Saturday, October 16, 2010

லூசா விடாதீங்க பாஸ்!

யாருக்காவது உடம்பு கொஞ்சம் குண்டா இருந்து, திர்லக்கேணி, ஜாம்பஜார் பக்கம் போனா டிராஃபிக் ஜாம் ஆயிடுமேன்னு கவலைப்பட்டு விசாரிச்சா, "எங்களுக்கு சூதுவாது கிடையாது. அதுனாலே தான் உடம்பு வஞ்சனையில்லாம இருக்கு"ன்னு சொல்லுறாங்க! அப்படீன்னா, என்னை மாதிரி ஈர்க்குச்சி மாதிரி இருக்கிற ஆளுங்கல்லாம் என்ன சுரேஷ்கல்மாடி, லலித்மோடியோட சேர்த்தியா? என்னய்யா புதுசு புதுசா புரளி கிளப்புறீங்க?

நாமும் வயித்துக்கு வஞ்சனை பண்ணாம மூணு வேளைக்கு மூணேமுக்கால் வேளை சாப்பிடறோம். பெரிசா சூதுவாது ஒண்ணும் பண்ணுறதில்லை. அப்படியிருக்கும்போது, நம்ம உடம்பு மட்டும் ஏன் சாம்பார்லேருந்து எடுத்து உறிஞ்சுபோட்ட முருங்கைக்காய் மாதிரி பரிதாபமா இருக்குன்னு அடிக்கடி யோசிப்பேன். சொல்லப் போனா குண்டாயிருக்கிற ஆசாமி/ஆமாமிங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையே வந்திருச்சப்பு! குண்டாக முடியாட்டியும், குண்டா இருக்கிறவங்களைப் பத்தி நிறையப் படிச்சேன்.

குண்டா இருக்கிறதுக்குப் பேரு Obesity-ன்னு சொல்லுறாங்க! இயல்பை விட அதிகமாக உடம்பிலே கொழுப்பு சேர்ந்தா உடம்பு குண்டாயிடுமாம். அப்பாலே, நீரிழிவு, இதய நோயிலேருந்து புற்றுநோய் வரைக்கும் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குதாம். உலக ஜனத்தொகையிலே குழந்தைகள் நீங்கலாக, 33.33% சதவிகித மக்கள் குண்டாயிருக்கிறாங்களாம்.

இதைப் படிச்சதும்,"ஐயையோ, இதுக்குப் பேசாம நிறைய சூதுவாது பண்ணிக்கிட்டு ஒல்லிப்பிச்சானாவே இருந்திரலாமே. நமக்கும் ரஜினி மாதிரி ஒரு மாமனார் கிடைக்காமலா போயிருவாரு?"ன்னு ஒல்லியா இருக்கிறவங்கல்லாம் யோசிப்பாங்களா மாட்டாங்களா?

ஆனாலும், நமக்குத் தெரிஞ்ச நிறைய பேரு எக்ஸ்ட்ரா- லார்ஜ் சைஸ்காரங்கன்னுறதுனாலே, ஏன் இப்படி இவங்க குண்டாயிருக்காங்கன்னு யோசிக்கத் தோணிச்சு. ஏன் இப்படி ஆனாங்க பாவம்?

1. சாப்பாட்டு விஷயத்துலே கட்டுப்பாடு இல்லை!

எனக்கும் கிடையாது.

2. அதிகமா உடம்பை அலட்டிக்காம வேலை பார்க்குறது! சதா டி.வி, கம்ப்யூட்டர்னு இருக்குறது.

நானும் அப்படித்தானே வேலை பார்க்குறேன். டி.வியும், கம்ப்யூட்டர் ரெண்டுமில்லாட்டி தலை வெடிச்சிடுமே!

3. போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது.

பாருங்கய்யா! சென்னையிலேயே கடைசியா தூங்குற ஆசாமி நான் தான்.

ஆக, குண்டாயிருக்கிறதுக்கான எல்லா காரணங்களும் எனக்கும் பொருந்துதே. ஆனாலும், நான் மட்டும் ஏன் குண்டாகாம, சோத்துக்குச் செத்தவனாட்டம் இருக்கிறேன்?

அவங்களுக்கும் எனக்கும் என்ன தான் வித்தியாசம் தெரியுமா?

