Thursday, October 20, 2011

உயிர்த்தெழும் வினாக்குறிகள்


பஸ் நிறுத்தமாகியிருந்த ஐயனார் கோவில் வாசலில் இறங்கியதும் சோளம் சுடுகிற வாசனை சின்னத்தம்பியை வரவேற்றது. ஆலமரத்தின் பல விழுதுகள் குட்டையாக வெட்டப்பட்டிருக்க, சுற்றியெழுப்பப்பட்டிருந்த கற்சுவற்றில் திருவிழாவுக்கு வந்தவர்களும் திரும்பிப்போகிறவர்களும் அமர்ந்திருந்தனர். கரும்புச்சாறு வண்டிகளும் குச்சி ஐஸ் வியாபாரிகளும் விற்பனையில் மும்முரமாகியிருந்தனர். டீக்கடையில் கிராமத்துக்கு ஒவ்வாத உடையணிந்த வாலிபர்கள் புகையோடு புழங்கிக்கொண்டிருந்தனர். ’சுக்குக்காப்பி ரெடி’ என்று அட்டையில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்த வரிகளை வாசித்த சின்னத்தம்பிக்குப் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. காப்பிக்குச் சொல்லிவிட்டு, கல்லாவில் சட்டைபோடாமல் அமர்ந்திருந்தவரிடம் காசு கொடுத்து விட்டு பேச்சைத் தொடங்கினான்.

"ஊருக்குள்ளே தங்க ஏதாச்சும் வசதியிருக்கா அண்ணே?"

"ஓ! வேலன் விடுதி இருக்கே!" என்று சற்று மிகையாகப் புன்னகைத்தவாறே கூறினார் கல்லாக்காரர். "நட்டத்தெருவிலே இருக்கு!"

’நட்டத்தெருவில் லாட்ஜா?’ ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் சின்னத்தம்பி. சுற்றும் முற்றும் பார்த்த எல்லா முகங்களும் வேற்றுமுகங்களாயிருந்தன. சாயம்போன ரசிகர்மன்றப் பலகைகளும், உளுத்துப்போன கம்பங்களில் நார் நாராய்க்கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த கட்சிக்கொடிகளும் இந்த கிராமம் கடந்த வருடங்களில் கண்டிருந்த மாற்றங்களின் மீதமிருக்கும் சாட்சிகளாய் தென்பட்டன. ’நானும் இந்த ஊர்க்காரன் தான்,’ என்று எவரிடமாவது சொல்லவேண்டும் போலிருந்தது. காப்பி பருகிவிட்டு நட்டத்தெருவை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில், பிறந்து வளர்ந்த தெருவிலேயே காசுகொடுத்துத் தங்கப்போகிறோம் என்ற விசித்திரமான உண்மை உறுத்தியது. ஆனால், தொலைவில் புதிதாய் வண்ணம்பூசி பெருமிதத்தோடு நின்றிருந்த கோவில் கோபுரத்தைப் பார்த்ததும் சற்றே குதூகலம் ஏற்பட்டது.

நட்டத்தெருவுக்குள் நுழைந்ததும் மனதில் ஒரு அலாதியான பரபரப்பு ஆட்கொண்டது போலிருந்தது. டயர் வண்டியோட்டியதும், சைக்கிள் ஓட்டப்பழகியதும், கொடைவிழாவின்போது சிலம்பம் சுத்தியதும், ஐந்து ரூபாய்க்காக உறியடிப்போட்டியில் சொட்டச் சொட்ட நனைந்ததும், பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கையில் நெய்ப்பந்தம் ஏந்தி விசும்பிக்கொண்டே சென்றதும் இதே நட்டத்தெருவில் தான்!

பல ஓட்டுவீடுகள் கான்க்ரீட்டுக்கு மாறியிருந்தன. பொதுக்கிணற்றின் மீது வலைபோட்டு மூடியிருந்தார்கள். இறுதியாக, ’வேலன் விடுதி’ என்று பெரிய பலகை வைத்திருந்த வீட்டைப் பார்த்ததும், சின்னத்தம்பிக்கு ஒரு மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒரு காலத்தில் மீசை மணியின் அரண்மனையாக கிராமத்தாரால் கருதப்பட்ட வீடு இன்று தங்கும் விடுதியாகியிருந்தது.

