புரிய சில காலம் பிடித்தது. பிள்ளைகள் வளர்ந்ததும் அப்பாவை விட்டு நிறையவே விலகி விடுகிறார்கள் போலத்தோன்றுகிறது. அதன் காரணமாகத் தான் அவர்களிடம் காணப்படுகிற எரிச்சல்களும், கோபங்களும்....

"சின்னப்புள்ளை...சோத்தை ஊட்டுறிகளோ?" அப்பாவின் இந்தக் கேள்வியில் ஏளனத்தை விடவும் ஏக்கமே அதிகம் இருக்குமோ? எவ்வளவு வளர்ந்தாலும் அம்மாவின் அண்மையில் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறதைப் பார்க்கிற அப்பாக்கள், ஏன் ஆணாகப் பிறந்தோம் என்று யோசிப்பார்களோ?

அண்ணன்,அக்கா,தங்கை,அம்மாவென்று கலகலவென்று பேசிக்கொண்டிருக்கையில் அப்பா செருப்பைக் கழட்டுகிற சத்தம் கேட்டதும் வீட்டில் அமைதி கும்மிருட்டாய்ப்படரும். குடையை மாட்டி விட்டு உள்ளே போகிற அப்பா, அறையை விட்டு வெளியே வருகிறபோது அவர் அம்மாவைப் பார்க்கிற பார்வையில் கொஞ்சம் பொறாமையிருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனாலும் அடர்த்தியான மீசை, இறுக்கமான முகம், கணீரென்ற குரல் என்று இயல்பாக அமைந்துவிட்ட ஒப்பனைக்குள்ளே பிள்ளைகளின் விரல்தொட வேண்டும் என்ற ஒரு குழந்தைத்தனமான ஏக்கம் அவருக்கு இருந்து வந்திருக்க வேண்டும்.

சென்ற ஞாயிறன்று, வழக்கம்போல தெருவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த அந்த சிறுவன் வீசிய வீச்சில் அவன் கையிலிருந்த மட்டை நழுவிப்பறந்துபோய், வேகமாக வந்த ஒரு கால்டாக்ஸியின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தது. அடுத்த சில நிமிடங்கள் தெருவே அல்லோலகல்லோலப்பட்டது. ஏதோ பணம் கொடுத்து விஷயத்தை சுமுகமாக முடித்திருப்பார்கள் போலும். ஆனால், விளையாட்டு வினையானதோடு வெட்டிச்செலவையும் ஏற்படுத்தி விட்டதே என்று அந்தச் சிறுவனின் அப்பாவுக்கு ஆற்றாமையும் கோபமும் ஏற்பட, எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கவே அவனை நையப்புடைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் கழித்து அந்த சிறுவன் கதவருகேயே நின்று கொண்டிருப்பதையும் பார்த்தேன். ஆனால், வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது அவனைக் காணவில்லை.

கண்டிப்பாக அவன் வீட்டுக்குள் இருப்பான் என்று தெரியும். இன்னொன்றும் தெரியும், அந்தச் சிறுவன் அயர்ந்து உறங்கியதும், உறக்கம் வராத அவனது அப்பா எழுந்து வந்து அடித்த கையாலேயே அவனது தலைமுடியைக் கோதிவிட்டிருப்பார்; அவனது தூக்கத்தைக் கலைக்காமல் உச்சிமோந்திருப்பார். வாய்விட்டு மன்னிப்புக் கேட்பதற்கு அப்பா என்ற அழுத்தம் இடமளிக்காது என்பதால் குழந்தையின் விரல்களைப் பிடித்துக்கொண்டு அப்படியே அவனது முகத்தை இருட்டை ஊடுருவியபடி வெறித்துப் பார்த்திருந்திருப்பார்.

அப்பாக்கள் ஒரு விஷயத்தில் மிகவும் சிக்கனமானவர்கள்; இரண்டு சொட்டுக்கண்ணீர் என்றாலும் அதை யாருக்கும் தெரியாமல் இருட்டில் தான் சிந்துவார்கள். என் அப்பாவைப் போல!

Wednesday, February 17, 2010

வாங்க, கணக்குத் தொடங்கலாம்


முன்னெல்லாம் பணம் போட எடுக்கத் தான் வங்கி நடத்துனாங்க. பின்னாலே, ஜனத்தொகையும், வாகனங்களும், வியாதியும் அதிகமானதும் இரத்த வங்கி ஆரம்பிச்சாங்க! அப்புறம் கொஞ்ச நாள் போனதும் கண் வங்கி வந்துச்சு! தொடர்ந்து உடலுறுப்பு ஒவ்வொண்ணுத்துக்கும் வங்கி வந்தாச்சு! சமீபகாலமா பெரிய நகரங்களிலே ஸ்டெம்செல் வங்கிகளும் ஆரம்பிச்சிட்டாங்களாம். சரி, இதெல்லாம் ஆரம்பிச்சதோட விட்டாங்களான்னு பார்த்தா, பிப்ருவரி 14-ம் தேதி நம்ம சென்னையிலே (வேறெங்கெ?) புதுசா "காதல் வங்கி,"ன்னு தொடங்கியிருக்காங்க!

போனாப்போவுது, நாமளும் ஆதரவு கொடுக்கலாமேன்னு ஒரு கணக்கு ஆரம்பிக்கப்போனா, அது கல்யாணமானவங்களுக்காம். காதல் வங்கி.....கல்யாணமானவங்களுக்கா....???ஆனந்த பவனுக்குப் போயி ஆட்டுக்கால் சூப்பு கேட்குறா மாதிரியில்லே? அத விடுவோம்; விஷயத்துக்கு வருவோம்.

இவங்க அனுமதிக்காட்டி என்ன, கல்யாணமாகாதவங்களுக்காக, இந்தியத்துணைக்கண்டத்துலேயே முதல் முறையாக நாம ஒரு "காதல் வங்கி" ஆரம்பிச்சா என்னான்னு நேத்து சென்னையிலே கூட்டு வண்டியெல்லாம் லேட்டு வண்டியானதுனாலே, ரயில்வே பிளாட்பாரத்துலே கடலை சாப்பிட்டுக்கிட்டிருக்கிறபோது ஒரு யோசனை தோணிச்சு!

நாம ஆரம்பிக்கப்போற காதல் வங்கியோட செயல்பாடே வேறே! அதாவது....

1. காதலிக்கிறவங்க, காதலிக்கணுமுன்னு நினைக்கிறவங்கன்னு கல்யாணம் ஆகாதவங்களைத் தவிர யாரு வேண்ணாலும் இங்கே கணக்கு ஆரம்பிக்கலாம்.

2. காதலர்கள் எல்லாரும் இந்த வங்கிக்குப் போயி, ஒரு படிவத்தைப் பூர்த்தி பண்ணி, தாங்கள் காதலர்கள் தான் என்பதற்கு அத்தாட்சியாக காதல் கடிதங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொடுத்துட்டா உடனே ஒரு சேமிப்புக்கணக்கு ஆரம்பிக்கலாம். இதெல்லாம் இல்லாதபட்சத்துலே, எக்கச்சக்கமாக செலவு செஞ்சிட்டு எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு முழிக்கிற காதலர்கள் தங்களோட கிரெடிட் கார்டு பில், டெலிபோன் பில், மார்வாடி கடை ரசீது, ஆஸ்பத்திரி பில் போலீஸ் ஸ்டேஷன் எஃப்.ஐ.ஆர்.நகல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றில், ஏற்கனவே காதலித்துத் திருமணம் செய்த தம்பதிகள் கிட்டே அட்டெஸ்ட் பண்ணி வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் போதும் - உடனே சேமிப்புக்கணக்கைத் தொடங்கிடலாம்.

3. காதலர்கள் தங்களோட சேமிப்புக்கணக்கிலே எவ்வளவு பணம் சேர்க்கிறாங்களோ, அதற்கு இரண்டு பங்கு தொகை அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா திரும்பித் தரப்படும். கல்யாணப்பத்திரிகையை வங்கி மேலாளரிடம் கொடுத்தால், அவரே காய்கறி தொடங்கி, மண்டபம் வரை எல்லாவற்றிற்கும் இருக்கிற சேமிப்புக்கணக்கிலிருந்து 10.80 % சதவிகிதம் சேவை வரியைப் பிடித்துக்கொண்டு பட்டுவாடா செய்து விடுவார்.

