Tuesday, October 17, 2017

அவர்கள் புளுகுகள்


அவர்கள் புளுகுகள்

ஒருவர் மீது துவேஷம் வந்துவிட்டால், நாம் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும், அது சரியா, தவறா என்று சரிபார்க்காமல் அதை ஆமோதிக்கவும், சிலாகிக்கவும் ஒரு ஜால்ராக்கூட்டமும் இருந்துவிட்டால், கோயபல்ஸுகளின் கொள்ளுப்பேரர்கள் கூட, அரிச்சந்திரர்களின் அவதாரமாகக் கருதப்படுவார்கள். இதற்கு உதாரணமாக ஒரு பதிவர் இருக்கிறார். அவர்கள் உண்மைகள்!

கசாப்புக்கடைக்கு புத்தர் ஸ்டால் என்று பெயரிடுவதுபோல, பொய்யும் புரட்டுமாக எழுதித்தள்ளுகிற ’மதுரைத்தமிழன்’ என்ற இந்த ஆசாமியின் வலைப்பதிவுக்குப் பெயர் ‘அவர்கள் உண்மைகள்.’

இவரது சமீபத்திய பொய்களின் சில சாம்பிள்களை நான் வாசித்து, அவரது பதிவுகளிலிருந்த சில கருத்துக்களுக்கு எதிராக சில கேள்விகளை வைத்தேன். ஆனால், புளுகர் சாமர்த்தியசாலி; ஒரு விஷயம் குறித்து கேள்வி எழுப்பினால், இன்னொரு விஷயத்தைப் பற்றி நம்மிடமே கேள்வி எழுப்புவார். சரி, அதற்கும் பதில் சொன்னால், இன்னொரு கேள்வி!

இவர்களைப் போன்ற அதிபுத்திசாலிகள் வலையுலகத்தில் மட்டுமல்ல; முகநூலிலும் இருக்கிறார்கள். நக்கலடிப்பது, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியின்றி, உண்மையை எதிர்கொள்ளவோ செரிமானம் செய்யவோ வலுவின்றி, வேண்டுமென்றே எழுதுகிறவனுக்கு எரிச்சலூட்டுவதுபோல எதையாவது எழுதி, மிகவும் புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொள்வதில் படுசமர்த்தர்கள். சரி, இவர்களை உதாசீனப்படுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். செய்யலாம்தான். ஆனால், இவர்களைப் போன்ற பொய்யர்களின் இடுகைகளைப் படித்துவிட்டு, அதை ஆமோதிக்கிற தொனியில் கருத்திடுகிற எனது நட்புகளாவது உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்த இடுகை.

ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். அதைப்போலவே, மதச்சார்பின்மை என்ற பவுடரை மூஞ்சியில் அப்பிக்கொண்டு திரிகிற சில ஆஷாடபூதிகள்தான் தற்போது மோடியைக் குறித்து அதிகம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நம்ம புளுகுமாஸ்டரும் அப்படித்தான். தினமும் மோடியைப் பழித்து, அவரது அபிமானிகளைக் கலாய்த்து ஒரு பதிவாவது எழுதாவிட்டால் ஜன்மம் சாபல்யமாகாததுபோல ஒரு பீதி இவருக்கு.

மோடியைப் பற்றி எழுதினால் உனக்கென்ன?

நீ என்ன ஆர்.எஸ்.எஸ்.ஆசாமியா? பதில்- ‘ஆமாம்’

இந்துத்வா வாதியா? பதில் -’ஆமாம்’

பாஜக-வில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாயா? பதில் -’ஆமாம்’

இவை ஏதும் இல்லையென்றாலும், எனக்கு சரியென்று பட்டால் அதுபற்றி எழுதுவேன். மன்மோகன்சிங் ஆட்சிக்கு ஆட்டம் காண்பித்த அண்ணா ஹஜாரேயையும் நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன்.  நினைவிருக்கிறதா?

இது மதுரைத்தமிழன் என்ற ஒரு தனி ஆசாமிக்கு எதிரான பதிவு மட்டுமல்ல; அவரைப்போலவே, போகிற போக்கில் புரளி கிளப்பிவிட்டு, தரவுகளைக் கேட்டால் பம்முகிற, விபரங்களைக் கொடுத்தால் விழிபிதுங்குகிற, பரபரப்புக்கென்று பதிவுகளை எழுதிவிட்டு பதிலளிக்கவும் திராணியில்லாத ஆர்வக்கோளாறு அப்புசாமிகளுக்கு எதிரான ஒரு பதிவு.

சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், ‘பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.காரணமாக வளர்ச்சி விகிதம் குறைந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு நிறுத்திவிடாமல், இந்தியா ஒவ்வொரு துறையிலும் எத்தனை வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடனும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நமது ’அவர்கள் புளுகுகள்’ அந்த விபரங்களையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, ‘வளர்ச்சி குறைந்தது என்று மோடியே சொல்லிவிட்டார்’ என்று ஒற்றைக்கொம்பைப் பிடித்துக்கொண்டு தன் வலையில் ஒரு பதிவு போட்டு கம்பு சுற்றிக் கொண்டிருந்தார்.

எனது பின்னூட்டங்களில் நான் கேட்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல், ஏதேதோ கேள்விகளைக் கேட்டு திசைதிருப்ப முயன்றார். ‘சரி, மோடி பொய் சொல்கிறார். உண்மை என்னவென்று நீங்களாவது சொல்லுங்களேன். அவர் கொடுத்த புள்ளிவிபரங்களில் ஒன்றிரெண்டையாவது தவறு என்று நிரூபியுங்களேன்,’ என்று ஏறக்குறைய சவாலே விடுத்திருந்தேன். ஊஹும், மனிதர் இன்றளவிலும் அதற்கு பதிலளித்த பாடில்லை. மாறாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் நிறுவனம் குறித்து ‘தி வயர்’ என்ற வலைத்தளத்தில் வெளியான கட்டுரையை எடுத்துப்போட்டு, ‘இதற்கு பதில் சொல்லுங்க,’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இறுதியாக அளித்த பதிலுக்கு அவரது எதிர்வினை இல்லை. சோலி முடிஞ்சுது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

மதுரைத்தமிழன் அவர்களே! உங்களைப் போன்ற ஒரு புளுகரின் முகத்திரையையாவது கிழித்தால்தான், இத்தனை ஆண்டுகள் நானும் பதிவராக இருந்ததற்கு ஒரு பொருள் இருக்குமென்று நினைக்கிறேன்.

அமித்ஷா மகன் குறித்துக் கட்டுரை வெளியிட்ட அந்த வலைத்தளத்தின் மீது 100கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதும், அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட பல தகவல்கள் தவறானவை என்பதை பல நிதிமேலாளர்களும், நிபுணர்களும் வெவ்வேறு பத்திரிகைகளில் எழுதி வருகிறார்கள் என்பதும் அமெரிக்க்க்காவில் இருக்கிற மதுரைத்தமிழனுக்குத் தெரியுமோ தெரியாதோ? அந்தச் சுட்டிகளை இங்கு போடாலாம்தான்; ஆனால், அவை ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பத்திரிகைகள்; அப்படித்தான் போடுவார்கள் என்று சாதிப்பீர்கள். அப்படியானால், இடதுசாரி சார்புடைய ‘தி வயர்’ கட்டுரையை மட்டும் வேதவாக்காக எடுத்துக்கொள்வீர்களா என்று நான் திருப்பிக் கேட்க நேரிடும்.

இப்போதாவது, அமித்ஷா மகன் விஷயத்தில் என்ன ஊழல் நடந்தது என்று விளக்கி ஒரு பதிவு போடத்தயாரா? அதற்கு பதில்போட நான் தயார்! Come on NRI, show some guts.

உண்மையில் மதுரைத்தமிழனுக்கும், அவரைப் போல பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது சேற்றை வாரி இறைக்கிற வேறு சில பதிவர்களுக்கும் பொருளாதாரம், நிதிமேலாண்மை குறித்து நிறையத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதற்கான சான்றுகளை அவர்களது பதிவுகளில் காண முடியவில்லை. எனது அனுமானம் தவறோ?