வெளிச்சமும் இருளும் சரிவிகிதத்தில் கலந்திருந்த முன்னறையில், மரமேஜை போட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். மேனேஜராக இருக்கலாம்.

"வணக்கம் சார்! திருவிழாவுக்கு வந்திருக்கேன், ஒரு ரூம் இருக்குமா?"

"வாங்க தம்பி! உங்களுக்கு இல்லாமலா?" என்று சைகையால் எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்ன அந்த நபர்,"சிங்கிள் ரூம் தானே?" என்று வினவினார்.

"ஆமாம் சார், சாமிக்கு பட்டு சாத்திட்டு சாயங்காலமே கிளம்ப வேண்டியது தான்! குளிச்சுட்டு கிளம்பற வரையிலும் இருக்க ஒரு ரூம் இருந்தாப்போதும்!," என்று கூறிய சின்னத்தம்பி, சற்றே தயக்கத்துடன்," ஃபேன் இருக்குமில்லையா?" என்று வினவினான்.

"என்ன அப்படிக் கேட்டுட்டீங்க தம்பி?" என்று சிரித்தார் அந்த ஆசாமி. "ஏ.சி.ரூமே இருக்கு! ஆனா, இப்போ காலியில்லை! சோப்பாயில் கம்பனிக்காரங்க வந்து தங்கியிருக்காங்க! லேய் வேலு, நாலாம் நம்பர் ரூமை சுத்தம் பண்ணியாச்சான்னு பார்த்துச் சொல்லு!" என்று கண்ணில் படாத வேலுவுக்கு இங்கிருந்தே உரக்க கட்டளையிட்டார்.

"எந்த சோப்பாயில் கம்பனி?"

"தெரியாதா தம்பி? அவங்க தான் கோவிலை புதுப்பிச்சு குடமுழுக்கு பண்ணினாங்க! இந்த தெரு முழுக்க கம்பனி ஆளுங்க தான் வாடகைக்குக் குடியிருக்காங்க! அவங்க ஆளுங்க வந்தா தங்கிப்போகத்தான் லாட்ஜே ஆரம்பிச்சோம்! தம்பி எந்தப் பக்கத்துலேருந்து வர்றீங்க?"

"பொறந்தது இந்த ஊரு தானுங்க," என்று புன்னகைத்தான் சின்னத்தம்பி. "இப்போ இருக்கிறது பெங்களூரு!"

"அட, இந்த ஊருக்காரங்களா?" என்று சிரித்தார் அந்த மேனேஜர். "இந்த ஊருக்காரங்கன்னு சொல்லிட்டு வர்றவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சுதுங்க!"

"பழைய ஆளுங்க ஒருத்தர் கூட இல்லியா?"

"ம், இருப்பாங்க, சுப்புலாபுரம், தெம்மாம்பட்டி பக்கத்துலே இருப்பாங்க! மத்தவங்கெல்லாம் கோவில்பட்டி, திருநேலின்னு போயிட்டாங்க!"

"இந்த வீட்டுலே குடியிருந்தாங்களே மீசை மணி? அவங்க இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியுமா?"

"மீசை மணியா?" சிரித்தார் மேனேஜர். "நம்மளுக்கு யாரையும் தெரியாதுங்க! எனக்குத் தெரிஞ்சு ஃபேக்டரி கொடுத்த காசை வாங்கிட்டு, நீட்டுனே எடத்துலே கையெழுத்துப் போட்டுட்டு பழைய ஆளுங்கெல்லாம் எங்கெங்கேயோ போயிட்டாங்க! பாவம்! அப்புறம்......அட்வான்ஸ் ஒரு இருநூறு ரூபாய் கொடுங்க!"

எளிமையான நோட்டுப்புத்தகத்தில் சின்னத்தம்பியின் விபரங்களை எழுதி கையெழுத்து வாங்கி, விடுதியின் பெயரில்லாத ரசீது கிழித்துக்கொடுத்தார் மேனேஜர். வேலு என்கிற அந்த சிறுவன் வலுக்கட்டாயமாக சின்னத்தம்பியின் ஒரே பையை வாங்கிச் சுமந்து கொண்டு வந்து அறையில் வைத்தான். டவுண் லாட்ஜுக்களைப் போலவே தலைசொரிந்து நின்றான்.

