Wednesday, March 30, 2011

சேட்டை டிவியின் கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை கி.பி.17-ம் நூற்றாண்டுமுதலாகவே துல்லியமாகச் சொல்லி வரும் தொலைக்காட்சி உங்கள் சேட்டை டிவி!

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 2011 ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சேட்டை டிவி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை, பொருத்தமாக ஏப்ரல் 1 அன்று வெளியிடலாம் என்று எண்ணியிருந்தபோதும், தினசரி தமிழகத்தின் அரசியல்கட்சிகள் தேர்தல் களத்தில் செய்து வரும் உட்டாலக்கிடி வேலைகள் காரணமாக, கருத்துக் கணிப்பு முடிவுகளை முட்டாள்கள் தினம் வரைக்கும் தள்ளிவைப்பது அவசியமற்றது என்ற முடிவுக்கு வந்துவிட்டதால், இந்த திடீர் வெளியீடு!

இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொண்டபோது, தமிழகத்தின் முக்கிய கட்சிகள் கு.மு.க.தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியுடன் தேர்தல் உடன்படிக்கைக்காகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும், அப்போது இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக விஜய டி.ராஜேந்தர் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவற்றிற்கு மேற்குறிப்பிடப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க அரசியல் நிகழ்வுகளே காரணம் என்று சான்றோர் அறிவர்.

இந்த மெகாசர்வேயில் சேட்டை டிவியும், பிளஃப்மாஸ்டர் பிரைவேட் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனமும் இணைந்து களத்தில் இறங்கினர். தொகுதி ஒன்றிற்கு ஒருவர் வீதம் 234 தொகுதிகளில் 1638 பேர்கள் அயராது பணியாற்றியதோடு, அவர்களே கருத்துக்கணிப்புக்கான கேள்விகளுக்கு பதிலும் அளித்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு தொகுதிக்கு 200 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண் என்ற பாகுபாடேயின்றி இந்த சர்வே நடத்தப்பட்டது. அத்தோடு படித்தவர், பாமரர், கிராமம், நகரம், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் தவிரவும் கிரிக்கெட் பார்ப்பதற்காக விடுப்பெடுத்து வீட்டிலிருப்பவர்கள், டாஸ்மாக்கின் ஆயுட்கால உறுப்பினர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், வலைப்பதிவில் மொக்கை போடுகிறவர்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் அவர்களது பெயர்,வயது, பாலினம், வசிப்பிடம் போன்ற தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, மேலும் அவர்களுக்கு சிரமமளிக்க விரும்பாமல் எல்லாக் கேள்விகளுக்கும் நமது ஆய்வுக்குழுவே பதிலளித்திருக்கின்றனர் என்பதை அறிக!

குறிப்பாக டாஸ்மாக் கடைகளில், மப்பேறியவர்கள், மிகவும் மப்பேறியவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவர்களது பெயர் போன்ற விபரங்களும் கிடைக்காததால், தோராயமாக ’இன்னின்ன மூஞ்சிக்கு இன்னின்ன பெயர் இருக்கலாம்,’ என்ற தீர்க்கதரிசனத்தோடு விபரங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆக, மொத்தம் 20 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களிடமிருந்து அதிகபட்சமாக நான்கு கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் பெறப்பட்டுள்ளன என்பதால், இப்படியொரு கருத்துக்கணிப்பை ஓபாமா தேர்தலின்போது அமெரிக்காவில் கூட நடத்தியதில்லை என்று பல அரசியல்கட்சித்தலைவர்கள் விழுந்து விழுந்து சிரித்தவாறே தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ள ஆதரவு, அவர்கள் கைவசம் உள்ள பிரியாணிப்பொட்டலங்கள், மூட்டை மூட்டையாக மறைவிடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள ரொக்கப்பணம், சின்டெக்ஸ் டாங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள சரக்கின் கொள்ளளவு, இது தவிர காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கு எத்தனை கோஷ்டிகள், எத்தனை போட்டி மனுக்கள், எத்தனை டம்மி வேட்பாளர்கள், எத்தனை சட்டைகள் இதுவரை கிழிபட்டன, எத்தனை வேட்டிகள் இன்றுவரை உருவப்பட்டன என்பதோடு, தேர்தலுக்குப் பிறகு புதிதாக உருவாகப்போகிற கோஷ்டிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்த துல்லியமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இந்தக் கருத்துக்கணிப்பின்போது சத்தியமூர்த்தி பவனில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 4321 கொடும்பாவிகளைத் தவிரவும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான கொடும்பாவிகளின் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிற திடுக்கிடும் தகவலையும் கண்டறிய முடிந்தது.

