Thursday, January 31, 2013

அடுத்த தடை ஆர்யா படத்துக்கா…?





ஆர்யா, சந்தானம், ஹன்சிகா மோட்வானி மற்றும் அஞ்சலி நடித்து வெளிவரவிருக்கும் சேட்டைதிரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்று பிரபல(?!?!) பதிவர் சேட்டைக்காரன் அறிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் தினப்புரளிபத்திரிகை நிருபர் மெய்யாமொழிக்கு அளித்த பேட்டி பின்வருமாறு.

கே:       சேட்டைபடத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?

சே.கா:               கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சேட்டைக்காரன் என்ற பெயரில், முன்னூறுக்கும் மேற்பட்ட மொக்கைகளை எழுதியிருக்கிறேன். சேட்டைக்காரன் என்ற எனது பெயருக்கான காப்பி ரைட், காம்ப்ளான் ரைட், போர்ன்விட்டா ரைட் ஆகியவை என்னிடம் இருக்கிறது. ஆகவே, எனது பெயரின் ஒரு பகுதியை எனது அனுமதியின்றி உபயோகித்து எடுக்கப்பட்டிருக்கும் சேட்டைபடத்தை உடனே தடை செய்ய வேண்டும்.

கே: இது குறித்துப் பேசினீர்களா?

சே.கா: ஆம்! நீங்கள் வரும்வரையில் எனக்கு நானே தனியாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

கே:  அட, படக்குழுவினர் யாருடனாவது பேசினீர்களா?

சே.கா: எவ்வளவோ முயன்றேன். ஆனால், ஹன்சிகா மோட்வானி, அஞ்சலி இருவரது நம்பரும் கிடைக்கவில்லை. உங்க கிட்டே இருந்தாக் கொடுங்களேன்!

கே:  சரிதான்! உங்களது முக்கிய கோரிக்கை என்ன?

சே.கா: சேட்டைஎன்ற படத்தின் தலைப்பிலிருந்து சேட்டை என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்து விட்டு,  மீதமுள்ள பெயரோடு தாராளமாக படத்தை வெளியிடலாம்.

கே: அவர்கள் சேட்டைக்காரன் என்று பெயர் வைக்கவில்லையே! சேட்டை என்றுதானே வைத்திருக்கிறார்கள்? அரைகுறையாகப் பெயர் வைத்ததற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?

சே.கா: இதெல்லாம் பத்திரிகைக்காரர்களுக்குத் தெரியாது. சேட்டை என்றாலே அரைகுறை என்று வலையுலகில் எல்லாருக்கும் தெரியும். அதனால்தான், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

கே:  இந்தப் படம் டெல்லி பெல்லிபடத்தின் ரீமேக் என்று கூறுகிறார்களே?

சே.கா: இதையும் என் வக்கீலுக்கு நான் தெரிவித்திருக்கிறேன். நான் டெல்லிக்குப் பலமுறை போயிருக்கிறேன். தர்யாகஞ்சில் கோல்கப்பே சாப்பிட்டிருக்கிறேன்; பகாட்கஞ்சில் பானிபூரி சாப்பிட்டிருக்கிறேன்; கரோல்பாகில் காஜுகத்திரி தின்றிருக்கிறேன்; அத்துடன் சிறியதென்றாலும் எனக்கும் ஒரு பெல்லி இருக்கிறது. ஆதாரமாக அல்ட்ரா-சவுண்ட் ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல, டெல்லி பெல்லி படத்துக்குத் தமிழில் முதலில் விமர்சனம் செய்ததும் நான் தான். இதிலிருந்தே இது திட்டமிட்ட சதி என்பது புரியும் என்று கருதுகிறேன்.

கே:  அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

சே.கா: ராயர் கஃபேயில் போண்டா சாப்பிடப்போகிறேன்.

கே: அதில்லை சார், இந்தப் பட விஷயமாக என்ன செய்யப்போகிறீர்கள்?

சே.கா: மகாத்மா காந்தி சிலை முன்பு மெரீனா கடற்கரையில் பசிக்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

கே: இதுலே எதுக்குய்யா மகாத்மா காந்தியை இழுக்கறீங்க?

சே.கா: பின்னே என்ன பூஜா காந்தியையா இழுக்க முடியும்? அவங்க கன்னட நடிகையாச்சே?