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதாவது எவ்வளவு அதிகமா யோசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமா பசிக்குமாம். எவ்வளவு பசிக்குமோ அவ்வளவு சாப்பிட்டு, அவ்வளவு உடம்பு பருத்துப் போயிடுமாம்.

அதானே பார்த்தேன்! இந்த ’சிந்தனை’ன்னா என்னான்னே எனக்குத் தெரியாததுனாலே தான், இதுவரை நான் குண்டாகாம இருக்கிறேன்.

ஆகவே, மகாஜனங்களே! நீரிழிவு, மாரடைப்பு, மூட்டுவலி போன்ற நோய்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. எதைப் பத்தியும் யோசிக்காதீங்க!

மொத்தத்துலே மூளைன்னு ஒண்ணு இருக்கிறதை மறந்தா, ஊளைச்சதை வர வாய்ப்பேயில்லை. உடம்பும் டைட்டா, லைட்டா இருக்கும். எனவே, மக்களே....லூசா விடாதீங்க! உடம்பை டைட்டா வச்சுக்க, எல்லாத்தையும் லைட்டா எடுத்துங்க!

வர்ட்டா....?

Friday, October 8, 2010

மாயக்கண்ணாடி!

எந்திரன்’ படத்தை (அதற்குள்) மூன்றாவது முறை பார்த்தபோது எனது மனத்தில் எழுந்த கேள்வி: "நானும் சிட்டி மாதிரி ஒரு ’ரோபோ’வாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சே!"

(ஹலோ, அபிஷேக் பச்சன் சார், நீங்க டென்சன் ஆகாதீங்க; நான் அந்த அர்த்தத்துலே சொல்லலே!)

11-A,12-B,23-C,47-D போன்ற பேருந்துகளில் எவ்வளவு கூட்டமிருந்தாலும் ஜன்னலோர சீட் கிடைக்கலாம். அடுத்த முறை கொச்சின் துறைமுகம் போகும்போது அங்கிருக்கிற சேட்டன்மார்கள் நக்கலடிக்கும்போது அவர்களோடு மலையாளத்தில் சம்சாரித்து ’போடா புல்லே!’ என்று பதிலடி கொடுக்கலாம். எவ்வளவு சிக்கலான கப்பல் கணக்குகளையும் எக்ஸெல் துணையின்றி விரல்நுனியில் போட்டு, ஜி.எம்மின் முகத்தில் கரியை அப்பலாம். கும்பாபிஷேகம், நவராத்திரி, தலைவர் பிறந்தநாள் என்று ஏதாவது சாக்குச் சொல்லி அதிகாலையிலிருந்து காது ஜவ்வு கிழிகிற மாதிரி லவுட்-ஸ்பீக்கர் வைத்து உயிரை வாங்குகிற புண்ணியவான்களுக்குப் புத்தி புகட்டலாம். ஹும்!

இதெல்லாம் முடியாவிட்டால் என்ன? சிட்டியாக வரும் ரஜினி போட்டுக்கொண்டு வருகிறாரே, ஒரு கலக்கல் கருப்புக் கண்ணாடி, அதை வாங்கிப் போட்டுக்கொண்டாலென்ன?

’பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதே! அதனால் சென்ற புதன்கிழமை அலுவலகம் முடிந்ததும், லிங்கிச்செட்டித்தெரு, அரண்மனைக்காரன் தெருவை ஒரு ரவுண்டு அடித்து ஏறக்குறைய ரஜினி போட்டது மாதிரியே ஒரு கண்ணாடியை வாங்கியும் விட்டேன். நேற்று மகாளய அமாவாசை; நிறைந்த நாள்! சுத்தபத்தமாக குளித்து தயாராகி, இரயில் நிலையத்தை நோக்கிக் கிளம்பியதும், மறக்காமல் கூலிங் கிளாஸையும் அணிந்து கொண்டேன். அந்தக் கண்ணாடியால் எனக்கு ஏற்படப்போகிற ஆச்சரியமான அனுபவங்களைப் பற்றி நான் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