"இந்தாப்பா!" என்று ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தான் சின்னத்தம்பி. "குடிக்கத் தண்ணி வேணும். குழாயிலே தண்ணி வருமில்லே?"

"வருமுங்க, சுடுதண்ணி கொண்டு வரச்சொல்லட்டுமா?" என்று கரிசனத்தோடு கேட்டான் வேலு.

"வேண்டாம்! குடிக்க மட்டும் தண்ணி கொண்டு வா!" என்று சொல்லி அவனை அனுப்பினான்.

சின்னத்தம்பி அறையின் வெளியே இருந்த வராந்தாவிலிருந்து நோட்டமிட்டபோது, அனேகமாக இந்த லாட்ஜுக்காக கிணற்றடி, மாட்டுத்தொழுவம், கொல்லைப்புறம், புளியமரம் என்று ஒரு காலத்தில் மீசை மணி வீட்டின் அம்சங்களாயிருந்த சில அடையாளங்கள் தரைமட்டமாகியிருக்கக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டான். இன்று முற்றிலும் அந்நியமாகத் தெரிகிற இந்த கிராமத்தின் கடந்தகாலத்தை நினைவுகூர, மீசை மணியைப் பற்றி யோசித்தால் போதுமானதாயிருக்கும் என்று பட்டது.

அந்தக் காலத்தில் அந்த வீட்டின் திண்ணைதான் தெருவிலேயே அகலமானதாகச் சொல்லப்பட்டது. பகல் நேரத்தில் மீசை மணி என்று எல்லாராலும் அழைக்கப்பட்ட சுப்பிரமணியும், சினேகிதர்களும் அந்தத் திண்ணையில் தான் அரசியலும் ஊர்வம்பும் பேசுவார்கள். மதிய நேரங்களில் கல்யாண ஜமுக்காளம் விரித்து சீட்டாடுவார்கள். கடந்து போகிற பெண்களை வயது வித்தியாசமின்றி நமுட்டுச்சிரிப்போடு பார்வையால் உரித்துப் பார்ப்பார்கள். தபால் பட்டுவாடா செய்ய வரும் மாரிமுத்துவை உட்காரவைத்து, யார் யாருக்கு எங்கெங்கிருந்து தபால்,மணியார்டர் வந்திருக்கிறது என்று விசாரித்து அனுப்புவார்கள். எல்லாம் வருடத்தில் நான்கு மாதம் விவசாயம் செய்து விட்டு, எட்டு மாதங்கள் வியர்வை சிந்தாமல் உட்கார்ந்து சாப்பிடுகிற மிதப்பு! இரவானால், சீட்டுக்கச்சேரி மாடிக்கு இடம்பெயர்ந்து விடும்; இம்முறை மடிநிறைய பணத்துடனும் குடல்நிறைய மதுவுடனும் ஆட்டம் நடைபெறும். ஓரிரு முறை போலீஸ் வந்து போயிருந்தது என்றாலும், அவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டுதானிருந்தது.

மீசை மணிக்கு இரண்டு குழந்தைகள்! பெரியவள் கிரிஜா; சின்னவன் சதீஷ்! மனைவி கங்காவை மாலையில் தெருவின் ஏதேனும் ஒரு வீட்டுத்திண்ணையில் பெண்களோடு உட்கார்ந்து உரக்கப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடியும். மீசை மணியின் மனைவி என்பதாலோ, அந்தத் தெருவிலேயே பணக்காரி என்பதாலோ, அவளது நச்சரிப்புக்களையும் தலையீடுகளையும் பெரும்பாலானோர் சகித்துக்கொண்டிருந்தனர். அன்றாடங்காய்ச்சிகளோடு அவள் பேசுவதில்லையென்பதால், பலரின் ஏழ்மை கொச்சைப்படாமல் தப்பித்திருந்தது. அவளிடம் அதிகம் ஒட்டாமல் இருப்பதே நல்லது என்று மானாபிமானம் பார்க்கிற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போதித்து வைத்திருந்தனர்.

"டேய் சின்னா, அந்த கங்கா உன்கிட்டே என்னடா பேசிட்டிருந்தா?" என்று ஒரு முறை அம்மா, தான் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, வாசலிலேயே நிறுத்திக் கேட்டது ஞாபகம் வந்தது.

