Monday, February 28, 2011

பிற்பகல்

அருணுக்கு இரண்டு பழக்கங்கள் இருந்தன; அல்லது அருணின் பல பழக்கங்களில் இரண்டு வினோதமான பழக்கங்களும் இருந்தன என்றும் சொல்லலாம். முதலாவது, ஒவ்வொரு பயணத்தின்போதும், போக வேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள், கொண்டுசெல்ல வேண்டிய சாமான்கள் என விபரமாகப் பட்டியலிட்டு சரிபார்த்து அதனை அப்படியே பின்பற்றுவது. அடுத்தது? எதையாவது பார்த்தாலோ, கேட்டாலோ இயல்பாகவே அமைந்த உள்ளுணர்வு காரணமாக, ’இது உண்மையில்லை; பொய்,’ என்ற முடிவுக்கு வருவதுவோ அல்லது ’இது இப்படித்தான் முடியும்,’ என்று ஊகிப்பதும் அவனது இன்னொரு வழக்கம். சில விதிவிலக்குகள் தவிர, அவனது உள்ளுணர்வு அவனை ஏமாற்றியதில்லை என்றாலும், பல சமயங்களில் அவன் பயந்தது நடந்திருந்ததால் அவன் வருத்தமுற்றதுமுண்டு. இருந்தாலும், போலித்தனத்தை சட்டென்று இனம்காண முடிவதால் அவனுக்கு அது ஒரு குறையாகப் பட்டதில்லை.

போலித்தனம்- இதைப்பற்றி எண்ணுகிறபோதெல்லாம் ஏனோ அவனுக்கு மனோகரி சித்தி நினைவுக்கு வருவதுண்டு.

மனோகரி சித்தியை பத்து வருடங்களுக்கு முன்னர்தான் முதல் முதலாக பரோடா போயிருந்தபோது பார்த்திருந்தான். சித்தி அம்மாவைக் காட்டிலும் உயரம். திருமணமாகி விமானப்படையில் பணிபுரிந்த கணவரோடு வட இந்தியாவிலேயே வாழ்க்கையைக் கழிக்க நேர்ந்ததாலோ என்னவோ, பாளையங்கோட்டைக்காரி என்றால் நம்ப முடியாத அளவுக்கு சருமத்தில் வட இந்தியர்கள் போன்ற பளபளப்பு. சித்திக்கு இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள். நன்கு தமிழ் தெரிந்தும் வேண்டுமென்றே இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள்; தமிழ்நாட்டை, குறிப்பாக சென்னையை எள்ளிநகையாடுவதென்றால், அந்தக் குடும்பத்துக்கே வெல்லம் சாப்பிடுவதுமாதிரி. சென்னைக்காதலனாக இருந்தபோதிலும், அவர்களது எள்ளலைக் கேட்டு கோபம் கொள்வதற்குப் பதிலாக, அவனுக்கு அவர்கள் மீது தன்னிச்சையாக, ஒரு இனம்புரியாத அனுதாபமே ஏற்பட்டிருந்தது.

"பத்தா நஹீ யே கம்பக்த் மதறாஸ் மே லோக் கைஸே ரஹதே ஹை! வஹா தோ ஜான்வர் பீ ரஹ்னா முஷ்கில் ஹை!" (இந்தப் பாழாப்போன மெட்ராஸில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்? மிருகங்கள் வாழ்வதே கடினமாயிற்றே!)

அருணுக்குப் புரிந்தது. ஆக்ரா, அலஹாபாத், பர்னாலா, அம்பாலா, இந்தூர், பட்டிண்டா என்று அவ்வப்போது ஊர் ஊராய்த் தூக்கியடிக்கப்பட்டவர்களுக்கு, ஒரே ஊரில் பலவருடங்கள் தொடர்ச்சியாக வசிப்பவர்கள்மேல், அவர்கள் உறவினர்கள் என்றாலும்கூட, ஒருவிதமான பொறாமை ஏற்பட்டு விடுகிறதோ என்னமோ?

