வாராது வந்த வரதாமணி
வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சாலச்சிறந்தது. அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை கிட்டாமணி, வரதாமணி இருவருடனும் பேசுவதற்கு அனுப்பினால், சத்தியமாக இருவரும் உறவுதான் என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார். சொந்தக்காரர்கள் எவர் வீட்டுக்கும் போகாமலிருந்ததால், வரதாமணியை நிறைய பேர் ’வராத மணி’ என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால், திடீரென்று ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன இரண்டு சாத்துக்குடிப்பழங்களுடனும் வாசலில் வந்து நின்ற வரதாமணியைப் பார்த்துப் பூரித்த கிட்டாமணியின் வயிற்றில் புளிகரைந்து கரைந்து உடம்பே ஒரு புளியோதரைப் பார்சலாய் ஆகியதுபோல உணர்ந்தான்.
’கிட்டா! சௌக்யமாடா?’என்று பாய்ந்துவந்து கிட்டாமணியைக் கட்டிப்பிடித்து வரதாமணி குலுக்கிய குலுக்கில், கிட்டாமணியின் வயிற்றிலிருந்த காப்பி பால் வேறு, டிகாஷன் வேறு ஆகியது.
அந்த நேரம் பார்த்து சமையலறையிலிருந்து வெளியேவந்த பாலாமணி, தன் கணவரை, அவரைவிட அசிங்கமான இன்னொருத்தர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.
’இது யாருடா கிட்டா? உன் சம்சாரமா?’ வரதாமணியின் வாய் வசந்தபவன் ஓட்டலின் வாஷ்பேசின் போலானது. “பத்து வருஷத்துக்கு முன்னாலே பார்த்தது. அப்போ புஹாரி ஹோட்டல் டூத்-பிக் மாதிரி இருந்தா; இப்ப புதுசா வாங்கின டூத்-பேஸ்ட் மாதிரி ஆயிட்டாளேடா!”
’சும்மாயிரு வரதா,’கிட்டாமணி முணுமுணுத்தான். ‘அப்புறம் உன் வாயிலேருந்து நுரை நுரையா வரும்.’
பரஸ்பரம் குசலம் விசாரித்து முடிந்ததும் வரதாமணி, தீபாவளிக்குச் செய்த பலகாரமென்று விவகாரமாய் சில அயிட்டங்களை எடுத்து மேஜையில் வைக்க, அடுப்படியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பூனை திடுக்கிட்டு எழுந்து அடுத்த ஊருக்கு அவசரமாய் குடிபெயர்ந்தது. வரதாமணி கொண்டுவந்த பண்டங்களின் வாசனையில் அங்கிங்கெனாதபடி எங்குமிருந்த டெங்குக்கொசுக்களின் டங்குவார்கள் அறுந்துபோய், சுங்குவார் சத்திரத்தை நோக்கிக் கிளம்பின. ஒரு வழியாக, பாலாமணி காப்பியைக் கலந்துகொண்டு வைத்தபிறகுதான் வரதாமணியின் பட்சணவாசனை மறைந்து வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
’டேய் வரதாமணி, நீ ஏண்டா இன்னும் என்னோட வாட்ஸ்-ஆப் க்ரூப்புல சேராம இருக்கே?’ என்று முகத்தில் எள்ளும், கொள்ளும், ஏகப்பட்ட பருப்பு வகைகளும் வெடிக்கக் கேட்டான் கிட்டாமணி. “எவ்வளவு நல்ல நல்ல மெஸேஜ் எல்லாம் ஃபார்வர்ட் பண்ணி விடறேன் தெரியுமா?”
“எனக்குப் பிடிக்கலேடா கிட்டா,” வரதாமணி சுரத்தேயில்லாமல் கூறினார். “Forward வசதிமாதிரியே Rewind-ம் இருந்தாச் சேர்ந்துக்கறேன்.”
“சரிசரி, போய்க் குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடலாம்,” என்றான் கிட்டாமணி. பாலாமணி அன்று ஸ்பெஷலாகச் செய்திருந்த கபூர்தலா கத்திரிக்காய் கொத்சைச் சாப்பிட்டால், வரதாமணி காஞ்சீபுரத்துக்குப் பதிலாக காசிக்கே ஓடிவிடுவான் என்று மனதுக்குள் குதூகலித்தான். ஆனால், வரதாமணியோ பொங்கலில் புழல் ஏரியளவுக்குக் குளம்வெட்டி, அதில் மொத்தக் கொத்சையும் கொட்டிக்கொண்டான். இன்னும் கொஞ்சம் கொத்சு மட்டும் மீதமிருந்திருந்தால் கத்திரிக்காயை எடுக்கக் கட்டுமரத்திலே தான் போகவேண்டி வந்திருக்கும். உண்ட களைப்பில் வரதாமணி கூடத்தில் படுத்துக் குறட்டை விட ஆரம்பிக்கவே, பாலாமணி கிட்டாமணியை இழுத்துக்கொண்டு போனாள்.