தாம்பரம் நிலையத்தை அடைந்தபிறகுதான், கண்ணாடி வாங்கிய பரபரப்பில் முந்தைய தினம் சீசன் டிக்கெட்டை புதுப்பிக்காமல் விட்டு விட்டது ஞாபகத்துக்கு வந்தது. எனவே, பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷனில் நிற்கும் கூட்ஸ் வண்டி போல நீளமாக இருந்த வரிசையை நெருங்கியபோது அனைவரின் கவனமும் என் பக்கம் திரும்பியது. என் முகத்தையே கூர்ந்து கவனித்தவர்கள், சற்றே பின்வாங்கவும், சிறிது நேரத்துக்கு முன் வரை சுருட்டி வைத்த மசால்தோசை மாதிரி ஒழுங்காக இருந்த வரிசை உதிர்த்துப் போட்ட பரோட்டா மாதிரி உருக்குலைந்து போனது. விளைவு? ஐந்து நிமிடத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நான் உள்ளே விரைந்து கொண்டிருந்தேன்.

வழிநெடுகவும் போவோர் வருவோரெல்லாம் எனது முகத்தைப் பார்த்து விட்டு, விலகி வழிவிட்டதோடு, தலையையும் குனிந்து கொள்வதை என்னால் காண முடிந்தது. 'ஆஹா, தலைவர் போல கண்ணாடி போட்டதற்கே இவ்வளவு மரியாதையா?' இருந்தாலும் எனது தகுதிக்கு இவ்வளவு மரியாதை கொஞ்சம் ஓவர் தான் என்று எனக்கே தோன்றியது.

இத்தோடு நின்றதா என்றால் அது தான் இல்லை! நான் வழக்கமாக பயணம் செய்யும் பெட்டியை நெருங்கியதும், நான் வருவதை ஜன்னல்வழியாகப் பார்த்தவர்கள் பலர், விசுக்கென்று எழுந்து பெட்டியை விட்டு வெளியேறி வெவ்வெறு பெட்டிகளை நோக்கித் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். அரை நொடியில் அந்தப் பெட்டியே சுத்தமாகக் காலியாகி விட்டதென்றால் பாருங்களேன்! இவர்களுக்கு என்னாயிற்று என்று நான் யோசிப்பதற்குள்ளாகவே விசில் சத்தம் கேட்டு விடவும், நான் வண்டியில் ஏறிக்கொண்டேன்.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறிய பயணிகள், என்னைப் பார்த்ததும் அப்படியே விக்கித்துப் போய் ஒரு கணம் சிலைபோல் நின்றுவிட்டு, வந்த வேகத்திலேயே திரும்பி பெட்டியின் எதிர்பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். வேறு வழியே இல்லாமல், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர்களும் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இல்லாமல், சமைந்த பெண் சபையில் உட்காருவது போல தலைகுனிந்து அமர்ந்திருந்தனர்.

என்னைப் பார்க்க பயப்படுகிறவர்களில் பலர், செய்தித்தாள்களை விரித்துத் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டனர். இதில் ஒருவர் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரின் ராஜஸ்தான் டைம்ஸ் பத்திரிகையைப் பிடுங்கியதையும் நான் கவனித்தேன்.

அனேகமாக, என்னையும் இவர்கள் சிட்டி என்ற ரோபோவாகவே எண்ணிவிட்டார்கள் போலும். அதனால் தான் எங்கே நானும் வில்லனாகி, துவம்சம் பண்ணி விடுவேனோ என்ற பயத்தில் என்னை நேருக்கு நேர் பார்க்கவே பயப்படுகிறார்கள் போலும் என்று மனதுக்குள் எண்ணியபடியே சிரித்துக் கொண்டேன்.

மொத்தத்தில், எல்லாரும் ’எந்திரன்’ பார்த்திருக்கிறார்கள் என்பதும், அவர்களுக்கும் என்னைப் போலவே எதைப் பார்த்தாலும் ’எந்திரன்’ படமே ஞாபகத்துக்கு வருகிறது என்பது மட்டும் புரிந்தது. என்ன இருந்தாலும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்!

கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கியபோது, எனக்குப் பரிச்சயமான அந்த டிக்கெட் பரிசோதகர்கள் கூட என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு ’போனால் போகிறது,’ என்பது போல புன்னகை சிந்தி விட்டு, தங்களது கடமையை கவனிக்கத் தொடங்கினார்கள். அம்ரிதா டீ ஸ்டாலில் என்னைப் பார்த்தவுடன் புன்னகைக்கும் சேட்டன், லாலேட்டன்(மோகன்லால்) கல்லூரி மாணவன் வேடத்தில் வருவதைப் பார்த்தது போல திருதிருவென்று விழித்தார். கல்லாவிலிருந்தவர் பதற்றத்தோடு என்னிடமிருந்து காசு வாங்கியபோது, அது கீழே விழுந்தது.

என்ன ஆயிற்று இவர்களுக்கு? ரஜினி மாதிரி ஒரு கண்ணாடி போட்டுக்கொண்டதற்கே இவ்வளவு பயமா? தீபாவளிக்கு ரஜினி மாதிரியே கழுத்தில் பட்டையாக காலர் வைத்த சட்டையும், கோட்டும் வாங்குவதாக முடிவு செய்திருக்கிறேனே? அதன் பிறகு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

யோசித்துக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எதிர்ப்பட்ட ஜி.எம். என்னைப் பார்த்ததும், சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

"குட்மார்னிங்க் சார்!"

"குட்மார்னிங் சேட்டை! இத்தோட உன்னை யாரு ஆபீஸுக்கு வரச்சொன்னது? ஊரெல்லாம் இதே பேச்சுத்தான் கொஞ்ச நாளா!"

"இருக்காதா சார்? தலைவர் படம்னா ஊரெல்லாம் பேசத்தான் செய்வாங்க! அதுவும் பெரிய படம்! வழக்கத்தை விட அதிகமா பேசத்தான் செய்வாங்க!"

"மண்ணாங்கட்டி! நான் சொல்லுறது மெட்ராஸ்-ஐ-யோட உன்னை யாரு ஆபீசுக்கு வரச் சொன்னது? இப்படிக் கண்ணாடி போட்டுக்கிட்டாவது ஆபீஸுக்கு வரலேன்னு யாரு அழுதா? வீட்டுக்குப் போய்யா.....உன்னாலே இது ஆபீஸ் முழுக்கப் பரவிடப்போவுது!"

ஐயையோ! அப்படீன்னா, எனக்கு மெட்ராஸ்-ஐ வந்திருக்குன்னு நினைச்சுக்கிட்டுத் தான் எல்லாரும் என்னைப் பார்த்து இப்படி மிரண்டாங்களா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

Saturday, October 2, 2010

ஆகட்டும் பார்க்கலாம்

திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கிற பெருந்தலைவர் காமராஜ் நினைவு இல்லத்தை, சென்னையில் குப்பை கொட்டத்தொடங்கிய இத்தனை வருடங்களில் இது வரை எத்தனை முறை கடந்து சென்றிருப்பேன்? நினைவில்லை...!

சென்றமாதம் மட்டும்...? குறைந்தபட்சம் நான்கு முறை கடந்து சென்றிருப்பேன். இதில் ஓரிரு முறை பக்கவாட்டில் திரும்பி அந்தக் கட்டிடத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு, பசுல்லா சாலையை நோக்கி விரைந்திருக்கிறேன்.

"ஒரு நாள் உள்ளே போய்ப்பார்க்க வேண்டும்," என்ற ஆசை ’காமராஜர்’ படத்தைப் பார்த்தபிறகே ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால், அதன்பிறகு கணக்கற்ற முறைகள் அந்தக் கட்டிடத்தைக் கடந்து போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நிறுத்தாமல் போனதற்கு, குறிப்பிடும்படியாக எந்தக் காரணங்களும் இருந்ததில்லை.

எனக்குப் பிடித்த உணவகத்துக்குப் போகவோ, எனக்கு விருப்பமான திரைப்படம் பார்க்கவோ, எனது சினேகிதர்களைச் சந்திக்கவோ எப்போதாவது சால்ஜாப்பு சொல்லியிருக்கிறேனா என்றால் இல்லை!

