Monday, November 7, 2016

கிட்டாமணி! வேர் ஆர் யூ?

பாலாமணியின் முகம் ஜாடியில் ஊறவைத்த மாவடுபோலச் சுருங்கிப் போயிருந்தது. கிட்டாமணியில்லாத வீடு, கருவேப்பிலை தாளிக்காத ரசம்போலக் களையிழந்து காணப்பட்டது.  

”பாத்ரூமுக்குப் போனாக்கூட, இதோ சோப்புப்போட்டுட்டேன், இதோ தலைதுவட்டிட்டேன், இதோ வழுக்கி விழுந்திட்டேன்னு ரன்னிங் கமெண்டரி கொடுப்பாரே! ஒரு மாசமா எங்கே போனார், என்ன ஆனார்னு ஒரு தகவலும் இல்லையே!”

பாலாமணியின் தொண்டை ரிப்பேரான மிக்ஸிபோலக் கரகரத்தது. அவளுக்கு ஆறுதல் கூற வந்திருந்த சினேகிதிகள், டெபாஸிட் கிடைத்த சுயேச்சை வேட்பாளர்கள் போல அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர்.

”கவலைப்படாதீங்க பாலாமணி,” எதிர்வீட்டு செண்பகம் துணிந்து ஆறுதல் கூறினார். “அவர் என்ன சின்னக்குழந்தையா காணாமப் போக? எப்படியும் திரும்பி வந்திடுவார்.”

”ஐயோ, சின்னக்குழந்தை யாருகிட்டேயாவது அட்ரஸ் சொல்லித் திரும்பி வந்திடுமே!” பாக்கெட்மணி கிடைக்காத பள்ளிமாணவன்போல அரற்றினாள் பாலாமணி. ”இவருக்கு தான் காணாமப்போயிட்டோம்னே புரிஞ்சுதா இல்லையா தெரியலியே!”

முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, காலையில் டிபன் சாப்பிட்ட தன் கணவனை மனதுக்குள் நினைத்தபடி பேச்சைத் தொடர்ந்தாள் செண்பகம்.

”அன்னிக்கு குறிப்பிடும்படியா ஏதாவது நடந்துதா?”

”அன்னிக்கு அவர் ஆசைப்பட்டாரேன்னு ரொம்ப நாளைக்கப்புறமா புதீனா துவையல் அரைச்சேன்,” விசும்பினாள் பாலாமணி. “இன்னியோட ஒரு மாசம் ஆகப்போகுது!”

“ஒரு மாசமா?,” செண்பகம் அதிர்ந்தாள். “அப்ப துவையல் ஊசிப் போயிருக்கும்.”

”சும்மாயிருங்க செண்பகம்,” அடுத்த வீட்டு கனகவல்லி கடிந்து கொண்டாள். “துவையலைப்பத்திக் கவலைப்படுற நேரமா இது? பாவம் பாலாமணி, அவளோட கிரைண்டரே காணாமப்போயிடுச்சேன்னு, அதாவது, அவளோட புருஷனே காணாமப் போயிட்டாரேன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க.”

ஊசிப்போன துவையலுடன் தனக்கிருந்த பிரிக்க முடியாத தொடர்புகாரணமாக, சட்டென்று எதையோ சொல்லிவிட்ட செண்பகம், அதே துவையலைச் சாப்பிட்டதுபோல சட்டென்று வாயடைத்து நின்றாள்.

”அவர் இல்லாம வீடு வீடாயில்லை,” பாலாமணி மூக்கைச் சிந்தினாள். “கோபத்துல நாலுவார்த்தை திட்டறதுக்காவது ஒரு ஆம்பிளை வேண்டாமா? வாழ்க்கையே வெறுத்துப் போயிருச்சு.”

”எங்கே பார்த்தாலும் ஆக்ஸிடெண்ட்னு நியூஸ் வருது,” கொதிக்கும் சாம்பாரில் மசித்த பருப்பைக் கலப்பதுபோல, பாலாமணியின் வயிற்றில் பயத்தைக் கரைத்தாள் கனகவல்லி. “ஒருவேளை அந்த மாதிரி ஏதாவது….”

“எங்க வீட்டுக்காரருக்கு ஆக்சிடெண்டேல்லாம் ஆகாது,” பாலாமணி அப்பல்லோ வாசலில் பேட்டிகொடுக்கும் அரசியல்வாதிபோல உறுதியாகச் சொன்னாள். “அவர் ரோட்டைக் கிராஸ் பண்ணாக்கூட, ஆட்டோ புடிச்சுத்தான் கிராஸ் பண்ணுவார்.”