ஒரு இஸ்திரிக்கடைக்காரர் ரூ.5000/- முதலீடு செய்து தொழிலைத் தொடங்குகிறார். அவரிடம் தினமும் 100 பேர் சட்டையை இஸ்திரி செய்யக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சட்டைக்கும் தலா ரூ.5/- வாங்குகிறார் என்றால் ஒரு நாளைக்கு அவரது Turnover ரூ.500-, ஒரு மாதத்துக்கு ரூ.15000/-, ஒரு வருடத்துக்கு ரூ.1,80,000/-. அவை அனைத்தும் அவருக்குக் கிடைத்த லாபமல்ல. அவருக்கு அவரது தொழில் செய்வதற்கான செலவினங்கள் போக மீதமாவதுதான் லாபம். இந்த அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டு, அந்தக் கட்டுரையைப் படித்தால், அதை எழுதிய அம்மணி ஒரு அரைக்கிறுக்கு என்பது புரிந்திருக்கும். அதை ஒரு வேதவாக்காக எடுத்துக்கொண்டு, பெரிய சுயம்புபோல பதிவிடுகிறவர்கள் அரையா, முழுசா என்பதை அறிவுள்ளவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

இதுவரை அடுத்தவர்கள் பரப்பிய பொய்யுரைகளைப் பதிவிட்டு வந்தவர், இப்போது புதிதாக ஒரு பொய்யை மிகவும் மெனக்கெட்டுக் கண்டுபிடித்து அதையும் ஒரு பதிவாகப் போட்டிருக்கிறார். அதையும் வாசித்துவிட்டு,  நிறைய நண்பர்கள் வியந்து விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியென்ன கண்டுபிடிப்பு என்று கேட்கிறீர்களா?

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் ரயில் நிலையமே கட்டப்பட்டது. 1950-ம் ஆண்டுதான் மோடி பிறந்தார். 6-வது வயதில், அதாவது 1956-ல் அவர் அங்கு எப்படி டீ விற்றிருக்க முடியும்?

இதுகுறித்து நான் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி சில மணி நேரங்களாகியும் பிரசுரமாகவில்லை. அதனால்தான், ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். அவனவன் பொய்யை வைத்தே பதிவு போடுகிறபோது, உண்மையை எழுதினால் என்னவாம்?

இவரது புளுகுமூட்டையை அவிழ்ப்போமா?

நான் சீரியஸ் பதிவுகள் எழுதுவதற்கு முன்னர், நிறைய தகவல் சேகரிப்பது வழக்கம். எடுத்தோமோ கவிழ்த்தோமோ என்று கிள்ளிவிட்டுத் துள்ளி ஓடுகிற பழக்கம் எனக்கில்லை.

1973-ம் ஆண்டுதான் வாட்நகர் என்ற ரயில் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் அங்கு ரயில் தடமே இல்லையா? அல்லது அப்படியொரு தடமிருந்திருந்தால், அங்கு ரயில் போக்குவரத்தே நடைபெறவில்லையா? அப்படியே நடைபெற்றாலும், அந்த ரயில்கள் வாட்நகரில் நின்றுபோனதா இல்லையா?

மேற்படிக் கேள்விகள் குறித்துக் கொஞ்சம் ஆராய்ச்சி, வேறென்ன, கூகிள் ஸர்ச்சாவது பண்ணிவிட்டுப் பதிவிட்டுத் தொலைத்திருக்கலாம் புளுகு மாஸ்டர்! மோடி மீது உங்களுக்கு இருக்கிற துவேஷம், புளுகுவதில் உங்களுக்கு இருக்கிற அளப்பரிய ஆர்வம், நீங்கள் எது எழுதினாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதற்கென்று நீங்கள் வைத்திருக்கிற ஒரு கூட்டம் - இவையெல்லாம் சேர்ந்து உங்களது அறிவுக்கண்ணை மறைத்து விட்டன.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்நகர் குஜராத் மாநிலத்தின் மெஹ்ஸானா மாவட்டதில் இருக்கிறது. 1887-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அகமதாபாத்- பாலன்பூர் இடையிலான தடத்தில்தான் வாட்நகர் அமைந்திருக்கிறது. இது ராஜ்புடானா ரயில்வே என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. வாட்நகர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றிருக்கின்றன; பயணிகளை ஏற்றுச் சென்றிருக்கின்றன.

அப்போது பிரிட்டிஷ் அரசு ஆண்டுகொண்டிருந்தது என்பதையாவது புளுகர்கள் அறிந்துவைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வர்த்தகத்துக்காக அவர்கள் சிறிய ஊர்களில் வெறும் நிறுத்தங்களை(Halt) மாத்திரமே வைத்திருந்தார்களே தவிர, கட்டிடம்(Station) எதுவும் எழுப்பவில்லை. முறையான கட்டிடம் 1973-ல் வந்தது என்பது உண்மைதான்.