"இவ்வளவு திட்டறீங்களே மெட்ராஸை! எனக்கென்னவோ ஒருநாள் நீங்க அங்கேயே வர வேண்டிவந்தாலும் வருமுன்னு தோணுது," என்று ஒரு புன்னகையோடு கூறினான் அருண். அவர்களுக்கு எரிச்சலூட்ட வேண்டும் என்று அப்படிச்சொல்லவில்லை; உண்மையிலே அவனுக்கு அப்படித் தோன்றியது.

"நெவர்! மெட்ராஸுலே வந்து அந்தக் கூவத்து நாத்தத்துலே வாழறதை விட நரகத்துக்குப்போகலாம்!" மனோகரி சித்தி இதைச் சொன்னபோது அவளது முகத்திலிருந்த கடுமையை அருண் கவனிக்கத் தவறவில்லை.

மனோகரி சித்தியின் குணாதிசயம் வினோதமானது. கணவன், குழந்தைகளையும், பிறந்தவீட்டு சொந்தங்களையும் கனிவோடும் பாசத்தோடும் கவனிக்கிறவள், ஏனோ கணவனின் தாயாரிடம் மனிதத்தன்மையே இல்லாமல் நடந்து கொள்வாள். வயோதிகத்திலும், மன உளைச்சலிலும், நோயாலும் கூனிக்குறுகிய அந்த மூதாட்டி, பார்த்தாலே பரிதாபம்சுரக்குமளவுக்கு மருமகளின் கொடுமையில் வெலவெலத்துப்போயிருந்தாள்.

"பசிக்குது!" என்று கையில் தட்டையும், தம்ளரையும் தூக்கிக்கொண்டு சமையலறைக்கு வந்து, உள்ளே வரத் துணிவின்றி அவள் வாசலிலேயே நிற்பாள். உடம்பிலிருந்த எண்ணற்ற உபாதைகளில் ஏதேனும் ஒன்றிற்கான மருந்து தீர்ந்துபோனால், அதை மகனிடம் சொல்ல மென்றுவிழுங்குவாள்; மருமகளிடம் கெஞ்சுவாள்.

விருந்தும் மருந்தும் மூன்றுநாட்கள் என்றால், அருணுக்கு ஒன்றரை நாளிலேயே வெறுத்துப்போனது. அந்தச் சூழலில் இருப்பது அடுப்பில் வசிப்பது போலிருந்தது. அந்தக் கிழவியின் அவலத்தைத்தவிர அந்தக் குடும்பத்தில் எதுவுமே உண்மையில்லை என்பது புழுங்கியது. வலுக்கட்டாயமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து, அங்கிருந்து விடைபெறத்துடித்தான். "சித்தி பாசாங்கு செய்வதுபோல இது மகிழ்ச்சியான குடும்பமல்ல; இவர்களது நடிப்புக்கு விரைவில் திரை காத்திருக்கிறது," என்று அவனது உள்ளுணர்வு சொன்னபோது, அவனுக்கே கிலியாக இருந்தது. அவர்களுக்காக பிரார்த்திப்பதைத் தவிர அவனால் செய்ய முடிந்தது வேறு எதுவுமில்லை.

ஆனால், சில வருடங்கள் கழித்து அவனது உள்ளுணர்வு மீண்டும் ஜெயித்தது. அவன் நொந்து கொண்டான்.

