Sunday, August 28, 2011

என்னது, ஜெயிச்சுட்டோமா?

விக்கிரமன் இயக்கிய படங்களைப் பார்த்திருக்கிறோம். படம் முழுக்க கதாநாயகனுக்கு இடைவிடாமல் தொல்லையளிக்கிற வில்லன் இறுதிக்காட்சியில் மனம்திருந்திவிடுவார். பிறகு, எஸ்.ஏ.ராஜ்குமாரின் பின்னணி இசை "லா..லாலா..லாலாலா" என்று கோரஸில் ஒலிப்பதோடு ’வணக்கம்’ போடுவார்கள். அப்படியொரு விக்கிரமன் படம் நேற்று ராம்லீலா மைதானத்தில் தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது. ஆனால், ’வணக்கம்’ போடுவதற்கு பதிலாக ’இடைவேளை’ கார்டு போட்டிருக்கிறார்கள் என்பதால் இன்னும் நிறைய கோரஸ் கேட்கவேண்டியிருக்கிறது. ஆகவே, கையில் பாப்கார்னை வைத்துக்கொண்டு ’வெற்றி வெற்றி’ என்று குதிப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா? என்ஜாய்! :-)

நான் எனது முந்தைய இடுகையில் எழுதியிருந்தது போல, பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து, அண்ணா வலியுறுத்திய மூன்று அம்சங்களை லோக்பால் சட்டத்தில் (ஜன் லோக்பால் அல்ல) அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒரு அவையின் உணர்வை (Sense of the House), வாக்களிப்பின்றி "தீர்மானமாக" ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைத்தான் "வெற்றி!வெற்றி!!" என்று அண்ணாவின் கோஷ்டியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். (பாவம், இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்துத் தோல்வியடைந்து கொண்டிருக்கையில், இருக்கிற பட்டாசுகளை நமுத்துப்போகவா விட முடியும்?)

அந்த மூன்று அம்சங்களில் சுலபமாய் எந்த சிக்கலுமின்றி அமலுக்குக் கொண்டுவரத்தக்கது, Citizen's Charter என்று கருதுகிறேன். ஒரு அரசு அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட அலுவலை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செய்யாவிட்டால், அதற்கான தண்டனை என்ன என்று அறிவிப்புப்பலகையாக வைப்பது. இதை ஏற்கனவே மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உ.பி. போன்ற மாநிலங்களில் சட்டங்களாகவே நிறைவேற்றி அமல்படுத்தியிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் சொன்னார்கள். ஆகவே, அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஆட்சேபிக்காதவரையில், இதை மத்திய அரசு சுலபமாக வரையறுத்து சட்டமாக்கி விடலாம். இதை மத்திய அரசு ஏன் இவ்வளவு பெரிதாகக் கருதி, நிலுவையில் வைத்திருக்கிறது என்பது புரியவில்லை.

லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களையும் கொண்டுவருகிற இரண்டாவது அம்சத்திலும் கூட, நடைமுறைச் சிக்கல்கள் தவிர பெரிய பிரச்சினை இருக்கும் என்று தோன்றவில்லை. மத்திய அரசு மனதுவைத்தால், இதற்கு உடனடித்தீர்வு காணலாம். இதுவும் ஒரு பிரச்சினை இல்லை.

நடைமுறைப்படுத்துவதில் மிகவும் கடினமானது என்றால், அது ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாவை அமைப்பதுதான். அதிகம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு சமீபகால நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும்.

  1. சென்ற வாரம்வரைக்கும் ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க. திடீரென்று அண்ணாவுக்கும், ஜன் லோக்பாலுக்கும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. அதே பா.ஜ.க, மத்திய அரசு குஜராத்தில் லோக் ஆயுக்தாவைத் ’திணித்திருப்பதாக’ ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்கள்.
  2. உ.பி முதலமைச்சர் மாயாவதி ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்ப்பதோடு, "முடிந்தால் அண்ணா ஹஜாரே தேர்தலில் நின்று ஜெயித்து ஜன் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரலாமே?" என்று நையாண்டி செய்திருக்கிறார்.

