Friday, February 19, 2010

சிரிப்புத்தான் வருகுதையா


"டேய் சேட்டை,நீ அடங்க மாட்டியாடா?"ன்னு ஒரு அக்கா தெனமும் திட்டுது. "தம்பி, கல்யாணத்துக்கப்புறம் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி விடாட்டாலும் பாவமில்லே; வலைப்பதிவுலே ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் நடுவுலே கண்டிப்பா போதுமான இடைவெளி விடு,"ன்னு இன்னொரு அண்ணன் என் காதுலே சங்கு ஊதறாரு! "இப்படியே போச்சுன்னா, உன் வலைப்பதிவுக்கு ’தினச்சேட்டை’ன்னு பெயர் வச்சிருவோம்,"னு இன்னொரு தம்பி மெரட்டுறாரு! ஆனா பாருங்க, அட்டையைக் குளுப்பாட்டித் தொட்டில்லே போட்ட கதை மாதிரி, எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு தெனமும் பதிவு போட்டு சேட்டை பண்ணுறதே பொளப்பாப் போச்சுண்ணே எனக்கு!

என்ன பண்ணறதுண்ணே? தெனமும் யாராவது எதையாவது எழுதியோ,பேசியோ எனக்குள்ளே குப்புறப்படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிட்டிருக்கிற "சிந்தனாவாதி" தலையிலே, குடம் குடமாத் தண்ணியை ஊத்தி எழுப்பி விட்டுடறாங்களே!

இன்னிக்குப் பாருங்க, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கங்கள் ஒரு அறிக்கை விட்டிருக்காங்க! " இனிமே வேட்டைக்காரன் மாதிரி படமெல்லாம் எடுக்க மாட்டோம்,"னு தான் சொல்லிட்டாங்களோன்னு ஆசை ஆசையாப் பார்த்தா, திரையரங்குகளிலே ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு கண்டனம் தெரிவிச்சிருக்காங்கப்பு!

நமக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரமண்ணே! சுத்த ஏமாத்து வேலை இந்தக் கிரிக்கெட்! ஒரு வாட்டி ரேடியோவிலே வர்ணனை கேட்டுப்பயந்தே போயிட்டேன்! இந்த ப்ரெட் லீங்கிற ஆளுக்கு நம்மளை மாதிரியே ரெண்டு காலுதான் இருக்குமுண்ணு நினைச்சிட்டிருந்தேன். ரேடியோவிலே "Brett Lee is bowling with one square-leg, one fine-leg, one backward square-leg and one forward short-leg"ன்னு சொன்னதும் ஒரு ஆளுக்கு மொத்தம் நாலு "leg"கான்னு எனக்கு பக்குன்னு ஆயிருச்சு! டிவியிலே பார்த்தப்புறம் தான் தெரிஞ்சுது ப்ரெட் லீக்கும் ரெண்டே ரெண்டு கால் தானுண்ணு. சரி, நம்ம கிரிக்கெட் அறிவுக்கு ஒரு சாம்பிள் சொல்லிப்புட்டேன். இனிமேல் விஷயத்துக்கு வருவோம்.

இந்த வருசம் ஐ.பி.எல்.போட்டி எல்லாத்தையும் சினிமாத் தியேட்டரிலே காட்டப்போறாங்கன்னு சொன்னதும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாரும் ரொம்ப அதிர்ச்சிக்குள்ளாகியிருக்காங்களாம். அதுக்கு அவங்க சொல்லுற காரணங்கள் இருக்கே, அதைப் படிக்கிறதுக்கு முன்னாலே ஒரு பரால்கான் மாத்திரையும், பாட்டில் தண்ணியையும் ரெடி பண்ணி வச்சுக்கோங்க! இதைப் படிச்சு ஒருத்தர் சிரிச்ச சிரிப்புலே சிறுகுடல் வாய்வழியா வெளியே வந்துருச்சுன்னா பார்த்துக்கோங்க! அவங்க பண்ணின காமெடி மாதிரி நம்மளாலே பண்ண முடியாதுன்னுறதுன்னாலும், ஏதோ என்னாலே முடிஞ்ச அளவு முயற்சி பண்ணியிருக்கேன்.

அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

அவங்க சொன்னது:

"விளையாட்டு என்பது உலகமெங்கும் உணர்வு பூர்வமான அங்கமாக உள்ளது. அதில் விளையாடுபவர்கள் கதாநாயகர்கள் அளவுக்கு கருதப்படுகின்றனர். அதற்கு காரணம் விளையாட்டு போட்டிகளில் தேசப்பற்று இருப்பது தான். தங்கள் நாடு ஜெயிக்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்ததால் விளையாட்டுகள் உயர்வாக மதிக்கப்பட்டன."

அவங்க சொல்லாதது:

"ஆனால், தமிழ் சினிமா அப்படியா? எங்களுக்கும் உணர்வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதுன்னு ஆதாரபூர்வமாக யாராவது நிரூபிக்க முடியுமா? விளையாட்டுலே தேசப்பற்று இருக்கலாம்; ஆனால் நாங்க சமீபத்துலே அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணியிருக்கோமா? ரசிகர்கள் தங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என்று விளையாட்டை உயர்வா மதிக்கிறா மாதிரி, நாங்க சினிமாவையும் ரசிகர்கள் உயர்வாக மதிக்க வேண்டும் என்று அனாவசியமாக எண்ணியிருக்கிறோமா? கிடையவே கிடையாது.கிரிக்கெட்டை தாத்தாவும் பேரனும் பக்கத்துலே பக்கத்துலே உட்கார்ந்து பார்க்கலாம். எங்க சினிமாவை பாட்டியும் பேத்தியும் பக்கத்துலே பக்கத்துலே உட்கார்ந்து பார்க்க முடியுமா?முடியவே முடியாது."

அவங்க சொன்னது:

"ஆனால் சமீப காலமாக அந்த நிலைமைகள் மாறி விட்டன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பெரிய பெரிய பணமுதலைகள் ஒருத்தருக் கொருத்தர் போட்டி போட்டு லாபம் சம்பாதிக்க நடத்த ஆரம்பித்து விட்டனர். தேசப்பற்றை இவர்கள் நாசமாக்கி விட்டார்கள்."

அவங்க சொல்லாதது:

"ஆமாம்! வர வர கிரிக்கெட்டும் எங்களுக்குப் போட்டியா தமிழ் சினிமா மாதிரியே மோசமாயிருச்சு. இங்கே தான் பணமுதலைகள் சினிமாக் கம்பனி ஆரம்பிச்சு, உருட்டி மிரட்டி எங்க படங்களை தவிட்டு விலைக்கு வாங்கி காசு பண்ணுறாங்கன்னு பார்த்தா, கிரிக்கெட்டுலேயும் இது ஆரம்பிச்சிட்டாங்க! இதுலே என்ன கொடுமைன்னா, எங்க சினிமாக்காரங்களிலேயே ஷாரூக் கான், ஷில்பா ஷெட்டி,ப்ரீத்தி ஜிந்தா மாதிரி நிறைய பணமுதலைங்க கிரிக்கெட்டை விலைகொடுத்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க! எங்களுக்குப் போட்டியா இவங்க வேறே தேசப்பற்றை நாசம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! நாங்கெல்லாம் பொழைப்பு நடத்துறதா வேண்டாமா? அவ்வ்வ்வ்!"

அவங்க சொன்னது:

"மரபணு மாற்றம் போல் சென்னை அணியில் பாகிஸ்தான் வீரர் என்றும், கொல்கத்தா அணியில் ஆஸ்திரேலிய வீரர் என்றும் விளையாட்டுகளை ஈனப்படுத்தி விட்டார்கள். இதன் மூலம் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது."

அவங்க சொல்லாதது:

"நாங்க தான் தமிழ்ப்படத்துலே தமிழே தெரியாத நடிகைங்களை நடிக்க வச்சோமுன்னா, இவங்க ஒரு படி மேலேயே போயிட்டாங்க! தமிழ் சினிமாவாலே மாணவர்கள் பள்ளி,கல்லூரியைக் ’கட்’ பண்ணிட்டு பகல்லே சினிமா பார்த்துத்தான் படிப்பைக் கெடுத்துக்கிட்டாங்க! இவங்க என்னடான்னா, கிரிக்கெட்டை தியேட்டருக்குக் கொண்டு வந்து மாணவர்களை வீட்டுக்கே "கட்" அடிக்க வைச்சிருவாங்க போலிருக்கே!"

