அம்பா ஸ்கை-வாக் மாலுக்கு இன்று காலைதான் முதன்முதலாய் போக முடிந்தது.
கசகசவென்று கூட்டமிருந்தாலும், ரசிக்கத் தக்கதாய், சுவாரசியமாய் இருந்தது. மெக்டொனால்டில் கண்களில் காதலும், வாயில் பர்கருமாய் கசிந்துருகிய காதல் ஜோடிகள்! லேண்ட்-மார்க்கில் ஒரு ரவுண்ட் வந்து ஜெயமோகனின் ’ரப்பர்’ வாங்கினேன். (வாங்கிட்டாலும்...!). எல்லா மால்களிலும் எல்லாத் துணிக்கடைகளிலும் கூட்டம் கூட்டமாய்த் துணிகளை வாரியெடுத்துக்கொண்டு போகின்றனர். செல்போனுடன் பிறந்த சென்னைவாசிகள் விதிவிலக்கின்றி எல்லா இடத்திலும் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தனர். கண்ணில் தென்பட்ட எல்லாக் குழந்தைகளின் முகத்திலும் பிரமிப்பும், எதிர்பார்ப்பும் வழிந்தோடிக்கொண்டிருக்க, பெற்றோர்கள் வாயுத்தொந்தரவு வந்தவர்கள் போல புருவஞ்சுருக்கியபடி தத்தம் குழந்தைகளை இழுத்துக்கொண்டு போயினர். பொதுவாக, மால்களில் தமிழில் பேசுவது இழுக்கு என்று சென்னையில் ஒரு புதிய விதி உருவாகியிருப்பதை இங்கும் காண முடிந்தது. டி-ஷர்டுகளில் அபத்தமான வாசகங்களுடன் கோதுமைபட்சிணிகள் பிதாஜியின் காசுகளை விரயமாக்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. ரங்கநாதன் தெருவைப் போலவே, இங்கும் எவள்மீதாவது உராய்ந்து ஜன்மசாபல்யம் பெறுவதற்காக, பல விடலைகள் சுற்றிக்கொண்டிருந்தனர். இந்த மால்களில் எதை வைத்தாலும் மாய்ந்து மாய்ந்து வாங்கிக்கொண்டு போகிற மர்மம் இன்னும் துலங்கவில்லை. இன்னும் சென்னையில் மூன்று மால்கள் வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையின் பணப்புழக்கம் மும்பை, தில்லியை மிஞ்சிவிட்டதாகப் படித்தபோது நம்ப முடியவில்லை; பார்த்தால் நிஜமாயிருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
வந்த நோக்கமென்னவோ சினிமா பார்க்கத்தான்! அதிகம் யோசிக்காமல் ’டெல்லி-பெல்லி’க்கு டிக்கெட் வாங்கி பிவி.ஆருக்குள் நுழைந்தேன். (தியேட்டரும் நல்லாத்தானிருக்கு!). இனி, டெல்லி-பெல்லி விமர்சனம்!
கொஞ்ச காலமாகவே எனக்கு ஆமீர்கான் என்றால் ரொம்பப் பிடித்திருக்கிறது. இயக்குனராக அவர் வெற்றிக்கொடி நாட்டிய ’தாரே ஜமீன் பர்,’ ஆமீர் மாறுபட்டுச் சிந்திக்கிறவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியது. அவரது தயாரிப்பில் வெளிவந்த ’பீப்ளி-லைவ்’ படம், அவர் வர்த்தக கட்டாயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியது. இவ்விரண்டு படங்களும் வெவ்வேறு தளங்களைக் கொண்டிருந்தாலும், அவற்றைப் பார்த்தபோது முழுமையாய் லயித்ததை மறுக்க முடியாது. அதன்பிறகு அவர் தயாரிப்பில் வந்த ’டோபி-காட்’ படம் சற்றே ஆமைவேகமாய், சற்றே சலிப்பாய் இருந்தது உண்மைதான் என்றாலும், அந்தக் கதாபாத்திரங்கள் நிஜம்போல, நேற்றுப்பார்த்தவர்கள் போலிருந்ததும் உண்மை. ஆகவே, ஆமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கிற ’டெல்லி பெல்லி,’ படத்தைப் பார்க்கப்போனபோது, ஒரு பெரிய பாப்கார்ன் பொட்டலம் போன்ற எதிர்பார்ப்புகளுடன்தான் போயிருந்தேன்.
