Thursday, August 25, 2011

ஆட்டம் முடிஞ்சுது டோய்!

MASSIVE VICTORY FOR ANNA - "டைம்ஸ் நௌ" தொலைக்காட்சியில் அமர்க்களமாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

என்னவாம்?

ஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்றுக்கொண்டு விட்டதா என்ன?


ஊஹும்!

மறைந்த ராஜ்கபூரைப் பற்றி பெரும்பாலானோர்கள் அறிந்திருப்பீர்கள். பல பெரும் வெற்றிப்படங்களை அளித்திருந்தபோதிலும், அவரது லட்சியப்படமாகக் கருதப்பட்ட "மேரா நாம் ஜோக்கர்(என் பெயர் கோமாளி)," என்ற படம் படுதோல்வியடைந்ததாம். அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது படத்தின் நீளம். படத்தில் இரண்டு இடைவேளைகளாம்; தாங்குமா?

ஏறக்குறைய அதே போல இன்னொரு "மேரா நாம் ஜோக்கர்," தில்லியின் ராம்லீலா மைதானத்தில் தோல்வியைத் தழுவும் தறுவாயில் இருக்கிறது. ஊடகங்களின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு, கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள், உள்நாட்டு தொண்டு (?) நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரம்மாண்டமான தயாரிப்பு, முக்கிய எதிர்க்கட்சியின் விறுவிறுப்பான இயக்கம், நெஞ்சை உருக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள், பரபரப்பூட்டும் சண்டைக்காட்சிகள், குளிர்ச்சியான குத்து டான்ஸ், வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை - ஆகிய அத்தனை சிறப்பான அம்சங்கள் இருந்தும், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாயிருந்தும், அண்ணா ஹஜாரேயின் ’சாப்பிட மாட்டேன் போ,’ திரைப்படம் விரைவில் அரங்கத்தை விட்டுத் தூக்கப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மொக்கைப்படங்களையும் கூட "வசூலில் சாதனை," என்று நம்மூரில் போஸ்டர் அடிப்பதுபோல, அண்ணா ஹஜாரேயின் இந்த உண்ணாவிரதத்தையும் "வெற்றி!" என்று சிலர் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. பாவம், அவர்களின் அந்த அற்பசந்தோஷத்தையும் கெடுப்பானேன்?

ஆகஸ்ட் 16 தொடங்கி, (அனேகமாக) இன்றோ நாளையோ அதிகாலையிலோ முடியப்போகிற அண்ணா ஹஜாரேயின் உண்ணாவிரதம் சாதித்தது என்ன? ஜன் லோக்பால் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்போம் என்று பிரதமர் வாக்குறுதியளித்திருக்கிறார். (வெறும் விவாதம்தான்; ஓட்டெடுப்பு இல்லை). எனவே......

  • ஜன் லோக்பால் மசோதாவை இந்தப் பாராளுமன்றத் தொடரில் அரசு நிறைவேற்றப்போவதில்லை.

  • அடுத்த பாராளுமன்றத்தொடரிலோ அல்லது இதற்கென்று தனியாக ஒரு தொடரை அழைத்தோ, அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.

  • அண்ணா ஹஜாரேயின் வரைவை மட்டுமின்றி, அருணா ராய் தயாரித்திருக்கிற மசோதா மற்றும் அரசின் மசோதா ஆகியவற்றுடன்தான் ஜன் லோக்பால் மசோதாவும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

  • அண்ணா ஹஜாரே வலியுறுத்துகிற நிபந்தனைகளையெல்லாம் பாராளுமன்ற விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் விவாதிக்கப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அண்ணாவுக்கு மறைமுகமாக ஒரு ஆப்பு வைத்தாயிற்று! ’நீங்கள் என்னதான் உச்சாணிக்கொம்பிலிருந்து கூப்பாடு போட்டாலும் எந்தவொரு சட்டத்தையும் பாராளுமன்றம் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதை மைதானங்களில் கூடுகிற கூட்டங்களால் வற்புறுத்த முடியாது,’ என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சபாஷ்!

