பள்ளியிலிருந்து திரும்பியதும் விளையாடக் கிளம்பாமல்,
வானொலிப்பெட்டியருகே தவமிருந்த நாட்கள் அவை. மிகச்சரியாக மாலை ஐந்து மணிக்கு
விவிதபாரதியில் அந்த விளம்பரம் ஒலிபரப்பாகும்.
’எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள்
என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று...’ என டி.எம்.சௌந்தர்ராஜனின்
கழிவிரக்கம் கலந்த அறைகூவலைத் தொடர்ந்து.............
’விஜயா சுரேஷ் கம்பைன்ஸ்
அளிக்கும் ‘வசந்த்த்த்த்த்த மாளிகை’ என்று வாணிஸ்ரீயின் குரல் ஒலிக்கும். ஆஹா!
தவத்தின் பயன் கிடைத்து விட்டது.
அன்றைய
தினம் மங்களகரமாக முடிந்ததுபோன்ற உணர்வோடு கிளம்புவோம். நகரின் முக்கிய சந்திப்புகளில், பெரிய பெரிய தட்டிகளில்
ஒட்டப்பட்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ படத்தின் சுவரொட்டிகளைக் கண்டு
ரசிப்போம். காரணம், ஒரு படத்துக்கு இத்தனை விதமாக, இத்தனை வண்ணமயமான போஸ்டர்களை
அச்சிட முடியும் என்பதை ‘வசந்த மாளிகை’ படத்திற்குப் பிறகுதான்
புரிந்து கொண்டோம். படத்தின் போஸ்டர்கள் சென்னையிலும், சிவகாசியிலும்
அச்சிடப்பட்டிருந்தாலும், அப்போதெல்லாம் நோட்டீசுகள் உள்ளூரிலேயே ஏதேனும் ஒரு
அச்சகத்தில் ஒற்றைவண்ணத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு
வினியோகிக்கப்படும். ஆனால், வசந்த மாளிகையின் நோட்டீசுகள் முதன்முறையாக வண்ண
நோட்டீசுகளாக அச்சிடப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வைத்துக் கொள்வதும்,
நண்பர்களுடன் பண்டமாற்று செய்துகொள்வதும் ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது.
’வசந்த மாளிகை’ படத்தின் டிக்கெட்
வாங்கியவர்களுக்கு, 1973-ம் ஆண்டின் கையடக்கக் காலண்டர்கள் வழங்கப்பட்டன. சிவாஜி
வாணிஸ்ரீயின் கழுத்தை மோப்பமிடுகிற படம், ’ஒரு கிண்ணத்தை ஏந்தி’ நிற்கிற படம், ’அதில் நான் சக்கரவர்த்தியடா’ என்று இடுப்பில் கைவைத்து
நிற்கிறபடம், ‘என் காதல்தேவதைக்கு நான் கட்டியிருக்கின்ற ஆலயத்தைப் பார்’ என்று கைகாட்டுகிற படம், தரையில்
உடைந்து கிடக்கும் மதுபாட்டிலைப் பார்த்து ‘என்னைக் காதலிச்சது உண்மைதானே?’ என்று கேட்கும் படம், ‘யாருக்காக?’ என்று இடதுகை தூக்கியபடி,
வலதுதோளில் பச்சைக்கலர் சால்வை போர்த்திய படம் என்று எத்தனையோ படங்கள் போட்ட
காலண்டர்கள். அத்தனையையும் சேர்த்து வைத்திருந்ததில் எனக்கு ஒரு அலாதிப் பெருமிதமே
ஏற்பட்டதுண்டு.
சிவாஜி-வாணிஸ்ரீ
ஜோடியென்றாலே, அவர்களது திரைக்காதல் சற்று ’எரோட்டிக்’காக இருப்பது ‘நிறைகுடம்’ படத்திலிருந்தே கவனிக்க
முடிந்த ஒன்று. இப்போது சொல்கிறார்களே, கெமிஸ்ட்ரி-பயாலஜி என்று, அது அவர்களிடம்
அபரிமிதமாய்க் காணக்கிடைக்கும். சில காட்சிகள் தணிக்கையின் கத்திரியிலிருந்து
எப்படித் தப்பின என்ற கேள்வி, (அந்தக் காட்சிகளுக்காகவே திரும்பத் திரும்பப்
பார்க்கிறபோதெல்லாம்) எழும். ’வசந்த மாளிகை’ சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடியின்
‘பெஸ்ட்’
என்றுதான் சொல்ல
வேண்டும்.
படத்தில்
குழந்தைகளோடு வந்த பெற்றோர்கள் நெளிவதற்கான காட்சிகள் நிறையவே உண்டு. சில
உதாரணங்கள் மட்டும்......
முதலாவதாக,
ஹோட்டலில் வேலைதேடி வருகிற வாணிஸ்ரீயை, மேனேஜர் ராம்தாஸ் பலவந்தப்படுத்த முயலும்
காட்சி, அந்தக் காலகட்டத்தில் மிகவும் explicit
ஆகக்
கருதப்பட்டது. ’குடிமகனே பெருங்குடிமகனே’ பாட்டில் வருகிற சில வரிகளைக்
கூர்ந்து கவனித்தால், கவியரசு கண்ணதாசனின் குசும்பு தெரியும். நாகேஷ் வாயைத்
திறந்தாலே ‘ஜகஜகா’ என்பதும், ரமாபிரபா மற்றும் வி.கே.ராமசாமியுடன் அவர் அடிக்கிற கூத்தும்...
அருவருப்பிலும் அருவருப்பாக இருக்கும். இது தவிர, ஆதிவாசிகள் விழாவில் மழையில்
சிவாஜியும் வாணிஸ்ரீயும் ஆடிவிட்டு, (உண்மையில் இந்தக் காட்சிக்கு ‘அடியம்மா
ராஜாத்தி சங்கதியென்ன.. நீ அங்கேயே நின்னுக்கிட்டா என்கதியென்ன’ என்ற பாடல்
படம்பிடிக்கப்பட்டு, பின்னால் கத்தரிக்கப்பட்டது.), இருவரும் ஈரத்தோடு
நெருப்புமூட்டிக் குளிர்காய்கிற காட்சியில் குழந்தைகளைப் பெற்றோர்கள், ‘கண்ணைப்
பொத்திக்கோ’ என்று சொல்லியிருப்பார்கள். இப்படி இந்தப் படத்தைப் பற்றிப் பெருவாரியாக
விமர்சிக்கப்பட்ட அம்சங்களின் பட்டியல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்
பட்டியலைவிட நீளம்!
