தவமுனிவன் காசிபனை மாயையென்றும் பேரரக்கி
தடமுழலச் செய்தனளே மையலினால்-முன்கிடைத்த
சிவனருளும் சிறுமதியால் சிதைவுறவே ஈன்றனரே
சிங்கமுக(ன்) ஆனைமுக(ன்) சூரனெனும் மூவரையே
புவனமுதல அமரருறை உலகனைத்தும் சிறையுறவும்
புலம்பினரே தேவரெலாம் கயிலையுறை ஈசனிடம்
அவனிதனில் அறநெறிகள் நிலைபெறவே முக்கண்ணன்
அக்கினியாய் அருளினனே ஆறுமுகக் கடவுளையே!
( 1 )
மும்மலமாய் மறைகூறும் தீயகுணம் ஒவ்வொன்றும்
முழுவுருவம் பெற்றனவே மூவரிடம்-சூரனவன்
அம்புவியோர் போல்முகமும் ஆணவமும் கொண்டவனாம்
அவனிளவல் தாரகனோ மாயையெனும் மருள்கொண்டான்
சிம்மமதை ஒத்தமுகம் கொண்டவனாம் சிங்கமுகன்
செம்மைதனைச் சேராதே கன்மமெனும் வினைகொண்டான்
செம்மலர்கள் ஆறினிலே செஞ்சுடராய் உதித்தகுகன்
செருக்குற்ற மூவர்தமை அழித்தற்கே உருக்கொண்டான்
( 2 )
பொய்கைதனிற் பூத்தமலர் போன்றதிருக் குழந்தைகளின்
பொன்னுடல்கள் ஆறினையும் ஆதிசிவன் அணைத்ததுவும்
மெய்யவரைக் காப்பவளாம் மேருவுறை மலைமகளும்
மேதினியில் அறம்தழைக்க வேலொன்றை அளித்திட்டாள்
உய்யுதற்கே உலகுதொழும் உமையவளின் கழல்மணிகள்
உதிர்கையிலே இலச்சத்தி ஒன்பதிமர் ஆயினரே!
செய்யரிய செயும்வீர பாகுமுதல் ஆனபிறர்
செவ்வேளின் போர்ப்படையாய்ச் சேர்ந்தனரே வேலனுடன்!
( 3 )
திருமுருகன் பெரும்படையைக் கிரவுஞ்சம் மலைமறிக்க
திரண்டுவந்த படைமயங்கி அசுரனிடம் வீழ்ந்துவிட
தருணமிது எனவுணர்ந்தே தாய்கொடுத்த வேலெறிந்தே
தடைவிலக்கித் தாரகனின் உடல்பிளந்தான் வடிவேலன்
தருமநெறி வெல்லுதற்காய் தகப்பனுக்குத் திருக்கோவில்
தாரணியில் நிறுவியபின் தகைமையுடன் பூசையிட்டான்
கருணையுடன் சிவனீந்த பாசுபதம் தனைவாங்கி
குருபகவன் ஆசியுடன் குமரன்படை ஏகியதே!
( 4 )
மாதுவொரு பாகமுறை ஈசனருள் மைந்தனவன்
மாயைமகன் சூரனிடம் நேயமொடு சொன்னபல
தூதுமொழி தான்முறிய தூதுவரைத் துன்புறவே
தீமைபல செய்தனரே சூரபதுமன் படைகள்
தீதுடைய சூரனுறைத் தீவுதனை நோக்கிபெரும்
தேவர்படை ஏகியதே தெய்வமகன் முருகனுடன்
ஓதுமறை யாவுமே இயற்று(ம்) அயன் மாலுடனே
ஓருமையுடன் குமரனவன் உறுதுணையாய் வந்தனரே!
( 5 )
பதின்வயிற்றுப் பாலகனாய் படையெழுப்பிக் கிளம்பியதோர்
பரமசிவன் மைந்தனிடம் மாலவனும் நான்முகனும்
மதிமயங்கி மன்னுயிர்க்கே தீங்கிழைத்த சூரனவன்
மண்மிதித்தால் மாண்பில்லை எனவுரைக்க-தேவதச்சன்
அதிவிரைவாய் எல்லைதனில் அழகுறவே நிறுவியதோர்
அறுமுகனின் பாசறையில் அமரர்கணம் தொழுதனரே!
கதிர்காமம் எனும்பேரில் கந்தனவன் திருவொளியைக்
காசினியோர் இன்றளவும் கண்டுதொழும் திருத்தலமே!