அந்தக் கிழவி கவனிப்பாரின்றி பிராணியைவிடவும் கேவலமாக செத்துப்போனாள். ஓய்வு பெற்ற சித்தப்பா, வயதுக்கு ஆகாத விபரீத சபலம் காரணமாக, எங்கோ போய் எப்படியோ, யாருடனோ வசிப்பதாகக் கேள்விப்பட்டான். நான்கு குழந்தைகளும் வளர்ந்து அவர்களின் வாழ்க்கைத்துணையை அவசரகோலத்தில் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு மூலையில் சிதறியபோது, மூத்தமகன், மருமகளோடு மனோகரி சித்தி சென்னைக்கே குடியேறினாள். ஒருமுறை அவர்களது ஆடம்பரமான வீட்டுக்கு அருண் போயிருந்தபோது, சித்தியின் முகத்தில் முந்தைய சிரிப்பில்லை; அவளது சருமமும் சற்றே இருளடைந்து விட்டதுபோலிருந்தது. ஆனாலும்.....

"அவனுக்கு ஆபீஸில் கொடுத்த வீடுப்பா இது. வாடகை இருபத்தி ரெண்டாயிரம் ரூபாய்! எல்லா ரூமுலேயும் ஏ.ஸி.இருக்குது! அவனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா, ஒன்னேகால் லட்சம். வாசல்லே ஹோண்டா சிட்டி நிக்குதே பாத்தியா? டிராபிக் ஜாம் அதிகமாயிருக்குன்னு அவன் சேன்ட்ரோ எடுத்திட்டுப்போறான்...," என்று சித்தி வழக்கம்போல பெருமைபேசிக்கொண்டிருந்தபோது, அருண் ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்தான்; கட்டிடத்துக்குப் பின்னால் கருப்புக்கூவம் சூரிய ஒளியில் பளபளத்தது. சிரிக்கிறதோ?

"எப்படியோ, நான் சொன்னது நடந்திச்சா இல்லியா? மெட்ராஸை எவ்வளவு கருவுனீங்க? இப்போ வந்தீங்களா இல்லையா?"

"இல்லையே!" சித்தி சிரித்தாள். "இது இப்போ மெட்ராஸ் இல்லையே; சென்னை ஆயிடுச்சே!"

சித்தி மழுப்பினாலும், சிரித்தாலும் அவளது பதிலில் அடிபட்ட வலி தொனித்தது. அதற்கு அவனது கேள்வி மட்டும்தான் காரணமா...?

அருண் தனது வேடிக்கையை அத்தோடு நிறுத்திக்கொண்டான். எதையும் வெளிக்காட்டாமல் வழக்கம்போல வாங்கி வந்தவற்றை சித்தியிடம் ஒப்படைத்தபோது, அவள் வியப்பில் மாய்ந்து போனாள்.

"எத்தனை வருசமானாலும் இந்தப் பழக்கம் மட்டும் உன்னோடயே இருக்கு. எப்படித்தான் யார் யாருக்கு என்னென்ன பிடிக்குமுன்னு தெரிஞ்சு ஆசையாசையா வாங்கிட்டு வர்றியோ? நம்ம குடும்பத்துலே யாருக்கும் இந்த நல்ல பழக்கம் கிடையாது."

அருண் என்ன சொல்வான்? அவனது உள்ளுணர்வும் அத்தனை வருடங்களாகியும் அவனோடு இருந்து தொலைக்கிறதே?

"சித்தி, இத்தனை வருசம் கழிச்சு உங்களைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம். உங்க பிள்ளைகளை மாதிரி நான் பெரிய வேலையிலே இல்லை. ஏதோ, எப்ப உங்களைப் பார்க்க வந்தாலும் இதே மாதிரி எதையாவது வாங்கிட்டு வர்ற அளவுக்காவது இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க! போதும்."

அருண் சொன்னதன் பொருள் சித்திக்கு விளங்கியிருக்க வாய்ப்பில்லை. காரணம், அவனது உள்ளுணர்வு சொன்னதை அவள் எப்படி அறிவாள்? அவளும் அவனை ஆசீர்வதித்தாள்.