கே: உங்களுக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுப்பார்களா?

வொய் நாட்? எனக்கு ஆதரவாக அண்ணா ஹஜாரே தந்தி அனுப்பியிருக்கிறார். அர்விந்த் கேஜ்ரிவால் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறார். மற்றவர்கள் விரும்பினால் மணி ஆர்டர் அனுப்பலாம்.

கே: இந்தப் படத்தைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரலாமே?

சே.கா: எந்தப் படத்தையும் பார்க்கிறதில்லேன்னு நான் ஒரு முடிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் என் பெயரில் வரப்போகிற படம் என்பதால், படம் வெளியாகுமுன்னர் எனக்குத் தனியாகப் போட்டுக் காட்ட வேண்டும்.

கே:இந்தப் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்குமென்று நினைக்கிறீர்களா?

சே.கா: பொதுவா, சேட்டைன்னு பேரு வைச்சா உருப்படியா ஒண்ணுமிருக்க வாய்ப்பில்லை. ஆனா, தப்பித்தவறி படத்துலே ஏதாவது புத்திசாலித்தனமா இருந்தா, அது என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கலாம். அதுனாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

கே: படத்தைப் பார்த்தாப் போதுமா?

சே.கா:     நான் மட்டும் பார்த்தாப் போதாது. கூடவே, அஞ்சலியும் ஹன்சிகாவும் பக்கத்துலே உட்கார்ந்து பார்க்கணும். வேண்ணா, ஆர்யா முன்வரிசையிலே உட்கார்ந்துட்டுப் பார்க்கட்டும். பாவம், என்ன இருந்தாலும் ஹீரோ இல்லையா?

கே: படம் பார்ப்பது போக வேறு ஏதாவது நிபந்தனை இருக்கிறதா?

சே.கா: ஆம், இடைவேளையில் காப்பியும் கடலை பர்பியும் வாங்கித் தரணும்.

கே: அவ்வளவு தானா?                 

சே.கா: அவ்வளவுதான். நான் பர்கர், பீட்சா சாப்பிட மாட்டேன். எனக்கு கேஸ்-ட்ரபிள் இருக்கிறது.

கே: வெறும் உண்ணாவிரதம் தானா? மறியல் ஏதாச்சும் பண்ணுவீங்களா?

சே.கா: எனக்குப் பொறியலே பண்ணத்தெரியாது; மறியல் எப்படிப் பண்ணுவேன்?

கே: உங்க கோரிக்கையை ஏற்கலேன்னா என்ன பண்ணுவீங்க?

சே.கா: சும்மாயிருக்க மாட்டேன்! படத்தோட பெயரை மாத்தணும். இல்லாட்டா நான் என் பெயரை மாத்திருவேன்னு எச்சரிக்கிறேன்.

கே: உங்க பிரச்சினையை எப்படி சட்டப்படி எதிர்கொள்ளப் போறீங்க?

சே.கா: சேட்டை நான் என்பதற்கான சகல ஆதாரங்களையும் என் வக்கீலுக்கு அனுப்பியிருக்கிறேன். இப்போதுதான் போன் வந்தது. ‘படித்துக்கொண்டிருக்கிறோம்; சிரிச்சு முடிச்சதும் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றிப் பேசலாம்னு சொன்னாரு!

இவ்வாறு சேட்டைக்காரன் பேட்டியளித்திருப்பதால், ஆர்யா நடித்து வெளிவரவிருக்கும் சேட்டை படம், திரையரங்குகளில் வெளியிடப்படும்வரை திரையிடப்பட மாட்டாது என்று நிருபர் மெய்யாமொழி தெரிவித்தார்.

27 comments:

  1. தலைவரே கலக்கிட்டிங்க போங்க.. ஒவ்வொரு பதில் கவுண்டரும் செம..

    ReplyDelete
  2. நானும் உங்களுக்கு ஆதரவு மனி ஆர்டர் அனுப்ப முகவரி தாங்க.....

    ReplyDelete
  3. இந்நேரம் சேட்டை படதயாரிப்பாளர் கதி கலங்கிப்போய் இருப்பார் !பெட்டியுடன் வந்தால் கமெண்ட் போட்ட எனக்கு ஒரு பெர்சண்டேஜ் தள்ளி விடவும் !
    http://jokkaali.blogspot.in/

    ReplyDelete
  4. // கே: அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
    சே.கா: ராயர் கஃபேயில் போண்டா சாப்பிடப்போகிறேன்.//
    எப்படி சார்? சிரிப்பை அடக்க முடியல.

