Wednesday, July 13, 2011

இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்!




அண்மைக்காலத்தில் நம்மை மிகவும் பாதித்த ஒரு கொடூரம் - சிறுவன் தில்ஷனை ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுட்டுக் கொன்றதாகத் தானிருக்கும் என்று நம்புகிறேன். ஒரு பதிமூன்று வயதுச் சிறுவனின் மண்டையில் ஒருபக்கமாய் நுழைந்த குண்டு மறுபக்கமாய் வெளிவந்து சுவற்றிலும் ஒரு தடயச்சின்னம் ஏற்படுத்தியிருப்பதாகப் படித்தபோது, இயல்பாகவே ஆத்திரம் பொத்துக் கொண்டுவந்தது. முழுமையாகத் துப்புத் துலங்கி, சுட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டபிறகும், புதிய புதிய கேள்விகள் எழும்புகின்றன. மிக முக்கியமாக, ஒரு ராணுவ ஆயுதக் கிடங்கில் பணியாற்றிய அதிகாரி, ராணுவத்துக்குத் தெரியாமல் ஒரு அதிநவீன துப்பாக்கியை, ராணுவக் குடியிருப்பிலேயே வைத்திருக்க முடிகிறதே! இவர்களின் லட்சணம் இவ்வளவுதானா?

’என் மகனைச் சுட்டவனை அதே மாதிரி சுட வேண்டும்,’ என்று தில்ஷனின் தாயார் சொன்னதை வாசித்தபோது, திடுக்கிடவில்லை. பெற்ற வயிறு! அந்தத் தீ சுடத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கைது செய்யப்பட்ட அந்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். பதிமூன்று வயது சாகிற வயதில்லை; குற்றவாளி செய்தது எவ்வித பச்சாதாபத்துக்கும் உகந்ததுமில்லை.

அடுத்து....

இன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கோவையில் ஒருவரை பட்டப்பகலில், போக்குவரத்து நிறுத்தத்தில் நான்கு பேர் அடித்துக் கொன்றதையும், அதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றதையும் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். காவல்துறையின் கண்காணிப்புக் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியே, காவல்துறைக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறது. கொன்றவர்களின் குரூரத்தைப் பார்க்கையில் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதை விடவும், பச்சை விளக்குக்காகக் காத்திருப்பவர்கள், ஏதோ படப்பிடிப்பைப் பார்ப்பவர்கள் போல, செயலற்றுப்போய் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நான்கு கொலையாளிகளும், கைது செய்யப்பட்டிருப்பது சற்றே ஆறுதலாய் இருக்கிறது.

ஆனால், இத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகளை வாசித்தபோது சற்றே ஆயாசமாக இருந்தது. முதலாவது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் பிணத்தை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது. இரண்டாவது, சந்தோஷ்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஐந்து லட்சம் நஷ்ட ஈடும் தர வேண்டும் என்று அவரது உறவினர்கள் போராட்டம் செய்தது.

சந்தோஷ்குமாருக்கு வயது 29 தான். இப்படி நடுத்தெருவில் நான்குபேர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கொடுமைதான்; அவரது குடும்பத்துக்குப் பெரும் இழப்புதான். அந்த நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாதுதான். ஆனால், நஷ்ட ஈடு? அரசு வேலை...??

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஆட்சி மலர்ந்தபிறகு, இது போல எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன? ஆனால், இந்தக் கொலையைப் பற்றி ஊடகங்கள் பெரிதுபடுத்துவதற்கு முக்கியமான காரணம், இது அவர்களுக்கு மிகவும் வசதியாக, காணொளியாக மீண்டும் மீண்டும் காண்பிக்கத்தக்கதாகக் கிடைத்திருப்பதுதான். பீஹாரில் நடுத்தெருவில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது, இவர்கள் அவளைக் காப்பாற்றாமல் படமெடுத்துச் செய்தியாகப் போட்டதை மறக்க முடியுமா?