2005-ல் பிரபல நூல்பதிப்பாளர்களான ‘பென்குயின்’ வெளியிட்டுள்ள, திரு.அச்யுத் யாக்நிக் எழுதியுள்ள ‘Shaping of Modern Gujarat’ என்ற ஆங்கில நூலில் மேற்படித் தகவல்களுக்கான தரவுகள் இருக்கின்றன. குறிப்பிட்ட அந்தப் பகுதியின் குறிப்பிட்ட அந்தப் பத்தி உங்களைப் போன்ற புளுகர்களின் பார்வைக்குத் தந்திருக்கிறேன். (பக்கம்.119)

இன்று காழ்ப்புணர்வோடு கரித்துக்கொட்டுகிற ஆங்கில ஊடகங்களில்கூட வாட்நகர் வாசிகள் மோடி தேநீர் விற்றதுகுறித்துப் பேசிய காட்சிகள், அவர் பதவியேற்றபோது ஒளிபரப்பப்பட்டன. இதெல்லாம் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூசாமல் பொய் பேசுகிற உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இங்கிருக்கிறவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், ‘தொலைஞ்சு போவுது’ என்று இக்கிக்கி என்று இளித்துக்கொண்டு, தங்களையும் மோடிவிரோதிகள் போலக் காட்ட முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். பாவம்.

உங்களுக்கு உறுதுணையாக இன்னும் ஓரிரெண்டு பேர் இருக்கிறார்கள். பரிவை.சே.குமார் என்ற இன்னொரு புளுகர். புளுகர் மட்டுமா? தாஜ்மஹாலை தஞ்சை கோவிலுடன் ஒப்பிடுகிறார் இவர். ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் கட்டிய பெரியகோவிலைப் புகழாமல் தாஜ்மஹாலை ‘காதல்சின்னம்’ என்று புகழ்கிறோமாம். புளுகர் நம்பர் டூ-வின் கண்டுபிடிப்பு. தாஜ்மஹாலை உலக வரலாற்று ஆசிரியர்கள் எத்தனைபேர் காறி உமிழ்கிறார்கள் என்பதை விரைவில் எழுதப்போகிறேன். காத்திருங்கள்.

நம் தமிழகத்தின் பெருமையாய் இருக்கிற ஒரு பிரம்மாண்டமான அழகை, அது ஒரு கோவில் என்பதற்காக, ஒரு சமாதியுடனா ஒப்பிடுவது? இதை ஆட்சேபிக்காமல் அங்குபோய் ‘ஆமாம் சாமி’ போட்ட பதிவர்களை நேரில் சந்திக்கும்போது அவசியம் கேட்பேன். ’இது உங்களுக்கே நல்லாயிருக்கா?’ - தயாராக இருங்கள்.

புளுகர்களே! மோடி டீ விற்றதை மணிசங்கர் ஐயர் என்ற மறைகழண்ட காங்கிரஸ்காரன் கிண்டல் செய்ததன் பலன் என்ன தெரியுமா? காங்கிரஸ் மொத்தம் ஜெயித்தது 44 இடங்கள். இன்று மக்களவையில் பெரும்பான்மை; மாநிலங்களவையிலும் பெரிய கட்சி பாஜக தான். இன்று இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் எத்தனையென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள். இல்லையென்றால், கேட்கிற கேள்விக்குப் பதிலளிக்கிற துணிச்சலை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் செய்ய முடியாது என்றால், உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். என்னவென்று?

ஒன்று நீங்கள் புளுகர்கள் அல்லது அடிமுட்டாள்கள்.

14 comments:


  1. வணக்கம் சார்!

    உங்கள் கருத்துகளில் நியாயங்கள் உள்ளன. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்ன என்றால், நீங்க அரசியல் பதிவுகளைத் தவிர்த்து, உங்களுடைய பலமான, நகைச்சுவை பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதே!

    ReplyDelete
  2. சாட்டையை சுழற்றுங்கள் வேணுஜி

    ReplyDelete
  3. இவர்கள் எல்லாம் நம்மைப்போல நிஜமான ID யில் வந்து பேச ச்சொல்லுங்களேன் முதலில்.. அதற்கே திராணியற்று புனைவில் ஒளிந்து கொண்டு தலையும் வாலையும் வெட்டிவிட்டு பொய்களை வன்மத்துடன் பரப்பும் கூட்டம். Just ignore them. இவர்கள் பக்கமெல்லாம் திரும்பி கூட பார்ப்பதில்லை. அத்தனையும் வன்மம் கலந்த குப்பைகள்.