சித்தியின் போலித்தனம் ஒருபோதும் அவனுக்குக் கோபத்தை மூட்டியிருந்ததில்லை. இதுபோல நடிப்பு எல்லாருக்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது. சறுக்கி விழுந்து, முட்டியில் சிராய்த்துக்கொண்டு, உரிந்ததோலின் எரிச்சலும், சற்றே அச்சுறுத்தும் மிதமான இரத்தப்பெருக்கும் தருகிற கலவரத்தை வெளிக்காட்டாமல்,"ஒன்றுமில்லை...ஒன்றுமில்லை! சாதாரணக்காயம்தான்!" என்று சிரிக்க முற்படுகிற அசட்டுத்தனத்தையும் நடிப்பிலோ, போலித்தனத்திலோ சேர்க்கத்தானே வேண்டும்? சித்தியின் போலித்தனமும் அத்தகையதே! அவளை சந்தித்தாயிற்று; அவளிடம் ஆசி வாங்கியாயிற்று!

அவளது ஆசிகள் பலித்தன என்றுதான் சொல்ல வேண்டும். இதோ, அந்த சந்திப்புக்குப் பிறகு, சில வருடங்கள் கழிந்து மீண்டும் அவளை சந்திக்கப்போய்க் கொண்டிருக்கிறான். இப்போதும் அவளுக்காக சிலவற்றை வாங்கிச் செல்ல அவனால் முடிந்திருந்தது. அவனைப்பொறுத்தமட்டில், அவள் மனதளவில் நல்ல பெண்மணியாய்த்தானிருக்க வேண்டும்.

"சார், நீங்க சொன்ன புத்துநாகம்மன் கோவில் இதோ வந்திருச்சு சார்," ஆட்டோ ஓட்டுனர் வேகத்தைக் குறைத்தபடி கூறினார்.

"வலதுபக்கத்துலே ரெண்டாவது சந்துலே திரும்புங்க. வாசலிலேயே பெரிசா போர்டு போட்டிருக்கும். அன்னை சாரதா ஆதரவற்றோர் காப்பகம்-னு! அங்கே நிறுத்துங்க!"

அருணின் கையிலிருந்த பையில், சித்திக்காக அவன் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களோடு, அவள் ஆசைப்பட்டு வாங்கி வரச்சொன்ன ஒரு எவர்சில்வர் தட்டும் தம்ளரும் இருந்தன.

52 comments:

  1. ஆரம்பத்தில் முடிவு இப்படிதான் இருக்கும் என்று ஊகிக்க முடிந்தாலும், உங்கள் நடை,படிப்பவர்களை கட்டிப் போடுகிறது. ஒருவரின் குணாதிசயத்தை அருமையாக சொல்லி இருக்கீங்க சேட்டை

    ReplyDelete
  2. சேட்டை அண்ணே... உங்க பிளாக்ல கதை படிக்கறப்ப எப்படி இருக்குன்னு ஓப்பனா சொல்றேன்.சேட்டை டி வி போன்ற மெகா ஹிட் காமெடி பதிவுகளே படிச்சு படிச்சு எங்களுக்கு மண்ட் செட் ஆகிடுச்சு. பாட்சா படம் பார்த்துட்டு ஸ்ரீ ராகவேந்திரா படம் பார்த்த மாதிரி..

    ReplyDelete
  3. >>>>அந்தக் கிழவி கவனிப்பாரின்றி பிராணியைவிடவும் கேவலமாக செத்துப்போனாள்.

    கதையில் கனக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  4. சித்தியின் போலித்தனம் ஒருபோதும் அவனுக்குக் கோபத்தை மூட்டியிருந்ததில்லை. இதுபோல நடிப்பு எல்லாருக்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது. சறுக்கி விழுந்து, முட்டியில் சிராய்த்துக்கொண்டு, உரிந்ததோலின் எரிச்சலும், சற்றே அச்சுறுத்தும் மிதமான இரத்தப்பெருக்கும் தருகிற கலவரத்தை வெளிக்காட்டாமல்,"ஒன்றுமில்லை...ஒன்றுமில்லை! சாதாரணக்காயம்தான்!" என்று சிரிக்க முற்படுகிற அசட்டுத்தனத்தையும் நடிப்பிலோ, போலித்தனத்திலோ சேர்க்கத்தானே வேண்டும்?