”ஆமாமா,” செண்பகம் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “அவர் மார்னிங் வாக்கிங் போகும்போதே ஹெல்மெட் போட்டுக்கிட்டுத்தானே போவார்.”

”காலம் கெட்டுப்போச்சு,” கனகவல்லி பெருமூச்சு விட்டாள். “வரவர ஆம்பிளைங்களுக்குப் பொண்டாட்டிமேலே பயமே இல்லாமப் போயிடுச்சு.”

”தப்பா நினைக்காதீங்க பாலாமணி,” செண்பகம் மாசக்கடைசியில் மளிகைக்கடையில் கடன்கேட்பதுபோலக் குரலைத்தாழ்த்தினாள். “உங்க புருஷனுக்கு வேறே ஏதாவது பொண்ணோட அப்படி இப்படீன்னு…..”
”என்ன பேச்சுப் பேசறீங்க?” பாலாமணி தாளாமணியாகி இரைந்தாள். “இவர் எந்தப் பொண்ணையும் தலைநிமிர்ந்துகூடப் பார்க்க மாட்டாரு. இத்தனை வருசத்துல அவர் என்னையே நேராப்பார்த்துப் பேசினது கிடையாது தெரியுமா?”

’பொம்பளைங்க நாங்களே நேராப் பார்த்துப் பேச மாட்டோமே,’ என்று செண்பகமும் கனகவல்லியும் மனதுக்குள் எண்ணிக் கொண்டார்கள்.

எட்டாவது உலக அதிசயமாக, மூன்று பெண்மணிகளும் திடீரென்று மவுனமானார்கள். வீட்டில் குக்கர் மூன்றாவது விசில் அடிக்கிற நேரம் என்பதால், சீக்கிரம் வீடுதிரும்பாவிட்டால் அடுப்பைப் பற்ற வைத்தோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த செண்பகம் பேச்சை முடித்துக் கொள்ள முடிவு செய்தாள்.

”போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்தீங்களே? என்னாச்சு?”

”அதையேன் கேக்கறீங்க?” பாலாமணி அலுத்துக் கொண்டாள். “இவர் போட்டோவைப் பார்த்திட்டு அந்த இன்ஸ்பெக்டர் வாய்விட்டுச் சிரிச்சாரா, பல்செட்டு கழண்டுபோய் எங்கேயோ விழுந்திருச்சு.”

”சரிதான்! கண்டுபிடிச்சிடுவாங்களா?”

”இன்ஸ்பெக்டர் பல்செட்டாச்சே, கண்டுபிடிக்காம விடுவாங்களா?”

”ஐயோ, உங்க புருஷனைக் கண்டுபிடிச்சிடுவாங்களாமா?”

”அப்படித்தான் சொன்னாங்க,” பாலாமணி பெருமூச்சு விட்டாள். “ஆனா, அந்த ஸ்டேஷன்ல காணாமப்போனவங்க நிறைய பேரோட போட்டோவை மாட்டியிருந்தாங்க. இவ்வளவு ஏன், இன்ஸ்பெக்டர் டேபிளுக்குப் பின்னாடியே சுவத்துல ஒரு தாத்தா படத்தைப் பெரிசா மாட்டியிருந்தாங்க. அவரையே இன்னும் கண்டுபிடிக்கலை. என் புருசனையா கண்டுபிடிக்கப் போறாங்க?”

“ஐயோ, அது காந்தி படமா இருக்கப்போவுது.”

“அவர்தான் காந்தியா? அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்.”

”சரிதான். எதுக்கும் உங்க புருஷன் திரும்பிவந்தா பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்குங்க!”

“ஊரில இருக்கிற எல்லாப் பிள்ளையாருக்கும் வேண்டியாச்சு! அவர் திரும்பி வந்தப்புறம்தான் தேங்காய் வாங்க கோயம்பேடு போறதா இல்லை கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போறதான்னு யோசிக்கணும்.”

”அப்ப நான் வர்றேன்,” செண்பகம் கிளம்பினாள். “உடம்பைப் பாத்துக்குங்க பாலாமணி. சுவர் இருந்தாத்தான் வரட்டி தட்ட முடியும்.”

செண்பகம் கிளம்பிப்போனதும், கனகவல்லியும் கிளம்ப முடிவெடுத்தாள்.

