"மாத்திரை போட்டுக்கிட்டீங்களா?" என்று கேட்டவாறே, பால்கனிக்கு வந்த சுஜா பிரம்பு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தபோது, சபரீசன் இருளில் சலனமற்று அமைதியாயிருந்த தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஓ!" என்று ஒற்றைவார்த்தையில் பதிலளித்தவன், தெருமுனையில் தண்ணீர்த்தொட்டியருகே மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.
"மணி பதினொண்ணு ஆகப்போகுதா?" என்று கிண்டலாகச் சிரித்தாள் சுஜா. மனைவியை ஆமோதிப்பது போலத் தலையசைத்து விட்டு சபரீசன் அந்த வாலிபனையே வேடிக்கை பார்க்கத்தொடங்கினான்.
அந்த இளைஞன் யார், என்ன பெயர் என்று இருவருக்கும் தெரியாது. ஆனால், அண்மைக்காலமாக அவன் அந்தத் தெருவில் பலருக்குத் தெரிந்த முகமாகி விட்டிருந்தான். அவன் போன்ற இளைஞர்களைப் பெரும்பாலும் ஏதேனும் ஒரு இடுகுறிப்பெயராலோ, காரணப்பெயராலோ பொதுமைப்படுத்தி அழைத்து விடலாம். காரணம், அவனும் காதல் வயப்பட்டிருக்கிறான்! தினசரியும் தெருமுனையில் அவனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தவம் போலக் காத்திருக்கிறான். வாரா வாரம் நேரங்கள் மாறுபடுமேயன்றி வேறு வித்தியாசம் இல்லை! அவன் யாருக்காகக் காத்திருக்கிறானோ, அவள் இன்னும் சிறிது நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சிக்கொண்டு வருகிற ஒரு டெம்போ டிராவலரில் வந்து இறங்குவாள். தெருக்கோடியிலிருக்கும் வீட்டுக்கு செல்வதன் முன்னர், தனக்காக காத்திருக்கும் அவனருகே சென்று சிரிக்கச் சிரிக்கச் சில நிமிடங்கள் பேசுவாள். அடிக்கடி கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டு கைகளை உதறிக்கொண்டு நடக்க முயல்வாள். சில சமயங்களில் அவன் அவளது மணிக்கட்டைப் பிடித்து நிறுத்துவான். இறுதியில், அதற்கு மேலும் தாமதம் செய்ய விரும்பாத அந்தப் பெண் அவனுக்குக் கையசைத்து விட்டு வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்வாள். தெருக்கோடியின் இருட்டுக்குள் அவளது உருவம் மறையும் வரையிலும் அவளையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, திருப்தியும் சலிப்பும் கலந்து வண்டியை உதைத்து முடுக்கித் திருப்பிக்கொண்டு அந்த இளைஞன் தெருவை விட்டு வெளியேறுவான்.
பின்னிரவு வரையிலும் தூங்காமல் மாடியில் காற்று வாங்குபவர்கள், காலாற நடப்பவர்கள் என்று பலர் இந்த சுவாரசியமான காட்சியை அனுதினமும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! இது அவர்களுக்கும் தெரிந்தேயிருக்கும். ஆனால், அவரவருக்கு அன்றைய இரவு தூங்க வேண்டுமே என்பது தொடங்கி ஆயிரம் கவலைகள் இருந்ததாலோ என்னமோ, எவரும் இதுகுறித்து வெளிப்படையாக புருவத்தைச் சுருக்கியது கிடையாது. நல்லது!
"ஒண்ணு கவனிச்சீங்களா? முன்னெல்லாம் அந்தப் பையன் அகால நேரத்துலே வரும்போது எல்லா நாய்ங்களும் குரைச்சுத் தெருவையே எழுப்பிரும்! இப்போ அதுங்களும் இவனை அக்ஸப்ட் பண்ணிருச்சு போலிருக்கு!" என்று சிரித்தாள் சுஜா.
"தினமும் பிஸ்கெட் போட்டு நைஸ் பண்ணி வச்சிருக்கான்," என்று மனைவிக்குப் புன்னகையோடு விளக்கினான் சபரீசன்.
"ஓ! நாய்க்குக் கூட லஞ்சமா?"
"காதல்லே லஞ்சம்கிற பேச்சுக்கே இடமில்லை," என்று திருத்தினான் சபரீசன். "ஒண்ணு பரிசா இருக்கும்; மிச்சமெல்லாம் தண்டச்செலவுதான்!"
"ஆனாலும், அவ ஷிஃப்டுலே வேலை பார்த்தாலும் பார்க்காம இருக்க முடியாதுங்கிறது கொஞ்சம் பித்துக்குளித்தனமா இல்லே?" என்று சீண்டினாள் சுஜா.