    .....மனதை கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
  5. நாங்களும் வருவோமில்ல...

    ReplyDelete
  6. அமோகமாத்தான் விளைஞ்சிருக்கு..

    ReplyDelete
  7. //அருணுக்கு இரண்டு பழக்கங்கள் இருந்தன; அல்லது அருணின் பல பழக்கங்களில் இரண்டு வினோதமான பழக்கங்களும் இருந்தன என்றும் சொல்லலாம். முதலாவது, ஒவ்வொரு பயணத்தின்போதும், போக வேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள், கொண்டுசெல்ல வேண்டிய சாமான்கள் என விபரமாகப் பட்டியலிட்டு சரிபார்த்து அதனை அப்படியே பின்பற்றுவது. அடுத்தது? எதையாவது பார்த்தாலோ, கேட்டாலோ இயல்பாகவே அமைந்த உள்ளுணர்வு காரணமாக, ’இது உண்மையில்லை; பொய்,’ என்ற முடிவுக்கு வருவதுவோ அல்லது ’இது இப்படித்தான் முடியும்,’ என்று ஊகிப்பதும் அவனது இன்னொரு வழக்கம். சில விதிவிலக்குகள் தவிர, அவனது உள்ளுணர்வு அவனை ஏமாற்றியதில்லை என்றாலும், பல சமயங்களில் அவன் பயந்தது நடந்திருந்ததால் அவன் வருத்தமுற்றதுமுண்டு. இருந்தாலும், போலித்தனத்தை சட்டென்று இனம்காண முடிவதால் அவனுக்கு அது ஒரு குறையாகப் பட்டதில்லை.//

    இது நோயா? அல்லது சக்தியா? அல்லது மனப்பக்குவமா?

    எனக்கு நெருக்கமான(?!) ஒருத்தருக்கு இப்படித்தான் இருக்கு அதான் கேட்டேன்.

    கதை அருமை சேட்டை.

    ReplyDelete
  8. மனசு வலிக்குதுய்யா...

    ReplyDelete
  9. நல்ல கதை, கடைசியில் எதிர்பார்க்கமுடியாத நல்ல ட்விஸ்ட், நன்றி.. சேட்டைகாரனின் இன்னொரு முகம்??

    ReplyDelete
  10. சிரிப்பு பதிவும் போடறீங்க, சீரியஸ் பதிவும் போடறீங்களே!!! சூப்பர்

    கதை, நடை, யாரையும் குத்தம் சொல்லாத வாக்கியங்கள்(//சித்தியின் போலித்தனம்..... எல்லாருக்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது//) தலைப்பு அனைத்தும் நன்று....

    ReplyDelete
  11. அருமையான கதை...

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    ReplyDelete
  12. வழக்கமாக நையாண்டியும் நக்கலும் நிறைந்திருந்தாலும் அவ்வப்போது இதுபோல ஏதாவது ஒன்று வந்து நின்று நம்மை திகைக்க வைக்கும்.
    ஒன்று புரிகிறது சேட்டை. நீங்கள் மிக அதிகமாக மனிதாபிமானம் உள்ளவர். சரியா??

    ReplyDelete
  13. பழைய வரிகள் எதுவும் இல்லாமல் நடை அருமையாக இருந்தது

    ReplyDelete
  14. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்ற கருவை சுவாரசியமாகவும், மனதை தைக்கும் விதத்திலும் சொல்லியிருக்கீங்க... அருமை சேட்டை.

    ReplyDelete
  15. நல்ல புனைவு சேட்டை ஐயா. வழக்கமான பாணியில் இல்லாமல் மனதைக் கனக்க வைக்கும்படி இருந்தது…

    ReplyDelete
  16. இதனை நேரில் சொல்லியதைவிடவும் எழுத்தில் அழகாய் கொண்டு வந்திருக்கிறீர்கள் அன்பு நண்பரே... உங்கள் எழுத்துக்கென் வந்தனம்...