இதையும் மீறி ’MASSIVE VICTORY FOR ANNA' என்று ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் தலைப்புச்செய்தி போடுகிறார்களென்றால், அது பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் அண்ணா ஹஜாரேயைப் புகழ்ந்து பேசியதற்காகவோ அல்லது மணீஷ் திவாரி அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்டதற்காகவோ இருக்கலாமே ஒழிய, தனது பத்துநாள் உண்ணாவிரதம் வெற்றியென்று சத்தியமாக அண்ணாவாலேயே பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. ஆனால், 74 வயதான அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தை நிறுத்தினால், அது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் என்பதில் மட்டும் எவ்வித சந்தேகமில்லை.

கடந்த 24 மணி நேரங்களில் நடந்தேறிய சம்பவங்களைக் கோர்வையாக கவனித்தால், இரு தரப்பிலுமே அவரவர் பிடிவாதங்களைத் தளர்த்தியிருப்பது புலப்படுகிறது. அத்துடன் மிகத் தெளிவாகப் புலப்படுவது இன்னொன்று - அண்ணா ஹஜாரேயின் அணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனது ’பல்பு வாங்கலியோ பல்பு,’ இடுகையிலேயே அண்ணாவின் அணியில் விரிசலின் அறிகுறிகள் தென்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அந்த விரிசலை உறுதிபடுத்துவது போன்ற நிகழ்வுகள் இரண்டொரு நாட்களில் அரங்கேறியிருப்பதை சற்றே பின்னோக்கிப் பார்ப்போமாக!

"Anna is street-smart; he knows when and how to stop,' என்று நேற்று சி.என்.என்-ஐ.பி.என்னில் ராஜ்தீப் சர்தேசாய் சொன்னதை அவர் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.

சல்மான் குர்ஷீத், பிரணாப் முகர்ஜீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை முடிந்ததும், ராம்லீலா மைதானத்துக்குத் திரும்பிய அர்விந்த் கேஜ்ரிவால்,"அண்ணாவுக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும்," என்று முழங்கியபோதே அண்ணா ஹஜாரேவுக்குப் பொறிதட்டியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (அர்விந்த கேஜ்ரிவால் குறித்து இன்னொரு இடுகை விரைவில் எழுத வேண்டும்; பார்க்கலாம்.)

அதைத் தொடர்ந்து, ஊடகங்களில் அண்ணா அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. அத்துடன், கிரண் பேடி ட்விட்டரில் பரப்பி வரும் செய்திகளால் அண்ணா சங்கடத்துக்குள்ளாகியிருப்பதாகவும், அரசுடன் சமரசமாகப் போகவிடாமல் கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் இருவரும் இடையூறாக இருப்பதாகவும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் தகவல்கள் வெளியாகின.

அண்ணாவின் விருப்பப்படியே பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வருவதற்கு அரசும், அரசின் விருப்பப்படி நீதித்துறையை லோக்பால் வரையறையிலிருந்து விலக்குவதற்கு அண்ணாவின் குழுவும் ஒப்புக்கொண்டு விட்ட சூழலில், அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் பேச்சுக்கள் நடுநிலையாளர்களுக்கும், சில செய்தித்தொலைக்காட்சிகளுக்கும் எரிச்சலூட்டத்தொடங்கின. "டைம்ஸ் நௌ" தவிர அனைத்துத் தொலைக்காட்சிகளுமே அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகிய இருவரின் அணுகுமுறையை குறைசொல்ல ஆரம்பித்தனர். (பென்னெட் அண்டு கோல்மேன் கம்பனியின் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு ஏன் இந்த அற்பத்தனம் என்று புரியவில்லை.)

’டெக்கான் க்ரோனிகிள்’ செய்தித்தாள் அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் குறிக்கோள்கள் குறித்து சந்தேகங்களை எழுப்பி ஒரு இடுகையே எழுதியது.

"உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் அண்ணாவின் உயிரைக்குறித்து அரசு கவலைப்படாது," என்று பிரணாப் முகர்ஜீ சொன்னதாக, கிரண் பேடி புரளி கிளப்பியதையும், என்.டி.டிவி, சி.என்.என்.ஐ.பி.என் போன்ற தொலைக்காட்சிகள் வெளிப்படுத்தின. ஆக, தன்னை வைத்து, கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் புரியாத ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை, பல அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிற அண்ணா ஹஜாரே புரிந்து கொண்டார். அதன் விளைவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாயிருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக் தூதுவராக வந்தபோதும், தயங்காமல் அவருடன் பேசியிருக்கிறார் - கேஜ்ரிவால், கிரண் பேடி துணையின்றி!

தனது சகாக்களின் மீது அண்ணாவுக்கு சந்தேகம் வந்திருப்பதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் சாமர்த்தியமாக அடுத்த காயை நகர்த்தியது. சர்வகட்சித்தலைவர்களும் அண்ணாவை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரினர். அவ்வளவு எளிதாக கைவிட்டு விட்டால் அசடு வழிய நேரிடுமே என்று அண்ணா மீண்டும் சில நிபந்தனைகளை விதித்தார். "அவ்வளவுதானே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவருவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம்," என்று அரசு தரப்பில் இருந்து பதில் பறந்தது.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, "தீர்மானம் கைக்கு வந்ததும், அண்ணா உண்ணாவிரதத்தைக் கைவிடுவார்," என்று கிரண் பேடி அறிவித்திருக்கிறார். ஆக, வீரதீரசூரபராக்கிரமங்களெல்லாம் வெத்துவேட்டாகி, "அடைந்தால் ஜன்லோக்பால்; இல்லையேல் கள்ளிப்பால்," என்று கொக்கரித்ததெல்லாம் போய், ’என்னமோ கொஞ்சம் பார்த்துப் போட்டுக் கொடுங்கப்பா," என்று கேட்கிற நிலைமைக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வந்தாயிற்று!

இதை "அண்ணாவுக்குக் கிடைத்த வெற்றி,’ என்று யாராவது கொண்டாடினால், அதையும் இன்னொரு கேலிக்கூத்தாகப் பார்த்து, ரசித்து, சிரித்து விட்டுப்போகலாம். ஏனென்றால், நான் முந்தைய இடுகைகளில் எழுதியது போல, அண்ணா ஹஜாரேயின் அடுத்த நாடகம் பாராளுமன்றக் குளிர்காலத் தொடரின்போதோ அதற்கு முன்னமோ கூட மீண்டும் அரங்கேறலாம். அப்படி அரங்கேறினால், காங்கிரஸ் இப்போது இருந்ததை விடவும் சற்று புத்திசாலித்தனமாக இருக்கும் என்பதோடு, அண்ணா ஹஜாரேயும் கேஜ்ரிவால், கிரண் பேடி போன்றவர்களிடம் முன்னைவிட ஜாக்கிரதையாக இருப்பார் என்பது உறுதி.

இனி?

அண்ணாவின் உண்ணாவிரதம் நிறைவுற்ற பிறகும், கேஜ்ரிவால் & கம்பனி போராட்டத்தைத் தொடர்ந்தாலும் தொடரலாம். ஏற்கனவே ’சலோ தில்லி’ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி ஏதாவது நடந்தால், எனக்கு ஜாலி! அண்ணாவின் உண்ணாவிரதத்தால், தில்லியில் சமோசா, பேல்பூரி, தேசியக்கொடி, காந்தித்தொப்பி, கலர் பலூன் போன்ற வியாபாரங்கள் கொழிக்கிறதாம். காசா பணமா, நானும் இன்னும் சில இடுகைகளை எழுதிவிட்டுப்போகிறேன். ஆத்துலே போற தண்ணியை ஐயாகுடி அம்மாகுடி!