"ஒண்ணுமில்லேம்மா! நேத்து நம்ம வீட்டுக்கு ஒருத்தரு பூ வாங்கிட்டு வந்தாரே, அவரு யாருன்னு கேட்டாங்க! எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்," என்று கபடமில்லாமல் தான் சொன்னதும் நினைவுக்கு வந்தது. தலையில் பேரிடி இறங்கியது போல நிலைகுலைந்த அம்மா அன்று இரவு முழுவதும் உறங்காமல் அழுது கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. பணம் தருகிற மிதப்பில் பிறரது ஒழுக்கத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதை வாடிக்கையாக்கியிருந்த கங்காவின் குரூரபுத்தியை அறியுமளவு அப்போது அவனுக்கு அறிவு வளர்ச்சி இருந்திருக்கவில்லை.

ஒருபோகமே விளையும் பூமியையும் கடனின் அகோரப்பசிக்கு இரையாக்கிவிட்டு, எதிர்காலக்கவலைகளோடு நகரம்நோக்கிக் குடிபெயர்ந்தவர்களில் சின்னத்தம்பியின் குடும்பமும் ஒன்று. ’ஊரா அது? சவத்துமூதிங்க மொகத்துலே முழிக்காம சாவணும்,’ என்ற வைராக்கியத்தில் மட்டும் ஜெயித்து நோயிடம் தோற்றுப்போனார் அப்பா. அம்மா திடமாயிருந்தாள் என்றாலும் இயற்கை முந்தியது. பல வருடங்கள் கழித்து நள்ளிரவில் அவனை எழுப்பி,"நெஞ்சு வலிக்குதுடா....போன பங்குனி உத்திரத்துக்கே ஊருக்குப் போயிருக்...,’ என்று முடிக்காமல் விழுந்து இறந்தாள் அம்மா. அதன்பிறகு, சின்னத்தம்பியின் வாழ்க்கை வளைகுடாவில் வேலை, காதல், திருமணம் என்று குறிப்பிடும்படியான சோகங்களின்றி சுகமாகவே கழிந்தது. இப்போது ஊருக்கு வந்திருப்பது கூட அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான்!

ஆனால், இந்த கிராமத்தைப் பணத்தால் அடித்துப்போட்டிருக்கிறார்கள். கோவில் ஒன்றைத் தவிர அங்கு அவனுக்குப் பரிச்சயமானது எதுவுமில்லாதது போலிருந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க ஒட்டு வீடுகளே தென்பட்டன. ஒன்றுக்கு இரண்டாய் செல்போன் கோபுரங்கள். தூரத்து வானத்தில் சோப்பாயில் கம்பனியிலிருந்து செங்குத்தாய் எழும்பி வானத்தில் கலக்கும் கரும்புகையைப் பார்த்தபோது அப்பாவின் சாபம் பலித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

"ஐயா!"

நினைவுகளிலிருந்து தலைசிலுப்பித் திரும்பி நோக்கிய சின்னத்தம்பி இடுப்பில் தண்ணீர்ப்பானையில் வாசலருகே நின்றிருந்த அந்த வயதான பெண்மணியைக் கவனித்தான்.

"ஐயா! தண்ணி கொண்டாந்திருக்கேன்!"

சற்றே புருவஞ்சுருக்கி யோசித்தபோது அந்த முகம் பரிச்சயமாகத் தெரிந்து அடிவயிற்றில் ஒரு மெல்லிய வேதனை ஏற்பட்டது. அந்தப் பெண்மணியை உள்ளே அனுமதித்தவன், அவள் அறையின் ஒரு மூலையிலிருந்த ஸ்டூலின் மேல் அந்தப் பானையை வைத்துவிட்டு, செயற்கையாய் புன்னகைத்து விட்டு வெளியேறும் வரையிலும் அவளது கண்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவளை அடையாளம் கண்டுகொண்டதுமே, பல வருடங்களுக்கு முன்னர் அவள் தன்னிடம் கேட்ட கேள்வியும் ஞாபகத்துக்கு வரவே, பொங்கிவந்த அனுதாபத்தைத் தோற்கடிக்க விரும்பாமல், சின்னத்தம்பி அவள் வெளியேறும்வரை காத்திருந்தான்.

"ஏண்டா சின்னா? நேத்து உங்க வீ.ட்டுக்கு ஒருத்தரு பூ வாங்கிட்டு வந்தாரே, அவரு யாருடா?"