இதன்படி, கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் தலைமையிலான குடிமக்கள் முன்னேற்றக் கழகம் 176 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணியும் அ.தி.மு.க கூட்டணியும் தலா 29 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இதனை ஏற்கனவே ஹிஹிலீக்ஸ் தளமும் வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கு.மு.கவுக்குப் பெண்கள் மத்தியிலே பலத்த ஆதரவு இருப்பது வியப்பைத் தருகிறது. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச கம்ப்யூட்டர் என்று பல கட்சிகள் அறிவித்திருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில், பெண்கள் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் புறக்கணித்து, குடிமக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பெருமளவில் ஆதரவளித்திருக்கலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கு.மு.க.தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு டாஸ்மாக் கடைகளின் வாசலில் பீடி கொளுத்தி கொண்டாடி வருகிறார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

33 comments:

  1. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில், மப்பேறியவர்கள், மிகவும் மப்பேறியவர்கள் ஆகியவர்களிடமிருந்து அவர்களது பெயர் போன்ற விபரங்களும் கிடைக்காததால், தோராயமாக ’இன்னின்ன மூஞ்சிக்கு இன்னின்ன பெயர் இருக்கலாம்,’ என்ற தீர்க்கதரிசனத்தோடு விபரங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


    ஹா.......... ஹா.......ஹா.............. இப்புடித்தான் நிஜமாவே நடக்குதா?

    ReplyDelete
  2. //அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில், பெண்கள் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் புறக்கணித்து,//

    ஆஹா, இது நல்ல திட்டமாக உள்ளதே. விழுந்து விழுந்து சிரித்தேன்.

    எல்லாவரிகளும் வழக்கம் போல சேட்டையின் நையாண்டி ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சேட்ட

    ஆப்புன்னா என்னா?

    http://speedsays.blogspot.com/2011/03/blog-post_30.html

    ReplyDelete
  4. கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதையும் மீறி இப்படி ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதற்காக சேட்டை டிவியின் தைரியத்தை பாராட்டுகிற அதே வேளையில், இப்படியெல்லாம் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு முக்கிய கட்சிகளின் வயிற்றில் கொள்ளியிடும் இந்த அராஜகப் போக்கையும் கண்டிக்கின்ற கடமை எங்களுக்கெல்லாம் இருக்கிறது என்பதையும் பணிவோடும், பண்போடும் தெரிவித்துக் கொள்வதில் மிக்கப் பெருமையும் பேருவகையும் அடைகின்ற என் நெஞ்சார்ந்த உளமார்ந்த இன்னும் பல ஆர்ந்த நன்றிகளைத் தெரிவித்து இந்த சேட்டை டிவி மென்மேலும் பல கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு........................................
    (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ............. அப்பா முடியல!),

    ReplyDelete
  5. சேட்டை ரீவியின் கருத்துக் கணிப்பு... ஆகா இது நியாயமானதா/ நடு நிலமையானதா இல்லைப் பக்கச் சார்பானதா?

    ReplyDelete
  6. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை கி.பி.17-ம் நூற்றாண்டுமுதலாகவே துல்லியமாகச் சொல்லி வரும் தொலைக்காட்சி உங்கள் சேட்டை டிவி!//

    அந்தளவு வயசான, பழமையான தொலைகாட்சியா உங்களின் தொலைக்காட்சி!

    ReplyDelete
  7. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 2011 ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் சேட்டை டிவி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை, பொருத்தமாக ஏப்ரல் 1 அன்று வெளியிடலாம்///

    முட்டாள்கள் தின சர்வே என்று மறைமுகமாக சொல்ல வர்றீங்க....அவ்............ஹ...ஹ....ஹா..

    ReplyDelete
  8. இந்த மெகாசர்வேயில் சேட்டை டிவியும், பிளஃப்மாஸ்டர் பிரைவேட் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனமும் இணைந்து களத்தில் இறங்கினர். தொகுதி ஒன்றிற்கு ஒருவர் வீதம் 234 தொகுதிகளில் 1638 பேர்கள் அயராது பணியாற்றியதோடு, அவர்களே கருத்துக்கணிப்புக்கான கேள்விகளுக்கு பதிலும் அளித்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.//

    டீ வீ ஸ்டேசனிலை இருந்து கருத்துக் கணிப்பை வைச்சுப் புட்டு........பெரிய உல்டா...