    ReplyDelete
  4. கருத்துகளோடு மோதலாம்கருத்திடுவோரோடும் வேண்டுமா

    ReplyDelete
  5. சேட்டை.. அவர் பதிவுகளில் பொதுவாகத் தென்படுவது இந்தியா பற்றிய கேலியும், அமெரிக்கா பற்றிய பெருமிதமும். யாருக்கு வேண்டும் இவர்களது பச்சாதாபமும், அறிவுரையும்..? இவர்களது "Bloody India" மனப்பான்மை எப்போது வருகிறது, தெரியவில்லை. அமெரிக்க விசா கிடைத்தவுடனே வருகிறதா.. இல்லை, Green Card வந்தபின்பா.. இல்லை அமெரிக்கக் குடியுரிமை கிடைத்து, Trump போன்ற கிடைத்ததற்கரிய தலைவரைத் தேர்ந்தெடுத்த பின்பு வருகிறதா தெரியவில்லை.அவரைப் போன்றோரைப் புறக்கணியுங்கள். அதுவே என் வேண்டுகோள்.

    ReplyDelete
  6. //kg gouthaman//

    //உங்கள் கருத்துகளில் நியாயங்கள் உள்ளன. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்ன என்றால், நீங்க அரசியல் பதிவுகளைத் தவிர்த்து, உங்களுடைய பலமான, நகைச்சுவை பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதே!//

    நகைச்சுவை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் சார். படிச்சு சிரிச்சிட்டுப் போயிடுவாங்க. ஆனால், ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி, வயிற்றைக் கழுவுவதற்காக வெளிநாட்டில் போய் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஒருவர், அவதூறுச் செய்திகளைப் பரப்புவதும், அவர் போடுகிற ஒரு தமிழ்மணம் ஓட்டுக்காக, அவர் சொல்வதற்கு இங்கிருக்கிற சில நபர்கள் ஜால்ரா தட்டுவதும் எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது தெரியுமா? இவர்களை எதிர்ப்பதை விட, நகைச்சுவைப்பதிவு எழுதி மற்றவர்களைச் சிரிக்க வைப்பதா இப்போது முக்கியம்?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்! நீங்களாவது என்னைப் புரிந்து கொண்டால் மகிழ்வேன். நன்றி.

    ReplyDelete
  7. //எல் கே//

    //சாட்டையை சுழற்றுங்கள் வேணுஜி//

    நீங்களும் சுழற்றணும் எல்கே! என்னைவிட முகநூலில் தீவிரமாக எழுதுகிறவர் நீங்கள்! மீண்டும் வாருங்கள் வலைப்பூவுக்கு. இவர்களுக்கு உடனுக்குடன் தக்க பதில் கொடுத்து இவர்களது வாயைப் பூட்டுவோம். நன்றி.

    ReplyDelete
  8. //Manickam sattanathan//

    //Just ignore them. இவர்கள் பக்கமெல்லாம் திரும்பி கூட பார்ப்பதில்லை. அத்தனையும் வன்மம் கலந்த குப்பைகள்.//

    இல்லை நண்பரே, இவர்களை இப்படியே எழுத விட்டால், இந்தத் தமிழ்மணம் ஓட்டுப்பக்கிகள் அங்கே போய் வெட்கமில்லாமல் ஆமோதித்து எழுதுவதோடு,இப்படி எழுதினால் இன்னும் கொஞ்சம் ஓட்டுக்கிடைக்குமென்று இவர்களும் எழுத ஆரம்பித்து விட்டார்கள். நீங்களும் மீண்டும் வலைப்பூவுக்கு வர வேண்டும். இந்த ஓட்டுப்பொறுக்கிகளின் ஆட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். யார் வருகிறீர்களோ இல்லையோ, நான் இறங்கி விட்டேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! வாருங்கள் மீண்டும்! வாசிக்க அல்ல; எழுத! :-)

    ReplyDelete
  9. //G.M Balasubramaniam//

    //கருத்துகளோடு மோதலாம்கருத்திடுவோரோடும் வேண்டுமா//

    அப்படியா சார்? நம் நாட்டுப் பிரதமரைப் பற்றி அன்னிய நாட்டில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் தரக்குறைவாக விமர்சனம் செய்வார்; அங்கு போய் அதற்கு ஆமாம் சாமி போடுவது அசிங்கமா இல்லை அவரது கருத்துக்கு எதிர்கருத்து வைப்பது அசிங்கமா?