என்ன, இப்போதைக்கு யாருக்கு வெற்றி என்று சொல்வது கடினம். யாருக்குத் தோல்வி என்று கேட்டால் - இவர்களின் பேச்சை நம்பி நாடெங்கும் கொடிபிடித்துப் போராடிய கொள்கைக் கொழுந்துகளுக்கு மட்டும்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

இவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, "நம்மளை வச்சுக் காமெடி பண்ணிட்டாங்கப்பா," என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சும் என்பது சத்தியம்.

24 comments:

  1. அருமை நண்பரே,
    /அண்ணாவுக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும்," என்று முழங்கியபோதே அண்ணா ஹஜாரேவுக்குப் பொறிதட்டியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது./
    அரசியலில் இதெல்லாம் சக்ஜம்தானே!!!!!!!!!!.
    கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தின் கள்ளக்குடி இரயில் மறியல் பொராட்டம் பற்றிய குறிப்புகள் ஞாப்கத்திற்கு வருகின்றன்.ஹா ஹா ஹா

    /என்ன, இப்போதைக்கு யாருக்கு வெற்றி என்று சொல்வது கடினம். யாருக்குத் தோல்வி என்று கேட்டால் - இவர்களின் பேச்சை நம்பி நாடெங்கும் கொடிபிடித்துப் போராடிய கொள்கை மறவர்களுக்கு மட்டும்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம். /

    வெற்றி என்பதை எப்படி வரையறுக்கிறார்களோ அப்ப்டி வைத்தால் வெற்றியே!!!!!!!!.

    ஆக சில தெளிவான பதிவுகள் எழுத உதவியதும் இப்போராட்டத்தின் வெற்றியே!!!!!!!.
    இம்மாதிரி இன்னும் சில போராட்டங்கள் வந்தால் அனைவரையும் ஒதுங்கி செல்ல வைத்து விட்ட அரசுக்கும் வெற்றி.

    வெற்றி அனைவருக்கும் வெற்றி!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. எப்படியோ, ஒரு உண்ணாவிரதம் 10 நாட்கள் கழித்தாவது முடிந்தால் சரி; திருப்பி அடுத்த டர்ன் வராமயா போகப் போவுது?!!

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.சேட்டை,

    //"நம்மளை வச்சுக் காமெடி பண்ணிட்டாங்கப்பா,"//

    "நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்..!" ---நம்மைப்போன்றோர்..!

    சம்பவங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு நல்ல படிப்பினைகள்.(மெய்ப்பொருள் காண்பது அறிவு..!)

    ஊழலை ஒழிக்க நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில்தான், அப்பப்பா... எத்தனை உள்ளடி ஊழல்கள்..!!

    மீண்டும் நல்லதொரு பதிவு அளித்தமைக்கு நன்றி சகோ.சேட்டை.

    ReplyDelete
  4. அடுத்த பதிவில் வந்து கமென்ட்டுறேன். இப்போ ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன். இந்த விஷயத்தில் கருத்து சொல்லும் அளவுக்கு, எனக்கு தெரியல.

    ReplyDelete
  5. உங்களிடம் கேட்டு வாங்கிய இணைப்புகளையே இன்னமும் படிக்கவில்லை... அதை வார இறுதியில் படித்துவிட்டு மீண்டும் இதை படித்தால் தான் புரியும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  6. //இவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, "நம்மளை வச்சுக் காமெடி பண்ணிட்டாங்கப்பா," என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சும் என்பது சத்தியம். //

    10 நாட்களாக நல்ல பொழுதுபோக்குப்படம் ஓடிட்டு இருந்தது. அதுவும் முடிந்து போச்சா?? முடிவில்லாமல் முடிந்துபோச்சு. ஆனால் எதிர்பார்த்த முடிவுதான். டிராவில் கேம் ஓவரா?

    சேட்டக்காரரா இருந்தாலும் இம்புட்டு தைரியமா உண்மை விளம்பியா இருக்கக்கூடாது.