4. கல்யாணத்திற்குப் பிறகும் அவர்கள் தொடர்ந்து காதலித்தால், அதாவது தங்களது சேமிப்புக்கணக்கைத் தொடர்ந்தால், முதல் பிரசவத்திற்கும் வங்கியே முழுச்செலவையும் ஏற்றுக்கொள்ளும்.

5. வசதியான காதலர்கள் என்றால், சேமிப்புக்கணக்குக்குப் பதிலாக, ஃபிக்ஸட் டெப்பாசிட்டும் செய்யலாம். இதற்கு வருடத்திற்கு மூணே முக்கால் சதவிகிதம் வட்டியும் கிடைக்கும்.

6. இதுவரைக்கும் காதலிக்காதவங்க வங்கியிலே போய் தங்களது பெயர்,வ்யது,வசதி,விருப்பம் எல்லாவற்றையும் தெரிவித்தால், அவர்களுக்கு ஏற்ற ஜோடி வரும்போது வங்கியிலிருந்து பதிவுத்தபால் அனுப்பித் தெரிவிப்பார்கள். தனியா இருந்த இரண்டு பேரும் காதல் ஜோடியானதுனாலே அவங்களோட சேமிப்புக்கணக்கு உடனே ஆரம்பிக்கப்படும். ஆனா, இந்த மாதிரி வங்கியே ஏற்பாடு பண்ணுற காதல் ஜோடிகள் முதல் மூணு மாதங்கள் கட்டுகிற பணம் வங்கிக்கே சொந்தமாகும்.

6. ஓரு வேளை காதலர்கள் பிரிந்துவிட்டால், வேறு எவரையோ திருமணம் செய்து கொண்டுவிட்டால், கணக்கில் உள்ள பணமெல்லாம் வங்கிக்கே சென்றுவிடும்.

7. காதல் ஜோடியில் யாராவது ஒருவர் மற்றவரைக் கழற்றி விட்டு இன்னொருவரைத் தேர்ந்தெடுத்தாலும் கணக்கு முடக்கப்படும்.

இப்படியொரு வங்கியை ஆரம்பிச்சா, போட்ட முதலை ஒரே வருஷத்துலே கண்டிப்பா எடுத்திரலாம். ஏன்னா, நூற்றுக்குத் தொண்ணூறு காதலர்கள் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க; அவங்க சேமிப்பெல்லாம் வங்கிக்கே வந்திரும். அதே மாதிரி, வங்கியே ஏற்பாடு பண்ணுற காதலும் மூணு மாசம் தாக்குப்பிடிச்சாலே அதிகம். ஆக, அந்தப்பணமும் வங்கிக்குத்தான். எப்படிப் பார்த்தாலும் லாபம் தான்!

நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு புரியுது! உடனே என்னோட ஐடியாவைப் பயன்படுத்தி வங்கி ஆரம்பிச்சு சுருக்குன்னு கொஞ்சம் காசுபணத்தைப் பார்த்துப்புடலாமுன்னு யோசிக்கறீங்களா? அது தான் முடியாது. இதுக்கு நான் ஏற்கனவே காப்பி ரைட் வாங்கிட்டேன். அடுத்த பிப்ருவரி 14-க்குள்ளே காதல் சேட்டை வங்கியோட கிளைகள் தமிழகமெங்கும் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும்.

காதலுக்காக எதையோ செஞ்ச மாதிரியும் இருக்கும்; கொஞ்சம் காசுபணம் பண்ணினா மாதிரியும் இருக்கும். நம்ம ஊருலே தான் காதலை வச்சுக் காயலான்கடை ஆரம்பிச்சாலும் காசுமழை கொட்டுதா இல்லையா?

ஆகையினால், இனிவரும் காலங்களிலே உங்களுக்கு இப்படி போன் வந்தாலும் வரலாம்.

"நாங்க நியூ லவ் பேங்கிலிருந்து பேசறோம் சார். எங்க பேங்குலே ஒரு புது ஸ்கீம் அறிமுகம் பண்ணுறோம் சார்! நீங்க எங்க பேங்கிலே அக்கவுண்ட் ஆரம்பிச்சு மூணு மாசம் காதலிச்சாப் போதும் சார்! அப்புறம் கல்யாணம் வரைக்கும் பணமே கட்ட வேண்டாம். கண்டிஷன்ஸ் அப்ளை...!"

சில பேருக்கு எரிச்சல் வரலாம்.

"அம்மா! ஆள வுடுங்க! தமிழ் சினிமா பார்த்துப் பார்த்து எனக்கு காதல்னாலே வேப்பங்காய் மாதிரி கசக்குது!"

"நோ பிராப்ளம் சார்! உங்களுக்கு எப்போ காதலிக்கணுமுன்னு தோணினாலும் எங்க டோல் ஃப்ரீ நம்பருக்கு ஒரு போன் பண்ணுங்க சார்! வித்தின் ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸ் எங்க எக்ஸிக்யூட்டிவ் உங்களை வந்து சந்திப்பாரு! ஹேவ் ய நைஸ் டே சார்!"

இப்படியெல்லாம் ஏன் சேட்டை யோசிக்கிறேன்னு கேட்கறீங்களா? நானாவது லொள்ளு பண்ணிட்டிருக்கேன். உண்மையிலேயே ஆரம்பிச்சிருக்காங்களே, அவங்களுக்கு என்ன சொல்லப்போறீங்க? :-)))

Tuesday, February 16, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.02


அப்பாடியோவ்! வலைப்பதிவர்களுக்கு ஜோசியம் சொன்னாலும் சொன்னேன், பன்னிரெண்டு மணிநேரத்துக்குள்ளே தமிலீஷிலே பாப்புலர் ஆயிட்டோமில்லா? எல்லாருக்கும் முதல்லே நன்றிங்க!!

இப்பொழுது, ரிஷப ராசி வலைப்பதிவர்களுக்கான பலன்களைப் பார்க்கலாமா?

ரிஷப ராசிக்காரர்களுக்கு கற்பனை எக்கச்சக்கமாக இருக்கும். அவர்கள் மனது வைத்தால் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் சட்டென்று முடிச்சுப்போட்டு சக்கையாக ஒரு பதிவை எழுதும் திறமைபடைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களது சிறப்பம்சம் என்னவென்றால், பதிவைப்போட்டு விட்டு பத்து நிமிடங்களேயானதும் எத்தனை பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன, தமிழ்மணத்தில் நம் பதிவின் பெயரும், நமது பெயரும் முகப்பிலே இருக்கிறதா என்று பதட்டப்பட்டுப் போய்ப் பார்க்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் பதிவுக்கு அவர்களே கூட மதிப்பெண்கள் கொடுக்க மாட்டார்கள். (க்கும்...கொடுத்திட்டாலும்...!)

சிலரிடம் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்களது பதிவு குறித்துக் கேட்டால், "அப்படியா? என்னுடைய பதிவா? நன்றாக இருந்ததா?" என்று அப்பிராணியாகக் கேட்பார்கள். அசந்து மறந்து யாராவது பின்னூட்டம் போட்டாலும், அதற்கு நன்றி கூறுகிறேன் பேர்வழி என்று உடனடியாக கணினி முன் உட்கார மாட்டார்கள். இவர்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்களும், இவர்களைப் போலவே ரிஷப ராசிக்காரர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், "சே, வேலை மெனக்கெட்டு கருத்து எழுதி, மார்க்கும் போட்டா, ஒரு நன்றி கூட போடலியா இந்தாளு?" என்று வாசகர்கள் பிற வலைப்பதிவுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.இதன் காரணமாகவோ என்னவோ இவரது பதிவுகளுக்கு தாய்மார்களின் ஆதரவு பெருமளவு கிடைக்காது.

ஆனால், இந்த ராசிக்காரர்கள் அலுக்காமல் சளைக்காமல் தொடர்ந்து பதிவுகளைப் போட்டு ஓராண்டுகளுக்குள்ளே ஒரு லட்சம் ஹிட்டுக்களைப் பெற்று விடுவார்கள் என்பதே இவர்களின் சிறப்பு. இதற்கு முக்கியமான காரணம், இவர்களின் பதிவுகள், அவை மொக்கையாகவே இருந்தாலும் கூட இவர்களது சுயமான சிந்தனையாக இருக்கும். பெரும்பாலும் இவர்கள் அகிரோ குரோச்சேவாவின் சினிமா குறித்த சிந்தனை பற்றியோ, சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகளைப் பற்றியோ எழுதாமல், தானே யோசித்து நிறைய கேள்விக்குறிகளெல்லாம் போட்டு பல புனைவுகளைப் படைக்கவல்லவர்கள் ஆவர்.