    இந்த வாட்ஸாப் கும்பல் என்னைப் பற்றி என்னென்ன பேசியிருக்கிறது என்ற தகவல் எனக்கு (ஆதாரங்களுடன்) கிடைத்திருக்கின்றது. இவர்களைப் போல முகத்துக்கு முன்னால் இளித்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் திட்டுகிற புத்தி எனக்குக் கிடையாது. நேரடித்தாக்குதல்தான். நீங்கள் நாளைக்கு மோடியைப் பற்றி அவதூறாக எழுதினால் உங்களையும் திட்டுவேன். யோசிக்க மாட்டேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிசார்.

    ReplyDelete
  10. //villagetamilan//

    //அவர் பதிவுகளில் பொதுவாகத் தென்படுவது இந்தியா பற்றிய கேலியும், அமெரிக்கா பற்றிய பெருமிதமும்.//

    அவர் அமெரிக்காவுல கார்ப்பரேட் முதலாளியோ இல்லை கக்கூஸ் கழுவும் தொழிலாளியோ, நமக்குக் கவலையில்லை. இந்த நாட்டில் பிறந்து வாழ்கிற நம்ம ஊரு ஜென்மங்களுக்கு அறிவு வேண்டாம்? என் நாட்டைப் பற்றி நீ என்னடா எழுதறதுன்னு கேட்கிற துணிச்சல் வேண்டாம்? கேவலம், இவன் ஒரு ஓட்டுப் போடுவான்னுட்டு அங்கன போயி அசடு வழியிற இந்தப் பிறவிகளை என்னான்னு சொல்ல?

    //அவரைப் போன்றோரைப் புறக்கணியுங்கள். அதுவே என் வேண்டுகோள்.//

    புறக்கணிக்கிறதா? இவர்கள் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஒரு 20-25 பேர் சேர்ந்துகொண்டு தமிழ் வலையுலகையே ஆட்டிப்படைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களில் அட்டகாசத்தால் நன்றாக எழுதுகிற சில பதிவர்களால் முன்னுக்கு வர முடிவதே இல்லை. கூடிய சீக்கிரம் இவர்களது கொட்டத்தை நான் ஒருவனே அடக்கிக் காட்டத்தான் போகிறேன். நல்ல பதிவர்கள் முன்னுக்கு வர வேண்டுமென்றால், இந்த ஆசாமிகளை அடக்கி ஓரங்கட்ட வேண்டும். அது நடந்தே தீரும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  11. உங்கள் கருத்து சரியே. இருப்பினும் பெயர் குறிப்பிடுவதைத் தவிர்க்கலாம். கோபத்தைக் குறைத்துக்கொண்டு இதையே உங்கள் சேட்டை நடையில் (சோ ராமசாமி போல) எழுதினால், இன்னும் சிறப்பாக இருக்கும், பலருக்கும் சென்றடையும். தீபாவளி வாழ்த்து!

    ReplyDelete
  12. //கருத்து கந்தசாமி//

    //இருப்பினும் பெயர் குறிப்பிடுவதைத் தவிர்க்கலாம். கோபத்தைக் குறைத்துக்கொண்டு இதையே உங்கள் சேட்டை நடையில் (சோ ராமசாமி போல) எழுதினால், இன்னும் சிறப்பாக இருக்கும், பலருக்கும் சென்றடையும். தீபாவளி வாழ்த்து!//

    அந்த மாதிரி நகைச்சுவை நடையில் எழுதினால், அவர்கள்கூட வாசித்துவிட்டு, சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள். இதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தீபாவளி வாழ்த்துகள். வாழ்க!

    ReplyDelete
  13. சேட்டைக்காரரே... தொடர்கிறேன்.

    தாமதமான 'தீபாவளி வாழ்த்துக்கள்' (அல்லது மிகச் சீக்கிரமான அடுத்த வருடத்துக்கான தீபாவளி வாழ்த்துக்கள் :) )

    ReplyDelete
  14. பதிவென்னவோ ஒரே காட்டம்
    இருக்கிறது இதில் உண்மையின் ஊட்டம்

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!