குஜராத் கட்ச் பகுதியில் பணி நிமித்தமாகச் சென்றபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்த்த ‘திருஷ்யம்’ அதாவது காட்சி ஒன்றுண்டு. பெண்மணிகள் தங்களது தலைகளில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஐந்தாறு,ஏன், ஏழெட்டு தண்ணீர்க்குடங்களைக்கூட சுமந்து சென்று கொண்டிருப்பார்கள். இத்தனை குடங்களையும் எப்படியோ ஏற்றிக்கொண்டு விட்டார்கள், சரி, ஆனால்,எப்படி இறக்கி வைக்கப்போகிறார்கள் என்று யோசித்ததுமுண்டு.
‘திருஷ்யம்-2’ படத்தின் முதல் பாதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுகூட எனக்கு அதே மலைப்பும், ஆங்காங்கே சின்னச் சின்ன சஞ்சலமும் ஏற்பட்டது மிகவும் உண்மை. துணுக்குகளாய் புதிது புதிதாக முளைக்கின்ற கதாபாத்திரங்கள், நாயகனின் கதாபாத்திரத்தில் சொல்லப்பட்ட உபரியான பரிமாணங்கள் ஆகியவை வெறும் நிரப்பல்களா அல்லது படத்தின் பிந்தைய காட்சிகளுடன் நேரடியான, மறைமுகமான தொடர்புகள் உள்ளவையா என்ற புதிரை முதல்பாதியின் முடிவிலேயே அவிழ்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.
ஜார்ஜ்குட்டியின் குடும்பம் ஆறு வருடத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வாழ்ந்து வருகிறது. ஜார்ஜ்குட்டி ஒரு திரையரங்க உரிமையாளர் ஆகியிருக்கிறார்; ஆனால், கடன் இருப்பதாக மனைவி ராணி குத்திக் காட்டுகிறாள். மூத்த மகளுக்கு வலிப்பு நோய் வந்திருக்கிறது; இளையமகள் கான்வென்ட் ஆங்கிலத்தில் அம்மாவை அலட்சியம் செய்கிறாள். ஜார்ஜ்குட்டியின் அக்கம்பக்கத்தார் மாறியிருக்கிறார்கள். அந்த டீக்கடைக்காரர் தவிர்த்து, மற்றவர்கள் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
‘If it can be written or thought, it can be filmed’ என்று மறைந்த ஹாலிவுட் இயக்குனர் ஸ்டான்லி க்யூபரிக் சொன்னது பெரும்பாலான படங்களில் வெறும் ஏட்டுச்சுரைக்காய்களாகவே இருக்கையில், ஜித்து ஜோசஃப் தனது திரைக்கதைக்குப் பின்புலமாக அமைந்திருக்கிற எண்ணங்கள், எழுத்துக்களின் வலுவை படம் நெடுக காண முடிகிறது.
முந்தைய படத்தின் முக்கிய நிகழ்வுகள், சின்னச் சின்ன சம்பவங்கள், வசனங்கள் ஆகியவற்றுடன் இரண்டாம் பாகத்தின் கதையோட்டத்தைப் பிணைத்திருப்பதில் முனைப்பு நன்றாகவே தெரிகிறது. முதல் பகுதியில் தியேட்டர் கட்டப்போவதாக ஜார்ஜ்குட்டி சொல்லுகிற வசனம், இப்படத்தில் பலித்திருக்கிறது. ஒரு cult திரைப்படத்தை இயக்கிவர்களுக்கு உள்ள இந்த சௌகரியத்தை அனாயசமாகக் கையாண்டிருப்பது, விட்ட இடத்திலிருந்து கதையைப் பார்க்கிற உணர்வை அளிக்கத் தவறவில்லை.
