Monday, February 25, 2013

கவிதைக்காய்ச்சல்




கவிதைக்காய்ச்சல்

1.       தலைப்புக்கும் இடுகைக்கும் சம்பந்தம் கிடையாது.
2.       படத்துக்கும் இடுகைக்கும் சம்பந்தம் கிடையாது.
3.       படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் கிடையாது.
4.       கவிதைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.



      எடோ...அங்கே பாரு!                

      மொட்டைமாடியை அடைந்ததும், சுரேந்திரன் காட்டிய திசையைப் பார்த்த எனக்கு, பகல்காட்சியில் பலான படம் பார்க்கப்போய் பக்திப்படம் பார்த்ததுபோல பக்கென்று ஆயிற்று! ஆருயிர் நண்பன் வைத்தி மொட்டைமாடியின் குட்டிச்சுவரை ஒட்டி நின்றபடி எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தான்.

      ஐயையோ! சுரேந்திரா என்னடா ஆச்சு? தற்கொலை பண்ணிக்கப்போறானா?

      என் குரலைக்கேட்டுத் திரும்பிய வைத்தி எங்களைப் பார்த்து, பழைய தமிழ்ப்படத்தில் தனியாகச் சிக்கிய கதாநாயகியைப் பார்த்து வில்லன் சிரிப்பதுபோலச் சிரித்தான்.

      வாங்கடா! ஒரு அருமையான கவிதை சொல்றேன். கேட்கறீங்களா?

      என்னது கவிதையா?  அதிர்ந்தேன் நான். இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்குப் போய் வந்ததுமுதல் வைத்தி ஒரு மார்க்கமாகவே இருப்பதை கவனித்து வந்தாலும், இப்படிக் கவிதை எழுதுமளவுக்கு விஷயம் விபரீதமாகும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

      வேணாண்டா!சுரேந்திரன் கெஞ்சினான். “ஏற்கனவே சேட்டைக்கு உடம்பு சரியில்லை. நீ புக்-எக்ஸிபிஷன் போயிட்டு வர்றப்போ சொன்ன கவிதையே இன்னும் செரிமானம் ஆகலே!

      ரசனை கெட்ட ஜென்மங்களா!உறுமினான் வைத்தி. “அது எவ்வளோ நல்ல கவிதை.... இன்னொரு வாட்டி கேளுங்கடா...

புத்தகக்கண்காட்சி!
சுடச்சுடக் கிடைத்தன
கவிதை நூல்களும்
காப்பி போண்டாவும்!

      வைத்தி!அலறினேன் நான். “இதுவரைக்கும் நீ எவ்வளவோ இடைஞ்சல் பண்ணியிருக்கே! ஃபிரெண்ட்ஷிப் கெட்டுரக்கூடாதேன்னு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டோம். அதுக்காக கவிதையெல்லாம் சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்லை. உனக்கு நாங்க ரெண்டு பேரும் அப்படியென்ன கெடுதல் பண்ணிட்டோம்..?

      டேய் சேட்டை! சென்சார்போர்டுக்குப் போன சினிமா டைரக்டரைப் போலக் கெஞ்சினான் வைத்தி. எனக்காக ஒரே ஒரு கவிதை கேளுடா! அது நல்லாயில்லேன்னா அப்புறம் நான் கவிதையே எழுத மாட்டேன். சரியா?

       நானும் சுரேந்திரனும் ஜாடையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். வைத்தியின் கவிதைகளிலிருந்து தப்பிக்க நல்ல வழியை அவனே சொல்லி விட்டான்.

      சரிடா! ஒரே ஒரு கவிதை தான் அலவ்ட்! தப்பித்தவறி நாங்களே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாக்கூட நீ இன்னொரு கவிதை சொல்லுவேன்னு அடம்பிடிக்கக் கூடாது. சரியா?

      சேச்சே! அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைடா!

      எதுக்கு? நாங்க நல்லா இருக்குன்னு சொல்றதுக்கா...?