    ReplyDelete
  5. நீங்க பாட்டுக்கு எழுதிவிட்டீர்கள் , உண்மையாகிவிடப்போகுது

    ReplyDelete
  6. ஹ...ஹா...ஹா... சிரிச்சி முடிந்தவுடன் தான் கருத்துரை இட முடிந்தது...

    ReplyDelete
  7. சேட்டை,சேட்டை,சேட்டை.

    ReplyDelete
  8. உங்க ரைட்ஸ் விட்டு கொடுகாதிங்க சார்.. நீங்க தான் சேட்டை என்பதற்கு நேரில் பார்த்த சாட்சிகள் நாங்க இருக்கோம்!!!
    கலக்கிடீங்க!!!

    ReplyDelete
  9. செம காமெடி போங்க சார்!!
    ஏற்கனவே பல பேர் இது மாதிரி மொக்க திரைபட தடை காரண பதிவுகள் போட்டுட்டாங்க.. பட் யுவர்ஸ் இஸ் யுனிக்!! கலக்கல்!!

    ReplyDelete
  10. ஹ..ஹ..ஹா..... சூப்பர்.... ஒவ்வொரு வரியிலும் வி.வி.சிரித்தேன்....

    அலுவலகத்தில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் ! !

    ReplyDelete
  11. ‘படித்துக்கொண்டிருக்கிறோம்;
    சிரிச்சு முடிச்சதும்
    அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றிப் பேசலாம்’னு /

    சிரித்து முடித்ததும்
    கருத்துரை பற்றி யோசிப்போம் ...

    ReplyDelete
  12. sirikka vaiththamaikku nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete

  13. முதலில் சம்பந்தப் பட்ட படத் தயாரிப்பாளருக்கு செதி அனுப்பி விட்டீர்களதானே.

    ReplyDelete
  14. அண்ணே உங்க உண்ணவிரத போராட்டத்திலே கலந்துகொள்ள நாங்களும் ரெடியாக இருக்கிறோம். 100 பிரியாணி பொட்டலம் ரெடி பண்ணுங்க. 5 மணி நேரத்திற்கு மேல எங்களுக்கும் பசி தாங்காது.

    ReplyDelete
  15. எதுக்கும் ஒரு நடை.. ‘.....’ போய் பார்த்துட்டு வந்துருங்க..

    ‘......’ எழுத பயம்மா இருந்துச்சு..அதான் .

    ReplyDelete
  16. சூப்பர்ப்! வரிக்கு வரி புன்னகை!

    ReplyDelete
  17. கலக்கல் சேட்டை அண்ணே!....

    ReplyDelete
  18. அண்ணே எனக்கும் ஒரு சீட் பக்கத்துல வேணும் துண்டுபோட்டுட்டு எனக்கு மிஸ்டு கால் பண்ணுங்க நான் காட்பரிஸ் சாக்லேட் வாங்கிவரேன்

    ReplyDelete


  19. தாசனோடு நானும் வருகிறேன்!

    ReplyDelete
  20. ரொம்ப நாளா உங்க பக்கம் வரணும்னு நினைப்பேன்! இன்னிக்கு தற்செயலா எங்கள் ப்ளாக் படிச்சிட்டு அப்படியே வந்தா நல்ல காமெடி! விட்டுடாதீங்க! உங்க போராட்டத்துக்கு நானும் ஆதரவு தரேன்! நன்றி!

    ReplyDelete
  21. ஹா....ஹா....

    சேட்டை என்ற பெயரைக்கேட்டாலே பதிவுலகம் ஹா...ஹா...கோசம் போட்டுக்கொண்டு திரண்டிடாதா என்ன :))))))

    ReplyDelete
  22. சிரித்து சிரித்து எனக்கு வயிற்றுவலி வந்ததால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்போறேன், அப்போ கோர்ட்லே சந்திக்கலாம்.

    ReplyDelete
  23. சேட்டை காரனின் சேட்டை செம ஜாலி.

    ReplyDelete
  24. அருமை சேட்டைக்காரன்

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!