முந்தைய படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரமான ஜார்ஜ்குட்டியின் உதவியாளர் இப்படத்தில் இல்லை; அதை ஒரு வசனத்தில் சரிசெய்தாகி விட்டது. 2.0-வில் டாக்டர் வசீகரனுக்கு வருகிற அலைபேசி அழைப்பின்போது, ‘சனா’ என்று அழைப்பவர் பெயரையும் ஐஸ்வர்யா ராய் படத்தையும் காட்டியதுபோன்ற சாமர்த்தியம்.
ஏதோ கொலை செய்துவிட்டு, படுகுஷியாக, செல்வச்செழிப்போடு ஜார்ஜ்குட்டி நடமாடுவதுபோல காட்டாமல், அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரித்து, குற்றம் என்று ஒன்றிருந்தால் அதற்கு தண்டனையென்று ஒன்றும் உண்டு என்பதை வசனத்தில் முயலாமல், காட்சிப்படுத்தியிருப்பது அபாரம்.
விமர்சனம் வாசித்துவிட்டு, அரை சுவாரசியத்தோடு படத்தைப் பார்க்கிற பரிதாபத்துக்கு யாரையும் தள்ளிவிட விருப்பமில்லை என்பதால், கதை குறித்து விவரிக்க விரும்பவில்லை. முதல் படத்தில் நடந்த குற்றத்தின் விளைவு இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால், இதிலும் ஜார்ஜ்குட்டி ஜெயிக்க வேண்டுமென்ற பதைபதைப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்தி, இரண்டாம் பகுதியில் ஒரு சில காட்சிகளில் சற்றே அவநம்பிக்கை உண்டாக்கி, இறுதியில் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கிறார்கள் என்பதே படத்தின் சிறப்பு.
இந்தப் படத்தின் நாயகன் திரைக்கதை! ஆனால், அந்த நாயகன்மீது வெளிச்சம் வீசுகிற வேலையை மோகன்லால் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார். குட்டிக் குட்டி கதாபாத்திரங்களுக்குமே படத்தில் ஒரு பங்கு இருக்கிறது என்பதால், இறுதி 25-30 நிமிடங்களில் அவர்கள் வந்து கதையை முடிவை நோக்கி முடுக்குகின்றபோது, சில காட்சிகள் வாயடைத்துப்போகச் செய்கின்றன என்பதே உண்மை.
இத்தகைய படங்களில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றின் பங்கு அளவிட முடியாதது. அந்த எதிர்பார்ப்பு பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பின்னணி இசை மலையாளப்படங்களின் இயல்பிலிருந்து அவ்வப்போது பிறழ்ந்து ஆங்காங்கே இறைச்சலாக அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
குறைகளே இல்லாத படமென்று சொல்ல முடியாது! முதல் பாதியில் ஒவ்வொரு செங்கலாகக் கதையை எடுத்து வைத்துக் கட்டுகிறபோது சில தொய்வான கணங்கள் ஏற்படுவதைக் கவனிக்காமல் விடுவதற்கில்லை. ஆனால், இரண்டாம் பகுதி அளிக்கிற விறுவிறுப்பு, விமர்சனப்பார்வைகளின் கூர்மையையும் தாண்டி, சராசரி ரசிகனாக்கி உற்சாகமூட்டுவதாகவே இருக்கிறது.
மோகன்லால் – என்ன சொல்ல இந்த மனிதரின் நடிப்பைப்பற்றி? மொத்தப்படத்தின் சுமையையும் எளிதாகச் சுமந்துகொண்டு கடந்து போகிறார். மீனாவின் பாத்திரம் – குழப்பமும் பயமும் கலந்து வாழும் ஒரு சராசரி குடும்பத்தலைவியின் பரிணாமத்தை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலையாளம் தெரியாதவர்களும் அவசியம் பார்க்கலாம்; பார்க்க வேண்டும்.
திருஷ்யம்-2! பரவச அனுபவம்!
Welcome Back
ReplyDeleteதரமான விமர்சனம்.
ReplyDeleteநீண்ண்ண்ட விடுமுறையோ? பதிவுலகின் வெறுமையை போக்க தொடருங்கள்.