ஆனால்,
‘வசந்த மாளிகை’ பல முந்தைய சாதனைகளைத் தகர்த்த படம். அதுவரை எம்.ஜி.ஆர். தன்வசம்
வைத்திருந்த ‘வசூல் சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தை, சிவாஜி தட்டிப்பறித்த படம். எந்த ஒரு
சிவாஜி ரசிகனைக் கேட்டாலும், ‘நான் 25 தடவை பார்த்தேன்; 30 தடவை பார்த்தேன்’ என்பார்கள். இத்தனை
வருடங்களில் நான் திரையரங்கில் மட்டுமே 75 தடவைகள் பார்த்தேன். (இப்போது
பார்த்ததைப் பற்றி, வேணாம்..... கோபம் உடம்புக்கு ஆகாது, கடைசிப் பத்தியில்
பார்க்கலாம்)
சிவாஜியென்றாலே
‘ஓவர்-ஆக்டிங்’ என்று சொல்லுவதும், சிவாஜி ரசிகர்களைக் கேணயர்களைப் பார்ப்பதுபோலப்
பார்ப்பதும் அப்போது(ம்) இருந்த ஃபேஷன் தான். பல அதிசயப்பிறவிகள் ‘அவள்
அப்படித்தான்’ ‘கிராமத்து அத்தியாயம்’ ‘அக்ரஹாரத்தில் கழுதை’ போன்ற படங்களைப்
பார்த்துவிட்டு, ‘இந்த மாதிரிப் படம் வர மாட்டேங்குதே.... ஜிவாஜியும் எம்ஜாரும்
சினிமாவைக் கெடுத்துப்போட்டாங்களே...’ என்று பிலாக்காணம் பாடுவார்கள்.
எழுத்தாளர் சுஜாதாவுக்கு சிவாஜி-எம்.ஜி.ஆரைக் கிண்டல் பண்ணுவது அல்வாய்
சாப்பிடுவது மாதிரி. (அவரு என்னத்தைக் கிழிச்சாருன்னு எல்லாருக்கும் தெரியும்).
ஜெயகாந்தனின் ‘காவல் தெய்வம்’ படத்தில் சாமுண்டி பாத்திரத்தில்
சிவாஜி நடிக்காமல் இருந்திருந்தால், தயாரிப்பாளர் எஸ்.வி.சுப்பையா வீட்டுத்
தோட்டக்காரன்கூட அந்தப் படத்தைப் பார்த்திருக்க மாட்டாரு! ஆனாலும் பாருங்க, இந்த முற்போக்கு
சினிமா பண்டிதர்கள், கேசினோவிலும், ப்ளு டைமண்டிலும், பைலட்டிலும் இங்கிலிபீசு
படத்தைப் பாத்துப்புட்டு எலிப்பாஷாணம் தின்னது மாதிரி பேஸ்தடிச்சு வெளியே வந்து, சிவாஜியையும்,
எம்.ஜி.ஆரையும் காய்ச்சி எடுப்பாங்க.
காய்ச்ச மரம்- கல்லடி பட்டது.
சரி,
படத்தைப் பத்திப் பேசுவோம்!
ஆனந்த்-சிவாஜி கணேசன்
குருவிக்கூடு
போன்ற ‘விக்’குடன், ‘ஓ மானிட ஜாதியே’ என்று பாடியவாறு அறிமுகமாகும்
ஆனந்த்(சிவாஜி) ஒரு பணக்காரக்குடிகாரனை அப்படியே கண்முன்பு கொண்டுவந்து
நிறுத்தியிருப்பார். ‘புனர்ஜென்மம்’ படத்தில் வந்த குடிகாரனைப்போலன்றி,
அவரது நடை,உடை, பாவனைகளில் ஒரு பணக்காரத்தனம் இருக்கும். இமேஜைப் பற்றியெல்லாம்
கவலைப்படாமல், ஹோட்டலில் கவர்ச்சி நடிகைகளுடன் ஆடி, நீச்சல்குளத்தில் பெண்களுடன்
ஜலக்கிரீடை செய்து, வீட்டுக்குள்ளும் ‘குடிமகளே’ என்று ஏ.சகுந்தலாவை
எசகுபிசகாய்க் கிள்ளி, ‘நான் ரொம்பக் கெட்டவன்’ என்றெல்லாம் ஒப்புக்கொள்கிற
மாதிரி ஒரு பாத்திரத்தில் அப்போது நடிக்க சிவாஜியை விட்டால் யார் இருந்தார்கள்?
’நான் யாருக்காகப் பொறந்தேன்னு
எனக்கே தெரியலே!’ என்று வேலைக்காரனாக வரும் வி.எஸ்.ராகவனிடம் ஒரு அரைப்புன்னகையுடன் சொல்கிற
காட்சியே போதும். அந்தக் கதாபாத்திரத்துக்கு ஒரு அருமையான prelude கொடுத்திருப்பார். ‘வசந்த
மாளிகை’
சிவாஜியின்
நடிப்புக்கு இன்னொரு ஷோ-கேஸ் என்றால் மிகையல்ல. உதாரணத்துக்கு மூன்று காட்சிகளை
மட்டும் இங்கு குறிப்பிட விருப்பம்:
சிவாஜியின்
காரியதரிசியான வாணிஸ்ரீயிடம் நாகேஷ் மரியாதைக்குறைவாகப் பேச, அவர் நாகேஷை ‘கெட்
அவுட்’
என்று திட்டி
அனுப்புவார். அடுத்த காட்சியில் சிவாஜி வந்து ‘நீ என்கிட்டே சம்பளம் வாங்குற
வேலைக்காரி. தகுதியை மீறி அளவுக்கு மீறி நடந்துக்காதே’ என்று எச்சரிப்பார். வாணிஸ்ரீ
அதற்கடுத்த காட்சியில் ராஜினாமா செய்ய, ‘இதுக்கெல்லாம் காரணம் என் பலவீனம்’ என்று மதுக்கோப்பையைக் காட்டி
மன்னிப்புக் கோருவார். இந்த அடுத்தடுத்த காட்சிகளில் சிவாஜி கோபம், தர்மசங்கடம்,
கண்டிப்பு, பரிவு என்று பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விடுவார். நடிகர்
திலகம்னா, நடிகர் திலகம் தான்!