கொஞ்சம் ஆபாசம்; கொஞ்சம் நகைச்சுவை கலந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குப்படம் என்று சுருக்கமாகச் சொல்லத்தக்க படம். இப்படத்தின் ’பாக் பாக் டி.கே.போஸ்,’ என்ற பாடல் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருப்பதும், இது போன்று இரட்டை அர்த்தமுள்ள பாடல்களில் தான் ஒருபோதும் நடித்திருக்கவே மாட்டேன் அன்று அமிதாப் பச்சன் கூறியிருப்பதும் கொசுறுத்தகவல்கள். எதற்கும் குடும்பஸ்தர்கள் இப்படத்தைத் தனியாகப் பார்ப்பது உசிதம் என்று எச்சரித்துத் தொலைத்து விடுகிறேன். (எப்படியெல்லாம் பாசாங்கு பண்ண வேண்டியிருக்குதுப்பா!)
சங்கரின் ’பாய்ஸ்’ படத்தின் ஆரம்பக்காட்சிகளை இப்படத்தின் முதல் சில நிமிடங்களில் ஏனோ நினைவுகூர நேர்ந்தது. சாதாரணமாக ’சீச்சீ!’ என்று பெரும்பாலானோர் அங்கலாய்க்கிற மாதிரி பல சங்கதிகளை சர்வசாதாரணமாகக் காண்பித்திருக்கிறார்கள். நான்கெழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தை தண்ணிபட்ட பாடாய் இருக்கிறது. (’மன்மதன் அம்பு’ பார்த்தவர்களுக்கு அது என்ன என்று சொல்ல அவசியமில்லை!). இருந்தாலும், நாயகன் இம்ரான் கானின் துடிப்பான நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை, ஏகமாய்த் தூவியிருக்கிற நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து ’டெல்லி பெல்லி’யையும் ஒரு சராசரி படத்தைக் காட்டிலும் சற்றே உயர்த்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
விளாடிமிர் என்ற ஒரு வைரக்கடத்தல் பேர்வழி, சோனியா என்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு பாக்கெட்டைக் கொடுத்து அதை யாரிடமோ சேர்க்கச் சொல்கிற காட்சியோடு படம் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏறக்குறைய 100 நிமிடங்கள் அந்தப் பாக்கெட் இடம் மாறுவதால் ஏற்படுகிற சிக்கல்களையும், துரத்தல்களையும், அடிதடிகளையும், நிறைய நகைச்சுவை தாளித்துச் சொல்லியிருக்கிறார்கள். (நகைச்சுவை என்ற பெயரில் நிறையவே பலர் முகம் சுளிக்கிற விஷயங்களைச் சேர்த்து). சரி, கதைக்கு வருவோம்! விளாடிமிரிடமிருந்து பாக்கெட்டை வாங்கிய சோனியா, காதலன் தஷியின் இருப்பிடத்துக்கு வருகிறாள்.
நம்ம திர்லக்கேணி மாதிரி பழைய தில்லியில் ஒண்டுக்குடித்தனத்தில் பத்திரிகை நிருபரான தஷி, தனது இரண்டு நண்பர்களுடன் வசித்து வருகிறான். சோனியா பேக்கு மாதிரி பாக்கெட்டை உரிய இடத்தில் ஒப்படைக்கும் பொறுப்பை காதலனிடம் கொடுத்து விட்டு 'எஸ்' ஆகிறாள். இங்கிருந்து கைமாற்றம் சங்கிலித்தொடராகிறது.
