Thursday, January 31, 2013

அடுத்த தடை ஆர்யா படத்துக்கா…?





ஆர்யா, சந்தானம், ஹன்சிகா மோட்வானி மற்றும் அஞ்சலி நடித்து வெளிவரவிருக்கும் சேட்டைதிரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்று பிரபல(?!?!) பதிவர் சேட்டைக்காரன் அறிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் தினப்புரளிபத்திரிகை நிருபர் மெய்யாமொழிக்கு அளித்த பேட்டி பின்வருமாறு.

கே:       சேட்டைபடத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?

சே.கா:               கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சேட்டைக்காரன் என்ற பெயரில், முன்னூறுக்கும் மேற்பட்ட மொக்கைகளை எழுதியிருக்கிறேன். சேட்டைக்காரன் என்ற எனது பெயருக்கான காப்பி ரைட், காம்ப்ளான் ரைட், போர்ன்விட்டா ரைட் ஆகியவை என்னிடம் இருக்கிறது. ஆகவே, எனது பெயரின் ஒரு பகுதியை எனது அனுமதியின்றி உபயோகித்து எடுக்கப்பட்டிருக்கும் சேட்டைபடத்தை உடனே தடை செய்ய வேண்டும்.

கே: இது குறித்துப் பேசினீர்களா?

சே.கா: ஆம்! நீங்கள் வரும்வரையில் எனக்கு நானே தனியாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

கே:  அட, படக்குழுவினர் யாருடனாவது பேசினீர்களா?

சே.கா: எவ்வளவோ முயன்றேன். ஆனால், ஹன்சிகா மோட்வானி, அஞ்சலி இருவரது நம்பரும் கிடைக்கவில்லை. உங்க கிட்டே இருந்தாக் கொடுங்களேன்!

கே:  சரிதான்! உங்களது முக்கிய கோரிக்கை என்ன?

சே.கா: சேட்டைஎன்ற படத்தின் தலைப்பிலிருந்து சேட்டை என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்து விட்டு,  மீதமுள்ள பெயரோடு தாராளமாக படத்தை வெளியிடலாம்.

கே: அவர்கள் சேட்டைக்காரன் என்று பெயர் வைக்கவில்லையே! சேட்டை என்றுதானே வைத்திருக்கிறார்கள்? அரைகுறையாகப் பெயர் வைத்ததற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?

சே.கா: இதெல்லாம் பத்திரிகைக்காரர்களுக்குத் தெரியாது. சேட்டை என்றாலே அரைகுறை என்று வலையுலகில் எல்லாருக்கும் தெரியும். அதனால்தான், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

கே:  இந்தப் படம் டெல்லி பெல்லிபடத்தின் ரீமேக் என்று கூறுகிறார்களே?

சே.கா: இதையும் என் வக்கீலுக்கு நான் தெரிவித்திருக்கிறேன். நான் டெல்லிக்குப் பலமுறை போயிருக்கிறேன். தர்யாகஞ்சில் கோல்கப்பே சாப்பிட்டிருக்கிறேன்; பகாட்கஞ்சில் பானிபூரி சாப்பிட்டிருக்கிறேன்; கரோல்பாகில் காஜுகத்திரி தின்றிருக்கிறேன்; அத்துடன் சிறியதென்றாலும் எனக்கும் ஒரு பெல்லி இருக்கிறது. ஆதாரமாக அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல, டெல்லி பெல்லி படத்துக்குத் தமிழில் முதலில் விமர்சனம் செய்ததும் நான் தான். இதிலிருந்தே இது திட்டமிட்ட சதி என்பது புரியும் என்று கருதுகிறேன்.

கே:  அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

சே.கா: ராயர் கஃபேயில் போண்டா சாப்பிடப்போகிறேன்.

கே: அதில்லை சார், இந்தப் பட விஷயமாக என்ன செய்யப்போகிறீர்கள்?

சே.கா: மகாத்மா காந்தி சிலை முன்பு மெரீனா கடற்கரையில் பசிக்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

கே: இதுலே எதுக்குய்யா மகாத்மா காந்தியை இழுக்கறீங்க?