சிவாஜியின்
அண்ணியாக வரும் சுகுமாரியிடம், சிவாஜியின் அம்மாவாக வரும் சாந்தகுமாரி, “உன்
தங்கைக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் செய்துவைக்கலாமே?” என்று கேட்க, அதற்கு சுகுமாரி
ஏடாகூடமாக பதிலளிக்க, அவமானத்துடன் ‘குடிகாரன்கூட வருத்தப்படுற அளவுக்குப்
பேசறதுதான் அவங்களுக்குத் தெரிஞ்ச மரியாதை’ என்று எழுந்து போகிற காட்சியில், யாரிடமிருந்தும்
பாசம்கிடைக்காத ஒரு பணக்காரக்குடிகாரனின் கையாலாகாத்தனத்தைப் பட்டவர்த்தனமாய்
வெளிப்படுத்தியிருப்பார்.
இரண்டாம்
பகுதியில், சிவாஜியும் வாணிஸ்ரீயும் பிரிந்தபிறகு, வாணிஸ்ரீயின் தம்பி சிவாஜியைப்
பார்க்க வர, ’அக்கா வரலியா? அவ வரமாட்டா, ரொம்ப அகம்பாவம் பிடிச்சவ. ஆனா, அவகிட்டே
எனக்குப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்’ என்று ஒரு அலாதி சோகப்புன்னகையுடன்
கூறுகிற காட்சி!
விட்டால்
எழுத எத்தனையோ காட்சிகள் இருப்பதால், போதும்...!
இந்தப்
படத்திலும் சிவாஜியை டைப்-காஸ்ட் செய்கிற பிரயத்தனங்கள் உண்டு. தன்னைத்தானே நொந்து
கொண்டு சிவாஜி பாடுகிற பாடல்கள் (’இரண்டு மனம் வேண்டும்,’ ‘யாருக்காக’) உண்டு. ரசிகர்களை மரமண்டைகள்
என்றெண்ணி, நமக்குப் புரிய வேண்டுமே என்பதற்காக ‘விஷம்’ என்று எழுதப்பட்ட
பாட்டிலிலிருந்து தக்காளி சூப்பைக் குடித்து ரத்தமாகக் கக்குகிற காட்சியுண்டு.
சிவாஜி படங்களுக்கே உரித்தான கிளிஷேக்கள் இவை! சிவாஜி மட்டுமா, இதுபோன்ற கிளிஷேக்களிலிருந்து
விடுபட்ட, எந்த க்ளிஷேக்களும் தேவையில்லாத நடிகர் யாராவது இருந்து, அறியத்தந்தால்
தன்யனாவேன்.
இந்தப்
படத்தை இந்தியிலும் (பிரேம் நகர்) பார்க்க நேர்ந்ததால், ராஜேஷ்கன்னா (உவ்வ்வ்வே!)
-ஹேமாமாலினி ஜோடியால் சிவாஜி-வாணிஸ்ரீ ஏற்படுத்திய ஜாலத்தை ஏற்படுத்த முடியவில்லை
என்பதைப் புரிந்ததால், ‘வசந்த மாளிகை’யும் சின்ன முதலாளி(சிவாஜி)யும் இன்றளவிலும் என்
மனதைவிட்டு அகல மறுக்கிறார்கள்.
லதா(வாணிஸ்ரீ)
யாரும் தவறாக
எண்ணவில்லையென்றால், வாணிஸ்ரீ அவரது காலத்தின் மிகச்சிறந்த exhibitionist என்பதே எனது கருத்து. சிவாஜியுடன் பத்மினி இணைந்தபோது,
அந்த ஜோடியில் ஒரு கம்பீரம் இருந்தது. சரோஜாதேவியுடன் சிவாஜி நடித்த படங்களில்
கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது. ஆனால், சிவாஜி வாணிஸ்ரீ படங்கள் மிக சிருங்காரமயமாய்
அமைந்தது தற்செயலா என்பது தெரியவில்லை. இந்தப் படம் வாணிஸ்ரீக்கும் ஒரு
மைல்கல்தான்! அந்தப் பெரிய கொண்டை, முக்கால்கை ரவிக்கை, உடம்போடு ஒட்டிய மெல்லிய
புடவை, முகத்தில் அடிக்கிறாற்போல புருவங்கள், தூளியிலிருந்து எட்டிப்பார்க்கிற
குழந்தைபோல தொங்கும் மூக்கு, மிகுதியான ஒப்பனை இவையெல்லாவற்றையும் மீறி, அந்த ஜோடி
புசுக்கென்று மனசுக்குள் இறங்கிவிட்டது. இப்போது பார்த்தாலும், அப்போது ரசித்ததைப்
பற்றி கொஞ்சம் கூச்சத்தோடு எண்ணிப்பார்த்துப் புன்னகைக்க முடிகிறது.
ஏறக்குறைய
சிவாஜியையே ஆக்கிரமிக்கிற ஒரு கதாபாத்திரம் வாணிஸ்ரீக்கு! அவருடைய பாத்திரத்தையும்
வசனம், காட்சிகள் மூலமாக, ஆரம்பம்தொட்டே வலியுறுத்திச் சொல்லியிருப்பார்கள். ஆகவே,
சிவாஜி ‘ஏன் இப்படி செஞ்சே?’ என்று கேட்டதும், ரோஷப்பட்டுக்கொண்டு
பிரிந்து போகிறபோது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை மேலும் உறுதிப்படுத்தப்படுவது
போலவே இருக்கும்.