”இத பாருங்க, இதுவரைக்கும் நான் எனக்குன்னு ஒரு டயோட்டா இன்னோவாவோ ஃபோர்ட் ஃபியஸ்டாவோ கேட்டதில்லை. உண்மையைச் சொல்லுங்க! ஒரு சட்டிப்பொங்கலையும் ஒரு பானை கொத்சையும் காலிபண்ணிட்டுக் குறட்டைவிடுதே இந்த ஜென்மம். இது யாரு? இவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?”
”இப்படி திடீர்னு கேட்டா எப்படி?” அமலாக்கத்துறையிடம் அகப்பட்ட அரசியல்வாதிபோலக் கேட்டான் கிட்டாமணி,”அதை விலாவரியா ஒரு நாப்பது பக்க நோட்டுல எழுதி வைச்சிருந்தேன். தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லட்டுமா?”
”ஒண்ணும் வேணாம்; முதல்ல இந்தாளைக் கெளப்புங்க! இல்லேன்னா நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்!”
”உங்கப்பா வீடா? அது இடிஞ்சுபோயி இப்ப ஊர்க்காரங்க எருமைமாட்டைக் கட்டியிருக்கிறதாச் சொன்னே?”
“அது கிராமத்து வீடு,” பாலாமணி ஓலமணியாகிக் கூவினாள். “நான் பெங்களூரு வீட்டுக்குப் போறேன். அங்கே எருமையே கிடையாது.”
“அதான் நீ போறியா?”
”இத பாருங்க, ஓண்ணு இந்த வீட்டுல நானிருக்கணும்; இல்லே அந்தக் காண்டாமிருகம் இருக்கணும்.”
“கரெக்ட்! ஒரு வீட்டுல ரெண்டு காண்டாமிருகம் இருந்தாக் கஷ்டம்தான்.”
”நான் அப்பா வீட்டுக்குப் போறேன்னு கொஞ்சம்கூட வருத்தமேயில்லையா?”
“அதுக்கு உங்கப்பாதானே வருத்தப்படணும்? பிருந்தாவன்ல போறியா இல்லை மெயிலா?”
”எனக்கென்ன தலையெழுத்தா? ஸ்பைஸ்ஜெட்ல டிக்கெட் போடுங்க!”
சோகமும் கோபமும் மிகுந்த நிலையில் பாலாமணி இரண்டே மணி நேரத்துக்குள் மேக்-அப் போட்டுக்கொண்டு பெங்களூருக்குக் கிளம்பினாள். பாலாமணி கிளம்பி சரியாக அரை மணி நேரம் கழித்து வரதாமணி உறக்கத்திலிருந்து கண்விழித்தான்.
“கிட்டா? இந்த வீட்டுல கொசு இருக்கா என்ன?”
“எல்லாம் வெளியே போயிருந்தது. பாலாமணி கிளம்பினதும் தைரியமா ரிட்டர்ன் ஆயிடுச்சு.”
“அடடா, சம்சாரம் கோவிச்சிட்டுப் போயிட்டாளா?”
“ஆமாண்டா வரதா, பாண்டிச்சேரிலேருந்து மான்ஷன் ஹவுஸ் ஒரு பாட்டில் வாங்கி வைச்சிருக்கேன். ஆளுக்கு ஒரு லார்ஜ் போட்டுக்கலாமா?”
“ஒரு மனுஷி ஹவுஸ்ல இல்லேன்னா உடனே மான்ஷன் ஹவுஸா?”
“அப்போ வேண்டாம்கிறியா?”
“எப்போ அப்படிச்சொன்னேன்? எடுத்திட்டு வாடா!”
“டேய் வரதா, இது கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு இல்லை; மான்ஷன் ஹவுஸ் விஸ்கி! இதுக்குக் குளம் வெட்டினே, உன்னையே வெட்டிருவேன்.”
“பொஞ்சாதி கெளம்பிட்டா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசறான்யா”
வரதாமணியும் கிட்டாமணியும் ஆளுக்கு ஒரு லார்ஜ் என்று ஆரம்பித்து, மான்ஷன் ஹவுஸ் பாட்டிலுக்கு சிரஸாசனம் செய்வித்துக் கடைசிச்சொட்டையும் காலிசெய்தனர்.
”உன் பொண்டாட்டி கோவுச்சிட்டுப் போனதை நினைச்சா ரொம்ப வர்த்தமா இருக்குடா!” என்று வரதாமணி வராத கண்ணீரை வரவழைக்க முயன்றார்.
”இப்போ எதுக்குடா சீரியல்லே வர்ற சித்தப்பா மாதிரி எமோஷனல் ஆகுறே? ஏன், உன் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டுப் போனதே இல்லையா?”
“அது இல்லாமலா? போன மாசம்கூட பக்கத்துவீட்டு பேபி ஸ்கூலுக்குப் போயிட்டுருக்கும்போது டாட்டா காட்டினேன். உடனே கோவிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டா!”