தஷியின் இரு நண்பர்களில் நிதின் போட்டோகிராபர் என்ற பெயரில் பிளாக்-மெயில் செய்கிற பேர்வழி; இன்னொருவன் அருப் ஒரு கார்ட்டூனிஸ்ட்! சோனியா கொடுத்த பாக்கெட்டை, தஷி நிதினிடம் கொடுக்க, அதைக் கொடுக்கப் போகிற வழியில், தெருவோரக்கடையில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட நிதினின் வயிற்றில் ஜப்பானில் ஏற்பட்டது போலவே பெருத்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிதின் அந்தப் பாக்கெட்டை ஒப்படைக்கும் பொறுப்பை, அருப்பிடம் ஒப்படைக்க, வைரங்கள் அடங்கிய பாக்கெட் ஒரு இரத்தப்பரிசோதனை நிலையத்துக்கும், கடத்தல் கும்பலின் கையில் பரிசோதனைக்காக நிதின் எடுத்து வைத்திருந்த அவனது மலமும் இடம் மாறிச்சென்று சேர்கிறது. விடுவாரா வில்லன்? அடிதடி, கடத்தல், மாறுவேஷம் என்று சர்வசாதாரணமாக 80-க்களில் வந்த பல சண்டைப்படங்களின் அனைத்து மசாலாக்களையும் கலந்துகொட்டி, நகைச்சுவையால் சற்றே வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.
ஆக, கதை என்று பிரமாதமாய் ஒன்றுமில்லை. துப்பட்டாவெல்லாம் சிந்தியபடி ஐஸ்-க்ரீம் விழுங்கிய அந்த வட இந்தியப் பெண் ’யே தோ Hangover நாம் கி பிக்சர் ஸே பனாயி கயீ ஹை,’ என்று வாஸ்கோடகாமி போல தன் சஹேலியிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். இதை மட்டும் தமிழில் எடுத்து, வசனம் எழுதுகிற பொறுப்பை கிரேஸி மோகனிடம் கொடுத்தால், பார்த்தபிறகு இரண்டு நாட்கள் சிரித்துக் கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது.
கைமாறும் ஒரு போதை மருந்துப் பாக்கெட்டால் ஏற்படுகிற குளறுபடிகளை வைத்துக் கொண்டு, கண்ணாமூச்சி விளையாடி இறுதியில் நல்லவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள் என்பது போல முடியும் வாடிக்கையான கதைதான்! இதை பெரும்பாலும் பரிச்சயமில்லாத நடிக,நடிகையரை வைத்து, ஏறக்குறைய புத்திசாலித்தனத்தோடு சிரிக்க வைத்துச் சொல்லியிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட, (குறிப்பாக போதைக்கும்பலின் தலைவனும், கையாட்களும்) சட்டென்று மனதில் நிற்கிறார்கள்.
வசனங்கள் கொஞ்சம் டூ-மச் தான்! (என்னை மாதிரி தனியாய்ப் போய் ரசித்து விட்டு, வெளியே வந்து ’அபச்சாரம், அபச்சாரம்,’ என்று கூப்பாடு போட நல்ல வாய்ப்பு!). அதே மாதிரி ஆமீர்கானின் கௌரவத்தோற்றம் கொஞ்சம் திகட்டுமளவுக்கு இழுத்தடிக்கப்பட்டு விட்டது என்றே பட்டது. பாடல்கள் பிரபலமாகி விட்டன என்றே தோன்றுகிறது. பி.வி.ஆரில் நிறைய பேர் கூடவே பாடுவதைக் கேட்க முடிந்தது. இம்ரான்கான் திரையில் தோன்றியதும், இளம்பெண்கள் எழுப்பிய உற்சாகக்குரலைக் கேட்க, காதுகள் கோடி வேண்டும். அதே சமயம், தில்லியில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற இந்திக் கெட்ட வார்த்தையை, இத்தனை முறை, இவ்வளவு அப்பட்டமாய், இதற்கு முன்னர் எந்தப் படத்திலும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
படத்தில் பல நெருடல்கள்; சில....
