சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் என்னை விட விற்பன்னர்கள் இருப்பதால், பிரபலங்கள் எல்லாம் எழுதி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். ஓவராகக் காத்திருந்தால் ‘எங்கேயும் எப்போதும்,’ போல விமர்சனம் டூ லேட் ஆகி முடியாமலே போய் விடுமோ என்ற பயத்தில், என் மனதுக்குப் பட்டதை எழுதப்போகிறேன். எவ்வளவோ வாசிச்சிட்டிங்க, இதை வாசிக்க மாட்டீங்களா?
அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, பல்லவ இளவரசனாக இருந்த போதிதர்மரை(சூர்யா), ராஜாமாதா ஒரு காரணமும் சொல்லாமல் சீனாவுக்குப் போகச்சொல்கிறார். (யாராவது அந்த ராஜமாதாவின் டி.என்.ஏவை மையமாக வைத்து இன்னொரு படம் எடுக்காம இருக்கணும்). தற்காப்புக்கலை, வைத்தியம், அஷ்டமாசித்தியின் ஒரு பகுதி ஆகிய ஆயகலைகளை அறிந்த போதிதர்மன், காஞ்சீபுரத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு, பாலைவனமெல்லாம் கடந்து (போதிதர்மனுக்கு ஜியாகிரபி தெரியாதுபோலும்) காஸ்ட்யூமெல்லாம் மாற்றிக்கொண்டு, சீனாவுக்குப் போகிறார். சில பல உயிர்களைக் காப்பாற்றி, கைம்மாறாக விஷம் கலந்த உணவை வாங்கிச் சாப்பிட்டு பொசுக்குன்னு போயிடறாரு! அவரை ஒரு அரிசிச்சாக்குலே போர்த்தி புதைச்சிடறாங்க! (சீனாவுக்கெல்லாம் உதவி பண்ணினா இதுதான் கதி-ன்னு சொல்றாங்களோ?)
இப்போ, கதை சமகாலத்துக்கு வருது. தமிழிலே சப்-டைட்டில் வந்தாலும், நம்மூரு மாதிரியே இலக்கணசுத்தமாக இங்கிலிபீசு பேசுற சீனாக்காரங்க, டோங்க் லீ-ன்னு ஒரு வில்லனைக் கூப்பிட்டு, ஆபரேஷன் ரெட்-னு ஒரு திட்டம் சொல்றாங்க. அதன்படி டோங்க்லீ இந்தியாவுக்குப் போயி, மரபணு ஆராய்ச்சி பண்ணுற சுபா(ஷ்ருதி ஹாசன்)வைத் தீர்த்துக்கட்டணும்! ஏன்னா, சுபா போதிதர்மனோட வம்சாவளியிலே அவரோட டி.என்.ஏ எண்பது சொச்சம் சதவிகிதம் பொருந்துற அர்விந்த் (இன்னொரு சூர்யா) எனப்படுகிற சர்க்கஸ் தொழிலாளியோட டி.என்.ஏவை ஆராய்ச்சி பண்ணப்போறாராம். இந்த டோங்க்லீ இந்தியாவுக்கு வந்து, சென்னைப் போலீசையெல்லாம் நோக்குவர்மம் என்ற கலையாலே (ஹிஹிஹிஹி!) போட்டுத்தள்ளி, நாய்பிடிச்சு ஊசிபோட்டு வைரசைப் பரப்புறாரு! (பயோ வார்னு சொல்லுதாக; பயமாத்தான் இருக்கு.) இதுக்கு நடுவுலே ரொமான்ஸா உடான்ஸான்னு புரியாம ஒரு டூயட், ஒரு சோகப்பாட்டு, கொஞ்சமா சுவாரசியம்னு எதையெதையோ கலந்துகொட்டி ஒப்பேத்துறாங்க! கடைசியிலே ஹீரா உடம்பெல்லாம் கேபிளைச் சகட்டுமேனிக்கு சொருகி, அவரைத் தண்ணியிலே ஊறப்போட்டு (இட்லிக்கா அரைக்கப்போறாய்ங்க?) வில்லனோட சண்டைபோட்டு, தமிழர்களுக்குத் தர்ப்பணம்னு, அதாவது அர்ப்பணமுன்னு முடிக்கிறாய்ங்க!
படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, போதிதர்மனின் வரலாற்றில் (கொஞ்சம் நியூஸ் ரீல் போலிருந்தாலும்), நல்ல படப்பிடிப்பு காரணமாகவும், சூர்யாவினாலும் ஒன்ற முடிகிறது. அதே போல சாலையில் சூர்யா, ஷ்ருதியை யானையில் ஏற்றிச் செல்கிற காட்சி, சூர்யா ஷ்ருதியிடம் கோபப்படுகிற காட்சி என்று பலரகமாய் ஞாபகம் வைக்கத்தக்க காட்சிகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
மொத்தத்துலே சரியான காரம், மணம், குணம் நிறைந்த மசாலாப்படம் என்று டோங்க்லீ மீது சத்தியமாகச் சொல்லலாம். பிரச்சினை என்னான்னா, பாயசத்துலே கடுகு, உளுத்தம்பருப்பு தாளிச்சுக் கொட்டினா மாதிரி, காட்சிக்குப் பொருத்தமில்லாமல், இடைச்செருகல்களாய் வரும் சில வசனங்கள், பாடல்கள், காட்சிகள்! குறிப்பாக, சாவி கொடுத்துத் தமிழுணர்வை உசுப்பேத்த கொஞ்சம் மெனக்கிட்டிருக்காங்க! சுத்தமா ஒட்டலீங்கண்ணா!
சூர்யா ஒருத்தரை நம்பியே படம் எடுத்திருக்காங்கன்னு சொல்லுற அளவுக்கு பெரும்பாலும் அடக்கி ஆனா அழுத்தமா வாசிச்சிருக்காரு! ஷ்ருதிஹாசன் நல்ல அறிமுகம்; கொடுத்த வாய்ப்பை முயன்று பயன்படுத்தியிருக்கிறாரு! தமிழ் பேசறதுலே கவனம் செலுத்தினாப் போதும்! அந்த வில்லன் ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாத்தானிருக்கு; ஃபினிஷிங் சரியில்லையே! ஆ..வூன்னா நோக்குவர்மம்னு பார்த்தே சாவடிக்கிறது ஒரு கட்டத்துலே படத்துலே காமெடியில்லாத குறையைத் தீர்த்திருது.
ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப வித்தியாசமா, அவரது முந்தைய படங்களின் டியூன் சிலவற்றோடு இசைப்புயலின் டாக்ஸி டாக்ஸி மெட்டையும் வெட்டியொட்டியிருக்கிறாரு! அதுவும் அவ்வப்போது யாரோ தேள்கொட்டினது போல கூவுகிற சத்தம் பின்னணியில் வரும்போது, காதுக்குள்ளே கொசு நுழைந்தது போலிருக்கிறது. ரவி கே சந்திரன் பாடல்காட்சிகளிலும், போதிதர்மன் காட்சிகளிலும் முத்திரையைப் பதிச்சிருக்கிறாரு! ஸ்டண்டு மாஸ்டர் பீட்டர் ஹெயின் பெரிய ஏமாற்றம்! குறிப்பாக, சூர்யா வில்லனுடன் போடுகிற இறுதிச்சண்டை கொட்டாவி ரகம்! காவல் நிலையத்தில் போலீசைப் பந்தாடுகிறவனோடு, ஆராய்ச்சிக்கூடத்தில் சாதனமாயிருந்த கதாநாயகன் ஆக்கிரோஷமாகச் சண்டைபோடுவதெல்லாம் காதில் பூ! அதே போல சாலையில் கார்களும், ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் பறந்து பறந்து வருகிற காட்சியில் காட்சியமைப்பு, படு அமெச்சூரான கிராபிக்ஸ் காரணமாக சொதப்பலாய் இருக்கிறது. எடிட்டிங், அப்படியொண்ணு இருக்கா? நோ ஐடியா!
சராசரி தமிழ்ப்படமான இதை, எதிர்பார்ப்புகளின்றிப் பார்த்தால், மோசமென்று சொல்லிவிட முடியாது. ஆனால், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல், எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, சந்தடி சாக்கில் தமிழ்ப்பெருமை என்றெல்லாம் போலியாக மீசைமுறுக்கியதால் தான் இவ்வளவு விமர்சனம் வந்திருக்கிறதென்று தோன்றுகிறது.
திடுதிப்பென்று சர்க்கஸில் வேலைபார்க்கிற சூர்யா, ‘குழந்தை இறந்து பிறந்தாலும் மார்பில் வாளால் கீறுவார்களாம்,’ என்று புறநானூற்றுப் பாடலின் பொழிப்புரை சொல்வதெல்லாம் பொருத்தமாயில்லை. விட்டால் ‘குழவி இறப்பினும் ஊன்தடிபிறப்பினும் ஆளன்று என்றுவாளின் தப்பார்,’ என்று செய்யுளையே சொல்ல வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
போதிதர்மனைப் பற்றி தமிழனுக்குத் தெரியவில்லை என்றால், அதைக் கூகிளில் தேடிக் கண்டுபிடித்த முருகதாசும் ஏளனம் செய்ய என்ன இருக்கிறது? சத்தியமாக கல்வியறிவு குறைந்திருக்கிற ஒரு தேசத்தில் பலருக்கு வரலாறு தெரியாமல் இருப்பது ஒரு குற்றமல்லவே? எதற்காக இந்த ‘யுரேகா’?