“அடாடா, அந்த பேபி எந்த கிளாஸ்ல படிக்குது?”
“படிக்கலேடா, அது டீச்சரா இருக்குது!”
”நியாயமாப் பார்த்தா உன்னைத்தான் துரத்தியிருக்கணும்!”
“அதை விடுடா, ஏதாவது பண்ணி இந்தப் பொம்பளைகளுக்குப் பாடம் கற்பிக்கணும்டா!”
“அதுக்கு முதல்லே நாம படிக்கணுமே! விடுடா, நாம எப்பவும் போல இப்படியே சூடுசொரணை இல்லாமலே கடைசிவரை இருந்திரலாம்.”
“என்னாலே முடியாது,” வரதாமணி கொக்கரித்தான். “பொறுத்தது போதும்; பொங்கி எழு!”
“இன்னொரு பொங்கலா? உன்னையே கத்திரிக்காய் மாதிரி சுட்டு கொத்சு பண்ணிடுவேன்.”
”சும்மாயிரு, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். நான் அரசியல்ல குதிக்கப்போறேன்.”
”அடப்பாவி, பொண்டாட்டி மேலே இருக்கிற கோபத்தை ஏண்டா ஊருமேலே காட்டறே?”
”என்னைப்பத்தி என்ன நினைச்சே? பொங்கலைச் சாப்பிட்டுட்டுத் தூங்குறதுக்கு முன்னாடி நான் ஒரு ட்வீட் போட்டேன்; பார்க்கறியா?”
“எங்கே காட்டு!”
வரதாமணி தனது மொபைல் போனை எடுத்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவதுபோல ஆங்காங்கே தடவ, வரதாமணியின் டிவிட்டர் உயிர்பெற்றது.
“கபூர்தலா கத்திரிக்காய் கொத்சு!” கிட்டாமணி வாசித்தான். “இதெல்லாம் ஒரு ட்வீட்டுன்னு போட்டிருக்கியே!”
“சரியாப் பாரு! இதை அம்பது பேர் ரீ-ட்வீட் பண்ணியிருக்கான்!”
கிட்டாமணி அரண்டு போனான்.
“அட ஆமாண்டா! இதை எதுக்குடா ரீ-ட்வீட் பண்ணியிருக்கானுங்க? உன்னைவிட லூசா இருப்பானுங்க போலிருக்கே?”
“கீழே கமெண்ட் படிடா!” வரதாமணி சிரித்தான்.
“என்ன கமெண்ட்?” கிட்டாமணி வாசித்தான். “பஞ்சாபில் கத்திரிக்காய் கொத்சு; தமிழ்நாட்டில் பொங்கலுக்கே வழியில்லை!”
“பார்த்தியா? ஒரு கொத்சு மேட்டரை எப்படி அரசியலாக்கி ட்வீட் பண்ணுறான் நம்மாளு!”
”இதுக்குத்தான் ஆளாளும் டிவிட்டருக்குப் போறானுங்களா?”
“இரு!” என்று வரதாமணி புதிதாக ஒரு ட்வீட்டை டைப் அடித்தான்.
“மான்ஷன் ஹவுஸ்!”
“இதென்னடா கண்றாவி?”
“பொறு! இப்ப இதையும் ரீ-ட்வீட் பண்ணி கமெண்ட் போடுவான் பாரு நம்மாளு!”
சில நிமிடங்கள் கழித்து.....
“இதோ பாரு முத கமெண்ட்....!”
கிட்டாமணி வாசித்தான்.
“இப்படியே போனால் தமிழர்களெல்லாம் குடும்பத்தை விட்டுவிட்டு மான்ஷனில்தான் வசிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா தலைவா? பலே!”
வரதாமணி வாய்விட்டுச் சிரித்தான்.
“பார்த்தியா மக்களோட ரியாக்ஷனை? இப்ப சொல்லு! நாம அரசியலுக்குப் போயிடலாமா?”
”டேய்! நீ வரதாமணி இல்லேடா; வாராது வந்த மாமணி! என்ன பேத்தினாலும் உடனே ரீ-ட்வீட் பண்ணி கமெண்டும் போட ஒரு கூட்டம் ரெடியா இருக்குது போலிருக்கேடா?”
“அதான் பொட்டிக்கடை ஆரம்பிக்கிறா மாதிரி ஆளாளுக்கு கட்சி ஆரம்பிச்சு போஸ்டர் ஒட்டறானுங்க. என்ன சொல்றே? அரசியலுக்குப் போலாமா?”
“அதுக்கு முன்னாடி அர்ஜெண்டா பாத்ரூம் போயிட்டு வர்றேன்,” என்று கிளம்பினான் கிட்டாமணி.
வரதாமணி ட்விட்டரில் அடுத்த ட்வீட் போட்டான்.
”நம்பர் ஒன்!”
*****************