    மக்களே இந்தக் கருத்துக் கணிப்பை சேட்டை டீ வி நேரடியாக களத்தில் இறங்கிச் செய்யவில்லை என்பதால் மின் டீவியாகிய எமது டீவியின் கருத்துக் கணிப்புத் தான் உண்மையானது!

    ReplyDelete
  9. டாஸ்மாக்கின் ஆயுட்கால உறுப்பினர்கள், போஸ்டர் ஒட்டுபவர்கள், வலைப்பதிவில் மொக்கை போடுகிறவர்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் அவர்களது பெயர்,வயது, பாலினம், வசிப்பிடம் போன்ற தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, மேலும் அவர்களுக்கு சிரமமளிக்க விரும்பாமல் எல்லாக் கேள்விகளுக்கும் நமது ஆய்வுக்குழுவே பதிலளித்திருக்கின்றனர் என்பதை அறிக!//

    ஆய்வுக்குழு கேள்விகளுக்குப் பதிலளித்திருப்பதால் இது ஒரு பக்கச் சார்பான முடிவு! இதனை மொக்கை போடுவோர், பெருங் குடி மக்கள் சார்பாக நாங்க புறக்கணிக்கிறோம்.

    ReplyDelete
  10. ஆக, மொத்தம் 20 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களிடமிருந்து அதிகபட்சமாக நான்கு கேள்விகளுக்கு மட்டுமே பதில்கள் பெறப்பட்டுள்ளன என்பதால், இப்படியொரு கருத்துக்கணிப்பை ஓபாமா தேர்தலின்போது அமெரிக்காவில் கூட நடத்தியதில்லை என்று பல அரசியல்கட்சித்தலைவர்கள் விழுந்து விழுந்து சிரித்தவாறே தெரிவித்துள்ளனர்.//

    அம்புட்டுப் பெரிய நாட்டிலை எவனுக்கு சேட்டை நேரமிருக்கும்?
    நம்மாளுங்க தான் நேரத்தை உதாசீனப்படுத்தி, விரயமாக்கிற ஆட்களாச்சே!

    ReplyDelete
  11. ஒவ்வொரு தொகுதியிலும் அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ள ஆதரவு, அவர்கள் கைவசம் உள்ள பிரியாணிப்பொட்டலங்கள், மூட்டை மூட்டையாக மறைவிடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள ரொக்கப்பணம், சின்டெக்ஸ் டாங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள சரக்கின் கொள்ளளவு, இது தவிர காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கு எத்தனை கோஷ்டிகள், எத்தனை போட்டி மனுக்கள், எத்தனை டம்மி வேட்பாளர்கள், எத்தனை சட்டைகள் இதுவரை கிழிபட்டன, எத்தனை வேட்டிகள் இன்றுவரை உருவப்பட்டன என்பதோடு, தேர்தலுக்குப் பிறகு புதிதாக உருவாகப்போகிற கோஷ்டிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்த துல்லியமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.//

    கட்சிகளின் உள் வீட்டு விடயத்தை உலகறியச் செய்வதால், வீட்டிற்கு அன்பு மழை பொழியும் நோக்கோடு ஆட்டோ வரவுள்ளதாக கேள்வி!
    வாழ்க சேட்டை டீவி மற்றும் அதன் முகாமையாளர்!

    ReplyDelete
  12. கு.மு.கவுக்குப் பெண்கள் மத்தியிலே பலத்த ஆதரவு இருப்பது வியப்பைத் தருகிறது. இலவச கிரைண்டர், இலவச மிக்ஸி, இலவச கம்ப்யூட்டர் என்று பல கட்சிகள் அறிவித்திருப்பதால், அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில், பெண்கள் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் புறக்கணித்து, குடிமக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பெருமளவில் ஆதரவளித்திருக்கலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.//

    கு.மு. க என்றால் குடி முழுகிப் போன கட்சியோ?

    இலவச மனைவிகள், இலவச நடிகைகள் திட்டங்களும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.
    இந்தளவு ஐயிட்டங்களையும் இலவசமா தர்ற நம்மாளுங்க இதனை தரமட்டாங்களா?