”அப்ப நானும் கெளம்பறேன் பாலாமணி! எங்க வீட்டுக்காரர் வர்ற நேரம். நான் போகலேன்னா பத்துப்பாத்திரம் தேய்க்காம படுத்துத் தூங்கிருவார்.”

”சரிம்மா, நீ கிளம்பு,” பாலாமணி அசுவாரசியமாய் பதிலளித்தாள்.

கிட்டாமணி காணாமல் போனதிலிருந்து, எதுவுமே சரியில்லை. சொல்லி வைத்த மாதிரி எல்லா சீரியலிலும் யாராவது ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையானார்கள் அல்லது போலீஸ் வந்து கைது செய்து கொண்டு போனது. இந்தக் கவலைகள் போதாதென்று புருசன் வேறு பொறுப்பில்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டார்.

’கிட்டாமணி, வேர் ஆர் யூ?’

பாலாமணி கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தபோது, அவளது செல்ஃபோன் அழைத்தது.

”ஹலோ! மிசஸ் பாலாமணிதானே பேசறது?”

”ஆமாங்க! நீங்க யாரு?”

”ஆந்திரா போலீஸ்! உங்க புருஷன்தானே கிட்டாமணி?”

“ஆமாம்,” பத்தேமுக்கால்மணிக்கு டாஸ்மாக் போகிற குடிமகனைப் போல பாலாமணியைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

”ஆந்திரா போலீஸா? எப்படி இவ்வளவு நல்ல தமிழுல பேசறீங்க?”

”மேடம்! காமெடி ஸ்டோரியிலே லாஜிக்கெல்லாம் பார்க்கப்படாது. உங்க புருஷன்மேலே சந்தேகப்பட்டு அரெஸ்ட் பண்ணியிருக்கோம்.”

”என்ன அக்கிரமம்? அவர்மேலே நானேகூட சந்தேகப்பட்டது கிடையாது. நீங்க யாரு சந்தேகப்படறதுக்கு?”

”ஹலோ! உங்க புருஷன் மரம் வெட்டுற கும்பல்லே இருப்பாரோன்னு சந்தேகப்படறோம்.”

”அட ராமா! அவருக்கு நகம் வெட்டக்கூட தெரியாதே! மாசத்துக்கொரு தடவை நடேசன் பார்க்குல போயி காசுகொடுத்து நகம்வெட்டிட்டு, காதுகுடைஞ்சுட்டு பஞ்சைக் கூட எடுக்காம அப்படியே வருவாராக்கும்.”

“இத பாருங்க மேடம்! உடனே ஒரு வக்கீலை இங்கே அனுப்புங்க. இல்லாட்டா இவரை மாஜிஸ்ட்ரேட் முன்னால ஆஜர்படுத்தி போலீஸ் கஸ்டடியிலே எடுத்து விசாரிக்க வேண்டிவரும்.”

”தயவுசெய்து என் புருசனை அடிச்சிராதீங்க,”பாலாமணி கரைந்தாள். “அவசரத்துல எக்ஸ்ட்ரா அண்ட்ராயர் எடுத்திட்டுப் போனாரா தெரியலை.”

”அதெல்லாம் அடிக்க மாட்டோம். உடனே வக்கீலை அனுப்பி வையுங்க. அடிலாபாத் தெரியுமா?”

”எனக்கு பகாளாபாத் தான் தெரியும்.”

”மேடம்! அடிலாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வக்கீலை அனுப்புங்க.”
வக்கீல்! வக்கீல்!!

பாலாமணிக்குச் சட்டென்று தன் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகன் வக்கீல் என்பது ஞாபகம் வந்தது. உடனே போன் செய்தாள்.

”ஹலோ! வக்கீல் அஃபிடவிட் அலங்காரம் ஹியர்!”

”டேய் அலங்காரம்! பாலாமணி பேசறேண்டா!” பாலாமணி பழைய கே.எஸ்.ஜி.படத்தில் கே.ஆர்.விஜயா போலக் குமுறினாள். “உங்க மாமாவை ஆந்திரா போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்கடா.”

”ஐயையோ! இவ்வளவு அப்பாவியா இருந்தா போலீஸ் அரெஸ்ட் பண்ணாம என்ன செய்யும்? கொஞ்சமாவது மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம் பண்ணிட்டு லண்டனுக்குப் போயிருக்கலாமில்லே?”

”எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா!”

”கவலைப்படாதேக்கா! நான் உடனே ஏற்பாடு பண்ணி, வர்ற வெள்ளிக்கிழமையே ரிலீஸ் பண்ணிடறேன்.”