ஆக, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி அரசியல் காரணங்களால் இந்த லோக்-ஆயுக்தாவை இந்தியா முழுக்கவும் நிறுவுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். மீறி, மத்திய அரசு குஜராத்தைப் போல பிற மாநிலங்களில் திணித்து, அது நீதிமன்றத்துக்குப் போனால், தீர்ப்பு வருவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

இது தவிர, லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தினாலேயே ஊழல் ஒழிந்துவிடும் என்பது நகைப்புக்குரியது என்பதை அண்ணாவின் மாநிலமான மகாராஷ்டிரத்தையே உதாரணமாகக் காட்டி எனது "வாங்க, கூரையேறிக் கோழிபிடிப்போம்" இடுகையில் விளக்கியிருக்கிறேன்.

மேலும் பாராளுமன்றத்தில் மேற்கூறிய மூன்று அம்சங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிற விதம் அண்ணாவின் குழுவில் பலருக்கே முழுத்திருப்தியளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். "இது பாதி துரோகம்(part betrayal)" என்று மேதா பாட்கர் தெரிவித்திருக்கிறார். அண்ணா ஹஜாரேயை விடவும் மேதாத்தாய் பல போராட்டங்களையும், ஏன், அடக்குமுறைகளையுமே சந்தித்தவர் என்பதால் அவரது கணிப்பில் தொனிக்கிற அச்சத்தை அலட்சியப்படுத்துவதற்கில்லை.

உலகத்தையே இந்தியாவின் பக்கம் அண்ணாவின் உண்ணாவிரதம் ஈர்த்திருக்கிறது என்பதை அவரது மோசமான விமர்சகனும் ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

அதற்குக் காரணம் - ஒரு 74 வயது முதியவர் "சாகும்வரை உண்ணாவிரதம்," என்று ஆரம்பித்து, அதற்குப் பின்புலத்தில் ஊடகங்களும், Facebook, Twitter போன்ற சமூகத்தளங்களில் நடந்த பிரச்சாரமும், சில பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியும், எதிர்க்கட்சிகளின் தொண்டர்படையும்தான்.

இவர் சாகும்வரை உண்ணாவிரதம் அல்ல; காலவரையற்ற உண்ணாவிரதம் என்றெல்லாம் சொதப்ப ஆரம்பித்தபோது உலக ஊடகங்களும் விமர்சித்து எழுத ஆரம்பித்து விட்டன. இவ்வளவு ஏன், பாராளுமன்றத்தில் பிரதமர் கோரிக்கை விடுத்தபிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தபோது, உள்ளூர் ஊடகங்களுமே கேள்விகேட்கத் தொடங்கிவிட்டன. அண்ணாவின் பஜனைகோஷ்டியில் ஏற்பட்ட பிளவுகள் இப்போது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.

ஆக, "ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் சிறைநிரப்புப் போராட்டம்," என்று சூளுரைத்த அண்ணாவுக்கு, ஒரு A4 சைஸ் பேப்பரில் "கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம்," என்று டைப் அடித்துக் கொடுத்திருப்பதும், ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று அதை வெற்றியாக ஏற்றுக்கொண்டிருப்பதுமே இந்தப் போராட்டத்தின் குழப்பத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், நேற்று இறுதிக்கட்டத்தில் "ஓட்டெடுப்பு வேண்டும்," என்று இவர்கள் கேட்டதைக் கூட அரசு நிறைவேற்றவில்லை! கொள்கையளவில் ஒப்புக்கொண்டிருக்கிற மூன்று விஷயங்களுமே கூட, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நிலைக்குழுவிற்குப் பரிந்துரைத்தவைதான்.

சுருக்கமாகச் சொன்னால், சமச்சீர் கல்வி தீர்ப்பு குறித்து தி.மு.க வெற்றிவிழா நடத்துவதற்கும், "TOTAL VICTORY FOR ANNA" என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா கொண்டாடுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: The proof of the pudding is in the eating!