திருமணம் நிச்சயமாகி, சீதனமாக ஒரு காரும் கிடைத்திருக்க, திடுதிப்பென்று தஷி, காதலியை கிடப்பில் போட்டுவிட்டு, சக நிருபர் (நிருபி?) மேனகாவை முத்தமிடுவது புரியவில்லை. அதுவும், காதலி சோனியா வில்லன்களிடம் மாட்டியிருக்கிற சிக்கலான தருணத்தில்! அதே போல, புர்கா அணிந்து கொண்டு, நகைக்கடைக்குச் சென்று வைரங்களை அபகரிக்கிற காட்சி காதில் ஒரு பூந்தோட்டத்தையே வைப்பது போலிருக்கிறது. ஆனால், இவை குறித்தெல்லாம் யோசிக்க விடாமல், அடிக்கடி வசனங்களாலும், காட்சியமைப்புகளாலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கொஞ்ச வசனமே இந்தியிலும், பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலும் இருப்பது படு சௌகரியமாய் இருக்கிறது. அதிலும், அந்தச் சிறிய காரைப் பார்த்து, "If a donkey $#*s a rickshaw, this is what you get," என்று பொரிகிறபோது, பி.வி.ஆர்.அதிர்ந்தது. ஆங்கில மொழிப்படம் என்பதாலோ என்னமோ, பொதுவாக இந்தியப் படங்களில் பார்க்க முடியாத சில சங்கதிகளும் (கொஞ்சமாய்), கேட்க முடியாத சில சொற்றொடர்களும் வசதியாய் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாய், ஒரு காட்சியில் மேனகாவை ஒரு பெண்மணி, "லெஸ்போ" என்று இன்னொருத்தியிடம் போட்டுக் கொடுப்பதும், இன்னொரு காட்சியில் மேனகாவின் கணவனே மனைவியைப் பார்த்து அந்த வார்த்தையைச் சொல்வதும்...! ம், புரட்சி தான்!
ஆனால், மேனகாவின் கணவனிடமிருந்து தப்பிக்க, தஷியும் மேனகாவும் ஒரு நட்சத்திர ஓட்டல் அறைக்குள் புகுந்து நடத்துகிற கூத்துகளும், வசனங்களும் விரசத்தின் உச்சக்கட்டம்!
மொழிக்கு மொழி, சென்சார் போர்டின் விதிமுறைகள் மாறுபடுகின்றன என்பது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. தெலுங்குப்படங்களில் கதாநாயகர்களின் கைகளுக்கு சென்சார் போர்டு அளித்திருக்கிற சுதந்திரம், பாவம் தமிழ் நாயகர்களுக்குக் கிடையாது. (இவ்வளவு ஏன், தெலுங்கு மா டிவியில் வருகிற சில தொடர்கள் ஷகீலா படங்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல!) மலையாளத்தைப் பற்றிச் சொல்லி, நான் ஒரு மலையாளித்துவேஷி என்று பலர் கருதுவதை உறுதிப்படுத்த விரும்பவில்லை.
டெல்லி-பெல்லியில் நகைச்சுவை தவிரவும், சில சின்னச் சின்ன விஷயங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அழுக்கும் நெரிசலுமாய் பார்த்தாலே மூச்சுத்திணறும் பழைய தில்லியைப் படம் பிடித்திருக்கிற விதம் அபாரம். பின்னணி இசை, எடிட்டிங் பற்றியெல்லாம் எழுத சி.பி.எஸ்ஸிடம் ஒரு க்ரேஷ்-கோர்ஸ் படித்தால்தான் முடியும் என்பதால் விட்டு விடுகிறேன்.
ஆனால், புது தில்லி மற்றும் பழைய தில்லி இவ்விரண்டிற்கும் இடையிலான பாரபட்சங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றை சந்தடிசாக்கில் இடித்துக் காட்டியிருக்கிறார்கள். (தர்யா-கஞ்ச் லாட்ஜிலிருந்து நேரு ப்ளேசுக்குப் போகிறபோது இந்த முரண்பாட்டை பலமுறை நானே பார்த்திருக்கிறேன்)
ஆமீர்கானின் படம் என்பதால் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இது நிறைய மெனக்கெட்டு எடுக்கப்பட்ட ஒரு மிக சாதாரணமான ஆனால் புத்திசாலித்தனமான படம்! இதைப்போல தமிழில் யாராவது எடுத்தால், செருப்புமாலைகளும், துடைப்பங்களுமாய் நமது பண்பாட்டுக் காவலர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்திருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் ’பாய்ஸ்’ படத்தை ’சீ!" என்று துப்பியது போலத் துப்பியிருப்பார்கள்.