இந்த ராசிக்காரர்கள் இனிவரும் நாட்களில் கொஞ்சம் யோசித்தாலும் நிறைய எழுதுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவர்களது வழக்கமான வாசகர்களுக்கு எப்படியோ, இவர்களுக்கு இந்தப் பதினைந்து நாட்கள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கும். தமிழ்மணம், தமிலீஷில் இதுவரை மொத்து வாங்கியவர்கள் கூட பத்து வாங்குகிற வாய்ப்புக்கள் இருக்கின்றன.

"அகப்பட்டவருக்கு அஷ்டமத்துலே சனி; ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு," என்பார்கள். இதை விளக்க வேண்டுமென்றால், சேட்டைக்காரனின் பதிவுகளுக்கு வருபவர்களையும், வராதவர்களையும் முறையே பழமொழியின் முன்பாதியோடும், பின்பாதியோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் எளிதில் விளங்கும்.

ஆகவே, ரிஷப ராசி வலைப்பதிவர்களுக்கு இனிவரவிருக்கிற சில நாட்களில் பெரும்புகழ் ஏற்படும். பலருக்கு லீவு போட்டுப் பின்னூட்டங்களுக்கு நன்றி எழுத வேண்டி வரலாம். இதுவரை சுயமாகச் சிந்தித்து சிந்தித்துப் பல பதிவுகளை எழுதிய நீங்கள் இனிமேல் சிந்திக்காமலே பதிவுகளை எழுதப்போகிற பொற்காலம் இதுவாகும். இதுவரை படித்து விட்டு ஒன்றுமே புரியாவிட்டாலும் "அற்புதம்," என்று பின்னூட்டம் போடுபவர்கள், இனிமேல் படிக்காமலே "அற்புதம்...அற்புதம்," என்று இரட்டிப்புப் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள். இந்தப் பதிவர்களின் ஹிட்-கவுன்ட்டர்களில் இலக்கங்களைப் பார்த்துப் பல பதிவர்களுக்கு கலக்கம் ஏற்படும்.

"இந்த வலைப்பதிவே வேண்டாம்; நான் போறேன்," என்று லூலூலாயீ செய்தவர்களின் பதிவுகளும் ஹார்லிக்ஸ் குழந்தைகள் போல உற்சாகமாக நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமாக வலம் வருவர்.

மொத்தத்தில் ரிஷபராசிக்கார வலைப்பதிவாளர்கள் எவரேனும் நண்பராக இருந்தால், அவர்களது வலைப்பதிவுகளுக்கு ஏனைய ராசிக்காரர்கள் சென்று வருதல் அவரவர் ஹிட்-கவுன்டர்களுக்கும் அனுகூலமாயிருக்கும்.

(ரொம்ப பயமுறுத்தாதீங்க! கொஞ்சம் குறைச்சுக்கோங்கன்னு பெருவாரியான வாசகர்கள் (?) கேட்டுக்கொண்டதற்கிணங்க, இயன்றவரை சுருக்கமாகத் தந்திருக்கிறேன்)

Monday, February 15, 2010

ஜீரகசிந்தாமணி



தெரியாத்தனமாக நான் வலைப்பதிவு ஆரம்பிச்சிருக்கிறதையும், நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணிகிட்டே சொல்லிட்டேன். அவுங்க பேரு சிந்தாமணி! எங்க ஆபீசிலே அவங்களை எல்லாரும் "ஜீரகசிந்தாமணி"ன்னு தான் கூப்பிடுவாங்க! அனேகமா அவங்க காப்பி,டீ தவிர எதுவாயிருந்தாலும் "ஜீரகம் போட்டிருந்தா நல்லாயிருக்கும்,"னு சொல்லுவாங்க!

"நல்லாயிருக்குடா உன்னோட ப்ளாக்; சராசரியா ஒரு நாளைக்கு நூறு பேர் வர்றாங்க போலிருக்கே?"ன்னு ஆச்சரியமாக் கேட்டாங்க! இருக்காதா பின்னே, ஜக்குபாய் ஈ ஓட்டிக்கிட்டிருக்கிறபோது மக்குபாய்க்கு தினம் நூறு பேர் வர்றது ஆச்சரியம் தானே?

இன்னிக்கு அம்மணி வூட்டுக்குப் போனதும் அவங்க புருஷன் துணையோட வலைப்பதிவு போட்டிருவாங்கன்னு பட்சி சொல்லிச்சு! சிந்தாமணி அம்மாவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவங்க தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவங்க வேலை பார்க்கிறாங்களா இல்லே தோசை வார்க்குறாங்களான்னு சந்தேகமாயிருக்கும். அதுனாலே அவங்க புருஷனோட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ஒரு பதிவை ஆரம்பிச்சிருவாங்கன்னு என் மனசுக்குப் பட்டுது. ரூமுக்கு வந்து நான் கண்ணை மூடினதும் சிந்தாமணியும் அவங்க புருஷனும் கணினி முன்னாடி உட்கார்ந்துகிட்டு வலைப்பதிவை ஆரம்பிக்கிற அந்தக் கண்கொள்ளாக்காட்சி எந்த விளம்பர இடைவேளையும் இல்லாம எனக்குத் தெரிய ஆரம்பிச்சது.

அது மட்டுமா? சிந்தாமணியோட கணவர் சிந்தினமணி மனசுக்குள்ளே என்னென்ன நினைக்கிறாரோ அதெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பிச்சிருச்சு. அவர் நல்ல நாளிலேயே பேச மாட்டாரு; போதாக்குறைக்கு அன்னிக்கு சிந்தாமணி "ஜலந்தர் ஜவ்வரிசி உப்புமா" பண்ணியிருந்தாங்க! (சாதாரண ஜவ்வரிசி உப்புமா தானுங்க, அது பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜலந்தர் மேலே போட்டுட்டாங்க.) ஜ.ஜ.உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து சிந்தினமணி குசேலன் படத்துலே பசுபதி மாதிரி பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தாரு பாவம்.

"முதல்லே சிம்பிளா ரவா உப்புமா செய்வது எப்படீன்னு போடலாங்களா?"

"ம்" அதுக்கு மேலே சிந்தினமணியாலே வாயைத் தொறக்க முடியலே! ஜ.ஜ.உப்புமாவோட ஜாலம்!

அம்மணிக்குத் தமிழிலே தட்டச்சு செய்ய முடியாதுன்னுறதுனாலே சிந்தினமணி தான் பண்ணியாகணும். அவரு மனசுக்குள்ளே என்னை வாயிலே வந்தபடி திட்டிக்கிட்டே சிந்தாமணி சொல்லச் சொல்ல தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!

"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"

"சாப்பிட ரெண்டு பேர்!" சிந்தினமணி மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!

"ஏதாவது சொன்னீங்களா?" சிந்தாமணி கேட்குறாங்க. சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!

"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரபண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"

"ரொம்ப முக்கியம்...," இது சிந்தினமணியோட மனசாட்சி.

"வாணலி...."

"----------"

"ஐயோ, வானொலி இல்லீங்க...வாணலி.! இலுப்புச்சட்டி...உங்க தலையை மாதிரி இருக்குமே...!"

இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ சிந்தின மணி பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு! இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!

ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!

"பாம்பே ரவை!"

"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை," இது சிந்தினமணியின் மனசாட்சி.

"வெங்காயம்..."

"நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."

"தக்காளி!"

"க்கும்..கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"

"உருளைக்கிழங்கு..."

"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"

"கேரட்!"

"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"

"பட்டாணி!"

"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."

"பச்சை மிளகாய்...இஞ்சி...கருவேப்பிலை..கொத்தமல்லி..."

"அட, சுக்கு,மிளகு,திப்பிலியெல்லாத்தியும் விட்டுட்டாளே!"

"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"

"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் எங்களைத் தாளிக்கறீங்களே, போதாதா?"

"கடுகு,கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."

"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"

"ஜீரகம்....!"

"அதானே பார்த்தேன்!"

"ரீஃபைண்டு ஆயில்..."

"என்ன வெலை விக்குது தெரியுமா?"

"தேவையான அளவு உப்பு!"

"சொரணையிருக்கிறவங்களுக்கு மட்டும்!"

"தண்ணீர்..."

"சாப்பிடறதுக்கு முன்னாலேயும் அப்புறமும் அவங்கவங்க தலையிலே தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."

"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"

"ஆமாமா, சாப்பிடறதுதான் கஷ்டம்."

"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."

"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."

"கொஞ்சமாக எண்ணையை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."

"புருசனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."

"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."

"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"

"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."

"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"

"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."

"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."

"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."

"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."

"பச்சை மிளகாயைக் கீறவும்..."

"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."

"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."

"முதல் பதிவுலேயே இவ்வளவு வயலன்ஸ் தேவையா...?"

"கருவேப்பிலை,கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."

"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"

"வாணலியிலே எண்ணையை விட்டு....."

"திரும்ப முதல்லேயிருந்தா....?அவ்வ்வ்வ்வ்.....!"

"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம்,வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு....."

"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே....!"

"பொன்னிறமானதும்....."

"அதைக் கொண்டு போய் வும்மிடியிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."

"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."

"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்...ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."

"பட்டாணி,தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."

"ஆமா...அப்பத்தான் உப்புமா ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."

"கருவேப்பிலை கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."

"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"

"ரவையை மெதுவாகக்கிளறிக்கிட்டே இருக்கணும்..."

"இந்த சமயத்துலே எதிர்வீட்டு சினேகிதிக்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."

"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."

"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."

"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."

"எதை? ஆவியையா....?"

"சூடான சுவையான உப்புமா தயார்!"

"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீக! சூடா இருக்குமுங்கிறத வேண்ணா ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"

"உங்களுக்கு இந்தக் குறிப்பு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடவும்..."

"ஆமா, இவ பண்ணுற உப்புமாவுக்கு ஓட்டுப்போட்டு பார்லிமெண்டுக்கு அனுப்புவாங்க...."

"இது முதல் பதிவு என்பதால் வெறும் குறிப்போடு நிறுத்திக்கொள்கிறேன். அடுத்த பதிவிலே பதார்த்தத்தின் போட்டோவும் இடம்பெறும்."

"அதை அப்புறம் பார்க்கலாம். இதைப் படிச்சுப்பார்த்திட்டு, செஞ்சு தின்னுப்புட்டு, நாளைக்கு பேப்பரிலே எத்தனை பேர் போட்டோ வரப்போவுதோ...?"

******

எனது ஞானதிருஷ்டி கலைந்தது. அனேகமாக, இன்னேரம் ஜீரகசிந்தாமணியின் வலைப்பதிவை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஹலோ, ஓடாதீங்க.....! நில்லுங்க....! ஒண்ணும் பண்ண மாட்டேன்.

Saturday, February 13, 2010

வலைப்பதிவாளர் ராசிபலன்.01



(பாசத்துக்குரிய அண்ணன் பட்டா பட்டி அவர்கள் எனது மண்ணடிச்சிந்தனைகள் பதிவைப் படித்ததோடு, இன்னும் எழுத வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதைத்தொடர்ந்து, எனது மின்னஞ்சல் பெட்டி இதுபோன்ற மின்னஞ்சல்களால் முன்பதிவு செய்யப்படாத இரயில் பெட்டி போல நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. {நீங்க வந்து பார்க்கவா முடியும்?}. எனவே, எனது ஜோசிய அறிவை (?) உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கென்றே வலைப்பதிவர்களுக்கான இந்த ராசிபலனை எழுதியுள்ளேன். வருகிற 15-02-2010 தொடங்கி 28-02-2010 வரையிலுமான நாட்களுக்கான, வலைப்பதிவர்களுக்கான சிறப்பு ராசி பலன்கள் இவை. உலகிலேயே வலைப்பதிவர்களுக்கென்று முதல் முதலாக எழுதிய பெருமை உங்களது ஆசியால் எனக்குக் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதை எண்ணுகையில் எனது உள்ளம் பூரிக்கிறது)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசிக்கான பலன்களும், பரிகாரங்களும் விபரமாக அளிக்கப்படும். இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் விபரீதம் (இதையும் விட!) நிகழ்ந்தால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல. இனி, ஒவ்வொரு ராசியாகப் பார்க்கலாமா? முதலில்....மேஷம்!

மேஷராசி அன்பர்களே!

வலையுலகில் பரமசாதுவாக இருந்தாலும், முன்னணி வலைப்பதிவாளர்களின் பதிவுகளை ஒன்று விடாமல் படிக்காமல் இருக்க மாட்டீர்கள். மிகுந்த சமூக அக்கறையோடு எழுதும் வழக்கமுள்ள நீங்கள் அண்மைக்காலமாக அடிக்கொருதடவை "பின்நவீனத்துவம்," என்ற வார்த்தையைப் பிரயோகிப்பவர்கள். ஆயிரத்தில் ஒருவன் விமர்சனத்திலிருந்து அணுஆயுதப்பரவல் தடைச்சட்டம் வரைக்கும் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து குறைந்தபட்சம் ஒரு பின்னூட்டமாவது படித்திருப்பீர்கள். சக பதிவர்களின் ஆலோசனைகளைப் படித்து "மிக்க நன்றி" என்று பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போட்டாலும், அவர்கள் சொல்வதை ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியாக வெளியேற்றுவதில் நீங்கள் வல்லவர்கள். பொதுவாக தட்டச்சு செய்தபிறகு, அதை ஒரு முறை படித்துப் பார்க்கிற வழக்கம் இல்லாத நீங்கள், அது குறித்து யாரும் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினாலும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்.

உங்கள் வலைப்பதிவிற்கு ரெகுலராக வந்து மார்க் போடுகிறவர்களை நீங்களும் கைவிடாமல் அவரவர் பதிவுகளைப் படித்து போனால் போகிறது என்று மார்க் அளிப்பவர்கள். பெரும்பாலும் மொக்கை போடுவதைத் தவிர்ப்பதை வழக்கமாக வைத்திருப்பீர்கள் என்றாலும், ஒரு முறை மொக்கை போடத் தொடங்கினால், அதிலே தொடர்ந்து சக்கை போடு போடுவீர்கள்.

பிறரது பதிவுகளைப் படித்து அதிலுள்ள சிறப்பான விஷயங்களை அடைப்புக்குறியில் போட்டு அவரைப்பாராட்டும் உங்களால் சில சமயங்களில் உங்களது படைப்புக்களில் சிறப்பான விஷயங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக அமையக்கூடும். இந்த ராசிக்கு சொந்தக்காரர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து கொண்டு மொக்கை போடுவதை, மன்னிக்கவும், வலைப்பதிவு நடத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

தினசரி காலையில் எழுந்ததும் இன்று யாரைத்திட்டலாம், அதாவது, எதைப் பற்றி எழுதலாம் என்று சதா யோசனையிலேயே இருப்பீர்கள்.(சதா யோசனை என்றால் நடிகை சதாவைப் பற்றிய யோசனையல்ல; எப்போதும் எனப் பொருள் கொள்க!). இதனாலேயே உங்களுக்கு நிறையவே கோபம் வரும். (அதை இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் காட்டி விட வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறேன்)

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உங்களது நண்பர்கள் முதலில் உங்களது வலைப்பதிவுக்கு வந்து உங்களது கருத்து என்னவென்று அறிந்து கொண்டபின்னரே, தமது வலைப்பதிவில் எழுதுவார்கள்.

இதுவரை 5-ல் இருந்த சனி இப்போது பக்கதிலேயே ஆறாம் இடத்துக்கு வருவது யோகம்தான். கன்னியில் நிற்கும் சனி 3-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 10-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார். இவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்பதை உங்களது பதிவுகளை எழுதும்போது நீங்கள் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.

இந்த ராசிக்காரர்களின் கூகிள் ஐ.டி.சில சமயங்களில் களவாடப்படலாம். எப்போதும் ஒரு இனம்புரியாத சோர்வாக இருப்பீர்கள் என்பதால், நிறைய காதல் கவிதைகள் எழுத வாய்ப்பிருக்கிறது.

உங்கள் வலைப்பதிவிலிருந்து ஒற்றியெடுத்த விஷயங்களைச் சற்றே ஒப்பேற்றி தங்களது பதிவிலே போடுகிறவர்களை ஆறாம் இடத்திலிருக்கிற சனி சரியாகக் கவனித்துக்கொள்வார். நீங்கள் தமிழ்மணம் நட்சத்திரமாகிறபோது உங்களது உண்மையான பின்னூட்ட சிகாமணிகள் மாத்திரமே உங்களுடன் இருப்பார்கள். உங்களது படைப்புக்களை (?) தவறாகப் பயன்படுத்தியவர்களின் வலைப்பதிவுகள், அவர்களது கூகிள் ஐ.டி.களவாடப்படுமென்பதால் செயலற்று விடுகிற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

உங்களது இயல்பான கோபமும் சற்றே தணிந்து, நிறைய சர்தார்ஜீ ஜோக்குகள், தமிழக அரசியல் செய்திகள் என்று வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற பல பதிவுகளை நீங்கள் படைப்பீர்கள்.