பாராளுமன்ற நிலைக்குழு(Standing Committee) வுக்கு லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற 60+30+30 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இறுதிவடிவம் பெற்ற லோக்பால் சட்டம், அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, சட்டமாக இயற்றப்பட்டு அமல்படுத்தப்படும் வரையிலும் இது யாருக்கும் வெற்றி என்று கூத்தாடுவது - சுத்த சின்னப்பிள்ளைத்தனம்!

கிரிக்கெட்டில் இந்தியா ’டாஸ்’ வென்றதும் ஆட்டத்தையே வென்றுவிட்டதுபோல ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், புத்திசாலிகள் மேட்ச் முடியும்வரை காத்துக்கொண்டிருப்பார்கள்! :-)

மக்களுக்கு ஊழல் குறித்த கோபம் வந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் மூன்று மிகப்பெரிய ஊழல்கள். 2G, காமன்வெல்த் ஊழல் மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல். அந்த ஆதர்ஷ் ஊழலில் தொடர்புபடுத்தப்பட்டு, பதவியிழந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கிடமிருந்து பிரதமரின் கடிதத்தைப் பெற்று, ’போராட்டம் முடிந்தது,’ என்று அண்ணா ஹஜாரே அறிவித்தது தான் உச்சகட்ட நகைச்சுவை! இதுக்குப் பேருதான் கொள்கைப்பிடிப்பு போலிருக்குது!

என்னைப் பொறுத்தவரையில், லோக்பால் சட்டம் ஊழலை ஒழிக்க முடியாது என்று நம்புகிற அளவுக்கு - இது அண்ணா ஹஜாரேயின் வெற்றியில்லை என்பதையும் உறுதியாக நம்புகிறேன். காரணம், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

35 comments:

  1. நல்லதுக்கு எங்கேதான் போறது ??

    ReplyDelete
  2. வெற்றி... வெற்றி...... வெற்றி.. ஊழலே இல்லாத இந்தியாவை பார்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்........!

    ReplyDelete
  3. எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை வைத்துப் போராடுவார்கள். வேலை நிறுத்தமும் நடக்கும். அதன் விளைவாக சிலரை வீட்டுக்கு அனுப்புவார்கள். பிறகு போராட்டம் அவர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொள்ள நடக்கும். சில நாட்களில் அவர்களுக்கு வேலை மறுபடியும் கிடைக்கும். தொழிற்சங்கங்களும் தொழிலாளிகளும் வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

    ReplyDelete
  4. நீங்க சொல்வது சரி. இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது என்பதே உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டுமென்றால் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தால் தான் இவங்க லோக் ஆயுக்தாவை நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.

    ReplyDelete
  5. ஆயிரம் மாற்று கருத்துக்கள் இருந்தாலும் இப்போதுள்ள உலக சூழலில் அஹிம்சை போராட்டத்தின் மூலமாக உலக கவனத்தை தம் பக்கம் திருப்பிய அன்னா பாராட்டுக்குரியவர்தான்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்.

    சகோ.சேட்டை...
    மீண்டும் ஒரு நல்ல இடுகை. நன்றி.

    // இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா? என்ஜாய்! :-) //

    ---yes... let them enjoy.

    //கிரிக்கெட்டில் இந்தியா ’டாஸ்’ வென்றதும் ஆட்டத்தையே வென்றுவிட்டதுபோல ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், புத்திசாலிகள் மேட்ச் முடியும்வரை காத்துக்கொண்டிருப்பார்கள்! :-) //

    ---ஹா...ஹா...ஹா...

    ஆனால்,
    இங்கே... உலகக்கோப்பை வெல்வதே லட்சியம் என்று உண்ணாவிரதம் இருந்தோர்,
    "டாஸ் போட
    இந்த நாணயம் வேண்டாம்... அந்த நாணயத்துல போட்டாக வேண்டும்" என்ற சிம்பிள் கண்டிஷனை எதிர் டீம் ஒத்துக்கொண்டதற்கே... ஏதோ டாசில் ஜெயித்து அந்த ஒரு லீக் மேட்சையும் ஜெயித்து உலகக்கோப்பையே கையில் கிடைத்த மாதிரி கூத்தாடும் இவங்க சேட்டை கொஞ்சம் ஓவர்தான் சகோ.சேட்டைக்காரன்..!