சிவாஜியின்
காரியதரிசியாக வரும்போது அவரது நடிப்பில் ஒரு கண்ணியம், கம்பீரம் தென்படும்.
உதாரணம், பாகப்பிரிவினையின்போது சிவாஜியை ஏமாற்றுகிற மாதிரி பத்திரம்
தயாரிக்கப்பட்டிருக்க, அதை வாசிக்கிற வாணிஸ்ரீ ‘எந்தவிதமான பாத்யதையும்
இல்லையென்று....’ என்று நிறுத்திவிட்டு, மீண்டும் ‘எந்தவிதமான பாத்யதையும் இல்லையென்று..’ என்று மீண்டும் அழுத்தமாகச்
சொல்லும்போது, அரங்கம் அதிரும். அடுத்த காட்சியில், சிவாஜியின் அம்மாவிடம்
தன்பக்கத்து நியாயத்தைத் தெரிவிக்கிற இடத்தில், அவரது உச்சரிப்பு, நடிப்பு
படுபாந்தமாக இருக்கும். (charecterisation-ன்னா என்னான்னு பார்த்துப்
படிச்சுக்குங்கப்பா கோடம்பாக்கத்துக் கத்துக்குட்டிங்களா)
ஏற்கனவே
ஒன்றுக்கு இரண்டுமுறை சொன்னதுபோல, வாணிஸ்ரீயின் இன்னொரு பலம் அவரது கவர்ச்சி.
இந்தப் படத்தில் அதை முழுமையாக, போதும் போதுமென்று திகட்டுமளவுக்கு exploit செய்திருப்பார்கள். தமிழிலேயே இப்படியென்றால், தெலுங்கில்
எப்படியிருந்திருக்குமோ, பார்த்தவர்கள் தெரிவித்தால், காதுகுளிரக்கேட்டு மனதை
ஆற்றிக்கொள்வேன்.
கே.வி.மகாதேவன் & கவியரசு
கண்ணதாசன்
“மாமா” என்று இன்றளவிலும் இசைஞானியாராலும் போற்றப்படுகிற திரை இசைத்திலகம்
கே.வி.மகாதேவன் இந்தப் படத்தில் பல தினுசுகளில் மெட்டுக்களைப் போட்டு
அசத்தியிருப்பார்.
”ஓ மானிட ஜாதியே” பாடலைக் கவனியுங்கள். ஒரு
விமானத்துக்குள் குத்து டான்ஸா ஆட முடியும்? இருக்கைகளுக்கு ஊடே நடந்தவாறு,
கதாநாயகன் குடிபோதையில் பாடுகிற பாட்டு என்பதால், மெட்டு மிக மிக மெதுவாக
ஆமைவேகத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
”ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்..ஏன்?ஏன்? ஏன்?” என்ற பாடல் பார்ட்டி மூடுக்கு
ஏற்றது மாதிரி மிக வேகமாக இருக்கும். ஒரு கிளப் டான்ஸ் என்றாலும், நடுவில் வருகிற
“கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்” என்ற சரணம் தொடங்குமுன்னர், “ஆ.....” என்ற சிறிய ஆலாபனையையும்
சேர்த்திருப்பார் கே.வி. கிளாசிக் ஜுகல்பந்தி!
”குடிமகனே...பெருங்குடிமகனே” பாடலும் அதற்கான சூழலும்
கொஞ்சம் விரசமானது. முதலாளி தனது அறையில் ஒரு பெண்ணோடு கும்மாளமிடுவதைப் பார்த்து,
புதிதாக வந்த காரியதரிசி முகம்சுளிப்பதுபோன்ற காட்சி. மெட்டும், பாடல்வரிகளும்,
காட்சியமைப்பும், ஏ.சகுந்தலாவின் நடனமும் நிச்சயம் விசிலடிச்சான் குஞ்சுகளை (i.e….என் போன்றவர்களை) திருப்திப்படுத்துவதாக இருக்கும்.
”கலைமகள் கைப்பொருளே” – இந்தப் பாடல் ஒரு இசையமைப்பாளர், ஒரு கவிஞர், ஒரு இயக்குனர்
ஆகியோரின் ஒருங்கிணைப்புக்கு மிகச்சிறந்த உதாரணம். வாணிஸ்ரீ வீணையை மீட்டியவாறு
பாடும் இந்தப் பாடலின் வரிகளில் இரண்டு பொருள் வருமாறு எழுதியிருப்பார் கவியரசு
கண்ணதாசன். ”நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிகாட்ட” என்ற வரிகள் போதும்,
சூழலுக்கேற்ற பாடல்வரிகளை எழுதுவதில் இன்னும் ஏன் கண்ணதாசனை நிறைய பேர்
நினைவுகூர்கிறார்கள் என்பதை விளக்குவதற்கு!
”மயக்கமென்ன இந்த மௌனமென்ன?” பாடல் காதல்மயம். “அன்னத்தைத்
தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்.” கண்ணதாசன் இறக்கவில்லை; இன்னும்
இருக்கிறார் அவரது வரிகளாய்! இந்தப் பாடலுக்கு நடுவில் வருகிற ஸ்லோ மோஷன்
காட்சிகளை இப்போது பார்ப்பவர்கள் நக்கல் செய்யலாம். ஒரு தகவல். ‘வசந்த மாளிகை’ படத்தில்தான் முதன்முறையாக
தமிழில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகள் காட்டப்பட்டன. அதையடுத்து, ‘அவள்’ என்ற படத்தில். (அதைப்
பற்றி எழுதினால், இருக்கிற பெண் வாசகிகளும் ஓடிவிடுவார்கள்.)
