"சேட்டை! சேட்டைக்காரனைக் காணோம்!" நீண்ட நாட்களுக்குப் பிறகு மின்னஞ்சலைத் திறந்ததும், சகபதிவர் ஒரு பெட்டிச்செய்தி அனுப்பினார்.
"யோவ், சேட்டைக்காரன்கிட்டேயே சேட்டைக்காரனைக் காணோமுன்னு சொல்றே? நல்லாத்தானே இருந்தே, ஏன் திடீர்னு எஸ்.வி.சேகர் மாதிரி பேசறே?"
"ஐயோ, சேட்டை, உன் பிளாகைக் காணோம் சேட்டை! தி.மு.க.காங்கிரஸுக்கு ஓட்டுப்போடாதேன்னு பேனர் போட்டியே. வச்சிட்டாங்களா ஆப்பு?"
"அட, என்னையெல்லாம் அவங்க சீரியஸா எடுத்துக்கிறாங்களா? இரு பார்க்கிறேன்," என்று உடனடியாக பிளாகருக்குள்ளே லாக்-இன் செய்தால் "
URL not found" "page does not exist" என்று விதவிதமாக கலவரமூட்டும் செய்திகளாகவே வந்து கொண்டிருந்தது.
"ஐயையோ, என் பிளாகைக் காணோமே? யாராவது சூனியம் வச்சிட்டாங்களோ?"
"உன் பிளாகுக்கு இன்னொருத்தர் வேறே தனியா சூனியம் வைக்கணுமா? உடனடியா அதை ரிட்ரீவ் பண்ணப்பாரு சேட்டை!"
கையெல்லாம் கள்ள ஓட்டுப்போடப்போனதுபோல படபடத்தது. என்ன செய்ய? தொண்டை வறள்வது போலிருந்தது. வெளியே போய் ஒரு டீயோ, ஜூஸோ குடித்தால் தான் சரியாகும் போலிருந்தது. மேனேஜரிடம் விரைந்தேன்.
"சார், வெளியே போய் சூடா ஒரு சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டுட்டு வர்றேன் சார்!" உளறினேன்.
"ஓ யெஸ், அப்படியே எனக்கும் நிறைய ஐஸ் போட்டு சூடா ஒரு கிரிணிப்பழ ஜூஸ் கொண்டுவரச் சொல்லேன்!"
என் பாஸ் மட்டும் என்ன புத்திசாலியாகவா இருக்கப்போகிறார்? வெளியே இறங்கி நடந்ததும், நேரம் காலம் தெரியாமல் இஷ்டசித்தி விநாயகர் தும்பிக்கை வைத்த சினேகா போல புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
"ஓய் பிள்ளையாரே, என் பிளாகைக் காணோமுன்னு நான் பதறிட்டுக்கேன். என்னவே சிரிச்சிட்டிருக்கீரு?"
"அட, உன் பிளாகைக்காணோமா? அதான்...காலையிலேருந்து புதுசு புதுசா யாரெல்லாமோ வந்து தேங்க்ஸ் சொல்லிட்டு தேங்காய் உடைச்சிட்டுப்போனாங்க!"
"பிள்ளையாரே, மெய்யாலுமா?"
"அட ஆமா சேட்டை, ஒரு தேங்காய் பார்சல்லே கூட வந்ததுன்னா பாரேன்!"
"உமக்கு இதுலே ஒரு அற்பசந்தோஷமா? ஏதாவது வழி சொல்லுங்க புள்ளையாரே!"
"த பாரு சேட்டை, இப்போ ப்ளஸ் டூ ரிசல்டு, தேர்தல் ரிசல்டு, ஐ.பி.எல்.ரிசல்டுன்னு ஏகப்பட்ட அப்ளிகேஷன் வர்றதுனாலே, கொஞ்ச நாளைக்கு
சிங்கிள்-விண்டோ சிஸ்டத்தை நிறுத்தி வச்சிருக்கேன். நீ வேண்ணா தரமணி
ஹாக்கரநிவர்த்தி கணபதியைப் போய்ப் பாரேன்!"
பிறகென்ன, அரை நாள் காஸுவல் லீவு போட்டு விட்டு, கடற்கரைக்குப் போய் ரயிலைப் பிடித்தேன். வழிநெடுக திடீரென்று எனது வலைப்பதிவு ஏன் காணாமல் போனது என்று படமெடுத்துத் தியேட்டர் கிடைக்காத புரொட்யூஸர் மாதிரி குழம்பியபடியே போனேன்.
"நடிகைபடத்தைப் போட்டுப் பதிவு எழுதுகிறவனே! உனது வலைப்பதிவு காணாமல் போகக் கடவது!"ஐயையோ, பகலிலேயே பயங்கரமான கனவெல்லாம் வருகிறதே! தரமணியில் இறங்கி பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது அங்கே கதவு சாத்தியிருந்தது. லஞ்ச் டயமாம்!
"எக்ஸ்கியூஸ் மீ," பிள்ளையார் கோவில் வாசலில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தவரிடம் கேட்டேன். "இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க!"
"சாயங்காலம் தான் திறப்பாங்க, என்னாச்சு தம்பி? டாஸ்மாக்குலே பீர் கிடைக்காதவன் மாதிரி தத்தளிக்கிறீங்க?"
"என்னோட பிளாகைக் காணோம்மா! அதான் மண்ணடிப்பிள்ளையார் கிட்டேயிருந்து ஒரு ரெகமண்டேஷனோட வந்திருக்கேன்!"
"ஓ ஐ ஸீ!" என்று ஆங்கிலத்தில் பேசி அசத்தினார், "இதுலே ஒரு பூசணிக்காயை எடுத்திட்டுப்போய் வாசல்லே தொங்க விடு! காத்து கருப்பு எதுவும் அண்டாது. மீறித் தொட்டா கண்ணுலே அல்சர் வந்து அழுது அழுதே அம்பேலாயிருவாங்க!"
ஹாக்கரநிவர்த்தி விநாயகரே தர்பூசணி விற்பவராக வந்து சொன்னதுபோலிருக்கவே, அந்தப் பூசணிக்காயை வாங்கிவந்து, இதோ என் வலைப்பூவில் போட்டுவிட்டேன்.
யாருக்கு வேண்டுமென்றாலும் தனிமடல் எழுதுங்கள். தட்சணை கேட்க மாட்டேன். இலவசம்!
பின்குறிப்பு: பூசணிக்காயில் வரையப்பட்டிருகும் அழகான படம் எனதல்ல!