    ReplyDelete
  7. /கிரிக்கெட்டில் இந்தியா ’டாஸ்’ வென்றதும் ஆட்டத்தையே வென்றுவிட்டதுபோல ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், புத்திசாலிகள் மேட்ச் முடியும்வரை காத்துக்கொண்டிருப்பார்கள்! :-)/
    We are waiting.wait and see
    Nice thalai

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரம், நலமா?

    ReplyDelete
  9. ஊழலை ஒழிப்பதற்கு லோக்பால் உதவி செய்யாது என்பது பற்றிய விளக்கத்திற்கும், ஹசாரேயின் போராட்டதின் இன்றைய நிலையினையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ஊழலற்ற பாரதம் உருவாக வேண்டும் என்பது தான் என் ஆசையும்,

    நல்லதே நடக்கும் என்று நம்புறேன்.

    ReplyDelete
  10. //"ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் சிறைநிரப்புப் போராட்டம்," என்று சூளுரைத்த அண்ணாவுக்கு, ஒரு A4 சைஸ் பேப்பரில் "கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம்," என்று டைப் அடித்துக் கொடுத்திருப்பதும், ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று அதை வெற்றியாக ஏற்றுக்கொண்டிருப்பதுமே இந்தப் போராட்டத்தின் குழப்பத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், நேற்று இறுதிக்கட்டத்தில் "ஓட்டெடுப்பு வேண்டும்," என்று இவர்கள் கேட்டதைக் கூட அரசு நிறைவேற்றவில்லை!//

    இவங்க இரண்டு பேரும் அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க....

    ReplyDelete
  11. நல்ல பதிவு....
    இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
    ரெவெரி...

    ReplyDelete
  12. // பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா? என்ஜாய்! :-) //

    சூப்பர்...

    ReplyDelete
  13. இன்றைய என்னுடைய பதிவில் ஜன் லோக்பால் பற்றிய ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறிப்பிட்டுள்ளேன்... படிக்கவும்...

    ReplyDelete
  14. ஹா ஹா என்னத்த சொல்ல..

    நல்ல பதிவு மிஸ்டர் சேட்டை

    ReplyDelete
  15. ஆனால் வெற்றி என்பது போல் ஒரு மாயை கிளப்பி விடுவதில் அவர்களூக்கு வெற்றியே!

    ReplyDelete
  16. ஆனா ஜெயிச்சா மாதிரியே ஃபிலிம் காட்டுவதில் அவர்களூக்கு வெற்றியே

    ReplyDelete
  17. நண்பரே நல்ல இடுகை

    ஆனா பாருங்கே முழு இந்தியாவும் அவர்கள் பின்னால் நிற்பது போல் நம்ப வைக்க நம்ம ஊடகங்களும் மேட்டுக்குடி வார்க்கத்தினரும் செய்த முயற்சியை பாராட்டித்தான் ஆக வேண்டும் எவ்வளவு உழைப்பு உழைப்பு )))))

    ReplyDelete
  18. //NAAI-NAKKS said...

    நல்லதுக்கு எங்கேதான் போறது ??//

    தீதும் நன்றும் பிறர்தர வாரா! :-)
    நன்றி!

    ReplyDelete
  19. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வெற்றி... வெற்றி...... வெற்றி.. ஊழலே இல்லாத இந்தியாவை பார்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்........!//

    பானா ராவன்னா, எனக்கு முன்னாடியே பார்த்திட்டீங்களா? பதிமூணு நாளிலே இந்தியாவை வல்லரசாக்கிட்டாங்களே! :-)))
    மிக்க நன்றி!

    ReplyDelete
  20. //G.M Balasubramaniam said...

    எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை வைத்துப் போராடுவார்கள். வேலை நிறுத்தமும் நடக்கும். அதன் விளைவாக சிலரை வீட்டுக்கு அனுப்புவார்கள். பிறகு போராட்டம் அவர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொள்ள நடக்கும். சில நாட்களில் அவர்களுக்கு வேலை மறுபடியும் கிடைக்கும். தொழிற்சங்கங்களும் தொழிலாளிகளும் வெற்றியைக் கொண்டாடுவார்கள்.//

    பிரமாதம்! அன்றாடம் காணும் எத்தனையோ அழுகுண்ணி ஆட்டங்களில் ஒன்றுடன், ராம்லீலாவில் நடந்த மிகப்பெரிய அழுகுண்ணி ஆட்டத்தை நாசூக்காக ஒப்பிட்டிருக்கிறீர்கள் ஐயா! மிக்க நன்றி!

    ReplyDelete
  21. //காந்தி பனங்கூர் said...

    நீங்க சொல்வது சரி. இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது என்பதே உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டுமென்றால் ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தால் தான் இவங்க லோக் ஆயுக்தாவை நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.//

    ஆம், இந்தியா முழுவதிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது ஓரு புறம்; இருக்கிற மாநிலங்களையும் அது விரைவில் கோட்டை விட்டு விடும் போலிருக்கிறதே! அத்தைக்கு எப்போ மீசை முளைத்து, சித்தப்பா ஆவதோ?

    மிக்க நன்றி!

    ReplyDelete
  22. //சிநேகிதன் அக்பர் said...

    ஆயிரம் மாற்று கருத்துக்கள் இருந்தாலும் இப்போதுள்ள உலக சூழலில் அஹிம்சை போராட்டத்தின் மூலமாக உலக கவனத்தை தம் பக்கம் திருப்பிய அன்னா பாராட்டுக்குரியவர்தான்.//

    அஹிம்சாமூர்த்தி என்று கருதப்படுகிற மகாத்மா ஒரு முறை கூட உண்ணாவிரதத்தால் பிரிட்டிஷ் அரசைக்கூட மிரட்டியதில்லை அண்ணே!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  23. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

    அஸ்ஸலாமு அலைக்கும்.//

    வாலைக்கும் ஸலாம்...!

    //---yes... let them enjoy.//

    :-)

    //--ஹா...ஹா...ஹா...ஆனால், இங்கே... உலகக்கோப்பை வெல்வதே லட்சியம் என்று உண்ணாவிரதம் இருந்தோர், "டாஸ் போட இந்த நாணயம் வேண்டாம்... அந்த நாணயத்துல போட்டாக வேண்டும்" என்ற சிம்பிள் கண்டிஷனை எதிர் டீம் ஒத்துக்கொண்டதற்கே... ஏதோ டாசில் ஜெயித்து அந்த ஒரு லீக் மேட்சையும் ஜெயித்து உலகக்கோப்பையே கையில் கிடைத்த மாதிரி கூத்தாடும் இவங்க சேட்டை கொஞ்சம் ஓவர்தான் சகோ.சேட்டைக்காரன்..!//

    இறுதியில் அவர்கள் கேட்ட நாணயமும் கிடைக்கவில்லை; டாஸும் கூட உண்மையில் ஜெயிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இப்போதைக்கு இவர்களது ஆயத்தங்களையெல்லாம் தாண்டி, இவ்ர்கள் ஆட்டத்திலேயே இல்லையோ என்றுகூட யோசிக்க வேண்டியிருக்கிறது.

    மிக்க நன்றி சகோதரரே! இனிய ரமலான் வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. //சார்வாகன் said...

    We are waiting.wait and see Nice thalai//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  25. //நிரூபன் said...