சே.கா: பின்னே என்ன பூஜா காந்தியையா இழுக்க முடியும்? அவங்க கன்னட நடிகையாச்சே?

கே: உங்களுக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுப்பார்களா?

வொய் நாட்? எனக்கு ஆதரவாக அண்ணா ஹஜாரே தந்தி அனுப்பியிருக்கிறார். அர்விந்த் கேஜ்ரிவால் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறார். மற்றவர்கள் விரும்பினால் மணி ஆர்டர் அனுப்பலாம்.

கே: இந்தப் படத்தைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரலாமே?

சே.கா: எந்தப் படத்தையும் பார்க்கிறதில்லேன்னு நான் ஒரு முடிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் என் பெயரில் வரப்போகிற படம் என்பதால், படம் வெளியாகுமுன்னர் எனக்குத் தனியாகப் போட்டுக் காட்ட வேண்டும்.

கே:இந்தப் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்குமென்று நினைக்கிறீர்களா?

சே.கா: பொதுவா, சேட்டைன்னு பேரு வைச்சா உருப்படியா ஒண்ணுமிருக்க வாய்ப்பில்லை. ஆனா, தப்பித்தவறி படத்துலே ஏதாவது புத்திசாலித்தனமா இருந்தா, அது என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கலாம். அதுனாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

கே: படத்தைப் பார்த்தாப் போதுமா?

சே.கா:     நான் மட்டும் பார்த்தாப் போதாது. கூடவே, அஞ்சலியும் ஹன்சிகாவும் பக்கத்துலே உட்கார்ந்து பார்க்கணும். வேண்ணா, ஆர்யா முன்வரிசையிலே உட்கார்ந்துட்டுப் பார்க்கட்டும். பாவம், என்ன இருந்தாலும் ஹீரோ இல்லையா?

கே: படம் பார்ப்பது போக வேறு ஏதாவது நிபந்தனை இருக்கிறதா?

சே.கா: ஆம், இடைவேளையில் காப்பியும் கடலை பர்பியும் வாங்கித் தரணும்.

கே: அவ்வளவு தானா?                 

சே.கா: அவ்வளவுதான். நான் பர்கர், பீட்சா சாப்பிட மாட்டேன். எனக்கு கேஸ்-ட்ரபிள் இருக்கிறது.

கே: வெறும் உண்ணாவிரதம் தானா? மறியல் ஏதாச்சும் பண்ணுவீங்களா?

சே.கா: எனக்குப் பொறியலே பண்ணத்தெரியாது; மறியல் எப்படிப் பண்ணுவேன்?

கே: உங்க கோரிக்கையை ஏற்கலேன்னா என்ன பண்ணுவீங்க?

சே.கா: சும்மாயிருக்க மாட்டேன்! படத்தோட பெயரை மாத்தணும். இல்லாட்டா நான் என் பெயரை மாத்திருவேன்னு எச்சரிக்கிறேன்.

கே: உங்க பிரச்சினையை எப்படி சட்டப்படி எதிர்கொள்ளப் போறீங்க?

சே.கா: சேட்டை நான் என்பதற்கான சகல ஆதாரங்களையும் என் வக்கீலுக்கு அனுப்பியிருக்கிறேன். இப்போதுதான் போன் வந்தது. ‘படித்துக்கொண்டிருக்கிறோம்; சிரிச்சு முடிச்சதும் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றிப் பேசலாம்னு சொன்னாரு!

இவ்வாறு சேட்டைக்காரன் பேட்டியளித்திருப்பதால், ஆர்யா நடித்து வெளிவரவிருக்கும் சேட்டை படம், திரையரங்குகளில் வெளியிடப்படும்வரை திரையிடப்பட மாட்டாது என்று நிருபர் மெய்யாமொழி தெரிவித்தார்.