உங்கள் குரு தற்சமயம் பதினொன்றாம் எண் வீட்டில் பருப்புத்துவையலும், வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறபடியால், தங்களுக்கு அவரது ஸந்தோஷம் காரணமாக நிரம்ப லாப ஆதாயங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிப்ருவரி 14-ம் தியதிக்குப் பின்னர் உங்களது ஹிட்-கவுன்ட்டரில் எண்ணிக்கை சற்றே சரிவதற்கான தசாபலன்கள் தென்படுகின்றன. பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமிடுபவர்கள் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். பிரபலமாகாதவர்களின் வலைப்பதிவுகளுக்குப் பிரபலமான பதிவர்கள் வருகை தந்து ஸமூகத்திற்கு உபகாரமாக எதையேனும் எழுதும்படி அறிவுரை கூற வாய்ப்பிருக்கிறது என்பதால், அதிக கவனம் தேவைப்படும். இருப்பினும், தங்களது தனிமடல்கள், குறுஞ்செய்திகளால் அவதியுற்று வேறுவழியின்றி உங்களது வலைப்பதிவுக்கு விஜயம் மேற்கொண்டு ஓரிரு வார்த்தைகள் கருத்தென்ற பெயரில் உங்களை ஸந்தோஷப்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையாதென்பதால், உங்களது வலைப்பதிவுக்கு தமிழ்மணத்திலும், தமிலீஷிலும் இருக்கக்கூடிய அந்தஸ்தானது அப்படியே இருப்பதற்கான பலன்கள் மிகுந்து காணப்படுகின்றன.

மேலும் அடுத்தடுத்துப் பல தமிழ்த்திரைப்படங்கள் வெளியாக இருப்பதால், தங்களது கற்பனாசக்தியாகப்பட்டது வாயுவேகத்தில் பறப்பதற்கான வாய்ப்புக்கள் மிகப்பிரகாசம். தற்சமயம் பழைய படங்களின் பெயர்களில் புதுப்படங்கள் வருவதால், மற்றவர்களின் விமர்சனங்களை அவரவர் வலைப்பதிவுகளிலிருந்து ஒற்றி ஒட்டுபவர்கள், அவர்கள் பழைய படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்களா என்று சரிபார்ப்பது சாலச்சிறந்தது.

(சீரியசாக ஒரு பின்குறிப்பு: இது வெறும் நகைச்சுவை. வலைப்பதிவர்களோ, ஜோசியர்களோ தவறாக எண்ண வேண்டாம். ஆனால், இதில் ஏதாவது உண்மையிலேயே நடந்தால் எனக்குத் தெரிவிப்பதோடு நூற்றி ஒரு ரூபாய் மணி ஆர்டரும் அனுப்பி வைக்கவும்.)

எச்சரிக்கை-காதலர்தின விரோதிகளே!


சும்மா காதலர் தினத்தை நக்கல் பண்ணியே பதிவை ஓட்டாதேய்யா, சமுதாயத்துக்கு உபயோகமா எதையாவது எழுதுன்னு நேத்து கனவுலே வேலன்டைன் வந்து சொன்னதுனாலே, காதலர் தினம் குறித்து தேவையில்லாம பிரச்சினை பண்ணிட்டிருக்கிற சமூக ஆர்வலர்களுக்கு சில நல்ல யோசனைகளைத் தரலாம் என்று யோசித்தேன். அதன் விளைவுதான் இது!

ஐயா, உங்களுக்குக் காதலர் தினம் பிடிக்காம இருக்கலாம். அதை எதிர்ப்பதற்காக நீங்கள் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை? உங்க சங்கத்திலேயும் இளைஞர்கள் இருப்பாங்க, அவங்களும் நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்குவாங்க, நீங்களும் ஆசீர்வாதம் பண்ணப்போவீங்க! மணமேடையிலே உங்க சிஷ்யனும் மணப்பெண்ணும் இருக்கிறதைப் பார்த்தா உங்களுக்குக் கழுதைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது ஞாபகத்துக்கு வருமா வராதா? இவ்வளவு ஏன், உங்க வீட்டுலேயே உங்க கல்யாண டிவிடியைப் போட்டுப் பார்க்காமலா இருக்கப்போறீங்க? தப்பித்தவறி உங்க தெருவிலே அந்த சமயமாப் பார்த்து ஏதாவது கழுதைங்க வந்துதுன்னு வையிங்க! அதுங்களுக்கெல்லாம் என்ன தோணும்?

"நம்ம கல்யாணத்தை இவங்க பண்ணி வச்சாங்க; இவங்க கல்யாணத்தை யார் பண்ணி வச்சாங்களோ?"ன்னு கைகொட்டி, சே, கால்கொட்டி சிரிக்காதுங்களா? உங்களாலே மனுசங்க மேலே கழுதைங்க வச்சிருக்கிற மரியாதையே போயிடும் போலிருக்கே?

சரி, கழுதைங்களுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறதுலே உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் கூட இருக்கலாம்; அனாவசியமா உங்க குடும்பப்பிரச்சினையிலே நாங்க தலையிட விரும்பலே! ஆனா, இதென்ன கொடுமை...?

நாய்ங்களுக்கெல்லாம் பெயர் வைச்சு அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணுறீங்களாமே? அதுவும் நல்ல மாடர்ன் பெயராப் பார்த்துப் பார்த்து வைக்கிறீங்களாமே! இன்னிக்கு நாய்க்குப் பேர் வைக்கிற உங்க கிட்டேயே நாளைக்கு உங்க தொண்டருங்க வந்து அவங்க குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்லலாம். அப்போ என்ன பெயர் வைப்பீங்க, "ஜிம்மி," "டாமி" "சீஸர்"னா?

நல்லா காட்டுறீங்கய்யா உங்க எதிர்ப்பை! நாய்க்குப் பெயர்சூட்டி, கழுதைக்குக் கல்யாணம் பண்ணி...விட்டா பூனைக்குப் புண்ணியாகவசனம், கரப்பான் பூச்சிக்குக் காதுகுத்துன்னு சும்மாயிருக்கிற வாயில்லா ஜீவனுக்கும் ஏதாவது விசேஷம் பண்ணுற கலாச்சாரத்தை ஆரம்பிச்சிடாதீங்க! ஏற்கனவே ஊருலே முகூர்த்தநாள் கிடைச்சாலும் மண்டபம் கிடைக்காம நிறைய பேரு ஒரிசா, மேகாலயாவுக்குப் போய்க் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க!

உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோங்க! நம்ம நாட்டுலே, குறிப்பா தமிழ்நாட்டுலே இனிமே வேலன்டைன்ஸ் டே கொண்டாடாம இருக்கிறதுக்கு ஒரு சிம்பிளான வழி சொல்லுறேன் கேட்டுக்குங்க!

இந்த வேலன்டைன் ஒண்ணும் உலகம் நினைச்சிட்டிருக்கிறா மாதிரி ரோமுலே பொறந்தவரில்லே! இங்கே தான் வேலூர் பக்கத்துலே நேரம் கெட்ட நேரத்துலே பொறந்து தொலைச்சிட்டாரு! வேலூருலே அன்-டைமிலே பொறந்ததுனாலே, அவரை எல்லாருமே வேல்+அன்டைமுன்னு அழைச்சு அழைச்சு அதுவே சுருங்கி வேலன்டைன்னாயிருச்சுன்னு ஒரு புரளியைக் கிளப்புங்க, போதும்! "சே, இந்தாளு லோக்கல் ஆளுதானா? இது தெரியாம வருஷா வருஷம் பணத்தையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணிட்டோமே?"ன்னு நம்மாளுங்க நொந்து போயிருவாங்க!

அடுத்து நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு தெரியும்!

"நாங்க அஞ்சாறு வருஷத்துக்குச் சேர்த்து லெட்டர்-பேட் அடிச்சு வச்சிருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க எங்க சங்கத்துலே நாற்பது மாவட்டச்செயலாளர்கள், நானூறு வட்டச் செயலாளர்கள் இதைத் தவிர ஏழு உறுப்பினர்கள் இருக்காங்க! இவங்களுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டாமா, பேப்பரிலே எங்க போட்டோ வர வேண்டாமா,"ன்னு கேட்கப்போறீங்க! அவ்வளவு தானே!