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  8. அருமையான அலசல்

    ReplyDelete
  9. அன்னா ஹசாரேவை பலிகடா ஆக்காமல் இருந்தால் சரி. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

    ReplyDelete
  10. மிக நல்ல இடுகை சேட்டை தோழர். நானும் என் பாணியில் ஒன்றைப் போட்டு விட வேண்டும்

    ReplyDelete
  11. நீண்ட நாளைக்கு பிறகு சந்திக்கிறேன் சேட்டை.
    நல்ல விழிப்புணர்வு இடுகை.

    ReplyDelete
  12. சச்சின் பேட்டிங் செய்யும் போது இதோ இந்த ஓவரில் அவுட்,அடுத்த ஓவரில் அவுட் என்று சொல்லி எப்படியும் 96,98ல அவுட் செய்து விட்டு நண்பர்களிடம் வாங்கி கட்டிக்கொள்வேன்.உங்க பதிவும் அதையே நினைவு ப்டுத்துகிறது:)

    முறுக்கு சுத்துற மெஷின்ல எத்தனை ஓட்டை என்று கணக்குப் போடாமல் முறுக்கு மட்டுமே சுவைப்பவர்களே அதிகம்.அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் இந்திய மக்கள் அளவிலும்,உலகளாவிய பத்திரிகைகள் அளவிலும் இந்தியா குறித்தான Impact ஐ கொண்டு வந்திருக்கிறதென்பது மட்டுமே இந்த போராட்டத்தின் வெற்றி என்பது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக பாராளுமன்றம் வரையில் பேசப்பட வைத்து சட்ட வரையறைக்குள்ளும் ஜன்லோக்பால் சட்டம் வெற்றிக்கான பாதைக்குள் நுழைந்து விட்டது.இந்த சட்டம் அரசியல் ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் எப்படி செயல்படப் போகிறது என்பதை எதிர்காலம் சொல்லி விடும்.

    அடுத்த தடவை அரசுப் பணி நிமித்தமாக யாராவது உங்களிடம் கையை நீட்டினால் முறைப்பதற்கான துணிவை அன்னா ஹசாரே குழுவின் மக்கள் போராட்டம் தருமெனற நேர் பார்வையை முன் வைக்கிறேன்.நீங்க பலன் அடைகிறீர்களோ இல்லையோ(தமிழகம்) வடநாட்டுக்காரர்கள் அறுவடை செய்து விடுவார்கள் தகவல் அறியும் சட்டத்தின் பலன்கள் போல.

    அன்னா ஹசாரே வந்தே மாதரம் ன்னு சத்தம் போட்டுகிட்டிருக்கிறார்.நீங்க அவரோட குரலைக் கேட்டா பெருசு உண்மையிலெயே சாப்பிடாமத்தான் இருந்ததான்னு கேள்வியை கேட்டாலும் கேப்பீங்க என்பதால் எஸ்கேப்:)

    ReplyDelete
  13. கூட்டத்தோட கோவிந்தா போடாம ஒதுங்கி நின்னு நடக்கற ட்ராமா எல்லாம் வேடிக்கை
    பார்க்க உங்க பதிவு விஷயங்கள் ரொம்ப உதவியா இருந்தது... Thanks for sharing off the track news.. ஆனா ஒண்ணு... அன்னா ஹஜாரே பத்தி நம்ம ஜனங்க கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தாலாம்னு நினைச்சு கொஞ்சம் ஊடக
    செய்திகளுக்கு மாத்தி பேசினா ஏதோ பெரிய வில்லன் மாதிரியும், ஊழலுக்கு துணை
    போறாப்பலையும் என்னை பார்க்கறாங்க ஹூம்..
    வாழ்க ஜனநாயகம்! வளர்க ஊடகங்களின் சேவை!..

    ReplyDelete
  14. //சார்வாகன் said...