      கேளுங்கடா!என்ற வைத்தி தொண்டையைச் செருமிக் கொண்டான். பிறகு....

என்மீது தாழப்பறந்தும்
எச்சமிடாமல் செல்கிறது.....!

என்று நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தான் வைத்தி.

      எச்சமிடாமல் செல்கிறதா? பாவம், காக்காய்க்கு கான்ஸ்டிபேஷன் போலிருக்குது...!

      இல்லைடா!எரிந்து விழுந்தான் வைத்தி. “என்மீது தாழப்பறந்தும் எச்சமிடாமல் செல்கிறது.....ஆகாய விமானம்..

      எண்டே குருவாயூரப்பா...என்னை மாத்ரம் ரட்சிக்கணே!என்று தலையில் கைவைத்தவாறு அமர்ந்தான் சுரேந்திரன்.

      ஏண்டா....ஏன்....ஏன்...? பதறினான் வைத்தி.

      ஏனா..?உறுமினேன் நான். “ஏரோப்ளேன் எச்சம் போடலைன்னு ஒரு கவிதையா? மவனே, நீ இப்படியெல்லாம் கவிதையெழுதி டார்ச்சர் பண்ணுற ஆளுன்னு தெரிஞ்சிருந்தா உன் தலையிலே குண்டே போட்டிருக்கும் தெரியுமா?

      பாவிங்களா! எவ்வளவு நல்ல கவிதை சொல்லியிருக்கேன். அதை ரசிக்கத்தெரியலியே? என்னோட கவிதையெல்லாத்தையும் புஸ்தகமாப் போட்டா என்னாகும் தெரியுமா?

      கிலோவுக்கு  நாலே கால் ரூபாய் கிடைக்கும்!

      ஓஹோ!வைத்தி கறுவினான். “எனக்குப் புரிஞ்சிருச்சுடா; புரிஞ்சிருச்சு!

      மவனே, எழுதின உனக்குப் புரிஞ்சாப் போதுமா?எகிறினேன் நான். “எங்களுக்குப் புரியற மாதிரி கவிதை சொல்லுடா....

      ஐயோ...வேண்டே....!கதறினான் சுரேந்திரன். “வைத்தி, போதும், இத்தோட நிறுத்திக்குவோம். எங்களுக்கு அறிவு கம்மி. ஏர்டெல் பிராட்பேண்ட் பில்லும் கவிதையும் எல்லாராலேயும் புரிஞ்சுக்க முடியாது. விட்டிரு!

      பொறாமை பிடிச்சவங்களா...!வைத்தியின் குரல் தழுதழுத்தது. “அவனவன் நண்பன் கவிதை எழுதினா எப்படியெல்லாம் ஊக்குவிக்கிறாங்க?

      சர்தான் நிறுத்துடா!அதட்டினேன் நான். “உன்னை ஊக்குவிக்கிறதுக்குப் பதிலா நான் லோக்கல் டிரெயினிலே ஊக்கு விப்பேன். ஊக்கு மட்டுமில்லேடா, குண்டூசி, குத்தூசி, பென்சில் எல்லாம் விப்பேன். காசாவது தேறும்!

      சேட்டை! நீ இவ்வளோ வயித்தெரிச்சல் புடிச்சவனா இருப்பேன்னு எனக்குத் தெரியாதுடா!

      எனக்கே தெரியாதே! நேத்துத்தான் டாக்டர் எனக்கு பெப்டிக் அல்ஸர் இருக்கு. எண்ணை, உப்பு, காரம், கவிதையெல்லாம் கூடாதுன்னு சொல்லியிருக்காரு!

      டேய் சேட்டை!சுரேந்திரன் மலையாளப்பட க்ளைமேக்ஸில் பொங்கியெழும் லாலேட்டன் போல வெகுண்டான். “ஈ வைத்தி நமக்குப் பொறாமைன்னு சொல்றாண்டா! நாம நினைச்சா கவிதை எழுத முடியாதா? என்னமோ இவன் ஒருத்தன் தான் எம்.எஸ்.விஸ்வநாதன்னுறா மாதிரியல்லே பேசுறான்?