நீங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச கழுதைங்களுக்கு அவங்களோட திருமண நாளன்னிக்கு ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும், வட்டச்செயலாளரும் ஒரு கழுதைக்குத் தலா ஒரு லெட்டர்-பேட் வீதம் சாப்பிடக்கொடுத்து அதை போட்டோ புடிச்சுப் பத்திரிகையிலே போட்டீங்கன்னா, உங்க சங்கத்துலே இருக்கிறவங்களோட புகழ் கழுதையோட புகழை விட அதிகமாப் பரவும். எச்சரிக்கை, போட்டோ புடிக்கும்போது உங்க ஆளுங்களை கழுதைக்கு முன்னாடி நிற்கச் சொல்லுங்க! இல்லாட்டி கல்யாணம் பண்ணி வச்சவங்க மேலே இருக்கிற கடுப்பைக் காட்ட கழுதை உதைச்சிருச்சின்னா, பத்திரிகையிலே மறுநாள் வேறே செய்தி கட்டம் கட்டி வந்திரும்.

நாய்ங்களை என்ன பண்ணுறதுன்னு கேட்கறீங்களா? கார்ப்பரேஷன்லே நாய் பிடிக்கப் போகும்போது நீங்களும் கூடவே போனீங்கன்னா, அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இருக்காதா பின்னே, உங்களுக்குத் தான் எல்லா நாயோட பெயர்களும் அத்துப்படியா தெரியுமில்லா...? கூப்பிட்டாலே வண்டியிலே வந்து ஏறிடுமில்லா....?

Friday, February 12, 2010

மண்ணடிச்சிந்தனை



சேட்டைக்காரன் என்ற பெயரைக்காட்டிலும் மண்ணடியார் என்ற பெயர் வைத்திருக்கலாமோ என்று நினைப்பதுண்டு. (என்னிடம் காப்பிரைட் இல்லை; சென்னைப்பிரியர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.) ஏறக்குறைய எட்டாண்டுகளாக இந்த மண்ணடியில் புழங்கிப் புழங்கி, எனது இரத்தத்திலிருக்கும் பிராணவாயுவின் அளவில் பாதி மண்ணடியிடமிருந்து வாங்கிய தீராக்கடனோ என்றும் தோன்றுவதுண்டு.

ஒரு பதிவிலோ அல்லது பல தொடர்பதிவுகளிலோ கூட மண்ணடியின் மகோன்னதத்தை விளக்கி விட முடியாது. சென்னைவாசிகளிலும் கூட எத்தனை பேருக்கு மண்ணடியின் அனைத்துச் சந்துகளும் அத்துப்படியாயிருக்குமோ தெரியாது. தாஜ்மஹாலுக்கு அருகே ஆக்ராவில் விற்கப்படுகிற சிறிய பொம்மையைப் போல, மண்ணடி சென்னை நகரத்தின் மாதிரியென்றால் மறுக்க முடியாது.

இங்கு "டை"கட்டிக்கொண்டு, டாம்பீகமாக ஆங்கிலத்தில் அளவளாவுபவர்களையும், சாக்கடை நாற்றத்தில் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிற அரைநிர்வாணச் சிறுவர்களையும் பார்க்க முடியும். இங்கு வசதிக்கேற்ப சாப்பாடு கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் மசூதியில் தொழுகை முடித்து வருபவர்களும், காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றுவரும் சிவப்புப்புடவைகளும், இரானியர்களும், கிறிஸ்துவர்களும், உருதுவும், ஹிந்தியும், ஆங்கிலமும், தெலுங்கும், மலையாளமும் என்று சென்னையைப் பிழிந்தெடுத்து வடிகட்டிய சாற்றைக் காணமுடியும். இங்கு பென்சில் தொடங்கி பெரிய இயந்திரங்கள் வரைக்கும் வாங்க முடியும். மழைக்காலங்களின் போது கரீம்பாய் கடையில் வரிசையில் நின்று குடை வாங்கிப்போவார்கள். லிங்கிச்செட்டித்தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, தம்புச்செட்டித்தெருவில் மாத்திரம் ஏறக்குறைய இருநூறு கப்பல் நிறுவனங்கள் உள்ளதென்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்? ஒருக்களித்து ஏறவேண்டிய அரையிருட்டுப்படிக்கட்டுகள், ஒவ்வொரு கட்டிடத்திற்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கும் இருபது முதல் ஐம்பது வரையிலான கடைகண்ணிகளுக்கு நம்மை இட்டுச்செல்லும்.

முதல் முதலாக மண்ணடிக்கு வருகிறவர்களுக்கு சென்னையை ஏளனம் செய்வதற்கான ஒரு நல்ல முகாந்திரமாகவும் அது அமைந்துவிடும். ஆனால், சென்னையின் ஜீவன் இந்தச் சின்னச்சின்னச் சந்துக்குள்ளே தான் ஓடிவிளையாடிக்கொண்டிருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எளிதில் பட்டியலிட்டு விட முடியாது. குறிப்பாக எனக்குப் பரிச்சயமான முகங்களில் இன்றும் நான் தொடர்ந்து காணுகிற புன்னகை; இன்னும் பிரிட்டிஷ் காலத்தில் வசிக்கிறோமா என்ற பிரமையை அங்கிருக்கும் சூழல் ஏற்படுத்துமேயானால், நன்று, இந்த இணக்கமான சூழலுக்காக அது குறித்து சங்கடப்பட வேண்டியதில்லை.

இங்கே வழிப்போக்கனாக இருப்பது மிகவும் கடினம் என்று தோன்றுகிறது. எவரேனும் ஒருவருக்கு இங்கு வழிசொல்லியாவது நீங்கள் மண்ணடியில் ஐக்கியமாவதற்கான குறைந்தபட்ச செய்கையைச் செய்தே தீருவீர்கள்.

"ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் எங்கேயிருக்கு?"

"க்ரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் எங்கேயிருக்கு?"

"ராம பவன் ஹோட்டல் எந்தப்பக்கம்?"

"எஸ்பளனேடு போலீஸ் ஸ்டேஷன்?"

இத்தோடு அடிக்கடி வழிப்போக்கர்களை வழிமறிக்கிற இன்னொரு கேள்வி....

"********* ஜோசியர்.....?"

உண்மையில் முதலில் சிலர் என்னிடம் இது குறித்துக் கேட்டபோது, எனக்குத் தெரியாதென்று கைவிரித்து விட்டேன். பிறகொருநாள், காளிகாம்பாளை தரிசித்துவிட்டு சற்றுத்தள்ளி இன்னொரு பிள்ளையார் கோவில் இருப்பதை முதல் முறையாக பார்த்தபோது, அந்தக் கோவிலோடு ஒட்டியிருந்த குறுகிய சந்தில் "ஜோசியர்" என்ற பலகையையும், காத்திருக்கிற கூட்டத்தையும் கண்டேன். அந்தக் கோவிலில் அர்ச்சகரையும் காணவில்லை!

’தல, உன்னை விட உனக்குப் பின்னாலே இருக்கிற ஜோசியர் மேலே தான் ஜனங்களுக்கு நம்பிக்கை ஜாஸ்தியாயிருக்கு போலிருக்கே?’ என்று பிள்ளையார் அண்ணாத்தேயிடம் கேட்டு விட்டேன். அவரா பதில் சொல்லுகிறவர்?

இருந்துவிட்டுப்போகட்டுமே! இரும்புக்கம்பி தொடங்கி இயந்திரம் வரைக்கும் மண்ணடியில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு சாரி சாரியாக மக்கள் வருகிறார்கள்; அதில் ஒரு பகுதி, தங்களது எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புக்களை, கணிப்புக்களை, அச்சுறுத்தல்களுக்கான சமாதானங்களை, நிஜத்தைப் பின்னுக்குத்தள்ளுகிற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் தேடி வந்துவிட்டுப்போகட்டும்! மண்ணடியில் இதுவும் கிடைக்கும் என்பது பெருமைதானே?

காதலர் தின சிறப்புக் கவிதை.02



அன்பே....!

உன் காதலினால் வந்த
உருமாற்றத்தைக் கேள்!
முன்னெல்லாம்
கல்தடுக்கினால் கதறுவேன்
இன்று
புல்தடுக்கினாலும்
புண்படுகிறேனே!

சேமித்திருக்க வேண்டுமோ?
சிந்திய கண்ணீரையும்
செலவழித்த பெட்ரோலையும்...?