"இதுவரை நாங்கள் மட்டும் தான் அரைகுறை உடைகளுடன் பெண்களை ஆடவிட்டுக்கொண்டிருந்தோம் என்றால், இப்போது இவர்களும் ’சியர் லீடர்ஸ்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளோடு, அயல்நாட்டுப்பெண்களை ஆடவிட்டு, சில்லறையை அள்ளத்தொடங்கி விட்டார்கள்."

அவங்க சொன்னது:

"இப்போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்புவது சினிமா, தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்."

அவங்க சொல்லாதது:

"அது மட்டுமல்ல. தமிழ் சினிமா ரசிகர்களையே மலை போல நம்பியிருக்கிற மருந்துக்கடை உரிமையாளர்கள், மனநல மருத்துவர்கள், பூச்சி மருந்து சில்லறை வணிகர்கள் ஆகிய ஆயிரக்கணக்கானவர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்."

அவங்க சொன்னது:

"மத்திய மாநில அரசுகள் சலுகைகள் வழங்கி திரைப்படத்துறைக்கு உயிரூட்டும் இந்த நேரத்தில் அத் தொழிலை நாசமாக்குவது போன்ற காரியங்கள செய்வதை ஏற்க மாட்டோம். தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதை முழு மனதோடு எதிர்ப்போம். இதுபற்றி அனைத்து சங்கத்தினர் கூடி ஆலோசிக்க உள்ளோம்."

அவங்க சொல்லாதது:

"எப்போதோ மோசமாக விளையாடுகிற கிரிக்கெட், எப்போதுமே மோசமாகப் படம் எடுக்கிற எங்களது பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசும் மாநில அரசும் தலையிட்டு திரையரங்குகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதைத் தடை செய்யாவிட்டால், நாங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வேட்டைக்காரன் போன்ற எங்களது அரிய திரைப்படங்களைத் திரையிட நேரிடும் என்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்."

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராமநாராயணன் சொன்னது: "தியேட்டர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவது சினிமா தொழிலை அழித்து விடும்,"

அவர் சொல்லாதது: "எந்தக் காலத்திலும் கிரிக்கெட் சினிமாவை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களை அழிக்க எங்களுக்கே தெரியும்."

கிரிக்கெட்டுக்கும் அரசியலுக்கும் இருக்கிற தொடர்பு எல்லாருக்கும் தெரிஞ்சது தான். இன்னும் சொல்லப்போனா, இந்திய கிரிக்கெட் வாரியத்தோட தலைவரு தான் இந்தியாவோட விவசாயத்துறை மந்திரி. அவரைக் கூப்பிட்டு "என்னங்க,விலைவாசியெல்லாம் இப்படி ஏறிடுச்சே, ஏதாவது செய்ய வேண்டாமான்னு," கேட்டா, அவரு "ஆமாம் சேட்டை, போன வருசம் அம்பது லட்சம் டாலருக்கு ஏலத்துக்கு எடுத்த கிரிக்கெட் வீரருக்கு இந்த வருஷம் எழுபத்தி அஞ்சு லட்சம் டாலர் கொடுத்திருக்கோம். விலைவாசி ரொம்பத்தான் ஏறிடுச்சு ஒரு வருசத்திலே,"ன்னு குறைப்பட்டுக்கிறாரு பாவம். ஹூம், அவர் கவலை அவருக்கு!

ஐ.பி.எல்.போட்டிகள் திரையரங்குகளில் வெளியாகுமா? இதைச் சாக்கிட்டாவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்ச நாள் சாபவிமோசனம் கிடைக்குமா?-ன்னு சிலர் முணுமுணுத்திட்டு இருக்காங்கன்னுறது இன்னொரு விஷயம். ஆனால்.....

இந்தியாவில் மக்களை மகிழ்விக்கிற கிரிக்கெட், சினிமா இரு துறைகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, விரைவிலேயே சென்னையில் இன்னொரு பாராட்டு விழா நடைபெறலாம் என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிச்சமிருக்கிறது அரசியல் மட்டும் தானே, மூணையும் போட்டு ஒரேயடியா குழப்பறதுக்கு நம்ம நாட்டுலே பாராட்டு விழாவைத் தவிர வேறே என்ன வழியிருக்கு சொல்லுங்க!