”இரண்டு மனம் வேண்டும்;
இறைவனிடம் கேட்பேன்” பாடல் கதாநாயகன் ஒரு இக்கட்டான
சூழ்நிலையில் இருப்பதைக் காட்டுகிற பாடல். காதலி கோபித்துக் கொண்டுபோக, ஆரோக்கியம்
குலைந்த நிலையில், மருத்துவரின் ஆலோசனைப்படி மதுவருந்த முடியாதபடி, காதலிக்கு
அளித்த சத்தியம் தடுக்க, ஊசலாடுவது போன்ற ஒரு நிலை!
”கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின்
தண்டனை காதல்வழி
காதலின்
தண்டனை கடவுள்வழி
கடவுளை
தண்டிக்க என்ன வழி?”
கண்ணதாசா!
கண்ணதாசா!
”யாருக்காக இது யாருக்காக?” படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.
நிச்சயித்தபடி காதலிக்கும் இன்னொருவனுக்கும் திருமணம் நடக்குமென்று, தான் கட்டிய
மாளிகையில் சோகத்தோடு பாடி, கதாநாயகன் விஷமருந்த, அங்கே திருமணம் நின்றுபோக,
கதாநாயகியை நாயகனின் அம்மா அழைத்துக்கொண்டு வர, மழையும், இடியும், மின்னலும்,
பார்வையாளர்களின் ‘த்சு..த்சு..த்சு’க்களும் சேர்ந்து ஏகமாய்ப் பரபரப்பேற்றுகிற காட்சி.
ஓவ்வொரு
பாடலின் மெட்டும் ஒவ்வொரு ரகம். பாடலுக்கேற்ற வரிகள்.
கொசுறு
தகவல்: கேரளாவில் பல ஊர்களில் ‘வசந்தமாளிகை’ திரையிடப்பட்டபோது, ‘நீ
விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுன்னு சொன்னே...விஷத்தைக் குடிக்கக்கூடாதுன்னு
சொல்லலியே” என்று ரத்தம் கக்கியவாறு கதாநாயகன் சாய, கேமிரா ஊய்ங்க்...ஊய்ங்க்...என்று
சுற்றி, கூரையில் தொங்கும் சிவப்பு விளக்கைக் காட்டுவதோடு முடிக்கப்பட்டது. ஆனால்,
நம்மூரில் தமிழ் சினிமாவின் ஆஸ்தான டாக்டரான எஸ்.வி.சஹஸ்ரநாமம் வந்து “நல்ல
நேரத்துலே ஆனந்தைக் கூட்டிக்கிட்டு வந்தீங்க. இன்னும் கொஞ்சம் தாமதமாயிருந்தா படம்
ஃப்ளாப் ஆகியிருக்கும்“ என்று சொல்வதுபோல முடித்திருந்தார்கள். வியாபாரம் கண்ணா,
வியாபாரம்
வசனம்-பாலமுருகன்
”சரின்னா யாரா இருந்தாலும்
விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது!” – ராம்தாஸை அடித்துப்போட்டு விட்டு, சிவாஜி சொல்லும் இந்த வசனம்
ஒரு விதத்தில் பஞ்ச் டயலாக் என்று கொள்ளலாம்.
”இங்கே பெத்த தாயை மகன்
பார்க்கிறதா இருந்தாலும் அனுமதியோடத்தான் பார்க்கணும். அதான் எங்க ஜமீன்
கௌரவம்..இல்லை கர்வம்!” என்று வாணிஸ்ரீயிடம் சிவாஜி சொல்கிறபோதும் தியேட்டர் கலகலக்கும்.
”நான் காதலிக்கிற பொண்ணு
எனக்குத்தேவையில்லை; என்னைக் காதலிக்கிற பொண்ணுதான் எனக்குத்தேவை!” என்று அண்ணன் பாலாஜியின்
மூக்குடைக்கிற காட்சியில் கைதட்டல் காதைப்பிளக்கும். (இந்த வசனத்தை அதுக்கப்புறம் எத்தனை
படத்திலே சொருவிட்டாங்கய்யா சாமீ....?)
”இதோ உங்க பணம்! இது என்
ராஜினாமா,” என்று வாணிஸ்ரீ சொல்ல, “ஒண்ணு என் அதிகாரம். ஒண்ணு உன் அகம்பாவம்” என்று சிவாஜி பதிலளிப்பார்.
படம்
முழுக்க பாலமுருகன் என்ற, அதிகம் கண்டுகொள்ளப்படாத ஒரு அற்புதமான வசனகர்த்தாவின்
திறமை விரவிக்கிடந்தது. சிவாஜியைக் கொஞ்சம் நீளமான வசனம் பேச வைக்க
வேண்டுமென்பதற்காக, “அனார்கலிக்கு சமாதி கட்டின அக்பர் சாம்ராஜ்யம் என்னாச்சு?
அம்பிகாபதிக்கு மரணதண்டனை கொடுத்த குலோத்துங்கனோட ஆட்சி எங்கே போச்சு?” என்பன போன்ற பாண்டித்தியமான
வசனங்களும் உண்டு.
ஆனால்,
திருஷ்டி போல நாகேஷ் பேசுகிற வசனங்கள் சில சமயங்களில் ஆண்களையே முகம் சுளிக்க
வைத்தன என்பதும் உண்மை.
உதிரிக்கதாபாத்திரங்கள்
வி.எஸ்.ராகவன்
சிவாஜியின் விசுவாசமான வேலைக்காரராக வந்து, முடிந்தவரை மண்டையை ஆட்டாமல், பல
முக்கியமான காட்சிகளில் உருக்கம் சேர்த்திருப்பார். ஆணவம்பிடித்த கதாபாத்திரங்கள்
என்றால், பாலாஜிக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி; ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்துக்குப் பிறகு, இந்தப்
படத்திலும் சிறுவேடமானாலும் கலக்கியிருப்பார். சிவாஜியின் அப்பாவாக வரும்
எஸ்.வி.ரங்காராவ், படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே இறந்துபோனதால்,
இறுதிக்காட்சிகளில் அந்தச் சிங்கத்துக்கு யாரோ டப்பிங் குரல் கொடுத்திருப்பார்கள்.