அங்கேயும் டி.கே.போஸ், தஷி போன்ற பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இங்கேயும் அவன்-இவன் படத்தின் சில சங்கதிகளைப் பற்றி முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர். எல்லாமே படுபுனிதம்; தீண்டாதே என்று சீறுகிறவர்கள் மத்தியில், இவ்விரண்டு படங்களும் வெளிவந்து ஓடிக்கொண்டிருப்பது, மக்களின் சகிப்புத்தன்மை அதிகரிப்பதன் அடையாளமா அல்லது நிஜம் அதை விட மோசமா என்பதுதான் விடையறியப்படாத கேள்வி என்று தோன்றுகிறது.
டெல்லி பெல்லி-சிக்கன் சில்லி - அசைவர்களுக்குப் பிடிக்கும்
(குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் பிரியர்கள் இப்படத்தைத் தவிர்ப்பது நலம்!)
படம் பார்க்காமல் விமரிசனம் எழுதின மாதிரி தெரிகிறது ?? மண்டபத்துல யாரோ எழுதினதை வாங்கிட்டு வந்து போட்டு வுட்ட மாதிரி இருக்கு... மொதல்ல கை மாறினது போதை பொருள் இல்லை..வைர பாக்கெட்..
ReplyDeleteஇப்படத்தினைப் பற்றி இங்கேயும் நிறைய சர்ச்சைகள், விமர்சனங்கள்.... பொதுவாகவே நான் படம் பார்ப்பதில்லை... அதிலும் ஹிந்திப் படம்...? இப்படத்தின் பாடல்கள் இங்கே நல்ல ஹிட் தான்....
ReplyDelete//மஞ்சள் ஜட்டி said...
ReplyDeleteபடம் பார்க்காமல் விமரிசனம் எழுதின மாதிரி தெரிகிறது ?? மண்டபத்துல யாரோ எழுதினதை வாங்கிட்டு வந்து போட்டு வுட்ட மாதிரி இருக்கு... மொதல்ல கை மாறினது போதை பொருள் இல்லை..வைர பாக்கெட்..//
வாங்க மஞ்சள் ஜட்டி! அதாவது, இடுகை மிகவும் நீளமாக இருந்ததுனாலே, நிறைய delete பண்ணியிருந்தேன். உங்க கருத்தை வாசிச்சதும் முதலிலே என்ன எழுதியிருந்தேனோ, அதை அப்படியே போட்டிருக்கிறேன். இப்போ வாசிச்சுப் பாருங்க!
பார்க்கிற படங்களுக்கே விமர்சனம் எழுத முடியலே; பார்க்காத படங்களுக்கு என்னத்தை எழுதறது? :-)
எது எப்படியோ, உங்களுக்கு இரட்டிப்பு நன்றிகள்! அடிக்கடி வாங்க!
//வெங்கட் நாகராஜ் said...
இப்படத்தினைப் பற்றி இங்கேயும் நிறைய சர்ச்சைகள், விமர்சனங்கள்.... பொதுவாகவே நான் படம் பார்ப்பதில்லை... அதிலும் ஹிந்திப் படம்...? இப்படத்தின் பாடல்கள் இங்கே நல்ல ஹிட் தான்....//
நானும் பொதுவாக பெரிய சர்ச்சைகளில் அடிபடும் படங்களைப் பார்ப்பதில்லை. ஆனால், ஆமீர்கானை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும், எதேச்சையாக அன்று அம்பா ஸ்கைவாக் போக நேர்ந்ததாலும் பார்க்க நேரிட்டது.
மிக்க நன்றி வெங்கட்ஜீ!
ஐய்யா எனக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியுமுங்க.. பொதுவா புதுசா மொழி கத்துக்கனுமினா மொதல்ல கெட்டவார்த்தையைத்தான் கத்துப்பாங்க. நானும் மொதல்ல அட 'Bose DK - Bhaag ' பாட்டு நல்ல இருக்குதேன்னு நெனச்சேன் - ஒரு ரெண்டு மூணு தடவை உச்சரிச்சபோதுதான் அது எவ்வளுவு பெரிய கெட்ட வார்த்தைன்னு தெரிஞ்சது. Its ok, but what is the problem in Tashi name ??
ReplyDelete