    பிரபாகர்...

    ReplyDelete
  17. கதையில் வரும் பர்னாலா, அம்பாலா, பட்டிண்டா ஊர்களில் நானும் பணிபுரிந்திருக்கிறேன். ஆம் இந்திய விமானப்படையில்தான்.....

    ReplyDelete
  18. யதார்த்தத்தை சொல்லியிருக்கிறீர்கள்,
    Hats off!

    ReplyDelete
  19. //எல் கே said...

    ஆரம்பத்தில் முடிவு இப்படிதான் இருக்கும் என்று ஊகிக்க முடிந்தாலும், உங்கள் நடை,படிப்பவர்களை கட்டிப் போடுகிறது.//

    கோர்வையாக, குழப்பமின்றி சொல்ல வேண்டும் என்று மட்டும் முதலிலேயே முடிவெடுத்து எழுதினேன் கார்த்தி.

    //ஒருவரின் குணாதிசயத்தை அருமையாக சொல்லி இருக்கீங்க சேட்டை//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  20. //சி.பி.செந்தில்குமார் said...

    முத வெட்டு//

    ஹையா, கார்த்தி முந்திக்கிட்டாரே..? :-)

    //சேட்டை அண்ணே... உங்க பிளாக்ல கதை படிக்கறப்ப எப்படி இருக்குன்னு ஓப்பனா சொல்றேன்.சேட்டை டி வி போன்ற மெகா ஹிட் காமெடி பதிவுகளே படிச்சு படிச்சு எங்களுக்கு மண்ட் செட் ஆகிடுச்சு. பாட்சா படம் பார்த்துட்டு ஸ்ரீ ராகவேந்திரா படம் பார்த்த மாதிரி..//

    ஆஹா! உங்க பின்னூட்டத்துலே ஒரு பதிவுக்கு ஐடியா கொடுத்திருக்கீங்க! யுரேகா! :-)

    தல, சிலர் என்னிடம் "சேட்டை, வரவர நீங்க ஒரே மாதிரி எழுதறீங்களோன்னு தோணுது,’ன்னும் சொல்றாங்க. ஸோ, கொஞ்சம் மாறுபட்டு யோசிக்கவும் வேண்டியிருக்குது.

    //கதையில் கனக்க வைத்த வரிகள்//

    மிக்க நன்றி தல! :-)

    ReplyDelete
  21. //Speed Master said...

    வடை//

    ஹிஹி! நம்ம பிளாகுலே எல்லாருக்கும் வடையுண்டு. அதான் படமே போட்டு வச்சிட்டேனே..? :-)
    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  22. //Chitra said...

    .....மனதை கனக்க வைத்து விட்டது.//

    மிக்க நன்றி சகோதரி! :-)

    ReplyDelete
  23. //வேடந்தாங்கல் - கருன் said...

    நாங்களும் வருவோமில்ல...//

    தட்ஸ் தி ஸ்பிரிட்...வாங்க..வாங்க! நன்றி! :-)

    ReplyDelete
  24. //அமைதிச்சாரல் said...

    அமோகமாத்தான் விளைஞ்சிருக்கு..//

    ஆமாம். கொஞ்சம் மிகைப்படுத்திட்டேனோ? :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  25. //சங்கவி said...

    Nice story...//

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  26. //சிநேகிதன் அக்பர் said...

    இது நோயா? அல்லது சக்தியா? அல்லது மனப்பக்குவமா?//

    விசாரித்த அளவில் இது நோயல்ல என்பது தெரிகிறது அண்ணே! மனப்பக்குவத்தையும் தாண்டி ஒரு அபரிமிதமான ஆற்றல் என்று சொல்லலாம்.