இந்த நாசமாய்ப் போன டாஸ்மாக் கடைகள் சந்துபொந்தெல்லாம் வந்துவிட்ட பிறகு, குடிபோதையில் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை! அந்த வகையில் பார்த்தால், கொலையுண்ட சந்தோஷ் ஒருவிதத்தில் குற்றவாளியே!

பொதுமக்கள் நினைத்திருந்தால் அவர் இறந்தததை தடுத்திருக்கலாம் என்பது உண்மைதான்! பொதுமக்கள் நினைத்தால், அதை மட்டும்தானா தடுத்திருக்க முடியும்?

சந்தோஷின் படுகொலை, டாஸ்மாக் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிற சீரழிவின் ஒரு அப்பட்டமான அளவுகோல். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தான் தெரிவிக்க முடியுமே தவிர, அரசு வேலை, நஷ்ட ஈடு என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக் கூடாது.

ஒரு சாலைவிபத்தில் கூட, மதுபோதையில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். குடித்துச் செத்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழகத்தைக் கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கக் கூடாது.

சந்தோஷின் குடும்பத்தினர் அனுதாபத்துக்குரியவர்கள்; அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியவை.

19 comments:

  1. உங்களின் கருத்தோடு நூறு சதம் ஒத்துப்போகிறேன் நண்பரே, வழக்கம்போல்.

    பிரபாகர்...

    ReplyDelete
  2. சந்தோஷின் குடும்பத்தினர் அனுதாபத்துக்குரியவர்கள்; அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியவை.//

    இவற்றை ஊக்கப்படுத்த்க்கூடாது. நாக்கை வெட்டினால் அரசு வேலை. உதவித்தொகை. குடித்தாலும் கிடைக்கும் போல.

    ReplyDelete
  3. //சந்தோஷின் குடும்பத்தினர் அனுதாபத்துக்குரியவர்கள்; அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியவை.///
    அசத்தல் வரிகள் நண்பரே , குடிகாரனுக்கு அனுதாபப் படுவதே தப்பு இதுல பணமும் அரசு வேலையுமா இவன் என்ன கார்கில் போர்ல செத்தானா இல்ல பயங்கரவாதிகளை பிடிக்கும் போது செத்தானா

    கல்வி தனியார் கையிலே
    தண்ணீர் சுகாதாரம் இல்ல
    ஆனா குடிக்கறதுக்கு அரசு கடைகள்
    வருமானம் வருதுன்னா விபச்சாரம் கூட பண்ணுவாங்க போல இருக்கு
    கேடு கெட்ட கேவலம்

    ReplyDelete
  4. இந்த நாசமாய்ப் போன டாஸ்மாக் கடைகள் சந்துபொந்தெல்லாம் வந்துவிட்ட பிறகு, குடிபோதையில் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை!

    வருமானம் வருகிறது என்பதற்காக அரசு செய்யும் அநாகரிக ஒப்புதல் டாஸ்மாக்.
    அடுத்தடுத்த தலைமுறையினர் இன்று குடிப்பழக்கத்திற்கு ஆளாவதே நிதர்சனம்.
    எனக்குத் தெரிந்தவர் வீட்டில் அப்பா குடிகாரர். அடுத்து மகனும். போதையில் கர்ப்ப ஸ்திரீயாக இருந்த தங்கையைத் தள்ளிவிட்டு நல்லவேளை எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைத்தாள்.

    ReplyDelete
  5. இந்த நாசமாய்ப் போன டாஸ்மாக் கடைகள் சந்துபொந்தெல்லாம் வந்துவிட்ட பிறகு, குடிபோதையில் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை!

    வருமானம் வருகிறது என்பதற்காக அரசு செய்யும் அநாகரிக ஒப்புதல் டாஸ்மாக்.
    அடுத்தடுத்த தலைமுறையினர் இன்று குடிப்பழக்கத்திற்கு ஆளாவதே நிதர்சனம்.
    எனக்குத் தெரிந்தவர் வீட்டில் அப்பா குடிகாரர். அடுத்து மகனும். போதையில் கர்ப்ப ஸ்திரீயாக இருந்த தங்கையைத் தள்ளிவிட்டு நல்லவேளை எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைத்தாள்.