"இருந்திட்டுப்போகட்டுமே!" என்று சிரித்தான் சபரீசன். "எந்த விஷயத்தை முழுக்க முழுக்க அறிவார்த்தமாப் பார்த்திருக்கோம்? காதல் மட்டும் விதிவிலக்காயிருக்கணும்னு ஏன் எதிர்பார்க்கிறோம்?"
சுஜா அடுத்த கேள்வி எழுப்புவதற்குள்ளாகவே, பழக்கப்பட்டு விட்ட இன்ஜினின் ஓசை கட்டியம் கூற, அந்த டெம்போ டிராவலர் தெருவுக்குள்ளே நுழைந்தது. அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி அவளுக்காக நின்றபடி காத்திருந்தான். ’பை..குட்நைட்,’ என்று வண்டியிலிருந்த யார் யாருக்கோ விடையளித்து விட்டு அந்தப் பெண் கதவைச் சாத்தியதும், அந்த வண்டி சற்றே பின்னால் சென்று, பிறகு திரும்பி தெருவை விட்டு வெளியேறியது.
"சரி, இளம்ஜோடிகள் பேசட்டும்; நாம தூங்குவோம்," என்று எழுந்து கொள்ள முயன்ற சபரீசனைக் கையமர்த்தினாள் சுஜா.
"அங்கே பாருங்க!"
அந்தப் பெண் வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் வீட்டை நோக்கி விடுவிடுவென்று நடந்து போய்க்கொண்டிருந்தாள். அந்த இளைஞன் அவளை சிறிது தூரம் வரைக்கும் பின்தொடர்ந்து சென்று, அவள் தன்னைத் திரும்பியும் பாராமல் வீட்டை நோக்கிச் செல்வதைப் பார்த்ததும், தெருவின் மத்தியில் சோர்ந்து போய் சிலையாய் நின்றபடி அவள் இருட்டுக்குள்ளே மறைவதுவரை பார்த்துக்கொண்டே நின்றான்.
"என்னாச்சு, ஏதோ பிரச்சினை போலிருக்கே!"
"ஐயோ அவனைப் பாருங்க!" சுஜா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த இளைஞன் நடைபாதையில் உட்கார்ந்து கொண்டு, இரண்டுகைகளாலும் தலையைப் பிடித்துக்கொண்டான்.
"அவன் என்ன தப்பு பண்ணினானோ?" சபரீசன் முணுமுணுத்தார்.
"அதுவும் சரிதான்!"
ஒரு சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்த அந்த இளைஞன் எழுந்து மோட்டார் சைக்கிளை நெருங்கினான். ஏறி அமர்ந்து கொண்டு, அவன் உதைத்த உதையில் அவனது விரக்தியும் ஆத்திரமும் வெளிப்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரைவட்டமாகத் தெருவின் குறுக்கே வண்டியைத் திருப்பி, பின்னால் புகை சீறச் சீற அவன் தெருவிலிருந்து வெளியேறி மறைந்து போனான்.
பெயர் கூட தெரியாத அந்த இளைஞனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்ட பிணக்கின் காரணம் எதுவாயிருக்கும் என்று ஊகிக்கிற முயற்சியில் சுஜாவோ, சபரீசனோ ஈடுபட விரும்பவில்லை. அதை விட வலிமிகுந்த கேள்விக்குறிகள் அவர்களது வாசலில் காத்திருந்தன.
யாரோ யாருடனோ பேசிக்கொண்டிருந்தால் நமக்கென்ன என்று அலட்சியமாக அதை கவனிக்காமல் போகிற பக்குவம் சாமானியர்களுக்கு எளிதில் வாய்ப்பதில்லை. அப்படி கவனிப்பது, அநாகரீமாக இருந்தால், அந்தக் காட்சியை அரங்கேற்றுவதைக் காட்டிலும் அதை கவனித்துப் பார்ப்பதிலுள்ள அநாகரீகத்தின் அடர்த்தி சற்றே குறைவு தான் என்று இருவரும் நம்பினார்கள். அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல், அஜாக்கிரதை காரணமாகவோ, அலட்சியம் காரணமாகவோ தங்களது அந்தரங்கங்களை வெளிச்சப்படுத்துபவர்களுக்கு, மற்றவர்களை கவனிக்காமல் இருக்கச் சொல்கிற உரிமை இயல்பாகவே இருப்பதில்லை. ஒன்றைப் பார்க்கக் கூடாது என்ற நியதிகளை போதிக்கிறவர்கள், கவனமாயிருக்கக் கடமைப்பட்டவர்கள்.
