Wednesday, August 28, 2013

பதிவர் திருவிழாவும் பாலகணேஷின் வாகனமும்




அண்ணா! ஃப்ரீயா இருக்கீங்களா?எனக்கு மிகவும் பரிச்சயமான பதிவர் மின்னல் வரிகள் பாலகணேஷ்  அலைபேசியில் அழைத்துக் கேட்கிற பரிச்சயமான கேள்வி இது.

      ரொம்ப ஃபீரியா, பனியனும் லுங்கியுமா இருக்கேன். என்ன விஷயம்?விஷயம் என்னவென்று ஊகித்திருந்தாலும் கேட்டு வைப்பேன்.

      எதுக்கு சஸ்பென்ஸ்? வெளியூரிலிருந்து சகபதிவர் யாராவது சென்னைக்கு வந்திருப்பார். அவரைப் போய்ச் சந்திக்கலாம்; வாருங்கள்என்று அழைக்கத்தான் பாலகணேஷ் அழைப்பார். இப்படி இவர் அழைத்து நான் சந்தித்த வெளியூர் பதிவர்களின் பட்டியல், எனது இடுகைகளை விடவும் நீளமாக இருக்கும். உதாரணத்துக்கு திரு.வெங்கட் நாகராஜ்திரு.ரமணி, திருமதி.மஞ்சுபாஷிணி...அத்தனை பேரையும் எழுதினால் முடிப்பதற்குள் பதிவர் திருவிழா 2013 முடிந்து போய்விடும்.

      அண்ணா! நீங்க உடம்பை ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க! நான் வீட்டுக்கு வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்!என்று தவறாமல் சொல்லுவார். ‘அதெல்லாம் வேண்டாம்! நான் கோடம்பாக்கம் பிரிட்ஜுக்கு வந்து விடுகிறேன். அங்கிருந்து சேர்ந்து போவோம்என்று சொல்லுவேன். (ஒரு கெத்து தான்!)

      கோவில் உற்சவங்களின்போது, மூஞ்சுறு வாகனத்தில் பிள்ளையார் ஊர்வலத்தில் வருவதைப் போல, தனது டி.வி.எஸ்.50-யில் அமர்ந்தவாறு, ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ஆயிரம் ரூபாய் ஆனாலும் சரி, நான் இருபது கி.மீ. வேகத்தைத் தாண்ட மாட்டேன்என்று சூப்பர் ஸ்லோ மோஷனில் கிளம்புவார். அவர் மாம்பலத்திலிருந்து தனது வாகனத்தில் கிளம்ப, நான் சூளைமேட்டிலிருந்து ஆமைவேகத்தில் நடந்து புறப்பட, ஆற்காடு சாலை சேகர் எம்போரியமருகே சந்திப்போம். அங்கிருந்து தனது இருசக்கர புஷ்பக விமானத்தில் அழைத்துக் கொண்டு போய், சந்திப்பு நடந்து பிரியாணி/ தயிர்சாதம் (எனக்கு) சாப்பிட்டு முடித்ததும், பத்திரமாகத் திரும்பவும் கொண்டுவந்து விடுவார். போகிற இடத்தில் மாடிப்படிகள் இருந்தால், ‘பார்த்து ஏறுங்கண்ணா. நான் வேண்ணாப் பிடிச்சுக்கட்டுமா? என்ற கேள்வி வேறு!

      ஊஞ்சல்பத்திரிகையில் எனது கதை வெளியானதிலிருந்து, நானும் கணேஷும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம். எனது வீடு, அவரது வீடு, டிரஸ்ட்புரம் மைதானம், கோடம்பாக்கம் யு.ஐ.காலனி, வள்ளுவர் கோட்டம் என்று நாங்கள் அடிக்கடி எங்காவது சந்தித்து உலகசுபிட்சம் தொடர்புடைய பல சங்கதிகளை மசால்வடை கடித்தும், கட்டிங் டீ குடித்தும் விவாதிக்கத் தொடங்கினோம்.

      அவரால் திரு.கே.பாக்யராஜ், திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து அறிமுகமாகிற வாய்ப்பு கிடைத்தது. நேரில் சந்திக்காவிட்டாலும், எனது இடுகைகளை வாசித்துவிட்டு, அவ்வப்போது எனக்கு மடல் எழுதும் எழுத்தாளர் திரு.கடுகு(பி.எஸ்.ரங்கநாதன்) அவர்களுடன் ஏற்பட்ட தொடர்புக்கும் கணேஷே பிள்ளையார் சுழி போட்டவர். இன்றைக்கு திரையுலகில் சிலரோடு எனக்கு இருக்கிற தொடர்புக்கும், ஒரு சில படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பங்களிக்க முடிந்ததற்கும், ஒரு விதத்தில் பாலகணேஷின் அறிமுகங்கள் மறைமுகமாக உதவி செய்தன என்றும் சொல்லலாம்.