பின்குறிப்பு: என்ன சேட்டை, உங்களோட முந்தைய பதிவு மாதிரி இதுலே சிரிப்பு வரலியேன்னு கேட்காதீங்க! சினிமாக்காரங்க கூட காமெடி பண்ணி நம்மாலே ஜெயிக்க முடியுங்களா? இதை விட சிரிக்கணுமுன்னு பேராசைப் பட்டீங்கன்னா, ஒரிஜினல் அறிக்கையைப் பேப்பரிலே படிச்சுக்கோங்க! சிரிப்புக்கு நான் கியாரண்டி!

20 comments:

  1. நல்லா இருக்குங்க. பிரட் லீக்கு நாலுகால் வித்தியாசமான நகைச்சுவை. நல்லா சிரித்தேன். நன்றி.

    ReplyDelete
  2. யப்பா....

    பதிவுதான்னு பாத்தா பின்குறிப்பு இன்னும் சேட்டையா இருக்கே...

    அதுவும் அந்ந கடைசி வாக்கியம்..

    //இதை விட சிரிக்கணுமுன்னு பேராசைப் பட்டீங்கன்னா, ஒரிஜினல் அறிக்கையைப் பேப்பரிலே படிச்சுக்கோங்க! சிரிப்புக்கு நான் கியாரண்டி!//

    ஹாஹாஹா...

    சூப்பர் தல

    ReplyDelete
  3. காலை எழுந்தவுடன் பதிவு ...
    பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல கவிதை ..
    மாலை முழுதும் மறுமொழிகள் ,
    என்று அடித்து விளையாடு அப்பு...

    ReplyDelete
  4. இந்த ப்ரெட் லீங்கிற ஆளுக்கு நம்மளை மாதிரியே ரெண்டு காலுதான் இருக்குமுண்ணு நினைச்சிட்டிருந்தேன். ரேடியோவிலே "Brett Lee is bowling with one square-leg, one fine-leg, one backward square-leg and one forward short-leg"ன்னு சொன்னதும் ஒரு ஆளுக்கு மொத்தம் நாலு "leg"கான்னு எனக்கு பக்குன்னு ஆயிருச்சு!
    good sense of humour
    kalakkunga settai

    ReplyDelete
  5. உங்க கிரிக்கெட் அறிவுனு ஒரு ஜோக் போட்டிருக்கீங்களே போதாதா.. ;)

    ReplyDelete
  6. ஆத்தாடி, கலக்கிபுட்டீங்க தல, இனிப்பு தடவிய மாத்திரை வீரியமாதான் இருக்கு.

    ReplyDelete
  7. தினந்தோரும் திகட்டாமல்
    துடிப்பாய் சேட்டையோடு
    மனம்கவர இருகையிட்டு
    மயக்கும் சேட்டைக்காரா

    மனதிலில் உள்வாங்கி
    மற்றதை படிப்பதற்கு
    வினவினேன் நாளிடையில்
    வருத்தமது வேண்டாம்...

    வழக்கமான கலக்கல்தான்
    வந்திருக்குக்கும் இப்பதிவில்
    வாழ்த்துக்கள் விதவிதமாய்
    வகைவகையாய் வழங்குதற்கு...

    பிரபாகர்.

    ReplyDelete
  8. சேட்டை..... வேட்டைய்ய்டுதுங்க.

    ReplyDelete
  9. //நல்லா இருக்குங்க. பிரட் லீக்கு நாலுகால் வித்தியாசமான நகைச்சுவை. நல்லா சிரித்தேன். நன்றி.//

    வாங்க வாங்க! முத முதலா வந்து நாலு வார்த்தை நல்லாதா சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க! அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  10. //யப்பா....

    பதிவுதான்னு பாத்தா பின்குறிப்பு இன்னும் சேட்டையா இருக்கே...//

    எல்லாம் ஒரு ஃப்ளோவிலே வர்றது தானே! ஹி..ஹி!!

    //ஹாஹாஹா...

    சூப்பர் தல//

    மிக்க நன்றிண்ணே! உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்!!

    ReplyDelete
  11. //காலை எழுந்தவுடன் பதிவு ...
    பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல கவிதை ..
    மாலை முழுதும் மறுமொழிகள் ,
    என்று அடித்து விளையாடு அப்பு...//

    அண்ணே! பக்கத்துலே இருந்து பார்த்தா மாதிரியே கரெக்டா சொல்றீங்களே? :-))

    ரொம்ப நன்றிண்ணே!!