    //எனக்கு நெருக்கமான(?!) ஒருத்தருக்கு இப்படித்தான் இருக்கு அதான் கேட்டேன்.//

    எனக்குத் தெரிந்து ஒருசிலர் இருக்கிறார்கள் இப்படி.

    //கதை அருமை சேட்டை.//

    மிக்க நன்றி அண்ணே! :-)

    ReplyDelete
  27. //MANO நாஞ்சில் மனோ said...

    மனசு வலிக்குதுய்யா...//

    ஓ...! மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. //பொன்கார்த்திக் said...

    superuu....//

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  29. //வசந்தா நடேசன் said...

    நல்ல கதை, கடைசியில் எதிர்பார்க்கமுடியாத நல்ல ட்விஸ்ட், நன்றி.. சேட்டைகாரனின் இன்னொரு முகம்??//

    இன்னொரு முகமென்று சொல்ல முடியாது. ஆனால், அதே முகம் வேறு கோணத்திலிருந்து என்று வேண்டுமானாலும் சொல்லலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  30. //ஸ்வர்ணரேக்கா said...

    சிரிப்பு பதிவும் போடறீங்க, சீரியஸ் பதிவும் போடறீங்களே!!! சூப்பர்//

    உற்சாகமூட்டும் பாராட்டுகள்!

    //கதை, நடை, யாரையும் குத்தம் சொல்லாத வாக்கியங்கள்(//சித்தியின் போலித்தனம்..... எல்லாருக்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது//) தலைப்பு அனைத்தும் நன்று....//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வருக!

    ReplyDelete
  31. //தமிழ்வாசி - Prakash said...

    அருமையான கதை...//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  32. //வானம்பாடிகள் said...

    class..//

    யான் பெற்ற பேறு ஐயா! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  33. //கக்கு - மாணிக்கம் said...

    வழக்கமாக நையாண்டியும் நக்கலும் நிறைந்திருந்தாலும் அவ்வப்போது இதுபோல ஏதாவது ஒன்று வந்து நின்று நம்மை திகைக்க வைக்கும்.//

    நம்மைச்சுற்றித்தான் அனுதினமும் பலதரப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டேயிருக்கின்றனவே? அவற்றை அவதானிக்கும்போது எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பமல்லவா வருகிறது?

    //ஒன்று புரிகிறது சேட்டை. நீங்கள் மிக அதிகமாக மனிதாபிமானம் உள்ளவர். சரியா??//

    அப்படிச் சொல்வதைக் காட்டிலும், என்னைச் சுற்றி நிறைய மனிதாபிமானமுள்ள மனிதர்கள் இருந்து என்னை உந்துவிக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். :-)

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  34. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    பழைய வரிகள் எதுவும் இல்லாமல் நடை அருமையாக இருந்தது//

    மிக்க நன்றி நண்பரே! நிறைய மாற்றத்துக்குள்ளானது உண்மை! :-)

    ReplyDelete
  35. //சேலம் தேவா said...

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்ற கருவை சுவாரசியமாகவும், மனதை தைக்கும் விதத்திலும் சொல்லியிருக்கீங்க... அருமை சேட்டை.//

    அதே தான். தலைப்பை உங்களைப் போன்று ஒரு இணையநண்பர் தான் கொடுத்தார். மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  36. //வெங்கட் நாகராஜ் said...

    நல்ல புனைவு சேட்டை ஐயா. வழக்கமான பாணியில் இல்லாமல் மனதைக் கனக்க வைக்கும்படி இருந்தது…//

    மிக்க நன்றி ஐயா! வழக்கமான பாணி விட்ட இடத்திலிருந்து விரைவில் தொடரும். :-))

    ReplyDelete
  37. //பிரபாகர் said...

    இதனை நேரில் சொல்லியதைவிடவும் எழுத்தில் அழகாய் கொண்டு வந்திருக்கிறீர்கள் அன்பு நண்பரே... உங்கள் எழுத்துக்கென் வந்தனம்...//

    உங்களோடு கலந்தாலோசித்ததன் விளைவாக, சிலவற்றை மாற்றியும் நீக்கியும் இறுதிவடிவம் கொடுத்தேன். மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  38. //Ponchandar said...