( 6 )
சேற்றலர்ந்த தாமரைபோல் செறிவுடையோன் பானுகோபன்
செவ்வேளின் புகழறிந்தே சூரனுக்கு அறிவுரைத்தான்
தேற்றுதற்கோர் வழியுரைத்த மைந்தனிடம் மிகச்சினந்தே
தெளிவடைதல் விழையாமல் சூரன்மிகச் சீற்றமுற்றான்
மாற்றுதற்கே வழியின்றி மகன்புகுந்தான் வெஞ்சமரில்
மாயைகளால் தேவர்கணம் மனங்கலங்கப் போரிட்டான்
ஊற்றெடுத்த உம்பர்களின் உதிரமதைக் கண்டகுகன்
உற்றதொரு தருணமதில் வேல்தொடுத்து மாய்த்தொழித்தான்
( 7 )
சிங்கமுகன் சிவனடியைச் சிந்தித்தே இருப்பவனாம்
சிறுவனல்ல சிவன்மகனே எனவறிந்தே சூரனுக்கு
பங்கமறப் பரிவுடனேப் பலகருத்தை எடுத்துரைத்தும்
பாராளும் சூரனுக்கோ பகையேதும் குறையவில்லை
இங்கிவர்க்குத் தான்செய்யும் நன்றியெனப் போர்க்களத்தில்
இன்முகமாய்த் தான்புகுந்தான் தம்பியெனும் சிங்கமுகன்
அங்கமதில் அறுமுகனின் ஆழ்கணைகள் தாங்கியவன்
அமரநிலை தானெய்தி உடம்பொழிந்தான் போர்க்களத்தில்!
( 8 )
அண்டம்பல தாண்டுகிற ஆற்றலுடை சூரனவன்
அறவழிகள் பேணாத அசுரகுல தீரனவன்
கண்டமதில் பாம்பணியும் காளகற்றும் ஈசனையே
கருத்தாகத் தொழுதுபல வரம்பெற்ற மாயைமகன்
கொண்டசினம் குறையாமல் குமரனுடன் போர்புரிய
கொடும்பகையில் அறம்விலகி களமதனில் புகுந்தனனே
வெண்டிரையலைகளென வீறுடன் விடுத்தகணை
வேலவனின் தோள்வலிமுன் விரயமுறக் கண்டனனே!
( 9 )
வானவரின் சிறைநீக்கி வாழும்வழி தேடிடுக!
வஞ்சக மனந்திருத்தி ஈசனருள் நாடிடுக
ஈனமுறப் போர்முனையில் மாய்வதொரு கேடெனவும்
இன்னல்தரும் ஆணவமே காலனுறை வீடெனவும்
கோனவனாம் சூரனிடம் குருபரன் உரைத்தபின்னும்
கொடுவுருவன் சூரனவன் கேளாதிருந்திடவே
ஆனவரை அமருலகை ஆள்வதை விரும்பியதால்
ஆறுமுகன் அருள்மொழியைச் சூரனவன் கேட்கிலனே!
( 10 )
ஆறுமுகன் ஈசன்மகன் எனவறிந்தும் அகந்தையினால்
அமரர்கணம் தொழுதேத்தும் அமலவனை வென்றிடவே
மாறும்பல உருவெடுத்தான் மாயைமகன் முருகனுடன்
மண்ணிருந்தும் விண்ணிருந்தும் மந்திரக்கணை தொடுத்தான்
வீறுமிகக் கொண்டெழுந்தான் வெற்றிவடிவேலவனும்
விண்ணளவும் உருக்காட்டி சூரனுக்குச் சுளுரைத்தான்
ஊறுதனை உணர்ந்தவனாய் உறுகடலின் உட்புகுந்தே
ஒளிந்துகொண்டான் அசுரனவன் மாமரமாய் உருவெடுத்தே
( 11 )
அன்னையவள் அருளோடு அளித்திட்ட வேல்பாய்ச்சி
அசுரனுடல் பிளந்திட்டான் ஆறுமுகனான குகன்
பின்னமுறு மாமரத்தின் ஓர்பாதி மயிலாக
பிரிதுவரு மறுபாகம் சேவற்கொடி தானாக
மன்னுலகில் நெறிகாக்க மாயையென்றும் இடர்நீக்க
மாலவனும் நான்முகனும் மலர்மாரி பொழிந்தனரே
இன்னல்தனை போக்கிபெரும் இம்மையுடன் மறுமையெனும்
முன்வினையும் பின்வினையும் முருகனருள் நீக்கிடுமே!