    அரசியலில் இதெல்லாம் சக்ஜம்தானே!!!!!!!!!!.கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தின் கள்ளக்குடி இரயில் மறியல் பொராட்டம் பற்றிய குறிப்புகள் ஞாப்கத்திற்கு வருகின்றன்.ஹா ஹா ஹா//

    ஆஹா, எனது அடுத்த இடுகையில் அதையும் இதையும் ஒப்பிட்டு எழுதலாம் என்று எண்ணியிருந்தேனே? பரவாயில்லை, நம் நாட்டில் கேலிக்கூத்துகளுக்கு வேறு உதாரணமா இல்லை? :-)

    //வெற்றி என்பதை எப்படி வரையறுக்கிறார்களோ அப்ப்டி வைத்தால் வெற்றியே!!!!!!!!.//

    எல்லாரும் குழம்பிப் போய் ’அனேகமாக நமக்கும் வெற்றிதான் போலிருக்கிறது,’ என்று கைதூக்கிக் கொண்டிருக்கிறார்கள். :-)

    //ஆக சில தெளிவான பதிவுகள் எழுத உதவியதும் இப்போராட்டத்தின் வெற்றியே!!!!!!!.//

    ஆமாம், நான் பாட்டுக்கு மொக்கை போட்டுக்கொண்டிருந்தேன். இப்போது அரசியல் எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டேனே! :-))

    //இம்மாதிரி இன்னும் சில போராட்டங்கள் வந்தால் அனைவரையும் ஒதுங்கி செல்ல வைத்து விட்ட அரசுக்கும் வெற்றி. வெற்றி அனைவருக்கும் வெற்றி!!!!!!!!!!!!!!!!//

    சூப்பர்! :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  15. //middleclassmadhavi said...

    எப்படியோ, ஒரு உண்ணாவிரதம் 10 நாட்கள் கழித்தாவது முடிந்தால் சரி; திருப்பி அடுத்த டர்ன் வராமயா போகப் போவுது?!!//

    அதே! அதிகபட்சம் இன்னும் ஆறுமாதங்கள்; குறைந்தபட்சம் ஒரு மாதமாகவும் இருக்கலாம். :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  16. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

    ஸலாம் சகோ.சேட்டை,
    ஸலாம் சகோதரரே!

    //"நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்..!" ---நம்மைப்போன்றோர்..!//

    இல்லேண்ணேன். விரைவில் நாமும் திரும்ப எழுத வேண்டி வரலாம். :-)

    //சம்பவங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு நல்ல படிப்பினைகள்.(மெய்ப்பொருள் காண்பது அறிவு..!)//

    அப்படியெல்லாம் புரிதல் ஏற்படும் என்று நம்பத்தேவையில்லை. :-)
    என்னவோ கிரிக்கெட்டில் ஜெயித்தது போல கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் பாவம்.

    //ஊழலை ஒழிக்க நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில்தான், அப்பப்பா... எத்தனை உள்ளடி ஊழல்கள்..!!//

    அதைத்தானே அவங்க ’முள்ளை முள்ளால் எடுப்பது’ என்று சொல்கிறார்கள்..? :-))

    //மீண்டும் நல்லதொரு பதிவு அளித்தமைக்கு நன்றி சகோ.சேட்டை.//

    உங்களது தொடரும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
  17. //Chitra said...

    அடுத்த பதிவில் வந்து கமென்ட்டுறேன். இப்போ ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன். இந்த விஷயத்தில் கருத்து சொல்லும் அளவுக்கு, எனக்கு தெரியல.//

    அடுத்த பதிவும் அனேகமா, இதே மேட்டராத் தானிருக்கும் சகோதரி! :-)
    ஆனால், இந்த விஷயத்தை எளிமைப்படுத்தி, அனைவரும் புரிந்து கொள்ளுமளவுக்கு யாரும் முயலவில்லை (தமிழில்) என்பது எனக்கும் சற்று வருத்தம்தான். மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. //Philosophy Prabhakaran said...

    உங்களிடம் கேட்டு வாங்கிய இணைப்புகளையே இன்னமும் படிக்கவில்லை... அதை வார இறுதியில் படித்துவிட்டு மீண்டும் இதை படித்தால் தான் புரியும் என்று நினைக்கிறேன்...//

    கவலைப்படாதீங்க! இது திரும்ப முதல்லேருந்து ஆரம்பிக்கும். :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  19. //கடம்பவன குயில் said...