Saturday, January 26, 2013

விஸ்வரூபம்-ஒரு மாறுபட்ட பார்வை



எடுத்த எடுப்பிலேயே நான் தரவிருக்கிற அதிர்ச்சியான செய்தியை உங்களில் பலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம் என்பதால், கையில் ஜெலுஸலுடன் இந்த இடுகையை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
     
      விஸ்வரூபம்படத்தின் சி.டிக்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டதும், பவர் ஸ்டாருக்கு பத்மஸ்ரீ விருது என்று கேள்விப்பட்டதுபோல அதிர்ந்துதான் போனேன். இந்த சி.டி.விஷயத்தில் ஏற்கனவே ஒரு முறை நான் ஏமாந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற சம்பவத்தை இங்கே நினைவுகூர வேண்டியது எனது கடமையாகிறது. போன வைகுண்ட ஏகாதசியன்று, போகிற வழிக்குப் புண்ணியம் தேடலாமே என்று ஒரு சி.டி.கடைக்குப் போய் ‘நல்ல பக்திப்படத்தோட சி.டி.இருந்தாக் கொடுப்பா! பகவான் புகழ் பாடுறா மாதிரியிருக்கணும்,என்று கேட்கப்போய், அந்த ஆள் அந்தக்காலத்து ஜோதிலட்சுமி நடித்த ‘ஃபைட்டர் பகவான்தெலுங்கு டப்பிங் படத்தின் சிடியைக் கொடுத்து விட்டார். வேறு வழியின்றி அந்தப் படத்தைப் பார்த்து நான் பெருமாளின் பேரருள் பெற்று உய்தது வேறு கதை. ஆகவே, இம்முறை நான் ஒன்றுக்கு இரண்டு முறை உரத்துச் சொன்னேன். “எனக்கு விஸ்வரூபம் பட சி.டி.தான் வேணும்!”.  அவ்வண்ணமே இருபது ரூபாய்க்கு விஸ்வரூபம் படத்தின் சி.டியை வாங்கிக்கொண்டு வந்து சூட்டோடு சூடாகப் பார்த்தும் விட்டேன்.

      படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை, சொல்லொணாத் திகைப்பிலும், மலைப்பிலும் ஆழ்ந்து விட்டேன். யான் பெற்ற திகைப்பு பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தாலும், விஸ்வரூபத்தைப் பற்றித் திட்டியாவது இடுகை போடுவதே பதிவலட்சணம் என்பதாலும், எனது விமர்சனத்தை இங்கே அளித்திருக்கிறேன்.

கதை

     இந்தப் படத்தின் டைட்டிலில் கதைஎன்று கார்டு காண்பித்தார்கள் என்பதால், முடிவதற்குள் எப்படியாவது அது வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். தோராயமாக கதைச்சுருக்கத்தைக் கீழே தந்திருக்கிறேன். அது யாதெனில்....

      கதாநாயகன் மிகவும் நேர்மையான, அப்பாவியான, ஏழையான ஆனால் சுமோ வீரரைப் போல கொழுக் மொழுக்கென்றிருக்கும் ஒரு கிராமத்துவாசி. அவனுக்கு ஒரு தங்கை, ஒரே ஒரு மனைவி. அந்தக் கிராமத்துக்கு மூன்று வில்லன்கள் வரவே, கண்டிப்பாக ஒரு கற்பழிப்புக்கும், ஒரு கொலைக்கும் பக்காவாய் கேரண்டி ஆரம்பத்திலேயே அளிக்கப்படுகிறது. அப்பாவிக் கதாநாயகன் பட்டணத்துக்கு வந்து, வழக்கம்போல செய்யாத குற்றத்துக்காக ஹைதராபாத் ஸ்டூடியோ ஜெயிலுக்குப் போக, வில்லனில் ஒருவன் தங்கையை நாசப்படுத்த, மற்றவர்கள் கதாநாயகியை உதாசீனப்படுத்த, ஜெயிலிலிருந்து வெளியே வந்த நாயகன், இண்டெர்வல் வருவதற்குள் அவசர அவசரமாக கள்ளக்கடத்தல்காரனாகி விடுகிறார். (பதிவராவதுதான் சுலபமென்றால், ஸ்மக்ளராவது அதைவிட சுலபம் போலிருக்கிறது!) நாயகனின் மகன் இங்கிலாந்தில் படித்துவிட்டுத் திரும்பிவந்து, அப்பாவின் சுயரூபத்தை அறிந்து விலகிப்போக, அப்பா ஒருசில போராட்டங்களுக்குப் பின்னர் வில்லன் கோஷ்டியைத் தீர்த்துக்கட்டி, ஆறே முக்கால் நிமிடம் வசனம் பேசிவிட்டு, மகனின் மடியில் உயிரை விடுகிறார்.