    ReplyDelete
  6. //குடித்துச் செத்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழகத்தைக் கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கக் கூடாது.//

    உண்மை.மிகத்தவறான முன்னுதாரணமாகி விடும்.எவ்வளவோ புரட்சிகள் செய்யும் முதல்வர் அரசே மதுக்கடைகளை நடத்தும் இந்த திட்டத்தை மறுபரீசிலனை செய்தால் நலம்.எனெனில்,அரசும் ஒருவகையில் குற்றவாளி ஆகிறது.சரியான நேரத்தில் சரியான பதிவு சேட்டை அவர்களே..!!

    ReplyDelete
  7. என் மனதில் தோன்றிய ஆதங்கம் அப்படியே உங்கள் பதிவில் .அருமையாக எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  8. உங்கள் கருத்தில் உண்மை உள்ளது...

    ReplyDelete
  9. சரியாய் சொன்னிர்கள்.இல்லேன்னா குடிக்கிறவன் எல்லாம் வேலை கேட்பாங்க..

    ReplyDelete
  10. நல்ல கருத்துகள் நண்பரே.

    ReplyDelete
  11. http://pudugaithendral.blogspot.com/2011/07/blog-post_14.html

    தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். முடிந்தால் முடியும் பொழுது எழுதுங்க

    ReplyDelete
  12. உங்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன் நண்பரே...

    ReplyDelete
  13. இதை அப்படியே என் நண்பர்களுக்கு உங்கள் அனுமதியின்றி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன் ...

    அதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  14. தீர விசாரித்து கொலையானவர் குடும்பத்துக்கு நியாயம் கிட்டச் செய்யலாம்!குடும்ப சூழ்நிலை கவனத்தில் எடுக்கப்படல் அவசியம்!உணர்ச்சி வசப்பட்டு எழுந்தமானமாக தீர்வு சொல்லுதல் ஏற்கக்கூடியதல்ல.ஒட்டுமொத்தமாக "டாஸ்மாக்" எனப்படும் மதுக்கடைகளை குறை சொல்வது சரியல்ல!கல்வியறிவில் முண்ணணியிலிருக்கும் தமிழ் நாட்டில் ஏன் இந்த இழி நிலையென்று சிந்திக்க வேண்டும்.உலகமயமாக்கலின் பலன் இந்தியாவில் இப்படி அமைந்து விட்டது.

    ReplyDelete
  15. good post... nalla uraikkira maathiri eluthi irukkeengka...vaalththukkal

    ReplyDelete
  16. //பிரபாகர் said...

    உங்களின் கருத்தோடு நூறு சதம் ஒத்துப்போகிறேன் நண்பரே, வழக்கம்போல்.//

    முதல் கருத்தே ஓத்துப்போகிற கருத்தாய் அமைந்திருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. மிக்க நன்றி நண்பரே! :-)

    //இராஜராஜேஸ்வரி said...

    இவற்றை ஊக்கப்படுத்த்க்கூடாது. நாக்கை வெட்டினால் அரசு வேலை. உதவித்தொகை. குடித்தாலும் கிடைக்கும் போல.//

    அதே! மக்களின் வரிப்பணத்தைக் குடிகாரர்களுக்கு கொடுப்பது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதற்கு சமம். மிக்க நன்றி சகோதரி!

    //A.R.ராஜகோபாலன் said...

    அசத்தல் வரிகள் நண்பரே , குடிகாரனுக்கு அனுதாபப் படுவதே தப்பு இதுல பணமும் அரசு வேலையுமா இவன் என்ன கார்கில் போர்ல செத்தானா இல்ல பயங்கரவாதிகளை பிடிக்கும் போது செத்தானா//

    நாட்டுக்காக எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குடிபோதையில் சண்டைபோட்டு, சட்டம் ஒழுங்குப்பிரச்சினையை உண்டுபண்ணுகிறவர்களுக்கு எதற்கு நஷ்ட ஈடு?