    சேட்டை டீவி கருத்துக் கணிப்பில் நீங்கள் சொல்லியிருக்கும் அரசியல் நையாண்டிகளை ரசித்தேன். ஒரு சில உண்மைகளை போட்டுடைத்திருக்கிறீர்கள். பதிவு தேர்தல் கருத்துக் கணிப்பினைப் பஞ்சராக்கியிருக்கிறது..

    சேட்டை டீவியிலை நாம தானே நிதிப் பொறுப்பு?

    ReplyDelete
  13. >>இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில்,


    என்னண்ணா... இப்படி எல்லாம் ஆசை காட்டறீங்க..?

    ReplyDelete
  14. >>எத்தனை டம்மி வேட்பாளர்கள், எத்தனை சட்டைகள் இதுவரை கிழிபட்டன, எத்தனை வேட்டிகள் இன்றுவரை உருவப்பட்டன என்பதோடு, தேர்தலுக்குப் பிறகு புதிதாக உருவாகப்போகிற கோஷ்டிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்த துல்லியமான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


    நம்ம பதிவுலகுல பட்டா பட்டி அண்ணனுக்கும், உங்களுக்கும் காங்கிரசை துவைக்கலைன்னா தூக்கமே வராதே.. ஹா ஹா

    ReplyDelete
  15. தேர்தல் கமிஷன்'கிட்டே பிடிச்சி குடுத்துருவேன் ஆமா....

    ReplyDelete
  16. அழகிரி அண்ணனுக்கு போனை போடுலேய் மக்கா...

    ReplyDelete
  17. அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில், ...
    நடந்தாலும் நடக்கும் தல.... அருமையான கருத்து கணிப்பு

    ReplyDelete
  18. ஆக சேட்டை டிவியின் உரிமையாளர் கு.மு.க. கட்சியின் தலைவர் அல்லது அவரது சொந்தக்காரர்களா?!!

    ReplyDelete
  19. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கு.மு.க.தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு டாஸ்மாக் கடைகளின் வாசலில் பீடி கொளுத்தி கொண்டாடி வருகிறார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.


    ....... ஹா,ஹஹா,ஹா,ஹா,ஹா....நடத்துங்க...நடத்துங்க....

    ReplyDelete
  20. இலவச மனைவிகள் திட்டமா.. சேஷ்டை பலமா இருக்கே! ;-))

    ReplyDelete
  21. 1638 பேர்கள் அயராது பணியாற்றியதோடு, அவர்களே கருத்துக்கணிப்புக்கான கேள்விகளுக்கு பதிலும் அளித்திருக்கின்றனர்...
    அப்படித்தான் நிஜமா நடக்குதா..

    ReplyDelete
  22. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    ஹா.......... ஹா.......ஹா.............. இப்புடித்தான் நிஜமாவே நடக்குதா?//

    அப்படி இருந்தாலும் இருக்குமோ என்ற சந்தேகத்தை, சில கருத்துக்கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.
    மிக்க நன்றி நண்பரே! :-)

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...

    //அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் இலவச மனைவிகள் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்ற அச்சத்தில், பெண்கள் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் புறக்கணித்து,//

    ஆஹா, இது நல்ல திட்டமாக உள்ளதே. விழுந்து விழுந்து சிரித்தேன்.//

    யார் கண்டார்கள்? அறிவித்தாலும் அறிவித்து விடுவார்களோ என்று அஞ்சுமளவுக்கல்லவா இலவசங்களைப் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கிறார்கள்?

    //எல்லாவரிகளும் வழக்கம் போல சேட்டையின் நையாண்டி ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள்.//

    தொடரும் உங்களது வருகைக்கும், ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! :-)

    ReplyDelete
  24. //Speed Master said...

    சேட்ட, ஆப்புன்னா என்னா? http://speedsays.blogspot.com/2011/03/blog-post_30.html//

    ஹாஹா! பார்த்தேன் நண்பரே! செம நக்கல்! :-)

    ReplyDelete
  25. //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதையும் மீறி இப்படி ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதற்காக சேட்டை டிவியின் தைரியத்தை பாராட்டுகிற அதே வேளையில், இப்படியெல்லாம் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு முக்கிய கட்சிகளின் வயிற்றில் கொள்ளியிடும் இந்த அராஜகப் போக்கையும் கண்டிக்கின்ற கடமை எங்களுக்கெல்லாம் இருக்கிறது என்பதையும் பணிவோடும், பண்போடும் தெரிவித்துக் கொள்வதில் மிக்கப் பெருமையும் பேருவகையும் அடைகின்ற என் நெஞ்சார்ந்த உளமார்ந்த இன்னும் பல ஆர்ந்த நன்றிகளைத் தெரிவித்து இந்த சேட்டை டிவி மென்மேலும் பல கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு........................................(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ............. அப்பா முடியல!),//