நடிப்பு

      கதாநாயகனாகவும், அவரது மகனாகவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோன்றுகிறார். படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிவாஜி மட்டுமே தென்படுகிறார். மற்றவர்கள் இடப்பற்றாக்குறை காரணமாக கண்ணிலேயே படவில்லை. ஏழையாக அவர் தோன்றும் ஆரம்பக்காட்சிகளில், அவர் அணிந்துவரும் விதவிதமான சஃபாரி சூட்டுகள் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன. ‘என்னை யாருன்னு நினைச்சே..பணமூட்டையை விரிச்சே...என்ற பாட்டுக்கு சிவாஜி ஆடுகிற ஆட்டத்தில் முன்னறிவிப்பில்லாமல் கரண்ட்-கட் ஆகிவிட்டது என்றால் பாருங்களேன். ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்என்ற பழமொழியை சிவாஜியை ஆடவைத்து உலகிற்கு உணர்த்திய பத்மாலயா பிக்சர்சுக்கு என் சார்பில் ஒரு செட் கல்தோசையும் வடைகறியும் பார்சலாக அனுப்ப எண்ணியிருக்கிறேன்.

      கதாநாயகியாக சுஜாதா அற்புதமாக அழுதிருக்கிறார். என் இத்தனை வருட சர்வீசில் சுஜாதா இந்தப்படத்தில் கஷ்டப்பட்டதுபோல, வேறெந்தப் படத்திலும் கஷ்டப்பட்டதேயில்லை. (சிவாஜியோடு பாடுகிற ஒரு டூயட் உட்பட!). அதிலும், இரண்டாவது சிவாஜி ‘மம்மி...மம்மிஎனும்போதெல்லாம் பொங்கிவருகிற சிரிப்பை லாவகமாக மறைத்து, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதைத் திரும்பத் திரும்ப மெய்ப்பித்திருக்கிறார்.

      இரண்டாவது கதாநாயகியாக வரும் ஸ்ரீதேவியும் சிவாஜியும் ரொமான்ஸும் காட்சிகளில் இளமை பொங்கி வழிந்து, நான் கால்வழுக்கிக் கீழேயே விழுந்துவிட்டேன். ‘வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்...பாடலில் சிவாஜிக்கு நிகராக டான்ஸ் ஆடி(?!?!!??!!), அப்ளாஸ்களை அள்ளுகிறார்.

இசை

      மெல்லிசை மன்னரின் இசைதான் மிகப்பெரிய ஆறுதல். குறிப்பாக டூயட் காட்சிகள் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையைப் பெருமளவு தீர்த்திருக்கின்றன. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையாபார்த்துக் கூட நான் இவ்வளவு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவில்லை. இருந்தாலும், ‘ராஜா...தீ.....ராஜனுக்.....கு....என்ற பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன், கடற்கரை ரயில் நிலையத்தின் கழிப்பறையில் ரிகார்டிங் செய்தது போல, மூக்கைப்பிடித்தவாறு பாடியிருப்பது அனாவசியம். இதே பாடலை அவர் அப்படியே சாந்தி தியேட்டரில் பதிவு செய்திருந்தாலும், இதே எஃபெக்ட் கிடைத்திருக்கும். நான் பட்டகடன் எத்தனையோ பூமியில் பிறந்துஎன்று இறுதியில் சிவாஜி பாடும்போது, அந்தக் கடனுடன் எனது இருபது ரூபாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்பது புரியாமல் இல்லை.

இயக்கம்

      இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் படு சுறுசுறுப்பு. பொதுவாக இவர் தன் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமுன்னரே இடைவேளை வந்துவிடும். இருந்தாலும், இது அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படத்தின் ரீமேக் என்பதால், தனது பிளேடைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருப்பது நல்ல முன்னேற்றம்.

      இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று புரியவில்லை. ஒரிஜினல் இந்திப் படத்தில், அமிதாப் பச்சன் ஆரம்பத்தில் ஒரு புலியோடு சண்டை போடுவார். ஆனால், இதிலோ ‘சிவாஜிக்கு ஸ்ரீதேவி ஜோடிஎன்று கேள்விப்பட்டு, ‘இந்தக் கொடுமைக்கு நாங்க உடன்பட மாட்டோம்,என்று எல்லாப் புலிகளும் முதுமலையை விட்டு வேறு புதுமலைக்குப் போய்விட்டதால், சிவாஜி ஒரு யானையை ‘ஏய்...ஏய்...டுர்ர்ர்ர்ர்..டுர்ர்ர்ர்ர்ர்ர்என்று மாட்டை ஓட்டுவதுபோல, விரட்டுவதாகக் காட்சியை மாற்றியமைத்திருக்கிறார்கள். ஸ்ரீதேவியை சிவாஜிக்கு ஜோடியாகப் போட்டது குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறுவதாகுமா என்று ராம் ஜெட்மலானியோ, பல்கிவாலாவோ விளக்கினால் நன்று. மற்றபடி இந்த ‘விஸ்வரூபம்பணம்போட்டுப் படமெடுத்த தயாரிப்பாளர் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்த வருத்தத்தையும் தருவதற்கான சாத்தியமே இல்லை. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, ‘உலகம் உருண்டை, அதுவும் சின்ன உருண்டை இல்லை; மிகப்பெரிய உருண்டைஎன்று ஒவ்வொரு காட்சியிலும் மண்டையில் ஓங்கிக் குட்டுவதுபோல குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள்.

      திரைக்கதையமைப்பில் இந்த ‘விஸ்வரூபம்ஒரு உச்சம். இந்தப் படத்தை அகிரோ காரசேவு பார்த்திருந்தால், படம் முழுக்க மூக்கில் விரலை வைத்துக் கொண்டிருப்பார். (இன்னும் உயிரோடு இருக்கிறோமா என்று பார்க்கத்தான்..)


விஸ்வரூபம் தரும் பயன்கள்

     இந்தப் படத்தின் சி.டியின் கீழே ஒரு எலுமிச்சம்பழத்தைக் கட்டி வாசலிலே தொங்கவிட்டால், ஈ, கொசு, கரப்பான் பூச்சி, பல்லி போன்ற ஜந்துக்களிடமிருந்தும், எலி, பெருச்சாளி, மாமனார், மாமியார் போன்ற பிராணிகளிடமிருந்தும் விடுதலை பெறலாம். அதேபோல இப்படத்தின் சி.டியை ஈசானமூலையில் இரண்டடி தோண்டி புதைத்து வைத்தால் காத்து கருப்பு அண்டாது.

      திருமணம் ஆகாதவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பதினோரு நாட்களுக்கு வெறும் வயிற்றில் இப்படத்தைப் பார்த்துவந்தால், பன்னிரெண்டாவது நாள் தாத்காலில் காசி ராமேஸ்வரத்துக்கு டிக்கெட் வாங்குவது திண்ணம்.

      இதைக் கன்னடத்தில் டப்பிங் செய்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு அனுப்பினால், காவிரித்தண்ணீரை டாங்கர்களில் கொண்டுவந்து மேட்டூர் அணையில் கொட்டுவார் என்பது உறுதி. இதை வறுத்துப் பொடிசெய்து பத்தடி தூரத்திலிருந்து முகர்ந்து பார்த்தாலே, பர்கோலக்ஸ் சாப்பிட்ட பலன் கிடைக்கும் என்பதை அறிக!

விஸ்வரூபம் உண்மையிலேயே ஒரு உலகப்படம் என்பதில் ஐயமில்லை!

அப்பாடா! பதிவர் என்ற முறையில் என் கடமையை ஆற்றிவிட்டேன். நிம்மதி!