ஆயாவாக வந்த புஷ்பலதா கண்ணியம், கருணையுடன் கண்ணீரும் கம்பலையுமாய் அனுதாபத்தைச்
சம்பாதித்துக் கொள்வார். வாணிஸ்ரீயின் தந்தையாக வேட்டியில் வருகிற மேஜர் சுந்தர்ராஜன்
இந்தப் படத்தில் தமிழில் மட்டுமே பேசி நம் மீது கருணை காட்டியிருப்பார். அவரது
மகனாக வரும் ஸ்ரீகாந்த் வலிப்பு வந்தவர் மாதிரி நிற்கும்போதும் காலாட்டியவாறே
வசனம்பேசி எரிச்சலைக் கிளப்புவார். ஸ்ரீகாந்தின் மனைவியாக வரும் குமாரி
பத்மினியின் கற்பு அனேகமாக இந்த ஒரு படத்தில் தான் கடைசி வரை வில்லனிடமிருந்து (இல்லாமல்
தொலைந்ததால்) காப்பாற்றப்பட்டது
என்று நினைக்கிறேன். பண்டரிபாய் வழக்கம்போல! ‘சித்தப்பா சித்தப்பா’ என்று ஓடிவரும் போண்டாமூக்கு
பேபி ஸ்ரீதேவியைப் பார்த்தால், இங்கிலீஷ் விங்கிலீஷ் பார்த்தவர்கள் சிரித்துச்
சிரித்துக் கழுத்துச் சுளுக்கிக் கொள்ள நேரிடலாம்.
காதல்,மணம்,குணம்
நிறைந்த மசாலாவான ‘வசந்த மாளிகை’ ஒரு செமத்தியான ஃபார்முலா படம்.
எல்லாப்படத்திலும் காலில் ஆணிவந்த மாதிரி கடுப்பான எக்ஸ்பிரஷனைக் காட்டிக்
கழுத்தறுக்கிற சில புதுமுகங்கள் ஒரு நடை வசந்தமாளிகை பார்த்தால் கொஞ்சம் சொரணை
வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு படம் ஓடியதும், ஓவராய்க் கத்தி, ஓவராய் பாடி
லாங்குவேஜ் காட்டுகிற அஞ்சலியும், உலகமே மூழ்கினாலும் நடிக்க மாட்டோம் என்று
வைராக்கியமாய் இருக்கிற ஹன்ஸிகா, ஸ்ரேயா போன்ற பார்பி பொம்மைகளும் கூட இந்தப்
படத்தைப் பார்த்தால், சப்பாத்தியுடன் கூடுதலாய் இரண்டு பச்சை மிளகாய்
சாப்பிட்டதுபோல உணர்ச்சி பெற்றாலும் பெறலாம்.
வணக்கம்
நான் சிவாஜியின் ரசிகன் – ‘அவன் தான் மனிதன்’ படம் வரைக்கும். அதன்பிறகு, சிவாஜி
மீது ஏற்பட்ட சலிப்புக்கு அவரே காரணம். இருந்தாலும், ‘வசந்த மாளிகை’ போன்ற படங்களைப்
பார்க்கும்போது, அவர் ஏன் சிவாஜியாய் இருந்தார் என்பதும், நாம் ஏன் அவரது ரசிகராய்
இருந்தோம் என்பதும் மீண்டும் நிரூபணமாகிறது. இன்றைக்கு கமல், ரஜினி நடித்த
படங்களைக் கூட ரீமேக் பண்ணி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், சிவாஜி நடித்த
படங்களை ரீமேக் செய்து நடிக்கிற துணிச்சல் எந்த நடிகருக்காவது இருக்கிறதா என்று
நானும் நப்பாசையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் சிவாஜி!
கடைசியாய்,
இந்த டிஜிட்டல் ‘வசந்த மாளிகை’ குறித்து ஒரு வார்த்தை....
’சீரியசா எழுதாதே சேட்டை!’ன்னு சிலர் சொல்லக்கேட்டு,
புச்சா ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒரு இடுகையும் போட்டேன். சும்மாயிருந்ததைச்
சொறிஞ்சு கெடுத்தா மாதிரி, அதுலே என்னென்னத்தையோ சேர்க்கப்போயி, அந்த வலைப்பதிவைக்
காக்கா தூக்கிட்டுப்போயிருச்சு. எதுக்குச் சொல்ல வர்றேன்னா, தயிர்சாதத்துலே
கிஸ்மிஸ் பழம் போடுறது தப்பில்லை. அதுக்காக, தயிர்சாதமா பஞ்சாமிர்தமான்னு குழம்ப
வைச்சிரக்கூடாது. இதைத்தான் ‘வசந்த மாளிகை’ டிஜிட்டல் தயாரிப்பாளர்கள்
செய்திருக்கிறார்கள்.
மோனோ
சவுண்டை ஸ்டீரியோ ஆக்குகிற தொழில்நுட்பம் வளரவில்லையா அல்லது கர்ணன் படத்தின்
மறுவெளியீடு தந்த மப்பில் ஆளாளுக்கு சிவாஜியின் பழைய படங்களை ரவுண்டு கட்டி
அடிக்கிறார்களா தெரியவில்லை. கூட ஒரு ட்ராக்கைச் சேர்த்து அதில் கொசுறாய் இசை
சேர்த்து அவஸ்தைப்படுத்துகிற கொடுமையை நிறுத்துங்க என்று கூச்சலிட வேண்டும்
போலிருக்கிறது. ’நாஸ்டால்ஜியா’ என்ற ஒரு கருமம் இருக்கிறது என்பதை
ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, படத்தின் ஒரிஜினாலிட்டியைச் சிதைக்காமல் எடுக்க
முடிந்தால் செய்யுங்கள். இல்லாவிட்டால், இருக்கவோ இருக்கிறது மாமனார்-மருமகள்,
அண்ணன் – கொழுந்தன் கதைகள் காசு பார்க்க!
இப்படி சிவாஜி ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டி, பாவத்துக்கு ஆளாகாதீர்கள்!
பி.கு: இருக்கீங்களா, தூங்கிட்டீங்களா?
நண்பரே...அவன்தான் மனிதன் படத்துக்குப்பிறகு...