    //கல்வி தனியார் கையிலே தண்ணீர் சுகாதாரம் இல்ல ஆனா குடிக்கறதுக்கு அரசு கடைகள் வருமானம் வருதுன்னா விபச்சாரம் கூட பண்ணுவாங்க போல இருக்கு கேடு கெட்ட கேவலம்//

    பண்ணாட்டி என்ன, ஒரு தென்னக மாநிலத்தில் விபசாரத்தை அரசாங்கம் கண்டுகொள்வதேயில்லை. காரணம், வருகிற அந்நியச்செலாவணி தான்! எண்டே குருவாயூரப்பா! உண்மையில் பல கேவலங்களுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  17. //ரிஷபன் said...

    வருமானம் வருகிறது என்பதற்காக அரசு செய்யும் அநாகரிக ஒப்புதல் டாஸ்மாக்.//

    உண்மை! குடிபோதையில் சிலர் தெருவில் ஆடுகிற ஆட்டத்தைப் பார்த்தால், அடிக்க வேண்டும் என்று நிதானத்தில் இருப்பவர்களுக்கே ஆத்திரம் மூளுகிறதே!

    //அடுத்தடுத்த தலைமுறையினர் இன்று குடிப்பழக்கத்திற்கு ஆளாவதே நிதர்சனம்.//

    வேதனையான நிதர்சனம்! உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் குடித்துவிட்டுப் போவதை சென்னையில் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.

    //எனக்குத் தெரிந்தவர் வீட்டில் அப்பா குடிகாரர். அடுத்து மகனும். போதையில் கர்ப்ப ஸ்திரீயாக இருந்த தங்கையைத் தள்ளிவிட்டு நல்லவேளை எந்த பாதிப்பும் இல்லாமல் பிழைத்தாள்.//

    ஐயையோ! கேட்கவே பதைபதைப்பாய் இருக்கிறது!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    //சேலம் தேவா said...

    உண்மை.மிகத்தவறான முன்னுதாரணமாகி விடும்.எவ்வளவோ புரட்சிகள் செய்யும் முதல்வர் அரசே மதுக்கடைகளை நடத்தும் இந்த திட்டத்தை மறுபரீசிலனை செய்தால் நலம்.எனெனில்,அரசும் ஒருவகையில் குற்றவாளி ஆகிறது.சரியான நேரத்தில் சரியான பதிவு சேட்டை அவர்களே..!!//

    மதுக்கடைகளால் கிடைக்கிற வருவாயை இழக்க அரசு யோசிக்கலாம். ஆனால், முறைப்படுத்த முடியும். வேலைநேரத்தை இன்னும் அதிரடியாய்க் குறைக்கலாம். பொதுமக்களுக்குத் தொந்தரவு செய்யும் குடிகாரர்களுக்கு என்று தனியாக சட்டப்பிரிவுகள் அமைத்து வழக்குத்தொடுக்கலாம். கொஞ்சம் fear psychosis தேவைப்படுகிறது என்பதே எனது கருத்து.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    //angelin said...

    என் மனதில் தோன்றிய ஆதங்கம் அப்படியே உங்கள் பதிவில் .அருமையாக எழுதியிருக்கீங்க.//

    மிக்க நன்றி சகோதரி! இது பெரும்பாலானோரின் மனதில் இருக்கிற ஆதங்கம் என்பதே உண்மை. குறிப்பாக, பெண்கள் அனைவருக்கும் இந்தக் குமுறல் அவசியம் இருந்தே தீரும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  18. //தமிழ்வாசி - Prakash said...

    உங்கள் கருத்தில் உண்மை உள்ளது...//

    மிக்க நன்றி நண்பரே!