நீ குடியிருக்கும் தெருவுக்கு
நித்தமும் வந்தேன்!
குப்பைத்தொட்டியருகே
குரைத்தன தெருநாய்கள்!

ஆயினும்...
அயராமல் வந்தேன்!
இப்போது பார்த்தாயா?
நாய்கள் என்னுடன்
நட்பாகி விட்டன!

ஒரே ஒருமுறை
குரைத்து விடேன் நீயும்!
குறைந்தா போய்விடுவாய்?

Thursday, February 11, 2010

பஸ்ஸைப் புடிச்சீங்களா?



நமக்கும் பஸ்ஸுக்கும் ஆகாதுண்ணே! நான் என்னிக்கு பஸ்ஸிலே ஏற வேண்டியிருக்குமோ, அன்னிக்குன்னு பார்த்து என் சட்டைப்பையிலே சில்லறை இருக்காது. இதுவே டிரைனுக்கு லேட்டாயிருச்சுன்னு ஓடுறபோது, பேண்ட்டு,சட்டையிலே இருக்கிற சில்லறையெல்லாம் குலுங்கிக் குலுங்கி, முன்னாடி போறவங்க ஏதாவது மோகினிப்பிசாசு சலங்கை கட்டிட்டு வருதான்னு திரும்பிப்பார்ப்பாங்க! நம்மாளுங்க கேட்பாங்க, "ஏண்டா, எப்பவும் இவ்வளவு சில்லறை வச்சிருக்கியே, நீ கப்பல் கம்பனியிலே வேலை பாக்குறியா? இல்லே, காளிகாம்பாள் கோவில் வாசலிலே துண்டை விரிச்சிட்டு உட்காருவியா?"ன்னு! படிக்கிறவங்க யாரும் என்னை ஏதோ சில்லறைக்கேசுன்னு நினைச்சிடாதீக!

தெனமும் ரூமுக்குத் திரும்புனதும் சட்டை,பேண்டுலே இருக்கிற சில்லறையெல்லாத்தையும் உண்டியல்ஸ்லே போடுவேன். ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய்,அஞ்சு ரூபாய்னு சைஸ்வாரியா உண்டியல்ஸ் வச்சிருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு ஆழமான அர்த்தமிருக்குண்ணே! பாத்திரமறிந்து பிச்சையிடுங்கிறதை நான் ரொம்ப கடுமையா கடைப்பிடிக்கிறவனுங்க! ஒரு ரூபாய்க்கு மேலே யாருக்கும் பிச்சை போட்டது கிடையாது. சந்தேகமிருந்தா தாம்பரம்-பீச் லைனிலே வர்ற பிச்சைக்காரங்க கிட்டே கேட்டுக்கோங்க! (க்கும்..ரொம்ப முக்கியம்)

ரெண்டு ரூபாய்க் காயின் எதுக்கு தெரியுமா? எப்பவாவது டாப்-அப் பண்ண மறந்திட்டா, காயின் பாக்ஸிலேருந்து போன் பண்ணுறதுக்காக!

அஞ்சு ரூபா காயின் உண்டியல் இருக்கே! மாசக்கடைசியிலே இது தான் நமக்கு உதவும். எனக்கு மட்டுமில்லே; மேன்சனிலே வாழ்க்கை நடத்துறவங்க எல்லாருக்குமே தெரியும், மாசக்கடைசியில் சில்லறையோட மகத்துவம்!

ஆனா, பஸ்ஸிலே போறபோது மட்டும் சில்லறை போதுமான அளவுக்கு இல்லாம கண்டக்டருங்க கிட்டே வாங்கியிருக்கிற வசவுக்குப் பஞ்சமேயில்லை.

இன்னிக்குக் காலையிலே மின்னஞ்சலைத் தொறந்தா புதுசா ஒரு ஸ்க்ரீன்! "நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம் அண்ணாச்சி, சும்மா க்ளிக் பண்ணுங்க,"ன்னு ரொம்ப அன்பாச் சொல்லிச்சேன்னு கிளிக்கிட்டு உள்ளே போனா, வசமா மாட்டிக்கிட்டேனில்லா? புலிவாலைத் தொட்ட கதை மாதிரி, எப்புடி வெளியே வர்றதுன்னு தெரியாம பேஸ்தடிச்சவன் மாதிரி க்ளிக் பண்ணிட்டே போனா, எப்பவோ தனிமடல் எழுதினவங்களோட செய்தியெல்லாம் படிக்க முடிஞ்சுது. நம்மளை மாதிரியே அவங்களும் "காசா பணமா? க்ளிக் பண்ணித்தான் பார்ப்போமே?"ன்னு கூகிள் பஸ்ஸுக்குள்ளே வந்துப்புட்டு "ஐயையோ, யாராவது காப்பாத்துங்களேன்,"ன்னு அலறிட்டு இருக்காங்க!

"என்ன கருமம் இது?"ன்னு நம்ம முசிறி நண்பர் பஞ்சாபகேசன்.

"அறியாமல் சக்கரவியூகத்தில் நுழைந்த அபிமன்யூவானேன்,"ன்னு இந்த சோதனையிலும் விடாமல் கவிதை எழுதின இன்னொருத்தர்.

"கூகிளுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?"ன்னு ஒருத்தர் எழுதியிருந்தார்.

"இதெல்லாம் தேவையா எனக்கு?" ன்னு ஒருத்தர் பாவமன்னிப்புக் கேட்டுக்கிட்டிருக்காரு.

எனக்கும் முதல்லே ஒண்ணும் புரியலே! சரி, ஏதாவது எழுதித்தான் பார்ப்போமேன்னு"என்னை மாதிரியே கூகிளும் உட்கார்ந்து யோசிக்கிறாங்க போலிருக்கு! சே!!"ன்னு எழுதினேன். அவ்வளவு தானுங்க! இன்னிக்கு நயா பைசாவுக்கு வேலை பார்க்கலே ஆஃபீஸுலே! நல்ல கூட்டநேரத்துலே "வி சர்வீஸ்" பஸ்ஸிலே ஏறுனது மாதிரி இந்த கூகிள் பஸ்ஸிலே வந்து மாட்டிக்கிட்டேன். மூணு பேர் சேர்ந்து அரை மணிநேரத்துலே ஒரு இழையை 167 வரைக்கும் கொண்டு போயிருக்கோமுன்னா பாருங்களேன்!

கூகிள் சாட்டுலே தனித்தனியா அரட்டையடிக்கலாம்; கூகிள் பஸ்ஸிலே கூட்டம் கூட்டமாச் சேர்ந்து கும்மியடிக்கலாம் போலிருக்கு. நம்ம சென்னை பஸ்ஸுக்கும் கூகிள் பஸ்ஸுக்கும் பெரிய வித்தியாசமில்லீங்க! இங்கேயும் யார் காலை யார் மிதிக்கிறாங்கன்னு புரிய ரொம்ப லேட்டாவுது. இங்கேயும் ரொம்ப உள்ளாற போயிட்டீங்கன்னா, ஸ்டாப்பு வரபோது கீழே இறங்கறது கஷ்டம். கூட்ட நெரிசலிலே ஒத்தைக்காலிலே நின்னுட்டிருக்கிறபோது, செல்போன் வந்தா வருமே ஒரு எரிச்சல், அதே மாதிரி கூகிள் பஸ்ஸிலே மொக்கை போட்டிட்டிருக்கும்போது அந்தப்பக்கம் சாட்டுலே ஒருத்தர் வந்து "ஹலோ, ஹவ் ஆர் யூ?"ன்னு சீரியசாக் கேட்குறாங்க!

கூகிள் பஸ்ஸிலே டிரைவரும் கிடையாது, கண்டக்டரும் கிடையாது. அவ்வளவு தான்னு நினைக்காதீங்கண்ணே! ’பிரேக்’கும் கிடையாது. அப்பப்போ கவனிச்சுக்கோங்க! இல்லாட்டி பிளாட்பாரத்துலே வண்டி ஏறிடுமண்ணே!

இன்னும் ஒரு வாரத்துலே பாருங்க, "ஏன் என் உயிரைப்பிழிந்து உலரப்போடுகிறாய்?"னு காதல் சொட்டச்சொட்ட கவிதை பார்க்கலாம்; "குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்....," என்று மறத்தமிழனின் மாண்பைப் பறைசாற்றுகிற செய்யுள்கள் பார்க்கலாம்; என்னோட வலைப்பதிவுக்கு வாங்கன்னு அழைப்பு பார்க்கலாம்.