    10 நாட்களாக நல்ல பொழுதுபோக்குப்படம் ஓடிட்டு இருந்தது. அதுவும் முடிந்து போச்சா??//

    இப்போ இன்டர்வெல் விட்டிருக்கு! திரும்ப டைட்டில் போட்டு மறுபடியும் தொடரும். :-)

    //முடிவில்லாமல் முடிந்துபோச்சு. ஆனால் எதிர்பார்த்த முடிவுதான். டிராவில் கேம் ஓவரா?//

    இப்போதைக்கு TIE என்று சொல்கிறார்கள். பார்க்கலாம்.

    //சேட்டக்காரரா இருந்தாலும் இம்புட்டு தைரியமா உண்மை விளம்பியா இருக்கக்கூடாது.//

    நிறைய பேர் எழுதுகிறார்கள், என்னைத் தவிர! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  20. //விக்கியுலகம் said...

    பகிர்வுக்கு நன்றி நண்பா!//

    வருகைக்கு நன்றி நண்பரே!

    //"என் ராஜபாட்டை"- ராஜா said...

    அருமையான அலசல்//

    மிக்க நன்றி நண்பரே!

    //காந்தி பனங்கூர் said...

    அன்னா ஹசாரேவை பலிகடா ஆக்காமல் இருந்தால் சரி. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.//

    அவர் பொன்முட்டையிடும் வாத்து. பலியிட மாட்டார்கள்.
    மிக்க நன்றி நண்பரே! :-)

    //இரா.எட்வின் said...

    மிக நல்ல இடுகை சேட்டை தோழர். நானும் என் பாணியில் ஒன்றைப் போட்டு விட வேண்டும்//

    அவசியம் எழுதுங்கள் தோழர்! இப்போதுதான் இரண்டாம் அத்தியாயம் முடிந்து விட்டதே! :-)
    மிக்க நன்றி!

    //கக்கு - மாணிக்கம் said...

    நீண்ட நாளைக்கு பிறகு சந்திக்கிறேன் சேட்டை. நல்ல விழிப்புணர்வு இடுகை.//

    வாங்க வாங்க, நான் கூட ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். நலமா? மிக்க நன்றி நண்பரே! :-)

    //சிநேகிதன் அக்பர் said...

    குழப்பமான சூழல்.//

    ஆமாண்ணே! மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  21. //ராஜ நடராஜன் said...

    சச்சின் பேட்டிங் செய்யும் போது இதோ இந்த ஓவரில் அவுட்,அடுத்த ஓவரில் அவுட் என்று சொல்லி எப்படியும் 96,98ல அவுட் செய்து விட்டு நண்பர்களிடம் வாங்கி கட்டிக்கொள்வேன்.உங்க பதிவும் அதையே நினைவு ப்டுத்துகிறது:)//

    மிகச்சரி நண்பரே! இந்த மேட்டரும் கிரிக்கெட் மாதிரித்தான் போயிட்டிருக்கு என்பது நெசம்தான். :-)

    //முறுக்கு சுத்துற மெஷின்ல எத்தனை ஓட்டை என்று கணக்குப் போடாமல் முறுக்கு மட்டுமே சுவைப்பவர்களே அதிகம்.அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் இந்திய மக்கள் அளவிலும்,உலகளாவிய பத்திரிகைகள் அளவிலும் இந்தியா குறித்தான Impact ஐ கொண்டு வந்திருக்கிறதென்பது மட்டுமே இந்த போராட்டத்தின் வெற்றி என்பது மட்டுமல்ல//

    உண்மை! வன்முறையும், தீவிரவாதமும், பொருளாதாரச் சீரழிவுமாய் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் பல நாடுகளுக்கு இந்த போராட்டம் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

    //ஜனநாயக ரீதியாக பாராளுமன்றம் வரையில் பேசப்பட வைத்து சட்ட வரையறைக்குள்ளும் ஜன்லோக்பால் சட்டம் வெற்றிக்கான பாதைக்குள் நுழைந்து விட்டது.//