சுஜாவும் சபரீசனும் பார்வையாளர்கள்! தங்களைச் சுற்றி நடப்பதை மட்டுமின்றி, ஒருவர் மற்றவருக்குமே சில சமயங்களில் பார்வையாளராக இருக்க நேர்ந்ததுண்டு! எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதில்லை! சில சமயங்களில் ஒருவருக்குத் தேள் கொட்டுகிறபோது, வலியைப் பகிர முடியாமல், பார்வையாளராய் வாளாவிருந்து பார்ப்பதை மட்டும் பழக்கப்படுத்திக் கொள்ள நேரிடுகிறது. அந்த வகையில் அந்த இளம்ஜோடிகளின் கதைக்கும் அவர்கள் பார்வையாளர்களே!
அந்தக் காதல் கதையின் ஊடல் குறித்து, அடுத்த சில நாட்களுக்கு சுஜாவும், சபரீசனும் இரவின் அமைதியில், பால்கனியில் அமர்ந்து ஊகிக்க முயன்றதென்னவோ உண்மை தான்!
"யாரு மேலே தப்புன்னு தெரியலே! ஆனா, தினமும் அந்தப் பையன் வர்றான், காத்திருக்கிறான்! அவ திரும்பிக்கூடப் பார்க்காமப் போனதும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருக்கான்! வண்டியைக் கிளப்பிக்கிட்டுப் போயிடறான்!"
சுஜாவுக்கு முன்னைக் காட்டிலும் இந்த காதல்கதையில் சுவாரசியமும், அவர்களின் மீது ஒரு தினுசான கரிசனமும் ஏற்பட்டிருப்பதை சபரீசன் உணர்ந்திருந்தார். பெண்மனம்! எளிதில் எவர் மீதும் அனுதாபப்பட்டு விடுகிறது!
"எனக்கென்னமோ இந்தச் சண்டை ரொம்ப நாள் நீடிக்காதுன்னு தோணுது," என்று ஆருடம் கூறினான் சபரீசன். "இந்த நாடகம் ரொம்ப நாள் நீடிக்காது!"
சபரீசன் சொன்னது பலித்தது! ஒரு சில நாட்களிலேயே பலித்தது!
அந்தப் பெண்ணுக்கு மீண்டும் இரவு ஷிஃப்ட்! வழக்கம் போல அன்றைய இரவும் டெம்போ டிராவலர் வந்தது. அவளும் தன் சக ஊழியர்களுக்கு விடையளித்து விட்டு கதவைச் சாத்தியதும், அவள் வந்த வண்டி அடுத்த ஒரு சில நொடிகளில் சென்று மறைந்தது. அவள் வீட்டை நோக்கி இரண்டடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே, தெருமுனையில் மோட்டார் சைக்கிளின் சத்தம் கேட்டது.
"ஹீரோ வந்திட்டாரு போலிருக்கே!" என்று சிரித்தான் சபரீசன். ஆனால், இயல்புக்கு மாறாக, அன்று தெருநாய்கள் அந்த மோட்டார் சைக்கிளின் ஓசையைக் கேட்டுக் குரைத்தன. ஒன்று, இரண்டு, மூன்று என்று எங்கெங்கிருந்தோ நாய்கள் ஓடிவந்து அந்த இளைஞனைப் பார்த்துக் குரைத்தபடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன.
"சுஜா! இது அந்தப் பையன் இல்லே!" என்று சபரி கூறியதும் தான் சுஜாவுக்கும் புரிந்தது. அவளது மனதுக்குள் ஒரு விவரிக்க முடியாத சங்கடம் ஏற்பட்டது.
"அட ஆமாங்க! இது யாரு? புதுசா....!"
நாய்களின் குரைப்புகளை அலட்சியம் செய்தபடி அந்தப் பெண்ணும், அந்த இளைஞனும் தெருமுனையில் நின்றபடி பேசத்தொடங்கினார்கள். அவர்களது சம்பாஷனை பல நிமிடங்கள் நீடித்தன. இறுதியில் அந்தப் பெண் கைக்கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு, பதறியபடி கையசைத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கி விரையத் தொடங்கினாள். இவனும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி அவள் கண்களிலிருந்து மறையும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்னங்க இது? அந்தப் பையன் என்ன ஆனான்?"
"அதுக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியலே!" சபரீசன் விரக்தியாகச் சிரித்தார். "ஆனா, நாளையிலேருந்து நம்ம தெருநாய்ங்களுக்கு திரும்பவும் பிஸ்கெட் கிடைச்சாலும் கிடைக்கலாம்!"