    கதையில் வரும் பர்னாலா, அம்பாலா, பட்டிண்டா ஊர்களில் நானும் பணிபுரிந்திருக்கிறேன். ஆம் இந்திய விமானப்படையில்தான்.....//

    ஆஹா! இந்தப் பெயர்களை நான் விசாரித்து அறிந்து கொண்டேன். அங்கு உண்மையிலேயே விமானப்படைத்தளங்கள் இருப்பதறிந்து மகிழ்ச்சி. மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  39. //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    யதார்த்தத்தை சொல்லியிருக்கிறீர்கள், Hats off!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  40. அய்யோ.. என்ன ஒரு எழுத்து.. சேட்டை.. கை கொடுங்க.. அலட்டிக்காம அப்படியே பிடிச்சு இழுத்துகிட்டு போயிட்டீங்க.. நல்ல நகைச்சுவைக்கு சொந்தக்காரர்தான் இப்படி உணர்வு பூர்வமாவும் எழுத முடியும்னு நிரூபிச்ச மாதிரி.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  41. மிகவும் அலட்டிக் கொள்பவர்களின் கதி கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். வழக்கமான நகைச்சுவைக்கு பதிலாக ஒரு சீரியஸ் பிரச்சனையை எடுத்து சென்ற நடை அருமை. வாழ்ந்து கெட்டவர்கள் பாடு மிகவும் சிரமம் தான். கடைசி வரிகளில் உள்ள ஒரு எவர்சில்வர் தட்டு டம்ளரில் தான் கதையின் சாரத்தின் உச்சம் மினுமினுப்பாகத் தெரிகிற்து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. மனதைப் பிசைகிறது..

    நல்ல கோணம் மற்றும் நடை..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. //ரிஷபன் said...

    அய்யோ.. என்ன ஒரு எழுத்து.. சேட்டை.. கை கொடுங்க.. அலட்டிக்காம அப்படியே பிடிச்சு இழுத்துகிட்டு போயிட்டீங்க.. நல்ல நகைச்சுவைக்கு சொந்தக்காரர்தான் இப்படி உணர்வு பூர்வமாவும் எழுத முடியும்னு நிரூபிச்ச மாதிரி.. வாழ்த்துகள்..//

    ஆஹா! ஒருவிதத்தில் நிறைய நகைச்சுவை சங்கதிகள் எழுதுவதாலே, இப்படியும் மாறுபட்டு முயற்சிக்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றுகிறதோ என்னவோ! தாராளமாகப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  44. //வை.கோபாலகிருஷ்ணன் said...

    மிகவும் அலட்டிக் கொள்பவர்களின் கதி கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். வழக்கமான நகைச்சுவைக்கு பதிலாக ஒரு சீரியஸ் பிரச்சனையை எடுத்து சென்ற நடை அருமை. வாழ்ந்து கெட்டவர்கள் பாடு மிகவும் சிரமம் தான். கடைசி வரிகளில் உள்ள ஒரு எவர்சில்வர் தட்டு டம்ளரில் தான் கதையின் சாரத்தின் உச்சம் மினுமினுப்பாகத் தெரிகிற்து. வாழ்த்துக்கள்.//

    உண்மைதான். இப்படிப்பட்டவர்களை நாம் அனைவரும் பார்த்திருப்போம்; இன்னும் பார்க்க வேண்டிவருமோ என்ற ஒருவித அச்சம் இருக்கிறது. அதுகுறித்த எனது கோணத்தையே எழுத எண்ணினேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  45. //வெட்டிப்பேச்சு said...

    மனதைப் பிசைகிறது..நல்ல கோணம் மற்றும் நடை..
    வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  46. //அஹமது இர்ஷாத் said...

    Good Settai...//

    நன்றி நண்பரே!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!