    அது தான் ஜனநாயகத்தின் வெற்றி! இதை ஜவ்வு மாதிரி இழுத்தடிக்காமல், இப்போது பின்பற்றிய அணுகுமுறையை முதலிலேயே பின்பற்றியிருக்கலாம். சகவாசம் சரியில்லை அவருக்கு! :-)

    //இந்த சட்டம் அரசியல் ரீதியாகவும்,சமூக ரீதியாகவும் எப்படி செயல்படப் போகிறது என்பதை எதிர்காலம் சொல்லி விடும்.//

    பார்க்கலாம்! :-)

    // அடுத்த தடவை அரசுப் பணி நிமித்தமாக யாராவது உங்களிடம் கையை நீட்டினால் முறைப்பதற்கான துணிவை அன்னா ஹசாரே குழுவின் மக்கள் போராட்டம் தருமெனற நேர் பார்வையை முன் வைக்கிறேன்.நீங்க பலன் அடைகிறீர்களோ இல்லையோ(தமிழகம்) வடநாட்டுக்காரர்கள் அறுவடை செய்து விடுவார்கள் தகவல் அறியும் சட்டத்தின் பலன்கள் போல.//

    நான் நான்கு வருடங்களாக RTI சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறேன். :-)

    //அன்னா ஹசாரே வந்தே மாதரம் ன்னு சத்தம் போட்டுகிட்டிருக்கிறார்.நீங்க அவரோட குரலைக் கேட்டா பெருசு உண்மையிலெயே சாப்பிடாமத்தான் இருந்ததான்னு கேள்வியை கேட்டாலும் கேப்பீங்க என்பதால் எஸ்கேப்:)//

    ஊஹும்! அதெல்லாம் கேட்க மாட்டேனுங்க! பாவம், 12 நாள் போராடினதுக்கு மத்திய அரசு ஒரு குச்சி மிட்டாய் கொடுத்திருக்காங்க! அவரு சந்தோஷத்தைக் கெடுப்பானேன்? :-)))

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //viji said...

    கூட்டத்தோட கோவிந்தா போடாம ஒதுங்கி நின்னு நடக்கற ட்ராமா எல்லாம் வேடிக்கை பார்க்க உங்க பதிவு விஷயங்கள் ரொம்ப உதவியா இருந்தது... Thanks for sharing off the track news.//

    பொதுவா நான் அரசியல் அதிகம் எழுதறதில்லை. ஆனால், இதை எழுதியதற்காக பெருமைப்படுகிறேன். :-)

    //ஆனா ஒண்ணு... அன்னா ஹஜாரே பத்தி நம்ம ஜனங்க கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தாலாம்னு நினைச்சு கொஞ்சம் ஊடக செய்திகளுக்கு மாத்தி பேசினா ஏதோ பெரிய வில்லன் மாதிரியும், ஊழலுக்கு துணை போறாப்பலையும் என்னை பார்க்கறாங்க ஹூம்..//

    சகிப்புத்தன்மைக்கும் அன்னா ஹஜாரே போராட்டத்துக்கும் சம்பந்தமே கிடையாது. அதை இனியும் எதிர்பார்க்காதீங்க! :-)

    //வாழ்க ஜனநாயகம்! வளர்க ஊடகங்களின் சேவை!..//

    மிக்க நன்றி! :-)

    //FOOD said...

    வந்து வாசித்து வாக்களித்தேன்.//

    நீங்க வந்ததே போதும். வாக்கு என்பது உங்களது வார்த்தைகள் தான். :-)
    மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  23. சேட்டை, படித்தேன்,ஊழலை முற்று முழுதாகப் போராட்டம் மூலம் ஒழிக்க முடியாது என்பது உண்மை தான்.

    மேலதிகமாக என்னால் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆதலால் பந்தா எதுவுமின்றி வெளிப்படையாகச் சொல்லி விட்டேன்,

    வெகு விரைவில் ஒரு காமெடிப் பதிவினை எதிர்பார்க்கிறேன்.

    அப்போது வந்து பிச்சு உதறுகிறேன்.

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!