      சுரேன்...எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கவிதை எழுதத் தெரியாதுடா!

      இருக்கட்டுமே! வைத்திக்கு மட்டும் தெரியுமாக்கும்?

      டேய் சுரேந்திரா...!வைத்தி குரலெழுப்பினான். “என்னோட கவிதையை மட்டமாப் பேசறீங்களே, உங்களாலே என்னை மாதிரி ஒரு கவிதை சொல்ல முடியுமா...?

      உன்னை மாதிரி யாராலேயும் கவிதை எழுத முடியாதுடா!நான் ஒப்புக்கொண்டேன். “தலையிலே விக் வைச்சவனெல்லாம் பவர் ஸ்டார் ஆக முடியுமா?

      நீங்க நினைச்சாலும் கவிதை எழுத முடியாதுடா!கொக்கரித்தான் வைத்தி. “அதுக்கெல்லாம் அறிவு வேணுண்டா!

      எந்தாடா பறஞ்சது?சுரேந்திரன் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டான். “எந்து விஜாரிச்சு? ஞானும் கவிதை பறையும்....கேட்கான்.... யே ஓமனே....எண்டே ஓமனே...!

      டேய் சுரேந்திரா...!இடைமறித்தேன் நான். “அஞ்சாம் கிளாஸ் பசங்கல்லாம் ஐ-பேடோட சுத்திட்டிருக்காங்க; தினத்தந்தியிலே கன்னித்தீவே முடியப்போகுது. இன்னும் ஓமனையை விடலியா? லேட்டஸ்டா பாவனா, மீரா ஜாஸ்மின், மம்தா மோகன்தாஸ், காவ்யா மாதவன்னு சொல்லுடா! தமிழுலே சொல்லுடா!

      அது இன்னும் ஈஸி!என்றான் சுரேந்திரன். “நம்ம வைத்தி சொன்னதுமாதிரியே ஒரு தமிழ்க்கவிதை சொல்றேன் கேளு....

ஒவ்வொரு மதிய உணவு
இடைவேளைக்கு முன்பும்
நினைவுக்கு வருகிறது...
திறக்க முடியாத டிபன் பாக்ஸும்...
மூட முடியாத மனைவியின் வாயும்..

      சபாஷ் சுரேந்திரா!நான் கைதட்டினேன். “இது வைத்தியோட கவிதையை விட பெட்டராயிருக்கு!

      அடச்சீ!வைத்தி சீறினான். “கவிதையாடா இது?

      அப்படீன்னா நான் சொல்ற கவிதையைக் கேளு!என்று தோள்தட்டினேன்.

ஞாயிற்றுக்கிழமை நெருங்கினால்
அலுவலகங்களில் எல்லாரும்
அலைபாய்கிறார்கள்..!
சனிப்பெயர்ச்சிக்காக...

                வாவ் சேட்டை!சுரேந்திரன் கைகுலுக்கினான். “உனக்குள்ளே கவிதை இருக்குடா!

      தூங்கிட்டிருந்ததை எழுப்பிட்டீங்களே?சலித்துக்கொண்டேன். “அது எப்படிப் பாஞ்சு பிறாண்டப்போவுதுன்னு போகப் போகத்தான் தெரியும்.

      உங்க கவிதையை நீங்கதான் மெச்சிக்கணும்!பொருமினான் வைத்தி. “இயல்பா கவிதை எழுதுங்கடா... நான் எழுதியிருக்கேன் கேளுங்க...!

கல்யாண மண்டப வாசலில்
கைகுலுக்கிக்கொண்டனர்
பிச்சைக்காரனும்
பெண்ணின் தகப்பனும்.

      நீ எதுக்கு பெண்ணின் தகப்பனோட கைகுலுக்கினே?

      சேட்டை! வரதட்சணைக் கொடுமைடா! கவிதைன்னா சமூக அக்கறை வேணுண்டா!முழங்கினான் வைத்தி.