      எனது இடுகையொன்றை வாசித்துவிட்டு, ஐயா புலவர் இராமானுசம்  அவர்கள் ‘உங்களை உடனடியாகப் பார்க்கணும்என்று பின்னூட்டமே போட்டிருந்தார். கணேஷை அழைத்து ‘புலவர் ஐயா முகவரி வேணுமே? என்றதும் ‘விடுங்கண்ணா, நான் கூட்டிட்டுப் போறேன் என்று அழைத்துச் சென்று அந்த மாமனிதரை அறிமுகம் செய்வித்தார். அதன்பிறகு, புலவர் ஐயாவின் வீட்டில் அவ்வப்போது நடைபெறும் சந்திப்புகளில் பெரும்பாலானவற்றில் நான் பங்கு கொண்டிருக்கிறேன்.

      தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது என்னுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பவர் அவர் ஒருவர் மட்டும்தான். ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் எனது உடல்நலம் குன்றியபோது, தகவல் அறிந்ததிலிருந்து என்னை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கும் மிகச்சிலரில் முதன்மையானவர் அவர்தான். ஒருமுறை, பதிவர்.மதுமதி மற்றும் ‘மெட்ராஸ் பவன்சிவகுமாரையும்  அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

      மதிப்புக்குரிய வானம்பாடிகள் ஐயா ஒருமுறை என்னிடம், “நீங்க இந்த சேட்டைக்காரன் என்கிற altar-ல் நிழல் தேடிக்கொண்டிருப்பது சரியல்ல! என்று சொல்லியிருந்தாலும், எனது அடையாளத்தை பகீரங்கப்படுத்த நான் மிகவும் தயங்கிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில், சரியாக ஓராண்டுக்கு முன்னர் நடந்த நிகழ்வைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

      பதிவர்களெல்லாம் சந்திக்கிறா மாதிரி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்கண்ணா! நீங்க மட்டும் ஏன் இப்படி யாருக்குமே முகம்காட்டாம ஒதுக்கமா இருக்கீங்க? உங்களை அறிமுகப்படுத்திக்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காதே?

      யாருக்கும் அறிமுகமாகாமல் இருந்த என்னை, சென்ற ஆண்டின் பதிவர் திருவிழாவில் பங்கேற்க வைத்தது கணேஷின் இந்தத் தூண்டுதல்தான். வருகிறேன்என்று சொல்லிவிட்டாலும், எங்கே கடைசி நிமிடத்தில் நான் கடுக்காய் கொடுத்து விடுவேனோ என்ற பயத்தில், சகோதரி ‘தென்றல்சசிகலா வின் கவிதை நூலின் முதல் பிரதியை நான் பெற்றுக்கொள்வதாக நிகழ்ச்சி நிரலை அமைத்து விட்டிருந்தார்கள் விழாக்குழுவினர். சென்ற ஆண்டின் பதிவர் திருவிழா என்னைப் பொறுத்தவரை, ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அந்த அரங்கில் எனக்குக் கிடைத்த நட்புகள் மிக மிக அதிகம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அந்த நட்பு இன்னும் வளர்கிறது; மேலும் வளரும்.

      இந்த ஆண்டும் பதிவர் திருவிழா குறித்த ஆலோசனைகள் நடைபெறத் துவங்குவதற்கு முன்பிருந்தே, கணேஷ் என்னைச் சந்திக்கும் போதெல்லாம், சற்றும் சலிக்காமல் சொன்ன ஒரு விஷயம்: உங்க எழுத்தையெல்லாம் ஒரு புத்தகமாப் போடலாம்ணா! ‘உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க! மத்ததை நான் பார்த்துக்கிறேன்.