    ReplyDelete
  12. //good sense of humour
    kalakkunga settai//

    மிக்க நன்றிங்க! உற்சாகமளித்திருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  13. // உங்க கிரிக்கெட் அறிவுனு ஒரு ஜோக் போட்டிருக்கீங்களே போதாதா.. ;) //

    ஹா..ஹா! என் பொது அறிவு பத்தி தினம் ஒரு பதிவு போடலாம். :-)) நன்றிங்க!!

    ReplyDelete
  14. //மனதிலில் உள்வாங்கி
    மற்றதை படிப்பதற்கு
    வினவினேன் நாளிடையில்
    வருத்தமது வேண்டாம்...//

    ஆஹா! நீங்க சொன்னா வருத்தப்படுவேனுங்களா? நீங்களாவது அட்வைஸா சொன்னீங்க! ரெண்டு மூணு பேரு மிரட்டியே புட்டாங்க! :-))

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

    ReplyDelete
  15. //சேட்டை..... வேட்டைய்ய்டுதுங்க.//

    வாங்க! வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  16. //இந்தியாவில் மக்களை மகிழ்விக்கிற கிரிக்கெட், சினிமா இரு துறைகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, விரைவிலேயே சென்னையில் இன்னொரு பாராட்டு விழா நடைபெறலாம் என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிச்சமிருக்கிறது அரசியல் மட்டும் தானே, மூணையும் போட்டு ஒரேயடியா குழப்பறதுக்கு நம்ம நாட்டுலே பாராட்டு விழாவைத் தவிர வேறே என்ன வழியிருக்கு சொல்லுங்க!// இது நச்சு ன்னு இருக்கு...கலக்கல் சேட்டை

    ReplyDelete
  17. இன்னிக்குப் பாருங்க, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கங்கள் ஒரு அறிக்கை விட்டிருக்காங்க! " இனிமே வேட்டைக்காரன் மாதிரி படமெல்லாம் எடுக்க மாட்டோம்,"னு தான் சொல்லிட்டாங்களோன்னு ஆசை ஆசையாப் பார்த்தா, திரையரங்குகளிலே ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு கண்டனம் தெரிவிச்சிருக்காங்கப்பு!

    ................... ha,ha,ha,ha,......அங்கே இருக்கிறது, சேட்டைக்காரனின் அக்மார்க் கருத்து.

    ReplyDelete
  18. //((இந்தியாவில் மக்களை மகிழ்விக்கிற கிரிக்கெட், சினிமா இரு துறைகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, விரைவிலேயே சென்னையில் இன்னொரு பாராட்டு விழா நடைபெறலாம் என்று நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிச்சமிருக்கிறது அரசியல் மட்டும் தானே, மூணையும் போட்டு ஒரேயடியா குழப்பறதுக்கு நம்ம நாட்டுலே பாராட்டு விழாவைத் தவிர வேறே என்ன வழியிருக்கு சொல்லுங்க!))
    இது நச்சு ன்னு இருக்கு...கலக்கல் சேட்டை//

    ஆஹா! இமலாதித்தன்! வாங்க வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அடிக்கடி வாங்க!!

    ReplyDelete
  19. //((இன்னிக்குப் பாருங்க, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் சங்கங்கள் ஒரு அறிக்கை விட்டிருக்காங்க! " இனிமே வேட்டைக்காரன் மாதிரி படமெல்லாம் எடுக்க மாட்டோம்,"னு தான் சொல்லிட்டாங்களோன்னு ஆசை ஆசையாப் பார்த்தா, திரையரங்குகளிலே ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு கண்டனம் தெரிவிச்சிருக்காங்கப்பு!))

    ................... ha,ha,ha,ha,......அங்கே இருக்கிறது, சேட்டைக்காரனின் அக்மார்க் கருத்து.//

    ஹிஹி! ஆமாங்க, நான் கூட ஏதோ நல்ல காலம் பொறக்கப்போவுதோன்னு ஆசை ஆசையாப் படிச்சேனுங்க! :-)

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க!!

    ReplyDelete
  20. இனிமேல் கிரிக்கெட் ரசிகர்கள் மேட்ச் பார்க்கப் போனால் கையில் பைனாகுலர் வைத்துக்கொண்டு
    கமான் சச்சின்
    கமான் டோனி
    கமான் கமான்னு கத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாமா

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!