ReplyDeleteமுதல் மரியாதையும்,தேவர் மகன் என்ற இரு படங்களும் அவரின் காவிய நடிப்பில் சோபித்தது.
ஸ்ரீதேவியை போண்டா மூக்கு என்று வர்ணித்ததை பார்த்தேன்.
லாரன்ஸ் & மயோ போக வேண்டிய
நேரம் வந்து விட்டது.
வசந்தமாளிகைக்கு அற்புதமாக விமர்சனம் எழுதி உள்ளீர்கள்.
ReplyDeleteஇந்த சிவாஜி ரசிகனின்
மலர் கொத்தைப்பிடியுங்கள்.
சேட்டைஜி,
ReplyDeleteசிவாஜி படங்களில் ரசிக்க கூடிய படங்களில் வசந்த மாளிகையும் ஒன்று என்பது உண்மையே.
நல்ல விமர்சனம், வசன கர்த்தா பற்றி புதிய தகவல்.
-----------
மோனோவில் ஒலிப்பதிவு செய்ததை ஸ்டீரியோ ஆக மாற்றவே முடியாது.
கூடுதலாக ஒரு டிராக் உருவாக்கி பின்னர் எடிட் செய்து சேர்க்க வேண்டும், இப்படத்தில் அதான் செய்துள்லார்கள்,அவசரக்கோலத்தில் செய்திருப்பர்கள் போல.
மோனோவை அப்படியே எத்தினி டிராக் ஆக வேண்டுமனலும் ஆக்கலாம்,ஆனால் இரைச்சலாக தான் இருக்கும் இது தெரியாமல் டிராக் மாற்றினால் தரம் கூடும் என நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்த மாளிகை - வசந்த மாளிகை...
ReplyDeleteமாளிகை = பதிவு...
நுண்ணிய ரசனை...!!! பாராட்டுக்கள்...
வசந்த மாளிகையின் பின்னணியில் இவ்வளவு விஷயங்களா?இதுவரை இந்தப் படத்தை பார்த்தது இல்லை.டிவியில் போடும்போது பாத்துடறேன்.
ReplyDeleteநுணுக்கமாகவும் நகைச்சுவையாகவும் விமர்சிக்கிறது உங்களுக்கே உரித்தானது.
அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே.இந்தநாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்?
ReplyDeleteதிரும்பவும் வசந்த மாளிகை பார்த்தது போன்ற ஒரு உணர்வு. நல்ல விமர்சனம்.
ReplyDeleteசெம பதிவு .நன்றி
ReplyDeleteதூங்கலை, இருக்கோம்ணே! எம்.ஜி.ஆர். விசிறியான என்னை மாதிரி ஆசாமிகளைக் கூட மூன்று முறை பார்க்க வைத்த சிவாஜி படம் வசந்தமாளிகை- என் மாணவப் பருவத்தில்! அந்த மலரும் நினைவுகளை மீண்டும் உங்கள் மூலம் அனுபவித்த சுகத்துடனேயே இருந்துவிடுதல் உத்தமம் என்பது தெரிகிறது!
ReplyDeleteஇவ்வளவு பெரிய விமர்சனம்....!!!!
ReplyDelete“சிவாஜி நடித்த படங்களை ரீமேக் செய்து நடிக்கிற துணிச்சல் எந்த நடிகருக்காவது இருக்கிறதா என்று நானும் நப்பாசையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் சிவாஜி!“
இந்த ஒரு சட்பிகெட் போதுங்க சேட்டை ஐயா.
பிளாஸ் பேக்..
ReplyDeleteபல தகவல்கள் தெரியாதது. நன்றி..
Excellent Write up!
ReplyDeleteஉங்கள் விமர்சனத்தை படித்தவுடன் நான் கொடைக்கானலுக்கே சென்று விட்டேன்; அங்கு தான் இந்தப் படம் பார்த்தேன்:
மலர்ந்த நினைவுகள்...!
முழுப்படம் பார்த்தா மாதிரி இருந்தது. படம் பார்க்கும் போது நாங்கள் செய்த கலாட்டா இன்றும் நினைவில் இருக்கிறது.
V.S.ராகவன் செல்லப் பெயரே "தலையாட்டி பொம்மை!" அவர் வந்தாலே,"யோவ்! தலையை ஆட்டாம பேசுயா!" என்று சவுண்ட் விடுவோம்.
ஸ்ரீகாந்துக்கு தொதுர் பம்பரம் என்று பெயர்; பம்பரம் ஆணி வளைந்து இருந்தால் தொதுர் பம்பரம் என்று பெயர்; அது துள்ளி துள்ளி தான் சுத்தும். ஸ்ரீகாந்த் பேச ஆரம்பித்தால், "டேய்! கைய கால ஆட்டமா பேச கத்துக்கடா!" என்று கலாட்டா.
பாலாஜி திரையில் வந்தால், "டேய்! கழுகு மூக்கா! நேரா பார்டா" கஎன்று கூச்சல்.
வாணிஸ்ரீ வந்தால், நாங்க, வாங்கம்மா! O.S.O மகாலட்சுமி, வாங்க" என்று இரு கரம் கூப்பி வரவேற்ப்போம்.
என்ன இருந்தாலும் நீங்க, பீப்பா வச்ச பாப்பாக்களைப் பற்றியும், அந்த பீப்பாக்ளை தாங்கிய தடித் தொடைகள் ஆடிய "பயங்கரமான" நடனத்தைப் பற்றி எழுதாமல் விட்டதால் உங்க விமர்சனம் நிறைவு பெறவில்லை...!
மன்னிக்கவும்...கவனம் தேவை...!
நீண்ட விமர்சனம்.... :)
ReplyDelete//தூளியிலிருந்து எட்டிப்பார்க்கிற குழந்தைபோல தொங்கும் மூக்கு//
என்ன ஒரு கற்பனை உங்களுக்கு!
பழைய சிவாஜி படத்தை அலசி, இன்றைய நடிகர்களை நக்கலடித்து நம் போன்ற விவிதபாரதி நேயர்களின் ரசனையை மெச்சிய சேட்டையின் பதிவு சூப்பர்.