       நீண்ட யோசனைக்குப் பிறகு நான் சம்மதித்தேன். அப்படி யோசித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது, கணேஷ் வடிவமைத்திருக்கிற புத்தகத்தைப் பார்த்தபோது எனக்கு சுள்ளென்று உறைத்தது. வெட்கத்தைவிட்டுச் சொல்வதென்றால், எனது கண்களில் நீர் தளும்பியது. எனது இப்போதைய கவலையெல்லாம், கணேஷின் முயற்சி வெற்றியடைய வேண்டுமே என்பது மட்டுமே! பதிவர் திருவிழா-2013 அன்று (01-09-2013) மாலை நான்கு மணிக்கு எனது “மொட்டைத்தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தின் வெளியீடு நடைபெறவுள்ளது. இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

      ஒரு நாகேஷ் படத்தைப்போட்டுக்கொண்டு நான் எழுதிய காலத்தில்கூட, ஒவ்வொரு இடுகையையும் வாசித்து, ஆக்கபூர்வமான விமர்சனங்களை அளித்து, மனமாறப் பாராட்டி என்னை ஊக்குவித்த சகபதிவர்கள் ஏராளம். என் நிஜப்பெயர், வயது, வசிப்பிடம் எதுவுமே தெரியாமல், எனது இடுகைகளை மட்டுமே ரசித்து என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டிய வாசகர்களாகிய சகபதிவர்கள்தான் எனது புத்தகம் வெளியிடக் காரணமாக இருப்பவர்கள். ஆகவே, உங்கள் அனைவரின் பிரதிநிதிகளாக, நண்பர் ஆர்.பிரபாகர்  அவர்கள் எனது நூலை வெளியிட, சகோதரி. அனன்யாமகாதேவன்  முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறார். எனது வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சிக்கு வர சம்மதித்திருப்பதன் மூலம், இவ்விருவரும் எனது நன்றிக்கடனை மேலும் அதிகரித்திருக்கிறார்கள்.

      சென்ற பதிவர் திருவிழாவை விட இந்த ஆண்டு, ஏற்பாடுகள் மிகவும் சீரும் சிறப்புமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுவும் குறுகிய காலத்தில் இப்படியொரு முயற்சியை, இவ்வளவு பெரிய அளவில் நடத்திக்காட்டுவதற்காக, விழாக்குழுவினர் பலர் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பதை நானறிவேன். அரசியல் மாச்சரியங்களுக்கோ, தனிமனித பாரபட்சங்களுக்கோ, சொந்த விருப்பு வெறுப்புகளுக்கோ இடமளிக்காமல், பதிவர்கள் அனைவரும் ஒரு நாளில் சந்தித்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளுடன் விடாமுயற்சி மேற்கொண்டிருக்கும் பதிவர் திருவிழா-2013 நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கு நாம் தரும் வெகுமானம், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களுக்குத் தோள்கொடுத்து, அவர்களது அயராத முயற்சிகளை அங்கீகரிப்பது ஒன்றுமட்டுமே! வயது வித்தியாசம் பாராமல், சற்றும் குறையாத உற்சாகத்தோடு, இந்த நிகழ்ச்சியை நம் அனைவரது வீட்டில் நிகழும் ஒரு விசேடத்தைப் போல, செவ்வனே நடத்தத் திட்டமிட்டு அதன்படி செயலாற்றும் அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

      அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிப்பதில் எனக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது. வாழ்க! வாழ்க!!



      கூகிள் குழுமங்களில், சினிமாப்பாடல்களின் வரிகளை மாற்றி, நக்கல் நையாண்டி செய்த என்னை ஊக்குவித்தவர்கள் எத்தனையோ பேர்! ‘பண்புடன் அண்ணாச்சிஆசீப் மீரான், ‘தமிழ்த்தென்றல்குழுமத்தின் ந.உ.துரை என்று தொடங்கி கல்யாணச் சமையலுக்கான மளிகைப்பட்டியல் போல அதுவும் மிகவும் நீளமானது. அவர்களை நினைக்காமல், அவர்களுக்கு நன்றி தெரிவிக்காமல், இந்தத் தருணத்தின் மகிழ்ச்சியில் நான் திளைத்திட வாய்ப்பேயில்லை. 

      பாலகணேஷின் டி.வி.எஸ்.50 என்னை, நானே எதிர்பாராத பல நட்புகளிடம் சென்று சேர்த்ததுபோலவே, இந்த பதிவர்திருவிழா 2013-ம் பல புதிய நட்புகளை ஈட்டுவதற்கும், இருக்கிற நட்பை பலப்படுத்துவதற்கும், பல புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு வியக்கத்தக்க கருவியாகச் செயல்படும் என்பது எனது நம்பிக்கையாகும். ஆகவே, இந்த ஆண்டு நிகழவிருக்கும் இந்த வைபவத்தை மிகப்பெரிய வெற்றியாக்க வேண்டும் என்று அனைவரையும் இருகரம் கூப்பி, சிரம்தாழ்த்தி, வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

26 comments:

  1. அவருடைய வண்டியில் ஏறாத
    பதிவர்கள் இருக்கச் சாத்தியமா எனத் தெரியவில்லை.
    நான் சென்னைவரும்போதெல்லாம் அவரைச் சந்திக்காமலும்
    அவர் வண்டியில் பயணிக்காமலும் இருந்ததில்லை.
    அவர் பேசிக்கொண்டே அந்த கெவி ட்ராஃப்பிக்கிலும்
    செல்லும் லாவகம் உடன் பயணித்துப் பார்த்தால்தான்
    அந்தச் சுகம் தெரியும்
    பதிவர் சந்திப்பில் சந்திப்போம்

    ReplyDelete
  2. சென்ற வருடம் சந்தித்தது... இந்த வருடம் அண்ணனை சந்திக்க ஆவலோடு இருக்கேன்...

    ReplyDelete
  3. உங்க எழுத்துகள் புத்தகமாவதில் மிக்க மகிழ்ச்சி. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. உங்கள் நகைச் சுவை எழுத்துக்களால் ஈர்க்கப் பட்டவன் நான். உடல் நலமின்றி இருந்ததாக எழுதியுள்ளீர்கள். இப்போது நலம் தானே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. setai ennal intha varudam vara iyalathu aanalum enathu valthukkal

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஸார். உங்களைப் பற்றி கணேஷ் மற்றும் மஞ்சுபாஷிணி சொல்லியிருக்கிறார்கள். உங்கள் எழுத்துகள் போலவே பேச்சிலும் நீங்கள் பிறரை மகிழ்விப்பீர்கள் என்றும் சகோதரி மஞ்சுபாஷிணி சொன்னார். உங்கள் புத்தகம் வெளியாவதற்கு 'எங்கள் வாழ்த்துகள். கணேஷ் போன்ற நல்ல நண்பரைப் பெற்றதற்கும்!

    ReplyDelete
  8. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. புத்தக வெளியீட்டிற்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பதிவர் திருவிழா-2013 அன்று (01-09-2013) மாலை நான்கு மணிக்கு எனது “மொட்டைத்தலையும் முழங்காலும்’ என்ற புத்தகத்தின் வெளியீடு நடைபெறவுள்ளது. இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

    இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  11. எங்கண்ணா வண்டி மூஞ்சூருன்னா, கணேஷ் அண்ணா பிள்ளையாரா?! அவர் லேசா குண்டா இருக்குறதை இப்படிலாமா சொல்லி காட்டுறது?! அடுத்த முறை போகும்போது பத்து கிமீ வேகத்துல போக சொல்லுறேன்!

    ReplyDelete
  12. வெளியிடப்போகும் உங்கள் “மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்’ என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நீண்ட நாட்கள் உங்களின் பதிவே இல்லாமல் எம் போன்றவர்களுக்கு 'போர்' அடித்துப்போனது உண்மை. உடல் நலம் பேனா அன்புடன் வேண்டுகிறேன்.
    உங்களின் ஆக்கம் புத்தகமாக வெளிவருவது அறிந்து மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் சேட்டை :))
    மீண்டும் தொடர்ந்து சேட்டைகாரனை படித்திட காத்திருக்கிறோம் ஏமாற்றாதீர்கள்.

    ReplyDelete
  14. பதிவின் தலைப்பில் 'டெம்ப்ளேட்டை ' மாற்றி சேட்டைகாரனை வாசக குரங்கு ஒன்று உட்கார்ந்து படிப்பதை போல காட்டிய உங்கள் குறும்பு இன்னமும் மாறவில்லை,தொடரட்டும்.

    ReplyDelete
  15. உடல் நலமின்றி இருந்ததாக எழுதியுள்ளீர்கள். இப்போது நலம் தானே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. So, Minnal Varigal ganesh came in your life like a minnal. But this minnal continues to brighten your life. Very nice post and this I consider as a mark of respect to show your gratitude to Shri Bala Ganesh.

    ReplyDelete
  17. “மொட்டைத்தலையும் முழங்காலும்’ புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அன்பு நண்பனும் அவனை உயர்த்தி வைத்து அழகு பார்க்கும் அனைத்து ஆத்மாக்களும் - வாழ்க! வளர்க !!


    (சேட்டை - சுவர் இருந்தாத்தான் சித்திரம்)

    ReplyDelete
  19. பதிவர் தினத்தன்று தங்களின் புத்தக வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் தலைவரே.... மிக்க மகிழ்ச்சி...!

    ReplyDelete
  21. “மொட்டைத்தலையும் முழங்காலும்’ புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் தங்கள் பகிர்வுக்கு நன்றி
    latha

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!