    ஆஹா, அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அயராது ஈடுபட்டிருந்தபோதும், எனது இடுகைக்கு வந்து சளைக்காமல் சரளமாக, சுறுசுறுப்பாக பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்களுக்கு....( சோடா ப்ளீஸ்!), எனது உளமார்ந்த நன்றிகள் நண்பரே! மூச்சு விடாம பின்னூட்டம் போடுறது எப்படீன்னு ஒரு இடுகை போட்டு என் போன்றவர்களுக்குச் சொல்லித்தாங்க நண்பரே! :-))

    ReplyDelete
  26. //நிரூபன் said...

    சேட்டை ரீவியின் கருத்துக் கணிப்பு... ஆகா இது நியாயமானதா/ நடு நிலமையானதா இல்லைப் பக்கச் சார்பானதா?//

    ஹிஹி! அப்படீன்னா உங்களுக்கு கு.மு.கவுக்கும் எனக்கும் இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் தெரிஞ்சிருச்சா? :-)

    //அந்தளவு வயசான, பழமையான தொலைகாட்சியா உங்களின் தொலைக்காட்சி!//

    இல்லையா பின்னே? டிவி கண்டுபிடிப்பதற்கு முன்னாடியே நாங்க இருக்கோம்! :-))

    //முட்டாள்கள் தின சர்வே என்று மறைமுகமாக சொல்ல வர்றீங்க....அவ்............ஹ...ஹ....ஹா..//

    தேர்தல்னா என்னா? அது தானே??? :-)

    //டீ வீ ஸ்டேசனிலை இருந்து கருத்துக் கணிப்பை வைச்சுப் புட்டு........பெரிய உல்டா...//

    வேறு என்ன செய்ய சகோதரம்? ரயில்வே ஸ்டேசனிலோ, போலீஸ் ஸ்டேசனிலோ செய்ய முடியாதே? :-)

    //மக்களே இந்தக் கருத்துக் கணிப்பை சேட்டை டீ வி நேரடியாக களத்தில் இறங்கிச் செய்யவில்லை என்பதால் மின் டீவியாகிய எமது டீவியின் கருத்துக் கணிப்புத் தான் உண்மையானது!//

    உங்க மீன் டிவி கருவாடு டிவியாவது உறுதி! சேத்துப்பட்டுலே வவ்வாலா? சேட்டையோட சவாலா?

    //ஆய்வுக்குழு கேள்விகளுக்குப் பதிலளித்திருப்பதால் இது ஒரு பக்கச் சார்பான முடிவு! இதனை மொக்கை போடுவோர், பெருங் குடி மக்கள் சார்பாக நாங்க புறக்கணிக்கிறோம்.//

    புறக்கணிக்கப்போறீங்களா? உங்களை எங்களது வருங்கால முதல்வர கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி கவனித்துக் கொள்வார்! :-)

    //அம்புட்டுப் பெரிய நாட்டிலை எவனுக்கு சேட்டை நேரமிருக்கும்? நம்மாளுங்க தான் நேரத்தை உதாசீனப்படுத்தி, விரயமாக்கிற ஆட்களாச்சே!//

    அமெரிக்காவை விட மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் தொகையிருப்பதாக இன்று வாசித்தேன் சகோதரம்! :-)

    //கட்சிகளின் உள் வீட்டு விடயத்தை உலகறியச் செய்வதால், வீட்டிற்கு அன்பு மழை பொழியும் நோக்கோடு ஆட்டோ வரவுள்ளதாக கேள்வி!//

    எனக்கு ஆட்டோவெல்லாம் பத்தாது! ஏர்பஸ்ஸே வரும்! :-)

    //வாழ்க சேட்டை டீவி மற்றும் அதன் முகாமையாளர்!//

    ஹிஹிஹிஹிஹி!