( 12 )
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஆழிசூழ் உலகினிலே உய்விக்க வந்த
ReplyDeleteசிவகுமாரன் சரிதத்தை உரைத்திட்டீர்
வாழிநலம் சூழ என வாழ்த்துகிறேன்...
உவப்புடனே உம்மிளையோன்!
அண்ணே... மறக்காம ஓட்டும் போட்டுட்டேன்... (நீங்க வேண்டாம்னு சொன்னாலும்...)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ..
ReplyDeleteகச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்த புராணம் அரங்கேற உதவிய மால்மருகன்
ReplyDeleteஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு. அவன் கதையை பன்னிரு பாடல்களில் பாங்குடனே எழுதிய உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.இன்று செந்தூரில் சூரசம்ஹாரம் நடக்க இருக்கும் வேளையில் தந்த பதிவு இது சமயோசிதமானது. வாழ்த்துக்கள்.
முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteகந்த ஷஷ்டி தினத்தன்று ஒரு அருமையான பாடல் !
ReplyDeleteநல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமுருகா ...முருகா ...முருகா ...
ReplyDeleteSettaiyoda settai enna aachi ???
ReplyDeleteஅறுபடை வீடு தளங்களில்
ReplyDeleteஅழகிய வடிவம் கொண்ட
எம்பெருமான் சண்முகரின்
பதிகம் அருமை நண்பரே.
கந்த ஷஷ்டிக்கு ஏற்ற பதிவு.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வணக்கம் அண்ணே, நலமா?
ReplyDeleteதீபாவளிக் கொண்டாட்டங்கள் எல்லாம் எப்பூடி?
விருத்தத்தில் தமிழ்க் குமரனின் பெருமைகளை காலத்திற்கேற்ற காத்திரமான கவிதையாக,
முருகனின் பெருநாளாம் கந்தசஷ்டியின் சூரன் போர் அன்று புனைந்திருக்கிறீங்க.
அருமை பாஸ்..
சேட்டைக்கு மரபுக் கவிதை எல்லாம் அறியுமாக்கும்;))))
பாஸ்..
நீங்க எங்கள் கவிதைகளைப் பார்த்து உங்களுக்கு கவிதை புரியலை என்று சொல்லும் போதே நினைத்தேன்.
உங்களுக்குள் ஒரு பெரிய கவிஞன் இருக்கிறான், உங்கள் ரசனைக்கு நம்மால் புனைய முடியலையே என்று...
அது இப்போ உண்மை ஆயிடுச்சு..
சகோதரம் மரபுத் தமிழில் அழகன் முருகனைப் பற்றிய இக் கவிதையூடாகவும்,
தான் ஏலவே பகிர்ந்த இன்னோர் அம்மனைப் பற்றிய கவிதையூடாகவும் தன் வித்துவத் திறனினை உணர்த்தியிருக்கிறார்.
வாழ்த்துக்கள் பாஸ்..
ஏனைய பதிவுகள் இரண்டையும் இன்று இரவு படிக்கிறேன்.
கொஞ்சம் பிசி...
ஹி.....ஹி....
கந்தன் வேல் உங்கள் நாவில் எழுதிப் போனதோ..
ReplyDeleteசெந்தூர் முருகனுடன், எந்த ஊர் முருகனையும், எந்தனூர் கதிரேசனையும் போற்றுகிறேன்.
ReplyDeleteஅப்பன் முருகனுக்கு அரோகரா!
தங்கள் முருக நாமம் இனிக்கிறது.
எம்பெருமான் முருகன் பற்றிய நல்ல கவிதை சேட்டை... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமை, நல்ல முயற்சி....!
ReplyDelete@விக்கியுலகம்
ReplyDelete@கணேஷ்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
@G.M Balasubramaniam
@veedu
@koodal bala
@ஜ.ரா.ரமேஷ் பாபு
@"என் ராஜபாட்டை"- ராஜா
@NAAI-NAKKS
@மகேந்திரன்
@வை.கோபாலகிருஷ்ணன்
@நிரூபன்
@ரிஷபன்
@யோகன் பாரிஸ்(Johan-Paris)
@வெங்கட் நாகராஜ்
பன்னிக்குட்டி ராம்சாமி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வழக்கம்போல பணிப்பளுவில் சிக்கிச் சின்னாபின்னமாகியதால், தனித்தனியே பதிலளித்து நன்றி தெரிவிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். பொருட்படுத்தாமல், தொடர்ந்து வருகை புரிந்து மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பற்பல!