ReplyDeleteOSO ற்காக எத்தனை தடவை படம் பார்த்தீர்கள் என்று எழுதவில்லையே.
”கண்களின் தண்டனை காட்சிவழி
ReplyDeleteகாட்சியின் தண்டனை காதல்வழி
காதலின் தண்டனை கடவுள்வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?”
கண்ணதாசா! கண்ணதாசா!
அந்த நாட்களில் படம் என்பது கூட்டு முயற்சியாய்.. அவரவர் திறமைகளைக் காட்டும் ஸ்தலமாய் இருந்தது.. போட்டி போட்டு. அதனால்தான் இப்போதும் அதன் குறைகளை மீறி பல படங்கள் ரசனைக்குரியதாய்.
அட்டகாசமான பதிவு சேட்டைக்காரரே...நானும் சிவாஜியின்/இந்தப் படத்தின் அதிதீவிர ரசிகன். எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன் என்று கணக்கில்லை,கூடவே ஆடியோ வசன கேசட்டை வேறு பலமுறை கேட்டிருக்கிறேன்.'எந்தவித' எனும் வாணிஸ்ரீயின் அழுத்தம், இப்போதும் காதில் கேட்கிறது.
ReplyDeleteநாகேஷ் காமெடி மட்டுமே இந்தப் படத்திற்கு திருஷ்டி.
சூப்பர். படம் பார்த்த மாதிரியே மைண்ட்ல ரீவைண்ட் பண்ண வச்சுட்டீங்க
ReplyDeleteகுரோம்பேட்டை வெற்றி தியேட்டரில், இந்தப் படம் பார்த்தேன் என்று ஞாபகம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லா காட்சிகளும், மனத்திரையில் ரி வைண்ட் ஆகி, ரி ப்ளே ஆனது.
ReplyDelete
ReplyDeleteஇத்தனை நாட்களுக்குப் பிறகு அந்தப் படத்தை அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்துப் போட்டு விமரிசனம் செய்ய சேட்டையால்தான் முடியும். அதுதான் NOSTALGIA வா. பிரமாதம். !
நம்பள்கி,
ReplyDelete//O.S.O மகாலட்சுமி, வாங்க" //
விளக்கம் ப்ளீஸ்!
ஒன் சைட் ஓப்பன் என்பது எனது அவதானிப்பு,சரியான விளக்கம் சொல்லவில்லை எனில் நான் ஜில்பான்ஸா வேற புரிஞ்சுப்பேன் :-))
பெரியவங்களோட மலரும் நினைவுகள்.....
ReplyDeleteஇங்கன எனக்கு என்ன வேலை?
[[[வவ்வால் said...நம்பள்கி,
ReplyDelete//O.S.O மகாலட்சுமி, வாங்க" //
விளக்கம் ப்ளீஸ்!
ஒன் சைட் ஓப்பன் என்பது எனது அவதானிப்பு,சரியான விளக்கம் சொல்லவில்லை எனில் நான் ஜில்பான்ஸா வேற புரிஞ்சுப்பேன் :-))]
___________________
ஒரு வேளை ISO standards மாதிரி OSO standards - ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்..!
ஏன் அப்படி அழைத்தோம் என்று சரியாக ஞாபகம் இல்லை!
தூங்கவில்லை அன்பரே. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வளவு ஒரு பெரிய, அருமையான பதிவினை எழுத வைத்திருக்கின்றாரே பார்த்தீர்களா, அவர்தான் சிவாஜி என்னும் இமயம்
ReplyDeleteபத்து நிமிஷம் கூட உட்கார முடியாத படம்.. இந்தப் படம் உங்களுக்கு இத்தனை பிடிக்குதுனு தெரிஞ்சு ஆச்சரியமா இருக்கு.
ReplyDeleteஅப்பாதுரை சொல்வதில் உண்மை இருக்கலாம்...!
ReplyDeleteஇதையே என் இடுகையில் சொல்லியிருக்கேன்; இளைய தலை முறை இந்த படத்தை ரசிப்பது சந்தேகமே என்று!
அப்ப ரசித்த அந்த படத்தை என்னாலேயே இப்ப ரசிக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் இருக்கும் போது, அப்பாதுரை சொன்னது உண்மை தான் என்று நினைக்க வேண்டியிருக்கு..!
___________________________
//அப்பாதுரை said...பத்து நிமிஷம் கூட உட்கார முடியாத படம்.. இந்தப் படம் உங்களுக்கு இத்தனை பிடிக்குதுனு தெரிஞ்சு ஆச்சரியமா இருக்கு.
சிவாஜி நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் இது! வாணிஸ்ரீ எனக்கு ரொம்ப பிடிக்கும் (இப்பத்திய கவர்ச்சியோட ஒப்பிட்ட அவரோடது ஒன்னும் இல்லைதான்.. ஏனோ அது மட்டும் நெருடலா தான் இருக்கும்)..
ReplyDeleteஇந்த படத்தோட பாடல் வரிகளை ரொம்ப ரசிச்சிருக்கேன்.. நீங்க குறிப்பிட்ட பல வரிகள், எனக்குள்ள இருந்தத வெளிய சொன்ன மாதிரி இருந்தது!!
நான் தூங்கல சார்..
நிறைய “கில்மா” தெலுங்கு படங்களில் வாணிஸ்ரீ காட்டு காட்டு என்று காட்டிய திறமையைப் பார்த்து விக்கித்து போன நேரத்தில் வசந்த மாளிகை பார்த்தேன்.
ReplyDeleteநடிக்கவும் தெரியும் என்று அறிந்து கொண்டேன்..
இந்த படத்திற்கு பிறகு வந்த இந்த ஜோடி காமினேசன் செம குப்பை..!உதா. வாணி ராணி!
ReplyDeleteஉங்கள் பதிவைப் படிக்கும்போது, இப்போதுதான் தியேட்டரில் முதன் முதலாக “வசந்த மாளிகை” படம் ரிலீசாகி ஓடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
ReplyDelete