அவள் போய் பல நிமிடங்களாகியும், எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் அவள் அவனிடம் கேட்டிருந்த கேள்வி மீண்டும் முன்வந்து நின்றது.

16 comments:

  1. மெய்யாலுமே கலக்கிட்ட தல

    ReplyDelete
  2. வெகு அருமையான கதை. மிக எளிமையான நடை.

    காலத்தின் சுழற்சியில் எல்லாம் ஆங்காங்கே மாறிக்கொண்டே தான் வருகின்றன.

    ஒரு சில சம்பவங்களை மட்டுமே என்றும் நம் மனம் மறக்க முடிவதில்லை.

    முடிவு வரிகளில் அந்தத் தண்ணீர் கொண்டு வந்த பணக்காரியாக இருந்த வம்புக்காரப் பொம்பளையும் அல்லவா மாறியிருக்கிறாள்!

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  3. காலம் ஒருவரை எப்போது வேண்டுமானாலும் புரட்டிப்போடும்.அருமையான கதை சேட்டை..!!

    ReplyDelete
  4. நல்ல கதை சேட்டை. எத்தனை மாற்றங்கள் நமது ஊர்களில். 'பணம் இன்று இருக்கும் நாளை போகும்' என்பதை சொல்லியது அழகு.

    ReplyDelete
  5. // தபால் பட்டுவாடா செய்ய வரும் மாரிமுத்துவை உட்காரவைத்து, யார் யாருக்கு எங்கெங்கிருந்து தபால்,மணியார்டர் வந்திருக்கிறது என்று விசாரித்து அனுப்புவார்கள்.//

    கிராமத்தில் இந்த மாதிரி தொல்லை தான் அதிகம்...

    நடை நல்லா இருக்கு...

    ReplyDelete
  6. ஏரியல் வியூவில் ஒரு கிராமத்தைப் பார்த்த திருப்தி. நான் பிறந்த ஊர்கூட இப்போது பார்க்கையில் நிறைய மாறித்தான் இருக்கிறது. காலம்! உங்கள் எழுத்து நடை எப்படித்தான் காமெடிக்கும் சீரியசுக்கும் தகுந்தாற்போல் மாறுகிறதோ... பிரம்மாதம் போங்கோ...

    ReplyDelete
  7. அற்புதம். அருமையான நடை.

    கதையின் ஆரம்பம் முதலே ஏதோ ஒரு சொல்ல முடியாத நெருடல் நெஞ்சில் எழுகிறது. மிக அற்புதமான, தெளிவான, மிகையில்லாத சொல்லாடல்.

    God Bless You.

    ReplyDelete
  8. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஏனோ வசதிகள் இருக்கும் பொழுது புரிவதில்லை.

    அருமையான கதை.

    ReplyDelete
  9. / பல வருடங்களுக்கு முன்னர் அவள் தன்னிடம் கேட்ட கேள்வியும் ஞாபகத்துக்கு வரவே, பொங்கிவந்த அனுதாபத்தைத் தோற்கடிக்க விரும்பாமல், சின்னத்தம்பி அவள் வெளியேறும்வரை காத்திருந்தான்./

    உண்மையிலுமே சின்னத் தம்பி நல்ல தம்பிதான்.நெருடலில்லாத பாத்திரப் படைப்பு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. குட் ஒன்.. மள மளவென நகரும் எழுத்து நடை

    ReplyDelete
  11. //வெளங்காதவன் said...

    :) கலக்கல்....//

    மிக்க நன்றி! :-)

    //suryajeeva said...

    மெய்யாலுமே கலக்கிட்ட தல//

    மிக்க நன்றி நண்பரே! :-))

    //வை.கோபாலகிருஷ்ணன் said...

    வெகு அருமையான கதை. மிக எளிமையான நடை. காலத்தின் சுழற்சியில் எல்லாம் ஆங்காங்கே மாறிக்கொண்டே தான் வருகின்றன. ஒரு சில சம்பவங்களை மட்டுமே என்றும் நம் மனம் மறக்க முடிவதில்லை.//

    மாற்றங்கள் நிலையானவை என்றாலும், எல்லா மாற்றங்களையும் ஏற்கும் பக்குவம் எல்லாருக்கும் வருவதில்லை என்ற கருவையே எழுத எண்ணினேன் ஐயா!