    //கோவை நேரம் said...

    சரியாய் சொன்னிர்கள்.இல்லேன்னா குடிக்கிறவன் எல்லாம் வேலை கேட்பாங்க..//

    ஆம்! அரசியல் லாபங்களுக்காக, அதைத் தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்தாலும் வருவார்கள். :-(

    மிக்க நன்றி!

    //வெங்கட் நாகராஜ் said...

    நல்ல கருத்துகள் நண்பரே.//

    மிக்க நன்றி வெங்கட்ஜீ!

    //புதுகைத் தென்றல் said...

    http://pudugaithendral.blogspot.com/2011/07/blog-post_14.html

    தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். முடிந்தால் முடியும் பொழுது எழுதுங்க//

    ஓ! பார்த்தேன்! விரைவில் எழுத முயல்கிறேன். மிக்க நன்றி சகோதரி!

    //sudhanandan said...

    உங்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன் நண்பரே...//

    மிக்க நன்றி நண்பரே!

    //இதை அப்படியே என் நண்பர்களுக்கு உங்கள் அனுமதியின்றி மின் அஞ்சல் அனுப்பிவிட்டேன் ...அதற்கு மன்னிக்கவும்//

    ஆஹா! இதற்கு நான்தான் நன்றி தெரிவிக்க வேண்டுமே தவிர, நீங்கள் மன்னிப்புக் கேட்பது எனக்கு சங்கடமாய் இருக்கிறது. மீண்டும் நன்றிகள் பல!

    ReplyDelete
  19. //Yoga.s.FR said...

    தீர விசாரித்து கொலையானவர் குடும்பத்துக்கு நியாயம் கிட்டச் செய்யலாம்!குடும்ப சூழ்நிலை கவனத்தில் எடுக்கப்படல் அவசியம்!//

    எல்லாப் பொறுப்பும் வெறும் அரசாங்கத்துக்கு மட்டும்தானா? பொதுமக்களுக்கு எதுவுமே இல்லையா? இப்படியே போனால், சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களும் இதே போன்ற கோரிக்கைகளை வைத்தால்...?

    //உணர்ச்சி வசப்பட்டு எழுந்தமானமாக தீர்வு சொல்லுதல் ஏற்கக்கூடியதல்ல.ஒட்டுமொத்தமாக "டாஸ்மாக்" எனப்படும் மதுக்கடைகளை குறை சொல்வது சரியல்ல!//

    அதுதானே உண்மை! உங்கள் பகுதியில் இருக்கிற சமூக ஆர்வலர்கள் அல்லது மனோதத்துவ நிபுணர்களிடம் விசாரியுங்கள். டாஸ்மாக் கடைகள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிற சீரழிவை புட்டுப்புட்டு வைப்பார்கள்.

    //கல்வியறிவில் முண்ணணியிலிருக்கும் தமிழ் நாட்டில் ஏன் இந்த இழி நிலையென்று சிந்திக்க வேண்டும்.//

    இதை விட கல்வியறிவு அதிகமான கேரளாவில் நிலைமை இன்னும் மோசம். கல்விக்கும் குடிப்பழக்கத்துக்கும் தொடர்பே இல்லை. சொல்லப்போனால், குடிப்பழக்கத்தை நாகரீகம் என்று கருதுகிற வழக்கத்தை ஏற்படுத்துவதே மேல்தட்டு மக்கள் என்று சொல்லப்படுகிறது.

    //உலகமயமாக்கலின் பலன் இந்தியாவில் இப்படி அமைந்து விட்டது.//

    உலகமயமாக்கலின் பிறப்பிடங்களான பிறநாடுகளில் நிலைமை எப்படியென்று தெரியவில்லை. ஆனால், இதற்கும் உலகமயமாக்கலுக்கும் என்ன நேரடித்தொடர்பு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    //மதுரை சரவணன் said...

    good post... nalla uraikkira maathiri eluthi irukkeengka...vaalththukkal//

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!