அதே போல மஞ்சள் சாகுபடி செய்யாதவன், மஞ்சளுக்குப் பேட்டன்ட் கேட்கிறான் என்று ஒரு ஆதங்கம்! கூடத்தில் துளசிமாடம் கூட சயன்ஸ் என்று குமுறுகிறார்கள். இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று பிரச்சாரம் நடத்தி, அதை அவுட்-ஆஃப்-ஃபேஷன் ஆக்கிய தமிழர்களும் இருக்கிறார்களே? ஈழப்பிரச்சினையையும் விடவில்லை. ‘வீரத்துக்கும் துரோகத்துக்கும் உள்ள வித்தியாசம்,’ என்று சொல்கிறார் ஹீரோ! ( நான் ஈழம் குறித்து எழுதுவதேயில்லை; அதை எவ்வளவு குழப்ப வேண்டுமோ அவ்வளவும் செய்ய இருக்கிற ஆளுக்குப் பஞ்சமில்லை)
தமிழ், தமிழ் என்று கூச்சலிடுகிற இயக்குனர், கதாநாயகனையும் கதாநாயகியையும் ஏற்காட்டிலோ, மாமல்லபுரத்திலோ, குற்றாலத்திலோ டூயட் பாட விடுவதற்குப் பதிலாக எதற்கு வெளிநாடு போனாரோ தெரியவில்லை. இவ்வளவு டமில் பற்று உள்ள கதாநாயகன் கதாநாயகியை அம்பா ஸ்கைவாக் மாலுக்குத் தான் வரச்சொல்கிறார். நம்ம வீட்டு வசந்தபவனுக்கு வரச்சொன்னால் என்னவாம்? இவ்வளவு ஏன், போதிதர்மர் சீனாவுக்குப் போகுமுன்னர், அதே குங்க்ஃபூவையும், அதே வைத்தியத்தையும் ஏன் இன்னொரு தமிழனுக்குக் கற்றுத்தராமல் போய்விட்டார் தெரியவில்லை. ஆக, எதையோ பிடிக்க நினைத்து எதுவாகவோ முடிந்து விட்டது “ஏழாம் அறிவு”.
அப்புறம், இந்த டி.என்.ஏ.குறித்த பூச்சூடல்கள்! ஒரு வாதத்துக்கு போதிதர்மருக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவரது வழிவழிவந்தவர்களும் குரங்குப்பெடல் போடாமல் நேரடியாக சைக்கிள் ஓட்டி விடுவார்களா என்ன? ஏதோ ஒரு ஆராய்ச்சிக்கூடத்தில் படுக்கப்போட்டு, வயர்களைச் சொருகினால், தூக்கத்திலிருந்து எழுவதுபோல எழுந்து குங்க்ஃபூ சண்டைபோடத்தான் முடியுமா? (முடியலே....!) சித்தர்கள் பற்றியெல்லாம் சொல்கிறார்கள். சித்தர்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகே அபூர்வமான சக்திகளைப் பெற்றார்கள். அவர்களது வாரிசுகள் என்று சொல்லி எழும்பூர் கென்னத் சந்தில் லாட்ஜில் தங்கி கைரேகை ஜோசியம் பார்ப்பவர்களெல்லாம் சித்தராகி விட முடியுமா?
ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஒரு நாட்டுவைத்தியன் ஒரு குறிப்பிட்ட மருந்தைப்பற்றி தன் சுவடியில் “இருகுரங்கின் கையெடுத்துப் புடம்போடு,’ என்று எழுதிவைத்து விட்டுச் செத்துப்போனானாம். கொஞ்ச நாள் கழித்து, சொர்க்கத்தில் அவனை சந்தித்த நண்பர், “நீ எழுதிய சுவடியின்படி உன் மகன் கொடுத்த மருந்தால்தான் நான் செத்துப்போய் சொர்க்கத்துக்கு வந்தேன்,’ என்று சொன்னானாம். நடந்தது என்னவென்றால், இறந்துபோன வைத்தியனின் மகன் ஒரு குரங்கின் இரண்டு கைகளை வெட்டி அதைப் புடம்போட்டு மருந்தாய்க் கொடுத்திருக்கிறான். ஆனால், தமிழில் குரங்குக்கு ‘முசு’ என்று ஒரு பெயருண்டு. வைத்தியன் சொல்ல நினைத்த இருகுரங்கு – முசு-முசு-கை அதாவது முசுமுசுகை என்ற மூலிகை! இதைத் தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்று சொல்வார்கள்.
ஏழாம் அறிவு படமும் ஏறக்குறைய அப்படியே!
படம்: தட்ஸ்டமில் (அ) தட்ஸ்தமிழ்