    //முடிவு வரிகளில் அந்தத் தண்ணீர் கொண்டு வந்த பணக்காரியாக இருந்த வம்புக்காரப் பொம்பளையும் அல்லவா மாறியிருக்கிறாள்! பாராட்டுக்கள். vgk//

    காலம் எல்லாரையும் மாற்றியே தீரும்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! :-)

    //சேலம் தேவா said...

    காலம் ஒருவரை எப்போது வேண்டுமானாலும் புரட்டிப்போடும்.அருமையான கதை சேட்டை..!!//

    அதே! நான் சொல்ல விரும்பியதும் அதே தான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

    //வெங்கட் நாகராஜ் said...

    நல்ல கதை சேட்டை. எத்தனை மாற்றங்கள் நமது ஊர்களில். 'பணம் இன்று இருக்கும் நாளை போகும்' என்பதை சொல்லியது அழகு.//

    பணம் ஆக்கவல்லது; அழிக்கவும் வல்லது என்பது இன்னும் புரியாதவர்கள் சிலரை பார்த்துப் பழகியிருக்கிறேன் வெங்கட்ஜீ! அதன் தாக்கம் இந்தக் கதையில் இருப்பது ஓரளவு உண்மையே! மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-)

    //ஸ்வர்ணரேக்கா said...

    கிராமத்தில் இந்த மாதிரி தொல்லை தான் அதிகம்...//

    மிக மிக அதிகம்! பார்த்திருக்கிறேன்!

    //நடை நல்லா இருக்கு...//

    மிக்க நன்றி! :-)

    //விக்கியுலகம் said...

    அருமை//

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  12. //Philosophy Prabhakaran said...

    Classic...!//

    மிக்க நன்றி! :-)

    //Ah'ham said...

    Beautiful writing//

    மிக்க நன்றி! :-)

    //கணேஷ் said...

    ஏரியல் வியூவில் ஒரு கிராமத்தைப் பார்த்த திருப்தி. நான் பிறந்த ஊர்கூட இப்போது பார்க்கையில் நிறைய மாறித்தான் இருக்கிறது. காலம்!//

    கிராமத்தில் பிறந்து வளர்ந்த நமக்கு சட்டென்று அதன் சித்திரம் கண்முன் வந்து நின்று விடுகிறதே! :-)

    //உங்கள் எழுத்து நடை எப்படித்தான் காமெடிக்கும் சீரியசுக்கும் தகுந்தாற்போல் மாறுகிறதோ... பிரம்மாதம் போங்கோ...//

    கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது உண்மைதான். இல்லாவிட்டால், சீரியஸ் கதை வாசித்துச் சிலர் சிரிக்கிற அபாயம் இருக்கே! :-)

    மிக்க நன்றி! :-)

    //வெட்டிப்பேச்சு said...

    அற்புதம். அருமையான நடை.//

    மிக்க மகிழ்ச்சி!

    //கதையின் ஆரம்பம் முதலே ஏதோ ஒரு சொல்ல முடியாத நெருடல் நெஞ்சில் எழுகிறது. மிக அற்புதமான, தெளிவான, மிகையில்லாத சொல்லாடல்.God Bless You.//

    மிக்க நன்றி! கிராமத்தில் இன்னும் வேர்கள் இருப்பவர்களுக்கு அந்த நெருடல் இயல்பாகவே புரியும் என்ற எனது நம்பிக்கை வீண்போகவில்லை.

    //வேங்கட ஸ்ரீனிவாசன் said...

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஏனோ வசதிகள் இருக்கும் பொழுது புரிவதில்லை.அருமையான கதை.//

    மிகவும் உண்மை! எத்தனையோ உதாரணங்களைப் பார்த்தும் பலருக்குப் பட்டறிவு ஏற்படாமல் போவதே வாடிக்கையாய் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    //G.M Balasubramaniam said...

    உண்மையிலுமே சின்னத் தம்பி நல்ல தம்பிதான்.நெருடலில்லாத பாத்திரப் படைப்பு.பாராட்டுக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! உங்கள் பாராட்டு எனக்கு எப்போதும் பெருமகிழ்வைத் தருவது! :-)

    //சி.பி.செந்தில்குமார் said...

    குட் ஒன்.. மள மளவென நகரும் எழுத்து நடை//

    மிக்க நன்றி தல! தல சொன்னா டபுள் மகிழ்ச்சி! :-)

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!