    வணக்கம் சகோதரம், நலமா?//

    வாங்க சகோ! நலமே! :-)

    // ஊழலை ஒழிப்பதற்கு லோக்பால் உதவி செய்யாது என்பது பற்றிய விளக்கத்திற்கும், ஹசாரேயின் போராட்டதின் இன்றைய நிலையினையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீங்க.//

    ஊழலை ஒழிக்க உதவும் பல கருவிகளில் லோக்பால் ஒன்று என்பதே உண்மை. ஆனால், அப்படியொரு சட்டத்தை இயற்றும் பொறுப்பை தாம் எடுத்து, முன்னுக்கு முரணாகப் பேசிக் குழப்பி, இப்போது ஆரம்பித்த இடத்துக்கே போய்விட்டபிறகும் ’வெற்றி. வெற்றி,’ என்று குதிப்பவர்களை என்ன சொல்ல?

    //ஊழலற்ற பாரதம் உருவாக வேண்டும் என்பது தான் என் ஆசையும், நல்லதே நடக்கும் என்று நம்புறேன்.//

    உருவாகும் சகோ! நிச்சயம் உருவாகும்!
    மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  26. //அருள் said...

    அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்//

    ம், பார்த்தேன்! வாசித்தேன்! இது போல பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  27. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

    Super artical//

    ReplyDelete
  28. //கடம்பவன குயில் said...

    இவங்க இரண்டு பேரும் அழுகுணி ஆட்டம் ஆடுறாங்க....//

    அதே! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பசப்புகிறார்கள்.
    மிக்க நன்றி!

    ReplyDelete
  29. //ரெவெரி said...

    நல்ல பதிவு....இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...//

    மிக்க நன்றி! பிள்ளையார் வர இன்னும் ரெண்டு மூணு நாளிருக்கே? :-)

    ReplyDelete
  30. //Philosophy Prabhakaran said...

    சூப்பர்... இன்றைய என்னுடைய பதிவில் ஜன் லோக்பால் பற்றிய ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறிப்பிட்டுள்ளேன்... படிக்கவும்...//

    படித்தேன்! இப்படித்தான் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்தே, அப்படி எழுதினேன்! மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. //Riyas said...

    ஹா ஹா என்னத்த சொல்ல..நல்ல பதிவு மிஸ்டர் சேட்டை//

    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  32. //சி.பி.செந்தில்குமார் said...

    ஆனால் வெற்றி என்பது போல் ஒரு மாயை கிளப்பி விடுவதில் அவர்களூக்கு வெற்றியே! ஆனா ஜெயிச்சா மாதிரியே ஃபிலிம் காட்டுவதில் அவர்களூக்கு வெற்றியே//

    பூஜையோடு நின்னுபோன படத்துக்கு வெள்ளிவிழா-னு போஸ்டர் அடிச்சது மாதிரியில்லே தல...?

    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  33. //ஹைதர் அலி said...

    நண்பரே நல்ல இடுகை//

    மிக்க நன்றி நண்பரே!

    //ஆனா பாருங்கே முழு இந்தியாவும் அவர்கள் பின்னால் நிற்பது போல் நம்ப வைக்க நம்ம ஊடகங்களும் மேட்டுக்குடி வார்க்கத்தினரும் செய்த முயற்சியை பாராட்டித்தான் ஆக வேண்டும் எவ்வளவு உழைப்பு உழைப்பு )))))//

    ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது, வரைவுக்குழுவில் இவர்கள் ஐந்து பேருக்கும் இடம் கொடுத்ததையே "INDIA WINS" என்று தலைப்பிட்டுக் கொண்டாடிய மவராசன்கள், இதைக் கொண்டாட மாட்டார்களா? :-))))))

    உண்ணாவிரதம் என்ற பெயரில் சுத்தப்பித்தலாட்டம் நடந்திருக்கிறது தில்லியில்!

    ReplyDelete
  34. இந்த வார துக்ளக் தலையங்கததையும் தங்களின் இபதிவையும் அன்னாவை கண்மூடித்தனமாக் ஆதரிக்கும் கூட்டத்திடம் காட்டவேண்டும்!
    அன்னாவை விமர்சித்தாலே ஏதோ தேசத்துரோகி போல் பார்க்கின்றனர்
    தங்களின் வாதம் அருமை!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!