இதையெல்லாம் நான் இன்னிக்குப் பார்க்கலேங்குறதுக்காக, இன்னும் வரலேன்னு அர்த்தமில்லே!

மொத்தத்திலே இந்த பஸ்ஸிலே ஏறுறது சுலபம்; இறங்குறது தான் கஷ்டம் போலிருக்கண்ணே! கவனம்..அம்புட்டுத்தேன்!

காதலர் தின சிறப்புக் கவிதை.01


ஞாபகம் இருக்கிறதடி!

முதன்முதலாய் உன்
முகத்தைக் கண்ட நாள்!

கூட்டத்தில் நிரம்பிய
கூட்டுவண்டியிலே
கூடுவாஞ்சேரிதனில்
குதித்து ஏறினாய்!

பயணிகளின் பேச்சு
பார்த்ததும் போச்சு!
பார்வைக்கணைகளெல்லாம்
பாய்ந்தன உன்மேலே!

அருகினில் வந்தாய்!
அதிர்ந்து போனேன்!
குரல்தனைக் கேட்டேன்

"ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா!"

எச்சரிக்கை: இது ஆரம்பம் தான்! இன்னும் வரும்; வரணும்.

ஆவியுடன் பேசலாம்-ஏர்லொள் புதிய சேவை

வேறே வழியேயில்லை!

கடும் வியாபாரப்போட்டியென்கிற எலிப்பந்தயத்தில்(Rat-race)முந்திச்செல்ல இதுவரை உலகத்தில் எந்த நிறுவனமும் தராத ஒரு சேவையை நம்ம ஏர்லொள் நிறுவனம் ஆரம்பிச்சிட்டாங்க! இதுக்காக அவங்க மத்தவங்க மாதிரி ரூம் போட்டு யோசிக்காம, கண்ணம்மாபேட்டையிலே கடுஞ்சாயாவும் காஜா பீடியும் குடிச்சு ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க! இனிமேல் செத்துபோனவங்களோட ஆவியோட பேசுறதுக்கு நாம எந்த பாவியோட உதவியையும் நாடாமல், இருந்த இடத்துலேருந்து அவங்கவங்க கைபேசி மூலமா தொடர்பு கொள்ளலாம். பிரபலமானவங்க தவிர, இதுவரை காலமான உங்க உறவினர்,நண்பர்களோட புகைப்படமும், அவங்களோட டேட் ஆஃப் டெத்தும் வச்சிருக்கீங்களா? ஏர்லொள் ஷோரூமுக்குப் போயி இதையெல்லாம் கொடுத்து 9999 ரூபாயும் கொடுத்திட்டாப்போதும். அவங்க வைகுண்டம், கைலாசம் எங்கேயிருந்தாலும் சரி அவங்களோட நீங்க ஒரு மாசத்துக்கு முப்பதே முக்கால் நிமிசம் முழுசாப் பேசலாமாம். இறந்தவர்களிடமிருந்து ஒரு நயா பைசா கூட வசூலிக்கப்பட மாட்டாது என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். எவ்வளவு நல்ல திட்டம் பார்த்தீங்களா?

இதுலேயே ஒன் ப்ளஸ் ஒன்னுன்னு ஒரு புது திட்டம் வேறே இருக்கு. அதை வாங்கினீங்கன்னா, செத்துப்போனவங்களும் நீங்களும் எப்ப வேண்ணா எவ்வளவு வேண்ணா பேசலாம்-செல் டு செல் ஃப்ரீ!

இது மட்டுமல்ல! அவங்களுக்கு நீங்க அனுப்புற ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்ஸுக்கும் தலா ஐம்பது காசு தான் சார்ஜ்! இப்போ இருக்கிற செல்போன் நிறுவனங்களெல்லாம் பிறந்தநாள்,திருமணநாள்,காதலர் தினம்,தீபாவளி,பொங்கல் மாதிரி பண்டிக்கைக்குன்னு தனி எஸ்.எம்.எஸ்.சேவை வச்சிருக்கிறா மாதிரி, ஏர்லொள் கம்பனியிலே இறந்தநாள் வாழ்த்துக்கள்னு புதுசா அறிமுகப்படுத்தியிருக்காங்க!

"ஹேப்பி டெத் டே!"
"விஷ் யூ மெனி மோர் ஹேப்பி டெத்ஸ்!"
"டோண்ட் கம் பேக்! வீ ஆர் ரிலீவ்ட்!"

இந்த மாதிரி பலவிதமான ரெடிமேட் எஸ்.எம்.எஸ். தயார் பண்ணியிருக்காங்க!

பாட்டன் முப்பாட்டனோட பேசுறதோட நாம நிறுத்திக்க மாட்டோம்னு தெரிஞ்சு, மறைந்த பிரபலங்கள் சிலரோடவும் நீங்க பேசலாம், அவங்க பேச விரும்பினால்! ஆனால், இதுக்கு இரட்டிப்பு சார்ஜூடன் சேவை வரி 110.8475 % வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி, அவங்க நம்பர் எப்படித்தெரியுமுன்னு யோசிக்கிறீங்களா? அதுலே தான் ஏர்லொள் ஆளுங்க அறிவைப் பயன்படுத்தியிருக்காங்க! இந்த சேவையைப் பயன்படுத்துறவங்களோட நம்பருக்கு முன்னாலே ஒரு மூன்று இலக்க எண்ணைச் சேர்த்துக்கணும். பாட்டி=111,தாத்தா=211....இப்படி ஒவ்வொரு உறவுமுறைக்கும் ஒரு எண் கொடுத்திருக்காங்க! தயவு செய்து முன்னாலே சைபர் சேர்த்திராதீங்க! அது வேறே எங்கேயோ போகுது! இது தெரியாம நான் தப்பா ஒரு நம்பரைப் போட, போன் நேரா எமதர்மராஜனுக்குப் போயிருச்சு! "ஹலோ! எமன் ஹியர், வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?"னு கேட்டாரு. நான் டிஸ்கனெக்ட் பண்ணிட்டேன்.

இன்னிக்கு அப்பத்தாவோட ஆவி கூட பேசினேன். ஒரே ஆச்சரியம். அவங்க போனிலே "ஓ மகசீயா"வை காலர் ட்யூனா வச்சிருக்காங்க! அங்கே போயி இங்கிலீஷுலே வேறே பொளந்து கட்டுறாங்க! எட்வினா மவுண்ட்பேட்டன் பக்கத்துலே தான் இருக்காங்களாம்! எல்லாம் சகவாசதோசம்!

தமிழ்ப்படமெல்லாம் இங்கே ரிலீஸ் ஆகும்போதே அங்கேயும் ரிலீஸ் ஆயிடுதாம். அங்கே வைகுந்தா டி.வி,கைலாசா டி.வி.ன்னு இருந்தாலும் இந்திரன்.டி.வி.தான் ரொம்ப பாப்புலராம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரோட ஹைலைட்ஸ் அடிக்கடி காட்டுறாங்களாம். அப்புறம் ரம்பை,ஊர்வசி,மேனகை,திலோத்தமையெல்லாம் தெனமும் நியூஸ் வாசிக்கிறாங்களாம். சமீபத்துலே நடந்த ஒரு சுயம்வரத்தை லைவ்-டெலிகாஸ்ட் பண்ணினாங்கன்னா பார்த்துக்குங்க!

"தாத்தா எப்படியிருக்காரு அப்பத்தா?"ன்னு கேட்டேன்.

"அவரா? அவரு இங்கே வந்ததேலிருந்து பத்மினி பின்னாடியே சுத்திட்டிருக்காரு,"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. "இங்கேயும் வம்பை விலைக்கு வாங்கிட்டாருன்னா திருப்பி அனுப்பிருவாங்களோன்னு பயமாயிருக்கு!"

"ஏன் அப்பத்தா? திருப்பி அனுப்பிச்சா வந்திரேன்!"

"போடா போக்கத்தவனே! அங்கே என்ன இருக்கு திரும்பி வரதுக்கு? நீங்களே இங்கே வரதுக்குத் தானேடா ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தெனம் அடிச்சிக்கிட்டுச் சாவறீங்க?"

"உண்மை தானே!" என்று நினைத்துக்கொண்டேன்.

"இன்னும் கொஞ்ச நேரத்துலே சீரியல் ஆரம்பிச்சிரும். வுட் யூ மைண்ட் காலிங் மீ ஆஃப்டர் தர்ட்டி மினிட்ஸ்?"ன்னு கேட்டு அப்பத்தா போனை கட் பண்ணிட்டாங்க! அங்கே போயும் சீரியலா? கஷ்டம்!!