“அடேய், வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ண அவரென்ன விஜய்சேதுபதி படமா? சீக்கிரம் ரிலீஸ் பண்ணுடா.”

”அக்கா! ரொம்ப முக்கியமான கேஸ்ல ஆஜராக வேண்டியிருக்கு. அதை முடிச்சிட்டு அடுத்த வண்டியைப் பிடிச்சு, ஆந்திரா போயி மாமாவை பெயில்லே கூட்டிட்டு வர்றேன்.”

”பெயில்லே கூட்டிட்டு வராதேடா! ரயில்லேயோ பஸ்லேயோ கூட்டிட்டு வா,” என்ற பாலாமணி, “அவரை அடிலாபாத் ஸ்டேஷன்லே வைச்சிருக்காங்களாம்.” என்று முடித்தார்.

”நோ பிராப்ளம். நான் பார்த்துக்கிறேன்.”

அலங்காரத்துடன் பேசிய பிறகு, பாலாமணியின் வயிற்றில் யாரோ, பால்வார்த்து, டிகாஷனும் சர்க்கரையும் சேர்த்ததுபோலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லா சீரியல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து, மகிழ்ச்சியுடன் மூக்கைச் சிந்தினாள். எப்படியும் பாலாமணி விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில், சற்று சத்தமாகவே குறட்டை விட்டு உறங்கிப் போனாள்.

இரண்டு நாள் கழித்து….

”ஹலோ அக்கா,” அலங்காரம் போனில் கூவினான். “உன் புருஷனைக் கூட்டிட்டு வரப்போறேன்.”

“நீ நல்லாயிருக்கணும்டா,” பாலாமணி நெகிழ்ந்தாள். “கடவுள் புண்ணியத்துலே உனக்கு தினமும் ரெண்டு கொலை கேஸ், ரெண்டு ஃபிராட் கேஸ், ரெண்டு அசால்ட் கேஸ் கிடைச்சு நீ சீரும் சிறப்புமா இருக்கணும்டா.”

”அதெல்லாம் இருக்கட்டும்,” அலங்காரம் திடீரென்று சீறினான். “மாமா அரசியலுக்குப் போகணும்னா வேற கட்சியா இல்லை?”

”என்னாச்சுடா?”

”போனமாசம் ரயில்மறியல் பண்ணறதுக்கு அனுப்பியிருக்காங்க. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சங்கிலியைப்பிடிச்சு இழுத்து ரயிலை நிறுத்தச் சொல்லியிருக்காங்க. உங்க வீட்டுக்காரர் என்ன பண்ணினார் தெரியுமா?”

“என்ன?”

“ரயில்லே ஒரு பாசஞ்சர் ரெண்டு பவுன் செயின் போட்டுக்கிட்டுப் போயிருக்காங்க. அவர் அதைப் புடிச்சு இழுத்திருக்காரு.”

“அப்புறம் என்னாச்சு?”

“டிரெயின் நின்னுடுச்சு.”

“அதை யாரு கேட்டாங்க? இவரை என்ன பண்ணினாங்க?”

”ரயில்வே போலீஸ் பிடிச்சிட்டு, ஆளைப் பார்த்திட்டு பாவம்னு விட்டுட்டாங்களாம்.”

”அப்ப ஒரு மாசமா என்ன பண்ணிட்டிருந்தாராம்?”

”அதைக் கேளு, ஒழுங்கா ஊருக்குத் திரும்பி வர்றதை விட்டுட்டு, ’பிரேமம்’ தெலுங்குப் படத்தைப் பார்த்திருக்காரு. தேவையா இது? அப்புறம் புத்தி பேதலிச்ச மாதிரி சுத்தி ஒருவழியா அடிலாபாத் ஸ்டேஷன்லே மாட்டியிருக்காரு.”

”ஐயையோ! அவருக்கு உண்மையிலேயே புத்தி பேதலிச்சிருக்கணும்டா! உடனே அவரைக் கூட்டிட்டு வந்திரு.”

”அவர்கிட்டே பேசறியாக்கா?”

“நேர்லே பேசிக்கிறேன். அவருக்கு வேளாவேளைக்கு வடிச்சுக்கொட்டி, குழந்தை மாதிரிப் பாத்துக்கிட்டேனே. அவருக்கு என்ன குறை? எதுக்காக இந்த மாதிரி விபரீதமா ‘பிரேமம்’ படத்தையெல்லாம் பார்த்து என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டுறார்னு கேளுடா.”

கோபத்துடன் போனை வைத்தாள் பாலாமணி.



************