    //கு.மு. க என்றால் குடி முழுகிப் போன கட்சியோ?//

    குடித்துக் குடித்துக் குடிமுழுகிப்போன கட்சி என்றும் கொள்ளலாம். :-)

    //இலவச மனைவிகள், இலவச நடிகைகள் திட்டங்களும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இந்தளவு ஐயிட்டங்களையும் இலவசமா தர்ற நம்மாளுங்க இதனை தரமட்டாங்களா?//

    நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் அதுவும் நடக்கும். (அப்பாடா, தப்பிச்சிட்டேன்!)

    //சேட்டை டீவி கருத்துக் கணிப்பில் நீங்கள் சொல்லியிருக்கும் அரசியல் நையாண்டிகளை ரசித்தேன். ஒரு சில உண்மைகளை போட்டுடைத்திருக்கிறீர்கள். பதிவு தேர்தல் கருத்துக் கணிப்பினைப் பஞ்சராக்கியிருக்கிறது.. சேட்டை டீவியிலை நாம தானே நிதிப் பொறுப்பு?//

    நிதியே இல்லை. நீங்கள் நிதிவசூலித்துத் தருகிற பொறுப்பை தாராளமாக மேற்கொள்ளலாம். :-))

    மிக்க நன்றி சகோதரம்! பின்னூட்டமிடுவதில் நீங்கள் ஒரு உற்சாகக்குவியல்!

    ReplyDelete
  27. //சி.பி.செந்தில்குமார் said...

    என்னண்ணா... இப்படி எல்லாம் ஆசை காட்டறீங்க..?//

    கவலைப்படாதீங்க, சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாமே? :-)

    //நம்ம பதிவுலகுல பட்டா பட்டி அண்ணனுக்கும், உங்களுக்கும் காங்கிரசை துவைக்கலைன்னா தூக்கமே வராதே.. ஹா ஹா//

    என்ன பண்ணுறது தல..? நாங்க பண்ணுற காமெடியெல்லாத்தையும் தூக்கிச்சாப்பிடுறதுலே அவங்க மாதிரி யாரு இருக்காங்க? :-)

    மிக்க நன்றி தல...!

    ReplyDelete
  28. //MANO நாஞ்சில் மனோ said...

    தேர்தல் கமிஷன்'கிட்டே பிடிச்சி குடுத்துருவேன் ஆமா....//

    அண்ணாச்சி, ஏன்ன்ன்ன்....? :-))

    //அழகிரி அண்ணனுக்கு போனை போடுலேய் மக்கா...//

    அவரு வாசிச்சிட்டு ஒட்டுப்போட்டுட்டாரு அண்ணாச்சி! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  29. //sudhanandan said...

    நடந்தாலும் நடக்கும் தல.... அருமையான கருத்து கணிப்பு//

    எனக்கும் அந்த பயம் (நப்பாசை) இருக்கிறது! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  30. //middleclassmadhavi said...

    ஆக சேட்டை டிவியின் உரிமையாளர் கு.மு.க. கட்சியின் தலைவர் அல்லது அவரது சொந்தக்காரர்களா?!!//

    இல்லீங்க, அது வந்து தில்லியிலேருந்து, பூனா வழியா, பெங்களூருக்குப் போயி, அங்கிருந்து சென்னை வந்து, அப்பாலிக்கா....என்னங்க நீங்க, அரசாங்க ரகசியத்தை எல்லாம் கேட்கப்படாதுங்க! விக்கிலீக்ஸ்லே வரும் பார்த்துக்கோங்க! :-)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  31. //Chitra said...

    ....... ஹா,ஹஹா,ஹா,ஹா,ஹா....நடத்துங்க...நடத்துங்க....//

    வாங்க வாங்க! நடந்திட்டே இருக்குது தேர்தல் கூத்து! :-))
    மிக்க நன்றி!

    ReplyDelete
  32. //RVS said...

    இலவச மனைவிகள் திட்டமா.. சேஷ்டை பலமா இருக்கே! ;-))//

    நான் சொல்லலீங்க, அடுத்த தேர்தலிலே சொன்னாலும் சொல்லுவாங்களோன்னு ஒரு சின்ன ஆ...சை! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete
  33. //ரிஷபன் said...

    1638 பேர்கள் அயராது பணியாற்றியதோடு, அவர்களே கருத்துக்கணிப்புக்கான கேள்விகளுக்கு பதிலும் அளித்திருக்கின்றனர்...அப்படித்தான் நிஜமா நடக்குதா..//

    நான் கேள்விப்பட்டவரைக்கும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சொதப்பல் தான்! :-)
    மிக்க நன்றி!

    ReplyDelete

உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!

உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!

தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!