      சேட்டை!சுரேந்திரன் தோளைச் சுரண்டினான். “சமூக அக்கறையோட எப்படிக் கவிதை எழுதறது?

      அது ரொம்ப சிம்பிள் மேட்டர்டா! கவிதை எழுதுறவனைத் தவிர மத்தவன் எவனுக்கும் சூடு சூலாயி, வெக்கம் வேலாயி, மானம் மங்காத்தா எதுவும் கிடையாதுன்னுறா மாதிரி எழுதணும். கவிதையைப் படிச்சதும் நாக்கைப் பிடுங்கிட்டுச் சாவணும் போலிருக்கணும்.

      வைத்தி கவிதையைக் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் தோணிச்சு! இதுக்குச் செத்துப்போறது எத்தரையோ பெட்டர்...!

      டேய் சேட்டை! டேய் சுரேந்திரா!விஜய் போல விரல் சொடுக்கினான் வைத்தி. “என்னை மாதிரி பின்நவீனத்துவத்தோட ஒரு கவிதை சொன்னீங்கன்னா, ஒரு பக்க மீசையை எடுக்கறேண்டா!

      எடோ சேட்டை! ஈ பின்நவீனத்துவம் எந்தாணு?

      அது ஒண்ணுமில்லேடா! நீ வெனிலா ஐஸ் க்ரீம் சாப்பிட்டிருக்கியா?

      ஓ! அத்தரை ரசமாணோ ஈ பின்நவீனத்துவம்...?

      அவசரப்படாதேடா! அந்த வெனிலா ஐஸ் க்ரீம்லே வேப்பெண்ணையை ஊத்திச் சாப்பிட்டா எப்படியிருக்கும்? அதான் பின்நவீனத்துவம்!

                கிண்டல் போதும்! முடிஞ்சா கவிதை சொல்லுங்க!சீறினான் வைத்தி.


      இதோ எடுத்து வுடறேன் பாரு! க்கும்...!என்று தொடங்கினேன்.

பேருந்துப் பயணங்களில்
பரிதவிக்கிறது மனம்...

உனது புன்னகைக்காகவும்..
கண்டக்டர் தர வேண்டிய
பாக்கி சில்லரைக்காகவும்...!

     பிரமாதம் சேட்டை!கைதட்டினான் சுரேந்திரன். “இப்ப என்னடா சொல்றே வைத்தி?

     விழுந்தாலும் எழுவேன்; எழுந்து ஓடுவேன்! என்று கம்பீரமாய்ச் சொன்னான் வைத்தி.

      ஏன்? நாய் துரத்துதா? என்று வைத்தியைக் கடுப்பேற்றினேன்.

      சே! உங்க கிட்டே போயி கவிதை சொன்னேனே! என் புத்தியைச் செருப்பாலே அடிக்கணும்!

      அதெல்லாம் வேண்டாம்! அதுக்குப் பதிலா என் கவிதையைக் கேளு!

சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய முதலீடா?
அதிர்ந்து போய்
ஆங்கிலம் கற்க
முடிவு செய்தனர்
பிச்சைக்காரர்கள்!

     அடிபொளி!என்று ஆர்ப்பரித்தான் சுரேந்திரன். “ நானும் இன்னொரு கவிதை சொல்லட்டுமா?

ஒவ்வொரு மின்தடங்கலின் போதும்..
ஓடிப்போய்ப் பார்க்கிறேன்..
பக்கத்து வீட்டிலும்
போய் விட்டதா என்று...

      சூப்பர்ப்!

      டேய் சேட்டை! டேய் சுரேந்திரா! நிறுத்துங்கடா!கெஞ்சினான் வைத்தி.

      இருடா! கவிதைன்னா பொண்ணுங்களைப் பத்தி ஒண்ணாவது சொல்ல வேணாமா? கேளுடா...
அவளது இடையும்
ஆண்டவனும் ஓன்று..
உண்டென்பர் சிலர்..
இல்லைஎன்பார்கள் சிலர்..
கண்டவர் விண்டதில்லை
கண்டவர் உள்ளம் மட்டும்
விண்டு போகிறதே...!