ஆனால், பல முறை என் கண்ணில் பட்டு, இன்றளவிலும் பலமுறை படுகிற அந்தக் கட்டிடத்துக்குள் ஒரு முறை நுழைந்து, நமது கடந்தகாலத்தின் பிம்பமாக வாழ்ந்து மறைந்த ஒரு மாபெரும் தலைவரின் நினைவுச்சின்னங்களைப் பார்த்தேனும், எளிமையை எளிமையாகவே கற்றுக்கொள்ளுகிற ஆர்வம் என்னைத் தொற்றிக்கொள்ள மாட்டேன் என்கிறதே!

ஒரு மகானின் பிறந்த தினத்தன்று, இன்னொரு மக்கள் தலைவன் ’விளக்கை அணைத்துப் போ!’ என்று தனது இறுதிக்கட்டளையைப் பிறப்பித்து விட்டு மறைந்திருக்கிறார். அவரை வரலாற்றின் வெளிச்சம் வரவேற்று தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டது. இப்போது பளிச்சிடும் பகட்டான அரசியல் வெளிச்சத்தினால் கண்கள் கூசிக் கூசி, இருக்க இடமின்றி எங்கோ ஒரு கட்டிடத்திலோ அன்றி ஒரு சமாதியிலோ அமைதிகாத்துக்கொண்டிருக்கிற எளிமையைப் பார்த்தும் பாராமல் பயணத்தைத் தொடர்கின்றன.

பெருந்தலைவர்கள் குறித்துப் பேசுவதற்கும் தர்மசங்கடமாயிருக்கிறது. எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பாமல் இன்னும் கடந்தகாலத்தையே கடப்பாரையால் தோண்டிக்கொண்டிருக்கிறவர்கள் பெருகிவிட்ட சூழலில் ’இவர் ஓர் மாமனிதர்’ என்று சொல்வதற்கும் நிரம்ப யோசிக்க வேண்டியிருக்கிறது.

கனியிருப்பக் காய்கவரும் திறனை மட்டுமே மூலதனமாய் வைத்துப் பரபரப்பு ஒன்றையே குறிக்கோளாக்கி விட்ட சிலரின் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடுகளைக் காணும்போது, இவர்களை மறத்தல் அல்லது மறக்க முயல்தலே இன்றைய சூழலில் சாலச்சிறந்தது என்று எண்ணத்தோன்றுகிறது.

பலரது நிகழ்காலத்தின் அன்றாட முரண்பாடுகளை நியாப்படுத்துவதற்காக, கடந்தகாலத்தின் கல்லறைகளைத் தோண்டி சடலங்களின் எலும்புகளை வைத்து சர்ச்சை செய்பவர்கள் மத்தியில், சரித்திரம் பற்றிப் பேசுவதும் பிழையாயிருக்குமோ என்ற சஞ்சலம் ஏற்பட்டு விட்டது.

ஒரு வகையில் இன்னும் நான் அந்தக் கட்டிடத்துக்குள் செல்லாமல் இருப்பது நல்லதே! இனியும் ஒவ்வொரு முறையும் அதைக் கடக்கையில் ’ஒரு முறை பார்க்க வேண்டும்,’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு, வளைவில் திரும்பியதும் மறந்து விடுவதே நல்லது! இந்த ஆவல் ஒன்றாவது ஒவ்வொரு முறையும் நமது தற்காலிகப் பயணங்களில் தலைதூக்கினால் போதாதா?

காந்தியோ, காமராஜோ - அவர்களது நினைவிடங்களுக்குள் நுழைகிற அருகதை பெற நான் எதையேனும் செய்தாக வேண்டும். குறைந்தபட்சம்....

திருமலைப்பிள்ளை சாலையில், பட்டப்பகலில் கூச்சமின்றி இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொண்டிருந்த நம் குடிமகனை ஒரு வார்த்தை தட்டிக்கேட்டிருந்தால் கூட எனக்கு அந்த தார்மீக உரிமை கிடைத்திருக்கும். அதுவும் செய்யத் திராணியன்றி, என்னைச் சுற்றியிருப்பவர்களை விமர்சிப்பதோடு என் கடமை முடிந்தது என்று எண்ணி, சோற்றுவேட்டையைத் தொடரும்வரையிலும்....

’ஒரு முறை உள்ளே சென்று பார்க்க வேண்டும்,’ என்ற ஆசை மட்டும் என்னுடன் தொடர்ந்து வரும்; வர வேண்டும்.