      கவிஞர் சேட்டை வாழ்க!என்று கோஷமிட்டான் சுரேந்திரன். “சேட்டை, இப்போ எனக்கு இந்த ஆட்டம் நல்லாப் புரிஞ்சிருச்சு! நானும் சமுக சர்க்கரையோட ஒரு கவிதை சொல்லட்டுமா?

      டேய், அது சமுக சர்க்கரை இல்லேடா; அக்கறை!

      ஓ.கே!என்று கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு சுரேந்திரன் அடுத்த கவிதையைச் சொன்னான்.

மனநல மருத்துவமனையில்
கால்பந்தாட்டம்!
காதலர்களுக்கும் கவிஞர்களுக்கும்
நடந்த போட்டி
டை-பிரேக்கரில்முடிந்தது.


      அற்புதம்டா!என்று சுரேந்திரனைக் கட்டித்தழுவிக்கொண்டேன். அடுத்த வினாடி வைத்தியைக் காணவில்லை. மொட்டைமாடியிலிருந்து ஏதோ ஒரு கனமான பொருள் உரத்த சத்தத்துடன் ‘ஐயோஎன்ற அலறலுடன் கீழே விழுந்தது புரிபட இரண்டொரு நொடிகள் பிடித்தன.


**************

33 comments:

  1. அருமையான கவிதைகளுடன் சேர்ந்த நகைச்சுவைகள் பொதிந்த பதிவு.
    சிரித்துச் சிரித்தே வயிற்று வலி வந்துவிட்டது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கவிதைகள் ரசிக்கத் தக்கவை.

    ReplyDelete
  3. வழக்கம்போல் சேட்டையின் சேட்டை... நல்ல கவிதைகள்...

    ReplyDelete
  4. சேட்டைப் பதிவு. ரசித்தேன். இன்னொரு பாணிக்கு புதிய பக்கம் தொடங்கினால் எனக்கும் (எங்களுக்கும்) சொல்லவும்!

    ReplyDelete
  5. அந்த வெனிலா ஐஸ் க்ரீம்லே வேப்பெண்ணையை ஊத்திச் சாப்பிட்டா எப்படியிருக்கும்? அதான் பின்நவீனத்துவம்!”
    -ஜுப்பரு! இந்த ஒரு விளக்கத்துக்காகவே உங்களுக்கு பாஸ்கர் அவார்ட்... ச்சே, ஆஸ்கர் அவார்ட் தரலாம் சேட்டையண்ணா. கவிதைன்னா இன்னான்னு பிச்சுப் பீராய்ஞ்‌சு சிரிக்கச் சிரிக்க வெளக்குனதுக்கு போண்டாவும், டீயும் தர்றேன். ஹலோ... எங்க ஓடறீங்க? போண்டா டீன்னுதான் சொன்னேன். தப்பா கேட்ருச்சோ காதுல?

    ReplyDelete
  6. அட்டகாசம் சேட்டை சார்!நீங்க நகைச்சுவையா சொன்னாலும் உண்மையிலேயே அத்தனை கவிதையும் நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  7. புதிய அவதாரம்... நல்லாத்தான் இருக்கு... தொடர்க...

    ReplyDelete
  8. கலக்கல் சேட்டை அண்ணே. கவிதைகளை படிச்சு சிரிப்பு மாளல!

    இருந்தாலும் பாவம் வைத்தியை கீழே குதிக்க வைச்சிட்டீங்களே! :)

    ReplyDelete
  9. கவிதை ரொம்ப நல்லா இருக்கு......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  10. கலக்கல்...சேட்டை....

    :))))))))))

    ReplyDelete
  11. ”எண்டே குருவாயூரப்பா...என்னை மாத்ரம் ரட்சிக்கணே!”/

    சிரிக்கவைக்கும் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. Settai - count down has started - I do not mean about your kavithais but about the suicides.

    Thank God!!! in the first four lines, you have not mentioned that there is no relationship between you and this post.

    ReplyDelete

  13. இப்படி இயல்பாக நகைச்சுவையுடன் எழுதும் உங்களைக் கண்டு ( படித்து ) பொறாமை கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //ஏர்டெல் பிராட்பேண்ட் பில்லும் கவிதையும் எல்லாராலேயும் புரிஞ்சுக்க முடியாது.// - ஆஹா எப்படி சார் இதெல்லாம்!!

    வாவ் உங்க கவிதை, வைத்தி விட பெட்டெர் தான்!!

    ReplyDelete
  15. கவிதைகளை ரசித்தேன்! காமெடிகள் படித்து சிரித்தேன்! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  16. சேட்டை மன்னன்

    ReplyDelete
  17. //அவளது இடையும்
    ஆண்டவனும் ஓன்று..
    உண்டென்பர் சிலர்..
    இல்லைஎன்பார்கள் சிலர்..
    கண்டவர் விண்டதில்லை
    கண்டவர் உள்ளம் மட்டும்
    விண்டு போகிறதே...!///

    அட அட என்ன ஒரு ஆராய்ச்சி

    ReplyDelete
  18. ரசித்துச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  19. ரசித்துச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  20. முடியல சாமி
    எப்புடி இதெல்லாம்?

    ReplyDelete
  21. விக்கி(வெங்கட்)க்குத் தான் நன்றி சொல்லணும்!

    ReplyDelete
  22. கவிதைனா அப்படி இப்படி இருக்கும், அதுக்காக இப்படி சிரிக்க வைக்கலாமா? 
    இப்பல்லாம் கிலோவுக்கு நாலு ரூவாய்க்கு மேலே கிடைக்குதா?

    டிபன் பாக்ஸ் கவிதை நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  23. சூப்பர் சிரிப்புங்கோ.......

    ReplyDelete
  24. காமெடியும் கவிதையும் அருமை.
    சிரிக்கவும்,சிலிர்க்கவும் வைத்தது சேட்டையாரே

    ReplyDelete
  25. காமெடியும் கவிதையும் அருமை.
    சிரிக்கவும்,சிலிர்க்கவும் வைத்தது சேட்டையாரே

    ReplyDelete
  26. கவிதை காய்ச்சலா..பாய்ச்சல் சாமி..
    பம்மி பதுங்கிட்டேன், போங்க..

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete

  27. சேட்டையின் கவிதைகள்,
    படிப்பவருக்கு வேட்டை,
    காப்பி அடித்து கவிதை,
    எழுதுபவர்க்குப் போட
    சொல்லுமே தேட்டை,
    நகைச்சுவை மன்னனுக்குரிய
    தேர்தலில் நின்றால்,
    அனைவரும் போடுவார் ஓட்டை!

    ReplyDelete
  28. காலையில உங்க பதிவைப் படிச்சதும் ஒரு புத்துணர்வு....சிரிச்சதால் தான் ....கவிதையைக் கிண்டலடித்த கவிதைன்னாலும் அருமை...மிக்க நன்றி சார்..

    ReplyDelete
  29. பேருந்துப் பயணங்களில்
    பரிதவிக்கிறது மனம்...


    உனது புன்னகைக்காகவும்..
    கண்டக்டர் தர வேண்டிய
    பாக்கி சில்லரைக்காகவும்...!”

    :)

    ReplyDelete
  30. \\ஒவ்வொரு மதிய உணவு
    இடைவேளைக்கு முன்பும்
    நினைவுக்கு வருகிறது...
    திறக்க முடியாத டிபன் பாக்ஸும்...
    மூட முடியாத மனைவியின் வாயும்..”\\

    அனுபவ கவிதையா ...?

    சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை உங்கள் கவிதைக்கும், சிறந்த எழுத்து நடைக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  31. unable to read your blogs after the 25th. Kindly check out.
    Can you provide your mail id please
    Shankar

    ReplyDelete
  32. செட்டை வெனிலா ஐஸ்க்ரீம்ல வேப்பென்னையா? புரிஞ்சுபோச்சு பின்நவீனத்துவம்.

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!